Published:Updated:

சின்சான் பொம்மை கொடுத்த சூப்பர் அட்வைஸ்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedtimeStories - 44

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தக் கதையைக் குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

சென்னையில ஓர் அப்பார்ட்மென்ட்ல குடியிருந்தான் அஜய்ங்கிற குட்டிப்பையன். அவன் எப்போ பாரு அவனோட ரூமுக்குள்ளேயே இருப்பான். வெளியே போய் மத்த பசங்களோட விளையாடவே மாட்டான். அதனால, அவனோட அம்மாவும் அப்பாவும் அவனோட ரூம் நிறைய பொம்மைகளா வாங்கி வெச்சுட்டாங்க. அந்த பொம்மைகளோட தனியா விளையாடி விளையாடி போரடிச்சு போச்சுன்னா டி.வி. பார்க்க ஆரம்பிச்சிடுவான். டி.வி.லேயும் கார்ட்டூன் ஷோஸ் பார்த்துப் பார்த்து அலுத்துப் போச்சுன்னா மொபைல்ல கேம் விளையாட ஆரம்பிச்சிடுவான். இதனால, அவனோட கண்கள் வறண்டு போய் எரிய ஆரம்பிச்சிடும். இருந்தாலும் கண்ணைக் கசக்கி விட்டுட்டு மறுபடியும் மறுபடியும் மொபைல்ல கேம் விளையாட ஆரம்பிப்பான் அஜய். அவனோட கஷ்டத்தைப் பார்த்த சின்சான் பொம்மை, ஒருநாள் `அஜய்'னு மெதுவா கூப்பிட்டுச்சு. நம்ம ரூம்ல நமக்குத் தெரியாம யாரு இருக்கான்னு அஜய் சுத்தும் முத்தும் தலையைத் திருப்பிப் பார்த்தான். யாருமே அவன் கண்ணுக்குத் தென்படல. `அட நாந்தான்பா உன்னோட சின்சான் பொம்மை பேசுறேன்'னு பொம்மைகளுக்கு நடுவுல இருந்து குரல் வந்துச்சு. அஜய் சட்டுனு பொம்மைகள் பக்கமா பார்க்க, அங்கே சின்சான் பொம்மை சிரிச்சுக்கிட்டு இருந்துச்சு.

BedtimeStories
BedtimeStories
Photo: Pixabay

`இங்க பாரு அஜய், உனக்கு என்னை மாதிரி பொம்மைங்களோட விளையாடி விளையாடி போரடிக்குதுன்னு நினைக்கிறேன். அதனாலதான் டி.வி.க்கும் மொபைல் கேமுக்கும் அடிமையாகிட்டு இருக்கே. இப்படியே செஞ்சுக்கிட்டு இருந்தீன்னா உன் கண்ணு சீக்கிரம் கெட்டுப் போயிடும்'னு சொல்லுச்சு சின்சான் பொம்மை. இதைக் கேட்டு ஷாக்கான அஜய், `அப்படின்னா நான் என்ன பண்றது? எனக்கு உன்னை மாதிரி பொம்மைகளோட விளையாட போரடிக்குதே'ன்னு சோகமாக சொன்னான். அதுக்கு சின்சான் பொம்மை, உன்னோட வீட்டுக்கு வெளியே உனக்கு நிறைய ஃபிரெண்ட்ஸ் கிடைப்பாங்க. ஆனா, அப்பார்ட்மென்ட் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி மட்டும் நீ வெளியே போகக்கூடாது'ன்னு சொல்லுச்சு.

அஜய் உடனே அவனோட அம்மாகிட்ட சொல்லிட்டு வெளியே விளையாடப் போனான். அவன் விளையாடப் போன நேரத்துல எந்தப் பசங்களும் அங்க இல்ல. அஜய் அப்படியே சோர்ந்து போய், அங்க இருந்த ஒரு கொய்யா மரத்தடியில உட்கார்ந்துட்டான். அஜய் ஆசையா விளையாட வந்ததையும் அது முடியாமப் போனதால சோர்ந்து போய் உட்கார்ந்ததையும் பார்த்துக்கிட்டிருந்த ஓணான் ஒண்ணு, அஜய்யை `நண்பா'ன்னு கூப்பிட்டுச்சு. ஓணானோட இனிமையான அழைப்பைக் கேட்ட அஜய் அதுபக்கமா திரும்பினான். `உன் வீட்டு ஜன்னல் வழியா உன்னை நான் பல தடவை பார்த்திருக்கேன். ஆனா, நீ என்னைப் பார்த்ததுமில்ல, வீட்டை விட்டு வெளியே வந்ததுமில்ல. இன்னிக்குதான் நீ முதல் முறையா வெளியே வந்திருக்கே. இது வெயில் நேரம்கிறதால மத்த பசங்க எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்குப் போயிருக்காங்க' அப்படின்னு பசங்க யாரும் வெளியே இல்லாததுக்கான காரணத்தை சொல்லுச்சு ஓணான். `அச்சச்சோ... அப்படின்னா நான் திரும்பி வீட்டுக்கே போயிடவா'ன்னு கேட்டான் அஜய்.

BedtimeStories
BedtimeStories
Photo: Pixabay
இது தேவதைகளுக்காக மாணவர்கள் எடுத்த உறுதிமொழி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 42

அதுக்கு ஓணான், `நோ நண்பா. வெளியே வந்த மொத நாளே நீ ஏமாந்து போயிடக்கூடாது. அதனால, இன்னிக்கு நான் உன்கூட விளையாடறேன்'னு சொல்லுச்சு. சொன்ன மாதிரியே அஜய்கூட விளையாடவும் ஆரம்பிச்சிது ஓணான். அஜய்யும் ஓணானும் ரொம்ப நேரம் விளையாடினதால சோர்ந்து போயி கொய்யா மரத்தடியில உட்கார்ந்துட்டாங்க. அஜய் தன்னோட பேன்ட் பாக்கெட்ல இருந்த ரெண்டு சாக்லேட்ல ஒண்ணை ஒணானுக்குக் கொடுத்துட்டு, இன்னொரு சாக்லேட்டை தான் சாப்பிட்டான். சாக்லேட்டை சாப்பிட்டு முடிச்ச ஓணான், கொய்யா மரத்து மேல கிடு கிடுன்னு ஏறி ரெண்டு பழங்களைப் பறிச்சுட்டு வந்து ஒரு பழத்தை அஜய்க்கு கொடுத்துச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரெண்டு பேரும் கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டுட்டே பேச ஆரம்பிச்சாங்க. `ஓணானை சின்னப் பசங்க கல்லால அடிப்பாங்க. கயிறுல கட்டி இழுப்பாங்க'ன்னு எங்கப்பா சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். இங்க உன்னை யாரும் அப்படி செய்யலையா'ன்னு ஓணான்கிட்ட கேட்டான் அஜய். `என் அப்பாகூட இதைப்பத்தி சொல்லியிருக்காரு அஜய். முன்னாடி நாங்க நிறைய பேர் இருந்தோம். ஆனா, இப்போ நாங்க ரொம்ப கொஞ்ச பேர்தான் இருக்கோம். அதனாலேயோ என்னவோ இந்தக் காலத்து சின்னப்பசங்க எங்களை அப்படியெல்லாம் கஷ்டப்படுத்துறது இல்ல.

BedtimeStories
BedtimeStories
Photo: Pixabay
இது பட்டாம்பூச்சி பட்டணம்... ஒரு கதை சொல்லட்டா குட்டீஸ்? #BedtimeStories - 43

அதனால, நாங்களும் உன்னை மாதிரி சின்னப்பசங்க கிட்ட நல்ல ஃபிரெண்ட்ஸா நடந்துட்டு வர்றோம்'னு சொல்லுச்சு ஓணான். ஓணான் இப்படி சொல்லிட்டிருக்கும்போதே, வீட்டுக்குப் போன எல்லா பசங்களும் மறுபடியும் வெளியே விளையாட வந்தாங்க. அவங்களுக்கெல்லாம் அஜய்யை அறிமுகப்படுத்தி வெச்சுது ஓணான். எல்லா பிள்ளைங்களும் விளையாட ஆரம்பிக்க, நடந்ததையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்த அஜய்யோட அம்மா, அவன் இதுநாள் வரைக்கும் கேம் விளையாடிட்டு இருந்த மொபைலை பீரோவில் வெச்சுப் பூட்டினாங்க. ஏன்னா, அஜய் இனிமே அவன் ஃபிரெண்ட்ஸோடதான் விளையாடுவான்.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு