
- சுவாமி சுகபோதானந்தா
”என் காலம் முடிந்துவிட்டது. வாழ்க்கையின் சுகதுக்கங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டேன் சுவாமி. ஆனால், என் அந்திமக்காலத்தில் அடுத்தடுத்து நடக்கும் நடப்புகள் எல்லாம் என் நிம்மதியைக் குலைக்கின்றன. கொரோனா என் பெண்ணின் கணவனைப் பறித்துவிட்டது. என் மூத்த மகன் நடத்திவந்த மளிகைக்கடைக்குள் மழை நீர் புகுந்து, மீளமுடியாத நஷ்டத்தில் எங்களை மூழ்கடித்துவிட்டது. இந்த நிலையில் டெல்லியில் சிறு வியாபாரம் செய்துகொண்டிருக்கும் என் இளைய மகனும், ‘இங்கே காற்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாசு அடைந்துவிட்டதால் ஊரடங்கு அறிவிக்கப்போகிறார்கள். பிழைப்பு போய்விடும்’ என்று புலம்புகிறான். அவன் மனைவிக்கு ஏற்கெனவே ஆஸ்துமா பிரச்னை. இப்படித் துயரங்கள் தொடர்ந்துவருகின்றன. எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டேன், நிம்மதியாகப் போய்ச் சேர்ந்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், இப்போது நிம்மதியையே இழந்துவிட்டேன்...”
என்னை போனில் அழைத்துப் பேசிய பெரியவர் மனமொடிந்து சொன்ன வார்த்தைகள் இவை. இன்னொரு பக்கம், `தரித்திரம் பிடித்தவன் தலைகுளிக்கப் போனால், ஏகாதசி எதிரில் வருகிறது என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, எனக்குப் பொருந்துகிறது. நான் எதைத் தொட்டாலும் தோல்வியில் முடிகிறது’ என்கிற ரீதியில் என்னைச் சந்தித்துப் புலம்புகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

இப்படிப்பட்ட மனநிலையில் வருகிறவர்களுக்கு நான் பரிந்துரைப்பது ஒரே ஒரு பிரார்த்தனையைத்தான்.
‘`இறைவா, என்னால் மாற்ற முடியாத விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவத்தை எனக்குக் கொடு. என்னால் மாற்றக்கூடிய விஷயங்களை மாற்றுவதற்கான வல்லமையை எனக்குக் கொடு. கடைசியாக, `என்னால் மாற்ற முடிந்தது எது, மாற்ற முடியாதது எது’ என்று பகுத்தறிந்து புரிந்துகொள்ளும் ஆற்றலை எனக்குக் கொடு!’’
இந்தப் பிரார்த்தனைதான் இப்போது எல்லோருடைய தேவையும். நம்மால் உலகத்தில் எல்லா விஷயங்களையும் மாற்றிவிட முடியாது. ஆனால், எதையுமே மாற்றமுடியாது என்று விரக்தியிலும் மூழ்கிவிடக்கூடாது. எதார்த்தத்தைப் புரிந்துகொள்வதும் நம்பிக்கையுடன் எதிர்கொள்வதுமே வாழ்க்கை.
அறிந்ததிலிருந்து அறியாததை அறிந்துகொள்ள உதவுவதே கற்றல். இந்தக் கற்றலுக்கு ஆதாரம் எது? நம்மில் பலரும் அறிந்த ஒரு பழங்கதையை இங்கே நினைவுபடுத்துகிறேன்.

ஒருநாள், குடியானவன் ஒருவன் வைத்திருந்த ஒரு குதிரை அவனை விட்டு ஓடிவிட்டது. ‘`ஐயோ பாவம். இந்த ஒரே ஒரு குதிரையை வைத்துக் கொண்டுதானே இவ்வளவு காலம் நீங்கள் உங்கள் விளைநிலத்தைப் பண்படுத்தி னீர்கள். ஏற்றம் கட்டித் தண்ணீர் பாய்ச்சினீர்கள், விளைந்த தானியங்களை மூட்டைகட்டிக் கடைவீதிக்குக் கொண்டுபோய் விற்றீர்கள். இப்போது குதிரை இல்லாமல் என்ன செய்வீர்கள்” என்று அக்கம்பக்கத்தினர் ஆறுதல் சொல்வதாக நினைத்து, குடியானவரின் வேதனையை இன்னும் அதிகப்படுத்தினார்கள். தொலைந்துபோன குதிரை ஒரு சில நாள்கள் கழித்து, காட்டிலிருந்து இரண்டு புதிய குதிரைகளோடு குடியானவன் குடிலுக்குத் திரும்பியது.
‘`உனக்கென்னப்பா, அதிர்ஷ்டக் காரன்... உனக்கு நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது. ஒன்றுக்கு மூன்றாகக் குதிரைகள் இருப்பதால் இனி உன்னால் வேலைகளை விரைந்து முடித்துவிட முடியும். குதிரைகளை வாடகைக்கு விட்டு மேலும் பணம் சம்பாதித்து அக்கம் பக்கத்தில் இருக்கும் நிலத்தை எல்லாம்கூட வாங்கிவிடுவாய்’’ என்று தங்கள் பொறாமையைப் பாராட்டுப்போலக் கூறினார்கள். குடியானவன், அப்போதும் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை.
மேலும் சில நாள்கள் ஆயின. புதிதாக வந்த ஒரு காட்டுக் குதிரைக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த குடியானவனின் மகன் அதிலிருந்து தவறி விழுந்து காலை உடைத்துக் கொண்டான். ``உனக்கு இருப்பது ஒரே மகன், அவனும் இப்போது காலை ஒடித்துக்கொண்டு மூலையில் உட்கார்ந்துவிட்டான். இந்த வயதான காலத்தில் உன்னாலும் வயலில் தீவிரமாக உழைக்க முடியாது. எல்லாம் உன் கெட்ட காலம்’’ என்று அதே அக்கம்பக்கத்தினர் கூறிவிட்டுச் சென்றார்கள்.
இது நடந்து ஒரு சில நாள்கள்தான் ஆகியிருக்கும். நாடு பிடிக்கும் ஆசை தலைக்கேறியிருந்த அரசன், பக்கத்து நாடுகள் மீது படையெடுப்பதற்காக, ஊரில் இருக்கும் இளைஞர்களை எல்லாம் வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்க வீடு வீடாகத் தன் சிப்பாய்களை அனுப்பினான். ஊரில் இருந்த எல்லா இளைஞர்களையும் அரசனின் சிப்பாய்கள் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். ஆனால், குடியானவனின் மகன் கால் உடைந்த நிலையில் இருந்ததால் அவனை மட்டும் விட்டுவிட்டனர். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர். ‘`உன் நல்ல நேரம், உன் மகன் மட்டும் தப்பித்தான்’’ என்று குடியானவனிடம் ஆற்றாமையோடு கூறினார்கள்.
குடியானவன் அப்போதும் அவர்களுக்கு பதில் சொல்லவில்லை. தன் கைமீறி நடக்கும் விஷயங்களை ஏற்றுக் கொண்டு வாழக் கற்றுக்கொள்ளவேண்டுமே ஒழிய, நடந்த நிகழ்வுகளுக்கெல்லாம், `நல்ல காலம்’, `கெட்ட காலம்’, `அதிர்ஷ்டம்’, ‘துரதிர்ஷ்டம்’ என்று முத்திரை குத்துவதால் எந்தப் பயனுமில்லை. இந்த முத்திரைகளை நம்பி காலமோ வாழ்க்கையோ இல்லை.
இந்த உண்மை தெரியாமல் இருப்பதுதான் மனித குலத்தின் பெரும்பாலான துயரங்களுக்குக் காரணம். இது விளக்கமாகப் புரிய வேண்டுமானால், இன்னும் ஒரு கதையைச் சொல்ல வேண்டும்.
திருமண வயதைக் கடந்து பல ஆண்டுகளாகியும் ஓர் இளைஞனுக்கு எந்த வரனும் அமையவில்லை. இந்தச் சூழ்நிலையில் தூரத்துச் சொந்தம் என்று சொல்லிக்கொண்டு வந்த ஒரு தரகர், `உன்னைப் பற்றிப் பக்கத்து ஊரில் இருக்கும் ஒருவரிடம் சொன்னேன். தன் பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்க அவர் தயாராக இருக்கிறார். கோயிலில் வைத்துப் பெண்ணைப் பார்த்துவிடுங்கள். உங்களுக்குப் பிடித்துவிட்டால் திருமணத்தை அடுத்த முகூர்த்தத்திலேயே வைத்துக்கொள்ளலாம்’’ என்றார். ஒரு நாள் அவனை ஊரின் மையப்பகுதியில் இருக்கும் கோயிலுக்குக் குடும்பத்தோடு வரச் சொல்லியிருந்தார். அவனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே குடும்பத்தினரோடு கோயிலில் ஆஜரானான். பல மணி நேரம் காத்திருந்தும் பெண் வீட்டார் வரவில்லை. அவர்களை அழைத்து வருவதாகச் சொல்லியிருந்த தரகரோ போனைக்கூட எடுக்கவில்லை. ``இந்த ஜென்மத்தில் எனக்கு சத்தியமாக கல்யாணமாகாது. நான் பிறந்த நேரம் அப்படி’’ என்று தன்னைத்தானே நொந்துகொண்ட அவன், வயிறுமுட்ட மதுவைக் குடித்துவிட்டு ரோட்டிலேயே வீழ்ந்துவிட்டான்.
சொன்ன நேரத்துக்குப் பெண் வீட்டார் கோயிலுக்கு வராதது என்பது வெறுமனே ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வுக்குத் தன் ராசிதான் காரணம் என்று இவன் முத்திரை குத்திக் கொண்டான். இது அவனது கற்பிதம். மூன்றாவதாக வயிறுமுட்டக் குடித்துவிட்டு வீதியில் விழுந்து கிடந்தது என்பது விளைவு.
‘பெண் வீட்டார் சொன்னபடி கோயிலுக்கு வராமல்போனதும் ஒரு வகையில் நல்லதுதான். எனக்கு இதைவிட நல்ல அறிவுள்ள, பொருத்தமான பெண் நிச்சயம் கிடைப்பாள்’ என்று நடந்துவிட்ட நிகழ்வுக்கு அவன் வேறு ஓர் அர்த்தத்தைக் கற்பித்திருந்தால், குடித்துவிட்டு வீதியில் விழுந்திருக்க மாட்டான்.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், நிகழ்வுகளுக்கும் விளைவுகளுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. நிகழ்வுகளுக்கு நாம் குத்தும் தவறான முத்திரைகளே நம் வாழ்வில் நிகழும் மோசமான விளைவுகளுக்குக் காரணம்!
- பழகுவோம்..

காட்டுப் பாதைகளின் வழியாகச் செல்லும் வாகனங்களில் அடிபடும் விலங்குகளைக் கணக்கிட்டால் மான்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். கணிசமானதாக இருக்கும். மற்ற காட்டு விலங்குகளின் எண்ணிக்கையைவிட மான்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாகப் பகலைவிட இரவு நேரங்களில் நடக்கும் விபத்துகளில்தான் அதிகமான மான்கள் உயிரிழக்கின்றன. என்ன காரணம்?கும்மிருட்டாக இருக்கும் காட்டுப்பாதையை மான்கள் கடக்கும்போது கார், லாரி போன்ற வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சம் அவற்றை அப்படியே உறைய வைத்துவிடும். ஒருவர் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிய நிலையில் இருந்தால் அதை ஆங்கிலத்தில் `Deer in the headlight’ என்பார்கள். அதேபோல்தான் பல மனிதர்களும் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும்போது, அதை எப்படி எதிர்கொள்வது என்று சிந்திக்காமல், ஏதேதோ காரணங்களைக் கற்பித்துக்கொள்ளத் தொடங்கிவிடுகிறார்கள்.