
பிரிட்டிஷ் அதிகாரிகளின் முதல் அதிர்ஷ்டம், அவர்கள் குடியிருக்கக் கிடைக்கிற வேலைப்பாடுகளுடன் கூடிய பங்களா.
பிரிட்டிஷ் ரெசிடெண்ட் ஹானிங்டன் பங்களாவின் முன்புறமிருந்த தோட்டத்தில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மழை பெய்து ஓய்ந்திருந்த மாலைப்பொழுதின் குளிர்ச்சி காற்றில் உறைந்திருந்தது.
குருவாயி விருந்தினர்களுக்கான உணவு ஏற்பாட்டைக் கவனமாக ரசித்துச் செய்திருந்தாள். நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருக்கிற அன்பிற்குரிய ஹானிங்டனையும் மேஜர் பென்னியையும் பார்த்துக்கொண்டிருக்கிறவளுக்கு இந்த இரவு விருந்தின் முக்கியத்துவம் தெரியும். சூழலின் இனிமை, பேச்சிலும் பிரதிபலிக்க வேண்டுமென்று பிரயத்தனப்பட்டாள். காலை முதலே தயாரிப்புகள் தொடங்கிவிட்டன.
பிரிட்டிஷ் அதிகாரிகளின் முதல் அதிர்ஷ்டம், அவர்கள் குடியிருக்கக் கிடைக்கிற வேலைப்பாடுகளுடன் கூடிய பங்களா. பங்களாவில் வேலை செய்ய நியமிக்கப்படும் அபரிமிதமான வேலைக்காரர்கள் அவர்கள் வாழ்நாளில் பார்க்காதது. இங்கிலாந்தில் அவர்கள் அனுபவித்திராதது. ஹானிங்டனைப் போன்ற பிரிட்டிஷ் ரெசிடெண்டுக்கு இரட்டை அனுகூலம். அவர் இரண்டு அரசாங்கங்களின் அதிகாரி. இரண்டு பக்கச் செல்வாக்கும் வசதிகளும் அவருக்குண்டு. சராசரியாக ஓர் அதிகாரியின் வீட்டில் முப்பது வேலைக்காரர்களாவது இருப்பார்கள். யார் யாருக்கு என்னென்ன வேலை என்று கண்காணிப்பதற்கே ஐந்தாறு ஜமேதாரர்கள் இருப்பார்கள். சமையல்காரர் தொடங்கி, பட்லர், மசால்ஜி, ஆயா, பங்கா இழுப்பவர், ஏகாலி, மாடுகளுக்குப் புல் கொண்டு வருபவர், குதிரைக்குக் கொள்ளு வைப்பவர் என பங்களா முழுக்க வேலைக்காரர்கள் நடமாடிக்கொண்டிருப்பார்கள்.
‘அதிகபட்சம் பத்துப் பேர். அதற்குமேல் தேவையில்லை, இல்லையெனில் அவர்களைக் கண்காணிப்பதே நம் வேலையாக இருக்கும்’ என்று ஹானிங்டன் முதலிலேயே ஆட்களைக் குறைத்து விட்டார். உள்ளூர் வேலைக்காரர்கள் என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்ப்பதிலும் அதை வெளியில் பரப்பிவிடுவதிலும் அதிக ஆர்வமாக இருப்பதை மேற்கிந்தியாவில் பிறந்து தென்னிந்தியாவில் பணி செய்கிற ஹானிங்டன் நன்றாகவே அறிந்திருந்தார். ‘உங்கள் ஊர்க்காரர்களுக்கு நன்றாக இயங்கும் உறுப்பு காது மட்டும்தான். யார் என்ன பேசினாலும் அவர்களுக்குக் கேட்டுவிடும். முற்றிலும் பழுதடைந்த உறுப்பு நாக்கு. கேட்டதைத் தவிர்த்து அவர்களாகப் புதிய செய்தியைப் பரப்பிவிடுவார்கள்’ என்று ஓய்வாகத் தோட்டத்தில் உட்கார்ந்திருக்கும்போது குருவாயியிடம் சொல்ல மறப்பதில்லை.
“நீங்கள் ஒருபோதும் மற்றவர்களைக் கவனிப்பதில்லையா?” என்று குருவாயி கேட்டால், “நானும் பிரிட்டிஷ்காரன் என்பதால் சொல்லவில்லை, நீ தலைச்சேரியில் பிறந்து வளர்ந்தவள். அங்கு எத்தனை ஐரோப்பியர்களைப் பார்த்திருப்பாய்? தேவையில்லாமல் அவர்கள் யாரையும் திரும்பிப் பார்க்கக்கூட மாட்டார்கள்” என்பார்.
“மாகே ஜெயிலில் இருந்து நீங்கள் தலைச்சேரிக்கு வரும்போது, படகில் உங்கள் எதிரில் உட்கார்ந்திருந்த என்னைத் திரும்பிப் பார்க்காமல் எப்படிப் பார்த்தீர்களாம்?” என்று கேட்டால், “யு நாட்டி, தேவையில்லாமல் என்று சொன்னேனே டியர்?” என்று தலையில் தட்டிவிட்டு எழுந்து சென்றுவிடுவார்.
ஒருவேளை லாரா எலிசபெத் இந்த பங்களாவில் குடியிருக்க வந்திருந்தால், அவள் ஹானிங்டனைக் கட்டாயப்படுத்தி இன்னும் அதிக வேலைக்காரர்களை வைத்துக்கொண்டிருக்கலாம். ஐரோப்பியப் பெண்களுக்கு பங்களா முழுக்க வேலைக் காரர்கள் வேண்டும். கால் நகத்தைச் சுத்தம் செய்வதற்கும், குளித்துவிட்டு வந்தால் உடம்பு துடைத்து உடையைப் போட்டுவிடவும் வேலைக்காரி களை எதிர்பார்த்து நிற்பார்கள். பிரபுக்களின் ராணிகள் என்று நினைப்பு ஒவ்வொருத்திக்கும். குழந்தை பெற்றாலும் பால் கொடுக்க வெட் மதர் வேண்டும்.
லாராவை ஹானிங்டன் திருவிதாங்கூருக்கு அழைத்து வந்ததில்லை. அவளுடைய பிள்ளைகள் மட்டும் அவ்வப் போது வந்து செல்வதுண்டு. லாரா பாதி நேரம் லண்டனுக்குச் சென்றுவிடுவாள்.
இருபதாண்டுகளுக்குமுன், தலைச்சேரிக்குத் தாவர ஆராய்ச்சிக்காக வந்த ஹானிங்டன், தலைச்சேரியை ஒட்டிய மாகே நதியோரத்தில் வளர்ந்திருந்த செடி கொடிகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். தலைச்சேரி பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்தது. மாகேயில் பிரெஞ்சு அரசாங்கம். ஹானிங்டனைப் பார்த்த பிரெஞ்சுப் படை, பிரெஞ்சுக் குடியிருப்பான மாகேவை வேவு பார்க்க வந்த இங்கிலீஷ்காரன் என்று இவரைச் சுற்றி வளைத்தது. “பாஸ்போர்ட் எங்கே?” என்று கேட்டார்கள். “பாஸ்போர்ட்டா, அது எதுக்கு? நான் நதியோரத்தில் இருக்கும் தாவரங்களை ஆய்வு செய்வதற்காக வந்திருக்கேன்” என்று சொல்லியிருக்கிறார்.
“உன்னைப் பாத்தா பிரிட்டிஷ் மிலிட்டரி மாதிரி இருக்கியே?” என்று சொல்லி, கேள்வி மேல் கேள்வி கேட்டு விசாரித்திருக்கிறார்கள்.
ஹானிங்டனுக்கு அப்போதும் இதே குணம்தான். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்த கவலையில்லாமல், நதியோரம் கிடைத்த மஞ்சள் பூவைக் கையிலெடுத்துக் கொண்டு, ஜெயிலில் போட வந்த பிரெஞ்சு வீரர்களிடம், “இந்த மஞ்சள் பூ பற்றித் தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தார். மாகே ஜெயிலில் அடைத்த பிறகும், ‘மேஜர் காலிபீல்ட்டின் மகன் நான். வேவு பார்க்க வரவில்லை, பிரிட்டிஷ் சர்க்காரில் வேலை செய்கிறேன்’ என்று ஹானிங்டன் சொல்லவில்லை. பிரிட்டிஷ் சர்க்காரில் மேஜர் ஜெனரலாக இருந்தவர் ஹானிங்டன் தந்தை. ‘பொட்டானிஸ்ட்’ என்று சொல்லிக்கொண்டே ஐந்து மாதம் ஜெயிலில் இருந்த ஹானிங்டனைப் பார்த்து, பிரெஞ்சு அதிகாரிகளே குழம்பிப்போய் விடுதலை செய்துவிட்டனர்.
மாகேயில் இருந்து படகிலேறி தலைச்சேரிக்கு வந்த ஹானிங்டனைப் பார்த்தவுடன் குருவாயிக்குப் பிடித்துவிட்டது. ஐந்து மாதம் சிறையில் இருந்ததில் முகம் முழுக்க தாடியும் மீசையுமாக, ஹானிங்டனைப் பார்த்தால் சட்டென்று யாருக்கும் பிடித்துவிடாத தோற்றம். சிரிக்கும் அவருடைய கண்களில் தெரிந்த களங்கமின்மையைப் பார்த்த கணத்தில் குருவாயிக்கு அவர்மேல் ஈர்ப்பு உண்டாகிவிட்டது. ஹானிங்டனுக்குக் குருவாயியைப் பிடித்துப் போனதற்குக் காரணமும் அவரின் தாவரப் பிரியம்தான். படகில் ஏறி உட்கார்ந்தது முதல் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டி ருந்தவரிடம், “எதற்கு அப்படிப் பார்க்கிறீங்க?” என்றாள். “பேரைக் கையில பச்சை குத்துவாங்க, இல்லைனா அவங்களுக்குப் பிடிச்ச படங்களை வரஞ்சிப்பாங்க. நீ என்ன, அபூர்வமா கொகுடிய* (அடுக்குமல்லி) பச்சை குத்தியிருக்கியே?” என்றார்.
ஹானிங்டனுக்குத் திருமணமாகி, குழந்தைகள் இருப்பதும் பின்னர்தான் அவளுக்குத் தெரிந்தது. ஆண்டுக்கொருமுறை பாரக்பூர் சென்று மனைவி லாராவைப் பார்த்து வரும் ஹானிங்டன் தன்மீது வைத்திருக்கும் அன்புக்குப் பெயரில்லை என்பதைக் குருவாயி அறிவாள். குறிப்பாக, நெருக்கடிகளில் குருவாயி உடனிருக்க வேண்டும் ஹானிங்டனுக்கு. “ஷி இஸ் மை கம்பேனியன்” என்று அவர் அறிமுகம் செய்வதில் இரு பொருளும் இருப்பது குருவாயிக்கு மட்டுமே தெரியும்.

அதன்பிறகு மாஜிஸ்ட்ரேட்டாக, கலெக்டராக, பல ஊர்களுக்குப் போய் வந்துவிட்டார். பெரும்பாலும் இந்த மலபார் பகுதியிலேயே அவருக்குப் பதவி உயர்வு கிடைத்தது.
நேரத்தைப் பார்த்தாள் குருவாயி. மழை பெய்திருந்ததில் பொழுதை அனுமானிக்க முடியவில்லை. உள்ளே சென்றுதான் கடிகாரத்தைப் பார்க்க வேண்டும்.
தோட்டத்தைப் பார்த்தாள். கண்ணாடிக் கூடுகள் பொருத்தப்பட்ட மெழுகுவத்திகளின் அலைபாயாத வெளிச்சத்தில் தோட்டம் ஒளிர்ந்தது. மசால்ஜிகள், எரியும் மெழுகுவத்திகளில் உருகிய மெழுகை அகற்றி, வெளிச்சத்தைக் கூட்டினர். பட்லரின் தலைமையில் சமையல்காரர்கள் மேசையைத் தயார் செய்துகொண்டிருந்தனர். பட்லர் ஓராள் ஐந்தாள்களுக்குச் சமம்.
உணவு மேசைக்கு நடுவில் வண்ண ஜாடிகளில் பூக்களை வைத்திருந்தார்கள். பூக்கள் மொட்டவிழும் தருணம். நறுமணம் காற்றில் இருந்தது. தலைச்சேரியில் இருக்கும்போதிலிருந்தே ஒரே கிறிஸ்துவ சமையல்காரர்தான். அவர்தான் இருபது வருடங்களாகச் சமைக்கிறார். ஹானிங்டனுக்கு ஏற்ற பிரிட்டிஷ் உணவும் குருவாயிக்கேற்ற ஈழவ வீட்டுச் சாப்பாடும் செய்துவிடுவார். விருந்துக்கு எல்லாத் தேசத்துச் சாப்பாடும் அத்துப்படி அவருக்கு. உணவின் சுவைக்குக் காரணம் எந்தப் பொருளும் வெளியில் வாங்கிவருவதில்லை. பாலுக்கு ஐந்து எருமைகள், இரண்டு செம்மறியாடுகள். முட்டைக்குக் கோழிப்பண்ணையே இருக்கிறது. அரிதாகத் தேவைப்படும் காய்கறிகள் தோட்டத்தில் விளைகின்றன. மிளகு, தக்காளி, மிளகாய், பழங்கள் எல்லாம் இந்த பங்களாவில் விளைகின்றன.
பென்னி அவருடைய கறுப்புக் குதிரையில் தோட்டத்திற்குள் நுழைந்தார். ராணுவ இன்ஜினீயர் என்பதால் இயல்பிலேயே அவரின் நடை உடை தோற்றத்தில் கம்பீரம் மிகுந்திருந்தது. மெலிந்த உடல்வாகு, அவரின் வயதைக் குறைத்திருந்தது. முட்டிவரை நீண்டிருந்த கம்பூட், ராணுவ அதிகாரி என்பதைக் காட்டியது. குருவாயி தோட்டத்தில் இருப்பதைப் பார்த்த பென்னி, லகானை இழுத்துக் குதிரையின் நடையை நிறுத்தினார். சேணத்தில் கால் வைத்து இறங்கியவர், தொப்பியைக் கழற்றியபடியே குருவாயியை வணங்கினார்.
குருவாயியும் பென்னிக்கு வணக்கம் சொன்னதுடன், விருந்து நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள். சின்னச் சின்ன விஷயங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்திருந்த குருவாயியைப் பாராட்டினார் பென்னி.
“யுவர் எக்ஸலென்ஸி, பிரமாதப்படுத்திவிட்டீர்களே?”
“எனக்குத் தெரியும் பென்னி. நீங்கள் இரவு பகலாக அலைகிறீர்கள். ஒப்பந்தத்திற்கு மகாராஜாவின் ஒப்புதல் வாங்கக் கடும் முயற்சி எடுக்கிறீர்கள். அந்த நற்காரியம் விரைந்து நடக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.”
“யெஸ் யுவர் எக்ஸலென்ஸி.”
“கவலை வேண்டாம் பென்னி. உற்சாகமாக இருங்கள். நற்காரியங்கள் தள்ளிப்போகும். நடக்காமல்போகாது.”
பென்னி, குருவாயியைப் பார்த்துப் புன்னகைத்தார்.
ஒரு கையில் சுருட்டும், மறு கையில் மதுவுமாக அமர்ந்திருந்த ஹானிங்டன், அரைவட்டத்தில் தன்னைச் சுற்றி உட்கார்ந்திருந்த ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்த்தார்.
“திவான், உங்களுடன் வந்திருப்பவர்களை அறிமுகப்படுத்தலாமே... உங்களைத் தவிர மற்றவர்கள் எனக்குப் புதிதாகத் தெரிகிறார்கள்.”
“யுவர் எக்ஸலென்ஸி, இவர் ராமா ராவ், கோட்டயம் பகுதி பேஷ்கார் திவான். இவர் ஜேம்ஸ் வில்சன், சீப் இன்ஜினீயர். இவர் குருவில்லா ஜோசப், மராமத்து செக்ரட்டரி. இவர் ஜேக்கப், காட்டிலாகா அதிகாரி...” ராமய்யங்கார் தன்னுடன் வந்திருந்த ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தினார். அனைவரும் ஹானிங்டனையும் பென்னியையும் வணங்கினர்.
“நாம் பேசி முடித்தவுடன் குருவாயி சுடச்சுட உணவு பரிமாறத் தயாராக இருக்கிறாள். ராமய்யங்காருக்குத் தனிச் சாப்பாடு, தனி இடம் தயாராக இருக்கிறது.”
“யுவர் எக்ஸலென்ஸிக்கு என்னுடைய நன்றி. நான் பொதுவாக விருந்துகளில் உணவுண்பதில்லை. யுவர் எக்ஸலென்ஸிக்கும் தெரியும்.”
“தெரியும் அய்யங்கார். ஹர் மெஜஸ்டி, இங்கிலாந்து ராணி உங்களை லண்டன் அழைத்த போதும் நீங்கள் போகவில்லையே. சமுத்திரத்தைக் கடக்கக் கூடாது என்ற உங்கள் மதநம்பிக்கையை நான் அறிவேன். அய்யங்கார் சமையல்காரர்தான் உங்களுக்குச் சமைச்சிருக்கார். நீங்க தாராளமா சாப்பிடலாம்.”
ராமய்யங்கார் நெளிந்தார்.
“சங்கடம் கொடுக்கிறேன். மன்னிக்க வேண்டும். என்னுடைய தனிப்பட்ட பழக்கவழக்கம். மாற்றிக்கொள்ள முடியவில்லை யுவர் எக்ஸலென்ஸி.”
“ஏன் மாத்திக்கணும்? நீங்க உங்க சுதந்திரத்தோட இருக்கலாம். நீங்க எங்களோடு சாப்பிட மாட்டீங்களேன்னு நாங்க எங்கள மாத்திக்கிறமா, இல்லையே?”
திவான் முகம் இயல்பானது.
ஹானிங்டன் எப்போது அணை பற்றிப் பேச ஆரம்பிப்பார் என்பதுபோல் பென்னி அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“வெளிப்படையாச் சொல்லுங்க, பெரியாறு திட்டத்தைப் பத்தி நீங்க எல்லாரும் என்ன நினைக்கிறீங்க?”
பென்னியின் கவலை பார்த்து ஹானிங்டன் சட்டென்று பேச்சை ஆரம்பித்தார்.

“திவானுக்குத் தெரியும், மத்தவங்களுக்கு?”
ஹானிங்டன் பேச்சை ஆரம்பித்தவுடன் எல்லார் முகங்களிலும் கவனம் கூடியது.
“முதல்ல அணை கட்டப்போற இடம் எங்க இருக்குன்னு உங்க அதிகாரிகளுக்குத் தெரியுமா மிஸ்டர் திவான்?”
பென்னி நேற்று தன்னைக் கேட்டதில் அதிர்ந்த ஹானிங்டன், அதே அதிர்ச்சியை மற்றவர்களுக்கும் கொடுக்க நினைத்தார்.
“காட்டிலாகா அதிகாரிக்கு?”
ஜேக்கப் தடுமாறினார்.
“யுவர் எக்ஸலென்ஸி...?”
காதில் விழாததுபோல் ஹானிங்டனிடம் மீண்டும் கேட்டார்.
“அணை கட்டப்போற இடம் எதுன்னு உங்களுக்குத் தெரியுமா?”
“மேல்மலையில் இருக்கு யுவர் எக்ஸலென்ஸி.”
“மேல்மலையில் எங்க?”
“அடர்ந்த காட்டுக்குள்ள...”
“மலை முழுக்கவே அடர்ந்த காடுதான். ஆனா எவ்ளோ உயரத்தில், எதற்குப் பக்கத்தில், குமுளிக்கு மேற்கா கிழக்கா? நீங்க அந்த இடத்துக்குப் போயிருக்கீங்களா?”
“போனதில்ல யுவர் எக்ஸலென்ஸி, கேள்விப்பட்டிருக்கேன்.”
“சரி, பெரியாறு ஓடிவருகிற இடமாவது தெரியுமா?”
எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.
“மராமத்து செக்ரட்டரிக்குத் தெரிஞ்சிருக்கணுமே?”
“மெட்ராஸ் பிரசிடென்சியில் தென்காசி பக்கம், இதே மேல்மலையில இருக்கிற சிவகிரியில இருந்து பெரியாறு உற்பத்தியாகுதுங்க யுவர் எக்ஸலென்ஸி.”
“சரிதான். நூறடி அகலத்தில் ஓடிவர்ற பெரியாறும் எழுபத்து நாலடி அகலத்தில் ஓடி வர்ற முல்லையாறும் முல்லையாறு தவளத்தில் ஒன்னா சேருது. இரண்டும் சேர்ந்து பெரிய காட்டாறா காட்டுக்குள்ள ஓடிவர்ற இடத்துலதான் பெரியாறு அணை கட்ட திட்டம் கொடுத்திருக்கிறோம். பெரியாறுல அணை கட்டினாலும் தண்ணிய மொத்தமா கிழக்கில் திருப்ப முடியாது. திருப்பினா மலைக்குக் கீழே மெட்ராஸ் பிரசிடென்சியில் இருக்கிற வைரவனாறும் தாங்காது. சுருளியாறும் தாங்காது. ஓடிவர்ற தண்ணியில சின்னப் பகுதியைத்தான் மதுரைக்குத் திருப்பப் போறோம். அது கடல்ல வருஷா வருஷம் வீணாக் கலக்கிற தண்ணியில பத்து சதவிகிதம்தான்” பென்னி விரிவாகச் சொன்னார்.
“வீணாக் கலக்கிறதுன்னு சொல்ல முடியுமா மேஜர் பென்னி? கடல் வரைக்கும் வெள்ளம் ஓடினாத்தானே, வழியில இருக்கிற மண்ணெல்லாம் வளமாவும்? இல்ல, உப்பாத்தானே போவும்?” குருவில்லா கேட்டார்.
“நான்தான் பத்து சதவிகிதம்னு சொன்னேனே?”
“பத்து சதவிகிதம்னாலும், எங்க சமஸ்தானத்துக்குள்ள பெரியாறு ஓடிவர்ற வழி முழுக்க நெல் விவசாயம் நடக்குமே? அதுக்குத் தண்ணி இல்லாமப்போனா?”
“திருவிதாங்கூர்ல வருஷம் முழுக்க மழை பெய்யுதே மிஸ்டர் குருவில்லா? மழை பெய்யாதது வெறும் மூணு மாசந்தான்.”
திவான் யோசனையுடன் தலைப்பாகையைக் கழற்றித் தலையைத் துடைத்தார்.
“இங்க குறுக்கிடுறதுக்கு மன்னிக்கணும். திருவிதாங்கூர் எப்பவுமே வளமா இருக்கு. ஆனா நீங்க ஏன் அரிசி, பால், காய்கறியெல்லாம் மெட்ராஸ் பிரசிடென்சியில இருந்து வாங்குறீங்க?” ஹானிங்டன் சந்தேகம் எழுப்பினார்.
யாரும் பதில் சொல்லவில்லை.
“பதில் இல்லையென்றால் பரவாயில்லை. பென்னி, நீ தொடர்ந்து பேசு.”
“திருவிதாங்கூருக்குப் பயன்படாமல் அபரிமிதமாகப் போற தண்ணீரைத்தான் நாங்க பயன்படுத்தப்போறோம்.”
“அதெப்படி மேஜர், எல்லா வருஷமும் நிறைய மழை பெய்யுமா? தண்ணி அபரிமிதமாவே எப்பவும் இருக்குமா? மழை குறையுற நேரத்தில் அணையில தண்ணி நிறுத்தித்தானே ஆகணும்?”
“நாங்க பத்து வருஷமா மேல் மலையில பெய்யுற மழையளவைக் கணக்கெடுத்தி ருக்கோம். அதுல எந்த வருஷம் ரொம்ப ரொம்பக் குறைவான மழையளவு கிடைச்சதோ அந்தக் கணக்க வச்சுதான், கட்டப்போற அணையோட உயரத்தையே முடிவு பண்ணியிருக்கோம்.”
“திருவிதாங்கூருக்குள் ஓடிவரும் பெரியாற்றின் வெள்ளத்தில்தான் வெட்டப் பட்ட பெரிய பெரிய மரங்களைத் தள்ளி விடுவாங்க. செலவின்றி ஆண்டு முழுவதும், மரக்கட்டைகளை ஆலவாய்க்குக் கொண்டுவந்து சேர்த்துவிடும். பெரியாற்றின் வெள்ளத்தைத் திருப்பிவிட்டால், மரங்களைக் கொண்டுபோறதும் கஷ்ட மாயிடுமே?”
“ஜேக்கப், நான் சொல்றது புரியுதா இல்லையா?”
“மொத்த நீரையும் திருப்பலைன்னு சொன்னாரே ஜேக்கப்?” பென்னி கோபப்பட்டு விடப்போகிறார் எனக் குறுக் கிட்டார் திவான் ராமய்யங்கார்.
“தண்ணியும் அணை கட்ட இடமும் கொடுத்தால் மெட்ராஸ் பிரசிடென்சிக்கு வருவாய்.எங்களுக்கென்ன அதில் லாபம் மிஸ்டர் பென்னி?”
“எத்தனையோ முறை இதுகுறித்துப் பேசியிருக்கிறோம் ராமா ராவ்.”
“பேசியதில் தெளிவில்லை என்பதால்தானே இந்தக் கூட்டம் மேஜர் பென்னி குக்?”
ராமா ராவ்க்கு வாய் நீளம் என்று நினைத்தார் பென்னி. ஹானிங்டனைப் பார்த்தார். பென்னி எதிர்பார்த்ததுபோலவே, ஐஸ் கட்டிகள் எடுத்து மதுக் கோப்பைக்குள் போட்டுக் கொண்டிருந்தார். பிரிட்டிஷ் அரசாங்கமும் அவர் பதவியும் பலவீனமாகத் தோன்றும் இந்தக் கணத்தைக் கவனிக்காதது போலவே நடந்துகொண்டார்.
“புதிய அரசர் ஹிஸ் எக்ஸலென்ஸி, மூலம் திருநாளும் இதுகுறித்து மீண்டும் பேச வேண்டுமென்று விருப்பம் தெரிவித்தார் யுவர் எக்ஸலென்ஸி.”
ஹானிங்டன் நிமிர்ந்து பார்த்தார்.
“வரும் வருவாயின் லாபத்தில் சரிபாதி இரண்டு சர்க்காரும் எடுத்துக்கொண்டால் என்ன மேஜர் பென்னி?”
“நாங்கள் முதலீடு செய்வோம். வருவாயில் உங்களுக்குச் சமபங்கா? நன்றாக இருக்கிறது அய்யங்கார்.”
“மூலதனமும் எங்களுடையதுதானே யுவர் எக்ஸலென்ஸி?” ஹானிங்டனை உதவிக்கு அழைத்தார் ராமய்யங்கார்.
“ஓ... தண்ணீருக்கு விலை வைக்கிறீர்களா?”
“தண்ணீருக்குத்தானே இவ்வளவு முயற்சி எடுக்கிறீர்கள்?”
“ஹிஸ் எக்ஸலென்ஸி மெட்ராஸ் கவர்னரும், கல்கத்தா வைஸ்ராயும் லாபத்தில் சமபங்கு என்பதை ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை.”
அடுத்து என்ன பேசுவது என்பதுபோல் பார்த்தார் திவான்.
“எனக்குத் தோன்றும் ஒரு யோசனை. அதுவும் கவர்னரின் அனுமதி பெற வேண்டும். வரும் வருவாயில், அணை கட்ட நாங்கள் செலவழிக்கப்போகும் முதலீட்டுக் கான வட்டித் தொகையைக் கழித்துக்கொண்டு, மீதமுள்ள வருவாயில் சரிபாதியை இரண்டு சர்க்காரும் சரிசமமாகப் பிரித்துக்கொள்ளலாம்.”
“அதெப்படி யுவர் எக்ஸலென்ஸி?” சந்தேகம் எழுப்பியவாறே, “வட்டி எத்தனை சதவிகிதம் யுவர் எக்ஸலென்ஸி?” என்றார் திவான்.
“எட்டு சதவிகிதம்.”
“ஒன்றும் மிஞ்சாது.”
“உண்மை நிலவரம் உங்களுக்கும் புரியுதில்லையா? வறண்ட பூமிக்கு உயிர் கொடுக்கத்தான் தண்ணீர் கேட்கிறோம். பெரியாற்றின் தண்ணீரைக் கொண்டு சென்று லாபம் சம்பாதிக்க அல்ல.”
“விவசாயிகளுக்கு நீங்கள் சும்மாவா தண்ணி கொடுக்கப்போறீங்க மேஜர் பென்னி?”
“திவான், உங்களுக்கே தெரியும், விவசாயிகள் கொடுக்கப்போற தொகையில், கால்வாய் கட்டும் செலவை அடைக்கவே பத்து வருஷமாகும்.”
“பிறகெதற்கு பிரிட்டிஷ் சர்க்கார் இவ்வளவு முயற்சி செய்கிறது?”
“யுவர் எக்ஸலென்ஸி, இருக்கிற பிரச்சினையைக் குறைக்க முடியுமா என்பதற் காகத்தான் இந்தச் சந்திப்பு. அதிகப்படுத்தவோ, புதிய பிரச்சினைகளை உண்டாக்கவோ அல்ல.”
“ஹிஸ் எக்ஸலென்ஸி மகாராஜா என்ன எதிர்பார்ப்பில் இருக்கிறார் என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள் திவான்.”
ஹானிங்டன் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார். கொஞ்சம் மதுவருந்தியிருந்தார்.
“யுவர் எக்ஸலென்ஸி, நீங்கள் வெளிப்படையாகப் பேசுவதால் நானும் சொல்கிறேன். முதல் விஷயம், மதுரைக்குத் திருப்பிவிடப்படும் தண்ணீர் திருவிதாங்கூருக்குப் பயனில்லாத நீர் என்று சொல்கிறீர்கள். 999 வருடக் குத்தகை. 999 வருடமும் இந்த நிலையே இருக்குமென்று சொல்ல முடியாது. எங்களுக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, கடலில் கலக்கும் தண்ணி எங்களுக்குச் சொந்தமானது.”
ஹானிங்டனும் பென்னியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். திவான் தீர்மானமாக வந்திருக்கிறார் என்றறிந்தார்கள்.
“இரண்டாவது, அணை கட்டப்போகிற இடம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குச் சொந்தமானது. அந்த இடம் எங்கள் பார்வையில் இருக்கிறதா, பராமரிப்பில் இருக்கிறதா என்பதெல்லாம் விவாதத்திற்குரியதல்ல. மூன்றாவது, நீங்கள் கேட்டுக்கொள்கிறபடி நாங்கள் உங்களுக்கு உதவ வேண்டுமென்றால், எங்களுக்கு அதில் நன்மை இருக்க வேண்டும்.”
“அணை நீரை, மெட்ராஸ் பிரசிடென்சிக்குக் கொடுப்பதைப் போலவே, திருவிதாங்கூருக்கும் நாங்கள் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். உங்களுக்கு வேண்டிய நீரை நீங்களும் பயன்படுத்தலாம் அய்யங்கார்.”
“இவங்ககிட்ட மிதமிஞ்சி இருக்கிறது தண்ணிதான்” பென்னியின் குரலில் சலிப்பு.
“மெட்ராஸ் பிரசிடென்சியில் ஒரு ஏக்கருக்கு என்ன விலை நிர்ணயம் செய்கிறோமோ அதே விலையில இங்கேயும் கொடுக்கலாம்.”
“எங்க தண்ணியவே நாங்க காசு கொடுத்து வாங்கணுமா மேஜர்? பிரமாதம்.”
“சரி, நீங்க சொல்லுங்க திவான்” ஹானிங்டன்.
“யுவர் எக்ஸலென்ஸி, மொத்தமா ஏழு லட்சம் கொடுத்துடுங்க. வருஷ குத்தகைல்லாம் வேணாம். நாங்க முன்பு கேட்ட மாதிரி இரண்டு கோட்டைகள், அதாவது அஞ்சாங்கோவையும் தலைச்சேரியையும் சமஸ்தானத்துக்குக் கொடுக்கணும். சேர்த் தலையில இருக்க பாட்டம் தோட்டத்தையும் கார்த்தியாயினி கோயிலையும் புதிய அரசர் விரும்புகிறார்.”
“ஏழு லட்சமா?”
“ஆமாம் யுவர் எக்ஸலென்ஸி.”
“நாங்களென்ன விலைக்கா கேட்கிறோம் அந்த இடத்தை? உங்க மகாராஜா அரியணை ஏறும்போது, ஒவ்வொரு ஊர்லயும் கிணறு தோண்டவும், இருக்கிற நீர்நிலைகளைச் சரிசெய்யவும் வருஷத்துக்கு ஆயிரத்தைந்நூறு ரூபாய் ஒதுக்குகிறேன் என்று முதல் கையெழுத்து போட்டாரே? ஏழு லட்சம் இருந்தால் அரபிக் கடலையே தூர தூக்கி வச்சிடலாமே?”
“விலைக்கே வாங்கிவிடலாம் யுவர் எக்ஸலென்ஸி. இவர்களுடன் பேசிப் புரிய வைக்க முடியவில்லையே?”
“பேச்சுவார்த்தையில் இரண்டு தரப்பும் விட்டுக்கொடுத்தால்தான் இரு தரப்பும் ஒரே திசை நோக்கி நகர்கிறோம் என்று பொருள்.”
“விளக்கமெல்லாம் நன்றாகச் சொல்லுங்கள். காரியத்தில்தான் ஒன்றுமில்லை.”
“யுவர் எக்ஸலென்ஸி, நான் வெறும் சொல். ஏவப்பட்ட அம்பு.”
“உங்கள் ஊரில் உற்சவருக்குத்தான் விசேஷ அலங்காரம் என்பதை அறிவேன் அய்யங்கார்.”
திவானின் முகத்தில் லேசான புன்னகை.

“எல்லைகளெல்லாம் மனுஷங்களுக்குத்தான், இயற்கைக்கு இல்லை. நம்மோட பாகுபாடுகளை, இயற்கைகிட்ட காட்ட வேண்டியதில்லை. பெரியாறு மெட்ராஸ் பிரசிடென்சியில் சிவகிரி மலையில் உற்பத்தியாவுது. அப்போ இது எங்களுக்குத்தான் சொந்தம்னு திருநெல்வேலி கலெக்டர் அங்கேயே நிறுத்தி வச்சிக்க முடியுமா? மேற்கு மலை குஜராத் எல்லையில் தபதி ஆத்துக்குத் தெற்கில் ஆரம்பிக்குது. எங்க மலையை யாரும் தொடக்கூடாது என அவர்கள் சொல்ல முடியுமா? இயற்கையை உரிமை கொண்டாடுவதை விட்டு, இயற்கையை எல்லோரும் பயன்படுத்திக்கொள்வதை மட்டும் பேசுங்க. மனுஷங்க உண்டாக்கின எல்லைகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். ஆற்றின் போக்கும் மாறலாம். இரண்டு சர்க்காருக்கும் நல்லதை மட்டும் நினைத்துப் பேச்சைத் தொடருங்க திவான்.”
“இப்போதைக்கு ஆற்றுநீர் எங்களுக்குச் சொந்தம். அதை நீங்கள் கேட்கிறீர்கள். அதற்கான மொத்தக் குத்தகையையும் நாங்கள் கேட்கும் கோட்டைகளையும் கொடுக்க ஏற்பாடு செய்தால், உடனடியாக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்.”
“அப்படியெனில், உங்கள் ஆட்கள் மேல்மலையையும் பெரியாற்றையும் ஆய்வு செய்யச் செல்ல வேண்டாம்தானே?” ஹானிங்டன் உறுதிபடுத்திக் கொள்ளக் கேட்டார்.
“அதற்கு யுவர் எக்ஸலென்ஸி ஒப்புதல் கொடுத்துவிட்டீர்கள் என்று தம்புராட்டி சொல்லிவிட்டார். அதில் மாற்றமில்லை. தம்புராட்டி இன்னொரு கோரிக்கை மட்டும் வைக்கச் சொன்னார். பிரிட்டிஷ் சர்க்காருடைய ராயல் இன்ஜினீயர்களை எங்கள் குழுவுடன் அனுப்ப வேண்டும். அதற்கு யுவர் எக்ஸலென்ஸி ஏற்பாடு செய்ய வேண்டும்.”
“தொண்ணூறு வருஷமா நாங்க மேல்மலையைப் பாத்துக்கிட்டு இருக்கோம் திவான்.”
பென்னியின் குரலில் எரிச்சல் மேலோங்கியது.
“நாங்கள் ஒருமுறையும் பார்த்ததில்லையே. நேரில் சென்று பார்த்தால்தானே எங்களுக்கும் புரியும்.”
“பார்ப்பதற்குமுன் எதற்கு இத்தனை பேரம் பேசுகிறீர்கள்?”
“அழைத்தது ஹிஸ் எக்ஸலென்ஸி ரெசிடெண்ட், மேஜர் பென்னி.”

“எங்கள் அறிக்கையை லண்டனில் இருக்கும் இந்தியப் பேரரசுக்கான செயலரே அனுமதித்துவிட்டார்.”
“உடையவர்கள் நாங்கள்தான். பூஞ்சாறு அரசரின் இடம், எனவே நாங்கள் சம்மதிக்கவில்லையென்றால், பூஞ்சாறு அரசரிடம் ஒப்பந்தம் செய்யவிருப்பதாகவும் கேள்விப்படுகிறோம். தாராளமாகச் செய்யலாம். காரணம், அணை கட்டத் தேவைப்படுவதாக நீங்கள் சொல்கிற நூறு ஏக்கர் இடம் மட்டும்தான் அவருக்குச் சொந்தமானது. அணை நீர் தேங்கி நிற்க நீங்கள் கேட்கும் எட்டாயிரம் ஏக்கர் இடம் எங்கள் சமஸ்தானத்திற்குச் சொந்தமானது. பிரிட்டிஷ் பேரரசு இரண்டு செலவு செய்யத் தயாரென்றால் தாராளமாக நீங்கள் பூஞ்சாறு அரசரை இதற்குள் இழுத்துவிடலாம்.”
ஹானிங்டனும் பென்னியும் முகம் இறுகி உட்கார்ந்திருந்தார்கள்.
“எங்கள் குழுவோடு பிரிட்டிஷ் இன்ஜினீயர்களை அனுப்ப ஏற்பாடு செய்கிறீர்களா யுவர் எக்ஸலென்ஸி?”
திவான் ராமய்யங்காரின் குரலில் லேசான கேலி தெரிந்தது.
- பாயும்...