
எல்லாருடைய வாழ்க்கையும் எதிர்காலம் குறித்த கேள்விகளால் நிறைந்தவைதான்.
‘சமீபத்தில் என்னை ஒருவர் வந்து சந்தித்தார். இப்படி ஒரு பிரச்னையைக் கூறினார்’’ என்றுதான் உங்களிடம் பெரும்பாலான நேரங்களில் பேச்சைத் தொடங்கியிருக்கிறேன். ஆனால், இந்த முறை அப்படிச் செய்யப்போவதில்லை. காரணம், இன்று நாம் பேசப்போகும் பிரச்னை, பாரபட்சமில்லாமல் நம் அனைவரின் வீடுகளிலும் நடக்கக்கூடியதுதான்.
இந்நேரம் யூகித்திருப்பீர்கள்... ஆமாம். கணவன் - மனைவி உறவில் நிகழும் ஊடல்கள் பற்றித்தான் பேசப்போகிறேன். தம்பதிகளுக்குள் நடக்கும் ஊடல்களுக்கு அந்தப் பெயர் வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. அன்னியோன்யம் அதிகம் தேவைப்படும் கணவன் - மனைவி உறவில் தோன்றும் கருத்து வேறுபாடுகளை ‘பகை’ என்றோ, ‘சண்டை’ என்றோ கடுமையான சொல்லாடல்களால் குறித்தால் சரிவராது என நினைத்துத்தான் ‘ஊடல்’ எனக் காதல் ரசம் சொட்ட பெயர் கொடுத்தார்கள் மொழியாளுமைகள். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உறவிது. சொல்லப்போனால் உயிர்ச்சங்கிலியின் ஆதிப்புள்ளி.

எல்லாருடைய வாழ்க்கையும் எதிர்காலம் குறித்த கேள்விகளால் நிறைந்தவைதான். ஆனால் பெற்றோருடன் வாழும்போது அவர்களின் அனுபவமும் முதிர்ச்சியும் இளைய தலைமுறையினருக்கு இக்கேள்விகளை எதிர்கொள்ளக் கைகொடுக்கும். ஆனால் தம்பதிகளுக்குள் நிகழ்வதோ வேறு. ஒரே கூரைக்கடியில் ஏறத்தாழ ஒரே வயதினர் இணைந்து வாழும்போது இயல்பாகவே கேள்விகள் பூதாகரமாய் எழுந்து பயமுறுத்தும். அதுவும் குறிப்பாக நம் சமூகத்தில், ‘வீடு வாங்கலாமா வேண்டாமா, குழந்தை பெற்றுக்கொள்ளலாமா வேண்டாமா?’ போன்ற கேள்விகள் எழுப்பும் குழப்பங்கள் எக்கச்சக்கம்.
‘‘கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் துளியும் இருக்கக்கூடாது என நினைப்பவன் நான். எனக்கும் என் மனைவிக்கும் அப்படி கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க நீங்கள்தான் வழி சொல்லவேண்டும்’’ என ஒரு கணவர் சூஃபி துறவி ஒருவர் முன் போய் நின்றார்.
‘‘உன் பிரச்னைக்கு வழி சொல்வதற்கு முன் எனக்கு நீ ஒரு உபகாரம் செய்யவேண்டும். இங்கே இருக்கும் மைதானத்தில் நூறு ஒட்டகங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தரையில் படுத்துத் தூங்கியபின் நீ தூங்கப் போ. எழுந்து காலையில் வா!’’ எனச் சொல்லி அனுப்பினார்.
மறுநாள் காலை வீங்கிச் சிவந்த கண்களோடு துறவியின் முன் வந்து நின்றார் அந்தக் கணவர். ‘‘இரவு முழுக்க நான் தூங்கவேயில்லை. ‘ஒட்டகங்கள்தானே... சீக்கிரம் தூங்கிவிடும், எளிய வேலைதான்’ என நினைத்தேன். ஆனால் சில ஒட்டகங்கள் மட்டுமே தரையில் படுத்துத் தூங்கின. சில ஒட்டகங்களை நான் போராடி தரையில் படுக்க வைத்தேன். வேறுசில ஒட்டகங்களோ கடைசிவரை படுக்கவேயில்லை. ஒரு ஒட்டகத்தைப் படுக்க வைத்தால் மற்றொன்று எழுந்துவிடுகிறது. தயவுசெய்து இன்னொருமுறை எனக்கு இந்த வேலையைக் கொடுத்துவிடாதீர்கள்’’ என, துறவியிடம் இறைஞ்சினார் அந்தக் கணவர்.
‘‘கருத்து வேறுபாடுகளும் ஒட்டகங்களைப் போலத்தான். எல்லாக் கருத்து வேறுபாடுகளையும் களைந்துவிட முடியாது. ஒன்றைக் களைந்தால் இன்னொன்று முளைக்கும். எல்லா ஒட்டகங்களையும் தூங்கவைத்துவிட்டுத்தான் தூங்குவேன் என்றால் கடைசிவரை தூங்கவே முடியாது. கருத்து வேறுபாடுகளை முழுமையாகக் களைந்துவிட்டுத்தான் வாழவேண்டும் என நினைத்தால் நம்மால் வாழவே முடியாது. ஆகவே, களைய முடிந்த வேறுபாடுகளைக் களைந்துவிடுங்கள். களைய முடியாத வேற்றுமைகளைக் காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு மகிழ்ச்சியாக இல்வாழ்க்கையை வாழத்தொடங்குங்கள். காலம் எல்லாவற்றையும் மாற்றும் திறன் படைத்தது” என அறிவுரை சொல்லி அனுப்பினார் அந்தத் துறவி.
‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ எனக் கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். படங்களில் வரும் காதலுக்கும் நிஜத்தில் நிகழ்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆதர்ச தம்பதிகள் என்று ஒரு ஜோடி இருக்கவே முடியாது. புரிந்துகொள்ளுதலும் விட்டுக்கொடுத்தலும் மட்டுமே உறவை வளர்க்கும். ஒரு தம்பதிக்குள் நூறு சதவிகிதம் compatibility என்பது நடைமுறையில் சாத்தியமே இல்லை. ஏன், எந்த இரு மனிதர்களுக்கிடையிலும் நூறு சதவிகிதம் compatibility வாய்ப்பேயில்லை. இது புரியாமல் படம் பார்த்து எதிர்பார்ப்புகளை நிறைய வளர்த்துக்கொண்டால் ஏமாற்றங்களும் பலமாகவே இருக்கும்.
ஒரு நிறுவனத்தில் ஒரே மாதிரியான திறமையும் அனுபவமும் வாய்ந்த இருவர் வேலை பார்த்துவந்தார்கள். அப்ரைஸலின் போது இருவரையும் அழைத்த மேலதிகாரி இருவரிடமும் கடிதத்தைக் கொடுத்தார். இருவருக்கும் ஒரு ரூபாய்கூட வித்தியாசமில்லாமல் அதேயளவு அப்ரைஸல். முதல் ஆள் அதைப் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்க இரண்டாமவர் முகத்தில் ஏமாற்றம். யாருக்கும் சொல்லாமல் வேலையை விட்டுவிட்டுக் கிளம்பிவிட்டார். முதல் ஆளுக்கு எதிர்பார்ப்பை மீறிய ஊதிய உயர்வு கிடைத்ததால் அவருக்கு மகிழ்ச்சி. இரண்டாமவருக்கு எதிர்பார்ப்பு அதிகமிருந்ததால் ஏமாற்றம்.

சம்பள விஷயம்தான் என்றில்லை. உண்ணும் உணவு, கேட்கும் இசை, பார்க்கும் படம் என எல்லாவற்றிலும் நம் எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொண்டோமென்றால் நமக்கு ஏமாற்றங்களும் இருக்காது. கணவன் - மனைவி உறவில் மிக அவசியமான பண்பு இது. பிக்பாஸ் பெஸ்ட்டா, சர்வைவர் பெஸ்ட்டா எனக் கேட்டாலும் சரி, பேஸ்புக்கா, இன்ஸ்டாகிராமா எந்தத் தளம் பிடிக்கும் எனக் கேட்டாலும் சரி, பதில்கள் வேறுவேறாகத்தானே இருக்கப்போகின்றன.
It is OK to have differences என்கிற சூத்திரத்தை இரண்டு பேருமே ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால், இருவருக்கும் இடையில் இருக்கும் காதல் நிலைக்கும். ஆனால், இந்த சூத்திரம் வொர்க்கவுட்டாக கணவன் மனைவி இருவரும் மற்றவருடைய பெர்சனல் ஸ்பேஸை மதிக்கவேண்டியது அவசியம்.
பிணக்குடன் வந்த ஒரு தம்பதியை சமாதானம் செய்துவைத்தேன். மனைவி சமாதானமாகிவிட்டார். கணவரோ ஆகவில்லை. சபை நாகரிகம் கருதி, கடைசியாய் மனைவியோடு கைகோத்துக்கொண்டார். ‘‘நீங்கள் வலிந்து இப்படிச் செய்யவேண்டிய அவசியமில்லை’’ என நான் சொன்னதும், சட்டெனக் கையை விடுவித்துக்கொண்டார். மற்றொருமுறை இதேபோல சமாதானமாகாத கணவர் ஆனாலும் தன் மனைவியை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் பொருட்டு பொய்யான நிறைவை வெளிப்படுத்தினார். அது பொய்யென அவரின் மனைவியால் கண்டுபிடிக்க முடியவில்லையென்றாலும் அனுபவம் வாய்ந்த என் கண்களுக்குத் தெரிந்தது. என்னைக் கேட்டால் முதல் ஆளைவிட இரண்டாவது ஆள் செய்ததுதான் சரி என்பேன். ‘என்ன மனைவியிடம் பொய்யாக நடிக்கச் சொல்கிறீர்களா?’ என உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் ஐடியலிஸ்ட்டிக்காக இருப்பதைவிட பிராக்டிக்கலாக இருப்பதுதான் ஒரு உறவைக் காப்பாற்றும். அரிச்சந்திரனாகவே இருந்தாலும் குழந்தை நிலாவைத் தொட ஆசைப்பட்டால் குளத்து நீரில் தெரியும் நிலாவின் பிம்பத்தைக் குழந்தையிடம் காட்டி சமாதானப்படுத்துவதில் தவறில்லை.
கணவன் - மனைவியிடையே பொய் சொல்லக்கூடாது என்றுதானே காலங்காலமாகச் சொல்லி வளர்க்கிறார்கள் என உங்களுக்குத் தோன்றலாம். மிகத் தீவிரமான பிரச்னைகளில் நீங்கள் உங்கள் துணைக்கு நேர்மையானவராக இருப்பது முக்கியம். ஆனால் சின்னச் சின்ன ஈகோ முட்டல்கள், கருத்து வேறுபாடுகளுக்கெல்லாம் அப்படி இருக்கவேண்டியதில்லை. நான் எப்போதும் சொல்வதுபோல Greater Good-ஐ மனதில் வைத்துச் செயல்படுவதுதான் சரியாக இருக்கும்.
ஒருவர் கணவனிடமோ, மனைவியிடமோ உண்மையைப் பேசுகிறாரா என்பது முக்கியமல்ல; உண்மையாக இருக்கிறாரா என்பதுதான் முக்கியம். உண்மையைச் சொல்லாமலிருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாமென்றால் அப்படியே இருந்துவிட்டுப்போகட்டுமே.
‘குற்றமற்ற நன்மை விளையுமென்றால் பொய்யும் வாய்மைபோல் கருதப்படும்’ என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவரே தீர்ப்பு கொடுத்திருக்கிறார். அது நூறு விழுக்காடு இல்வாழ்க்கைக்கும் பொருந்தும்.
- பழகுவோம்

‘உண்மையைவிட வாய்மைதான் முக்கியம்’ என நான் சொன்னதை மேலோட்டமாக புரிந்துகொண்டு உங்கள் வாழ்க்கையில் மேலும் குழப்பங்களை வரவழைத்துக் கொள்ளாதீர்கள். நாம் பேசுகிற வார்த்தைகள் உண்மையாக இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமில்லை. ஆனால் நம் நோக்கம் உண்மையாக இருக்க வேண்டியது மிக முக்கியம். இதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.