
- சுவாமி சுகபோதானந்தா
“முடியலை. சத்தியமா முடியலை சுவாமி!” ஒரே குரலில் இரண்டு சகோதரர்கள் மனமும் குரலும் உடைந்து சொன்ன வார்த்தைகள் இவை. பிரச்னை, அப்பா சம்பாதித்த சொத்துகளை அண்ணனும் தம்பியும் தங்களுக்குள் எப்படி சமமாகப் பிரித்துக்கொள்வது என்பதைப் பற்றித்தான். பங்காளிகள் சண்டை என்பது மகாபாரதக் கதை அளவுக்கு அரதப் பழசானதுதான். ஆனால் இதில் வித்தியாசம் என்னவென்றால், அண்ணனும் தம்பியும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துப் போகத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், இருவரின் மனைவிகளும் அந்த மனநிலையில் இல்லை.
`இதில் என்ன பிரச்னை... அப்பாவோ அம்மாவோ என்ன உயில் எழுதி வைத்திருக்கிறார்களோ அதன்படி பிரித்துக் கொள்ளவேண்டியதுதானே?!’ என்று சுலபமாகக் கேட்கத் தோன்றும். ஏன், நானும்கூட அப்படித்தான் கேட்டேன். ஆனால் அவர்கள் குடும்பத்தில் அம்மா தவறி நீண்ட நாள்களாகிவிட்டன. அப்பாவோ இடுப்பு எலும்பு உடைந்து போனதால், தன் நடமாட்டத்தைச் சுருக்கிக் கொண்டு இரண்டு வருடங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார். ‘‘எது எது யார் யாருக்கு என்பதை உங்களுக்குள் உட்கார்ந்து பேசி முடிவு செய்துகொண்டு வந்து சொல்லுங்கள். நீங்கள் சொல்கிற இடத்தில் கையெழுத்துப் போட்டுத் தந்துவிடுகிறேன்’’ என்று பொறுப்பைப் பிள்ளைகளிடமே ஒப்படைத்துவிட்டார்.

‘‘சொத்து முழுதுமே பணமாக இருந்தால், இரண்டு பேரும் சரி சமமாகப் பிரித்துக்கொள்ள முடியும். ஆனால் எங்கள் அப்பாவிடம் இருப்பதோ ஒரு வீடு, ஒரு கடை, அம்மா மற்றும் பாட்டியின் நகைகள் ஆகியவைதான். வீடு ஒருவருக்கு, கடை ஒருவருக்கு என்று எடுத்துக்கொள்ளலாம் என்றால், இரண்டுமே ஒரே மதிப்பு கொண்டவை அல்ல. தவிர, எந்த நகை யாருக்கு என்பதில்கூட என் மனைவியும் இவன் மனைவியும் வழிவிட மாட்டேன் என்கிறார்கள். அதனால், ‘இப்போதைக்கு அப்பாவின் பேரிலேயே எல்லாம் இருந்துவிட்டுப் போகட்டும். அவர் காலத்துக்குப் பிறகு முடிவு செய்துகொள்ளலாம்’ என்றால், ‘அதுவும் முடியாது’ என்கிறார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை. நீங்கள்தான் அவர்களுக்கு நல்ல புத்தி சொல்ல வேண்டும்’’ என்று, வெளியே காத்திருந்த அவர்களை உள்ளே வரச் சொல்லி அழைத்தனர்.
இரண்டு பேருமே நிறைய மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதை முகமே சொன்னது. பரஸ்பர விசாரணைக்குப் பிறகு, பிரச்னையைப் பற்றிப் பேச்சை எடுத்ததுமே தம்பியின் மனைவி சுயக்கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்.
``இவங்க அப்பாவுக்கு சுகர், பிபி எதுவும் இல்லை. ஏதோ எலும்புதான் உடைஞ்சது. இப்ப அதுவும் சரியாயிடுச்சு. இன்னும் பத்து இருபது வருஷம்கூட இருப்பாரு. ஆனா, நான் அதுவரைக்கும் உயிரோட இருப்பேனான்னு தெரியலை சுவாமி. இப்பவே எனக்கு சுகர், பிபி எல்லாம் வந்துடுச்சு. இப்ப சொத்தைப் பிரிச்சுக் கொடுத்தாருன்னா, உடம்புல தெம்பு இருக்கும்போதே அதை வித்துட்டு மெட்ராஸ்ல தீப்பெட்டி மாதிரி ஏதாவது ஒரு வீட்டை வாங்கிட்டு புள்ளைங்களை கொஞ்சமாவது கஷ்டம் தெரியாம வளர்க்கலாம். இல்லைன்னா கடைசிவரைக்கும் ஹவுஸ் ஓனர்கிட்ட ஏச்சு பேச்சு வாங்கிட்டு, வாடகை வீட்டிலேயே இருந்துட்டுப் போகவேண்டியது தான்’’ என்று விரக்தியோடு பேசினார். திடீரென தன் கணவரின் பக்கம் திரும்பி, ‘‘ஆனா, இவர் அண்ணனும் அண்ணியும் மட்டும் வாடகை செலவே இல்லாம சொந்த ஊர்ல, சொந்த வீட்டிலயே எல்லா வசதிகளோடும் நல்லா இருக்கட்டும்’’ எனப் பொங்கினார்.

இதைக் கேட்ட அண்ணனின் மனைவி சும்மா இருப்பாரா? ``இவங்க நிலைமை எவ்வளவோ தேவலாம் சுவாமி. திருமணமான கையோட இவங்க இரண்டு பேரும் மெட்ராஸ்ல வேலை தேடிக்கிட்டு அங்கேயே செட்டிலா யிட்டாங்க. ஆனால் கட்டிட்டு வந்த நாளிலிருந்து நான்தான் இவங்க அப்பா - அம்மாவுக்கு ஒத்தாசையா இருக்கேன். இவங்க அம்மாவின் கடைசிக்காலத்திலகூட நான்தான் அவர்களைக் கவனித்துக் கொண்டேன். இவங்க அப்பாவால மெட்ராஸுக்குப் போய் ஒரு வாரம்கூட இருக்க முடியாது. அதனால, அவரையும் நாங்கதான் பார்த்துக்கொள்கிறோம். தவிர, நாங்க இப்ப குடியிருக்கிற வீட்டை அவங்க கேட்கறாங்க. அவங்களுக்கு இதுல உரிமை இருக்கு; இல்லைன்னு சொல்லலை. ஆனா, அவங்க இங்கே வந்து குடும்பம் நடத்தப்போவதில்லை. இதை வித்துட்டு மெட்ராஸ்லதான் வீடு வாங்கப் போறதா சொல்றாங்க. அதனால்தான் வீட்டுக்குப் பதிலா கடையை எடுத்துக்கச் சொல்றோம்’’ என்றார்.
இதற்கு பதில் சொல்ல தம்பியின் மனைவி முற்பட்டபோது, நான் உரிமையுடன் குறுக்கிட்டு இருவரிடமும் ஒரு வேண்டுகோளை மட்டும் வைத்தேன். ‘‘இந்தச் சொத்துகளில் முழு உரிமை கொண்டவர் உங்கள் கணவரின் அப்பா. இதெல்லாம் அவர் சம்பாதித்த சொத்து. இதை அவர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அல்லது தானே செலவும் செய்யலாம். அதை யாராலும் தடுக்கமுடியாது. ஆனால், அவர் உங்களுக்குக் கொடுக்க முன்வந்திருக்கிறார். தான் பங்கு பிரித்துக்கொடுத்தால் உங்களுக்கு ஏதாவது குறை வந்துவிடும் என்பதால்தான், முடிவெடுக்கும் உரிமையும் உங்களிடமே கொடுத்திருக்கிறார். உங்கள் கணவர்களைப் பெற்று ஆளாக்கி எத்தனையோ சிரமங்களுக்கு இடையில் வளர்த்த அவரின் மனம் நோகும் வகையில் எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள். உங்கள் கணவர்களின் இந்தச் சூழ்நிலை, வளர்ந்து ஆளானபிறகு உங்களின் குழந்தைகளுக்கும் வரக்கூடும். அப்படி வந்தால், உங்களின் மருமகள்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவீர்களோ, அப்படி நீங்கள் நடந்துகொள்ளுங்கள்’’ என்றேன்.
நான் சொன்னது அவர்கள் காதில் விழுந்தததாகக்கூடத் தெரியவில்லை. இருந்தாலும் சூழ்நிலை கருதி இருவருமே அமைதியாகி கண்ணியம் காத்தார்கள்.

இதுபோன்ற பாகப்பிரிவினைப் பிரச்னைகளுக்கு ஜென் மார்க்கத்தில் சுலபமான தீர்வு உண்டு. அண்ணன் தம்பிகளுக்கு இடையில் சொத்தை சரிசமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றால், அந்த இருவரில் ஒருவர் சொத்துகளை இரண்டு தனித்தனி பாகங்களாகப் பிரித்து வைக்க வேண்டும். பிரிக்கப்பட்ட இரண்டு பாகங்களில் தன்னுடைய பாகத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை இரண்டாமவரிடம் முதலில் கொடுத்துவிட வேண்டும்.
ஆனால், ஜென் கதையைக் கேட்கும் மனநிலையில் அவர்கள் இல்லை என்பதால் பார்வையைத் தோட்டத்தின் பக்கம் திருப்பினேன். வெளியில் இருக்கும் தங்கள் குழந்தைகளைத்தான் கூப்பிட விழைகிறேன் என்று நினைத்துக்கொண்டு அந்தப் பெண்மணிகள் இருவரும் தங்கள் பிள்ளைகளை உள்ளே அழைத்தார்கள்.
அதில் ஒரு சிறுவன் வெறுங்கையில் காற்றில் பேட்மின்டன் ஆடிக்கொண்டு உள்ளே வந்தான். ‘‘ஒலிம்பிக்ஸ்ல சிந்து ஜெயிச்சதைப் பார்த்ததிலிருந்து இவனுக்கு பேட்மின்டன் மேலே ஆசை வந்துடுச்சு சுவாமி!’’ என்று அந்தச் சிறுவனின் தாய் விளக்கம் கொடுத்தார். மற்ற குழந்தைகளும் ஒலிம்பிக்ஸில் தங்கள் மனம் கவர்ந்த போட்டிகள் பற்றி ஆர்வமாகப் பேசினார்கள். ‘‘ஒலிம்பிக்ஸில் உங்களைக் கவர்ந்த விளையாட்டு எது?’’ என்று அதில் ஒரு சிறுமி என்னிடம் புன்னகையோடு கேட்டாள்.
‘‘கத்தார் நாட்டின் பார்ஷிம் மற்றும் இத்தாலி நாட்டின் தாம்பேரி ஆகியோர் கலந்துகொண்ட உயரம் தாண்டுதல் போட்டி’’ என்று சொல்லி முடிப்பதற்கு முன்பே அந்தச் சிறுமி, ‘‘நானும் அதைப் பார்த்தேன்’’ என்று சொல்லிவிட்டு, தன் தாயின் கையில் இருந்த செல்போனை வாங்கி அதில் அந்த வீடியோவை ஓடவிட்டாள். அந்தப் போட்டி பற்றி அவர்களின் பெற்றோர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை என்பதால் எல்லோரும் அந்தப் போனில் முகம் புதைத்தார்கள்.
தங்கப் பதக்கத்துக்காக நடைபெற்ற இறுதிப்போட்டி அது. தங்களுடைய முழு சக்தியையும் ஒன்று திரட்டி ஒவ்வொரு வீரரும் தங்களால் எவ்வளவு உயரம் தாண்ட முடியுமோ அந்த அளவு உயரம் தாண்டுகிறார்கள். முதல் இரண்டு இடங்களில் இருந்தது பார்ஷிம் மற்றும் தாம்பேரி. இருவரும் தாண்டிய உயரம் சரியாக 2.37 மீட்டர். அதனால் டை பிரேக்கர் ரவுண்டுக்குப் போட்டி போகிறது. அதில் கொடுக்கப்பட்ட மூன்று வாய்ப்புகளில் இருவராலும் சரியாகத் தாண்ட முடியவில்லை. இப்போதும் இருவரும் சமநிலையில் இருக்கின்றனர். நடுவர் வேகமாக இருவரையும் நோக்கி வருகிறார். ‘முடிவைத் தீர்மானிக்கும் வகையில் ஒரு முறை கடைசியாகத் தாண்டுகிறீர்களா?’ என இருவரிடமும் கேட்கிறார் நடுவர். அதாவது, ‘கடைசி கடைசியாக ஒரு வாய்ப்பை உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறோம். இதன் முடிவுகளை வைத்து யாருக்குத் தங்கப்பதக்கம் என்று அறிவிக்கப்படும். ரெடியா?’ என்று கேட்கிறார். சற்றே யோசித்த பார்ஷிம், ‘‘இரண்டு தங்கப்பதக்கங்கள் கொடுக்க வாய்ப்பு உள்ளதா?’’ என்று கேட்கிறார். ‘‘அது உங்களுடைய விருப்பம்’’ என்று நடுவர் சொல்ல, பார்ஷிம் தாம்பேரியைப் பார்க்கிறார். ‘எனக்கும் சம்மதம்’ என்று கண்களாலேயே அவர் சம்மதம் சொல்ல... இருவரும் ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொண்டு துள்ளிக்குதித்தார்கள்.
இந்தத் தங்கத்துக்காகத்தான் பார்ஷிம், தாம்பேரி ஆகிய இரண்டு பேருமே தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார்கள். இதற்காக நடந்த முயற்சியிலும் பயிற்சியிலும் இரண்டுபேருமே பல முறை காலை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு மிகப் பெரிய வலிகளை விலையாகக் கொடுத்துதான் இந்த இடத்தை அவர்கள் அடைந்தார்கள். ஆனாலும் இந்தத் தங்கப்பதக்கத்துக்கு இரண்டு பேருமே தகுதி உடையவர்கள். உரிமை கொண்டவர்கள் என்று ஒரு முறைக்கு மூன்று முறை தெரியவந்த பின்னர் இருவரும் போட்டியை மகிழ்ச்சியாக முடித்துக்கொண்டார்கள். ஒருவேளை இருவரும் கடைசியாக இன்னொரு முறை தாண்டியிருந்தால், 2.37 மீட்டரைவிட அதிகமான உயரத்தைத் தாண்டியிருப்பார்களா எனத் தெரியாது. ஆனால் இப்போது அவர்கள் தாண்டிய உயரம் என்பதுதான் இருப்பதிலேயே ஆகச் சிறந்த உயரம். இந்த ஒலிம்பிக்ஸில் எத்தனையோ தங்கப்பதக்கங்கள் ஜெயிக்கப்பட்டிருந்தாலும் இந்த இரு தங்கப் பதக்கங்களும் என்றென்றும் தனித்தன்மையோடு சுடர்விடும்.
செல்போனிலிருந்து பார்வையை விலக்கி என்னைப் பார்த்த பெண்கள், தங்களையும் அறியாமல் தங்கள் பிள்ளைகளை அரவணைத்துக் கொண்டார்கள். பல சமயங்களில் குழந்தைகள் மூலமாகத்தான் மிகப்பெரிய வாழ்க்கைப் பாடங்களைக் காலம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
- பழகுவோம்...

அது மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற ரன்னிங் ரேஸ் போட்டி. உடல் ரீதியாகப் பல சவால்களைக் கொண்டவர்கள்தான் இந்தப் போட்டியில் கலந்துகொண்டார்கள். அதில் ஒரு போட்டியாளர் ஓடும்போது கால்தடுமாறிக் கீழே சரிந்துவிட... சக போட்டியாளர்கள் அத்தனை பேரும் அவருக்குத் தோள் கொடுத்து அவரோடு ஒன்றாக ஓடி அந்தப் போட்டியை நிறைவுசெய்யும் காட்சியை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். நம்முடைய முழு ஆற்றலையும் வெளியே கொண்டுவருவதுதான் விளையாட்டுப் போட்டிகளின் முக்கியமான நோக்கமே தவிர, அடுத்தவரின் காலை இடறிவிட்டுப் பெறுவதற்குப் பெயர் வெற்றி அல்ல.