Published:Updated:

``ஒருமுறை மீண்டும் என் இதயத்தோடு உன்னை  அணைத்துக்கொள்கிறேன்..." -  மார்க்ஸ்... ஜென்னி... காதல்..!  

ஷேக்ஸ்பியரின் ரசிகரான மார்க்ஸ், தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்க சொல்லும் அளவுக்கு அவரின் கவிதை மீது தீரா காதல் கொண்டவர். மார்க்ஸும், ஜென்னியின் தந்தை லுட்விக்கும் இணைந்து ஷேக்ஸ்பியரின் கவிதைகளைப் பாடி போற்றுவார்கள்.

"அன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை

மறுபடியும் மனிதனாக்குகிறது.”

-மார்க்ஸ்

பண்டைய கால அன்னம் விடு தூது தொடங்கி... கடிதம் என படர்ந்து... இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ், வீடியோ கால் என காதலைப் பரிமாறிக்கொள்ளும் வடிவங்கள் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வந்துள்ளன. ஆயினும், இன்றைய மத்திய வயது தலைமுறை கடிதப் போக்குவரத்தையும், டிஜிட்டல் யுகத்தையும் அனுபவித்தவர்கள்.

குறிப்பாக காதலர்கள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்ள கடிதம் அனுப்பும் முறை மிகவும் சுவாரஸ்யமானது. காத்திருப்பு, எதிர்பார்ப்பு என மகிழ்ச்சி நிறைந்த அந்தத் தருணங்களை வார்த்தைகளால் சொல்லமுடியாது. வைரமுத்துவின் கவிதை வரிகள் சொல்வதைப்போல் ``தபால்காரன் தெய்வமாவான்” என்கிற வாசகம் காதல் கடிதத்தை எதிர்பார்த்திருக்கும் ஒரு காதலனுக்குத்தான் தெரியும். இது சாமான்ய மனிதனுக்கு மட்டுமல்ல, இந்த உலகை மாற்றியமைக்க ஒரு புரட்சிகர தத்துவத்தை எழுதிய மார்க்ஸுக்கும் பொருந்தும். `மூலதனம்’ வடித்தவனின் வஞ்சமில்லா காதல் வாழ்க்கையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்கள் குறித்து விளக்குகிறார் கலை இலக்கிய பெருமன்றத்தின் கவிஞர் சி.ஆர்.செந்தில்வேல்.

காணச்சகியாத தோற்றம்... கண்கள் மட்டுமின்றி கேசம், தோலின் நிறம் என எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர் காரல் மார்க்ஸ். ஜென்னியோ ரைன்லாந்தின் மிகச் சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானியப் பெண். பால்ய வயதில் அடாவடியாகச் சுற்றித்திரிந்த மார்க்ஸோ வறுமையில் சிக்கித் தவித்தவர். ஆனால், அவரின் காதலி ஜென்னியின் குடும்பம் பணக்காரக் குடும்பம். கார்ல் மார்க்ஸ் தனது உயர் படிப்புக்குச் செல்லும் வரை சமூகத்தின் மீது எந்த ஒரு அக்கறையும் இல்லாதவராக இருந்தவர். அவருக்கு இருந்த ஒரே அக்கறை ஜென்னி மட்டும்தான்.

மார்க்ஸ்
மார்க்ஸ்

கல்லூரிக்குச் சென்றவுடன், மதுகுடித்துவிட்டு ஜென்னிக்காக பாட்டு, கவிதை, கடிதம் என அனைத்தையும் எழுதிவிட்டு ஜென்னியின் பதில் கடிதத்துக்காக காத்திருப்பார். இப்படி போய்க்கொண்டிருந்தவரின் வாழ்க்கை அதனூடக சமூகத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. அதுவரை காதலுடன் மட்டும் பயணித்த மார்க்ஸ், அதன்பின் சமூகத்துடனும் சேர்ந்து பயணிக்கத் தொடங்கினார். மார்க்ஸுக்கு படிப்பு முடிந்தது. அதேவேளை ஜென்னியைப் பெண் கேட்டு பலர் வந்துகொண்டே இருந்தார்கள். அவை எல்லாவற்றையும் நிராகரித்த ஜென்னி, ``மார்க்ஸை மட்டுமே திருமணம் செய்வேன்" என்கிறார்.

ஜென்னியின் தந்தைக்கு மிகவும் பிடித்தமானவராக மார்க்ஸ் இருந்ததால் காதலுக்கு எதிர்ப்பில்லை. ஆனால், எதிர்ப்பு மார்க்ஸின் வீட்டில் இருந்து கிளம்பியது. அதற்கு காரணம், மார்க்ஸ் குடும்பத்தினர் கிறிஸ்தவர்களாக மதம் மாறியிருந்தாலும் அடிப்படையில் அவர்கள் யூதர்களே. ஒரு யூதன், ஜெர்மானிய பெண்ணை மணந்துகொள்வதா என மார்க்ஸின் தாய் எதிர்க்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜென்னியைத் திருமணம் செய்ய வேண்டும் எனில் முதலில் ஒரு வேலை. அதன்மூலம் சிறு வருவாய் கிடைக்க வேண்டும் என நினைக்கிறார் மார்க்ஸ். ``எனக்காக நீ காத்திரு. வேலை கிடைத்தவுடன் உன்னை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்'' என்று ஜென்னியிடம் தெரிவிக்கிறார். ஜென்னியும் காத்திருக்கிறார். எவ்வளவு நாள்கள் தெரியுமா? 7 ஆண்டுகள்.

ஒரு வழியாக நண்பர்களின் உதவியுடன் பாரிஸில் வேலை கிடைக்க, சொன்னபடி ஜென்னியை மணம் முடிக்கிறார் மார்க்ஸ். மிக ஆடம்பரமாக தங்கள் திருமணம் நடக்க வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு மத்தியில் ஜென்னி, மார்க்ஸின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் எளிமையான திருமணத்துக்கு சம்மதிக்கிறார். அதற்கும் காரணம் மார்க்ஸ் மீது ஜென்னி கொண்டிருந்த காதல்!

மார்க்ஸ் - ஜென்னி
மார்க்ஸ் - ஜென்னி

மார்க்ஸ்-ஜென்னியின் தேன் நிலவுக் கதைகள் சுவராஸ்யம் மிக்கவை. திருமணம் முடிந்து தேனிலவுக்குச் சென்ற மார்க்ஸ் தன்னுடன் 10 பெட்டிகள் நிறைய புத்தகங்களை எடுத்துச் சென்றுள்ளார். அந்தப் புத்தகங்களை ஜென்னியும் மார்க்ஸோடு அமர்ந்து வாசித்திருக்கிறார். அந்த அளவுக்கு மார்க்ஸின் மீது ஜென்னிக்குக் காதல்!

ஷேக்ஸ்பியரின் ரசிகரான மார்க்ஸ், தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட அவரின் கவிதைகளை உரக்கச் சொல்லும் அளவுக்கு அவரின் கவிதை மீது தீராக் காதல் கொண்டவர். மார்க்ஸும், ஜென்னியின் தந்தை லுட்விக்கும் இணைந்து ஷேக்ஸ்பியரின் கவிதைகளைப் பாடிப் போற்றுவார்கள். அப்போது ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பித் ததும்பும். தன்னையும் மீறி மார்க்ஸின் கவிதாவேசம் பீறிட்டுப் பொங்கும். இதுவும் மார்க்ஸின் மீதான ஜென்னியின் காதலுக்கு அடிநாதமாக விளங்கியுள்ளது.

``எனக்கு முன்னால் நீ இருப்பதைப் பார்க்கிறேன். நான் உன்னை அன்போடு தொடுகிறேன். தலை முதல் கால் வரை அன்போடு முத்தமிடுகிறேன்."
மார்க்ஸ்

இந்த நிலையில், தத்துவவியலில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஜென்னியை 7 ஆண்டுகள் பிரிந்திருந்தார் மார்க்ஸ். இடைநின்று போன தங்கள் காதலை நேரில் தொடர இருவரும் 7 ஆண்டுகள் காத்துக்கிடந்தனர். மார்க்ஸின் பிரிவால் ஜென்னிக்கு ஏற்பட்ட வலிக்கு மருந்தாக அமைந்தது மார்க்ஸ் எழுதிய கடிதம் ஒன்று.

அந்தக் கடிதத்தில், ``இனிவரும் நூற்றாண்டு அனைத்துக்கும் ஜென்னி என்றால் காதல். காதல் என்றால் ஜென்னி'' என வடித்திருந்தார். அந்த வரிகளால் ஜென்னியின் மனம் நிறைந்து போனது. இதேபோல் தன் தாயின் மறைவுக்காக ஜெர்மனி சென்ற ஜென்னியின் பிரிவைத் தாங்கமுடியாத மார்க்ஸ், ``உன் பிரிவு எனக்குள் மிகுந்த மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. எனது சக்திகள் அனைத்தும் அதனுள் கரைந்து போவதைக் கண்கூடாகக் காண்கிறேன். ஒருமுறை மீண்டும் உன்னை என் இதயத்துடன் அணைத்துக்கொண்டால் என் இதயம் அமைதியாகிவிடும். அதன் பிறகு இந்த உலகில் எனக்கு எதுவும் வேண்டியிருக்காது'' என வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

ஜென்னியும் தன் கணவருக்குத் துணையாக, அவரது நம்பிக்கையைப் பலப்படுத்தும் வகையில் கடிதம் எழுதுவார். அப்படி ஒரு முறை எழுதிய கடிதத்தில், ``மிகவும் அதிகமான வெறுப்புடனும், எரிச்சலுடனும் எழுதாதீர்கள். உங்களது மற்ற கட்டுரைகள் எந்த அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தியது என உங்களுக்குத் தெரியும். யதார்த்தமான முறையில் நயத்துடனும், நகைச்சுவையுடனும் லேசாக எழுதுங்கள். அன்பே... உங்கள் பேனாவை காகிதத்தின் மீது மென்மையாக ஓட விடுங்கள். சில சமயங்களில் உங்கள் பேனா தடுக்கி விழுந்துவிடுமானால், அதோடு சேர்ந்து உங்கள் வாக்கியம் மட்டுமல்ல, நீங்களும் விழ நேரலாம். கவலை வேண்டாம் உங்கள் சிந்தனை பழைய காலத்து படைவீரனைப்போல அதிகமான துணிவுடனும், உறுதியுடனும் விரைப்பாக நிற்கின்றன. அவர்களைப் போல் அவை சாகும். ஆனால் சரணடையாது'' என மார்க்ஸின் எதிர்கால சிந்தனைக்கு தடைபோடாத அளவுக்கு எழுதியிருந்தார்.

1856-ல் ஜென்னி தனது 42 வயதில் பெரிய குடும்பத்துக்குத் தாயாக இருந்தபோது குறுகிய கால பயணமாக ஜெர்மனி சென்றிருந்தார். அப்போது மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய கடிதம் மனித உணர்ச்சிகளின் ஆவணமாக திகழ்கிறது. அதில் மென்மை, உணர்ச்சி இவற்றுடன் ஆழமான சிந்தனையும் நிறைந்திருந்தது. மார்க்ஸின் ஆளுமைக்கும், முதுமை அடையாத அவரது இளமைக் காதலுக்கும் அடையாளமாக திகழும் அந்தக் கடிதத்தில், ``என் அன்பிற்கினியவளே... நான் உனக்கு மறுபடியும் எழுதுகிறேன். ஏனென்றால் நான் தனியாக இருக்கிறேன். என் மனதில் நான் எப்போதும் உன்னோடு உரையாடிக்கொண்டிருப்பதும், அதை நீ அறிந்துகொள்ளமுடியாமல் அல்லது கேட்க முடியாமல் அல்லது அதற்குப் பதிலளிக்க முடியாமல் இருப்பதும் என்னை வாட்டுகிறது. எனக்கு முன்னால் நீ இருப்பதைப் பார்க்கிறேன். நான் உன்னை அன்போடு தொடுகிறேன். தலைமுதல் கால்வரை அன்போடு முத்தமிடுகிறேன். உனக்கு முன்னால் முழந்தாளிட்டுப் பணிகிறேன். அன்பே! உன்னைக் காதலிக்கிறேன் என முணுமுணுக்கிறேன். எக்காலத்திலும் உன்னைக் காதலித்ததைக் காட்டிலும் அதிகமாக காதலிக்கிறேன். அது உண்மை. போலியான உளுத்துப்போன உலகம் எல்லா மனிதர்களையும் போலியாகவும் உளுத்துப்போனவர்களாகவும் பார்க்கிறது.

என்னை அவதூறு செய்பவர்கள், என் முதுகுக்குப் பின்னால் என்னைத் திட்டுபவர்களில் எவராவது இரண்டாம்தரமான நாடக அரங்கில் முதல் தரமான காதலன் பாத்திரத்தில் நடிப்பதற்காக என்னை எப்பொழுதாவது குறை கூறியதுண்டா..? ஆனால் அது உண்மையே. இந்தப் போக்கிரிகளுக்கு நகைச்சுவை உணர்வு இருக்குமானால், அவர்கள் உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை உறவுகளை ஒரு பக்கத்திலும், உன் காலடியில் நான் கிடப்பதை மறுபக்கத்திலும் ஓவியமாக தீட்டியிருப்பார்கள். இந்தப் படத்தையும், அந்தப் படத்தையும் பாருங்கள் என அதன் அடியில் எழுதியிருப்பார்கள். ஆனால், அவர்கள் முட்டாள்தனமான போக்கிரிகள். அவர்கள் முட்டாள்களாகவே நீடிப்பார்கள்.''

மார்க்ஸ் - ஜென்னி
மார்க்ஸ் - ஜென்னி
விகடன்

ஒரு கனவில் என்னைவிட்டு நீ போய்விட்டால்கூட காலம் என் காதலுக்குச் செய்த சேவை என்பதை நான் உடனடியாக உணர்ந்துகொள்வேன். சூரிய ஒளியும், மழையும் செடி வளர்வதற்குச் செய்யும் உதவி போன்றதே இது. என்னை நீ பிரிந்தவுடன் உன்னிடம் நான் கொண்டிருக்கும் காதல் அதன் மெய்யான வடிவத்தை அடைகிறது. அதில் எனது ஆன்மாவின் முழு சக்தியும், எனது இதயத்தின் முழுப்பண்பும் அதில் குவிக்கப்பட்டிருக்கிறது. நான் மறுபடியும் மனிதனாக உணர்கிறேன். ஏனென்றால் ஒரு மாபெரும் உணர்ச்சியை நான் உணர்கின்றேன்.

`அவளைப் போல் ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன்.
மார்க்ஸ்

காதல் - ஃபாயர்பாஹின் மனிதனிடத்தில் அல்ல. மொலிஷோட்டின் `வளர்சிதை மாற்றத்தில்' அல்ல, பாட்டாளி வர்க்கத்தின் மீது அல்ல. ஆனால் அன்பு நிறைந்த பெண்ணிடம், உன்னிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது. ``அன்பே நீ சிரிக்கலாம்: நான் திடீரென்று பிரசங்கத்தில் இறங்கிவிட்டேன் என்று. ஆனால், உன்னுடைய இனிமை நிறைந்த தூய்மையான இதயத்தை என் இதயத்துடன் சேர்த்து அணைக்கிறேன். நான் மெளனமாக இருப்பேன். ஒருவார்த்தை கூடப் பேசமாட்டேன். என் உதடுகளினால் உன்னை முத்தமிட இயலாதபடியால் என்னுடைய நாக்கினுள்தான் உன்னை முத்தமிடுவேன். வார்த்தைகளைத்தான் கொட்டுவேன். நான் கவிதை கூட எழுதுவேன் என்பது மெய்யே...’’

``உன்னுடைய இனிய முகத்தில் என்னுடைய முடிவில்லாத துயரங்களை, ஈடு செய்ய முடியாத இழப்புகளைக் காண்கிறேன். உன்னுடைய இனிய முகத்தை முத்தமிடும்போது துயரங்களை நான் முத்தமிட்டு துரத்துகிறேன். அவளுடைய கரங்களில் புதைந்து, அவளுடைய முத்தங்களில் புத்துயிர் பெற்று, அதாவது உன்னுடைய கரங்களில், உன்னுடைய முத்தங்களின் மூலம் நான் பித்தாகோரசுக்கும் மறுபிறவியைப் பற்றி போதிப்பேன்’’ என்கிறார்.

மார்க்ஸ் - ஜென்னி
மார்க்ஸ் - ஜென்னி
விகடன்

பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் மார்க்ஸுக்காக ஏற்றுக்கொண்ட ஜென்னி, மார்க்ஸ் இறக்கும் ஓர் ஆண்டுக்கு முன் நோயுற்றுக் கிடக்கிறார். மார்க்ஸ் ஒரு அறையிலும், ஜென்னி ஒரு அறையிலும் பிரிந்து கிடக்கிறார்கள். ஜென்னி இறந்து கல்லறையில் அடக்கம் செய்யப்படும்வரை அவரது உடலை பார்க்க மார்க்ஸை அனுமதிக்கவில்லை. அதற்குக் காரணம் மார்க்ஸுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும் என்பதுதான். அந்நேரத்தில் தனது உயிரைவிட மேலான காதல் மனைவிக்கு தனது இறுதி அஞ்சலியை கடிதத்தின் மூலம் எழுதுகிறார்.

செந்தில்வேல்
செந்தில்வேல்
விகடன்

அந்தக் கடிதத்தில், ``அவளைப்போல் ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்கு கிடைத்த ஒரு வரம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஜென்னியின் கல்லறையில் பூ வைத்து கண்ணீர் சிந்திவிட்டு சமுதாய பணிக்காக வந்த மார்க்ஸ் பற்றி குறிப்பிடும் அவரது நண்பர் ஏங்கெல்ஸ், ``ஜென்னியின் மரணத்துக்குப் பின் மார்க்ஸ் ஓர் ஆவியாக மட்டும்தான் இருக்கிறார். அவர் ஒருவேளை தன் பால்ய வயதில் ஜென்னியிடம் உரையாடிய ஷேக்ஸ்பியரின் கதைகளை கேட்டுக்கொண்டிருப்பாரோ?’’.

உண்மைதான்... கடிதங்களில் துவங்கிய ஜென்னி – மார்க்ஸ் காதல் அதே கடிதங்களுடன் கல்லறையில் முடிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு