Published:Updated:

சோம்பேறி குரங்கும், `நண்பேண்டா' ஆமையும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories

ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்
ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? இன்று முதல் தினந்தோறும் விகடன்.காமில் வெளியாகவிருக்கின்றன #BedTimeStories.

ஒரு காட்டுல சேட்டையான குரங்கு ஒண்ணும் அமைதியான ஆமை ஒண்ணும் நல்ல ஃபிரெண்ட்ஸா இருந்துச்சாம். குரங்கு, ஆமை ரெண்டுத்துக்குமே மாம்பழம்னா உயிர். காட்டுல இருக்கிற மாமரங்கள்ல தேனீக்கள் கூடு கட்டியிருந்ததால, அந்த மரங்கள்ல இருக்கிற பழங்களைப் பறிச்சு சாப்பிடறதுக்கு ரெண்டுத்துக்கும் பயமோ பயம். ஒரு நாள் சாயங்காலம் ரெண்டும் ஆத்தங்கரையில உட்கார்ந்து இதுபத்தி டீப்பா டிஸ்கஸ் பண்ணுச்சுங்க. டிஸ்கஷன் முடிவுல, நாமளே ஏன் ஒரு மாமரத்தை வளர்க்கக் கூடாதுன்னு யோசிச்சுதாம் ரெண்டும். மறுநாளே எங்கியோ இருந்து ஒரு மாங்கொட்டையைக் கொண்டு வந்திச்சு ஆமை. ரெண்டும் சேர்ந்து சின்னதா பள்ளம் தோண்டி அதுக்குள்ள மாங்கொட்டையைப் போட்டு மூடுச்சுங்க. கொஞ்ச நாள்ல மழை பெய்ய, மாங்கொட்டை துளிர்விட்டு சின்ன செடியா வளர ஆரம்பிச்சது. சேட்டை பிடிச்ச குரங்கு மரத்துக்கு மரம் தாவிட்டு இருக்க, ஆமை மட்டும் அந்த மாஞ்செடிக்குத் தண்ணிகொண்டு வந்து ஊத்துறது, மாட்டுச் சாணம் கொண்டு வந்து போடுறதுன்னு ரொம்ப சின்சியரா இருந்துச்சு.

ஆமை
ஆமை
Photo: catalyststuff / Freepik

சில வருஷங்கள் போச்சு. மாமரம் பெருசா வளர்ந்து பூ பூக்க ஆரம்பிச்சது. இதைப் பார்த்த தேனீக்கள் இந்த மாமரத்துலேயும் கூடுகட்ட வர, கோபப்பட்ட குரங்கு தேனீக்களை சூ சூன்னு விரட்டி விட்டுடுச்சு. ஆனா, ஆமை மட்டும் அந்தத் தேனீக்களைக் கூப்பிட்டு `காட்ல எத்தனையோ மரங்கள் இருக்க நாங்க நட்டு வெச்ச மரத்துல ஏன் கூடு கட்ட வந்தீங்கன்னு கேட்டுச்சு. அதுக்கு தேனீக்கள் `நாங்க எல்லாம் ரொம்ப குட்டித் தேனீக்கள். பெரிய மரங்கள்ல கூடு கட்ட எங்களுக்கு பயமா இருக்கு. உங்க மாமரம்தான் எங்களுக்கு ஏத்தபடி உயரம் குறைவா இருக்கு'ன்னு சொல்லுச்சிங்களாம். இதைக் கேட்டு மனசு உருகிப்போன ஆமை, தன்னோட குரங்கு நண்பனைச் சமாதானப்படுத்தி தங்களோட மாமரத்துல தேனீக்களைக் கூடுகட்ட அனுமதிச்சுதாம்.

கொஞ்ச நாள் போனதும், மாம்பூவெல்லாம் பிஞ்சாகி, காயாகி, பழமாகி வாசனை வீச ஆரம்பிச்சிது. இதுக்காகவே காத்துக்கிட்டிருந்த குரங்கும் ஆமையும் மாமரத்துக்கிட்ட வந்துச்சாம். குரங்கு விறுவிறுன்னு மரத்து மேல ஏற, ஆமையால அது முடியல. அய்யோ பாவமா மரத்துக்கீழே நின்னுக்கிட்டு, மாம்பழங்களை அண்ணாந்து பார்த்துச்சாம். மரத்து மேல ஏறின குரங்கு ஒரு மாம்பழத்தைப் பறிக்கிறது, பாதியைக் கடிக்கிறது, மீதியை மண்ணுல விட்டெறியறதுன்னு சேட்டை பண்ணிட்டிருந்துச்சாம். குரங்கு, தான் கடிச்ச மாம்பழங்களை மண்ணுல விட்டெறியப்போ எல்லாம் ஆமை `குரங்கு தனக்குத்தான் மாம்பழத்தைப் போடுதோன்னு நம்பிப் போய் பார்க்கும். ஆனா, எல்லாத்தையுமே குரங்கு கடிச்சு, எச்சில் பண்ணி வெச்சிருக்கும். ஒருகட்டத்துல ஆமைக்கு குரங்கு தனக்கு மாம்பழம் தராதுங்கிறது தெரிஞ்சுபோச்சு.

Monkey
Monkey
Photo: sentavio / Freepik

அப்படியே சோர்ந்து போய் மாமரத்து மேல சாய்ஞ்சு உட்கார்ந்திடுச்சு. குரங்கோட சேட்டைகளையும் ஆமையோட கஷ்டத்தையும் பார்த்துக்கிட்டே இருந்த தேனீக்களுக்கு மனசு ரொம்ப கஷ்டமாகிடுச்சு. ராணி தேனீ ஆமைகிட்ட வந்து `ஆமையாரே நீங்க வளர்த்த மாமரத்துல இருந்து நீங்களே மாம்பழம் சாப்பிட முடியாம ஆயிடுச்சே'ன்னு வருத்தப்பட்டுச்சு. ஆமை ரொம்ப பெருந்தன்மையா, `என் நண்பன்தானே சாப்பிடுறான். நல்லா சாப்பிடட்டும். வயிறு புடைக்க சாப்பிட்ட பிறகு, அவன் எனக்குப் பழம் பறிச்சுப் போடுவான்'னு நம்பிக்கையா சொல்லுச்சாம்.

சில நாள்கள் போச்சு. குரங்கு தன்னோட இயல்பை மாத்திக்கவே இல்ல. மாம்பழங்களைப் பறிக்கிறது, கடிச்சு எச்சில் பண்றது, மண்ணுல வீசியெறியறதுன்னு தொடர்ந்து செஞ்சுக்கிட்டே இருந்துச்சாம். ஆமைக்கு கண்ணீரே வந்திடுச்சு. இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்த ராணி தேனீக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு. தன்னோட இருந்த மத்த தேனீக்களைக் கூப்பிட்டு, `இந்தக் குரங்கு, தான் உழைக்காம ஆமையோட உழைப்பை என்ஜாய் பண்றான்.

Honeybee
Honeybee
Image by Clker-Free-Vector-Images from Pixabay

ஆமைக்கு ஒரு மாம்பழம்கூட தராம ஏமாத்துறான். எல்லாத்துக்கும் மேல ஓர் உணவுப்பொருளை எச்சில் செஞ்சு வீணா மண்ணுல போடுறான். இவனை நாம எல்லாரும் அட்டாக் செஞ்சு மரத்தைவிட்டே விரட்டுவோம்னு சொல்லிச்சு. அவ்வளவுதான், அட் எ டைம் எல்லா தேனீக்களும் குரங்கை கொட்டு கொட்டுன்னு கொட்ட `அய்யோ அம்மா'ன்னு அலறிட்டு மரத்தைவிட்டு இறங்கி ஓடுச்சாம் குரங்கு. அதுக்கப்புறம் மாமரத்தை ஆமை பராமரிக்க, ஆமைக்கு தேனீக்கள் மாம்பழம் பறிச்சுப்போடன்னு ஒருத்தருக்கொருத்தர் உதவியா சந்தோஷமா இருந்தாங்களாம்.

- நாளை சந்திக்கலாம்! 

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? இன்று முதல் தினந்தோறும் விகடன்.காமில் வெளியாகவிருக்கின்றன #BedTimeStories.
அடுத்த கட்டுரைக்கு