Published:Updated:

பாகற்காய் சாப்பிடுங்க ஃபிரண்ட்ஸ்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 30

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஓர் ஊர்ல சிவான்னு ஒரு குட்டிப்பையன் இருந்தான். அவனுக்கு பாகற்காய்னா சுத்தமா பிடிக்காது. ஆனா, ஸ்வீட்ஸ்னா ரொம்ப பிடிக்கும். ஸ்வீட்ஸ் அதிகமா சாப்பிடறதால, அவனுக்கு வயித்துல பூச்சி வந்து அடிக்கடி வயித்து வலின்னு அழுவான். அவன் வயித்துல இருக்கிற பூச்சிகளைக் கொல்லத்தான் அவங்கம்மா அடிக்கடி பாகற்காய் சமைப்பாங்க. ஆன, அவங்கம்மா பாகற்காய் சமைக்கிறப்போ எல்லாம், அவங்களுக்குத் தெரியாம அதை பாத்திரத்தோட கொண்டு போய் குப்பைத்தொட்டியில கொட்டிடுவான் சிவா. `நான் சமைச்ச பாகற்காய் எங்கே'ன்னு அவங்கம்மா கேட்டா, `பூனைக்குட்டி சாப்டுடுச்சும்மா'ன்னு பொய் சொல்லிடுவான். ஒருநாள் அவங்கம்மா சமைக்கிறதுக்காக மார்க்கெட்ல இருந்து ஒரு பெரிய பாகற்காயை வாங்கிட்டு வந்தாங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

இதை சிவா பார்த்துட்டான். அம்மா சமைக்கிறதுக்கு முன்னாடி அந்த பாகற்காயை எங்கேயாவது மறைக்கணுமேன்னு யோசிச்சவன், அவன் வீட்டு மாடியில கொட்டி வெச்சிருந்த மண்ணுக்குள் மறைச்சு வெச்சிட்டான். சிவாவோட அம்மாவும்தான் மார்க்கெட்ல இருந்து பாகற்காயே வாங்கிட்டு வரலை போலன்னு நினைச்சு விட்டுட்டாங்க. கொஞ்ச நாள் போச்சு. மாடியில மண்ணுக்குள்ள புதைச்சு வெச்ச பாகற்காயில இருந்த விதைகள் செடியா முளைக்க ஆரம்பிச்சது. சிவாவோட அம்மா இனிமே மாடியில இருந்தே பாகற்காய் பறிச்சுக்கலாம்னு சந்தோஷமாயிட்டாங்க. விஷயம் தெரிஞ்ச சிவா பயங்கர அப்செட் ஆகிட்டான். அவங்கம்மா வீட்ல இல்லாத நேரமா பார்த்து, பாகற்காய் செடியைப் பிடுங்கி எறிஞ்சுடலாம்னு அவன் பிளான் பண்ணி வெச்சிருந்தான்.

அவன் நினைச்ச மாதிரி ஒருநாள் அவங்கம்மா வெளியே கிளம்பினாங்க. இந்த நேரத்துக்காகவே காத்துகிட்டிருந்த சிவா கிடுகிடுன்னு மாடிக்குப் போய் பாகற்காய் செடி மேல தன் கையை வெச்சான். அவ்வளவுதான் பாகற்காய் செடி உஷாராயிடுச்சு. `இவன் நாம காயா இருக்கிறப்போவே மண்ணுக்குள்ள புதைச்சவன். இப்ப செடியா வளர்ந்தாலும் பிடுங்க வர்றானே'ன்னு அதுக்கு பயங்கர கோவம் வந்துடுச்சு. செடியை பிச்சி எறிய சிவா கை நீட்ட, செடி பின்னால நகர ஆரம்பிச்சது. இது புரியாத சிவா மறுபடியும் செடியைப் பறிக்க கையை நீட்டினான். செடி மறுபடியும் பின்னுக்குப் போச்சு. இந்த தடவை சிவாவுக்கு செடி பின்னுக்குப் போறது நல்லா புரிஞ்சிடுச்சு. பயந்துட்டு கிடுகிடுன்னு கீழே இறங்கி வந்துட்டான்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

அவங்கம்மா வந்தவுடனே `பாகற்காய் செடி நகருதும்மா'ங்கிற விஷயத்தை மட்டும் சொன்னான் சிவா. `பிள்ள ஏதோ தெரியாம பேசறான்'னு நினைச்ச சிவாவோட அம்மா, மறுநாள் பாகற்காய் செடிக்கு தண்ணி ஊத்த மாடிக்குப் போனாங்க. அவங்க பின்னாடி பயந்துட்டே போனான் சிவா. சிவா அம்மா செடிக்குத் தண்ணீர் ஊத்தி முடிச்சதும், பாகற்காய் செடி `ஆன்ட்டி கொஞ்சம் நில்லுங்க' அப்படின்னு கூப்பிட்டுச்சு. யார் கூப்பிடறதுன்னு சுத்தும் முத்தும் தேடிப் பார்த்தாங்க சிவாவோட அம்மா. அவங்க கண்களுக்கு யாருமே தெரியலை. `ஆன்ட்டி நான்தான் பாகற்காய் செடி பேசறேன்'னு கீழ இருந்து குரல் கேட்டதும், `அப்போ சிவா சொன்னது உண்மைதான் போல'ன்னு நினைச்சுக்கிட்டு `சொல்லு செடியே'ன்னாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`நீங்க ஒருநாள், சமைக்கிறதுக்காக பாகற்காய் வாங்கிட்டு வந்தீங்க. அதை சிவா இந்த மண்ணுல மறைச்சு வெச்சிட்டான். அந்த பாகற்காய் யாருமே சாப்பிடாம வீணா அழுகிப் போயிடுச்சு. அதுல இருந்த விதையில இருந்துதான் நான் முளைச்சு வந்தேன். இப்போ என்னை பிடுங்கிப் போட பார்க்கிறான் சிவா. என்னைக் காப்பாத்துங்க'ன்னு கம்ப்ளெய்ன்ட் கொடுத்துச்சு. சிவா செஞ்ச சேட்டைகளையெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட அவனோட அம்மாவுக்கு ரொம்ப கோவம் வந்திடுச்சு. அம்மாவோட கோவத்தைப் பார்த்த சிவா வேகமா கீழ இறங்கி வந்து பெட்ல படுத்துக்கிட்டான். வீட்டுக்குள்ள வந்த அம்மா, பெட்ல படுத்துட்டிருந்த சிவாவைப் பார்த்ததும் தூங்குறான்னு நினைச்சிட்டு அமைதியா விட்டுட்டுட்டாங்க. `ஹைய்யா அம்மாவை ஏமாத்திட்டோம்'னு மனசுக்குள்ள பயங்கரமா ஹேப்பியாயிட்டான் சிவா.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

அன்னிக்கு ராத்திரி சிவாவுக்கு வழக்கம்போல வயித்துவலி வந்துடுச்சு. வலின்னா சாதாரண வலி இல்ல. தாங்க முடியாத வலி. சிவா ஓன்னு அழ ஆரம்பிச்சிட்டான். அவனை செக் பண்ண டாக்டர், `சிவா வயித்துக்குள்ள நிறைய புழுக்கள் இருக்கிறதாலதான் அவனுக்கு தாங்க முடியாத வயித்துவலி வருதுன்னும் அதை சரி பண்ண மருந்து சாப்பிடணும்'னும் சொன்னாரு. அந்த மருந்தெல்லாம் பயங்கர கசப்பா இருந்துச்சு. சாப்பிட மாட்டேன்னு சொன்ன சிவாவை அவங்கம்மா, `எப்பப் பாரு ஸ்வீட் சாப்பிடுறே. பாகற்காய் வாங்கிட்டு வந்தா மண்ணுக்குள்ள புதைச்சு வெச்சுடுறே'ன்னு ரொம்ப கோவிச்சுக்கிட்டாங்க. அன்னிக்கு நைட்டு அழுதுட்டே தூங்கினான் சிவா.

மறுநாள் காலையில கண்ணு முழிச்சதும் சிவாவுக்கு பாகற்காய் செடியைப் பார்க்கணும் போல தோணுச்சு. உடனே மாடிக்கு ஓடினான். அங்க பாகற்காய் செடியில மஞ்சள் நிறப் பூக்கள் பூத்து நிறைய பிஞ்சுகள் விட்டிருந்துச்சு. அந்தப் பூக்களை ஆசையா தொடப் போனான் சிவா. செடி பயந்துபோய் பின்னாடி போச்சு. சிவாவுக்கு மனசு கஷ்டமா போயிடுச்சு. `பாகற்காய் செடியே... உன்னோட அருமை தெரியாம உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். இனிப்பு மாதிரி கசப்பும் ஒரு டேஸ்ட்தான்னு எனக்குப் புரியல. ஐயம் ஸாரி'ன்னு சொன்னான்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

அதுக்கு பாகற்காய் செடி, `உனக்கு மட்டுமல்ல சிவா, நிறைய பேருக்கு எங்களைப் பிடிக்கல. ஆனா, நாங்கதான் உங்க வயித்துல இருக்கிற புழுக்களைக் கொன்னு உங்களுக்கு வயித்துவலி வராம பார்த்துக்கிறோம். என்னோட காய்கள் பெருசானதும் நீ கண்டிப்பா சாப்பிடணும். அதுக்குப்பிறகு உனக்கு வயித்துவலி வராம இருக்கிறதுக்கு நான் கேரன்டி'ன்னு சொல்லுச்சு பாகற்காய் செடி.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு