கண்களை மெல்ல திறந்து திவ்யாவைப் பார்த்தான் மார்க்ஸ்... கண் முன்னால் திவ்யா இருந்தாள்.
முன்பின் தெரியாத ஒரு நகரத்தில் அறிமுகமே இல்லாத ஒருவன் அறையில் தான் அமர்ந்திருக்கிறோம் என்பதை நம்ப அவளுக்கே சிரமமாக இருந்தது. அவளுக்கு எதிரே இருந்த சுவரில் தொங்கிக் கொண்டிருந்த புகைப்படத்தில் பாப்மார்லி அவளைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது.
உள்ளே மார்க்ஸ் ஏதோ பாத்திரங்களை உருட்டும் ஓசை கேட்டது. அந்த அறை புத்தகங்களாலும் அவளது அழகாலும் நிரம்பியிருந்தது. இரண்டு கைகளில் டீ கோப்பைகளுடன் சமையலறையில் இருந்து வந்தவன் ஒரு கோப்பையை அவளிடம் நீட்டினான்.
திவ்யா தயங்க, “நான் புரோகிராம்தான் சுமாரா பண்ணுவேன். லெமன் டீ நல்லா போடுவேன்... நம்பி குடிக்கலாம்” என்றான் மார்க்ஸ்.
"என்ன கிண்டலா?" என்பது போல சிணுங்கினாள் திவ்யா.
“சும்மா ஜோக்குங்க... சொல்லக் கூடாதா?!”
“போராளிக்கு ஜோக் எல்லாம்கூட அடிக்க தெரியுதே” என்றாள் திவ்யா.
“உலகத்தின் தலை சிறந்த போராளிகள் அவ்வளவு பேருக்கும் நகைச்சுவை உணர்வு அதிகங்க... போராளிகளோட வேலை எதிராளிகளை டென்ஷன் பண்றதுதான்... அவங்க ஒருபோதும் டென்ஷனே ஆக மாட்டாங்க!”
“தெரியுது... அதான் அங்க அவ்வளவு பேரையும் டென்ஷன் பண்ணிட்டு இங்க வந்து குறட்டைவிட்டு தூங்குறீங்களே!”
மார்க்ஸ் சிரித்தபடி, “என்னால சமாளிக்க முடியாத அளவுக்கு பிரச்னை வரும்போது டக்குன்னு படுத்து தூங்கிடுவேன். முழிக்கிறப்ப நமக்கும் ஒரு சின்ன தெளிவு வரும். பிரச்னையும் கொஞ்சம் பழசா தெரியும். அப்ப அதை ஈஸியா டீல் பண்ணிரலாம்... இதுதான் நம்ம டெக்னிக்...” என்றான் மார்க்ஸ் சிரித்தபடியே!
திவ்யா அவன் மனநிலையை முழுமையாக அறியமுடியாமல் அவனையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்ன தேடி நீங்க வீட்டுக்கே வருவீங்கன்னுலாம் சத்தியமா நான் நினைக்கவே இல்லங்க... ஏங்க இப்படி எல்லாம் பண்றீங்க?” என கேஷுவலாகவேப் பேசினான் மார்க்ஸ்.
“போனை ஆஃப் பண்ணி வெச்சா வேற என்ன பண்றது?”
“யாரையாச்சும் அனுப்பி வாடான்னா வரப் போறேன்.”
“யாரு... நீங்க? நான் வாடான்னதும் வருவீங்க” எனக் கிண்டலடித்தாள் திவ்யா.
“அப்ப வந்திருக்க மாட்டேன்தான்... ஆனா இனி வருவேன்!” புன்னகைத்தான் மார்க்ஸ்.
'இவன் என்ன சொல்லவருகிறான்' என்பதுபோல மார்க்ஸையே பார்த்தாள் திவ்யா.
“என்ன நீங்க எப்படி வேணா டீல் பண்ணியிருக்கலாம்... ஆனா எந்த ஈகோவும் இல்லாமல் என்னைப் பார்க்க வந்திருக்கீங்க... எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல... இறங்கி வர்றவன்தாங்க உண்மையில மேல போறான்!”

மார்க்ஸை நம்புவதா இல்லையா எனப் புரியாமல் பார்த்தாள் திவ்யா. மார்க்ஸைப் பொறுத்தவரை எதிராளி ஒரு படி ஏறினால் அவன் பத்து படி ஏறி விஸ்வரூபம் எடுத்து நிற்பான். அதுவே எதிராளி ஒருபடி இறங்கிப் போனால் அவன் பத்து படி கீழே போய் உயிரையும் தருவான்.
“நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க” என்று நிஜமான அக்கறையுடன் கேட்டான் மார்க்ஸ்.
“நான் உன்னைத்தேடி வந்ததுக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கு... அது மேனன் சார்” என்றாள் திவ்யா.
மார்க்ஸ் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தான்.
“அவர் மனசு கஷ்டப்படுற மாதிரி என்னால நடந்துக்க முடியாது. அவர் வார்த்தையை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன். இன்னைக்கு நான் இந்த இடத்துல இருக்கிறேன்னா அதுக்கு அவர்தான் காரணம். அவருக்கு உன்னைப் பிடிச்சிருக்கு... அவர் உன்னை நம்புறார்... நீ கிளம்பி ஆபிஸ் வா... மேனன் சார் என்ன சொல்றாருன்னு கேட்கலாம்... அவர் என்ன சொல்றாரோ அதுதான் ஃபைனல். அதை நான் அப்படியே ஏத்துகிறேன்” என்றாள் திவ்யா
மார்க்ஸுக்கு அவள் மேல் முதன் முறையாக மரியாதை வந்தது. அவளது அழகான முகம் ஒரு கணம் மறைந்து அவளது அழகான மனம் மார்க்ஸின் மனதைத் தொட்டது.
கார்ப்பரேட் உலகின் தர்மங்கள் என்பது வேறு. நண்பனாக இருந்தாலும், உனக்கு தொழில் கற்றுக் கொடுத்த குருவாக இருந்தாலும், உனக்கு உறுதியாக இருந்த உனது அணியாக இருந்தாலும்... உனது அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு குறுக்கே அவர்கள் வர நேரிடும் என்கிறபோது எதையும் யோசிக்காமல் அவர்களை போட்டுத் தள்ளிவிடு என்பதுதான் கார்ப்பரேட் கற்று கொடுக்கும் அடிப்படை பாடம்.
இந்த சதுரங்கத்தில் நாம் ஒரு காயை வெட்டாமல் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி செல்ல முடியாது. நம்முடைய இடத்துக்குப் போட்டி போடுவர்களை சமாளித்துக்கொண்டே நமக்கு மேலிருப்பவனின் இடத்திற்குப் போட்டி போடவேண்டும். சத்தமில்லாமல் இந்தப் போட்டி நடந்து கொண்டே இருக்கும்.
இதில் நன்றி, நட்பு என்கிற வார்த்தைகள் அர்த்தமற்றவைகள். ஆனால், திவ்யா மேனன் மேல் வைத்திருக்கும் மரியாதையும், நம்பிக்கையும், அன்பும், மார்க்ஸிற்கு அவளும் 'நம்ம ஆள் தான்' என்ற உணர்வை தந்தது.
“போலாம்” என ஒற்றை வார்த்தையில் சொன்னான் மார்க்ஸ்.
திவ்யா மெலிதாக புன்னகைத்தாள்...
“இப்பகூட ஒண்ணும் கெட்டு போகல... என்ன அப்படியே விட்டுட்டு போனீங்கன்னா உங்க வாழ்க்கை நிம்மதியா இருக்கும். நான் ஒரு உலக டார்ச்சர்” என்றான் மார்க்ஸ்.
திவ்யாவின் புன்னகை இன்னும் கொஞ்சம் பெரிதாகியது. “உனக்கு அவ்வளவு எல்லாம் ஒண்ணும் சீன் இல்ல. உன்னை விடப் பெரிய ரவுடிங்களை எல்லாம் நான் பார்த்திருக்கேன்... வா போலாம்!” என்றாள் திவ்யா.
மார்க்ஸ் சிரித்தான்...
“இரண்டு நிமிஷம் டிரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வந்தடுறேன்'' என உள்ளே சென்றான். இப்போது திவ்யா பாப் மார்லியை பார்த்து புன்னகைத்தாள்.
இருவரும் லிஃப்டில் இருந்து இறங்கி வர வயதான வாட்ச்மேன் எதிரில் வந்தார். “மிலிட்ரி வீட்ல லெமன் டீ இருக்கு எடுத்துக்கோ'' என உரிமையாகச் சொன்னான் மார்க்ஸ்.
“சரிப்பா'' என அவர் புன்னகையுடன் தலையாட்டினார்.
"உன் வீட்டுக்கு பூட்டே கிடையாதாமே? யார் வேணா போலாம் வரலான்னாங்க... என்ன பொதுவுடமையா?" என்று கேட்டாள் திவ்யா.
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க... தூக்கிட்டுப்போற அளவுக்கு வொர்த்தான பொருள் எதுவும் நம்ம வீட்ல கிடையாது... அந்த தைரியம்தான்!”
“எனக்கு என்னமோ நீ நடிக்கிற மாதிரியே இருக்கு!”
“கரெக்ட்டா சொன்னீங்க... எனக்கு கூட அடிக்கடி அந்த டவுட் வரும்...” என சிரித்தான் மார்க்ஸ்.
அவர்கள் பேசியபடி அவன் புல்லட் அருகே வர, “நீங்க எதுல வந்தீங்க” என்றான் மார்க்ஸ்.
“ஊபர்ல... ஏன்?”
“ஆபிஸ் கார்ல வந்திருக்கலாமே?!”
“ சண்டை போட்டது நான்... சாரி சொல்றது என் பர்சனல் விஷயம்... அதுக்கு ஏன் ஆபிஸ் கார் யூஸ் பண்ணனும்?”
“ இது நம்ம பாலிஸியைவிட பெரிய பாலிஸியா இருக்கேங்க” எனச் சிரித்தான் மார்க்ஸ்.
“வண்டிய எடு போலாம்!” என்றாள் திவ்யா.
“நீங்க?”
“ஆபிஸ்தான போற என்ன டிராப் பண்ண மாட்டியா?” என்கிற திவ்யாவின் கேள்வியை மார்க்ஸ் எதிர்பார்க்கவில்லை!
“ம்?” திவ்யா பதிலை எதிர்பார்த்து மார்க்ஸைப் பார்த்தாள்.
"போலாமே'' என்றபடி கூலிங் கிளாஸை எடுத்துப்போட்டுகொண்டு, புல்லட்டை உறுமவிட, திவ்யா பில்லியன் சீட்டில் ஸ்டைலாக அமர்ந்தாள்.
அவள் எடையற்று இருந்தாள்... ஆனால் புல்லட் கனமாக மார்க்ஸுக்குத் தெரிந்தது. அவனது தோளைப்பற்றி அவள் தன்னை அட்ஜஸ்ட் செய்து கொண்டாள். அவள் கரங்களை எடுத்த பின்னும், மார்க்ஸுக்கு அது தோளில் இருப்பது போலவே இருந்தது.
அவளது பர்ஃபியூம் மணம் அவனைத் தொட்டது. மார்க்ஸ் மூச்சை இழுத்து பிடித்தான். புல்லட்டின் கண்ணாடியை அவன் சரி செய்ய அவள் முகம் அதில் தெரிந்தது. திவ்யா போலாம் என்பதாக தலையாட்டி தனது கூலிங் கிளாஸை எடுத்து மாட்ட மார்க்ஸ் தனது கூலிங்கிளாஸை கழட்டி சட்டையில் சொருகினான்.
புல்லட் சின்ன தடதடப்புடன் நகர்ந்தது. அது மார்க்ஸுக்கு அவனது படபடப்பின் சத்தமாகத் தோன்றியது. எத்தனையோ பெண்களுடன் புல்லட்டில் போனவன்தான் என்றாலும் இது அவனுக்குப் புதியதாக தோன்றியது. காலையில் எதிரில் நின்றவள் மதியத்திற்குள் தனது புல்லட்டின் பின் இருக்கையில் அமர்ந்திருக்கிறாள். ஒன்று நடக்க வேண்டும் என காலம் முடிவு செய்துவிட்டால் அதை யாராலும் தடுக்கமுடியாது என மார்க்ஸுக்குத் தோன்றியது.
சில பயணங்கள் வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாத பயணங்களாக அமையும். மார்க்ஸுக்கு இந்தப் பயணமும் அப்படித்தான் தோன்றியது. திவ்யாவும் மார்க்ஸும் அந்தப் பயணம் முழுக்க எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவள் என்ன நினைக்கிறாள் என்பது அவனால் கணிக்க முடியவில்லை. அவனுக்கும் எந்த யோசனையும் வரவில்லை. அந்தப் பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான். 'ஒரு சுவாரஸ்யமான பயணம் என்பது எங்கு பயணிக்கிறோம் என்பதில் அல்ல... யாருடன் பயணிக்கிறோம் என்பதே' என்று எப்போதோ பார்த்த ஒரு வாட்ஸ்அப் மேசேஜ் சம்பந்தமே இல்லாமல் அவன் நினைவுக்கு வந்தது.
மார்க்ஸின் புல்லட் கண்ணன் டீக்கடையை தாண்டி தல்வார் டவருக்குள் நுழைந்தது. கண்ணனும் அவன் டீக்கடையில் டீக்குடித்துக் கொண்டிருந்த அலுவலக ஆட்கள் அனைவரும் ஒரு கணம் அவனையும் திவ்யாவையும் பார்த்து அப்படியே உறைந்து போனார்கள். கண்ணன் முகத்தில் பெரிய புன்னகை.
அவனது புல்லட் கண்ணன் டீ கடையை கடந்த அந்த 5 நொடிகள் வெகுநேரம்போல மார்க்ஸிற்குத் தோன்றியது. புல்லட்டை கொண்டு வந்து மெயின் பில்டிங்கின் முன்னால் நிறுத்தினான் மார்க்ஸ்.
“நான் வண்டியை பார்க் பண்ணிட்டு வந்துடுறேன்” என்றான் மார்க்ஸ்.
“தேங்க்ஸ்!” என்றபடி திவ்யா நகர்ந்தாள்...
புல்லட்டை நகர்த்தப்போன மார்க்ஸ், தாட்சா பில்டிங்கில் இருந்து வெளியே வருவதைப் பார்த்துவிட்டு பார்க்காதது போல நகர முயன்றான்.
“நான் பார்த்துட்டேன்” என்றாள் தாட்சா.
மார்க்ஸ் புல்லட்டை நிறுத்த தாட்சா, அருகே வந்தவள் அவன் புல்லட்டை சுற்றி தேடுவது போல நடிக்க...
“என்ன தேடுறீங்க?" என மார்க்ஸ் கேட்க...
“மார்க்ஸ் மார்க்ஸ்ன்னு இங்க ஒரு மானஸ்தன் இருந்தான்... அவனைக் காணோம்... அதான் தேடுறேன்” எனச் சொல்ல தாட்சா சிரித்தாள்.
மார்க்ஸ் போலியாக முறைக்க... “ஏண்டா என்னமோ பெரிய இவன் மாதிரி பேசிட்டு கிளம்பிப்போன... இப்ப அந்த பொண்ணை டபுள்ஸ் அடிச்சுகிட்டு திரும்பி வர்ற... வெட்கமா இல்ல உனக்கு!” என சிரித்தபடி கேட்டாள் தாட்சா.
மார்க்ஸ் ஏதோ பேச வர.... “என்ன சொல்லு... நானும் கேட்குறேன்... உன் விளக்கத்தை சொல்லுடா!”
மார்க்ஸ் தாட்சாவை கை எடுத்து கும்பிட்டான்.
“அது... அந்த பயம் இருக்கட்டும்... வண்டிய விட்டுட்டு மேல வா” என நகர்ந்தாள் தாட்சா.
அடுத்த சில நிமிடங்களில் கான்ஃபரன்ஸ் ரூமில் மேனன் முன்னால் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.

சில விஷயங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. மேனன் திவ்யாவின் அன்பில் நெகிழ்ந்து போயிருந்தார். அவரது முகத்தில் அது தெரிந்தது. கதையில் இந்தத் தீடீர் திருப்பத்தை எதிர்பாராத பிரசாத் கடும் ஏமாற்றத்திலும் மன வருத்ததிலும் இருந்தான். மேசையின் ஒரு புறம் மார்க்ஸும் மறுபுறம் திவ்யாவும் அமர்ந்திருந்தார்கள்... தாட்சா மார்க்ஸின் அருகில் அமர்ந்திருந்தாள்.
மேனன் சின்ன புன்னகையுடன் தொண்டையைச் செருமியபடி பேச துவங்கினார்.
"திவ்யாவோட கிரியேட்டிவிட்டிய நான் நிறைய சமயத்தில பார்த்து ஆச்சர்யப்பட்டு போயிருக்கேன். முதல் தடவையா அவளை ஒரு நல்ல டீம் லீடரா இன்னைக்கு நான் பார்க்குறேன். திவ்யா தேங்ஸ் அண்ட் கங்கிராட்ஸ்...''
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார்... உங்க முடிவு கரெக்டா இருக்கும்ன்னு நான் நம்புறேன் சார். நீங்க செய்யனும்னு நினைச்சதை நான் செஞ்சேன்... அவ்வளவுதான் சார்!” என்றாள் திவ்யா.
“மார்க்ஸ் நீங்களும் திவ்யாவும் சேர்ந்து வொர்க் பண்ணீங்கன்னா இந்த சேனல் அடுத்த லெவலுக்கு போகும்ன்னு நான் உறுதியா நம்புறேன்!”
“நான் வொர்க் பண்றேன் சார்!”
“குட்... பிரசாத் வேற என்ன?” என என்றார் மேனன்.
“நத்திங் சார்... அஃபிஷியலா திவ்யா புரோகிராமிங் ஹெட்டா சார்ஜ் எடுத்துக்கிறாங்கன்னு சிஸ்டம்ல எல்லோருக்கும் மெயில் அனுப்பிடலாம். மார்க்ஸ் ஒரு டீம் லீடராவும் ஏஞ்சல் ஒரு டீம் லீடாராவும் திவ்யாவுக்கு ரிப்போர்ட் பண்ணச் சொல்லலாம் சார்!” என அவன் முடிக்கும் முன்னரே “அது சரியா வராது...” என்றான் மார்க்ஸ்.
திவ்யா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஏற்கனவே புரோகிராமிங் ஹெட்டா இருக்கிற நான் திரும்பவும் டீம் லீடர்ன்னா அது என்ன கீழே இறக்குற மாதிரி... அதுக்கு ஒரு போதும் என்னால ஒத்துக்க முடியாது” என்றான் மார்க்ஸ்.
என்னதான் உன் பிரச்னை என்பது போல பார்த்தாள் திவ்யா.
“திவ்யாவோட வொர்க் பண்றேன்னு சொல்லிட்டு தான திரும்பவந்த இப்ப இப்படி சொன்னா என்ன அர்த்தம்?” என்றாள் தாட்சா.
"சேர்ந்து வேலை செய்யுறேன்னு சொன்னேன். அவங்களுக்கு கீழ வேலை செய்யுறேன்னு நான் சொல்லல... இப்ப இருக்கிற சுதந்திரமும் மரியாதையும் இல்லாம என்ன வேலை செய்ய சொன்னீங்கன்னா ரொம்ப சாரி" என்று உறுதியாக சொன்னான் மார்க்ஸ்.
திவ்யாவின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. மார்க்ஸ் மீண்டும் பழைய மார்க்ஸாக தாட்சாவுக்குத் தெரிந்தான். மேனன் முகத்திலும் புன்னகை!