Published:Updated:

அசாத்திய கோடுகளின் காதலன்!

ஓவியர் மனோகர் தேவதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓவியர் மனோகர் தேவதாஸ்

மனோகர் தேவதாஸ் கிறிஸ்தவராக இருந்தபோதும் வாழ்நாள் முழுவதும் மதச்சார்பற்றவராகவே வாழ்ந்தார்.

மதுரையில் வளர்ந்த எனக்கு முதன்முதலில் இந்த நகரத்தின் மீதான பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது ஓவியர் மனோகர் தேவதாஸின் GREEN WELL YEARS நாவல். விடலைப்பருவ குறும்புத்தனங்களுடன் மூன்று நண்பர்களின் கதையை அதில் சொல்கிறார். அந்தக் கதையின் பின்புலத்தில் மதுரை நகரம் 1950-60களில் எப்படி இயங்கியது என்பதை அப்படியே ஆவணப்படுத்தியிருக்கிறார். மதுரை என்கிற வரலாற்று நகரத்தின் இசைவான வாழ்வு, திருவிழாக்கள், பேருந்துகளின் வருகை, ஸ்பென்சர் கடையில் விற்கும் சுருட்டுகள், சேதுபதி பள்ளி, மாசி வீதிகளும் அவற்றில் சுற்றித்திரியும் மாடுகளும் என இந்த நாவலை வாசிக்க வாசிக்க நம் கண்களில் மதுரை விரிந்தபடி இருக்கும்.

அசாத்திய கோடுகளின் காதலன்!

2008-ல் Multiple Facets of my Madurai என்கிற அவரது கோட்டோவியங்களின் பிரத்யேக தொகுப்பு வெளியானது. அது பெரும் பொக்கிஷம். அவரது கோட்டோவியங்கள், காலத்தை அப்படியே உறையவைப்பவை. யானைமலை என்றால் அதில் எது யானை வடிவில் உள்ளது, யானையின் தலை எது, முகம் எது என்று அவர் வரைந்துள்ள விளக்கப்படம் மிகத் துல்லியமாக இருக்கும். மதுரை நகரத்தின் வரைபடங்களையும் அவர் எளிமையாக வரைந்திருப்பார். ஒரு தெரு எனில் அதன் கட்டடங்கள், மரங்கள், வானம், திண்ணைகள், முதியவர்கள், குழந்தைகள், மாடு மேய்ப்பவர்கள், மாணவர்கள், பர்தா அணிந்த பெண்கள் தொடங்கி அங்கே கிடக்கும் வாழைப்பழம் வரை எல்லாமும் அதில் இடம்பெறும். காமிரா என்கிற கருவியை மனோ தோற்கடித்தார். நவீன விஞ்ஞானத்தின் பெரும் கண்டுபிடிப்பை மனிதனால் மட்டுமே முந்திச் செல்ல முடியும்.

ஒரு மனிதன் தன்னுடைய பால்ய காலம் முதல் இந்த நகரத்தை எப்படி ரசித்து ரசித்துச் சுற்றியிருந்திருக்கிறார், எப்படிக் காதலித்திருக்கிறார், அந்த நகரத்தை எப்படித் தன் கோடுகளில் சிறைபிடித்து வைத்திருக்கிறார் என்பது எனக்குப் பெரும் வியப்பாகவே இருந்தது. செல்லூர் கண்மாய், நெல் வயல்கள், குளங்கள், மேயும் வாத்துகள், யானைமலையும் அங்கே விவசாயத்திற்கு நீர் இறைப்பவரும், அலங்காநல்லூர், திருப்பரங்குன்றம் மலை, ரீகல் டாக்கீஸ், அமெரிக்கன் கல்லூரி சேப்பல், மதுரை ரயில் நிலையம், புது மண்டபம், கோரிப்பாளையம் தர்கா, மாசி வீதியில் தேர் என எதை விவரிப்பது எதை விடுவது என்று தெரியவில்லை.

அசாத்திய கோடுகளின் காதலன்!

மனோகரின் தந்தை ஹேரி மதுரை மாநகராட்சியில் மருத்துவராக இருந்தார். தன் வீட்டிலேயே அவர் ஒரு சிறிய நூலகத்தை வைத்திருந்தார். இந்த நூலகம்தான் மனோவின் உலகத்தை விசாலப்படுத்தியது. காட்டுயிர்கள், பருவங்கள், நகரங்கள் என இந்த உலகத்தின் எல்லாமும் அவருக்கு அறிமுகமாயின. மனோ, பள்ளிப்பருவம் முழுவதும் தனது காலில் சக்கரம் கட்டிக்கொண்டு மதுரையின் கல்பாவிய சந்துகள், குளங்கள், கண்மாய்கள், மலைகள் என அலைந்திருக்கிறார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அறிவியல் பயின்று கெமிஸ்டாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி ஒரு விஞ்ஞானியாகப் பரிணமித்தார் மனோகர். அறிவியல் பின்புலம் கொண்டவர் என்பதால் எதையும் கற்கும் ஆர்வம் அவரிடத்தில் இயல்பாகவே காணப்பட்டது. வாழ்க்கை அவருக்கு எண்ணற்ற அதிர்ச்சிகளை, சோதனைகளைக் கொடுத்த போதும், அவற்றைத் தன் புன்னகையால் வென்றார்.

அசாத்திய கோடுகளின் காதலன்!

1972-ல் குடும்பத்துடன் அனைவரும் காரில் செல்கிறார்கள். ஒரு லாரி ஓட்டுநரின் பொறுப்பற்ற செயலால் கார் விபத்துக்குள்ளாகிறது. மனோவின் மனைவி மகிமாவுக்கு தண்டுவடத்தில் பெரும் அடிவிழுகிறது. அது முதல் அவரது கழுத்திற்குக் கீழான உடல் செயலிழக்கிறது. இருப்பினும் மகிமாவின் சிரிப்பில் இம்மியும் குறையவில்லை, அவர் மனோகரை இயக்குகிறார். சக்கர நாற்காலியில் அமர்ந்து அவரைத் தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் மனோ அழைத்துச் செல்கிறார்.

அடுத்த அதிர்ச்சியாக மனோவுக்கு ரெட்டினா பிக்மன்டோசா என்ற பிரச்னையால் பார்வைத் திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது. குறையும் கண்பார்வையுடன்தான் அவர் தனது ஆகச்சிறந்த ஓவியங்களை வரைந்தார். அரவிந்த் கண் மருத்துவமனையும் சங்கர நேத்ராலயாவும் அவருக்கு எப்படியேனும் பார்வை கொடுத்துவிட அல்லது பார்வைக்கு ஒத்திசைவான கருவிகளைக் கொடுத்திட முனைந்தார்கள். இருப்பினும் தனது 83-வது வயதில் முற்றாகப் பார்வையை இழந்தார்.

அசாத்திய கோடுகளின் காதலன்!

மனோகர் தேவதாஸ் கிறிஸ்தவராக இருந்தபோதும் வாழ்நாள் முழுவதும் மதச்சார்பற்றவராகவே வாழ்ந்தார். கோயில் கோபுரங்களை, மசூதிகளை, தேவாலயங்களை சமமாகத் தன் கோட்டோவியங்களில் சிறைபிடித்தார். சிற்பிகள், கட்டட வல்லுநர்களுக்குத் தன் கோடுகளால் சவால்விட்டார்.

அவருடைய சாந்தோம் இல்லத்தில் அடிக்கடி அவரைச் சந்திப்பேன். ஒரு குழந்தையின் குதூகலத்தை அவரைச் சந்திக்கும்போதும், அவருடன் தொலைபேசியில் உரையாடும் போதும் உணர்ந்திருக்கிறேன். டிசம்பர் 7 அன்று அதிகாலை அவர் காலமானார். இறக்கும் தறுவாயிலும்கூட நம்பிக்கையுடன்தான் இருந்தார். ‘நான் என் முழுமையான வாழ்வை வாழ்ந்திருக்கிறேன், யாரும் வருத்தப்பட வேண்டாம்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஒரு கலைஞன் தான் இந்தச் சமூகத்திற்கு எல்லையற்ற ஆற்றலை வழங்குகிறான், மகிழ்ச்சியை வழங்குகிறான், வரும் தலைமுறைகளுக்கான இசைவழியை உருவாக்குகிறான். மனோகர் தேவதாஸ் நம் காலத்தின் ஒரு அசாத்தியமான முன்னோடி.