மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 6 - சுவாமி சுகபோதானந்தா

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G
பிரீமியம் ஸ்டோரி
News
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G

நம்பிக்கைத் தொடர்

"என்மீதும் பிள்ளைகள்மீதும் எப்போதும் அன்பாக இருக்கும் கணவர், சின்னச்சின்ன விஷயங்களுக்குக்கூட அடிக்கடி கோபப்படுவார். எரிந்தெரிந்து விழுவார்” என்று சமீபத்தில், காணொலிக் காட்சியின் மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி என்னிடம் அங்கலாய்த்துக்கொண்டார். கணவரின் கோபத்திற்கான அசல் காரணம், என்னிடம் பேசிய அந்தப் பெண்மணிக்கும் நன்றாகவே தெரியும். அவருக்கு அப்போதைய தேவை மனபாரத்தை இறக்கி வைக்க ஒரு மூன்றாவது நபர். எனவே நான்!

வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் நுழைவது எல்லோருக்குமே எளிதான விஷயம். அதுபோல கோபத்தைக் கழற்றி வைத்துவிட்டு நுழைவது சாத்தியமாவதில்லை.

அந்தப் பெண்மணியின் கணவர் தன் குடும்பத்தாரிடம் சத்தம் போட்டுப் பேசியது கோபத்தினால் அல்ல, பயத்தினால்! கொரோனாப் பெருந்தொற்றினால் தன் மாத வருமானம் பாதியாய்க் குறைந்துவிட்ட நிலையில், குடும்பத்தை எப்படி நடத்துவது என்ற பயம் அவரை முற்றிலுமாக ஆட்கொண்டிருந்தது. தன் கையறுநிலை குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்துவிட்டதே என்ற அவமானத்தைத்தான் அவர் ‘கோபம்’ என்ற திரைகொண்டு மறைக்க முயற்சி செய்திருக்கிறார். இதெல்லாம் அறிந்திருப்பதால்தான் அந்தக் குடும்பத்தலைவியும் பதிலுக்கு விமர்சனங்களை அள்ளித் தெளிக்காமல், குடும்பத்தின் நிலைமை அறிந்து தன் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் பக்கபலமாய் நின்றிருக்கிறார். அவர் காட்டிய நேசமும் பாசமும், கணவருக்கு வாழ்க்கைமீது இருந்த பயத்தை விரட்டியடித்துவிட்டதாக அந்தப் பெண்மணி கூறினார்.

கோபம் என்பது இருட்டைப் போன்றது. அதை அதட்டி உருட்டியோ, துப்பாக்கிகொண்டு மிரட்டியோ விரட்ட முடியாது. விளக்கை ஏற்றி வைத்தால் இருட்டு தானாக ஓடிவிடுவதைப்போல, நம்பிக்கை என்ற விளக்கை ஏற்றிவைத்தால், பயம் என்கிற இருள் மறைந்துவிடும். கோபத்தின் பிறப்பிடமான பயம் விலகி ஓடிவிட்டால் பின் கோபத்திற்கு மட்டும் அங்கே இடமேது?

ஒரு சில ஆப்பிரிக்க நாடுகளின் பேருந்துகளில் நடத்துநர்கள் கிடையாது. ஓட்டுநர்களே நடத்துநர் வேலையையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். ஒரு நாள் வாட்டசாட்டமான முரட்டு ஆசாமி ஒருவன் பேருந்தில் ஏறினான். அவனை டிக்கெட் எடுக்கும்படி ஓட்டுநர் சொல்ல, ‘‘நானெல்லாம் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை’’ என்று அவன் நக்கலாக பதிலளித்தான். அடுத்த நாளும் அதே ஆசாமி பஸ்ஸில் ஏறினான். டிரைவர் டிக்கெட் எடுக்கச் சொன்னபோது, அன்றும் அவன், ‘‘நானெல்லாம் டிக்கெட் எடுக்க வேண்டாம்’’ என்று அசால்ட்டாக பதில் சொன்னான். மேற்கொண்டு ஏதாவது கேட்டால் அவன் அடித்துவிடுவானோ என்ற பயத்தில் டிரைவர் அப்போது அமைதியாகிவிட்டார். அன்று மாலை வேலை முடிந்ததும் நேராக வீட்டுக்குச் செல்லாமல் அந்த முரட்டு ஆசாமி யார், அவனது பின்னணி என்ன, அவன் எப்பேர்ப்பட்ட முரடன் என்பவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு அவனைச் சமாளிக்கச் சண்டைப்பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 6 - சுவாமி சுகபோதானந்தா

மூன்று மாதங்களில் அந்த ஓட்டுநர் எல்லாச் சண்டைப்பயிற்சிகளிலும் நன்கு தேறிவிட்டார். உடலில் பலம் கூடியதால் உள்ளத்திலும் உரம் கூடியது. தன்னம்பிக்கை அதிகமானது. ‘சரி, இன்று அந்த முரட்டு ஆசாமியை ஒரு கை பார்த்துவிடுவது’ என்ற முடிவோடு பஸ்ஸை எடுத்தார். வழக்கம்போல அந்த முரட்டு ஆசாமி பஸ்ஸில் ஏறினான். இந்த முறை டிரைவர், தன் குரலை உயர்த்தி ‘‘டிக்கெட் எடு!’’ என்று அழுத்தம் திருத்தமாக உத்தரவிடும் தொனியில் கூறினார். அவனும் வழக்கம்போல, ‘‘நானெல்லாம் டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை!” என்று பதில் சொன்னான். ‘‘ஏன் எடுக்க மாட்டாய்..?’’ என்று, மூன்று மாத காலமாய் அடக்கி வைத்திருந்த கோபத்தோடு டிரைவர் அவனைப் பார்த்து எகிற, ‘‘ஏன்னா என்கிட்ட சீசன் டிக்கெட் இருக்கு!’’ என்று அவன் கூலாக பதில் சொன்னான்.

ஓட்டுநரின் மனதில் தேவையில்லாமல் முளைத்த பயம்தான் மூன்று மாத காலம் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. கோபத்தை உரம்போட்டு வளர்த்தது. எதிராளி பலசாலி என்பதால் மூன்று மாத காலம் அந்த ஓட்டுநர் மனதிற்குள்ளேயே புழுங்கிக்கொண்டு இருந்திருந்திருக்கிறார். இவரது கோபம் அந்த முரட்டு ஆசாமியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. பாதிக்கப்பட்டதெல்லாம் டிரைவர் மட்டும்தான்! அந்த முரட்டு ஆசாமி பஸ்ஸில் ஏறிய முதல் நாளே டிரைவருக்கு இப்போது இருக்கும் அளவிற்கு மனதைரியமும் தன்னம்பிக்கையும் இருந்திருந்தால்... குழப்பமே ஏற்பட்டிருக்காது. ‘சரி, அவர் கோபப்பட்ட தால்தானே புதிதாகச் சில கலைகளைக் கற்றுக்கொண்டார்’ என நீங்கள் வாதிடலாம். கோபத்தால் பயக்கும் நன்மைகள் அரிதாகவே நிகழும். பயம் கலந்த கோபம் என்றும் நன்மை தராது.

புதிதாக பைக் அல்லது கார் ஓட்டுகிறவர்களை கவனித்துப் பாருங்களேன்... சாலையில் போகும்போது, அவர்கள் தொடர்ந்து சத்தமாக ஹாரன் அடித்துக்கொண்டே இருப்பார்கள். குறுக்கே வருகிறவர்கள்மீது அவர்களுக்கு இருக்கும் கோபமல்ல காரணம். யார்மீதாவது மோதிவிட்டால் என்னாகுமோ என்ற பயம்தான் காரணம்.

பயம் அழுகையாகவோ கண்ணீராகவோ வெளிப்பட்டால்கூடப் பரவாயில்லை. காரணம், அழுகையும் கண்ணீரும் மனதில் இருக்கும் குழப்பங்களை விலக்கித் தெளிவைத் தந்துவிடும். மனதை அழுத்தும் விஷயங்களை அழுது தீர்த்து வெளியேற்றிவிடுவது நல்லது என்றுதான் உளவியல் நிபுணர்களும் சொல்கிறார்கள். ஆனால், கோபமோ, ஏற்கெனவே இருக்கின்ற பிரச்னையை இரட்டிப்பாக்கக்கூடியது!

‘கோபமே படக்கூடாதா? துறவி மாதிரி வாழ வேண்டுமா?’ என நீங்கள் கேட்பது புரிகிறது. Aggressive-வாக இருப்பது என்பது வேறு. Assertive-வாக இருப்பது வேறு. நான் என் மாணவர்களை Assertive-வாக இருக்காதீர்கள் என்று ஒரு நாளும் சொல்ல மாட்டேன். நம் உரிமைகளைத் தற்காத்துக்கொள்ள, சொல்ல வேண்டிய கருத்தை, குரலை உயர்த்திக்கூடச் சொல்லலாம். தப்பேயில்லை. ஜனநாயகத்திற்கு இது மிக அவசியமான தேவையும்கூட! ஆனால், நம் குரலை கண்ட்ரோல் செய்யும் விசையை நாம் ஒருபோதும் அடுத்தவரிடமோ அல்லது நம் கோபத்திடமோ கொடுத்துவிடக்கூடாது!

கோபம் ஒரு யுக்தி. ஒரு சிறந்த ஆயுதம். ஆயுதங்களின் இயல்பே எதிரில் இருப்பவர்களோடு நம்மையும் சேர்த்து சில சமயம் பாதிப்புக்குள்ளாக்குவதுதான். ‘எந்த நேரத்தில் கோபத்தைக் காட்ட வேண்டும். எந்த அளவு காட்ட வேண்டும். யாரிடம் காட்ட வேண்டும்’ என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டுமே ஒழிய, இந்த ஆயுதத்திடம் ஒப்படைத்துவிடக்கூடாது.

போக்குவரத்து அவ்வளவாக இல்லாத ஒரு கிராமத்துச் சாலையில் ஒரு விவசாயி தன் கரும்பு டிராக்டரை நிறுத்திவிட்டு, எதிரே வந்த பைக் ஆசாமியிடம் குசலம் விசாரித்துக்கொண்டிருந்தார். கரும்பு டிராக்டருக்குப் பின்னால் வந்து நின்ற கார் டிரைவர், டிராக்டரை அதன் ஓட்டுநர் நகர்த்திவிடுவார் என்று சில நொடிகள் அமைதியாகக் காத்திருந்து பார்த்தார். ஆனால், விவசாயியோ தொடர்ந்து உரையாடலிலேயே கவனம் செலுத்தியதால் எரிச்சலடைந்த கார் டிரைவர் லேசாக கார் இன்ஜினை உரும விட்டார். அப்போதும் விவசாயி மசியவில்லை. அதனால் மேலும் சத்தமாக கார் டிரைவர் இன்ஜினை உருமவிட்டார். ம்ஹும். இப்போதும் டிராக்டர் டிரைவர் கண்டுகொள்ளவில்லை. அதனால் கோபமடைந்த கார் டிரைவர், இந்த முறை கார் இன்ஜினை அதன் முழு பலத்தில் உருமவிட்டார். நன்றாக யோசித்துப் பாருங்கள். தனக்கு முன்னால் இருக்கும் டிராக்டரை ‘விலகி வழிவிடு’ என்று சொல்ல, கார் டிரைவர் பயன்படுத்த வேண்டியது ஹாரனையா, இன்ஜினையா?

ஒரு விஷயத்தை ஆணித்தரமாகச் சொல்ல வேண்டிய நிர்பந்தம் எழுந்தால், ஹாரன் அடிப்பதைப் போல அளவோடு கோபத்தைக் காட்டினாலே போதும். அதைவிடுத்து இன்ஜினை உருமவிட்டால் நமது இன்ஜினான இதயத்துக்கு நல்லதில்லை.

- பழகுவோம்...

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 6 - சுவாமி சுகபோதானந்தா

கொடுந்தொற்றுக்கும், கல்லூரிகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். கல்லூரியில் பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டுத் தேர்வு வைப்பார்கள். ஆனால், இந்தப் பெருந்தொற்றோ தேர்வு வைத்துவிட்டுத்தான் பாடம் சொல்லிக்கொடுக்கிறது. படிப்பறிவைவிடப் பட்டறிவுதான் எளிதில் புரியும், மறக்கவே மறக்காது என்றாலும், கொடுந்தொற்று சொல்லிக்கொடுக்கும் பாடங்கள் இன்னும்கூடப் பலருக்குப் புரியாமல் இருக்கிறது.

நிரம்பிவழியும் மருத்துவமனைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு, அக்கம் பக்கத்தில் நடக்கும் உயிரிழப்புகள் எனப் பதைபதைக்க வைக்கும் காட்சிகளைப் பார்த்தபிறகும்கூட, பலர் முகக்கவசம்கூட அணியாமல், தனிமனித இடைவெளி என்றால் என்னவென்றே தெரியாமல், வீதிகளில் தேவையில்லாமல் சுற்றுவதைப் பார்க்கும்போது, இவர்களெல்லாம் தங்கள் உயிரையும் மதிக்காமல் பிறர் உயிரையும் ‘Taken for Granted’ என எடுத்துக்கொள்கிறார்களோ எனத் தோன்றுகிறது.

ரசாயன மாற்றத்தால் பூமியில் உள்ள சின்னஞ்சிறு ஜீவன்களெல்லாம் பிரமாண்ட சைஸுக்கு மாறி மனிதர்களைக் கொல்கின்றன. உயிர் தப்பிய ஒரு சிலர் மட்டும் இந்த வினோத உயிரினங்களுக்கு பயந்து பல ஆண்டுக்காலம் பதுங்கு குழியில் எப்படி வாழ்கிறார்கள் என்பதைச் சொல்லும் கற்பனைக் கதைதான் ‘Love and Monsters’ என்ற ஆங்கிலப் படம்.

இந்தப் படத்தைப் பார்த்தபோது ஒரு சிந்தனை எழுந்தது. வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு சிங்கம் தப்பித்து ஊருக்குள் புகுந்துவிட்டது என்றால், வீதிகளில் யாராவது நடமாடுவார்களா? எல்லோரும் கதவுகளை அடைத்துக்கொண்டு வீட்டிலே முடங்கிவிடுவார்கள்தானே! சிங்கத்தைவிடவும் கொரோனாக் கிருமி எவ்வளவு கொடியது? ஒன்று, பத்து, நூறு என்று அது பெருகிக்கொண்டே போகிறது. கொடும்பசி கொண்ட சிங்கம், ஒரு நாளைக்கு ஒருவரைக் கொல்வதே அதிகம். ஆனால், கொரோனா ஒரு நாளைக்கு நான்கு லட்சம் பேரைத் தாக்குகிறது. இருந்தபோதும் நம்மில் பலரும் சிங்கத்துக்கு அஞ்சுவதைப்போல கொரோனாவுக்கு அஞ்சுவதில்லை.

இவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.நீங்கள் வெளியே போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், ‘குடும்பத்தில் அத்தனை பேரின் உயிரும் நம் பாதுகாப்பில் இருக்கிறது’ என்ற விழிப்போடும் எச்சரிக்கை உணர்வோடும் வெளியே சென்று திரும்புங்கள்.

புத்தருக்கு ஏராளமான பெயர்கள் உண்டு. அதில் முக்கியமானது தடாகத். இந்த வார்த்தைக்கும் ஏராளமான அர்த்தங்கள் உண்டு. அதில் முக்கியமான அர்த்தம், ‘விழிப்புணர்வு.’ எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளிலோ அல்லது கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகளிலோ, கரைந்துவிடாமல் இந்தக் கணத்தைப் பற்றிய விழிப்புணர்வோடு இருத்தல். வேறு பெயர் கொண்டு செல்ல வேண்டுமானால், ‘தியானம்!’ கண்களை மூடிக்கொண்டு செய்வது மட்டும் தியானம் கிடையாது. 200 கி.மீ வேகத்தில் பந்தய மைதானத்தில் ரேஸ் ஓட்டுவதும்கூட ஒரு வகையில் தியானம்தான்.

விழிப்போடு இருப்பவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றிபெறுவார்கள். அத்தகைய பயிற்சிக்காகக் கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பமாக இந்த சவாலான காலகட்டத்தை நாம் ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?