சினிமா
Published:Updated:

குல தெய்வம் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

- உமா மோகன்

“இஞ்சேரு காந்தி, ஒங்க அத்த வூட்டுல தங்குறதுக்கு வசதிப்படுமா... இல்ல, போனமா வந்தமான்னு கெளம்பிடணு மான்னு நீதான் சொல்லணும். அங்ஙனக்குள்ள போயி முழிச்சிட்டுக் கெடக்கப்படாது.”

நாத்தனாரின் கண்டிப்பான குரலுக்கு என்ன பதில் தருவது என்று காந்திமதிக்குச் சற்று யோசனைதான். அத்தையைப் பார்த்தே எத்தனையோ காலமாச்சு, இதில் அவர்கள் வீட்டு வசதியை எப்படி முடிவு செய்ய? ஆனால் அதற்காக “தோதுப்படாது அத்தாச்சி” என ஒற்றை வார்த்தையைச் சொல்லிவிட்டு இவளிடம் மல்லுக்கட்ட முடியுமா?

காந்திமதியின் அத்தை வீடு தன் கணவரின் குலதெய்வக் கோயில் அருகில்தான் இருக்கிறது என்பதை விஜியேதான் கண்டுபிடித்து வந்திருந்தாள்.

தன் குடும்பம் குலதெய்வ வழிபாடு என்ற ஒன்றை எப்போது செய்தது, எப்போது விட்டது... ஒரு விவரமும் தெரியாது. மனைவி கேட்கும்போதெல்லாம், ``பாக்கலாம்; ஆவட்டும்; விசாரிக்கிறேன்; கேப்போம்’’ என விதவிதமாகத் தள்ளிப்போட்டு வந்தார் ஆறுமுகம்.

அவருக்குத் தான் உண்டு, தன் வேலை உண்டு என்ற ஐம்பத்திரண்டு வருட சரித்திரத்தில் ஒருபக்கம்கூட மாற்று அடி வைத்துப் பழக்கமில்லை.

மகன் ஒழுங்காகப் படிக்கவில்லை, பெண்ணுக்குக் கல்யாணம் தகையவில்லை, சொந்தமாக ஒரு வீடு கட்ட முடியவில்லை என்று தன் குடும்பத்தில் தோணித் துலங்கி ஒண்ணும் நடக்காததற்கு வேறு யாரைத்தான் கேட்பது என்று ஜோசியர் ஜோசியராகத் துரத்திக்கொண்டிருந்தாள் விஜி.

குல தெய்வம் - சிறுகதை

“தப்பு உம்பேர்ல இல்ல... ந்தா அங்க நிக்கிறாம் பாரு, அவனாலதான்...’’

``ந்தா இங்ஙனக்குள்ள முழிக்கிறானே, இவந்தான் காரணம்...” என்று யார் மேலாவது பழியைத் தூக்கிப் போட்டு அல்பநிம்மதி கிடைக்காதா என்றுதானே அந்த அலைச்சல்!

விஜியின் தொடர் முயற்சியில், நாடி பார்க்கிறவன்; வெத்திலையில் மை போடுகிறவன்; விளக்கை ஏத்திவெச்சிட்டு எலுமிச்சையை உருட்டி விதியின் பாதையைக் கண்டுபிடிக்கிறவன் என பலபேருடைய அறிமுகம் கிடைத்தாலும், தீர்வுதான் எங்கேயும் கிடைக்கவில்லை.

தூக்கம் இல்லாமல் உருண்டு கொண்டிருந்த ஒருநாள், சோழி உருட்டிப் போடுகிற தாடிக்காரர் ஒருத்தர் ரொம்ப வருஷம் முன்னாடி “ஒங் குலதெய்வம் அன்னந்தண்ணி வெக்காம கெடக்குதம்மா போய்ப்பாரு’’ என்று சொன்னது தண்ணிக்குள்ள அமுக்குன பந்து மாதிரி படக்குனு நினைவில் எழும்பியது.

‘சரி, மத்தது கெடக்கட்டும், இதைப் பாப்போம்’ என்று முடிவு செய்தாலும் அது ஒண்ணும் அவ்வளவு சல்லிசான வேலை யாயில்லை.

ஆறுமுகத்துக்கு நினைவு தெரியு முன்பே திருச்சியில்தான் குடும்பம் இருந்தது. பிழைக்க வந்த இடத்தில் சோத்துக்கு அல்லாடுவதே பெரும்பாடாகிக் கிடக்க, பங்காளி பகுத்தாளி ஒருத்தரையும் காட்டாம கொள்ளாமயே அப்பன் ஆயி போய்ச்சேர... யாரோ இழுத்துப் பிடிச்சு ``நல்ல பையன்” என்ற வில்லையை ஒட்டி விஜியைக் கட்டி வைத்தனர். இங்கும் அப்போ சொல்லிக்கொள்ளுறபடி எதுவும் இல்லை. ஒண்ணு ரெண்டாச்சு...ரெண்டு நாலாச்சு.

இதில் பூர்வீகத்தைக் கொண்டு வா என்றால் நான் எங்கே போக என்று விழித்துக்கொண்டிருந்தார் ஆறுமுகம். போகுமிடம் வருமிடமெல்லாம் சொந்தத்தை நூல் பிடித்துக் கண்டுபிடித்துக் கண்டுபிடித்து ஒருவழியாக ஆறுமுகத்தின் பாட்டனார்வழி சொந்தம் ஒன்று விஜிக்குத் தட்டுப்பட்டுவிட்டது. அங்கும் இழுக்கப் பறிக்கக் கிடந்த ஒரு ஆத்தாவிடம் கேட்டுச் சொல்லிவிட்டார்கள்.

அங்கு எப்போது போவது, கோயில் நிலவரம் பற்றி யாரிடம் தெரிந்துகொள்வது என்று அடுத்த வேட்டையைத் தொடங்கியபோதுதான் தன் தம்பி மனைவி காந்திமதியின் அத்தை வீடு அங்குதான் பக்கத்தில் இருக்கிறது என்று கண்டுபிடித்தாள் விஜி.

ஐயனார் என்று மட்டும்தான் சொன்னவர்களுக்கு விவரம் தெரிந்திருந்தது.பொங்கலா, புளியோதரையா, ஆடு விடறதா, கற்பூரம் சாம்பிராணியெல்லாம் உண்டா; காலம்பறயா, உச்சிப்பூசையா, சந்திப் படையலா ஒண்ணும் புரியலை.

விஜியின் தம்பிதான் ஒரு யோசனை சொல்ல இடமிருந்தது.

``ஏங்க்கா, மொறயா செய்யறதெல்லாம் அடுத்து பாத்துக்க… ஒரு நட போயி ஒரு தேங்காய ஒடச்சிட்டு, ஒரு மாலயப் போட்டுட்டு, பூசாரி கீசாரி இருந்தா சாரிச்சிட்டு வரலாம்ல…ஒக்காந்த எடத்துலயே எல்லாத்தியும் கேட்டுட்டு இருக்க...’’

சரி என்றே தோன்றினாலும் அதில் ஒரு துணைக்குறிப்பு சேர்க்காவிட்டால் அப்புறம் அது விஜி இல்லையென்றாகிவிடாதா?

“கருக்கல்ல பொறப்புட்டுப் போய்ச் சேருவொம்… கையில காசு பணம் தோதோட போனா ஒரு நா இருந்துகூட அவுசேகம், படையல் என்ன மொறன்னு கேட்டுச் செஞ்சிட்டு வந்துருவோம்… ஒரு நட கெளம்பவே நமக்கு இத்தினி பாடு, எல்லாத்தியும் இழுத்துக்கட்டி திரும்ப ஒரு நட… யப்பா சாமி…”

முத்துப்பேட்டைக்குப் பக்கமா, திருத்துறைப்பூண்டியா எங்குபோய் இறங்குவது என்பதே சரியாகப் புலப்படாதபோது, எங்கு போய்த் தங்குவது?

இதற்காகவே விஜி கண்டுபிடித்த யோசனைதான் தம்பி மனைவியின் அத்தை வீடு.

காந்திமதிக்கு சொல்லவும் முடியவில்லை, மெல்லவும் முடியவில்லை. தனக்கோ தன் பிறந்த வீட்டுக்கோ ஒட்டும் உறவும் வறண்டுபோன சொந்தத்தை இப்போது தேடிப் போவதும்…கசப்பு கொப்பளித்து வந்தது.

அக்காவும் தம்பியும் உட்கார்ந்து உட்கார்ந்து பேசுவதைக் கேட்டால் தலை சுற்றியது.

குலதெய்வத்தைக் கும்பிட்டபின் வாழ்வில் முன்னேறியவர்களைப் பற்றிப் பெரிய பட்டியலே வைத்திருந்தார்கள். மறந்தவர்கள் குடும்பத்தில் என்ன நடக்கும் என்பதை யாரோ ஒரு ஜோசியன் பாட்டாகவே சொல்லிவிட்டிருந்தான்.

அதை அப்படியே பிடித்துக்கொண்டு விஜி ஒப்பிக்க, தன் பங்குக்குக் கற்றுக்கொண்ட தம்பிகாரனும் சேர்ந்து பார்ப்பவர்களுக்கெல்லாம் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்கள்.

கதைபேசச் சேர்ந்துகொண்ட கீழத்தெரு பொன்னு அத்தை வேறு, முறைதவறிச் செய்யப்படும் வழிபாடுகளால் என்னென்ன நடக்குமென்பதைக் கதை கதையாய் அளந்து கொண்டிருந்தாள்.

ஒரு காப்பி குடித்து, ஒரு லோட்டா தண்ணி குடித்துப் பேசித் தீராத கதை, இரவுக்குக் கிண்டிய அரிசி உப்புமாவோடும் தீரவில்லை.

தேடிவந்த பேத்தியை ஏதோ சொல்லி அனுப்பிவிட்டு, கூடத்திலேயே முந்தானையை விரித்துக்கொண்டு முதுகைச் சரித்துவிட்டாள் பொன்னு அத்தை.

குல தெய்வம் - சிறுகதை

எட்டிப்பார்த்துவிட்டு அடப்பாவமே என “தலவாணி வேணுமாத்தே” என்ற காந்திமதியிடம், “ஒரு பலாட்ட குடு பாப்பா, தலவாணியெல்லாம் ஒங்க மாமாவோட போச்சு” என்று காலை நீட்டி விஜி பக்கம் ஒருக்களித்துக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள்.

அங்காளம்மனுக்கு மாவிளக்கு போடுவது தன் அப்பா வீட்டு வழக்கம்; அதையே மாரியம்மனுக்குச் செய்தால் போதும் என்று மருமகள் முறுக்கியது, ஒரு கைப்புடி துள்ளுமாவுல என்ன சொத்தழிந்தா போவும்னுதான் தலையால தண்ணி குடிச்சுப் பாத்தது, அவள் கேட்காமல் மாவிளக்கு மட்டும் ஏற்ற, மறுநாளே வீட்டுத் திண்ணையில் பாம்பு படுத்திருந்தது.

”ஏட்டீ... அதுவும் வேற ஒத்தர் கண்ணுல படுல பாத்துக்க. அவளேதான் பாத்தது, கத்துனது. எம் மொவன் வந்து அங்குன எட்டிப் பாக்குறதுக்குள்ள போயித்து. எங்ஙன போச்சு, எவடம் போச்சு…தெரியாது. ஒருத்த கண்ணுல தலையும் படல, வாலும் படல. இதே நாம சொல்லியிருந்தா நம்புவாவொளா..? இப்ப புத்துக்குப் பாலூத்தறது என்னா, மொறம் நெறயா துள்ளு மாவ வெச்சிட்டு போறவோ வர்ரவோ வாயில ஊட்டாத கொறயா அள்ளியள்ளிக் குடுக்கறது என்னா...”

அதிலென்னவோ பெரிய வெற்றி அடைந்துவிட்ட பெருமை பொன்னு அத்தைக்கு.

“இஞ்சேரு விஜி... இதுலயெல்லாம் அவுசரப்பட்டு எதுவும் நெனச்சிக்கப்படாது…வெவரமா பேசித் தெரிஞ்சிட்டு அப்பொறந்தா பிராத்தனையே பண்ணிக்கணும். இப்பிடிதாம் பாரு, எந்தங்கச்சி… தங்கச்சின்னா சித்தப்பா மவ… அவளுக்கும் அய்யனாருதான் குலதெய்வம். ஆனா, போறது வாரது இல்ல பெருசா.’’

“தெரிஞ்சா கூடயா அத்த. ஒரு கல்யாணங் காதுகுத்துன்னு போயி ஒரு சூடம் ஏத்த மாட்டாவொ... இப்ப எங்கத வேற... இன்ன வெடம்னு சொல்லக்கூட மக்க மனுசா இல்லாத வூட்டுல போயி பூந்துட்டன். அப்பிடியாபட்ட நானே, ந்தா தேடித் தேடிப் போவணும்னு தவிக்கல...”

தன்னுடைய முயற்சியைப் பற்றி மிகுந்த நிறைவு இருந்ததை நடுவில் ரெண்டு வார்த்தை போட்டு, தானே தட்டிக்கொடுத்துக்கொள்ளலாம் என்று விஜிக்குத் தோன்றியது.

“அது செரி, இப்ப ஆரு உன்னாட்டந் தேடறாவோ” என்று மனதாரச் சொல்லி, தலையைத் தூக்கி விஜியின் மலர்ந்த முகத்தைப் பார்த்து விட்டுக் கதையைத் தொடர்ந்தாள் பொன்னு அத்தை.

“எந்தங்கச்சி சொன்னன்ல... திடீர்னு அவ புருசனுக்கு வவுத்துல கட்டின்னு வெளிப்பாளையத்துக்குப் போனா, ஆப்பரேசன் பண்ணச் சொல்லிட்டாவோ… ஆரோ பக்கத்துல இருந்த சனம் இவ அழுது பொறளுறதப் பாத்து மனசு தாங்காம, `உன் குலதெய்வத்த வேண்டிக்க...என்னா சாமி உனக்கு’ன்னு கேட்டுருக்கு. இவளும் அய்யனாருன்னு சொல்ல, அவ்வொ `அப்ப குதுர வுடறேன்னு வேண்டிக்க’ன்னு சொல்லியிருக்காவோ… இவளும் வயித்து வலி பாரு, ஒடனே அப்பிடியே பிராத்தன பண்ணியிருக்கா. எல்லாம் சரியாயி இவ்வொ கோயிலுக்குப் போயி கேட்டா… `சும்மா இசுக்கு பிசுக்குன்னு வெக்கிற வழக்கமில்லே… ரெண்டு ஆள், நாலு ஆள் ஒயரத்துக்குத்தான் இங்ஙன குதுர வெக்கிறது’ன்னு சொல்ல... கண்ணாமுழி பேந்துபோச்சு போ...”

எதற்கென்றே தெரியாமல் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். முட்டுக்கட்டை முட்டுக்கட்டையாய் இருளில் தடுக்கிக் கொண்டிருந்த தன் பாதை திடீரென வெளிச்சமாகிய நம்பிக்கை வந்துவிட்டது போலும் விஜிக்கு.

பாவம் அக்கா, நெருக்கடியான வாழ்க்கையில் திணறுகிறாள் என்று தம்பிக்காரனுக்கு அங்கலாய்ப்பு உண்டு. தனக்கு விவரம் தெரியாத காலத்தில், வழி இல்லாமல், கிடைத்த மாப்பிள்ளைக்குக் கட்டி வைத்துவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் முடிந்ததைச் செய்வான். இந்த வீட்டுக் குலதெய்வ வழிபாட்டுக்குப் போகும்போதும் தவறாமல் விஜியை அழைத்துப்போவதுண்டு. ``நீ இதை எடுக்காதே, அதைச் செய்யாதே’’ என்று காந்திமதி தன் நாத்தனாரைத் தடுப்பதே இல்லை. இவளுக்கும் இது சாமிதானே என்றுதான் தோன்றும். ஆனால், விஜிக்கு இந்தக் குலதெய்வ விஷயத்தில் பெரிய மனக்குறை இருந்திருக்கும் என்று இப்போது தோன்றியது. சரி என்னவோ போகட்டும்… அவளும் தோணித்துலங்கி சாமி கும்பிடப் போகணும் என்கிறாளே என அவள் அழைப்பை ஏற்று தானும் வருவதாக ஒப்புக்கொண்டாள்.

தம்பி மனைவி வந்தால் புரிந்தாற்போல் எடுத்துக்கட்டிச் செய்வாள்... அவள் அத்தை வீட்டில் தங்கவேண்டிவந்தாலும் இசைவாக இருக்கும் என்பது விஜியின் யோசனை.

கருக்கலில் தஞ்சாவூரிலிருந்து கிளம்பி திருத்துறைப்பூண்டி போய் இறங்கி, டவுன் பஸ் பிடித்து கிராமத்தை அடைந்தபோதே உச்சியாகி விட்டது. கோயிலுக்குக் கொஞ்சம் நடக்க வேண்டும். வழியில்தான் இருந்தது காந்தியின் அத்தை வீடு.

“அவ்வொ முத்துப்பேட்டைக்கி ஒரு விசயமா போயிருக்காவொளே... வூட்டுல ஆரும் இல்ல...” சார்த்தியிருந்த வேலிப் படலுக்கு வெளியில் நின்று யோசித்துக்கொண்டிருந்தவர்களைப் பார்த்த யாரோ ஒரு சைக்கிள்காரன் போகிற போக்கில் சொல்லிப் போனான்.

“நீ முழிச்சிட்டு நின்னாப்லயே ஆயிரிச்சி...” மாமியை அம்மா எதற்குக் கடிகிறாள்... புரியாமல் பார்த்துக் கொண்டார்கள் விஜியின் மகனும் மகளும்.

குல தெய்வம் - சிறுகதை

“செரி, வெரசா வா... கோயிலப்போயி பாப்பம்” மடைமாற்றினார் ஆறுமுகம். நல்லவேளையாக பூசாரி புறப்படுவதற்கு முன்னர் போய்ச் சேர்ந்தாயிற்று. பெரிய பூட்டு திறப்பு இல்லாவிட்டாலும், உட்காரத் தோதாகத் தளமும் நிழலுக்குக் கூரையுமாக இருந்தது கோயில். ஒரு கற்பூரத்தைக் காட்டியதும் உணர்ச்சி மிகுதியிலோ அலைச்சலிலோ மயங்கிச் சுருண்டுவிட்டாள் விஜி.

யாரோ பூசை போட்டுவிட்டுப்போன சர்க்கரைப் பொங்கலைக் கொடுத்தார் பூசாரி. ``செரி, சொந்தக்காரவொளும் ஊருல இல்லங்கிரீய... நா வழக்கமா கருக்கல்ல மட்டுந்தா வர்ரது, இன்னிக்கி பூச இருந்துச்சு. ஒங்க நேரம், பாத்துக்கிட்டோம்.ஆராச்சும் ஒருத்த மட்டும் என்னோட வந்தா, ஜாமான திருத்துறபூண்டில வாய்ண்டு வந்துறலாம்… வந்தது வந்திய, பூசய போட்டுட்டுப் போயிறலாம். என்ன நாஞ் சொல்றது...’’

பருத்தி பொடவையாக் காய்ச்சா வேணாங்குதா விஜிக்கு.

பூசனை முறைகள் கேட்டுக்கொண்டு சாமிக்கு, வேட்டி, அங்கவஸ்திரம், மாலை என்று ஒரு சீட்டு தயாரானது.

விஜியின் மகன் அவரோடு கிளம்பிப் போய்விட்டான். இப்போதுதான் தானும் ஒரு குடும்பம், குடி என்ற அந்தஸ்துக்கு வந்தது போலவும், தன் சிக்கல்களை உரிமையுடன் சொல்லி, கேள்வி கேட்க ஒரு ஆள் கிடைத்துவிட்டது போலவும் விஜிக்கு மனசு விம்மியது. இது எதிலும் தொடர்பு இல்லாதவர் போல ஒரு துண்டை விரித்துக் குறட்டை விடுகிற கணவர்மேல் எப்போதும் போலக் கோபம் வரவில்லை. விட்டால் பிழைத்துப் போ என்று அத்தனை ஆண்டுக் கோபங்களையும் கைகழுவிவிடுவாள் போல இருந்தது.

எல்லாம் வந்து சேர்ந்து, வஸ்திரம் சார்த்தி மாலைகளை இட்டு, சூலத்தில் எலுமிச்சையைப் பூசாரி குத்திவிட்டபோது வழிந்த சாறுமாதிரி, விஜியின் கண்களிலிருந்து கரகரவெனக் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

தன் இல்லாமையினால் சற்றே பொறாமைப்படுகிற, சற்றே அதிகாரம் காட்டுகிற நாத்தனாரின் நெகிழ்வான முகம் பார்த்து காந்திமதிக்கும் என்னவோ போல் இருந்தது.இவளுக்கு என்ன இது இவ்வளவு பெரிய மனக்குறையாகி இருக்கிறது!

“ஒரே நாளைல ரெண்டு பொங்கலாயிருச்சி அய்யாவுக்கு…” பூசாரி சிரித்தவாறே தேங்காய் பழத்தட்டை நீட்டினார். ``சாமிக்கு மட்டுமா...எங்களுக்குந்தான் அய்யா புண்ணியத்துல” சிரித்தபடி நடந்தனர்.

இப்போது காந்தியின் அத்தை வீட்டுக் கதவு திறந்திருந்தது. வீட்டுக்குப் பக்கவாட்டில் இருந்த கிணற்றில் நீர் இறைத்துக் குளித்துக் கொண்டிருந்தார் மாமா.

குல தெய்வம் - சிறுகதை

``இவ்ளோ தூரம் வந்துட்டு பாக்காமப் போ வேணா, வா” தம்பி மனைவியை உரிமையுடன் அழைத்தபடி நுழைந்தாள் விஜி.

எங்கோ துக்கத்துக்குப் போய் வந்திருப்பார்கள் போல. கொஞ்சம் சங்கடமாக இருந்தது காந்திமதிக்கு.

காந்திமதியின் அம்மாவுக்கு இன்னொருவர் வீட்டுக் குலதெய்வ வழிபாட்டுக்கு மகள் போவது, அத்தை வீட்டுக்குப் போக விரும்பியது எதுவுமே உவப்பாக இருக்கவில்லை. விஜியை காந்திமதியும் அவள் புருஷனும் தங்களோடு குலதெய்வ பூசைக்கு அழைத்துப்போவதே அவளுக்குப் பிடிக்காது.

“இன்னொர்த்தர் வீட்டுக் குலதெய்வ பூசைல வெச்ச துன்னூறுகூடத் தொட மாட்டம் நாங்கல்லாஆ...” என்று அதில் ஒரு நொடிப்பு வைப்பாள்.

அக்கா மேல் தன் கணவனுக்கு இருக்கும் கரிசனமும் பரிதாபமும் தெரிந்த காந்தி இதெல்லாம் இந்தப்பக்கம் மூச்சுகூட விட மாட்டாள்.

“குலதெய்வக் கோயிலுக்குப் போனா அங்ஙன இங்ஙன போப்புடாது. நேரா வூட்டுக்கு வந்துரணும்” எனத் தனக்கு இடும் உத்தரவையாவது சொல்லியிருக்கலாம்.

அறிமுகம், விசாரிப்புகள் ஒருபக்கம் போய்க் கொண்டிருக்க, ஈரத்தலையைத் துவட்டியபடியே அத்தை காப்பி போடப் போனாள்.

“இஞ்ச ஆரு வூட்டுக்கு..?” இழுத்தவாறே வந்து உட்கார்ந்தார் மாமா. உலர்ந்த துண்டால் முதுகையும், சிகையே இல்லாத தன் தலையையும் அடித்து அடித்துத் துவட்டிக்கொண்டிருந்தார்.

“எங்க நாத்தனா வூட்டு குலதெய்வம் மாமா...ஒங்கூரு அய்யனாரு... அதான்...”

காந்திமதி முடிக்குமுன், ``அய்யனாரா… அது சுந்தரம்பா வூட்டுக்குல்ல… அதாம்மா, ஒம் மாமியாளோட அப்பா வூட்டு சாமி… அதெப்பிடி ஒனக்குக் குல தெய்வம்?” விஜியைப் பார்த்துக் கேட்டபடி மாடத்திலிருந்து திருநீற்று மடலை எடுத்து அண்ணாந்து “சிவசிவா...” என முழங்கியபடி அள்ளிப் பூசிக்கொண்டார்.

“இதுதான்னு...’’ ஆறுமுகம் இழுத்தார்.

“எங்க எவடம் நல்லா கேக்கிறதில்லியா...ஒங்கப்பா வூட்டுக் கதை தெரியாது தம்பி. இது மட்டும் நல்லாத் தெரியும்.”

விஜி அப்படியே உட்கார்ந்திருந்தாள்.