
- சுவாமி சுகபோதானந்தா
“யாதுமாகி நின்றாய் காளி' என்பதைப்போல தங்கள் குழந்தைகள் எல்லாமுமாய் இருக்கவேண்டும் என்கிற எண்ணம் இன்று பெரும்பான்மை பெற்றோர்களிடம் காணப்படுகிறது. சமூக வலைதளங்களில் ஒரு குழந்தை பேசும் வீடியோ டிரெண்டானால், 'நீ ஏன் இவ்ளோ விவரமா பேசமாட்ற?' எனத் தங்கள் குழந்தையைத் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்குவது, ரியாலிட்டி ஷோக்களில் திறமையை வெளிப்படுத்தும் குழந்தைகளைக் காட்டி, 'உனக்கு அப்படி ஏதாவது தெரியுதா?' எனப் பிஞ்சு மனதை மட்டம் தட்டுவது போன்ற அபத்தங்களைச் செவ்வனே செய்கிறார்கள் இவர்கள். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் குழந்தைகள் வீட்டைத் தாண்டிப் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். ஆனால் அதற்குள் அவர்களைப் பற்றி முழநீளத்திற்குப் புகார்ப் பட்டியல் எழுதி வாசிக்கும் பெற்றோர்களைக் காண நேர்ந்தது. அவர்களுள் ஒரு தம்பதி என்னை நேரிலேயே சந்திக்க வந்தார்கள்.
‘‘வீட்டிலேயே முடங்கிக் கிடந்தவள் வெளியே போகத் தொடங்கினால் பிற குழந்தைகளைப்போல ஆட்டம் பாட்டமென இருப்பாள் என நம்பிப் பள்ளிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அவளிடம் எந்த உற்சாகத்தையும் எங்களால் பார்க்க முடியவில்லை.
வீட்டில் சில நாள்களுக்கு முன் கிருஷ்ண ஜயந்தி கொண்டாடினோம். அவளைச் சிறப்பாக அலங்கரித்தோம். ஆனால், அவளோ இதில் எதிலுமே ஆர்வம் காட்டவில்லை. தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்கிற ரீதியில் அமர்ந்திருந்தாள்.
அவள் வயதிருக்கும்போது நாங்கள் பண்டிகைகளுக்காகக் காத்திருப்போம். புத்தாடை, பலகாரங்கள், குடும்பத்தோடு வெளியே போவதென அந்த நாளில் நடக்கவிருக்கும் அத்தனையையும் திரும்பத் திரும்ப மனக்கண்ணில் ஓட்டிப்பார்த்து அதில் திளைப்பதே அலாதி மகிழ்ச்சியாக இருக்கும். ‘ஆண்டு முழுவதுமே பண்டிகையாக இருந்தால் எப்படி இருக்கும்’ என்றெல்லாம் ஏங்கியிருக்கிறோம். அப்படியான அனுபவங்கள் இவளுக்கும் கிடைக்க வேண்டுமென்பதுதான் எங்களின் ஆசை. ஆனால் அதற்காக நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவள் அதைப் பொருட்படுத்துவதே இல்லை’’ என மனக்குமுறலைக் கொட்டினார்கள்.
நான் பதிலேதும் சொல்லாமல் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் பெருமூச்சோடு அவர்களே தொடர்ந்தார்கள். ‘‘எங்கள் அப்பார்ட்மென்டின் செக்யூரிட்டி தன் குடும்பத்தோடு அங்கேயே தங்கியிருக்கிறார். அவரின் குழந்தை ஒவ்வொரு பண்டிகையையும் குதூகலித்துக் கொண்டாடுகிறது. அவர்கள் வீட்டுக்கு மட்டுமல்ல, அந்தத் தருணங்களில் மொத்த அப்பார்ட்மென்ட்டிற்கும் மகிழ்ச்சியைப் பரவவிடுகிறது அந்தக் குழந்தை.

எங்கள் உறவினர்கள் சிலர் கனடாவில் வசிக்கிறார்கள். பல்லாயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் நாட்டிலிருந்தாலும், அங்கேயே இரு தசாப்தங்களாகத் தங்கியிருந்தாலும், இன்னமும் தங்கள் வேர்களை மறக்காமல் அவர்களின் குழந்தைகள் நம் பாரம்பரியப் பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். மாவிலைத் தோரணம் தொடங்கி மஞ்சள் வரை எதுவுமே குறைவதில்லை. தேவாரம், திருவாசகம் பாடி அசத்துகிறார்கள். குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து கோலாகலமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். அதையெல்லாம் பார்க்கும்போது எங்களுக்கும் ஆசையாக இருக்கிறது. ஆனால் இவளை எப்படிக் கொண்டாட வைப்பது என எங்களுக்குத் தெரியவில்லை’’ என நிறுத்தினார்கள்.
அவர்களுக்குத் தங்கள் குழந்தை பண்டிகைகளைக் கொண்டாடாதது பிரச்னையில்லை. ‘தங்கள் வளர்ப்புமுறை சரியா, அல்லது கனடாவில் வாழும் அந்த இந்தியப் பெற்றோர்கள் சரியா, இல்லை செக்யூரிட்டியும் அவர் மனைவியும் குழந்தையை வளர்ப்பது சரியா’ என்கிற கேள்விக்கு விடை தெரிந்துகொள்வதுதான் பிரச்னை. அதற்கு நான் பதில் சொல்லுவேன் என்றுதான் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
நம் நம்பிக்கைகள், நாம் பின்பற்றும் கலாசாரம், பண்பாடு போன்றவற்றைப் பற்றி நம் குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தலாம். ஆனால், அவற்றைப் பின்பற்றுவதும் பின்பற்றாததும் அவர்களின் தனிப்பட்ட உரிமை. அதில் நம் கருத்துக்கு இடமே இல்லை. இதைப் புரிந்துகொள்ளாமல் அவர்களிடம் நம் நம்பிக்கைகளை வலுக்கட்டாயமாகத் திணிக்க நினைத்தால் அவர்களுக்கு அவற்றின்மீது வெறுப்புதானே உண்டாகும்?
சர்வதேச அரங்கில் தொடர்ந்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துவரும் சிந்துவை முதலில் அவரின் பெற்றோர்கள் வாலிபால் வீராங்கனையாக்கவே விரும்பினார்கள். ஆனால், சிந்துவின் ஆர்வம் பேட்மின்டன் மீதுதான் இருந்தது. இந்தியாவின் தலைசிறந்த பேட்மின்டன் ஆட்டக்காரர் பிரகாஷ் படுகோன் தன் மகளைத் தன் பாதையில் வலுக்கட்டாயமாக இழுத்து வரவில்லை. அதனால்தான் அவர் இன்று உலகம் திரும்பிப் பார்க்கும் நடிகை தீபிகா படுகோனாக உருவாகியிருக்கிறார்.
உங்கள் பிள்ளைகள் உங்கள் துறையிலும் பிரகாசிக்கலாம். உங்களுக்குத் துளியும் தொடர்பில்லாத துறையிலும் முத்திரை பதிக்கலாம். அவர்களின் ஆர்வம் எதில் என்பதைப் பொறுத்தது அது. அதேபோலத்தான் வெற்றிக்கான அளவீடும். நீங்கள் தொட்ட உயரத்தை உங்கள் பிள்ளையும் தொடவேண்டும் என்பதில்லை. அவர்களின் வெற்றிக்கான விளக்கம் வேறொன்றாக இருக்கலாம். அது தனிநபர் சார்ந்தது.

ஊருக்குள் மொடாக்குடி குடிக்கும் ஒருவர் இருந்தார். அவரின் மூத்த மகனோ அவரைவிட அதிகமாகக் குடிக்கும் பழக்கமுடையவர். ‘ஏனப்பா இப்படி இளம் வயதிலேயே குடித்துச் சீரழிகிறாய்?’ என ஊர்க்காரர்கள் கேட்டால், ‘என் அப்பா என்னைத்தான் மது வாங்கிவர தினமும் அனுப்புவார். அப்படிப் போகும்போதெல்லாம் ஆசை எட்டிப் பார்க்க, ஒரு கட்டத்தில் நானும் குடிக்கு அடிமையாகிவிட்டேன்’ எனக் காரணம் சொல்வார் அந்த மூத்த மகன். ஆனால் இளைய மகனோ மது இருக்கும் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார். ‘என் தந்தை தினமும் குடிப்பதால் என் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தே வளர்ந்தவன் நான். அதனால் எனக்குக் குடி என்றாலே வெறுப்பு மண்டுகிறது’ என்பது இளைய மகனின் வாதம்.
கிடைக்கும் அனுபவம் ஒன்றென்றாலும் அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் ஆளைப் பொறுத்து வேறுபடும். உங்கள் குழந்தைகளை உங்களின் மதிப்பீடுகளை வைத்து எடைபோடாதீர்கள். அவர்கள் வெளி வேறு; பார்வை வேறு. நண்பர்கள், படங்கள், இசை, பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள் என அவர்கள் கடந்துவரும் உங்களுக்குத் தொடர்பில்லாத ஒவ்வொன்றும் அவர்களின் பார்வையைக் கட்டமைக்கும். இதையெல்லாம் நான் சொல்லச் சொல்ல எதிரிலிருந்த பெற்றோர்கள் தலையாட்டினார்கள்.
‘‘உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள்தான் முதல் ரோல் மாடல். அவர்கள் நீங்கள் சொல்வதை எல்லாம் பின்பற்றமாட்டார்கள். ஆனால் நீங்கள் செய்வதை அப்படியே பின்பற்றுவார்கள். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். நான் ஒன்று, இரண்டு, மூன்று எனச் சொன்னவுடன் நீங்கள் கைதட்ட வேண்டும். மூன்று என நான் சொன்னவுடன் சரியாகக் கைதட்டவேண்டும். ஒரு நொடி கூட முந்தியோ பிந்தியோ தட்டக்கூடாது. சரியா?’’ என அவர்களிடம் கேட்டேன். ‘சரி’ என்றார்கள். ‘ஒன்று... இரண்டு...’ எனச் சொல்லிவிட்டு மூன்று சொல்லாமலேயே நான் கைதட்ட, என்னைப் பார்த்தபடி இருந்த அவர்களும் கைதட்டினார்கள். ‘வளர்ந்த நாமே எதிரிலிருப்பவரின் செய்கைகளைப் பார்த்துதான் பின்பற்றுகிறோம். அப்போது குழந்தைகளைச் சொல்லித் தவறில்லையே’ என நான் சொல்ல அவர்கள் முகத்தில் வெளிச்சம்.
சரியாக ஒரு மாதம் கழித்து மீண்டும் என்னைச் சந்திக்க வந்தார்கள் அந்தப் பெற்றோர். ‘‘நீங்கள் சொன்னதுபோல எங்கள் மகளுக்கு ரோல்மாடலாக இருக்க முயன்றோம். காலையில் தாமதமாக எழும் பழக்கம் எங்களுக்கு. நீங்கள் சொன்னதைக் கேட்டு இப்போது விடியற்காலை ஐந்து மணிக்கே எழுந்துவிடுகிறோம். யோகா, உடற்பயிற்சி என எங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முனைகிறோம். ஆனால் எங்கள் மகன் எழுந்துகொள்ளவே மறுக்கிறான். இன்னமும் அவன் தாமதமாகத்தான் விழிக்கிறான். நீங்கள் சொன்னதை நாங்கள் சரியாகத்தான் பின்பற்றுகிறோமா எனக் கேட்டுத் தெரிந்துகொள்ளவே வந்தோம்’’ என்றார்கள்.
முப்பதே நாள்களில் இந்த மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்பதுபோல முப்பது நாள்களிலேயே எல்லாம் நடக்கவேண்டும் என எதிர்பார்த்தால் அதற்கு நடைமுறையில் சாத்தியமே இல்லை. எந்தவொரு புதுப்பழக்கத்தையும் கைக்கொள்ள கொஞ்சம் அவகாசம் தேவை. விதை வேர் விட்டு மண் பற்ற கொஞ்சம் நேரமெடுக்கும். அதற்குள் பொறுக்காமல் மண்ணைக் கிளறிக் கிளறிப் பார்த்துக்கொண்டிருந்தால் அது எப்படி முளைக்கும்? இதை மீண்டும் அவர்களிடத்தில் விளக்கமாய்ச் சொன்னேன்.
‘புத்தகங்களே, குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்’ என்ற கவிதைவரியின் முன்பு ‘பெற்றோர்களே, ஆசிரியர்களே’ என்கிற வார்த்தைகளையும் சேர்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.
*****

‘மகிழ்ச்சியான சூழலில் குழந்தைகளை வளர்க்க வேண்டும்’ எனச் சொல்வது மிக மிகச் சுலபம். ஆனால் அப்படி ஓரு சூழலை ஏற்படுத்துவது எத்தனை சவாலானது? எத்தனை பெற்றோரால் அப்படி ஒரு சூழலைச் சாத்தியப்படுத்த முடியும்?
காட்டில் வாழும் விலங்குகளுக்கு இதில் குழப்பமெதுவும் இல்லை. அவை தங்கள் குட்டிகளுக்கு இந்த உலகில் போராடத் தேவையான அத்தனை பாடங்களையும் கற்றுக்கொடுத்துவிட்டு விலகிவிடுகின்றன. பிழைத்திருப்பது இனி அந்தக் குட்டிகளின் பாடு. நாம்தான் நம் குழந்தைகளை முழுவதும் நம்புவதில்லை; அதேசமயம், அவர்கள் யாரையும் சார்ந்திருக்கக்கூடாது என்றும் நினைக்கிறோம். குழந்தை வளர்ப்பைக் கடினமான விஷயமாக மாற்றுவது இந்த முரண்பாடுதான்!