
- சுவாமி சுகபோதானந்தா

“வீட்டில் மீந்துபோன உணவைப் பக்கத்தில் கட்டட வேலைகள் செய்யும் வட மாநிலத் தொழிலாளிகளுக்குக் கொடுத்துவிடலாம் என்று சொன்னால், ‘அதெல்லாம் வேண்டாம். ப்ரிட்ஜிலேயே இருக்கட்டும்’ எனச் சொல்லிவிடுகிறார்கள். நமக்குப் பொருந்தாமல்போன பழைய துணிமணிகளை எல்லாம் வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கோ ஆதரவற்றோர் இல்லத்திற்கோ கொடுத்துவிடலாம் என்றால் அதற்கும் வேகமாய் மறுப்பு தெரிவிக்கிறார்கள். துணிகளைப் போட்டுவிட்டு பதிலுக்கு ப்ளாஸ்டிக் சாமான்கள் வாங்கிக் கொள்ளலாமாம். ஒரே ஒருநாள் எங்கள் வீட்டில் சும்மா இருக்கும் பார்க்கிங்கில் பக்கத்துவீட்டுக்காரர் காரை நிறுத்திவிட்டுப் போனதற்கு அவரோடு சண்டைக்குப் போய் விட்டார்கள். சும்மா இருந்தாலும் இருக்கலாம், ஆனால் மற்றவர்கள் பயன்படுத்திவிடக்கூடாது என்கிற இவர்களின் நியாயம் எனக்குப் புரியவே இல்லை. நானெல்லாம் கிராமத்துப் பின்னணியில் வளர்ந்தவன். நான் குழந்தையாக இருக்கும்போது எங்கள் வீட்டைக் கடந்து போகும், வழிப் போக்கர்களுக்கு எல்லாம் திண்ணையில் இடமும் வயிற்றுக்கு அன்னமும் கொடுத்து எங்களையும் விருந்தோம்பல் பண்பாட்டிற்குப் பழக்கினார்கள் பெரியவர்கள். விருந்தாளிகள் எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் இருந்து இளைப்பாறிவிட்டுச் செல்லலாம். சோறு வடித்த கஞ்சித்தண்ணீர், காய்கறிக் கழிவுகள் போன்றவற்றைக்கூட வீணாக்காமல் கால்நடைகளுக்கும் பறவைகளுக்கும் உணவாகக் கொடுப்போம். ஆனால் இந்த ஐம்பது ஆண்டுகளில் எல்லாமே மாறிவிட்டது.
இத்தனைக்கும் இப்போதிருப்பதைவிட அப்போது வசதி குறைவாகத்தான் இருந்தது. மழை பொய்த்துப்போய் வானம் பார்த்த பூமியாய்க் கிடந்த காலத்திலும் விருந்தோம்பலில் ஒரு குறையும் வைத்ததில்லை. யாரோ ஒருவர் வீட்டில் சமைப்பதற்கான பொருள் இருந்தாலும் அதை வைத்து அன்று அக்கம்பக்கத்திலுள்ள எல்லா வீட்டினரும் பசியாறுவார்கள். நினைத்துப் பார்த்தால் அவர்களின் ஈகை குணம் குறித்து வியப்பாய் இருக்கிறது’’

அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆற்றாமை பொறுக்காமல் என்னிடம் கொட்டித் தீர்த்தது இது. மனதில் வைத்திருந்ததை எல்லாம் சொல்லிவிட்டு இறுதியாக அவர் பகிர்ந்த வார்த்தைகள் கனமானவை. ‘`அப்போதெல்லாம் பெற்றவர்கள் முறையாகப் பள்ளிக்கூடம் போய்ப் படிக்கவில்லை. ஆனாலும் ஆத்திசூடி, மூதுரை, நல்வழி எல்லாம் அவர்களே எங்களுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்த்தார்கள். ‘அ’னா எழுதப் படிக்கும்போதே ‘அறம் செய்ய விரும்பு’ எனச் சேர்த்தே படித்து வளர்ந்தோம் நாங்கள். இப்போது என் பேரக்குழந்தைகளிடம் ‘இயல்வது கரவேல்’ எனச் சொல்லிக்கொடுத்து அதன் அர்த்தத்தையும் புரிய வைத்தால், ‘ப்ராக்டிகலா பேசு தாத்தா. இருக்குறதெல்லாம் நமக்கே போதலை’ என என் வாயை அடைக்கிறார்கள். குழந்தைகளுக்கான வாழ்க்கைக் கல்வியைச் சொல்லிக்கொடுக்காமல் போய்விடுவோமோ என்கிற குற்றவுணர்வு என்னை ஒருபக்கம் அழுத்திக்கொண்டே இருக்கிறது’’ என சோகமாய்ச் சொன்னார் அவர்.
தமிழ் இலக்கியங்களில் குழந்தை களுக்கான போதனைகள் ஏராளம் உண்டு. சிறுவயதிலிருந்தே நன்னெறிகளைப் பழக்கிக் கொடுத்தால்தான் குணத்தில் சிறந்தவர்களாக வளர்வார்கள் என முன்னோர்கள் சிந்தித்து எழுதியவை அவை. எனக்குத் தாய்மொழி தமிழ் இல்லையென்பதால் சிறுவயதில் இதெல்லாம் படிக்கக் கிடைக்கவில்லையே எனச் சிலசமயம் நினைத்து ஏங்கியிருக்கிறேன். அதனால் அவரின் வார்த்தைகளிலுள்ள ஆதங்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
பொதுவாக யாரைக் கேட்டாலும், ‘நானெல்லாம் தர்மம் கொடுப்பதில் மோசமில்லை. என்னால் முடிந்த அளவிற்குப் பிறருக்குக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன்’ என்பார்கள். இதில் அந்த ‘முடிந்த அளவு’ எது என்பதுதான் விவாதத்திற்குரிய விஷயம். அதை விளக்க ஒரு கதையைச் சொல்லியாகவேண்டியது அவசியம்.

அந்தப் பெண் ஒரு இளநீர் வியாபாரி. மாற்றுத்திறனாளியான அவர் ஒருமுறை சாமியார் ஒருவரின் உரையைக் கேட்க நேர்ந்தது. ‘தான தர்மங்கள் செய்து வாழ்ந்தால் நிச்சயம் சொர்க்கம் கிடைக்கும்’ என்பதுதான் அவர் உரையின் சாராம்சம். அவர் சொன்னதைக் கேட்டு இவளுக்கு சங்கடமாகிவிட்டது. ‘சாமி, இதுநாள் வரை நான் யாருக்கும் மனதார எதுவும் தானமாய்க் கொடுத்ததில்லை. நீங்கள் சொன்னதைக் கேட்டதிலிருந்து எனக்கு சொர்க்கம் கிடையாதோ’ என்கிற வருத்தம் படுத்தியெடுக்கிறது’ என சாமியாரிடம் கண்ணீர்விட்டார். ‘கவலைப்படாதே. தர்மம் செய்ய நேரம் காலம் எதுவுமில்லை. இன்றிலிருந்து தொடங்கு. சொர்க்கம் அடையாவிட்டாலும் அடுத்த பிறவியில் வறுமையில்லாத நிலையாவது உனக்கு உண்டாகும்’ எனச் சொன்னார் அந்த சாமியார். அன்றிலிருந்து தினமும் ஒரு இளநீரை பசியில் வாடும் யாராவது ஒருவருக்கு தானமாகக் கொடுக்கத் தொடங்கினார் அந்தப் பெண். சாமியார் சொன்னதுபோலவே அடுத்த பிறவியில் அழகும் வீரமும் கொண்ட இளவரசியாகப் பிறந்தார் அந்தப் பெண். ஒருநாள் அவருக்கு முன் ஜென்மத்து ஞாபகங்கள் எல்லாம் நினைவிற்கு வர, ‘இந்தப் பிறவியிலாவது சொர்க்கம் அடையவேண்டும்’ என தினமும் ஒரு இளநீரை தானமாகக் கொடுக்கத் தொடங்கினார். அடுத்த ஜென்மத்தில் ஒரு இளநீர் வியாபாரம் செய்யும் ஏழைக் குடும்பத்திலேயே திரும்பவும் பிறந்தார் அவர்.
வளர்ந்தபின் கடந்த இரண்டு ஜென்மங்களின் ஞாபகங்களும் அவருக்கு நினைவிற்கு வர, எங்கே தவறு செய்தேன், ஏன் திரும்பவும் ஏழைக் குடும்பத்திலேயே பிறந்தேன் எனத் தனக்குள்ளே கேள்விகள் கேட்டுக் குமைந்துகொண்டிருந்தார். ஒருநாள் அவரின் கனவில் தோன்றிய சாமியார், ‘நீ தானம் செய்ய நினைத்ததில் தவறில்லை. ஆனால் முதல் ஜென்மத்தில் உன்னால் முடிந்த அளவான ஒரு இளநீரை தானமாய்க் கொடுத்தாய். அடுத்த ஜென்மத்தில் நாட்டின் இளவரசியாய் சகல வசதிகள் இருந்தும் உனக்கு ஒரே ஒரு இளநீரை மட்டுமே கொடுக்க மனம் இருந்தது. உன்னால் அந்த ஜென்மத்தில் என்ன முடியுமோ அதைத் தானமாகக் கொடுத்திருந்தால் இந்நேரம் சொர்க்கத்தை அடைந்திருப்பாய்’ என்றார்.
அந்தப் பெண்ணுக்குத் தன் தவறு புரிந்தது. நம்மில் பலருக்கும் இது புரியவில்லை. அதனால்தான் ‘என்னால் முடிந்த அளவிற்குக் கொடுக்கிறேன்’ எனச் சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம். அதை நியாயப்படுத்தப் பல சமாதானங்களையும் சொல்லிக்கொள்கிறோம்.
‘நிஜமாகவே என்னிடம் பணமில்லை. இருந்தால் கண்டிப்பாகக் கொடுத்து உதவுவேன்’ என உங்களில் சிலர் சொல்லலாம். ஆனால் உதவி என்பது வெறும் பணம் மட்டும்தானா?
உதவி செய்ய எண்ணற்ற வழிகள் உண்டு. அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று பாருங்கள். தங்கள் குடும்பத்தில் ஒருவரை நோயின் கொடுமையால் அனுமதித்துவிட்டு கழிவறைக்குச் செல்லக்கூட நேரமில்லாமல் அங்கேயே அமர்ந்திருக்கும் ஏராளமான மனிதர்களைச் சந்திக்கலாம். ‘நான் கொஞ்ச நேரம் இருந்து பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்’ என நீங்கள் அவர்களிடம் சொல்லும் வார்த்தைகளே அவர்களுக்கு அவ்வளவு ஆறுதலாய் இருக்கும். போதிய நேரம் அவர்களோடு செலவழித்தால் உங்களின் மீது அவர்களுக்கு நம்பிக்கை வரும். அவர்களும் ஓய்வெடுத்துவிட்டுத் திரும்பி வருவார்கள். இதுமாதிரியான உதவிகளுக்கெல்லாம் பணம் காசு தேவையா என்ன?
சாலையில் நம்மைத் தேடி யாசகம் கேட்டு வருபவர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு, கடமை முடிந்தது என இருக்கக்கூடாது. கணினி உலகைக் கட்டியாளும் உலகின் மாபெரும் பணக்காரரான பில்கேட்ஸ் சொன்னதை இங்கே உங்களுக்குச் சுட்டிக்காட்ட விழைகிறேன்.
‘`நூறு டாலர் சம்பாதிக்க குறிப்பிட்ட நேரமும் உழைப்பும் செலவிடப்படுகிறதெனில், அதைத் தேவைப்படுபவர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க அதைவிட இரண்டு மடங்கு நேரமும் உழைப்பும் செலவாகும். அதுதான் நியாயம்.’’
இதைத்தான், ‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’, ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என நம் முன்னோர்கள் சொன்னார்கள். `மகிழ்வித்து மகிழ்’ என்று நாம் காலம் காலமாகச் சொல்வதைத்தான் Joy of giving என்று மேலை நாட்டினர் இப்போது சொல்கிறார்கள்.
- பழகுவோம்...

தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்பது உண்மைதான். இதில் ‘தனக்கு’ என்பதில் எதெதெல்லாம் அடங்கும்? அவன் மிகப்பெரிய அரசன். இயற்கை வளங்கள் மிகுந்த நாடென்பதால் செல்வச்செழிப்பிற்குப் பஞ்சமில்லை. ஆனாலும் அந்த அரசன் மனதில் ஏதோவொரு வெறுமை குடிகொண்டிருந்தது. ஒருநாள் மாறுவேடமிட்டு நகர்வலம் சென்றபோது மகிழ்ச்சியாகப் பாடியபடி வேலை செய்துகொண்டிருந்த ஒரு தச்சுத் தொழிலாளியைச் சந்தித்தான். ‘`எப்படி உன்னால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?’ என அந்தத் தொழிலாளியிடம் கேட்டான் மன்னன். ‘நான் உழைத்துச் சம்பாதிக்கிறேன். அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என பதில் சொன்னார் அந்தத் தொழிலாளி. ‘அப்படி உனக்கு எவ்வளவு வருமானம் வருகிறது?’ எனக் கேட்டான் மன்னன். ‘ஒருநாளைக்கு நான்கு அணா கிடைக்கும். அதில் ஓர் அணாவில் சாப்பிடுகிறேன். ஓர் அணாவை முதலீடு செய்கிறேன். ஓர் அணாவைக் கொண்டு கடன் தீர்க்கிறேன். மிஞ்சிய ஓர் அணாவை தர்மம் செய்கிறேன்’ என்றார் அந்தத் தொழிலாளி. மன்னர் முகத்தில் வியப்பு.
அதைப் புரிந்துகொண்ட தொழிலாளி இன்னமும் விளக்கமாகக் கூறத் தொடங்கினார். ‘நான் எனக்காகவும் என் மனைவிக்காகவும் செலவிடும் ஓர் அணா என் செலவு. என்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றவர்களுக்கு நான் ஓர் அணா செலவு செய்வது நான் அவர்களுக்குப் பட்ட கடன். என் பிள்ளைகளுக்காக நான் செலவிடும் ஓர் அணா என் முதலீடு. கணவனை இழந்து குழந்தைகளோடு தவிக்கும் என் தங்கைக்கு நான் செலவிடும் ஓர் அணா என்பது என் கடமை. அதாவது தர்மம். நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது ஒருபோதும் நம் மகிழ்ச்சிக்குக் காரணமாய் இருக்கப்போவதில்லை. அதை நாம் எப்படிச் செலவு செய்கிறோம் என்பதில்தான் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது’ என அந்தத் தொழிலாளி சொல்ல, அரசனின் மனதிலிருந்த வெறுமையும் சூரியன் தொட்ட இருள்போல சட்டென விலகியது.