
தொடர்கதை
‘குளிர்ந்த பனிக்கட்டிதான் தீயீட்டியாகக் குத்தும். அதிகாரத்தின் இந்த இருக்கை பனிக்கட்டியின் குளிர்ச்சி. இதனுள் உறைந்துள்ள துரோகங்கள் தகிக்கும் தணல். ஆட்சியதிகாரத்தின் பீடம் கடந்தகால துரோகத்தின் அடர்ந்த ரத்தக் கறைகளை மறைத்துக்கொண்டு நிகழ்காலத்தின் பளபளப்பில் மின்னுகிறது. அதிகார பீடம், அமரும் வரை தெய்வத்தின் கருணையோடு அழைக்கிறது; அமர்ந்தவுடன் சாத்தானாகக் கழுத்தை நெரிக்கிறது.’
பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் நூற்றாண்டுத் தவறுகளின்மேல் தான் அமர்ந்திருப்பதாகத் துயரம் கொண்டார் ஹானிங்டன்.
அரை வட்ட வடிவ பங்களாவில், நெடிதுயர்ந்த சாளரத்தின் முன்னால் அரபிக் கடல் பார்த்து உட்கார்ந்துகொண்டிருந்தவருக்குக் கடல்காற்றையும் மீறி உடல் தகித்தது.
அவர் முன்னாலிருந்த ‘தி ஃபெமைன் கேம்பெயின் இன் சவுத் இண்டியா’ புத்தகத்தின் பக்கங்களைக் கடற்காற்று புரட்டியது. கடந்த பத்து வருடங்களில் வங்காளத்திலும் மதராஸ் மாகாணத்திலும் பஞ்சத்திலும் தொற்று நோயிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்திற்கும்மேல். கருணையற்ற மரணங்கள். அழுகி, புழு வைத்து, இறுதியடக்கம் செய்ய வழியின்றி, குப்பைகளைப்போல் குவித்துப் போடப்பட்ட உடல்கள். வாழும்போது அனுபவித்த அவமரியாதைகளைவிட செத்தபிறகு அவ்வுடல்களுக்கு நேர்ந்த அவமரியாதைகள் அதிகம்.
தாதுவருடப் பெரும் பஞ்சத்தில் மதராஸ் மாகாணத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் தன் கோப்புகளுக்குள் இறுக்கமாகக் கட்டிவைத்திருந்தது. தசையற்ற எலும்பும், ரோமமின்றி இமைக்காத கண்களுமாக உயிரோடிருப்பவர்களும் செத்தவர் கணக்குதான். வாழ்கிறவர்களுக்கான அறிகுறிகளற்றுப்போன வெற்று உடல்கள்.

சாலையோரம் குவிக்கப்பட்டிருந்த அழுகிய உடல்களின் நினைவு வந்தவுடன் குமட்டியது ஹானிங்டனுக்கு. எதிரிலிருந்த கண்ணாடியில் தெரிந்த முகம் அவருக்கே அச்சம் கொடுத்தது. மூன்றாள் அகலமும் ஒன்றரை ஆள் உயரமும் கொண்ட அலங்காரமான கண்ணாடியில் கீறலைப்போல் இருந்தது அவர் பிம்பம்.
கண்ணாடியில் பிரதிபலித்த தன் பிம்பத்தை உற்றுப் பார்த்தார் ஹானிங்டன். தூக்கமில்லாத சிறிய கண்கள் மேடிட்டிருந்தன. அதிகரித்திருந்த முன் நெற்றியின் விசாலம் முதிர்ச்சியைக் காட்டியது. ஒழுங்கு செய்யப்படாத தாடியும் மீசையும் வயதைக் கூட்டின.
தன் முகத்தைத் தானே பார்க்க முடியாமல் தோற்ற ஹானிங்டன், அருகில் இருந்த வெண்கல மணியை இழுத்தார். வெளியில் காத்திருந்த உதவியாளன் பெரிய மரக்கதவு கிறீச்சிட உள்ளே வந்தான்.
“விஸ்கி.”
“உத்தரவு தம்புரானே.”
குனிந்தபடியே, பின்னால் நடந்து கதவுவரை சென்றவன், திரைச்சீலை விலக்கிக் காற்று வெளியேறுவதுபோல் சத்தமின்றி வெளியேறினான்.
மது பருகத் தொடங்கும் முன்பே தொண்டை கசந்தது.பாவத்தின் சிறு கசப்பாய் எச்சில் உள்ளிறங்கியது.
‘இரண்டாண்டுகளுக்கு ஒரு பஞ்சம் எப்படி வரும்? வளம் நிறைந்த இந்நாட்டில் பஞ்சம் இயற்கையின் சதியல்ல; பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுக்கும் கொடை. விவசாயி தன் கிணற்றைப் பராமரிக்கவில்லை. ஊர்க்காரர்கள் கண்மாயைத் தூர் வாரவில்லை. அரசர்கள் நீர்நிலைகளை மறந்தே விட்டனர். லண்டனில் விலைபோகிறதென்று அரசாங்கம் சாயமிடப்பட்ட துணிகளை மட்டுமே நெய்யச் சொல்கிறது. அப்படியும் சாயத்தொட்டிகளுக்கருகே நிர்வாணமாகச் செத்துக் கிடக்கிறார்கள் நெசவாளிகளும்.
நாளுக்கொரு எஜமான். மாதத்திற்கொரு ஆட்சியாளர். தினம் ஒரு போர்க்களம். போர்க்களத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படையில் நிறுத்தப்படும் உள்ளூர்க் கூலிகள். எதிரி யார்? தன் ஆட்சியாளர் யார்? ஒன்றுமே புரியாத குழப்ப நிலையில் மக்கள். வெறுங்கையோடு ஐரோப்பிய தேசங்களிலிருந்து கப்பலில் புறப்படுபவர்கள், ஐந்தாறு ஆண்டுகளில் திரும்பிச் செல்லும்போது அத்தேசத்தின் செல்வந்தர்களாக ஆகிவிடுகிறார்கள். மதராஸிலிருந்து ஒரு கப்பல் புறப்பட்டால், குறைந்தபட்சம் மதராஸ் மாகாணத்தில் நூறு குடும்பங்களின் உணவாவது சுரண்டப்பட்டிருக்கும்.’
குற்றவுணர்வின் தணல் மேலெழுந்தது. தாங்கிக்கொள்ள முடியாமல், மீண்டும் மணியை அடித்தார்.
பட்டுத் துணியால் அலங்கரிக்கப்பட்ட நீள்வட்டத் தட்டில், கண்ணாடிக்குவளைகளும், மது பாட்டிலும், வெள்ளிக்கூஜாவில் சின்னச் சின்ன ஐஸ் கட்டிகளுமாக உள்ளே நுழைந்தான்.

“சீக்கிரம்... என்னை நானே எரித்துக்கொள்வேன் போலிருக்கிறது.”
அரைக்குரலில் அவர் பேசிய ஆங்கிலம் அவனுக்குப் புரியவில்லை. வெள்ளைக்கார தம்புரான் தோட்டத்துச் சாளரத்தைத் திறந்து வைத்து உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தாலே, கடைசியில் இதுதான் நடக்குமென்று அவன் அனுபவத்தில் அறிந்திருந்ததால், மது பாட்டிலின் மூடியை ஒரு சுற்றுத் திறந்து வைத்திருந்தான்.
குவளையில் ஊற்ற அவசியமில்லாமல், ஹானிங்டன் மதுபாட்டிலை நேரடியாக உதட்டில் வைத்தார். இரண்டு மடக்கு விழுங்கியவர், நாக்கில் பரவிய சூட்டுக்குத் திணறினார். தொண்டைக் குழி, திரவத்தை உள்ளனுப்பத் திணறியது.
‘மதராஸ் மாகாணத்தின் மூன்றிலொரு பங்கு மக்கள்தொகையை வாரிக்கொடுத்துவிட்டுத்தான், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குக் கொஞ்சம் சுரணை வந்திருக்கிறது.
வங்காளம் தொடங்கி, மதராஸின் தென்கோடி வரை எத்தனை யுத்தங்கள்; தந்திரங்கள்; துரோகங்கள்?
இந்திய நிலப்பரப்பின் பழுப்பு நிறம், புதையுண்டுபோன லட்சக்கணக்கானவர்களால்தான் செந்நிறமானது. பிளாசி, பக்சார், அடையாறு, வந்தவாசி, மைசூர், கர்நாடகம், காளையார்கோவில், சிப்பாய்க் கலகம், ஆற்காட்டுப் போர் என்று ஒவ்வொரு மாகாணத்திலும் எத்தனை போர்கள். போர்களின் நோக்கம் ஒன்றுதானே? அதிகாரத்தின் ருசி. வர்த்தக லாபம். தங்கள் இரண்டு பாதங்களுக்குக் கீழ் எண்ணற்ற காலனிகள் என்ற எகத்தாளம்.
நிலவெறி கொண்டு அலைந்தவர்கள் கண்களைத் தொலைத்தார்கள். இதயத்தைக் கழற்றி வைக்கத்தான் பயிற்சி கொடுக்கிறார்கள். மனசாட்சியை மறந்துவிட்டுத்தான் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திலிருந்து கப்பலேற முடியும். யாரையும் பலிகொடுக்கலாம்; எதையும் அழிக்கலாம்.
உள்ளே கொழுந்துவிட்டு எரியும் குற்றவுணர்வு, மதுவின் வெம்மையை நீர்க்கச் செய்தது.
மேசையிலிருந்த ‘பெரியாறு அணைத் திட்டம்’ கோப்பினைப் பார்த்தார் ஹானிங்டன். மனம் மேலும் கனத்தது. இருபது வருட இழுபறி என்று முடிவுக்கு வருமோ?
கைகள் நடுங்க, பாட்டிலைக் கீழே வைத்தார். உதவியாளன் குவளையில் மதுவை ஊற்றினான்.
குவளையைக் கையில் எடுத்தவர், அவசரமாக உதட்டில் சாய்த்தார். மறக்கவா? மன்னிக்கவா? எதற்குத் தன்னைத் தயார் செய்கிறோம்? குழம்பினார்.
“எல்லோரும் உங்களுக்காகக் கீழே காத்திருக்கிறார்கள் டியர். என்னாச்சு, இப்போது மது அருந்துகிறீர்கள்?”
கதவு திறந்த ஓசை இருவருக்குமே கேட்கவில்லை.
இடப்பக்கம் சரிந்திருந்த முன்பக்கக் கொண்டையில் சூடியிருந்த செண்பகப் பூவின் மணம் கமழ, குருவாயி உள்ளே வந்திருந்தாள். சிரிப்பு உதட்டோரத்தில் இருந்தது.
குருவாயியின் முகத்தில் தெரிந்த தீர்க்கம், எதற்கும் அதிர்ந்துபோகாத அவளின் இயல்பைக் காட்டியது.
“உடையக்கூடிய கண்ணாடிக் குவளைக்குத் தங்கக் கைப்பிடி எதற்கு ஹனி? பார்த்தாயா? இந்த அறையின் டாம்பீகத்தைப் பார். பெல்ஜியம் கண்ணாடி, தேக்கு, சந்தன மரத்தை இழைத்துச் செய்த மேசை, தரை விரிப்பைப் பார், எத்தனை ஆடம்பரம்? காலில் மிதிபடப்போவதுதானே? இதெல்லாம் எத்தனை பேரை பட்டினியில் சாகவிட்டு, சம்பாதித்த பணமோ? யாருடைய உணவோ? யாருடைய உடையோ? எந்தக் குழந்தைக்கான பாலோ? எல்லாவற்றையும் சுரண்டி, நான் கொழுத்திருக்கிறேன். குருவாயி, இங்கே பார், மின்னும் இந்தக் கன்னத்தின் பளபளப்பு இந்த மக்களைச் சுரண்டியதுதான்.”
ஹானிங்டன் குருவாயியைக் கண்ணாடி அருகில் இழுத்துச் சென்றார். கண்ணாடியில் தெரிந்த தளர்ந்த உருவத்தைப் பார்த்தவாறே, மது பாட்டிலைக் கையில் எடுத்துப் பார்த்தாள் குருவாயி.
“நிறைய குடிக்கவில்லையே, ஏன் உளறுகிறீர்கள்? பென்னியும், திவான் ராமய்யங்காரும் உங்கள் அலுவலக நண்பர்களும் வந்துவிட்டார்கள். அவர்களைக் காத்திருக்கச் சொல்லியிருக்கிறேன். சீக்கிரம் வாருங்கள்.”
“இவ்வளவு பெரிய அறை, எனக்கு எதற்கு?”
“ஹனி... வழக்கமாகச் செடி கொடிகளைப் பார்த்துப் பேசிக் கொண்டிருப்பீர்கள், இன்று என்னாச்சு?”
குருவாயி வேலைக்காரனுக்குச் சைகை காண்பித்தாள். அவன் வெளியேறினான்.
குருவாயி, ஹானிங்டனை நெருங்கி, இறுக்கியணைத்தாள்.
“மை டியர்... இன்று முக்கியமான கூட்டம். இருபதாண்டு முயற்சி. இந்த அணையைக் கட்டினால்தான், பஞ்சத்தில் இறந்த மக்களின் ஆன்மாவிற்கு சாந்தி என்று இரவு முழுக்கச் சொல்லிக் கொண்டிருந்தீர்களே. பென்னியும் ராமய்யங்காரும் வந்திருக்கிறார்கள். மகாராஜாவிடம் இருந்து சாதகமான பதில் வந்திருக்கும். நம்பிக்கையோடு கீழே வாருங்கள்.”
ஹானிங்டனும் குருவாயியை இறுக்கிக் கட்டிக்கொண்டார். நிமிர்ந்து அவருடைய கலங்கிய கண்களைப் பார்த்த குருவாயி, இன்னும் இறுக்கியணைத்து, இதழோடு இதழ் பதித்தாள். உள்ளுக்குள் பெருகிய வெம்மையை நீண்ட முத்தத்தில் தணித்தாள் குருவாயி. ஹானிங்டனின் சுவாசம் சீரானது.
ஆசுவாசமடைந்தவுடன் ஹானிங்டன் முகத்தில் வழக்கமான குழந்தைச் சிரிப்பு.
“குட், மை டியர்.”
ஹானிங்டனின் தலையைக் கோதினாள்.
“மகாராஜாவின் ஒப்புதலோடு வந்திருக்கிறாரா திவான்?”
“அவர் முகத்திலிருந்து என்ன கண்டுபிடிக்க முடிகிறது?”
“அய்யங்கார் அழுத்தம்தான்.”
ஹானிங்டன் சிரித்தபடி, தன் கலைந்த தலையைச் சரிசெய்துகொண்டு, மதுபாட்டிலையெடுத்து ஒரு மிடறு பருகிவிட்டுக் கிளம்பினார்.
கதவைத் திறக்கும்முன், நின்று திரும்பிப் பார்த்த ஹானிங்டன், “உன் முத்தத்தினையொத்த போதை ஒரு மதுவிலும் இல்லை” என்று குருவாயியைப் பார்த்துச் சிரித்துவிட்டு வெளியேறினார்.
ஹானிங்டன் மாடிப்படியில் இறங்கி வரும் சத்தம் தொம் தொம்மென்று கீழ்த்தளத்தின் வரவேற்பறை வரை கேட்டது. முற்றித் தானாக விழுந்த தேக்குப் பலகைகளால் ஆன வழுவழுப்பான கைப்பிடிகளைத் தடவியபடி, ஹானிங்டன் நிதானமாக அடியெடுத்து வைத்தார். மரியாதையின் காரணமாக ஹானிங்டன் கால்வைத்த படியில் இருந்து ஐந்தாறு படிகள் பின்னால் அவருடைய கோப்புகளைச் சுமந்து உதவியாளன் வந்தான். கீழ்த்தளத்தின் வரவேற்பறைக்கு வந்தபோது, காத்திருந்தவர்கள் எழுந்து நின்றனர்.
திருவிதாங்கூர் அரசர் விசாகம் திருநாளின் ரெசிடென்டும் ஐசிஎஸ் அதிகாரியுமான ஹானிங்டன், புலித்தோல் விரிக்கப்பட்டிருந்த ஆசனத்தில் வந்தமர்ந்தார். உள்ளிருந்த தடுமாற்றங்களை, மதுவும் முத்தமும் துடைத்துவிட்டிருந்ததில் அவர் உடலில் கம்பீரம் கூடியிருந்தது.
அவர் அமர்வதற்காகக் காத்திருந்த லெப்டினன்ட் கர்னல் பென்னி குக், திவான் ராமய்யங்கார், சமஸ்தானத்து மராமத்துச் செயலாளர் குருவில்லா, சர்க்கார் வக்கீல் பிரின்ஸ் ஆகியோர் உட்காரலாமா என்பதைப்போல் ஒருவரையொருவர் பார்த்து, சிறு தலையசைப்பில் உத்தரவு வாங்கி உட்கார்ந்தனர்.
குருவாயி அறைக்குள் வந்தாள். தந்தத்திலான சிகரெட் பைப்பை ஹானிங்டனிடம் நீட்டினாள். வாங்கி உதட்டில் வைத்தார். குனிந்து லைட்டரை பைப்பில் வைத்தாள். இரண்டு, மூன்று முறை புகையை இழுத்து விட்டார் ஹானிங்டன்.

‘பேசலாம்’ என்பதுபோல் புகை வேகமாக வெளியேறியது.
‘பெரியார் ரிவர் புராஜெக்ட்’ என்ற தடித்த கோப்பைக் கையிலெடுத்த பென்னி குக், “யுவர் எக்ஸலென்ஸி, விரைவில் ஹிஸ் ஹைனெஸ் விசாகம் திருநாளிடம் பெரியாறு அணைத் திட்டத்திற்கு அனுமதி வாங்க வேண்டும். அணை கட்டுவதற்கு வைஸ்ராயிடம் இருந்து ஒப்புதல் வந்துவிட்டது. ஹிஸ் எக்ஸலென்ஸி மெட்ராஸ் கவர்னர், உங்களைப் பிரத்யேகமாகச் சந்திக்கவே என்னை அனுப்பியிருக்கிறார்.”
“புராஜெக்ட் மதிப்பு எவ்வளவு?”
“ஐம்பத்து நான்கு லட்சம் யுவர் எக்ஸலென்ஸி. மலையைக் குடைந்து கால்வாயில் தண்ணியைக் கொண்டு போகிற அந்த நாளில் இருந்து நமக்குக் கிஸ்தியாக ஏக்கருக்கு ஐந்து ரூபாய் கிடைக்கும். மொத்தம் இரண்டு லட்சம் ஏக்கர். வருஷத்துக்குப் பத்து லட்சம் கிடைக்கும். முதலீட்டை ஆறு வருஷத்தில் எடுத்துவிடலாம். ஏழாவது வருஷத்திலிருந்து லாபம்தான்.”
“லாபம்... லாபம்... இது ஒன்றுதானே நம் அரசாங்கத்தின் மந்திரம்? இந்தத் திட்டத்தின் லாபம், மக்களின் உயிர்தான். அதற்குத்தான் காத்திருக்கிறேன். சரி, மகாராஜா விசாகம் திருநாளுக்கு வருஷம் ஏழு லட்சம் தருவதாக முதலில் கடிதம் கொடுத்தீர்கள். பின்னர் அதை நாற்பதாயிரமாகக் குறைத்துவிட்டீர்கள், பென்னி?”
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஐசிஎஸ் அதிகாரியென்றாலும், திருவிதாங்கூரின் ஆலோசகர் என்பதால், மகாராஜாவின் தரப்பையும் தானே பேச வேண்டுமென்று உணர்ந்து, ஹானிங்டன் பேசினார்.
‘யெஸ் யுவர் எக்ஸலென்ஸி. நாற்பதாயிரம் வெறும் குத்தகைப் பணம் மட்டும்தான். எட்டாயிரம் ஏக்கர் நிலம், பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புக்காகக் கேட்கிறோம். நீர் தேங்கி நிற்கப் போகும் எட்டாயிரம் ஏக்கர் இடத்தை நாம் எடுத்துக் கொள்ளப்போவதில்லை. மகாராஜாவின் ஆளுகையில்தான் அவ்விடம் இருக்கும். அணையில் மீன் பிடிக்கிற குத்தகையை ஹிஸ் ஹைனெஸ் விசாகம் திருநாளுக்குக் கொடுக்கிறோம். படகுவிடும் உரிமையும் உண்டு. அங்குள்ள மரங்கள் எல்லாம் அவருக்குச் சொந்தம்தானே? காட்டை நாம் திருத்திய பிறகு விலைபோகும் மரங்கள் ஏராளம் இருக்கும்.”
“எல்லாம் சரியாக இருக்கிறதே அய்யங்கார், ஹிஸ் ஹைனெஸ் கையெழுத்துப் போட ஏன் இன்னும் தயங்குகிறார்?”
ஹானிங்டனுக்குப் பதில் சொல்ல திவான் ராமய்யங்கார் எழுந்து நின்றார்.
“யுவர் எக்ஸலென்ஸி, பேரியாறுதான் ஆறோட பெயர். பெரியாறு அல்ல. ஒவ்வொரு கடிதப் போக்குவரத்துலயும் நான் அதைக் குறிப்பிட்டு எழுதறேன். இந்தச் சமஸ்தானத்துக்குப் பெருமை பேரியாறுதான். பேரியாறு ஒப்பந்தத்துல ஹிஸ் ஹைனெஸ் விசாகம் திருநாளுக்குக் கையெழுத்துப்போட தயக்கமில்லை. தொள்ளாயிரத்துத் தொண்ணூத்து ஒன்பது வருஷ குத்தகைக் காலம் ரொம்ப அதிகமா இருக்கேன்னு யோசிக்கிறார். ஹிஸ் எக்ஸலென்ஸி, குத்தகைன்னாலே தொண்ணூத்து ஒன்பது வருஷந்தானே வழக்கம்? இதென்ன தொள்ளாயிரத்துத் தொண்ணூத்தொன்பது? நம்ம தலைமுறைக்கு அடுத்து ரெண்டு, மூணு தலைமுறைக்கு நாம ஜவாப்தாரியா நின்னு சொல்லலாம். நீங்க சொல்ற ஆயிரம் வருஷத்துக்கு, எந்தத் தலைமுறை ஜவாப்தாரியாக முடியும்? ஆயிரம் வருஷத்துல என்ன வேணா நடக்கலாம். குத்தகைக் காலம்தான் மகாராஜாவுக்குக் கொஞ்சம் உறுத்துலா இருக்கு.”
ஹானிங்டனிற்கும் 999 வருஷம் குத்தகை ஒப்பந்தம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஒருவேளை 99 என்பதை 999 என எழுதிவிட்டார்களோ என்று மெட்ராஸ் கவர்னருக்குக் கடிதம் எழுதிக் கேட்டார். கவர்னர் 999 என்று உறுதிப்படுத்தி எழுதியதோடு, மகாராஜாவிடம் குத்தகையில் கையெழுத்து வாங்க, லெப்டினென்ட் கர்னல் பென்னி குக்கையும் அனுப்பி வைத்திருக்கிறார்.
“இங்கிலாந்துல தேவாலயம் கட்டறதுக்கு 999 வருஷம் குத்தகை கொடுக்கிறது வழக்கம்.”
“மனுஷனே இல்லைன்னாகூட சாமி இருக்கும். அது கடவுள் சமாச்சாரம். இந்த டிராப்ட் வந்தவுடன் நானும் விசாரிச்சேன், வேற எங்க இத்தன வருஷத்துக்குக் குத்தகை கொடுத்திருக்காங்கன்னு. நீங்க உதாரணமா சொன்ன தேவாலயத்துக்கெல்லாம் ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர் நெலம்தான் கொடுத்திருக்காங்க ஹிஸ் எக்ஸலென்ஸி.”
“மெட்ராஸ் பிரசிடென்ஸியைக் கரைச்சுக் குடிச்சவர் ராமய்யங்கார்னுதானே, அரசாங்க உத்தியோகத்துல இருந்து ரிடையரான உங்கள மகாராஜா, அப்டியே தன்னோட சமஸ்தானத்துக்குத் தூக்கிட்டு வந்துட்டார். இப்போதான் தெரியுது, நீங்க ஐரோப்பிய தேசத்தையே கரைச்சுக் குடிச்சிருக்கீங்கன்னு.”
ராமய்யங்கார் நெளிந்தார். உருண்டு திரண்ட உடம்பு அவருடைய குறைந்த உயரத்தில் கனமாகத் தோற்றமளித்தது. தலைப்பாகையைச் சரிசெய்வதுபோல், ஹானிங்டனின் புகழ்ச்சியைக் கடந்தார்.

“நீங்க நூறு ஏக்கரை, தொள்ளாயிரத்துத் தொண்ணூத்து ஒன்பது வருஷத்துக்குக் கேக்குறீங்களே ஹிஸ் எக்ஸலென்ஸி? டிராப்ட் அக்ரிமென்டைப் படிச்சதும் ‘பத்மநாபா...’ன்னு உட்கார்ந்துட்டாரு மகாராஜா.”
“என்ன அய்யங்கார், நாங்க என்ன திருவிதாங்கூர் அரண்மனையிலா நூறு ஏக்கர் கேட்குறோம்? ஆளே நுழைய முடியாத காட்டுக்குள்ள கேட்கிறோம். உங்க மகாராஜாவோ நீங்களோ என்னைக்காவது அந்த இடத்தைப் பார்த்திருக்கீங்களா? வீணாக் கிடக்கிற காடு. வீணாப் போற தண்ணி. முல்லை - பெரியாறு ஆறுகள்ல ஓடிவர்ற தண்ணியும் வீண். மழைத்தண்ணியும் வீண். அதைத் திருப்பிவிட்டா மதுரை வட்டாரமே பொழைச்சிக்கும். நீங்க வணங்கற ஆண்டாள் இருக்கிற வில்லிபுத்தூரும்தான்.”
“மகாராஜாவிடம் நாமே எடுத்துச்சொல்லி, கையெழுத்து வாங்கலாமே ஹிஸ் எக்ஸலென்ஸி?”
பென்னி குக் சொன்னவுடன் ஹானிங்டன் வெடித்துச் சிரித்தார்.
“பென்னி, ராமய்யங்காரை என்ன நினைச்சே? இவர் மறுத்து மறுத்துப் பேசுறதெல்லாம் மகாராஜா கருத்துன்னு நினைச்சியா? இதெல்லாம் அய்யங்கார் சொல்வது. அவர் மனசுல கையெழுத்து வாங்கக்கூடாதுன்னு நெனைச்சிட்டார். அதை மகாராஜா மூலம் சொல்ல வைக்கிறார். நாம டிராப்ட் கொடுத்த முதல்நாளே, ‘மகாராஜா, இதில் கையெழுத்துப் போடுங்க’ன்னு அய்யங்கார் சொல்லியிருந்தா, மகாராஜா அன்னைக்கே போட்டிருப்பார். இப்ப நமக்கு வரம் கொடுக்க வேண்டியது சாமி இல்லை; பூசாரிதான். நான் சொல்ற பழமொழி சரியா அய்யங்கார்?”
ராமய்யங்காரின் முகம் சலனமின்றி இருந்தது. இருபது வயதில் தொடங்கிய அரசாங்க உத்தியோகத்தில், அவர் வகிக்காத உயர் பதவிகளே இல்லை. உயரதிகாரிகளும் கவர்னர்களும் அரசர்களும் அவர் தினம் சந்திக்கும் நபர்களானபோது அவர் கற்றுக்கொண்ட முதல் பாலபாடம், முகத்தில் சலனமின்றி நிற்பதுதான்.
“யெஸ் யெஸ். திருவிதாங்கூர், கொச்சி இரண்டு இடத்திலேயும் மகாராஜாவைவிட திவான்தான் முக்கியமாமே? நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார் பென்னி குக்.
குருவாயி முன்னால் வர, வேலைக்காரர்கள் இருவர் தேநீர்க் கோப்பைகளுடன் வந்தனர்.
ஒவ்வொருவர் முகத்தையும் நிமிர்ந்து பார்த்து, சிரித்தபடியே குருவாயி தேநீர்க் கோப்பைகளை எடுத்துக் கொடுத்தாள். விருந்தினர்களை உபசரிப்பது அவள் விரும்பிச் செய்யும் உபசாரம்.
“தேநீர் குடிக்கலாம். குருவாயியின் தேநீரை நீங்கள் தவற விடக்கூடாது.”
மெல்லிய சிரிப்புடன் அப்புகழ் வார்த்தையை ஏற்றுக்கொண்ட குருவாயி, ஹானிங்டனிற்குக் கடைசியாகக் கொடுத்துவிட்டு, வெளியேறினாள்.
“நீங்கள் மெட்ராஸ் பிரசிடென்ஸியில் பிறந்து வளர்ந்தவர். மூன்று வருஷத்துக்கு முன்னால் அங்கு பஞ்சத்தினால் மக்கள் கும்பல் கும்பலாகச் செத்து விழுந்ததை அறிவீர்கள். இப்பவும் மதுரை, ராமநாதபுரம் மக்கள் பஞ்சம் பிழைக்க, திருட்டுக் கப்பலேறி மலேசியா, பர்மான்னு போறாங்க. அங்கே போயும் அவங்களுக்குப் பிழைக்க வழியில்ல. பெரியாற்றுத் தண்ணீரைத் திருப்பி, வைகையில் சேர்த்து, இந்த ரெண்டு ஊருக்கும் கொண்டு வந்துட்டா, பஞ்சத்துல சாகிறவங்க எண்ணிக்கையைக் குறைக்கலாம். உங்களுக்கு எங்களைவிட இந்த ஊரோட நிலைமை நல்லாத் தெரியும். நீங்கதான் மகாராஜாகிட்ட எடுத்துச் சொல்லணும். பேச்சு வார்த்தையிலேயே நாலஞ்சு வருஷமா ஓடுது.”
பென்னி குக் சொன்னதும், ராமய்யங்கார் ஹானிங்டனைப் பார்த்தார். அவர் முகம் தீவிரமடைந்திருந்தது.
“யுவர் எக்ஸ்லென்ஸிக்குப் பெரியாறு என்றுதான் வாயில் வருகிறது. சரி, தொள்ளாயிரத்துத் தொண்ணூத்தொன்பது வருஷ குத்தகை கேட்பதால், உங்ககிட்ட இருக்கிற அஞ்சாங்கோ கோட்டையையும் தலைச்சேரி கோட்டையையும் கொடுத்தால் பரவாயில்லைன்னு மகாராஜா நினைக்கிறார்.”

கோபத்துடன் நிமிர்ந்து பார்த்த ஹானிங்டன், ஒன்றும் பேசாமல் அமைதியானார்.
பென்னி குக், ஹானிங்டன் அமைதியாக இருப்பதைப் பார்த்தார். ஹானிங்டன் பெரிய வேலைகளை முடிப்பதில் பெயர் பெற்றவர். எதிலும் சிரத்தையில்லாமல் மரம், செடி, கொடிகளை ஆராய்ந்துகொண்டிருப்பது போலிருப்பார். பிரிட்டிஷ் சர்க்கார் கொடுக்கும் பணிகளை முடித்துவிடுவார். மலையாள தேசத்தில் உள்ள பெரிய மனிதர்கள் அனைவரும் ஹானிங்டனிற்கு நல்ல பழக்கம். மலையாளம் பேசுவார். நாட்டிய நாடகங்களுக்கு முதல் ஆளாகச் சென்றுவிடுவார்.
சூழலில் இறுக்கம் அதிகரிப்பதை உணர்ந்த அய்யங்கார், “மகாராஜாவுக்கு உடம்பு சொஸ்தமில்லாம இருக்கு. அம்மாச்சியிடம் பேசுறேன். கையெழுத்து வாங்க முயற்சி பண்றேன் யுவர் எக்ஸலென்ஸி.”
ஹானிங்டன் நிமிர்ந்து உட்கார்ந்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ரெசிடென்ட் என்ற தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்த எண்ணினார்.
“மகாராஜாவிடம் நான் சொன்னதாகச் சொல்லிவிடுங்கள். கையெழுத்து கட்டாயம் போட வேண்டும். இல்லையென்றால் பூஞ்சார் அரசர் இருக்கிறார்.”
திவான் வெம்பாக்கம் ராமய்யங்கார் அதிர்ந்தார்.
பங்களாவுக்கு வெளியே குதிரைகளின் குளம்பொலி.
குதிரை வீரர்கள் வாசலில் நின்ற குருவாயியைப் பார்த்ததும் குதிரையின் சேணத்தைப் பிடித்து நிறுத்திவிட்டு, வணங்கினர்.
கலங்கிய கண்களுடன் இருந்த அவர்களில் ஒருவன், “திவான் உள்ளே இருக்கிறாரா அம்மே?” என்றான்.
“ஆமாம், என்ன விஷயம்?”
“அவசரம். அசுபச் செய்தி.”
குருவாயிக்குப் புரிந்துவிட்டது.
- பாயும்...