தொடர்கள்
Published:Updated:

பெரியவர்களுக்காக குழந்தைகள் எழுதும் கதைகள்!

பெட்ரிஷியா - குமார் ஷா
பிரீமியம் ஸ்டோரி
News
பெட்ரிஷியா - குமார் ஷா

‘‘பள்ளிகளில் ஐந்து நாள்கள் பட்டறை நடத்துவோம். முதலில் ஒரு கதை சொல்லச் சொல்வோம். அந்தக் கதையின் ஒவ்வொரு காட்சியையும் படங்களாக வரையச் சொல்வோம்.

நம் எல்லோருக்குமே பாட்டி வடை சுட்டு, அதைக் காக்கா திருடிய கதை தெரியும். இதே கதையை வேறொரு கோணத்தில் பார்த்து, பாட்டியையும் காக்காவையும் பிசினஸ் பார்ட்னர்களாக மாற்றினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு புதிய கதையை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொடக்கப்பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் நமக்குச் சொல்கிறார்கள்.

‘ஒரு ஊர்ல காக்கா வந்து மரத்துல கூடு கட்டுச்சு. ஒரு நாள் காத்து அடிச்சு கூடு கீழே விழுந்து முட்டையெல்லாம் உடைஞ்சுபோன சோகத்துல அந்தக் காக்கா ரொம்ப தூரம் பறந்து போய்ட்டே இருந்துச்சு. இருட்டுனதும் வழியில் இருந்த ஒரு வீட்டுக்குப் போய், அங்க இருந்த பாட்டிகிட்ட விஷயத்த சொல்லி, ராத்திரி மட்டும் இங்க தங்கிக்கட்டுமான்னு கேட்டது. பாட்டியும் சரின்னு தங்க வைக்குறாங்க. மறுநாள் அந்தப் பாட்டிக்கு உதவ நினைச்ச காக்கா, காட்டுக்குப் போய் சுள்ளி எடுத்து வந்து, பாட்டி கிட்ட கொடுக்குது. அதப் பாத்த பாட்டியும் மறுநாள் காகத்தோடு சேர்ந்து சுள்ளி எடுக்கப் போனாங்க. நிறைய சுள்ளி கிடைச்சத வச்சு என்ன பண்ணலாம்னு பாட்டியும் காக்காவும் யோசிச்சதுல, வடை சுட்டு விக்கிற ஐடியா வருது. பாட்டியும் காகமும் சேர்ந்து ஒண்ணா வடை சுட்டு விக்குறாங்க. எல்லோரும் அந்தக் கடைக்கு வந்தாங்க.’

பெரியவர்களுக்காக குழந்தைகள் எழுதும் கதைகள்!

ம.மாயலட்சுமி, சு.தேவதர்ஷினி, ர.ராம் விகாஷ்னி - ஐந்தாம் வகுப்பு A பிரிவு. மா.அனு - ஐந்தாம் வகுப்பு C பிரிவு.

இதுபோல குழந்தைகள் தாங்கள் கேட்டதையும் தங்கள் கற்பனைகளையும் கலந்து உருவாக்கிய நூறு கதைகளை சிறிய புத்தகங்களாக ‘களிமண்’ அமைப்பு வெளியிடுகிறது. இதன் பின்னணியில் இருப்பவர், குமார் ஷா. இவர் 15 வருடங்களாக, இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணித்துப் பல மனிதர்களுடன் உரையாடி, கதை பேசி யிருக்கிறார். இப்போது ‘களிமண்’ எனும் ஒரு சமூகத்தை உருவாக்கியுள்ளார். இதில் அவருடன் பெட்ரிஷியா, விக்னேஷ், திவ்யா, ஷாஜன், ரூபன், ஜெபா மற்றும் பலர் இணைந்து பணிபுரிகிறார்கள். இரா.காளீஸ்வரன், எழில், திலகராஜன் போன்றோர் வழிகாட்டிகளாக இருக் கின்றனர். குமார் மற்றும் பெட்ரிஷியாவுடன் பேசினேன்.

பெட்ரிஷியா - குமார் ஷா
பெட்ரிஷியா - குமார் ஷா

``களிமண் அமைப்பின் நோக்கம் என்ன?’’

‘‘எங்கள் நோக்கம், குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்குவதுதான். அந்த இடத்தில் முதல், கடைசி என ரேங்க் இருக்காது. எல்லோரும் சமம்தான்.

மதுரையில் ஆட்டிசம் பாதித்த ஒரு சிறப்புக் குழந்தையைச் சந்தித்தோம். அமைதியாகவே இருந்த அவனிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து, ‘உனக்குப் பிடித்ததை வரைந்து காட்டு’ என்றோம். அப்போது மற்ற மாணவர்கள், ‘அவன் இந்த ஸ்கூலே கிடையாது. வேற ஸ்கூலுக்கு மாறிட்டான். ஆனாலும் இங்கயே வந்து உட்கார்ந்துக்குறான்’ என்றார்கள். ‘அதனால் என்ன, நம்ம வகுப்பிலே யாரு வேணாலும் கலந்துக்கலாம்’ என்றோம். ஆனாலும் அவன் வரையத் தயாராய் இல்லை. பேப்பரில் சில படங்களை வரைந்து, ‘இதை கலர் பன்றியா’ என்று கேட்டேன். உடனே சம்மதித்து வண்ணம் தீட்ட ஆரம்பித்தான். வண்ணம் தீட்டி முடித்ததும் ‘நீயே வரைகிறாயா?’ என்று கேட்டபோது, அதே படத்தை வரைந்து காட்டினான். இன்னும் கொஞ்சம் ஊக்கம் கொடுத்தபோது, அவனாகவே ஒரு படத்தை வரைந்தான்.

தயக்கத்தில் முடியாது என்று சொல்லும் குழந்தைக்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. அதைக் கொடுக்கும் போது எல்லாரும் திறமைசாலிகளாக மாறிவிடுகிறார்கள். அதுவே, ‘நீ ஒரு சிறப்புக் குழந்தை, உன்னால எல்லாரும் ஓடும் வேகத்துல ஓட முடியாது’ என்று சொன்னால், அந்த நிராகரிப்பு தரும் வலிக்கு பயந்து, அடுத்த முறை தனக்கு மிகவும் பிடித்த விஷயத்தைக்கூட குழந்தை முயற்சி செய்யாது.

‘எனக்கு எதுவும் தெரியல. ஆனாலும் சேத்துக்கிட்டாங்க’ என்ற உணர்வு வந்தாலே, அடுத்த முறை இன்னும் நல்லா வரைய வேண்டும், படிக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தக் குழந்தைக்குள் வந்துவிடும்” என்கிறார் குமார்.

பெரியவர்களுக்காக குழந்தைகள் எழுதும் கதைகள்!

``குழந்தைகளைச் சந்தித்து என்ன செய்வீர்கள்?’’

‘‘பள்ளிகளில் ஐந்து நாள்கள் பட்டறை நடத்துவோம். முதலில் ஒரு கதை சொல்லச் சொல்வோம். அந்தக் கதையின் ஒவ்வொரு காட்சியையும் படங்களாக வரையச் சொல்வோம். அடுத்து கதையில் வரும் கதாபாத்திரங்களை பொம்மைகளாக உருவாக்கி பொம்மலாட்டம் நடத்துவோம். இது திரைக்குப் பின்னாடி நடக்கும் நிகழ்ச்சி என்பதால், குரல் மட்டும்தான் வெளியே வரும். முகம் தெரியாது. இதனால் குழந்தைகள் எந்தத் தயக்கமும் வெட்கமும் இன்றி காட்சிப்படுத்துவார்கள். பொம்மலாட்டத்தில் கிடைக்கும் கைத்தட்டல் அவர்களை அடுத்த நிகழ்ச்சியான நாடகத் திற்குத் தயார் படுத்திவிடும்.

‘நான் உருவாக்கிய ஒரு கதை, ஓவியத்தில் இருந்து பொம்மலாட்டமாக மாறி, இப்போது நானே நடிக்கும் நாடகமாக மாறியிருக்கிறதே’ என்று அவனுக்குப் பெரிய தன்னம்பிக்கை பிறக்கும். இதில் முதல் பரிசெல்லாம் கிடையாது. யாரும் யாருடனும் போட்டி போட வேண்டியதில்லை. குழந்தைகள் தங்கள் கதையைத் தங்கள் மொழியில் சொன்னால் போதும்.

எப்போதுமே கலையோடு சேர்ந்து விளையாட்டாக ஒரு விஷயத்தைச் சொல்லும்போது, மனதில் ஆழமாகப் பதியும். கலை வழியாக கல்வியின் முக்கியத்துவத்தை, சமத்து வத்தை, ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்வதுடன் அவர்களே அதைச் சொல்லித் தரவும் ஆரம்பிப்பார்கள்’’ என்கிறார் பெட்ரிஷியா.

``குழந்தைகள் எழுதும் கதைகள் பற்றி…’’

‘‘குழந்தைகளின் கதைகளைக் குழந்தைகளிடமே கேட்டு ஆவணப்படுத்தும் நோக்கத்தில்தான் களிமண் அமைப்பு இயங்கிவருகிறது. குழந்தைகள் சொல்லும் கதைகளில் உண்மை மட்டுமே இருக்கும். பெரியவர்கள் செய்வதை குழந்தைகள் எப்படிப் பொறுமையாக உள்வாங்கியிருக்கிறார்கள் என்பதை நாம் இந்தக் கதைகளில் பார்க்க முடியும்.

மதுரை மாவட்டத்தில் மட்டும் நூறு கதைகளை நாங்கள் சேகரித்திருக்கிறோம். இப்படி மாவட்டம் முழுக்க பல இடங்களிலிருந்து கிடைத்த கதைகள், உண்மையில் அந்த இடத்தின் நாட்டுப்புறக் கதைகளாக இருக்கின்றன.

சாட்டையடிப்பவரின் குழந்தை, பூம்பூம் மாட்டுக் காரரின் குழந்தைகள் எனப் பல நாடோடி சமூகக் குழந்தைகளோடு மதுரை, கல்மேட்டில் ஒரு பள்ளியில் உரையாடினோம். ஒரு குழந்தை தனக்கு நடந்த நிகழ்ச்சியைக் கதையாகச் சொல்லும்போது, அழுதேவிட்டது. சில குழந்தைகள் அதைக் கொஞ்சம் நாசூக்காகக் கையாண்டு நகைச்சுவையாக மாற்றி விடுகிறார்கள். ஏதோ ஒரு விதத்தில், குழந்தைகளுக்குள் இருக்கும் உணர்வுகளை வெளிக்கொணரும் ஒரு வெளியாக நாங்கள் இயங்கி வருவதில் மகிழ்ச்சியே.

பெரியவர்களுக்காக குழந்தைகள் எழுதும் கதைகள்!

நகரத்துக் குழந்தைகள் சொல்லும் மாடர்ன் கதைகள் போல் கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளால் சொல்ல முடியாது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் சந்தித்த அரசுப் பள்ளிக் குழந்தைகள் அவதார், ரோபோ, பேட்மேன், சூப்பர்மேன் போன்ற ட்ரெண்டிங் கதைகள், பட்டி னியில் சாகும் பாட்டியின் கதை, செத்துப்போன தாத்தா தன்னுடைய உறவினர்கள் கறி விருந்து சாப்பிடுவதைப் பார்த்துப் பழிவாங்கும் கதை என பல வித்தியாசமான கதைகளையும் சொல்கிறார்கள்.

குழந்தைகள் சொல்லும் இந்தக் கதைகளை, பெரிய வர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகப் பார்க்கலாம். ‘இதுதான் நீங்கள்’ என ஒரு குழந்தையே பெரியவர்களுக்கு அறிவுரை சொல்லும்போது, அடுத்த தலைமுறையினருக்குப் பாதுகாப்பான, அமைதியான, மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் என்பதுதான் எங்கள் நம்பிக்கை.

குழந்தைகள் சொன்ன கதைகள் எல்லாமே அவர்களுடையவைதான். நாங்கள் சொந்தம் கொண்டாடப் போவதில்லை. இதில் கிடைக்கும் வருமானமும் அந்தக் குழந்தைகளுக்கே போகும். இப்போது சேலத்தில் தங்கி அதைச் சுற்றி உள்ள பள்ளிகளுக்குச் செல்ல விருக்கிறோம்’’ என்கிறார் குமார்.