Published:Updated:

இது பட்டாம்பூச்சி பட்டணம்... ஒரு கதை சொல்லட்டா குட்டீஸ்? #BedtimeStories - 43

Butterfly
Butterfly ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையைக் குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

முன்னொரு காலத்துல பட்டாம்பூச்சி பட்டணம்னு ஓர் ஊர் இருந்துச்சு. அந்த ஊர்ல நிறைய பூந்தோட்டங்கள் இருந்ததால அந்த ஊருக்கு பல ஊர்கள்ல இருந்தும் கலர் கலரா நிறைய பட்டாம்பூச்சிகள் பறந்து வரும். இங்க வந்து இலைகளுக்கு அடியில முட்டையிட்டு அது புழுவாகி, பட்டாம்பூச்சியானதும் சில பட்டாம்பூச்சிகள் மட்டும் தங்களோட பாப்பா பட்டாம்பூச்சிகளைக் கூட்டிட்டு மறுபடியும் தங்களோட இடத்துக்கே திரும்பிப் போயிடும். ஆனா, பல பட்டாம்பூச்சிகள் இந்த ஊர் பிடிச்சுப்போய் இங்கேயே தங்கிடும். அதனால, இந்த ஊர் வானத்துல எப்பவும் கலர்கலரா பட்டாம்பூச்சிகள் பறந்துட்டே இருக்கும். இதைப் பார்த்த மத்த ஊர்க்காரங்க, இந்த ஊரை பட்டாம்பூச்சி பட்டணம்னு சொல்லிச் சொல்லி, காலப்போக்குல அதுவே ஊர் பேரா ஆயிடுச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

கொஞ்ச காலத்துக்கு அப்புறம் பட்டாம்பூச்சி பட்டணத்துக்கு சில தேனீக்கள் வந்துச்சுங்க. ஊர் நிறைய பூந்தோட்டங்களா இருந்ததால, தேனீக்களோட கண்ணுக்கு எட்டுற தொலைவு வரைக்கும் ஒரே பூக்களா இருந்துச்சு. அதைப் பார்த்த தேனீக்கள் ஆசை ஆசையா ஆளுக்கொரு பூவுல உட்கார்ந்து தேன் குடிக்க ஆரம்பிச்சிதுங்க. இதை ஒரு பட்டாம்பூச்சி பார்த்திடுச்சு. உடனே, ஓர் உயரமான செம்பருத்தி செடி மேல நின்னுக்கிட்டு `ஆபத்து ஆபத்து, எல்லாரும் நான் சொல்றதைக் கேளுங்க'ன்னு சத்தமா கத்துச்சு. அதுபோட்ட சத்தத்தைக் கேட்டு எல்லா பட்டாம்பூச்சி களும் தேன் குடிக்கிற வேலையை நிறுத்திட்டு குரல் வந்தப் பக்கமா திரும்புச்சுங்க.

குரல் கொடுத்த பட்டாம்பூச்சி, `ஃபிரெண்ட்ஸ், இந்த ஊர்ல பட்டாம்பூச்சிகளான நாம மட்டுமே பல காலமா வாழ்ந்துட்டு வர்றோம். இப்போ சில தேனீக்கள் வந்திருக்கு. அதுங்க எல்லாம் தேனைக் குடிக்க ஆரம்பிச்சிட்டா நமக்கு தேன் பத்தாம போயிடும். அதனால, அதுங்களையெல்லாம் உடனடியா இந்தப் பட்டாம்பூச்சி பட்டணத்தைவிட்டு வெளியே அனுப்பணும். எல்லாரும் வாங்க போகலாம்'னு கூப்பிட்டுச்சு. உடனே எல்லா பட்டாம்பூச்சிகளும் தேன் குடிச்சிட்டிருக்க தேனீக்கள்கிட்ட போச்சுங்க. `ஒரே நேரத்துல இவ்ளோ பட்டாம்பூச்சிகளா'ன்னு பயந்துபோன தேனீக்கள் படக்குன்னு பூவுல இருந்து வாயை எடுத்துட்டு திரு திருன்னு முழிச்சிதுங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
இது தேவதைகளுக்காக மாணவர்கள் எடுத்த உறுதிமொழி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 42

சத்தம்போட்ட பட்டாம்பூச்சி மத்த பட்டாம்பூச்சிகளுக்கு முன்னாடி வந்து நின்னு, `இது எங்க ஊர். அதனாலதான் இந்த ஊருக்கு எங்கப் பேரையே வெச்சிருக்காங்க. நீங்க எங்க ஊர்ல இருந்தா எங்களுக்கு சாப்பிட தேன் இல்லாம போயிடும். நீங்க எல்லாம் முதல்ல இந்த ஊரைவிட்டு வெளியே போங்க'ன்னு அதட்டலா சொல்லுச்சு. இது சொன்னதைக் கேட்ட மத்த பட்டாம்பூச்சிகளும் `ஆமா ஆமா... எங்க ஃபிரெண்ட் சொல்றது சரிதான். நீங்க எல்லாரும் மொதல்ல எங்க ஊரைவிட்டு வெளியே போங்க'ன்னு கத்த ஆரம்பிச்சிதுங்க. பட்டாம்பூச்சிகளோட சத்தத்தைக் கேட்டு பயந்துபோன தேனீக்கள் வேற வழியில்லாம அந்த ஊரை விட்டு போயிடுச்சுங்க.

இந்தச் சம்பவம் நடந்து கொஞ்ச காலம் கழிச்சு சில தவிட்டுக் குருவிகள் பட்டாம்பூச்சி பட்டணத்துக்கு வந்துச்சுங்க. ஊர் பூரா இருக்கிற பழ மரங்களைப் பார்த்துட்டு அந்தக் குருவிகள் இந்த ஊருக்குள்ள வந்துச்சுங்க. வழக்கம்போல, ஒரு பட்டாம்பூச்சி ஊருக்குள்ள புதுசா வந்திருக்கிற தவிட்டுக்குருவிகளைப் பார்த்துட்டு, வழக்கம்போல `ஓ'ன்னு கத்தி மத்த பட்டாம்பூச்சிகளையெல்லாம் கூப்பிட்டு விஷயத்தை சொல்லுச்சு. வழக்கம்போல எல்லா பட்டாம்பூச்சிகளும் ஒண்ணு சேர்ந்துட்டு தவிட்டுக் குருவிகள்கிட்ட போச்சுங்க. பட்டாம்பூச்சிகளோட கூட்டத்தைப் பார்த்து மிரண்டுப் போயிடுச்சுங்க தவிட்டு குருவிகள்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
சைலன்ட் சாமந்திப்பூவும் வம்புக்கார கள்ளிச்செடியும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories

கூட்டத்துக்கு முன்னாடி வந்த ஒரு பட்டாம்பூச்சி, `இங்க பாருங்க சிட்டுக்குருவிகளே'ன்னு பேச ஆரம்பிச்சிது. உடனே தவிட்டுக் குருவிங்க `எங்க பேரு தவிட்டுக்குருவி. பார்க்க சிட்டுக்குருவி மாதிரி இருந்தாலும் நாங்க அதைவிட பெரிய சைஸ்ல இருப்போம்'னு சொல்லுச்சு. `நீ என்னக் குருவியா வேணா இருந்துட்டு போ. ஆனா, இது எங்க ஊர். அதனால மொதல்ல ஊரை விட்டு வெளியே போங்க'ன்னு கத்துச்சுங்க பட்டாம்பூச்சிகள். 'ஏன்'னு கேட்டுச்சு தவிட்டுக் குருவிகள். `ஏன்னா, நீங்க எங்களோட குட்டிப்புழுக்களை சாப்பிடுடுவீங்க. அதனாலதான்'னு பதில் சொல்லுச்சுங்க பட்டாம்பூச்சிங்க. `நாங்க அப்படி செய்ய மாட்டோம். நீங்க எங்களை இங்கயே தங்க அனுமதிச்சீங்கன்னா நாங்க பழங்களை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்துக்கிறோம்'னு சொல்லுச்சுங்க தவிட்டுக்குருவிகள். ஆனா, இது எதையும் காதுல வாங்கிக்காத பட்டாம்பூச்சிங்க தவிட்டுக்குருவிகளை ஊரைவிட்டே விரட்டிடுச்சுங்க.

நடந்ததையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்த வயசான பட்டாம்பூச்சி ஒண்ணு, எல்லா பட்டாம்பூச்சிகளையும் ஒண்ணு சேர்த்து ஒரு மீட்டிங் போட்டுச்சு. அந்த மீட்டிங்ல `பாருங்க குழந்தைங்களே, இந்த ஊருக்கு நம்ம பேரு வெச்சிருந்தாலும் இது எல்லாருக்கும் பொதுவானது ஊருதான். ஊருக்கு வர்றவங்களையெல்லாம் இப்படியே விரட்டி விட்டுட்டு இருந்தா, அப்புறம் தனிமையிலதான் நாமெல்லாம் வாழணும். ஒண்ணா இருக்கிறதுதான் அழகு. அதனால, நீங்க விரட்டி விட்ட தேனீக்களையும் தவிட்டுக்குருவிகளையும் மறுபடியும் கூட்டிட்டு வாங்க. இங்க கிடைக்கிற உணவை எல்லாரும் பகிர்ந்து சாப்பிடலாம்'னு மத்த பட்டாம்பூச்சிகளுக்கு அட்வைஸ் பண்ணுச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

பட்டாம்பூச்சிகளுக்கு தாங்கள் செஞ்சது எவ்ளோ பெரிய தப்புன்னு புரிஞ்சுது. மறுநாளே ஒரு பெரிய அட்டையில `நண்பர்களே வாங்க' அப்படின்னு எழுதி ஊருக்கு வெளியே மாட்டி வெச்சுதுங்க. அதைப்பார்த்துட்டு தேனீக்களும் தவிட்டுக்குருவிகளும் மறுபடியும் பட்டாம்பூச்சி பட்டணத்துக்கு வந்ததுங்க. அதுக்கப்புறம் பட்டாம்பூச்சிகள், தேனீக்கள், தவிட்டுக்குருவிகள் எல்லாம் ஒண்ணா, ஒற்றுமையா சந்தோஷமா வாழ்ந்துச்சுங்க.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
அடுத்த கட்டுரைக்கு