Election bannerElection banner
Published:Updated:

சைலன்ட் சாமந்திப்பூவும் வம்புக்கார கள்ளிச்செடியும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories

BedTimeStories
BedTimeStories ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையைக் குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஓர் ஊர்ல மகிழ்னு ஒரு குட்டிப் பொண்ணு இருந்தா. அவளுக்கு கலர் கலரா இருக்கிற சாமந்திப் பூக்கள்னா ரொம்ப பிடிக்கும். அவளோட விருப்பத்தைத் தெரிஞ்சுகிட்ட அவளோட அப்பா நிறைய சாமந்திப் பூச்செடிகள் வாங்கிக் கொடுத்தார். அந்தச் செடிகளை மகிழும் மகிழோட அம்மாவும் அவங்க வீட்டுக்குப் பின்னாடி இருந்த தோட்டத்துல வரிசையா நட்டாங்க. அந்தச் செடிகளுக்கு தினமும் தண்ணி ஊத்துறது மகிழோட வேலை. சாமந்திச் செடிகள் எல்லாம் நல்லா வளர்ந்து, மொட்டு விட்டு பூ பூக்க ஆரம்பிச்சது. ஒரு செடியில மஞ்சள் நிற சாமந்தி பூத்திருக்கும். அதுக்கு பக்கத்து செடியில ஆரஞ்சு நிற சாமந்திப்பூ சிரிச்சுகிட்டிருக்கும். அதுக்கு அடுத்த செடியில வெள்ளை நிறத்துல சாமந்தி பூத்திருக்கும். மகிழ் பாப்பா காலையில கண்ணு விழிச்சவுடனே முதல் வேலையா தோட்டத்துக்குப் போய், ஒவ்வொரு பூவா தொட்டுப் பார்ப்பா. வாடிப்போன பூக்களைப் பறிச்சுட்டு வந்து அதுல இருக்கிற விதைகளையெல்லாம் உதிர்த்துக் காய வைப்பாள். ஒருநாள் மாடு ஒண்ணு மகிழ் பாப்பாவோட தோட்டத்துல நுழைஞ்சு சில சாமந்திப்பூக்களை சாப்பிட்டுடுச்சு. வாடிப்போன செடிகளைப் பார்த்து மகிழ் அழ ஆரம்பிக்க, அவளோட அப்பா உடனே நிறைய கள்ளிச்செடிகள் வாங்கிட்டு வந்து தோட்டத்துக்கு வேலியடைச்சாரு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
நாய்களுக்கு பனை மரம் தந்த பரிசு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 40

அதுக்கப்புறம் மாடுகளோட பயமில்லாம சாமந்திச் செடிகள் செழிப்பா வளர ஆரம்பிச்சது. கலர் கலரா பூக்களும் பூக்க ஆரம்பிச்சது. சாமந்திப்பூக்களோட அழகைப் பார்த்து கள்ளிச் செடிகளுக்கு பொறாமை வந்திடுச்சு. ஒருநாள், `சாமந்திப் பூக்களே, நீங்க எல்லாம் ரொம்ப அழகுதான். ஆனா, என்னோட பாதுகாப்பில்லாம நீங்க இங்க இருக்கவே முடியாது தெரியுமா'ன்னு வம்பிழுத்துச்சு கள்ளிச் செடிகள். அதுக்கு சாமந்திச் செடிகள், `நீ சொல்றது உண்மைதான் நண்பா. அதுக்காக உனக்கு நான் தினம் தினம் தேங்க்ஸ் சொல்லணும்'னு ரொம்ப பணிவா சொல்லுச்சு. இதைக் கேட்டவுடனே கள்ளிச்செடிக்கு `என்ன இந்தச் சாமந்திச்செடி இவ்ளோ நல்லதா இருக்கே. நாம வம்பிழுத்ததுக்கு கோபமே படலையே. அடுத்து என்ன பண்றது'ன்னு யோசிக்க ஆரம்பிச்சது.

மறுநாள், `ஏ சாமந்திச் செடியே, நீ என்னதான் கலர் கலரா பூத்தாலும் கொஞ்ச நாள்லேயே வாடி உதிர்ந்துடுவே. ஆனா, நான் எப்பவும் இதே மாதிரி பச்சைப்பசேல்னு வாடாம இருப்பேன்'னு சொல்லி மறுபடியும் வம்பிழுத்துச்சு கள்ளிச்செடி. `இதுவும் உண்மைதான் நண்பா'ன்னு நிதானமா பதில் சொல்லுச்சு சாமந்திச்செடி. `என்ன, இந்தச் சாமந்திச்செடி எப்படி வம்பிழுத்தாலும் பொறுமையா பதில் சொல்லுதே'ன்னு எரிச்சலாயிடுச்சு கள்ளிச் செடிகள்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
காட்டுக்குள்ள நடந்த சுதந்திர தினவிழா... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 38

சாமந்திச்செடிகளுக்குக் கோபம் வரவழைக்க என்ன செய்யலாம்னு யோசிச்ச கள்ளிச்செடிகள், மாடுங்க வர்ற நேரமா பார்த்து, அதுங்க தோட்டத்துக்குள்ள நுழையற அளவுக்கு கொஞ்சம் இடம்விட்டு ஒதுங்கி நின்னுகிச்சு. மாடுகளும் தோட்டத்துக்குள்ள நுழைஞ்சு சாமந்திப் பூச்செடிகளைச் சாப்பிட டிரை பண்ணுச்சு. சரியா, அந்த நேரத்துல மகிழ் பாப்பாவோட அம்மா தோட்டத்துக்குள்ள இருந்த மாட்டைப் பார்த்துட்டாங்க. உடனே தோட்டத்துக்கு வந்து மாட்டை விரட்டினாங்க. கூடவே, கள்ளிச்செடிகள் மட்டும் பாதுகாப்புக்குப் போதாதுன்னு முடிவு செஞ்சு, கள்ளிச்செடிகள் மேல நிறைய முள்ளை எடுத்துப் போட்டாங்க. தான் சாமந்திச் செடிகளுக்கு கெட்டது நினைச்சோம். அது தனக்கே நிகழ்ந்துடுச்சேன்னு கப்சிப்புனு அமைதியாயிடுச்சுங்க கள்ளிச்செடிகள்.

நாள்கள் போச்சு. சாமந்திச் செடிகள்ல இருந்த பூக்கள் எல்லாம் வாடி, வதங்க அதோட இதழ்கள் எல்லாம் உதிர ஆரம்பிச்சது. இதைப் பார்த்துக்கிட்டிருந்த கள்ளிச்செடிகள் `ஹைய்யா, நான் இதைத்தானே எதிர்பார்த்தேன்'னு நினைச்சிக்கிட்டு மனசுக்குள்ள சிரிச்சது. சாமந்திப்பூக்கள் வாடுறதைப் பார்த்ததும் மகிழ் பாப்பாவும் அவ அம்மா, அப்பாவும் சேர்ந்து அதுல இருக்கிற விதைகளை எடுத்துக் காய வெச்சாங்க. அந்த விதைகளை அக்கம் பக்கத்து வீட்ல இருக்கிறவங்க எல்லாம் வாங்கிட்டுப் போய் தங்களோட தோட்டங்கள்ல விதைச்சாங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

மகிழ் பாப்பா வீட்டுல சாமந்திச் செடிகள் எல்லாம் பூத்து, காய்ஞ்சு போயிட்டதால அதையெல்லாம் பிடுங்கிப் போட்டு சுத்தப்படுத்தினாங்க, பாப்பாவோட அம்மா. இதையெல்லாம் பார்த்து மறுபடியும் மனசுக்குள்ளேயே சந்தோஷப்பட்டுச்சு கள்ளிச்செடிகள். சாமந்திச் செடிகள் இல்லாததால, தோட்டத்துக்கு தண்ணி விடுறதை நிறுத்திட்டாங்க மகிழோட அம்மா. இதனால, தண்ணியில்லாம கள்ளிச்செடிங்க எல்லாம் நொந்துபோச்சு. அப்பதான் கள்ளிச்செடிகளுக்கு, இவ்ளோ நாள் சாமந்திச் செடிக்கு ஊத்தின தண்ணிய குடிச்சுதான் தான் பச்சைப்பசேல்னு இருந்தோம்கிற உண்மை தெரிஞ்சுது.

கொஞ்ச நாள் கழிச்சு, காய வெச்ச சாமந்தி விதைகளை மறுபடியும் விதைச்சாங்க மகிழோட அம்மா. அதுல இருந்து குட்டிக் குட்டியா சாமந்திச்செடிகள் வளர்ந்து, கலர் கலரா பூ பூக்க ஆரம்பிச்சது. சாமந்திச் செடிகளுக்கு ஊத்தின தண்ணீரைக் குடிச்சு கள்ளிச்செடிகளும் நல்லா வளர ஆரம்பிச்சுது. இப்போ எல்லாம் கள்ளிச்செடி, சாமந்திச் செடிகளோட நல்ல நட்புல இருந்ததோட, அதுங்களை மாடுங்க மேயாதபடிக்கு பத்திரமாவும் பார்த்துக்கிச்சு.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு