மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 32

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்

- சுவாமி சுகபோதானந்தா

பிறருக்கு நம்மிடம் இருப்பதைக் கொடுக்கவிடாமல் நம்மைத் தடுப்பது எது? இந்தக் கேள்விக்கான விடையை யோசித்துப் பார்த்தால் முதலில் நிற்பது பேராசைதான். அடுத்தது எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை. ‘நம் வாரிசுகளுக்கு ஒருவேளை எதுவுமே இல்லாமல்போய்விட்டால் என்ன செய்வது’ என்கிற பயம்.

நான் முன்பொருமுறை சொன்னதுபோல நமக்கு வாழ்க்கையில் எப்போதெல்லாம் குழப்பமும் தயக்கமும் ஏற்படுகிறதோ அப்போது நம் கவனத்தை இயற்கையின் பக்கம் திருப்பினால் போதும். நம் குழப்பத்திற்கான தீர்வை இயற்கை தன்னுள் ஒளித்துவைத்திருக்கும். அதை உணர்ந்து தெளிவு பெறலாம்.

மனிதர்களுக்கு மிக நெருக்கமாய் வாழும் பாசமான உயிரினங்களுள் ஒன்று காக்கை. தங்கள் குடும்பத்தின்மேல் அதீத அன்பு கொண்டவை காக்கைகள். குஞ்சுகளுக்கு நாள் முழுக்க அலைந்து திரிந்து உணவைக் கொண்டுவந்து ஊட்டிவிட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் அதுவும் ஒரு எல்லைவரைதான். குஞ்சுகள் முறையாகப் பறக்கக் கற்றுக்கொண்டபின் எந்த நிலையிலும் தாய்க் காகம் தன் பிள்ளைகளுக்கு ஊட்டுவதே இல்லை. ‘அவரவர் வயிற்றுக்கு அவரவர் உழைக்கவேண்டும்’ என்பது காகத்திற்குக்கூடத் தெரிந்திருக்கிறது. ஆனால் மனிதர்கள் நாம்தான் ‘இன்னும் ஏழு தலைமுறைக்கு என் குடும்பம் உட்கார்ந்து சாப்பிடணும்’ எனப் பொருள்வெறியில் சொத்து சேர்க்க ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 32

இப்படி ஓடி ஓடிச் சேர்த்த பொருளை பிள்ளைகளை நம்பிக் கொடுக்கவும் நம் மனம் விட்டுவிடுமா என்ன? ஆசை துறப்பவர்கள் அரிது. அடித்தட்டுக் குடும்பத்தலைவன் முதல் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசன் வரை எல்லோரும் இந்த மனநிலையில்தான் இருக்கிறார்கள். கடைசிக்காலத்தில் மரணம் நெருங்கிவிட்ட நிலையிலும், ‘சொத்தெல்லாம் நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது. அதை பத்திரமா பார்த்துக்க’ என உரிமை கொண்டாடிக்கொண்டே இருப்பது நகைமுரண்தானே! உண்மையில் அப்போது நமக்குப் பிள்ளைகள்மீதான அக்கறை அதிகமா, அல்லது, ‘நான் சேர்த்ததை இன்னொருத்தர் எப்படி தன் விருப்பப்படி செலவழிக்கலாம்’ என்கிற பொருள்வெறி அதிகமா?

உலகின் புகழ்பெற்ற பணக்காரர்களுள் ஒருவர் வாரன் பஃபட். தலைசிறந்த முதலீட்டாளர்களுள் முன்னோடி. ஷேர் மார்க்கெட் சிங்கம். அவரின் சொத்துமதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர். அதில் தன் பிள்ளைகளுக்கு என இவர் பிரித்துக்கொடுத்தது ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான சொத்துகள்தான். எஞ்சிய அனைத்தையும் தர்ம காரியங்களுக்கு என எழுதிவைத்துவிட்ட அவர், அதில் ஒருபகுதியை அதற்காகச் செலவிடவும் தொடங்கிவிட்டார். அவர் உலகம் முழுவதுமுள்ள பணக்காரப் பெற்றோர்களுக்குச் சொல்லும் அறிவுரை ஒன்றுதான். ‘உங்கள் பிள்ளைகள் என்ன செய்ய ஆசைப்பட்டாலும் அதைச் செய்யுமளவிற்கு அவர்களுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் அவர்கள் எதுவுமே செய்யத் தேவையில்லை என்கிற அளவுக்குப் பணத்தை விட்டுச் சென்றுவிடாதீர்கள்’ என்பதுதான் அது.

இப்படி ஒரு கருத்தை நம்மூரில் சொன்னால், ‘அதெல்லாம் சரிதான். வெளிநாட்டில் வாரன் சொல்வதுபோல இருப்பது எளிது. அங்கே கல்வி, மருத்துவ வசதிகள் போன்றவை தரமாக இருக்கும். முதியவர்களுக்கு உதவித்தொகை, காப்பீடு, தனிவீடு போன்றவற்றை எல்லாம் அரசாங்கமே பார்த்துக்கொள்ளும். அதனால் அவர்கள் எதிர்காலம் பற்றிய கவலையின்றி தான தர்மங்கள் செய்யலாம். ஆனால் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் அரசால் இப்படியெல்லாம் எல்லாருக்கும் செய்துதர முடியாதே. போக, இங்கே கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கு எல்லாம் லட்சக்கணக்கில் செலவு செய்யவேண்டியிருக்கிறது. சம்பாதிப்பதே இதற்கெல்லாம் போதவில்லை என்கிற நிலையில் தர்மம் செய்ய எப்படி மனது வரும்?’ எனச் சிலர் எதிர்க்கருத்து சொல்வார்கள்.

இந்தப் பிரச்னையை ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் போதாது. இதன் பிற பரிமாணங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள் பல இதில் இருக்கின்றன. ஆனால், ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளைச் சேர்ந்தவர்களே, ‘பணம் பணத்தோடு மட்டுமே சேர்ந்துகொண்டிருக்கிறது. Rich get richer’ என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்தான். இந்தக் கொரோனாப் பெருந்தொற்று காலத்திலும் அதுதானே நடந்தது!

ஈகை நம் மரபில் இருக்கிறது. மரபணுவில் இருக்கிறது என்றுகூடச் சொல்லலாம். ‘இறைக்க இறைக்கத்தான் சுரக்கும். கொடுக்கக் கொடுக்கத்தான் கிடைக்கும்’ என்பதன்படி வாழ்ந்தவர்களின் வழிவந்தவர்கள் நாம். பறம்புமலையை ஆண்ட வேள்பாரி, கொல்லியை ஆண்ட வல்வில் ஓரி தொடங்கி தலையேழு வள்ளல், கடையேழு வள்ளல் பெருமக்களைக் கொண்டாடுபவர்கள் நாம். விருந்தோம்பலின் மகிமையைப் பேசும் இலக்கியங்களை நம் பெருமைகளாகப் போற்றுபவர்கள் நாம். இத்தனை இருந்தாலும் கொடுப்பதால் கிடைக்கும் இன்பத்தைப் பற்றி அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய சமூகமும் நாம்தான்.

இந்தத் தருணத்தில் நாம் பலமுறை கேட்ட அதே கதையைத்தான் இன்னொரு தடவை சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு மகாபாரதக் கதை.

பாண்டவர்களும் கெளரவர்களும் போருக்குத் தயாராகிக்கொண்டிருந்த சமயம். யாகம் செய்தால் போரில் வெற்றி கிட்டும் என நம்பிய தருமர் ஒரு மாபெரும் யாகத்தை நடத்தினார். ஆயிரக்கணக்கான மக்களுக்கு தான தர்மங்கள் செய்யப்பட்டன. அப்போது அங்கே வந்த கீரி ஒன்று இதையெல்லாம் பார்த்துவிட்டு மண்ணில் விழுந்து புரண்டது. எழுந்து தன் உடலை ஏமாற்றத்தோடு பார்த்துவிட்டு எதிர்த்திசையில் ஓடியது. கொஞ்சநேரம் கழித்துத் திரும்பவந்து அதேபோல விழுந்து புரண்டு எழுந்து பார்த்துவிட்டு ஓடியது. இப்படியே சிலமுறை அந்தக் கீரி செய்துகொண்டிருக்க, அதைப் பார்த்த தருமன் அதனிடம் ‘நீ எதற்காக திரும்பத் திரும்ப இப்படிச் செய்துகொண்டிருக்கிறாய்?’ எனக் கேட்டார்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 32

தொலைதூரத்து கிராமம் ஒன்றிலிருந்து வருவதாகச் சொன்ன கீரிப்பிள்ளை, ‘நான் வசித்துவந்த அந்த ஊரில் ஒரு ஏழை விவசாயக் குடும்பம் வசித்துவந்தது. வறட்சியால் வறுமையில் உழன்ற அந்தக் குடும்பத்திற்கு நெடுநாள்கள் கழித்து கொஞ்சம் தானியங்கள் உண்ணக் கிடைத்தன. பசியால் உயிர் ஆவியாய் வெளியேறுவதைத் தடுக்க அந்தக் குடும்பம் அதை உண்ண அமர்ந்தபோது அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்தார் ஒரு துறவி. ‘எனக்குப் பசிக்கிறது. சாப்பிட ஏதேனும் கிடைக்குமா?’ என அவர்களிடம் கேட்டார். தங்களிடம் இருந்ததை அந்தக் குடும்பம் கொடுக்கக் கொடுக்க அவர் ‘பசி தீரவில்லை’ எனக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் உணவு தீர்ந்துவிட்டது. ஆனாலும் அந்தக் குடும்பம் துறவியை உபசரிப்பதில் குறை வைக்கவே இல்லை.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நான், அவர்கள் வீட்டு வாசலில் அப்படியே அமர்ந்தேன். எழுந்தபோது நான் உட்கார்ந்த இடம் முழுக்க தங்கமாகி என் ஒருபக்க உடலிலும் ஒட்டிக்கொண்டிருந்தது. ‘இது அந்தக் குடும்பத்தின் கால்பட்ட மண். அவர்கள் செய்த தர்மத்தால் அவர்கள் பாதம்பட்ட இடம் தங்கமாகிறது’ என்றார் அந்தத் துறவி. அன்றிலிருந்து நானும் அதேபோல வேறு யாரும் தான தர்மம் செய்கிறார்களா, அவர்கள் கால் பட்ட இடம் தங்கமாகிறதா எனத் தேடித் திரிகிறேன். இங்கேயும் அப்படித்தான் வந்தேன். ஆனால், அந்தக் குடும்பம் செய்த தானத்தின் மகத்துவம் இந்த தானத்தில் இல்லை. அதனால் மண்ணும் தங்கமாகவில்லைபோல’ என்றது கீரிப்பிள்ளை.

இதைக்கேட்ட தருமருக்கு, ‘தானொரு தலைசிறந்த வள்ளல்’ என்கிற பிம்பம் சுக்குநூறாக உடைந்தது. அவரின் அகந்தை அழிந்தது. தருமர் செய்த தானத்துக்கே இவ்வளவுதான் மதிப்பென்றால், ஆயிரம் ரூபாய்க்குச் செய்த தானத்தை இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்து விளம்பரம் செய்பவர்களையெல்லாம் என்ன கணக்கில் எடுத்துக்கொள்ள? மெய் தானத்திற்கான பலனோ மகிழ்ச்சியோ இப்படியான மனிதர்களுக்கு எந்தக்காலத்திலும் கிடைக்கப்போவதில்லை.