நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

நாணயம் லைப்ரரி : வெற்றிக்கான 5 மூவ்கள் உங்களிடம் தயாராக இருக்கிறதா..?

நாணயம் லைப்ரரி
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் லைப்ரரி

ஜெயிக்கும் வழிகளை அறிந்துகொள்ளுங்கள்...

ன்றாகச் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென சில பிசினஸ்கள் படுத்துவிடு கின்றன. கோவிட்-19 போன்ற எதிர்பாராத தாக்குதல்கள், தொழில்நுட்ப மாற்றங்கள், மக்களின் ரசனை மாற்றங்கள், அரசின் அதிரடி உத்தரவுகள் என ஏதேதோ நடந்து பிசினஸ் படுத்து விடுகிறது. இந்த நிலையில், அடுத்து என்ன செய்வது என்கிற குழப்பம் தொழில் நடத்துகிறவருக்கு வந்துவிடுகிறது.

இது மாதிரியான சமயங்களில் பிசினஸைத் திறம்பட நடத்த நம்மிடம் ஐந்து மூவ்கள் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் `யுவர் நெக்ஸ்ட் ஃபைவ் மூவ்ஸ்’ என்னும் புத்தகத்தை எழுதிய பேட்ரிக் பேட்-டேவிட் மற்றும் க்ரெக் டின்கின். அது என்ன ஐந்து மூவ்கள், ஏன் இந்த மூவ்களை நாம் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பார்ப்போம்.

நாணயம் லைப்ரரி : வெற்றிக்கான 5 மூவ்கள் உங்களிடம் தயாராக இருக்கிறதா..?

12 மூவ்களுக்கான திட்டம்...

மேக்னஸ் கார்ல்சன் எனும் பிரசித்திபெற்ற சதுரங்க விளையாட்டு வீரர், விளையாடும்போது செய்யும் ஒரு காயை நகர்த்தும் அதேவேளையில் அதைத் தொடர்ந்து அடுத்த 12 காய்களை எப்படி நகர்த்த வேண்டும் என்று ஒரு திட்டத்தை வைத்துக்கொண்டிருப்பாராம். அப்படியொரு திட்டத்தைத் தெளிவாக வைத்திருப்பதாலேயே எதிரே விளையாடும் நபர் எப்படிப்பட்ட மூவ்களையெல்லாம் செய்வார் என்பதைச் சுலபத்தில் கணித்து அவரால் ஜெயிக்க முடிந்திருக்கிறது.

‘‘இப்படித் திட்டமிட்டுச் செயல்படுவது தொழில்முனை வோருக்கும் பொருந்தும். ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் மிகச் சிறு பிராயத்திலேயே சதுரங்க விளையாட்டில் கில்லாடியாக இருந்தவர். சதுரங்க விளையாட்டில் கிராண்ட் மாஸ்ட்டராகத் திகழ 12 மூவ்களை முன்னமேயே முடிவெடுத்து வைத்திருக்க வேண்டும். அதே போல், எலான் மஸ்க்கும் தன்னுடைய தொழில்களில் தன்னுடைய அடுத்த 12 மூவ்களை முடிவெடுத்து விட்டே செயல்படுவார். இதனால் உலகம் மெச்சும் ஒரு தொழில்முனைவோராக அவரால் திகழ முடிந்திருக்கிறது’’ என்று சொல்லி இந்தப் புத்தகத்தை ஆரம்பிக்கிறார்கள் ஆசிரியர்கள்.பிசினஸில் அடுத்து என்ன செய்வது என்கிற விஷயத்தில் குறைந்தபட்சம் ஐந்து மூவ்களை யாவது கையில் தயாராக வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள். அது என்ன ஐந்து மூவ்கள் என்று கேட்கிறீர்களா? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

உங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...

உங்களுடைய முதலாவது மூவ், உங்களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதாக இருக்க வேண்டும் என்கிறார்கள் ஆசிரியர்கள். ‘‘நீங்கள் ஒரு தொழில் முனைவோராக மாற நினைக்கிறீர்கள். வெளி உலகில் இருந்து கொண்டு ஒரு தொழில் முனைவோரின் வெற்றியை மட்டுமே பார்த்துப் பழகியிருப்பீர்கள். அதற்குள் எத்தனை காயங்கள், சிக்கல்கள், போராட்டங்கள், முதுகில் குத்தப்பட்ட நிகழ்வுகள், பணம் இல்லாத பேங்க் அக்கவுன்ட் இருந்த தருணங்கள் என்பவை இருந்தது என்பது உங்களுக்குத் தெரிவதற்கான வாய்ப்பேயில்லை. அதை எல்லாம் தெரிந்துகொண்டு, நீங்கள் யார், அவை எல்லாம் உங்களுக்குச் சரிப்பட்டு வருமா என்பதை நீங்கள் புரிந்துகொள்வது மிக மிக அவசியம். நான் ரொம்பவுமே ‘அன்-ஆர்கனைஸ்டு’ என்று சொல்லும் நபராக நீங்கள் இருப்பீர்கள். ஆனால், பெரிய தொழில் முனைவோராக வர வேண்டும் என்ற ஆவல் நிறையவே இருக்கும். நீங்கள் பெரிய மனிதராக ஆக உங்களை நீங்கள் மிகவும் ‘ஆர்கனைஸ்’ செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் கனவு கைகூட வாய்ப்பில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார்கள் ஆசிரியர்கள்.

நாணயம் லைப்ரரி : வெற்றிக்கான 5 மூவ்கள் உங்களிடம் தயாராக இருக்கிறதா..?

ஆராய்ந்து முடிவெடுங்கள்...

இரண்டாவதாக ஆசிரியர்கள் சொல்வது, ஏன் ஒரு முடிவை எடுக்கிறோம் என்பதற்கான சரியான காரணங்களை அறிந்துகொள்வது. ‘‘நாம் முடிவெடுக்க வேண்டிய எந்த விஷயமும் ப்ளாக் & வொயிட்டாக (எல்லா விஷயங்களும் தெளிவாக இருக்கும் வண்ணம்) இருக்கவே இருக்காது. பெரும்பாலும் அனுமானங் களுடனேயே நாம் முடிவெடுத்து செயல்பட வேண்டியிருக்கும். ஒரு பிரச்னையைக் கையாளுவது எப்படி என்பதை நீங்கள் நன்கு புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கை மற்றும் வேலை குறித்து உங்கள் மனதுக்குள் நம்பிக் கொண்டிருக்கும் தவறான கருத்துகளைக் களைந்து சுற்றி நடக்கும் விஷயங்களை எப்படிக் கையாளுவது என்பதைத் தெரிந்து கொண்டால் வெற்றியை நோக்கி உங்களால் அடுத்த மூவ்வைச் செய்ய முடியும்’’ என்கிறார்கள் ஆசிரியர்கள்.

நாணயம் லைப்ரரி : வெற்றிக்கான 5 மூவ்கள் உங்களிடம் தயாராக இருக்கிறதா..?

சரியான டீமை உருவாக்குங்கள்...

மூன்றாவது மூவ்வாக ஆசிரியர்கள் சொல்வது, உங்களைச் சுற்றி சரியான தொரு டீமை உருவாக்குவதை. ‘‘சிறந்த மனிதர்களை நாம் கண்டறிவது சாதாரண காரியம் இல்லை. பல்வேறு விதமான கேள்விகளைக் கேட்பதன் மூலமே மனிதர்களின் ஆழ்மனதில் என்னென்ன ஆசைகள் இருக் கின்றன என்பது குறித்து நம்மால் அறிந்துகொள்ள முடியும். எப்படி உங்களை நீங்களே புரிந்துகொள்வது ஒரு சவாலான விஷயமாக இருக்கிறதோ, அதே போல் மற்றவர்களைப் புரிந்துகொள்வது சவாலானதொரு விஷயம் ஆகும். அவர்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே இருக்கும் உறவின் தன்மையைப் புரிந்துகொண்டு செயல்படுவது இன்னமும் கடினமான ஒரு விஷயம் ஆகும். அப்படிப் புரிந்துகொண்ட பின்னால் நம்முடைய பணியாளர்கள் மற்றும் பார்ட்னர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்ப்பது மிக மிகச் சுலபமான ஒன்றாகும். அந்த நம்பிக்கை வளர்ப்பே உங்களை இரவில் நிம்மதியாக உறங்கச் செய்யும். இதில் டீம் என்பது வாடிக்கையாளர், தொழிலாளர், முதலீட்டாளர், பார்ட்னர் மற்றும் வென்டார் (உங்களுக்கு பொருள்களை விற்கும் நபர்/நிறுவனம் போன்றவை) போன்றவர்கள் அடங்குவார்கள்’’ என்று விளக்குகிறார்கள் ஆசிரியர்கள்.

தொழிலைப் பெரிதாக்கும் யோசனை...

நான்காவதாக ஆசிரியர்கள் சொல்வது, ஒரு தொழில்முனைவோராக எப்படி ஒரு தொழிலை விரிவாக்கி பெரிதாக்குவது என்பதை. ‘‘ஒரு தொழில்முனைவோராக ஆரம்பித்தல், தற்காத்துக்கொள்ளுதல், வேகமெடுத்து விரிவாக்குதல் மற்றும் உச்சியைச் சென்றடைதல் என்ற நான்கு நிலைகளை நீங்கள் எதிர்கொள்வீர்கள், உங்களுடைய நிறுவனம் வேகமாக வளர வளரத்தான் அது காணாமல் போவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள் என்று எச்சரிக்கின்றனர் ஆசிரியர்கள். எதிராளிகளின் பக்கம் நின்று உங்களை ஒழித்துக் கட்ட என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு பலவிஷயங்கள் தெளிவாகப் புலப்படும்’’ என்கின்றனர் ஆசிரியர்கள்.

நாணயம் லைப்ரரி : வெற்றிக்கான 5 மூவ்கள் உங்களிடம் தயாராக இருக்கிறதா..?

போட்டியாளர்களை வீழ்த்துவது...

கடைசி மூவ்வாக ஆசிரியர்கள் சொல்வது, உங்கள் தொழிலில் இருக்கும் பெரிய நிறுவனம்/போட்டியாளர்களை எப்படி வீழ்த்துவது என்பதற்கான வழிமுறைகளை. ‘‘நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சவால்கள் என்பது தொடர்ந்து உங்களை நோக்கி வந்துகொண்டே இருக்கும். அவற்றை நீங்கள் தொடர்ந்து எதிர்கொண்டே ஆக வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். அதானாலேயே சவால்களைக் கண்டு அஞ்சாமல் அவற்றை மிகவும் பிடித்தமான ஒன்றாக்கி அவற்றுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள்’’ என்று சொல்லி முடிக்கின்றனர் ஆசிரியர்கள்.

தொழில்முனைவோருக்குத் தேவையான பல்வேறு வெற்றி பெறுவதற்கான கருத்துகள் மற்றும் நடைமுறைகளைச் சொல்லும் இந்தப் புத்தகத்தைத் தொழில்முனைவோர் அனைவரும் ஒரு முறை படித்து பயன்பெறலாம்.

- நாணயம் விகடன் டீம்