
மக்கள் நெரிசல் மிகுந்த கடைவீதி அது. அதற்கு நட்டநடுவே இருந்த ஒரு கம்பத்தில் ஒரு சிறிய அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது.
“காலை எழுந்தது முதல் இரவு தலை சாய்க்கும்வரை பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்தவன் நான். எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்புவரை. பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் நானும் என் மனைவியும் மட்டும்தான் ஒருவருக்கொருவர் பேச்சுத்துணை என ஆகிவிட்டது. மனைவியும் இப்போது வெளிநாட்டிலிருக்கும் மகளின் பிரசவத்திற்காகச் சென்றுவிட்டாள். காலம் இவ்வளவு மெதுவாக நகர்வதை இத்தனை ஆண்டுகளில் இப்போதுதான் உணர்கிறேன். பரபரப்பாக இருந்த நாள்களில் அக்கம்பக்கத்தினரிடம் பேச நினைத்ததில்லை. இப்போது திடீரெனப் போய்ப் பேசவும் தயக்கமாக இருக்கிறது.
என் கணக்கில் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் சமீப காலமாக தனிமையில் இருப்பதால் மனது சஞ்சலப்பட்டுக்கொண்டே இருக்கிறது. சும்மா இருக்கும் மனது சாத்தானின் குடியிருப்பு என்பார்களே, அதுபோல, மனம் பழைய விஷயங்களை எல்லாம் நினைத்து அசைபோட்டுக்கொண்டே இருக்கிறது. எனக்கு நேர்ந்த துரோகங்கள், நான் பிறருக்கு இழைத்த அநீதிகள், மனைவி, மகள் தொடங்கி வார்த்தைகளால் நான் காயப்படுத்திய முகங்கள் என அனைத்தும் நினைவிற்கு வந்து என்மேல் எனக்கே...''
வார்த்தைகள் தொண்டைக்குழியிலேயே சிக்கிக்கொள்ள, அவற்றுக்கு பதிலாய் வெளியே வந்து விழுந்தன கண்ணீர்த்துளிகள். தனிமையில் நம்மில் பெரும்பாலானவர்கள் யோசிக்கும் ‘நான் யார்? இந்தப் பிறவியின் பயன் என்ன?’ ஆகிய கேள்விகள் அவருக்குள்ளும் எழுந்திருக்கின்றன என்பதும், அவற்றுக்கு விடைதேடும் முயற்சியில் அவர் இருக்கிறார் என்பதும் புரிந்தது.
வாழ்வில் தெளிவுபெற நினைக்கும் அத்தனை பேரும் தங்கள் குருவைப் பார்த்துக் கேட்ட கேள்விகள்தான் இவை. கேட்கும் தொனி மாறினாலும் பதிலில் இருக்கும் அர்த்தம் ஒன்றுதான். ‘மகிழ்வித்து மகிழ்வதே உங்கள் பிறவியின் பயன்.' இதை உணர்த்த ஒரு சின்னக் கதையைச் சொல்கிறேன்.
மக்கள் நெரிசல் மிகுந்த கடைவீதி அது. அதற்கு நட்டநடுவே இருந்த ஒரு கம்பத்தில் ஒரு சிறிய அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. ‘முதுமை காரணமாக எனக்குப் பார்க்கும் திறன் மிகவும் குறைந்துவிட்டது. இந்தத் தெருவுக்கு இன்று காலை வந்தபோது ஒரு ஐம்பது ரூபாய் நோட்டைத் தவறவிட்டுவிட்டேன். இங்கே எனக்காக ஒருவர் அதைத் தேடிப் பார்த்தார். கிடைக்கவில்லை. அவர்தான் இப்படி அறிவிப்பாக எழுத உதவி செய்தார். யாருக்காவது அந்த ஐம்பது ரூபாய் கிடைத்தால் அதைக் கீழே இருக்கும் என் விலாசத்தில் வந்து கொடுங்கள்’ என எழுதியிருந்தது.
‘உழைத்துச் சம்பாதித்த யாரோ ஒரு மூதாட்டி தன் பணத்தைத் தவறவிட்டிருக்கிறார்' என அந்த அறிவிப்பைப் பார்த்த ஒருவர் அந்த முகவரியை, மூதாட்டியைத் தேடிச் சென்றார். கண்ணில் புரை விழுந்த அந்த மூதாட்டி வாசலிலேயே அமர்ந்திருந்தார்.
‘‘கடைவீதியில் உங்களின் பணம் கிடந்தது. அதைக் கொடுத்துவிட்டுப் போகலாம் என வந்தேன்’' என்று அந்தப் பாட்டியின் கைகளில் ஐம்பது ரூபாயை வைத்தார் அந்த மனிதர். பாட்டியின் கண்களில் தளும்பத் தளும்ப நீர். குரல் கமற, ‘‘காலையிலிருந்து நிறைய நல்ல உள்ளங்கள் நான் தவறவிட்ட பணம் எனச் சொல்லி என்னிடம் நிறைய ரூபாய்த்தாள்களை வந்து கொடுக்கிறார்கள். நான் தொலைத்தது வெறும் ஐம்பது ரூபாய்தான். ஆனால் வந்து சேர்ந்தது பல நூறு ரூபாய்கள் இருக்கும். உண்மையில் என் தேவைக்கும் அதிகமாகவே இன்று சம்பாதித்துவிட்டேன் - சில நல்ல உள்ளங்களையும் அவர்களின் அளவுகடந்த அன்பையும்’' எனச் சொல்லி அந்த ஐம்பது ரூபாயை வாங்க மறுத்து விட்டார். அந்த மனிதரும் விடாப்பிடியாக அந்தப் பணத்தை அங்கேயே வைத்துவிட்டுத் திரும்ப நடக்கத் தொடங்கினார்.

ஒருவருக்கு உதவி செய்ய மனம் இருந்தால் போதும். பணம், வசதி வாய்ப்புகள் எல்லாம் அப்புறம்தான். அத்தகைய மனம் கொண்ட மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது பாட்டிக்கும், அந்த மனிதருக்கும் கதையைக் கேட்கும் நமக்குமே புரிகிறதல்லவா? இதை என்னைப் பார்க்க வந்த அந்தப் பெரியவரிடமும் சொன்னேன்.
சில நாள்கள் கழித்து மீண்டும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரின் மனநிலையில் மகிழ்ச்சியான மாற்றம் நடந்திருக்கிறது என்பது அவரின் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.
‘‘உங்களைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பியபோது எனக்கு வேறு சில கேள்விகள் தோன்றின. ‘மனைவி பிள்ளைகளோடு ஒன்றாக வாழ்பவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா, என்னைவிட பொருளாதார வசதிகள் அதிகம் கொண்ட குடும்பங்கள் தாங்கள் வாழும் வாழ்க்கை குறித்த மனநிறைவோடு இருக்கிறார்களா?’ என்பன போன்ற கேள்விகள். இவற்றுக்கு விடை தேடுவதற்காக, என் நண்பர்களை, சொந்தக்காரர்களைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் வசிக்கும் வீட்டுக்கும், வைத்திருக்கும் பணத்துக்கும் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சிக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பது புரிந்தது.
தனிமையிலிருந்தாலும் சரி, சுற்றம் சூழ வாழ்ந்தாலும் சரி, மகிழ்ச்சி என்பது நாம் உருவாக்கிக்கொள்ளும் மனநிலைதான் என்பதை அறிந்துகொண்டேன். மறுநாளிலிருந்தே என்னால் முடிந்தவரை பொருளாகவோ, உடல் உழைப்பாகவோ சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பிறருக்கு உதவிகள் செய்து வந்தேன்.
கடந்த வாரம் நல்ல மழை. தெருவில் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் தவித்த நாய்க்குட்டிகளுக்கு என் வீட்டுக் காம்பவுண்ட் மூலையில் ஒரு மறைவான இடம் கொடுத்தேன். குளிரும் பசியும் வாட்டும் எனத் தெரிந்து அவற்றுக்கு உணவும் கொடுத்தேன். உணவு வைத்த நொடியில் போட்டி போட்டுக்கொண்டு வயிறு நிறைய அவை உண்டதைப் பார்க்க என் மனது நிறைந்தது.
மறுநாள் காலை மழை விட்டிருந்தது. கேட்டைத் திறந்ததும் நாய்கள் வெளியே பாய்ந்தன. ஆனால் ஒரே ஒரு கறுப்பு நிற நாய்க்குட்டி மட்டும் வெளியே போகவில்லை. என்னைச் சுற்றிச் சுற்றி வந்தது. சரியென அன்றும் மறுநாளும் அதற்கு சாப்பாடு வைத்தேன். அப்போதிருந்து அது என் ஆஸ்தான மெய்க்காப்பாளானாகவே மாறிவிட்டது. நான் வாக்கிங் போனாலும் சரி, கடைக்குப் போனாலும் சரி, பின்னாடியே அமைதியாக நடந்து வரும். மாலை நேரங்களில் நான் புத்தகத்தில் ஆழ்ந்தால் அந்தச் சமயங்களில் ஒரு மூலையில் போய் அமர்ந்திருக்கும். என் கவனம் புத்தகத்திலிருந்து மீண்டதும் என் அருகில் வந்து குழையும்.
அந்த நாய்க்குட்டி மெதுமெதுவாக என் சிந்தனைகளில் அதிக நேரம் இடம்பிடித்தது. ‘நாம் எதைப் பற்றி நிறைய யோசிக்கிறோமோ அது பற்றிய நிகழ்வுகளே அடுத்தடுத்து நடக்கும்' என எங்கோ படித்திருக்கிறேன். அதைப்போல அன்று நான் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் ஒரு கதை. ஒரு சிறுவனையும் அவன் வளர்த்த நாயையும் பற்றியது. பல ஆண்டுகளாக அவன் வளர்த்துவந்த அந்தச் செல்லப்பிராணிக்கு உடல்நலமில்லாமல் போக, அவனும் அவன் பெற்றோரும் அதை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். முழுமையாகப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், ‘நாய்க்கு நோய் முற்றிவிட்டது. இனி இது வாழும் ஒவ்வொரு நாளும் வலிமிகுந்ததாய் இருக்கும். அதை இந்தக் கொடுமையிலிருந்து விடுவிக்க நாமே ஊசி போட்டு வழியனுப்பிவைத்துவிடலாம்' என்கிறார்.
மிகுந்த யோசனைக்குப் பின் அந்தக் குடும்பம் அதற்கு ஒப்புக்கொள்ள, மருத்துவர் தேவையானதைச் செய்கிறார். ஒருபக்கம் வலியிலிருந்து விடுதலை, மறுபக்கம் பிரியப்போகும் வாதை எனக் கலவையான உணர்ச்சிகளுக்கிடையே உயிர்விடுகிறது அந்த நாய். கண்ணீரில் மிதக்கிறது அந்தக் குடும்பம். ஆற்றாமையில், ‘நாய்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு குறைந்த ஆயுளைக் கொடுத்திருக்கிறார் கடவுள்?' என அந்தச் சிறுவனின் அம்மா கேட்க, அதற்கு யாரிடமும் பதிலில்லை. கனத்த அமைதி அங்கே நிலவுகிறது. அவர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கும் மருத்துவர் மனம் திறக்கிறார். ‘மனிதர்கள் நமக்குத்தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதெப்படி என்கிற மந்திரம் புரிய 50, 60 ஆண்டுகளாகின்றன. ஆனால் நாய்களுக்கு அவை இந்த மண்ணில் வந்த நொடியே அந்த மந்திரம் தெரிந்துவிடுகிறது. அதனால் எஞ்சியிருக்கும் ஆயுளை நொடிக்கு நொடி அவை மகிழ்ச்சியோடே கழிக்கின்றன. நம்மையும் மகிழ்விக்கின்றன. அவற்றின் பிறவிப்பலனை அவை சீக்கிரமே அடைந்துவிடுவதால் அதன் ஆயுளும் குறைவுதான்’ என்கிறார்.
இந்தக் கதை உண்மை என்பதை என் வீட்டிலிருக்கும் நாய்க்குட்டி எனக்கு நித்தமும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. நான் கோபமாகவோ எரிச்சலாகவோ இருந்தால் சத்தம் காட்டாமல் தன்னைத்தானே பிஸியாக வைத்துக்கொள்கிறது. நான் நல்ல மனநிலையிலிருக்கிறேன் எனத் தெரிந்தால் என்னோடு குதித்து விளையாடுகிறது. நான் தனிமையை உணரும்போது வந்து ஆதரவாக அதன் உடற்சூட்டை எனக்குக் கடத்தி, ‘நான் இருக்கிறேன்' என்பதுபோல ஆதரவளிக்கிறது. இந்தச் சின்னஞ்சிறு நாய்க்குட்டியால் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் கணக்கிலடங்காதவை. அதைப் பார்க்கும்போதெல்லாம் நீங்கள் எனக்குச் சொன்ன, ‘மகிழ்வித்து மகிழ்' என்கிற வாக்கியமே மனதிற்குள் ஒலிக்கிறது'’ என அந்தப் பெரியவர் மிக மகிழ்ச்சியாக விவரித்தார்.
- பழகுவோம்
*****

ஒரு பெருமழையில் எத்தனை கோடித் துளிகள் இருக்கிறதோ அத்தனை கோடிப் பார்வைகளும் இருக்கின்றன. காரணம், மழை சிலருக்கு வரம்; சிலருக்கு சாபம். ஒரு கோப்பைக் காபியோடு ஜன்னலின் வழி பார்த்து ரசிப்பவர்களுக்கு மழை ஒரு கவிதை. ஒண்ட இடமில்லாமல் துண்டுக் கூரையில்லாமல் தத்தளிப்பவர்களுக்கு மழை ஒரு வேண்டா விருந்தாளி. ஒவ்வொரு மழையின்போதும் பறவைகளை நினைத்து நான் பரிதாபப்படுவேன். அவை சேமித்துவைத்த உணவு, கட்டியிருந்த கூடு என அனைத்தும் கரைந்துபோகக் கூடிய நிலை அது. ஆனால் மறுநாள் மழை வடிந்து விடியும்போது எப்போதும்போல உற்சாகமாய் அந்த நாளைத் தொடங்கும் அப்பறவைகளின் மனது நமக்கும் வாய்ந்திருந்தால்தான் என்ன? துளிக் கோபமும் அவற்றுக்கு மழைமீது கிடையாது. ஒவ்வொரு நாளையும் புதிதாய்த் தொடங்கும் அந்தப் பறவைகளைவிட நமக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்கும் சிறந்த ஆசான் யார் இருக்கமுடியும்?