
கல்வி தரமானதாக இருக்கிறது. இங்கே இருக்கும் அத்தனை கல்வி நிலையங்களும் ஆராய்ச்சிகளுக்குக் கோடிக்கணக்கில் தயங்காமல் செலவு செய்கின்றன.
மனிதகுலத்தின் பல்லாயிரம் ஆண்டுக்கால அனுபவம்தான் இன்று நம் வாழ்தலுக்கான அடித்தளம். ஆதியில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட நெருப்பு தொடங்கி இன்று திட்டமிட்டுக் கண்டறியப்படும் தொழில்நுட்பம் வரை எல்லாமே யாரோ ஒருவரின் அனுபவத்தால் விளைந்தவையே. ஒரு விஷயத்தை நாமே முதல் படியிலிருந்து கற்கத் தொடங்கி முட்டி மோதிக் கற்றுக்கொள்வது ஒருவகையென்றால், அடுத்தவரின் அனுபவம் வழியாக ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வது மற்றொரு வழிமுறை.
‘`பி.டெக்கில் என்னுடைய CGPA ஏழுக்கும் மேல். ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் ஆற்றல், தெளிவாக நினைத்ததை ஆங்கிலத்தில் விவரிக்கும் புலமை, மற்றவர்கள் சொல்வதை கவனித்துப் புரிந்துகொள்ளும் திறன் என அனைத்தும் கைவரும். TOFEL தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். சிந்திக்கும் திறன், தர்க்க அறிவு, கணித நிபுணத்துவம் ஆகியவற்றை எடைபோடும் GRE தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறேன். எம்.எஸ் படிக்க என் மதிப்பெண்ணுக்கு ஏற்றபடி அமெரிக்காவின் ஒரு நடுத்தரப் பல்கலைக்கழகத்தைத் தேர்வும் செய்துவிட்டேன். ஆனால் அமெரிக்கா செல்ல விசாதான் கிடைக்கவில்லை. ‘சென்னைத் தூதரகத்தில் வேண்டாம், மும்பையில் முயற்சி செய், ஹைதராபாத்தில் கண்டிப்பாகக் கிடைக்கும்’ எனப் பலரும் சொன்னதை நம்பி எல்லாப் பக்கமும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன். கிடைக்கவே இல்லை. என்னைவிடக் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கெல்லாம் விசா கிடைத்துக் கிளம்பிவிட்டார்கள். SOP - Statement of Purpose எனப்படும் இந்தப் படிப்பை இந்தக் கல்லூரியில் ஏன் படிக்க விரும்புகிறேன். அதன் பின்னான என் திட்டங்கள் என்ன என்பதை விண்ணப்பத்தில் மற்றவர்கள் என்னைவிடச் சிறப்பாக விளக்கியிருப்பார்கள் என நினைக்கிறேன். அதனால்தான் எனக்குக் கிடைக்கவில்லையோ என்னவோ’’ என என்னிடம் சோகம் பகிர்ந்துகொண்டார் ஓர் இளைஞர்.
சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் மேல்படிப்பு படிப்பதற்கு சீட் கொடுக்க மதிப்பெண்ணை மட்டும் பார்ப்பதில்லை. இந்தப் படிப்பை அவர் ஏன் தேர்ந்தெடுக்கிறார் என்பதையும், அதன்மூலம் கிடைக்கும் அறிவை வைத்து என்ன செய்ய விரும்புகிறார் என்பதையும் கவனத்தில் கொள்கிறார்கள். ‘அமெரிக்காவில் படித்துவிட்டு அங்கேயே செட்டிலாகப் போகிறேன்’ என்பவர்களைவிட, ‘படித்துக் கற்ற அறிவை வைத்து ஆராய்ச்சித்துறையில் சாதிக்கவேண்டும் என விரும்புகிறேன்’ எனச் சொல்பவர்களுக்குத்தான் அங்கே படிக்கும் வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கின்றன.
சமீபத்தில் இப்படி வெளிநாட்டில் செட்டிலாகவேண்டும் என்கிற முனைப்பில் இருக்கும் ஒரு மாணவரிடம், ‘ஏன் அங்கே செட்டிலாக நினைக்கிறீர்கள்?’ என விசா அதிகாரி போலவே கேட்டேன். ‘‘அமெரிக்கா போன்ற நாடுகளில் சம்பளம் மிக அதிகம். வசதி, வாழ்க்கைத்தரம் எல்லாமே மேம்பட்டதாய் இருக்கின்றன. போக, ‘நான் அமெரிக்காவில் கிரீன் கார்டு ஹோல்டர்’ எனச் சொல்லும்போது ஒரு தனிப்பெருமை கிடைக்கிறது. ஊரிலிருப்பவர்கள் என்மேல் நிறைய மதிப்பு வைப்பார்கள். அதனால்தான்’’ என்றார் அந்த மாணவர்.

‘லைஃப் புரோகிராம்’ நடத்த நான் சில தடவை அமெரிக்கா பயணப்பட்டிருக்கிறேன். அங்கே ஒருமுறை நான் சந்தித்த ஒரு தம்பதி, ‘‘எங்களால் இதற்குமேலும் அமெரிக்காவில் இருக்கமுடியாது. இந்தியாவில் நிரந்தரமாக வந்து செட்டிலாகிவிடலாம் என முடிவெடுத்து விட்டோம்’’ எனக் கூறினார்கள். ‘‘அமெரிக்காவில் இருக்கும் வாழ்க்கைமுறை இந்தியாவில் இல்லை என்பது தெரிந்தும் இந்த முடிவை எடுக்கிறீர்களா?’’ என அவர்களிடம் கேட்டேன்.
``நீங்கள் சொல்வது ஓரளவுக்கு சரிதான். இங்கே இருக்கும் சில வசதிகள் அங்கே இல்லை. இங்கே கிடைக்கும் சுதந்திரம் அங்கில்லை. அதேபோல என் வேலை, சம்பளம், நான் வேலை பார்க்கும் இடம், என் பின்னணி என எதுவும் இங்கிருப்பவர்களுக்குப் பிரச்னை இல்லை. அவர்கள் பாட்டுக்கு அவர்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு தங்கள் போக்கில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
நிறுவனங்களில் நேர்முகத் தேர்வுக்காகச் சென்றாலும் அதிகபட்சமாக அனுபவம், வொர்க் பெர்மிட் பற்றியெல்லாம் கேட்பார்களேயொழிய நீங்கள் எந்த நாடு, இனம், மொழி என்பன போன்ற கேள்விகள் கேட்கவேபடாது. ‘உங்கள் ஆங்கில உச்சரிப்பில் இந்தியத் தொனி இருக்கிறது’ என்றுகூடச் சொல்லமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை எந்தவித முன்தீர்மானத்தோடும் ஒருவரை அணுகக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள்.
உங்கள் பால் அடையாளம் என்ன, நீங்கள் என்னவாக உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள், உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் என்ன என்பவை குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒருமுறைகூடக் கேட்கமாட்டார்கள். தெரிந்துகொள்வதிலும் பொதுவாக அவர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. ஒப்பீட்டளவில் பாலினப் பாகுபாடு இங்கே மிகவும் குறைவு என்றே சொல்லலாம்.
கல்வி தரமானதாக இருக்கிறது. இங்கே இருக்கும் அத்தனை கல்வி நிலையங்களும் ஆராய்ச்சிகளுக்குக் கோடிக்கணக்கில் தயங்காமல் செலவு செய்கின்றன. ஆராய்ச்சி மாணவருக்குத் தரப்படும் மதிப்பே தனி. சான்றிதழ் தொடங்கி நமக்குத் தேவைப்படும் அனைத்தும் குறித்த நேரத்தில் நம் கைகளுக்கு வந்து சேர்ந்துவிடும். பக்கத்து நாடான கனடாவிலோ இன்னும் ஒருபடி மேலே போய் பணியிலிருந்து ஓய்வு பெற்ற முதியவர்களை அரசே தத்தெடுத்துக்கொள்கிறது. அவர்களின் இறுதிக்காலம் எதைப் பற்றியும் கவலைப்படாத ஒன்றாக இருக்கவேண்டும் என அந்த அரசு மெனக்கெடுகிறது. இதெல்லாமே இந்தியாவில் இல்லை எனத் தெரிந்தும்தான் அங்கே வர விருப்பப்படுகிறோம்’’ என ஒருவரை ஒருவர் பார்த்தபடி சொன்னார்கள் அந்த கணவன் - மனைவி.
என் முகத்தில் கேள்வி படர்வதைப் பார்த்து அவர்களாகவே பதில் சொல்லத் தொடங்கினார்கள்.
‘`இங்கே சம்பளம் அதிகம்தான். ஆனால் அதற்கேற்றாற்போல செலவும் அதிகம். ஒருகட்டத்தில் செலவுகளை சமாளித்து மேலும் கொஞ்சம் சேமிப்பதற்காக அதிகமாய் ஓடவேண்டியதாகிறது. இப்படி ஓடி ஓடித் தேய்ந்தாலும் நாளின் இறுதியில் உண்பது என்னவோ ரசாயனங்களில் தோய்க்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட, சுவையே இல்லாத பாக்கெட் உணவுகள்தான். அவற்றைச் சூடாக்கி சாப்பிட்டுவிட்டு நிலையாக இல்லாத சீதோஷ்ண நிலையை மனதில் வைத்துக்கொண்டு படுக்கையில் சாய்ந்தால் மனம் தன்னாலே ஊர்ப்பக்கம் பறக்கக் கிளம்புகிறது. உறவுகளைப் பிரிந்து இங்கு வந்து, செயற்கைப் புன்னகைகளை முகத்தில் தேக்கி அலையும் முகங்களைப் பார்த்துப் பார்த்துச் சலித்துவிட்டது. ஒருகட்டத்தில், ‘இவ்வளவும் எதற்கு’ எனத் தோன்றவே இந்த முடிவுக்கு வந்தோம். பிள்ளைகளும் இந்தக் கலாசாரத்தில் கற்கவேண்டியவற்றை எல்லாம் கற்றுவிட்டார்கள். இப்போது நம் மண்ணின் கலாசாரத்தை, வேர்களை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கத் தோன்றுகிறது” என்றார்கள்.
அமெரிக்காவில் எப்படியாவது செட்டிலாகிவிடவேண்டும் என நாம் முதல் பத்தியில் பார்த்த இளைஞரைப் போல நினைப்பவரும் இருக்கிறார்கள். ‘இங்கே இருந்தது போதும்’ என அமெரிக்காவிலிருந்து தங்கள் மண்ணுக்குத் திரும்ப நினைப்பவர்களும் அனேகம் பேர் இருக்கிறார்கள். யார் எங்கே வாழமுடிவெடுக்கிறார்கள் என்பதெல்லாம் அவரவரின் தனிப்பட்ட விருப்பம். அதேசமயம் வாழ்க்கையைத் தொடங்கவிருக்கும் இளைஞரின் ஆசையையும் பாதி வாழ்க்கையை வாழ்ந்து அனுபவங்கள் பெற்றுவிட்ட அந்தத் தம்பதியின் ஆசையையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவும் முடியாது. என் கருத்தாக நான் இங்கே சொல்ல நினைப்பதெல்லாம், ‘நீங்கள் உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். செட்டிலாகுங்கள். ஆனால் உங்களால் முடிந்தவற்றை இந்த மண்ணுக்குத் திருப்பிக்கொடுத்துக்கொண்டே இருங்கள். அது நம் கடமையும்கூட!’
திரைகடல் தாண்டி திரவியம் தேடிச் செல்வது என்பது நமக்குப் புதிதல்ல. சொல்லப் போனால் மனித சமுதாயம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர இந்தப் பயணங்களே இன்றியமையாதவையாக இருந்தன; இருக்கின்றன. பொருள்தேடி, நிலம் தேடி, உலகின் எல்லை தேடிப் பயணப்பட்டவர்களால்தான் உலகின் அனைத்துக் குடிகளும் உயர்ந்தன. ஆனால் அப்படிப் பயணப்பட்ட அனைவரும் திரும்ப தங்கள் மண்ணுக்கு வந்து தங்கள் அனுபவத்தை, அறிவைப் பகிர்ந்துகொண்டார்கள். அதை நாமும் செய்யலாமே.
அங்கிருந்து திரும்ப வர நினைப்பவர்களில் சிலர் அந்த ஊர்க் கலாசாரத்தை, உணவுப் பழக்கங்களைக் குறை சொல்வதையும் நான் கவனித்திருக்கிறேன். ஒரு மண்ணின் கலாசாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகளாகப் பொருளாதாரச் சூழல், நிலப்பரப்பு, அங்கு குடியேறியவர்களின் வரலாறு என ஏராளமானவை இருக்கின்றன. எல்லாருக்கும் அவரவர் கலாசாரம் உயர்வானதுதான். பொருள்தேடிச் செல்லும் எவரும் அதைக் கொடுக்கும் மண்ணைப் பழிப்பது நியாயமாகாதே! எங்களுக்கு அந்த மண் கொடுக்கும் வசதி வாய்ப்புகள் வேண்டும். ஆனால் அந்தக் கலாசாரம் வேண்டாம் எனச் சொல்வது முறையில்லையே. மேலைக் கலாசாரம் பற்றித் தெரிந்து அங்கே சென்றுவிட்டு, பின் அதைக் குறை சொல்வதில் நியாயமில்லை.
‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் எழுதி வைத்தது இது. பொருள் செல்வத்தைத் தேடிச் செல்வது மனித இனத்தின் அடிப்படை இயல்பு. அதேசமயம் நாம் இந்த மண்ணிடமிருந்து பெற்றதைத் திரும்ப இந்த மண்ணுக்கு அதன் மைந்தர்களுக்குக் கொடுப்பதுதான் அறம். அறம் செய்வோம்!
- பழகுவோம்
******
பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவுகளைத்தான் மேலை நாடுகளில் ஏழை எளியவர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் பெரும்பாலும் சாப்பிடுகிறார்கள். விவசாயப் பண்ணைகளில் இருந்து நேரடியாகக் கிடைக்கும் காய்கறி, கிழங்கு இறைச்சி போன்ற உணவுகளின் விலை அதிகம். கிடைப்பதும் அரிது என்பதால் பணம்படைத்தவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய உணவு அங்கே கிடைக்கிறது. ஆனால, நம் நாட்டில், ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் கிடைப்பது மண்ணிலிருந்து வரும் உணவுகள்தான்.

பர்கர், பீட்சா போன்றவற்றைக் கொடுக்கும் உணவகங்களில் குழந்தைகளின் பிறந்த நாளைக் கொண்டாடுவதைத்தான் நம் நாட்டில், பெரும்பாலான பணக்காரர்கள், கெளரவமாகக் கருதுகிறார்கள். ஆனால், மேலை நாடுகளைப் பொறுத்தவரை இதுபோன்ற உணவகங்களில் பார்ட்டி கொடுப்பதை அவர்கள் மரியாதைக் குறைவாகக் கருதுகிறார்கள். இதுபோன்ற கொண்டாட்டங்களை வீடுகளில் நடத்துவதைத்தான் கெளரவமாகக் கருதுகிறார்கள்.
அமெரிக்காவில் செல்வந்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான உணவுகள் நம் நாட்டில் சாமானிய மக்களுக்கு மிகச் சுலபமாகக் கிடைக்கிறது. அமெரிக்காவின் ஏழை எளிய மக்கள் சாப்பிடும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளைத்தான் நம் நாட்டில் இருக்கும் செல்வந்தர்கள் தேடித் தேடிச் சென்று சாப்பிடுகிறார்கள்.
என்னதான் படித்தாலும், வசதிகள் இருந்தாலும், எது சிறந்த உணவு என்று தேர்ந்தெடுக்க முடியாத அளவுக்கு அப்பாவிகளாக நம்மை வைத்திருப்பது எது?!