மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 37

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது
பிரீமியம் ஸ்டோரி
News
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது

- சுவாமி சுகபோதானந்தா

அப்படி என்னதான் பேசிக்கொள்வார்கள் மணிக்கணக்கில்?’ காதல் ஜோடிகள் போனில் பேசுவதைப் பார்க்கும் பெரும்பான்மையா னவர்களுக்கு இந்தக் கேள்வி எழும். சமயங்களில் இருபக்கமும் பேசுவதற்கு விஷயங்கள் தீர்ந்து மௌனம் மட்டுமே மிச்சமிருக்கும். ஆனாலும் அந்த ‘ம்ம்ம்’-மில் ஒளிந்திருக்கும் போதை அவர்கள் மட்டுமே கண்டடையக்கூடியதாய் இருக்கும். சாப்பிடும் நேரம், விளையாடும்போது, வேலைப்பொழுது என எப்போதும் இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டே இருக்கவேண்டியதன் அவசியம் என்ன? உண்மையில் நாம் நினைப்பதுபோல அவர்களுக்குப் பேசுபொருள் முக்கியமல்ல, ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இருக்க முயல்கிறார்கள். உடலால் பிரிந்திருந்தாலும் மனதால் இணைந்திருக்கும் எத்தனிப்பை காலங்காலமாக மனித இனம் மேற்கொண்டுதானே வந்திருக்கிறது. அந்த ‘ம்ம்ம்’ அவர்களுக்கிடையிலான மொத்த தூரத்தையும் அடைத்துவிடும் ஆக்சிஜன் வெளி.

இந்த அன்னியோன்யம், அன்பு, பரிவு இவற்றையெல்லாம் முதல் நாள் போலவே இறுதிவரை குறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி? இதற்கு ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ளுதல் மட்டும் போதாது. தன்னைப் பற்றிய மிகச் சரியான புரிதலும் ஒருவருக்கு அவசியம்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 37

‘எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கும்’ எனும் விதி அறிவியலைப் போலவே அன்பு செய்வதற்கும் பொருத்தமானது எனத் தொடக்கத்தில் தோன்றலாம். யதார்த்தத்தை மறைக்கும் இந்த இயல்பு காதலில் சகஜமானதுதான். ஆனால் நாள்கள் செல்லச் செல்ல, வித்தியாசங்கள் வேறுபாடுகளாய்ப் பெரிதாகும்போதுதான் தாங்கள் எடுத்த முடிவு குறித்துக் குழப்பத்திற்கு உள்ளாவார்கள்.

இருவரும் ஒத்த குணமுடையவர்களாக இருந்தால்... அவரவர் எல்லை எது என்பது இருவருக்குமே நன்றாகத் தெரிந்திருக்கும். அந்த எல்லையைத் தாண்டினால் என்னாகும் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். காதலைப் பொறுத்தவரை நம் இணையின் எல்லையை மதித்து நடத்தல் மிக முக்கியம்.

நீங்களும் உங்கள் இணையும் ஒரேமாதிரியான குணம் கொண்டவர்களா, அல்லது, எதிரெதிர் குணாதிசயங்களைக் கொண்டவர்களா என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஒரே குணம் கொண்டவர்கள் என்றால் ‘எல்லை’ விஷயத்தில் மிகக் கவனமாக இருங்கள். எதிரெதிர் குணாதிசயங்கள் என்றால் வித்தியாசங்கள் கருத்து வேறுபாடாக மாறிவிடாமல் பக்குவமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சில காலத்திற்கு முன்பாக வந்த ஒரு க்ரெடிட் கார்டு விளம்பரம் நினைவிலிருக்கிறதா? ‘உங்கள் குழந்தைக்கு இந்தக் க்ரெடிட் கார்டைக் கொண்டு நூறு ரூபாய்க்கு கலர் பென்சில் வாங்கமுடியும். இருநூறு ரூபாய்க்கு கலரிங் புத்தகங்கள் வாங்கமுடியும். ஏன், பத்தாயிரம் ரூபாய்க்கு ஆளுயரக் கரடி பொம்மைகூட வாங்கமுடியும். விலைமதிப்பில்லாத ஏராளமான விஷயங்கள் இவ்வாழ்க்கையில் உள்ளன. அவற்றைத் தவிர்த்து மீதி எல்லாவற்றையும் நீங்கள் இந்தக் கார்டு மூலமாக வாங்கமுடியும்’ என வாய்ஸ் ஓவரில் ஒருவர் சொல்ல, வீடியோவில் குழந்தைகள் அட்டைப்பெட்டிகளில் ஒளிந்துகொண்டும் அவற்றைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டும் விளையாடுவதாக இருக்கும் அந்த விளம்பரம். காதலில் விலைமதிக்கமுடியாத பல தருணங்கள் இருக்கின்றன. அவற்றை அனுபவிக்க நீங்கள் குழந்தை மனநிலையில் இருத்தல் அவசியம். வளர்ந்த நமக்குத்தானே இந்த வீம்பு, அகங்காரம், ஈகோ எல்லாம்..?

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 37

காதலர்களுக்குள் வரக்கூடாத மற்றொன்று ஒப்பீடு. காதல் என்றில்லை, எந்த உறவையும் இன்னொருவரின் உறவோடு ஒப்பிடுதல் நம் மன நிம்மதியைக் குலைக்கவே செய்யும். அடுத்தவர்களின் காதலோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மனம் பல நேரங்களில் தாழ்வுமனப்பான்மை கொள்ளும். அது நம் உறவைப் பற்றிய சந்தேகங்களைக் கிளறும். இறுதியாக, காதலில் சரிசெய்யவே முடியாத விரிசல் விழும். நீங்கள் ஒப்பிட்டாலும் சரி, ஒப்பிடப்பட்டாலும் சரி, பாதிப்பு என்னவோ இருவருக்குமேதான். தலைமுறை தலைமுறையாய் மனிதன் குரங்கிலிருந்து மாறிய நாள்தொட்டு ‘ஒப்பிட்டுப் பேசும்’ குணமும் நம்கூடவே பயணிப்பதால் இதை விட்டொழிப்பது மிகக் கடினம். ஆனால் அவசியம்.

ஆராய்ச்சியாளர் ஒருவர் சிறு சிறு வேலைகளைச் செய்ய இரண்டு குரங்குகளைப் பழக்கி வைத்திருந்தார். கூண்டில் இருக்கும் சிறு சிறு கற்களை எடுத்து ஆராய்ச்சியாளருக்குக் கொடுத்தால் அவர் பதிலுக்கு ஒரு வாழைப்பழத் துண்டைப் பரிசளிப்பார். ஒருநாள் முதல் குரங்கு அப்படியொரு கல்லை அவருக்கு எடுத்துக் கொடுக்க, பதிலுக்கு அதற்கு ஒரு சிறிய வாழைப்பழத் துண்டைப் பரிசாகக் கொடுத்தார். இரண்டாவது குரங்கு இப்போது ஒரு கல்லை எடுத்துக்கொடுக்க அதற்கு ஒரு பெரிய பழத்துண்டைக் கொடுத்தார். இதைப் பார்த்துக்கொண்டே இருந்தது முதல் குரங்கு. இம்முறை அது இன்னும் வேகமாக ஒரு கல்லை எடுத்துக்கொடுக்க, முன்னர் கொடுத்தது போல அதற்குச் சின்னத் துண்டே கொடுக்கப்பட்டது. கடுப்பான குரங்கு, அந்தப் பழத்தை விசிறியடித்து ஆர்ப்பாட்டம் செய்தது.

தன்னளவில் திருப்தியாக இருந்தவரை அமைதியே உருவாக இருந்த குரங்கு தன்னைப் பிறரோடு ஒப்பிடத் தொடங்கும்போது வேறொரு ஆளாக மாறிவிடுகிறது. இங்கு குரங்கு என்பது விலங்கில்லை. சும்மாவா சொன்னார்கள் மனம் ஒரு குரங்கென. அதை மட்டும் கட்டுப்படுத்திவிட்டால் ஊற்றெடுக்கும் காதலைத் தடுக்க தடுப்பணைகள் ஏதுமில்லை.

- பழகுவோம்

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 37

இன்போசிஸ் நாராயணமூர்த்தி - சுதா தம்பதியின் காதல் கதையை நம்மில் பலரும் அறிந்திருக்கக் கூடும். புனே நகரில் வேலை பார்த்தபோது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. தான் மட்டுமல்லாது தன்னோடு சேர்த்து ஏராளம் பேரை கோடீஸ்வரனாக மாற்றிய நாராயணமூர்த்தி தொடக்கக் காலத்தில் தன் காதலை வளர்த்தது ஒரு டீக்கடையில்தான். அந்தத் தேநீருக்கும் அப்போது சுதாதான் பணம் கொடுப்பாராம். இன்போசிஸைத் தொடங்கும் முயற்சியில் அவர் போட்ட முதல் முதலீடான பத்தாயிரம் ரூபாயும் சுதா அவருக்குக் கொடுத்ததுதான். நிறுவனம் தொடங்கிய ஆரம்ப நாள்களில் நாராயணமூர்த்தியோடு களத்தில் இறங்கி நின்றதும் சுதாதான். கம்பெனி அசுர வளர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. அந்த நேரத்தில் ‘ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நிர்வாகக் குழுவில் இருப்பது முறையில்லை’ என நாராயணமூர்த்தி கொள்கை முடிவெடுத்தபோது, ‘இது உங்களின் கனவு. நீங்கள் போட்ட விதையில் வளர்ந்து நிற்கும் விருட்சம். இதில் நீங்கள் இருப்பதுதான் சரி’ எனச் சொல்லிவிட்டு வெளியேறினார் சுதா.

நாராயணமூர்த்தியும் இதற்கு உடனே சரி சொல்லவில்லை. ‘நீ இரு. அதுதான் சரி. நான் வெளியேறுகிறேன்’ என்பதுதான் நாராயணமூர்த்தியின் முடிவாக இருந்தது. இந்த விட்டுக்கொடுத்தல் மனப்பான்மையும் உன்னதமான கொள்கைப்பிடிப்பும் காதல் ஜோடிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தம்பதியருக்குமே பாடம். இருவரும் மற்றவரின் வெளியை மதித்த பக்குவம். இறுதியில் அவர்கள் எடுத்தது வலி நிறைந்த முடிவுதான் என்றாலும், அது அவர்களுக்கிடையிலான காதலின் வலிமையைக் கூட்டியது என்பதுதான் உண்மை.