
- சுவாமி சுகபோதானந்தா
‘சொர்க்கத்துக்குப் போக வேண்டும் என்றுதான் பலரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால், யாருமே சாவதற்குத் தயாராக இல்லை’ - இந்தக் கூற்றை நம்மில் பெரும்பான்மையானவர்கள் கேள்விப்பட்டிருப்போம். ஆட்டோவின் பின்புறமோ, வாட்ஸப் ஸ்டோரியிலோ சமூக வலைதள ஸ்டேட்டஸிலோ அடிக்கடி கண்ணில்படுவது இது. ‘சொர்க்கத்துக்கும் போகணும், ஆனா சாகவும் கூடாது. அதெப்படி? ஆனா அப்படித்தானே நாம எல்லாருமே இருக்கோம்’ என இவ்வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் நகைமுரணை நினைத்தும் சிரித்திருப்போம்.
வாழ்ந்து முடித்தபிறகு சொர்க்கம் போகிறோமா இல்லையா என்பதெல்லாம் உறுதியில்லை. முடிந்தவரை நேர்மறை எண்ணங்களைக் கொடுத்து வாழும் எனக்குமே இறந்தபிறகு எங்கே போகப்போகிறேன் எனத் தெரியாது. ஆனால் பூமியில் இருக்கும் இந்தக் குறுகியகாலத்திலேயே சொர்க்கத்தில் வாழ முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எப்படி என்பதற்கான விளக்கம் ஒரு புகழ்பெற்ற நாட்டுப்புறக் கதையில் இருக்கிறது.
வெளிச்சம் எப்படி இருக்கும் என அடர்ந்த குகைக்குள் வாழும் இருட்டுக்குத் தெரியவே தெரியாது. அதேபோல எப்போதுமே தன் மறைவிற்குப் பின்னால் கால் பதிக்கும் இருள் எப்படி இருக்கும் எனச் சூரியனுக்கும் தெரியாது. ஒருநாள், ‘அதெப்படி நீ சூரியனைப் பார்க்காமலேயே இருக்கலாம்?’ என ஒரு குட்டி வனதேவதை குகைக்குள் இருந்த இருட்டைக் கைபிடித்து வெளியே அழைத்துவந்து சூரியனைக் காட்டியது. முதல்முறை சூரியனைப் பார்த்த பரவசத்தில் திளைத்த இருட்டு அந்த வனதேவதைக்கு நன்றி சொல்லியே மாய்ந்து போனது. இப்போது சூரியனின் முறை. இருளைச் சூரியனுக்கு அறிமுகம் செய்துவைக்க சூரியனை குகைக்குள் அழைத்துச் சென்றது அந்த வனதேவதை. ஆனால் சூரியன் நுழையுமிடத்தில் இருளுக்கு என்ன வேலை? அதனால் கடைசிவரை சூரியனால் இருளை உணரவே முடியவில்லை. இப்போதும் இருளைத் தேடித்தான் சூரியன் பூமியின் இண்டு இடுக்குவரை தினந்தோறும் திரிந்து வருகிறது என்பதாய் முடியும் அந்த நாட்டுப்புறக் கதை.
அதேபோலத்தான், மனத்தெளிவு கொண்டவர்களை நரகத்திலேயே தள்ளினாலும் அவர்கள் அதை நரகமாக உணரமாட்டார்கள். தங்கள் தெளிவால் தாங்கள் இருக்குமிடத்தையே சொர்க்கமாக மாற்றிவிடுவார்கள் என்பதுதான் அந்தக் கதை சொல்லும் நீதி. ஆமையோ, முதலையோ நீரில் வாழ வாய்க்கப்பட்டிருந்தாலும் நிலம் சேரும் நேரம் அங்கும் பிழைத்திருப்பதைப் போலத்தான் மனத்தெளிவு கொண்டவர்கள். எங்கு போய்ச் சேர்ந்தாலும் அதைத் தங்கள் வசமாக்கிக்கொள்வார்கள்.
அப்போது, குழப்பங்களில் தெளிவின்மையில் திளைக்கும் சராசரி மனிதர்களுக்கு வாழும்போதே சொர்க்கம் சாத்தியமில்லையா என உங்களில் சிலர் கேட்கலாம். சாமான்யர்கள் என்னதான் தங்கள் எண்ணங்களை சொர்க்கத்தில் மையம் கொண்டு வைத்திருந்தாலும், சுற்றியிருப்பவர்கள் சும்மா இருக்கமாட்டார்கள். எதிர்மறைக் கருத்துகளை விதைத்து நரகத்தின் பக்கம் துரத்திக்கொண்டே இருப்பார்கள்.

இந்தச் சூழ்நிலையை இரண்டு விதமாக எதிர்கொள்ளலாம். முதலாவது, அத்தகைய மனிதர்களிடமிருந்து முற்றிலுமாக விலகியிருக்கலாம். ஆனால் இப்படியானவர்கள் பணியிடங்களில் மேலதிகாரியாகவோ, வீட்டில் நெருங்கிய சொந்தமாகவோ இருந்தால் எப்படித் தவிர்ப்பது? அப்போதுதான் இரண்டாவது வழியைக் கைக்கொள்ள வேண்டும். அந்த வழி மிக எளிமையானதுதான். உங்கள் குழந்தைகள் கையில் வைத்திருக்கும் கதைப் புத்தகத்தில்கூட இதற்கான விடை இருக்கக்கூடும்.
புலியும் கழுதையும் ஒருநாள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. தான் சாப்பிடும் புல்லின் நிறம் நீலம் என்பது கழுதையின் வாதம். ‘இல்லை, அது பச்சை’ என்பது புலியின் வாதம். ஒருகட்டத்தில் கடுப்பான புலி, ‘அட முட்டாள் கழுதையே... அதன்பெயரிலேயே பச்சைப்புல் என இருப்பது தெரியாதா? அதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாதா உன்னால்?’ எனக் கோபமாகக் கேட்டது. ‘பச்ச மண்ணு என்றுகூடத்தான் குழந்தைகளைச் சொல்கிறோம். அதற்காக குழந்தைகள் பச்சை நிறம் எனச் சொல்வாயா?’ எனத் திருப்பிக் கேட்டது கழுதை. இது இப்படியே விதண்டாவாதமாக நீண்டுகொண்டே போகும் என புலிக்குத் தோன்றவே காட்டுராஜாவான சிங்கத்திடம் பஞ்சாயத்துக்குப் போனது.
இருவரின் வாதத்தையும் கேட்ட சிங்கம், கழுதையிடம், ‘உன் வாதம்தான் சரி. தவறாகச் சொன்னதற்காகப் புலிக்கு, இரண்டு ஆண்டுகள் யாரோடும் பேசக்கூடாது என தண்டனை விதிக்கிறேன். நீ போய் வா’ எனச் சொன்னது. கழுதையும் விடைபெற்றுக்கொண்டது.
அதிர்ச்சியில் உறைந்திருந்த புலி, ‘இதென்ன? உன்னிடம் நியாயம் கிடைக்குமென வந்தால் நீயும் இப்படி முட்டாளைப்போலப் பேசுகிறாயே’ எனச் சலித்துக்கொண்டது. உடனே சிங்கம், ‘நீ கண்டிப்பாக தண்டனை அனுபவிக்க வேண்டியவன்தான். ஆனால் அது புல்லின் நிறத்தை நீ மாற்றிக்கூறினாய் என்பதற்காக அல்ல. புல்லின் நிறம் பச்சை என்பதுதான் சரி. ஆனால் அதைப் புரிந்துகொள்ள விருப்பப்படாத கழுதையிடம் விவாதித்து உன் நேரத்தையும் சக்தியையும் வீணடித்து என் வரை இழுத்துவந்ததற்குத்தான் இந்த தண்டனை’ என்றது.
யோசித்துப் பாருங்கள். ஒரு விஷயத்தைத் திறந்த மனதோடு அணுகுபவர்களிடம், புரிந்துகொள்ள எத்தனிப்பவர்களிடம் நீங்கள் விவாதிப்பது உண்மையிலேயே பலன் தரும். ஆனால் தன் கருத்தைத் தாண்டி வேறெதையும் ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் நாம் ஏன் விவாதித்து நேர விரயம் செய்யவேண்டும்?
ஒரு ஆன்மிகவாதி, ஒரு வழக்கறிஞர், ஒரு பொறியியல் விஞ்ஞானி என மூவர்... செய்யாத குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டார்கள். ‘கடவுள் என்னைக் காப்பாற்றுவார்’ என உரத்த குரலில் ஆன்மிகவாதி முணுமுணுக்க, அவர் கயிற்றின் லீவர் இழுக்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. அதைப் பார்த்த மன்னர், ‘கடவுள் அவரை மன்னித்துவிட்டார்’ என்றார். அடுத்ததாக நின்ற வழக்கறிஞர், ‘நான் நம்பும் சத்தியம் என்னைக் காப்பாற்றும்’ எனச் சத்தமாகச் சொல்ல, காவலர்கள் அவர் கழுத்துக் கயிற்றின் லீவரை இழுக்கிறார்கள். அவருக்கும் எதுவும் ஆகவில்லை. ‘நீதிதேவதை அவரைக் காப்பாற்றிவிட்டது’ என்றார் மன்னர். இருவரும் விடுவிக்கப்பட, தலை தெறிக்க ஓடித் தப்பித்தார்கள். இதையெல்லாம் சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார் கடைசியாக நின்றுகொண்டிருந்த பொறியியல் விஞ்ஞானி.
‘என்ன சிரிப்பு’ எனக் கோபமாக மன்னன் கேட்க, ‘அவர்களை விடுவிக்க நீங்கள் காட்டிய வேகத்தைக் கொஞ்சம் அவர்கள் நின்றிருந்த மரப்பலகையை சோதனை செய்வதிலும் காட்டியிருக்கலாம். அதிலுள்ள சின்னப் பொறியியல் சிக்கலைத் தீர்த்திருந்தால் மூன்று பேரும் சாகவேண்டும் என்கிற உங்கள் நோக்கம் நிறைவேறியிருக்கும். உங்கள் மடமையை நினைத்துத்தான் சிரித்தேன்’ என்றார். மன்னன் கண் காண்பிக்க, உடனே மரப்பலகைகள் சோதிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டன. இப்போது லீவரை இழுத்தால் பலகை சரியாக விலகியது. பொறியியல் விஞ்ஞானியின் முடிவு என்னவானது என நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?
நான் சொன்ன இரண்டாவது வழி இதுதான். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களிடம் எதிர்மறை எண்ணங்களை விதைத்தால் அவர்களிடம் விவாதித்துப் பயனில்லை. அவர்களைத் தவிர்க்க சில பொய்களை உரைத்து விலகுவதுதான் சரி.
- பழகுவோம்...

அறிவாளிக்கும் அறிஞனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அறிவாளிக்கு உண்மை என்ன என்பது தெளிவாகத் தெரியும். ஆனால், அறிஞனுக்கோ அந்த உண்மையை எப்போது சொல்லலாம், சொல்லக்கூடாது என்பதும் தெரியும்.