Published:Updated:

50 சென்ட்... 70,000 ரூபாய்... வாரிக்கொடுக்கும் வாழை...

50 சென்ட்... 70,000 ரூபாய்... வாரிக்கொடுக்கும் வாழை...
பிரீமியம் ஸ்டோரி
50 சென்ட்... 70,000 ரூபாய்... வாரிக்கொடுக்கும் வாழை...

முயற்சி

50 சென்ட்... 70,000 ரூபாய்... வாரிக்கொடுக்கும் வாழை...

முயற்சி

Published:Updated:
50 சென்ட்... 70,000 ரூபாய்... வாரிக்கொடுக்கும் வாழை...
பிரீமியம் ஸ்டோரி
50 சென்ட்... 70,000 ரூபாய்... வாரிக்கொடுக்கும் வாழை...

“ஆத்ம திருப்தியைத் தேடி ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு விஷயத்தைக் கடைப்பிடிக்கிறாங்க. என்னைப் பொறுத்த வரைக்கும் இயற்கை விவசாயம்தான் ஆத்ம திருப்தி தர்ற விஷயம். விவசாயம் செய்ய ஆரம்பிச்ச பிறகு மனசெல்லாம் மகிழ்ச்சி நிரம்பியிருக்கு” என்று சந்தோஷமாகச் சொல்கிறார், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி. சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட இளைஞரான பாரதி, ஊடகத்துறையில் பணியாற்றியவர். தற்போது கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் இயற்கை விவசாயிகள் பட்டியலில் இணைந்திருக்கிறார்.  

50 சென்ட்... 70,000 ரூபாய்... வாரிக்கொடுக்கும் வாழை...

திண்டுக்கல் மாவட்டம், தர்மத்துப்பட்டி கோம்பை எனும் கிராமத்தில் இருக்கிறது, பாரதியின் தோட்டம். தர்மத்துப் பட்டியிலிருந்து பாச்சலூர் செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் பயணித்தால் வனத்துறையின் சோதனைச் சாவடி வருகிறது. அங்கிருந்து இடதுபுறம் திரும்பிப் புதுக்குளம் அணைக்குச் செல்லும் பாதையில் பயணித்தால், அணையை ஒட்டி இருக்கிறது பாரதியின் தோட்டம். இரண்டு பக்கங்களிலும் மலைகள், ஒரு பக்கம் அணை, மற்றொரு பக்கம் கால்வாய் என ரம்மியமாக இருக்கிறது, அந்தப்பகுதி.

“எனக்குச் சொந்த ஊரு தர்மத்துப்பட்டி. சின்ன வயசுல இந்தப் பக்கத்திலெல்லாம் சுத்தி அலைஞ்சுருக்கேன். எனக்கு விவசாயத்து மேல ரொம்ப ஆர்வம். அப்பா கிராம உதவியாளரா இருந்தாரு. ஏழ்மையான குடும்பம்தான். பிளஸ் டூ முடிச்ச பிறகு உள்ளூர் தொலைக்காட்சியில வேலை பார்த்து, அதுல கிடைச்ச சம்பளத்தை வெச்சுதான் கல்லூரிப் படிப்பை முடிச்சேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

50 சென்ட்... 70,000 ரூபாய்... வாரிக்கொடுக்கும் வாழை...

எனக்குச் சின்ன வயசுல இருந்தே நூலகத்துக்குப் போற பழக்கம் உண்டு. அங்கதான் எனக்குப் ‘பசுமை விகடன்’ புத்தகம் அறிமுகமானது. பசுமை விகடன் வெளியிட்ட சமயத்துல ஒவ்வொரு மாவட்டத்துலயும் மாவட்ட கலெக்டர்கள் மரக்கன்றுகள் நட்டு வெச்சாங்க. அந்த ஃபோட்டோக்கள் பசுமை விகடன்ல வந்துருந்துச்சு. அது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கு. அப்போ இருந்து இப்போ வரைக்கும் பசுமை விகடன் வாசிச்சுட்டுருக்கேன். அதுல வர்ற வெற்றி விவசாயிகளோட அனுபவங்கள் எனக்குள்ள மாற்றத்தை ஏற்படுத்திக்கிட்டே இருந்திச்சு.கல்லூரிப் படிப்பு முடிச்சுட்டு, சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் வேலைக்குச் சேர்ந்தேன். எனக்கு மது, சிகரெட்னு எந்தப்பழக்கமும் கிடையாது. நானே சமைச்சு சாப்பிட்டுக்குவேன். அதனால, என் சம்பளத்துல பெரும்பகுதியை என்னால சேமிக்க முடிஞ்சது.

என்னோட சேமிப்பை அப்படியே அம்மாகிட்ட கொடுத்துடுவேன். இப்படிப் போயிட்டுருந்தப்போ அப்பா தவறிட்டார். அதனால, வாரிசு வேலை அடிப்படையில எனக்கு அரசாங்க வேலை கிடைச்சது. எனக்கு இந்த வேலைக்கு வர விருப்பமில்லை. ஆனா, அம்மா கட்டாயப்படுத்துனதால கிராம நிர்வாக அலுவலர் வேலையில் சேர்ந்துட்டேன்.

சொந்த ஊருக்கு வந்துட்டதால, எனக்கு விவசாய ஆசையும் வந்துடுச்சு. நான் வேலை பார்த்த நிறுவனத்துல இருந்து விலகினதால கிடைச்ச பணம், அம்மா சேர்த்து வெச்சுருந்த பணம், வங்கிக் கடன் மூலமாகக் கொஞ்சம் பணம்னு சேர்த்து, மூணு வருஷத்துக்கு முன்னாடி இங்க 50 சென்ட் நிலம் வாங்கினோம். அடுத்து பக்கத்துலேயே ஒரு ஏக்கர் நிலம் விலைக்கு வந்தது. அதையும் வாங்கினோம். நாங்க, அண்ணன், அத்தை, பெரியப்பானு கூட்டு குடும்பமா இருக்கோம். அண்ணன் பிர்லா கோளரங்கத்துல வேலை பார்க்கிறார். அவருக்கும் விவசாயத்துல ஈடுபாடு உண்டு. விடுமுறைக்கு ஊருக்கு வந்தா நேரா தோட்டத்துக்குதான் வருவாரு. எங்க பெரியப்பா பிச்சை முத்துதான் தோட்டத்தை முழு நேரமா பார்த்துக்கிடுறாரு. நான் தினமும் காலையிலயும், சாயங்காலமும் வந்துடுவேன்” என்ற பாரதி வாழைத்தோப்புக்குள் நடந்தபடியே பேச்சைத் தொடர்ந்தார்.

50 சென்ட்... 70,000 ரூபாய்... வாரிக்கொடுக்கும் வாழை...

“முதல்ல நாங்க வாங்குன அரை ஏக்கர் நிலம் புதராக் கிடந்தது. சுத்தம் செஞ்சுதான் வயலாக்குனோம். தண்ணிக்காக ஒரு கிணறு வெட்டினோம். பொக்லைன் மூலமா கொஞ்சம் தோண்டுன உடனேயே தண்ணி கிடைச்சுடுச்சு. மலையடிவாரத்துல அணைக்குப் பக்கத்துல இருக்குறதால, இப்பவும் பதினாறு அடியில தண்ணி இருக்கு. நாப்பது வருஷமா எந்த வெள்ளாமையும் செய்யாத பூமி. அதனால, என்னோட இயற்கை விவசாய ஆசைக்குத் தோதா அமைஞ்சுடுச்சு.

முதல்ல நிலத்தை உழுது... கம்பு, சோளம்னு விதைச்சோம். மயில், பறவைகள் தின்னது போக மீதி கிடைச்சாப் போதும்னுதான் நினைச்சோம். ஓரளவு கம்பும் சோளமும் கிடைச்சது. அந்தக் கம்பை அரைச்சு கூழ் காய்ச்சி... எங்க நிலத்துல இயற்கை விவசாய முறையில விளைஞ்ச கம்புல காய்ச்சுன கூழ்னு சொல்லி, ஊர்ல எல்லாருக்கும் கொடுத்தோம். அதைக் குடிச்சுட்டு நிறைய பேர் கம்பு கேட்டாங்க. இருந்த கம்பு முழுசையும் இலவசாமவே கொடுத்துட்டோம். 

50 சென்ட்... 70,000 ரூபாய்... வாரிக்கொடுக்கும் வாழை...

அடுத்ததா, ஒரு ஏக்கர்ல நெல் சாகுபடி செஞ்சோம். அம்மா, அத்தை, அண்ணி, என் மனைவினு எங்க வீட்டு ஆளுங்கதான் நாத்து நடவுல இருந்து எல்லா வேலைகளையும் பார்த்தாங்க. கோ-51 ரக நெல்லை நடவு செஞ்சு இயற்கை முறையில சாகுபடி செஞ்சதுல, பத்து மூட்டை (60 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சது. நெல்லை வீட்டுத்தேவைக்கு வெச்சுகிட்டோம். கிடைச்ச வைக்கோலை அக்கம் பக்கத்துல இருக்கிற விவசாயிகளுக்குக் கொடுத்துட்டோம்.

அதுக்குப் பதிலா அவங்க எரு கொடுத்தாங்க. அதை வாங்கி வயலுக்குப் பயன்படுத்திக்கிட்டோம். அடுத்தபடியா நிலக்கடலை, கத்திரிக்காய்னு சாகுபடி செஞ்சோம். பெருசா மகசூல் இல்லை. ஆனா, சுவை அருமையா இருந்துச்சு. இங்க விளைஞ்ச பொருள்களோட சுவைதான், எங்க வீட்டு ஆளுங்களையும் இயற்கை விவசாயம் பக்கம் திருப்புச்சு.தோட்டத்துல தங்குறதுக்காக ஒரு குடிசை போட்டிருக்கோம். இந்த இடத்தைத் தோப்பா மாத்தி, நெல், காய்கறிகள் விளைய வெக்கிறதுதான் எங்க ஆசை. ரெண்டு வெள்ளாமை முடிஞ்சதுக்குப் பிறகு, ஐம்பது சென்ட் நிலத்துல 100 நாட்டுப் பலாக் கன்னுகளை நடவு செஞ்சுருக்கோம். நெட்டை+குட்டை ரகத்துல ஐம்பது தென்னங்கன்றுகள், பன்னீர் கொய்யாவில் பத்து, இமாம் பசந்த் மாஞ்செடிகள் பத்துனு நடவு செஞ்சுருக்கோம்.

கன்னுகள நட்டது போக மீதமுள்ள இடத்துல வாழை நடவு செஞ்சோம். வீட்டுத் தேவைக்காக முதல்ல பத்து நாட்டு ரக வாழை நட்டோம். அடுத்து ரஸ்தாளி ரகத்துல 400 கன்னுகளை நடவு செஞ்சோம். வாழைக்குப் பாசனம் செய்றப்போ... ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் ரெண்டையும் மாத்தி மாத்தி கலந்துவிடுறோம். ஏழாவது மாசத்துக்குப் பிறகு மீன் அமினோ அமிலத்தைக் கலந்துவிடுவோம். மீன் அமினோ அமிலத்தைத் தெளிப்பு மூலமாவும் கொடுக்குறோம்.

50 சென்ட்... 70,000 ரூபாய்... வாரிக்கொடுக்கும் வாழை...

வாழைச் சாகுபடியில நான் ஒரு விஷயத்தைக் கத்துகிட்டேன். தார் போட்டபிறகு பூவை உடைச்சுட்டு, பஞ்சகவ்யாவை ஒரு பாலித்தீன் பையில் ஊத்திக் கட்டிவிட்டா காய் பெருசாகுது. தார் போட்டுப் பூ தொங்க ஆரம்பிச்ச பிறகு, காய்க்கும் பூவுக்கும் முக்கால் அடி இடைவெளி வந்ததும், பூவை உடைத்து... ஒரு பாலித்தீன் பையில 30 மில்லி பஞ்சகவ்யா, 50 மில்லி தண்ணீர் ஊற்றித் தாரோட அடிப்பகுதியில கட்டிவிடணும். இப்படிக் கட்டிவிட்டா தாரின் எடை அதிகமாகுது. தாரோட பிரமாண்டத்தைப் பார்த்து நான் மிரண்டுட்டேன்.

ஒரு தார் 28 கிலோ அளவுல கிடைச்சது. அதுக்குக் கிலோ 20 ரூபாய்னு 560 ரூபாய் கிடைச்சது. இப்போ வாழைத்தார்களை வழக்கமான மார்க்கெட்டுக்குக் கொண்டு போறதில்லை. இயற்கை விளைபொருள்களை விற்பனை செய்ற கடைகளுக்குத்தான் கொடுக்குறேன். இப்போ ஒரு கிலோவுக்கு 35 ரூபாய் கிடைக்குது. சராசரியா ஒரு தார் 600 ரூபாய்க்குக் குறையாம விற்பனையாகுது. இதுவரைக்கும் 100 தாருக்கு மேல விற்பனை செஞ்சு 60,000 ரூபாய்க்கு மேல வருமானம் எடுத்துட்டேன். அடுத்து நானே பழுக்க வெச்சுச் சீப்பு கணக்குல கொடுக்குறேன். சென்னைக்கு ஒரு கிலோ பழம் 40 ரூபாய்னு அனுப்பிக்கிட்டுருக்கேன். உள்ளூர்ல 35 ரூபாய்னு கொடுக்குறேன். 

50 சென்ட்... 70,000 ரூபாய்... வாரிக்கொடுக்கும் வாழை...

கஜா புயல்ல கொஞ்ச மரங்க சாய்ஞ்சுப் போச்சு. இருக்குற வாழையோட முடிச்சிடலாம்னு முடிவு பண்ணி இலைகளை விற்பனை செஞ்சுட்டுருக்கோம். இதுவரைக்கும் ஒரு கட்டு 500 ரூபாய்னு இருபது கட்டு வாழை இலை விற்பனை செஞ்சுருக்கோம். அதுமூலமா, 10,000 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. அரை ஏக்கர் நிலத்துல வாழை மூலமா இதுவரைக்கும் 70,000 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு” என்ற பாரதி நிறைவாக,

“கடக்நாத் கோழிகள்ல மூணு பெட்டை. ரெண்டு சேவல்னு அஞ்சு கோழிகள் வளர்க்குறோம். பெருவிடையில ஒரு கோழியும் ஒரு சேவலும் இருக்கு. இங்க ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் எல்லாத்தையும் நானே தயார் செஞ்சுக்குறேன். பஞ்ச கவ்யாவை மட்டும் வெளியில் வாங்கிக்கிறேன். இயற்கை இடுபொருள்களுக்காகச் சீக்கிரமா நாட்டு மாடு வாங்கிடுவேன்.

நாங்க வருமானத்தை எதிர்பார்த்து விவசாயம் செய்யலை. நாங்களே உழைச்சு இயற்கையான உணவை உற்பத்தி செஞ்சு சாப்பிடணும்னு நினைக்கிறோம். நாங்க விவசாயம் கத்துக்க எங்க நிலத்தையே பயன்படுத்திட்டுருக்கோம். அடுத்து ஐந்தடுக்கு முறையில காய்கறி, கீரைகள்னு சாகுபடி செய்யப்போறோம்.  திண்டுக்கல் மாவட்டத்துல இயற்கை விவசாயம் செய்ற விவசாயிகள் இணைஞ்சு ஒரு சங்கம் தொடங்கியிருக்கோம். அந்தச் சங்கம் மூலமா, ஞாயிற்றுக்கிழமை மட்டும் திண்டுக்கல் ரவுண்டு ரோடுல கடை போடுறோம். அதுக்கும் நல்ல வரவேற்பு இருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, பாரதி, செல்போன்: 95667 77001.

ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

வளர்ச்சியூக்கி!

தா
ன் தயாரிக்கும் வளர்ச்சியூக்கி குறித்துப் பேசிய பாரதி, “சாணம் 500 கிலோ, வெல்லம் 5 கிலோ, பயறு மாவு 25 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 25 கிலோ, ஆமணக்குப் பிண்ணாக்கு 25 கிலோ, கடலைப் பிண்ணாக்கு 10 கிலோ, மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர்னு எடுத்துக்கணும். இதோட தோட்டத்தைச் சுத்தி இருக்குற பத்து வகையான இலைகள்ல 10 கிலோ அளவுக்கு எடுத்து, முன்னாடி எடுத்து வெச்ச பொருள்கள் எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து... சாக்கு போட்டு மூடி வைக்கணும்.

காலையில் அதைத் திறந்து சிறிது தண்ணீர் தெளிக்கணும். இப்படிச் செஞ்சா பத்து நாள்ல இலைதழைகள் மட்கிடும். இந்தக் கலவையைச் சாக்குகள்ல மூட்டையாகக் கட்டி பாசனம் செய்றப்போ வாய்மடைகளில் போட்டுடணும். பாசனத் தண்ணீர்ல சாறு இறங்கி பயிருக்குப் போகும். இது நல்ல வளர்ச்சியூக்கியாகச் செயல்படுது” என்கிறார்.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism