சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

மெமோ - சிறுகதை

மெமோ - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
மெமோ - சிறுகதை

- அசோக்ராஜ்

சனிக்கிழமை காலை. சாலை தனது வழக்கமான பரபரப்பைத் தொலைத்திருந்தது. எந்த நேரமும் மழையாய் மாறுவேன் என்று மேகங்கள் கறுத்துக் கட்டியம் கூறிக் கொண்டிருந்தன. எப்போதும் காலையும் மாலையும் பள்ளிச் சிறுவர்கள், கல்லூரிப் பெண்கள் என்று கலகலத்துக் கிடக்கும் அந்தப் பேருந்து நிறுத்தம் அன்று அஸ்வினியையும் ஒரு நெல்லிக்காய்க் கிழவியையும் மட்டும் தன் நிழலில் நிறுத்தியிருந்தது. கூடையைக் கீழே இறக்கிவிட்டு அருகிலேயே உட்கார்ந்துவிட்ட அந்தக் கிழவி அடிக்கடி கிழக்கே திரும்பி பஸ் வருதா என்று பார்த்துவிட்டு அஸ்வினியையும் பார்த்தாள். மெலிதாகச் சிரித்தாள். ``நெல்லிக் காய் வாங்கிக்கறியா மா'' என்ற கிழவியின் கேள்வியைச் சிரிப்பால் மறுதலித்த அஸ்வினி, ஒப்புக்கு எவ்வளவு என்று விலை மட்டும் விசாரித்தாள்.

உருண்டை உருண்டையாக மோட்டா பளிங்குபோல் இருந்த நெல்லிக்காயைப் பார்த்த போது அஸ்வினிக்கு அதன் ருசி நாக்கில் துளிர்த்தது. எனினும் அவள் வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்தாள். வழக்கமாக இந்த நேரத்திற்கெல்லாம் அவள் ஆவூரைத் தாண்டியிருப்பாள். கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே பஸ் வரும் திசையில் அவசர கதியில் கண்களைச் செலுத்தினாள். பஸ்ஸின் ஹாரன் சத்தம் போலவே ஒரு லாரி ஒலியை எழுப்பி அவளையும் கிழவியையும் ஏமாற்றியது. இவளைக் கண்டாலே எரிந்துவிழும் புது மேனேஜர், தாமதமாகச் சென்றால் அன்றைக்கு முழுவதும் அதைச் சொல்லிக்காட்டியே வேலை வாங்குவார். வழக்கமாகவே மாலை ஏழு மணிக்குத்தான் விடுவார். அதுவும் என்றாவது இவள் காலையில் தாமதமாகச் சென்றுவிட்டால் அன்று எட்டு மணி ஆனாலும் இவளை வீட்டிற்கு அனுப்ப அந்த மேனேஜருக்கு உறைக்காது.

அஸ்வினி வேலை பார்க்கும் அந்த வங்கி இரண்டு ஊர்களுக்கும் நடுவில், சுற்றுப்பட்டில் ஐந்து கிராமங்களுக்கும் பொதுவான மத்திய அரசு வங்கியாக இருந்தது. நாள் கிழமைகளில் கூட்டம் அள்ளும். கிட்டத்தட்ட வருகிறவர்கள் எல்லோருமே எளிய வெள்ளந்தி மனிதர்கள். ஒரு செலான் எழுதத் தெரியாத, பணத்தை எடுக்கவோ, எண்ணவோ தெரியாத அப்பிராணிகள். `என் கையெழுத்தை நீயே போட்டுக்கம்மா... பணத்தை மட்டும் எடுத்துக் கொடுத்துடு' என்று கேட்கும் பெரியவர்களை அஸ்வினி, பரிவு கலந்த சிரிப்புடன் பார்ப்பாள்.

மெமோ - சிறுகதை

எவ்வளவு கூட்டம் வந்தாலும் சிரித்த முகம் மாறாமல் வேலை செய்வாள். வங்கிக்கு வரும் ஒவ்வொரு கிராமவாசியையும் தன் சொந்த சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சித்திபோலதான் கருதினாள் அஸ்வினி. அங்கு வருபவர்கள் பெரும்பாலும் நகை அடகு வைக்கவும், நூறு நாள் வேலை சம்பளத்தை எடுக்கவும்தான் வருவார்கள். அந்த வங்கியே ஒரு சின்ன அடகுக் கடை போல்தான் இயங்கிக்கொண்டிருந்தது. அவர்களுக்குச் சேவை செய்வதைவிட தனக்குப் பெரிய காரியம் ஏதுமில்லை என்றுதான் அஸ்வினி அந்த வங்கியில் உழைத்தாள். அவள் தேர்வெழுதி பாஸ் செய்தபோது அவளுக்கு மூன்று வங்கிகளில் வேலை கிடைத்தது. தன் ஊருக்கு அருகில் இருக்கும் இந்த வங்கியைத் தானே விரும்பிக் கேட்டு, அதிலும் இந்த ஊர்க்கிளையில் பணிக்கு அமர்த்துமாறு வேண்டிக்கொண்டு வேலைக்கு வந்தவள் அஸ்வினி. ஆனால் ஆறு மாதமாக அவள் வங்கியில் நரக வேதனை அனுபவித்தாள். எங்காவது மாற்றல் வாங்கிவிடலாமா என்று தினமும் சிந்தித்துக்கொண்டிருந்தாள். இதய பைபாஸ் செய்திருக்கும் அஸ்வினியின் அப்பாவைக் கொண்டு அவள் அந்த முடிவைத் தள்ளிப் போட்டாள். ஆனாலும் சதா தேள் போல் கொட்டும் இந்தப் புது மேனேஜரிடம் எத்தனை நாள் தாக்குப்பிடிக்க முடியும் என்று அவளுக்கு திகிலாகவே இருந்தது.

சாலையில் ஆள் நடமாட்டம் சுத்தமாக இல்லை. ஒரு `குட்டி யானை’யை நிறுத்தி நெல்லிக்காய்க் கிழவி பின்னால் ஏறிக் கொண்டாள். அஸ்வினியைப் பார்த்து அழைத்தாள். ஆனால் அந்த வண்டியில் தன்னால் ஏற முடியுமா என்ற சுய சந்தேகத்தில் அஸ்வினி தயங்கிய நொடி வண்டி கிளம்பியது. அதன் டிரைவர் இவள் தோரணைக்கு தன் வண்டியில் ஏறமாட்டாள் என்று கருதியிருக்க வேண்டும்.

ஆளரவம் இல்லாத சாலையை வெறித்தபடி நின்றுகொண்டிருந்த அஸ்வினிக்கு போனில் மேனேஜரிடம் தாமதத்திற்கு அனுமதி கேட்கலாமா என்று தோன்றியது. போனை எடுத்து அதன் திரையில் தெரிந்த தன் அப்பாவையும் அம்மாவையும் பார்த்துக் கொண்டு சிந்தனையின்றி நின்றாள். போன் செய்து அவரிடம் காலையிலேயே திட்டு வாங்குவதற்கு பதில், வாட்ஸப்பில் தெரிவித்துவிடலாம் என்று அவள் டைப் செய்ய ஆரம்பித்தாள்.

அப்போதுதான் அந்த வினோத சத்தம் கேட்டது. சாலையில் டயர் தேயும் சத்தத்துடன் ஆ என்ற அலறலும் சேர்ந்து, அடுத்த நொடி `பட்டொம்ம்ம்' என்று இடி விழுந்தது போல ஒரு சத்தம். என்ன நடந்தது என்று அஸ்வினி உணர்வதற்குச் சில விநாடிகள் பிடித்தன. கிராம உபசாலையின் வளைவில் இருந்த அந்தப் பேருந்து நிறுத்தத்தின் கிழக்கிலிருந்து வந்த ஒரு கார், எதிர் திசையில் பைக்கில் வந்த ஒருவரை மடாரென்று நேருக்கு நேராக மோதி, சற்றும் நிற்காமல் மின்னல் வேகத்தில் மறைந்திருந்தது.

அஸ்வினியின் இதயம் படீர் படீர் என்று அடித்துக்கொண்டது. அந்தக் கார் அவரை மோதியதில் பத்தடி தூரத்துக்குப் பறந்து சென்று சாலையின் எதிர் விளிம்பில் இருந்த காய்ந்த வாய்க்காலில் தலைகுப்புற விழுந்திருந்தார். விழுந்தவர் அப்படியே கிடந்தார். பைக் சாலை ஓரத்திலேயே முன் சக்கரம் உடைந்து உயிரை விட்டிருந்தது. அவர் விழுந்த கடைசி நொடியைத் தான் அஸ்வினி பார்த்திருந்தாள். என்ன செய்வது என்று அவளுக்குப் புரியவில்லை. முதன் முதலாக ஒரு விபத்தை நேரடியாகப் பார்க்கிறாள். இப்படியும் அப்படியும் சுற்றிப் பார்த்தவள், கண்ணுக்கெட்டும் தூரம் வரை யாரும் இல்லை என்பதை எண்ணி அஞ்சினாள். கைகளில் மெல்லிய நடுக்கம் இருந்தது. முகம் வியர்த்து நா வறண்டுபோயிருந்தவள், அனிச்சைச் செயலாக விழுந்து கிடந்தவரை நோக்கி வேகமாக அடியெடுத்து வைத்தாள்.

எது கால் எது கை என்று தெரியாதபடி ஓர் ஆக்டோபஸ் போன்று குழைந்து குப்புறக் கிடந்தவரின் தலையில் பலமாக அடிபட்டிருந்தது. அஸ்வினிக்கு அவரை நெருங்கும்போதே அந்த உடம்பையும் உயரத்தையும் எங்கோ பார்த்திருப்பதுபோலத் தோன்றிவிட்டது. ``சார்... சார்...'' என்றபடியே அவர் தோளைத் தொட்டு நிமிர்த்தினாள். அஸ்வினியின் இதயம் ஒரு கணம் நின்று பின் துடித்தது. அவள் நினைத்தது சரிதான். அவள் யாருக்கு வாட்ஸப்பில் மெசேஜ் அடித்துக்கொண்டிருந்தாளோ, அவள் யாரை நினைத்து இந்த ஆறு மாத காலமாகத் தீயில் நடப்பவள்போல வேதனை அடைந்துவந்தாளோ, அந்தக் கொடுமைக்கார மேனேஜர்தான் முன் மண்டை பிளந்து, வலது கால் தொங்கிப் போய், வாய்க்காலின் காய்ந்த செம்மண்ணில் ரத்தம் வழிந்தோட கிட்டத்தட்ட சாவின் விளிம்பில் கிடந்தார்.

மெமோ - சிறுகதை

பிரக்ஞை போய்க்கொண்டிருந்தவர், முழுதாக நினைவு தப்புவதற்குள் ஒரு முறை `அஸ்வினி' என்று மட்டும் சொன்னார். அதன் பின் அவரிடம் எந்த அசைவும் இல்லை. மூச்சு மட்டும் சற்று பலமாக இழுத்துக்கொண்டிருந்தது. அஸ்வினி தன் தண்ணீர் பாட்டிலைத் திறந்து முகத்தில் தெளித்துப் பார்த்தாள். சத்தம் போட்டு யாரையாவது அழைக்கலாமா என்று யோசித்தாள். ஆனால் அதில் பிரயோசனம் இல்லை என்று உணர்ந்தவள், ஆம்புலன்ஸை அழைத்தாள். சட சடவென மழை அடித்துப் பெய்ய ஆரம்பித்தது.

வளத்தூர் அரசுப் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே பெற்றோருக்கு ஒரே மகளான அஸ்வினிக்கு வாழ்க்கையில் ஒரே குறிக்கோள் தான். எப்படியாவது அரசுத் தேர்வு எழுதி, ஏதாவது அரசாங்க வேலை வாங்கிவிட வேண்டும். விவசாயக் கூலியான அப்பாவின் திராணிக்கு அவரைத் தன்னால் முடிந்த மட்டும் எந்தச் சங்கடத்திலும் ஆழ்த்திவிடக்கூடாது என்று சிறுமியாக இருந்தபோதே யோசித்திருந்தவள் அஸ்வினி. இன்ன வேலைக்குத்தான் போகவேண்டும் என்று அவளுக்கு இலக்கிருக்கவில்லை. ஆனால் பெறுவது அரசாங்க வேலையாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவள் புத்தியில் இருந்தது.

தானே படித்து, தானே தேர்வெழுதி, தானே தஞ்சாவூர் அரசுக் கல்லூரியில் கணிதம் படித்து, தானே மேற்படிப்பு படித்து, தானே வங்கி ஊழியர்களுக்கான தேர்வுகளை, எந்தப் பயிற்சிப் பட்டறைக்கும் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே மூன்று வருடம் சளைக்காமல் எழுதி, மத்திய சர்க்கார் வங்கியில் வேலை வாங்கியவள் அஸ்வினி. அந்த ஊரிலேயே வங்கிப் பணியில் சேர்ந்த முதல் பட்டதாரி, ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்தே அஸ்வினி ஒருத்திதான் இருந்தாள்.

அதுவும் தன் சொந்த ஊர்ப்பகுதியிலேயே அவள் பணியிலமர்ந்தபோது ஊரே அவளைக் கொண்டாடியது. அவளுக்காகவே அந்த வங்கியில் வளத்தூர், களத்தூர், ஆவூர்வாசிகள் கணக்குத் திறந்தார்கள். வங்கிக்கு வருகிறவர்கள், வங்கி மேலதிகாரியைப் பார்க்கமாட்டார்கள். நேராக இவள் இருக்கைக்கு வந்துவிடுவார்கள். மேலதிகாரியிடம் ``நம்ம பாப்பாதான்'' என்பார்கள். விஷம் தோய்ந்ததொரு சிரிப்பைத் தந்துவிட்டுத் தனது அறைக்குச் செல்வார் அதிகாரி. ஊர்க்காரர்களின் இந்த அணுகுமுறையா, எந்த வேலையிலும் சிறு பிசகுகூட இல்லாமல் நேர்த்தியாகச் செய்துவிடுகிற அஸ்வினியின் பாங்கா, அவரின் சீண்டல் பேச்சுகளுக்கு சற்றும் மசியாத அஸ்வினியின் நெருப்பு அம்சமா, அல்லது, இவையெல்லாமா? எது என்று தெரியாத ஏதோ ஒன்று அந்த மேனேஜருக்கு அஸ்வினியை அடியோடு வெறுக்கும்படி செய்திருந்தது.

ஆந்திராவில் இருந்து மாற்றலாகி வந்திருந்தவருக்கு, இந்த ஊரின் எந்த அம்சமும் பிடிக்கவில்லை. இந்த ஊர்ப் புழுதி, மழை, மண்சாலை, நெல்வாடை என்று எதைக் கண்டாலும் வெறுப்பை உமிழ்ந்தவர், அதன் உச்சபட்ச உருவகமாக அஸ்வினியை பாவித்தி ருந்தார். அவள் எது செய்தாலும் குற்றம் குறை சொல்வதையே வாடிக்கை யாக்கியிருந்தார்.

ஒரு நாள் வேண்டுமென்றே லாக்கர் சாவியை அஸ்வினியை வைத்துக் கொள்ளச் சொன்ன போதுதான் அந்த பூதாகர சம்பவம் வெடித்தது. அஸ்வினி தீர்மானமாக மறுத்தாள். அவளுக்கு வங்கியின் விதிமுறை நன்றாகத் தெரியும். வங்கியின் லாக்கர் சாவியை மேலதிகாரி அல்லது துணை மேலாளர் தரத்தில் இருப்பவர்கள்தான் வைத்துக்கொள்ள முடியும். அஸ்வினி போன்று கிளார்க் பணிகளில் இருப்பவர்கள் அவற்றைக் கையாள்வதே வங்கி விதிப்படி தவறு. இதை நன்றாக அறிந்த அஸ்வினி திட்டவட்டமாக மறுத்தாள். அவளுக்குத் தெரியும், அவர் தன்னை ஏதோ விதத்தில் பழிவாங்கவே இதைச் செய்கிறார் என்று. அவள் எதற்காக மறுக்கிறாள் என்பது அந்த மேனேஜருக்கும் தெரிந்தே இருந்தது. அதுவே அவருக்கு மேலும் எரிச்சலைக் கூட்டியது.

``நீ வாங்கியே ஆகணும்'' என்றவருக்கு எந்த பதிலும் சொல்லாமல் அஸ்வினி கிளம்பினாள். மறுநாள் மேலதிகாரியின் கட்டளையை மறுத்ததாகச் சொல்லி மெமோ கொடுத்துவிட்டார் மேனேஜர். வங்கியின் பிற ஊழியர்களுக்கு இது எத்தனை பெரிய அநியாயம் என்று தெரிந்தே இருந்தது. அவர்கள் எல்லோரும் அஸ்வினிக்காகப் பரிதாபப்பட்டார்களே ஒழிய வேறு எந்த விதத்திலும் அவளுக்கு உதவிட முன்வரவில்லை. மேனேஜரை ஏன் பகைத்துக்கொள்ள வேண்டும் என்ற பயம் அந்தக் கட்டடத்தை வியாபித்திருந்தது. அஸ்வினி அந்த மெமோவை ஏற்க மறுத்தாள். தான் கொடுக்கும் மெமோவை எப்படி மறுக்கமுடியும்? வாங்கியே ஆக வேண்டும் என்பதாக மேனேஜர் அஸ்வினியின் கைகளில் திணித்தார். அஸ்வினி அவர் முன் அழுதுவிடக் கூடாது என்று கைகளில் திணிக்கப்பட்டிருந்த மெமோ காகிதத்தை இறுகப் பற்றிக்கொண்டு வெளியேறினாள். எனினும் இந்தப் பாதகத்தைச் சரி செய்தே ஆக வேண்டும் என்று அவள் உள்ளம் துடித்தது. எந்தக் குற்றமும் செய்யாத வளுக்கு மெமோ என்பது ஓர் அநீதி என்று அவள் இதயம் கூவியது. வங்கி ஊழியர்களுக்கான பயிற்சிப் புத்தகத்தில் இது போன்ற அலுவலக அரசியல்களை, ஊழியர்களுக்கு நிகழும் வஞ்சனைகளை யூனியன் தீர்த்து வைக்கும் என்று அவள் படித்திருந்தது நினைவுக்கு வந்தது.

மெமோ - சிறுகதை

அஸ்வினிக்கு மனதின் ஓரத்தில் சின்ன நம்பிக்கை துளிர்விட்டது. விலாவரியாக நடந்தவை எல்லாவற்றையும் எழுதி, வங்கி யூனியனுக்குக் கடிதம் போட்டாள். அடுத்த மூன்றாவது நாள் தஞ்சாவூர் மண்டலத்தின் பொதுச் செயலாளர் உடையார்பாளையம் கிளைக்கே விஜயமாகிவிட்டார். வங்கி மேனேஜர் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதை விடவும் அஸ்வினியை வைத்துக்கொண்டே அவர் அந்த மேனேஜரை வசைபாடியதுதான் அவருக்குப் பெரிய அவமானமாகப் போய்விட்டது. அஸ்வினியின் மெமோவை வாங்கி அவர் கண் எதிரிலேயே கிழித்துப் போட்டார்.

இந்தக் கோப நாடகத்தின் இறுதி வசனமாக மண்டல பொதுச் செயலாளர், ``உன் சொந்த ஈகோவுக்கு பேங்க் பேரைக் கெடுக்காதே'' என்று சொல்லிவிட்டுச் சென்றார். இந்தச் சம்பவங்கள் முழுவதும், ஒரு பெண் ஊழியருக்கும், மேலாளருக்குமான அகந்தை வழிந்தோடும் திமிர்ப் போர் என்பதை யூனியன் நிர்வாகியும் அறிந்து வைத்திருப்பது, மேனேஜருக்குச் சொல்லில் அடங்கா அவமானக் குன்றலைக் கொடுத்திருந்தது. அவர் செல்லும் வரை வரமிளகாய் போல் சிவந்திருந்தது அவர் முகம்.

ஆனால் அதன் பிறகான நாள்கள்தான் அஸ்வினிக்கு மேலும் நரகமாக இருந்தன. திறமையும் பொறுமையும் கிளைத்த கொம்புகளின் வழியாக, தன் வெறிபிடித்த கண்களைக் குத்திக் கிழித்துவிட்ட புள்ளிமானை, ஒரு சிங்கம் சினத்துடன் பார்ப்பதுபோல்தான் அவர் அஸ்வினியைப் பார்த்தார். ‘என்றாவது ஒரு நாள் உன்னை அழவைப்பேன். உன் கொட்டத்தை அடக்குவேன்’ என்பதாக அவர் கண்கள் அவளிடம் தினமும் சொல்லிக்கொண்டே இருந்தன. எனினும் இவற்றையெல்லாம் வீட்டிலும் ஊரிலும் சொல்லாமலே சமாளித்து வந்தாள் அஸ்வினி.

இன்று அதே மேனேஜர் தன் கண் எதிரிலேயே அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸில் வலுக்கட்டாயமாக அஸ்வினியையும் ஏற்றிக் கொண்டு சென்றார்கள். ஏகப்பட்ட உயிர்காக்கும் கருவிகளுக்கு நடுவில் மழையில் நனைந்த சிவப்புப்புடவை போல் துவண்டிருந்த வங்கி மேனேஜரின் பெயரைக் கேட்டார்கள். தெரிந்தவரா என்று விசாரித்தார்கள்.

அவசர சிகிச்சைப் பிரிவு வரை அவரைக் கொண்டு சேர்த்த அஸ்வினியிடம் அவர் போன் கொடுக்கப்பட்டது. எண்களால் பூட்டியிருந்த அந்த போனை அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தன் போனில் வங்கித் துணை மேலாளருக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னாள். அவர்கள் வரும் வரை காத்திருக் கலாம் என்று நாற்காலியில் உட்கார்ந்தாள். மேனேஜரின் போன் அழைத்தது. அவர் மனைவிதான் என்பது திரையில் தெரிந்தது. விஷயத்தைப் பதற்றப்படாமல் சொன்னவள், ``கவலைப்படாதீங்க... நிச்சயம் பொழச்சுக்குவார்'' என்று தைரியம் சொல்லி போனைத் துண்டித்தாள்.

வார்டு நர்ஸிடம் சென்று போனைக் கொடுத்து விட்டு, ``அவர் மனைவி வந்துட்டிருக்காங்க... நான் கிளம்பறேன். ஆபீஸுக்கு டைம் ஆகிடுச்சு'' என்றுவிட்டு, பதிலை எதிர்பார்க்காமல் நடக்க ஆரம்பித்தாள் அஸ்வினி.