சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

கழுமரத்தி - கவிதை

கழுமரத்தி - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
கழுமரத்தி - கவிதை

- முத்துராசா குமார்

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

ஏழு கழுமரத்துக்கும்

ஏழு ஆண் தலச்சம்பிள்ளைகளை

கேட்டு வாங்கித் தின்ற கழுவடியானை

வாரிசிழந்தவள்

தனது தோள்பட்டையிலிருந்து

விரட்டினாள்.

சிசுவுக்கு மாற்றாக

செஞ்சேவல்களை வேண்டிய கழுவடியானுக்கு

வேலமரங்களை

கழுமரங்களாக்கி ஊன்றுகிறாள்.

கழு கூர்களை

கண்ணீர் உகுத்து செய்கிறார்

இரும்புத்தச்சர்.

பின்னிரவில்

கழுவில் குத்தப்பட்ட சேவல்களின் பதினான்கு கண்களும்

சூரியனுக்காக

கொண்டைகள் நடுங்க

மயங்காது காத்திருக்கின்றன.

கழுமரத்தி - கவிதை

விடியலைப் பார்த்தவுடன்

கழுமரங்கள் அசைய

றெக்கைகளை விரித்தடிக்கின்றன.

கூவக் கூவ

சந்தனங்குங்குமம் மணக்கும்

கழுமடியைக் கட்டிப்பிடித்து அழுகிறாள்.

தூக்கணாங்குருவிகளின் கைவிடப்பட்ட நார்க்கூடுகளால்

பனி கழுமரத்தை

எரிக்கிறாள்.

வேப்பங்கனியின்

இனிப்புச்சதையை அப்பி

வெயில் கழுமரத்தை

குளிர்விக்கிறாள்.