Published:Updated:

"ஓர் எழுத்தாளரின் மரண சாசனம்..."- உடல் மெய்யியல் கழகத்துக்கும் கண்கள் மருத்துவமனைக்கும் தானம்!

தானம்

"நான் இறந்தபிறகு எனது உடலின் மீது எத்தகைய சாதி, மத அடையாளங்களையும் இடக்கூடாது. நிறை மரைக்கால், தேங்காய் உடைப்பது, சூடம் கொளுத்துவது, விளக்கு வைப்பது போன்ற எவ்விதமான சடங்குகளையும் செய்யக்கூடாது" - எழுத்தாளர் சுந்தர மகாலிங்கம்.

"ஓர் எழுத்தாளரின் மரண சாசனம்..."- உடல் மெய்யியல் கழகத்துக்கும் கண்கள் மருத்துவமனைக்கும் தானம்!

"நான் இறந்தபிறகு எனது உடலின் மீது எத்தகைய சாதி, மத அடையாளங்களையும் இடக்கூடாது. நிறை மரைக்கால், தேங்காய் உடைப்பது, சூடம் கொளுத்துவது, விளக்கு வைப்பது போன்ற எவ்விதமான சடங்குகளையும் செய்யக்கூடாது" - எழுத்தாளர் சுந்தர மகாலிங்கம்.

Published:Updated:
தானம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பலகுடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம் (வயது 82). ஓய்வுபெற்ற ஆசிரியரும் எழுத்தாளருமாவார். இவர், தனது சிந்தனையில் தோன்றிய பல்வேறு கருத்துகளைப் புத்தகங்களாக எழுதியுள்ளார்.

இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக, எழுத்தாளர் சுந்தரமகாலிங்கம் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சைபெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்தார். எழுத்தாளர் சுந்தரமகாலிங்கம் இறந்ததைத் தொடர்ந்து, அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியை உறவினர்கள் கவனித்தனர். இது வழக்கத்திற்கு மாறாக, எந்தவித சமய சடங்குகளும் அல்லாமல் முற்றிலும் எளிமையாக நடந்து முடிந்தது.

சுந்தர மகாலிங்கம்
சுந்தர மகாலிங்கம்

இதுகுறித்து விசாரிக்கையில், எழுத்தாளர் சுந்தரமகாலிங்கம் தன் இறப்பிற்குப் பிறகு தன் மக்கட்மார்கள், நண்பர்கள் என்னென்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பவற்றைப் பட்டியலிட்டு 10 கட்டளைகளாக மரண சாசனம் எழுதி வைத்துள்ளார் என்பது தெரிய வந்தது. அவரின் கடைசி ஆசையாக எழுதிவைத்த அந்த மரண சாசனத்தின்படியே அனைத்து மரியாதைகளும் செய்யப்பட்டுள்ளன. அவருடைய கண்கள், கண் மருத்துவமனைக்கும், உடல் மதுரை மருத்துவக்கல்லூரி மெய்யியல் கழக ஆய்வுக்கும் கொடுக்கப்பட்டது எனக் கூறினர்.

எழுத்தாளர் சுந்தர மகாலிங்கத்தின் மரணசாசனத்தில், "மனித வாழ்வில் மரணம் நிச்சயம் என்ற கருத்துடன் என் சுய நினைவுடன் 27.01.2014 திங்கட்கிழமையன்று எழுதி வைக்கும் மரண சாசனம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1. என் உடலை விட்டு உயிர் பிரிந்த செய்தி அறிந்த சில நொடிகளிலே என் கண்ணை தானமாக வழங்கும் நடவடிக்கையை மக்கள் மருத்துவர் பால்சாமி, சதாசிவம் ஆகியோர் முன்னின்று செய்யவேண்டும். இதற்கு என் துணைவி அல்லது பிள்ளைகள் என யாரேனும் ஒருவர் ஒப்புதல் கையெழுத்திடலாம். ஒருவேளை, அவர்கள் ஒப்புதலளிக்க மறுத்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

மரண சாசனம்
மரண சாசனம்

2. எனது உடலை, மதுரை மருத்துவக்கல்லூரி மெய்யியல் கழகத்துக்கு தானமாக வழங்க முன்வந்தபோது, என் மூத்தமகன் திலீபன் மறுப்பு தெரிவிக்கவும், அறியாமையின் காரணமாக திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் வாரிசுச்சான்றிதழ் தர மறுத்துவிட்டார். ஒருவேளை என் இறப்புக்கு முன்னதாக, என் உயிரற்ற உடலை மதுரை மெய்யியல் கழக ஆய்வுக்காக தானம் செய்வதற்கான அனுமதியை நான் பெற்றுவிட்டால், நான் மரணம் அடைந்ததும் எனது உயிரற்ற உடலை மதுரை மருத்துவக்கல்லூரி மெய்யியல் கழகத்திற்கு தானமாக வழங்கும் முறையை மருத்துவர் பால்சாமி, என் இரண்டாவது மகன் கோபிநாத், மூன்றாவது மகன் கவுதமன், வழக்கறிஞர் பால்ராஜ், இதழாசிரியர் குறிஞ்சி கபிலன் ஆகியோர் முன்னின்று செய்யவேண்டும்.

மரண சாசனம்
மரண சாசனம்

3. எனது உயிரற்ற உடலை, மெய்யியல் கழக ஆய்வுக்குக் கொடுப்பதில் சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டால் வத்திராயிருப்பு சுடுகாட்டில் எனது உடலை எரிப்பதற்குரிய பணியை மேற்சொன்னவர்கள் இணைந்து செய்யவேண்டும்.

4. நான் இறந்தபிறகு எனது உடலின் மீது எத்தகைய சாதி, மத அடையாளங்களையும் இடக்கூடாது. நிறை மரைக்கால், தேங்காய் உடைப்பது, சூடம் கொளுத்துவது, விளக்கு வைப்பது போன்ற எவ்விதமான சடங்குகளையும் செய்யக்கூடாது. சவம் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க சாம்பிராணி, பத்தி பயன்படுத்தலாம்.

5. சவத்தை வீட்டிலிருந்து எடுக்கும் முன் என் வீட்டு ஆண்களும், பெண்களும் வீட்டின் முன் உள்ள குழாயில் குளிக்கலாம். ஆனால் அவர்களுக்கு எவ்வித மதச்சடங்கும் செய்யக்கூடாது. நீர்மாலை எடுக்கக்கூடாது.

இறுதி மரியாதை
இறுதி மரியாதை

6. என் பிள்ளைகள், பேரன்மார்கள் யாருக்கும் மொட்டை போடக்கூடாது.

7. சடலத்தை வண்டியில் எடுத்துச் செல்லும்போது மேளதாளம் ஆட்டம் பாட்டம் கூடாது. வாய்ப்பிருந்தால் ஒலிப்பெருக்கியின் மூலம் பெரியாரின் உரையை ஒலிபரப்பலாம்.

8. சடலத்தை எரிப்பதற்கு முன் மதச் சடங்குகள் செய்யக்கூடாது.

9. மறுநாள் சுடுகாட்டுக்குச்சென்று எந்த மதச்சடங்கும் செய்யக்கூடாது.

10. எனது மரண சாசனத்தின் அசல் பிரதிகள் மருத்துவர் பால்சாமி மற்றும் இதழாசிரியர் குறிஞ்சி கபிலன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனது வாழ்நாள் முடிய என்னோடு துணை நின்ற அனைத்து இயக்கத்தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எழுத்தாளர் சுந்தர மகாலிங்கத்துக்கு அஞ்சலிகள்!