
யதேச்சையாக நடந்ததுதான். வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வருவேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை மேஜர். சாப்பாட்டுக்கே வழியில்லாத குடும்பம் எங்களுடையது.
“மேஜர் பென்னியின் திடீர் வருகை எனக்கு வியப்பளிக்கவில்லை.”
திவான் வெம்பாக்கம் ராமய்யங்கார், தன்னுடைய மதராசப்பட்டினம் பங்களாவின் வரவேற்பறையில் பென்னியை அமரச் சொன்னார்.
“திருவிதாங்கூரின் திவானை, மெட்ராஸ் பிரசிடென்சியில் பார்க்க வருவதில் வியப்பில்லையா?”
“அனந்தபுரத்தில் நாமிருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பில்லையென்றாலும், உங்களை நான் அறிவேன் மேஜர்.”
“திவானின் வீடு போலவே இல்லையே? ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னரின் கிண்டி லாட்ஜுக்கு வந்ததுபோல் இருக்கிறதே? பிரிட்டிஷ் கவர்னரைவிட அதிக செல்வந்தராக இருப்பீர்கள் போலிருக்கிறதே?”
“அதிகம் புகழ்கிறீர்கள் மேஜர். பிரிட்டிஷ் மாதிரியில் பங்களா கட்ட வேண்டுமென்பது என் விருப்பம். இரண்டு வருஷம்தான் ஆகிறது, கட்டி முடித்து.”
திவான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பென்னி, பங்களாவைப் பார்வையில் அளந்தார். பிரிட்டிஷ் பாணியில் நுழைவாயிலில் பெரிய சோபாக்களும் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. வரவேற்பறை தனியாக இருந்தது. பிரிட்டிஷ் பங்களாக்களைப் போலவே அறையின் வாசலில் ஒரு பங்கா புல்லர் உட்கார்ந்திருந்தான். கைகள் மட்டும் பெருத்து, கூன் போட்டிருந்த அவன் முதுகைப் பார்க்கும்போது, பல ஆண்டுகளாக அவன் காற்றாடியின் கயிற்றை இழுத்துக்கொண்டிருக்கின்றான் என்று நினைத்தார் பென்னி.
“அருமை. கலைநயத்துடன் பங்களாவைக் கட்டியிருக்கிறீர்கள். ரசிக்கும் மனநிலையில் ஓய்வாக வரவில்லை என்பது மட்டும்தான் என் குறை.”
“திருமதி பென்னியையும் அழைத்துக்கொண்டு ஒருநாள் மாலை விருந்துக்கு வாருங்கள். வழக்கமான திவான்களைப் போலவோ, துபாஷிகளைப் போலவோ நானிருக்க மாட்டேன். ஐரோப்பியர்கள் என் வீட்டினுள்ளே வரலாம். ஆகாரம், தண்ணீர் புழங்கலாம். நீங்கள் எவ்வாறு எனக்குத் தனி சமையற்காரர் வைக்கிறீர்களோ, அதேபோல் உங்களுக்குச் சமைக்க ஆள் வைத்திருக்கிறேன். அனந்தபுரம் வந்ததில் இருந்துதான் விருந்துகள் இல்லை. கொஞ்சம் இடைவெளி. என் வீட்டுப் பெண்களும், என் மனைவி, மருமகள்கள் அனைவருமே விருந்தில் கலந்துகொள்வார்கள். அவர்கள் நன்றாக இங்கிலீஷில் சம்பாஷணை செய்வார்கள்.”
“பாராட்ட வேண்டிய விஷயம்தான். திவான், நான் இப்போது எதற்காக வந்திருக்கிறேன் என்று தெரியும்தானே?”
“பங்களாவுக்குள் நான் வந்த இரண்டு நாழிகை நேரத்திற்குள் நீங்களும் உள்ளே வருகிறீர்கள். அப்படியெனில் விஷயம் அவசரம் என்று புரிகிறது.”
“அவசரம் இல்லை, அவசியம்.”
“சொல்லுங்கள் மேஜர்.”
“இன்னும் எதற்கு இழுத்தடிக்கிறீர்கள்?”
திவான் அமைதியாக இருந்தார்.
“மகாராஜா விசாகம் திருநாள் திட்டம் பற்றி முழுவதுமாக விவாதித்து, விரிவாகப் பேசி முடித்துக் கையெழுத்துப் போட சம்மதிக்கிற நேரத்தில்தானே எதிர்பாராமல் இறந்தார்? அவர் இறந்த துக்கம் மாறக் காத்திருந்தோம். அதுவரை சரி. புதிய அரசரிடம் நடந்ததைச் சொல்லி, கையெழுத்து வாங்க வேண்டியது உங்களின் கடமையல்லவா திவான்? அதை விட்டு, அணை கட்டுகிற இடத்தை உங்களின் வல்லுநர்கள் போய்ப் பார்த்துப் புதிதாக என்ன சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?”
“நான் சொந்த வேலையாகப் பட்டினம் வந்திருக்கிறேன் மேஜர்.”
“எனக்குச் சொந்த வேலை, அரசாங்க வேலை என்று தனித்தனியாக ஒன்றுமே இல்லை அய்யங்கார். மெட்ராஸ் பிரசிடென்சியைச் சேர்ந்த உங்களுக்குத்தான் இந்தத் திட்டத்தில் அதிக அக்கறை இருக்க வேண்டும்.”
“நான் அக்கறையில்லாமல் இருக்கிறேன் என்று சொல்கிறீர்களா?”
“உங்களுக்கு அக்கறை குறைவு என்கிறேன். உங்களைப் போன்றவர்களால்தான் திட்டம் தாமதமாகிறது. உங்கள் வகுப்பு நண்பர், சமஸ்தானத்தின் புகழ்பெற்ற திவான் மாதவ்ராவ் தானே பெரியாறு அணைக்கு எதிரான முதல் எதிர்ப்பைத் தெரிவித்தவர்?”

திவான் நிமிர்ந்து பார்த்தார்.
“உங்களுக்கு மறந்திருக்காது அய்யங்கார். மெட்ராஸ் பிரசிடென்சிக்குப் பெரியாற்றின் நீரைப் பகிர்ந்துகொடுத்தால், திருவிதாங்கூருக்குக் கிடைக்கும் பலன்கள் குறைந்துபோகுமென்று சொன்னவர் அவர்தானே?”
“அந்தப் பொருளில் அவர் சொல்லவில்லை மேஜர். திருவிதாங்கூருக்கும் பலன் வேண்டுமென்றுதான் சொன்னார்.”
“திவான் மாதவராவை விட்டுக் கொடுப்பீர்களா? உங்கள் நண்பரல்லவா? அதெப்படி ஒரே வகுப்பில் படித்த ஐந்து பேரும், அதிகாரமிக்க பதவிகளுக்கு வந்தீர்கள், ஆச்சரியமாக இருக்கிறதே?”
“யதேச்சையாக நடந்ததுதான். வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வருவேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை மேஜர். சாப்பாட்டுக்கே வழியில்லாத குடும்பம் எங்களுடையது. வெம்பாக்கம் என்றொரு சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தேன். சிறு வயதில் நான் பெரிய சீக்காளி. பாலாற்றின் கரையில் இருக்கும் சீவரத்தில் தாய்மாமாவின் வீட்டில்தான் பெரும்பாலும் இருந்திருக்கிறேன். குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் சாப்பாடு கொடுப்பதே பெரிய போராட்டம் எங்கள் அம்மாவுக்கு. உயர்கல்விக்காகத்தான் நான் பூந்தமல்லி வந்தேன். பசியோடு இருந்தாலும் படித்தே ஆக வேண்டுமென்று என் அம்மா கொடுத்த உத்வேகம்தான் நான் இன்றைக்கு இருக்கும் நிலைமைக்குக் காரணம். மாதவராவ் நிலைமை வேறு. அவரின் அப்பாவும் தாத்தாவும் திவானாக இருந்தவர்கள். கும்பகோணத்தின் புகழ்பெற்ற மராட்டிய பிராமணக் குடும்பம்.”
“பள்ளியில் உங்களோடு படித்த மற்ற மூன்று பேர்?”
“மெட்ராஸ் ஹைகோர்ட்ல ஐரோப்பியர் தவிர்த்து, முதன்முதலாக வக்கீலான சடகோபாலாச்சாரி, அவர்தான் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலுடைய முதல் உறுப்பினர். பிரிட்டிஷ்காரங்க மட்டும் இருந்த இடத்தில் முதல் தமிழர். திருவிதாங்கூர் சீப் கோர்ட்ல ஜட்ஜா இருந்த சதாசிவ பிள்ளை... நாங்க நான்கு பேர்தான் படிப்பை முடிச்சவங்க. எங்களுடன் படித்த தீனதயாளன் நாயுடு நிறைய படித்துப் படித்து, மகாராஜாவோட சகோதரர் போலவே மனநிலை குழம்பி, இறந்தே போயிட்டார். எங்க வகுப்பில் ஒரே ஒரு ஐரோப்பியரும் இருந்தார். பின்னால் அவர் பெரிய கல்வியாளரானார்.”
“ஒரே வகுப்பில் படித்த நீங்கள் நான்கு பேரும் கூட்டுச் சேர்ந்திருந்தால் பரோடா, மெட்ராஸ், திருவிதாங்கூர்னு மூன்று சர்க்காரைக் கைப்பற்றியிருக்கலாம் போலிருக்கிறதே?”
“எல்லாம் பெருமாளின் அனுக்கிரகம்.”
“ஓ... அப்படியும் ஒரு விருப்பம் இருந்திருக்கிறதா? இருக்கட்டும். வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாகக் கேட்கிறேன். புதிய அரசர் பதவி யேற்றுள்ள நிலைமையில் இவ்வளவு அவசரமாக நீங்கள் மெட்ராஸ் வரவேண்டிய காரணமென்ன?”
“மேஜர் ராணுவத்திலும் பணி செய்வதால், ரகசியங்கள் அறிவதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறதே?”
“உங்களைக் கேட்காமலேயே என்னால் காரணம் கண்டறிய முடியும் அய்யங்கார். படைத்தளபதிகள் ரகசியங் களைக் கேட்டறிய மாட்டார்கள்.”
“அல்ப காரணம்.”
“அல்ப காரணம் என்றால்?”
“முக்கியமில்லாதது என்று சொல்கிறேன் மேஜர்.”
“சொல்லுங்கள் திவான்...”
“என்னுடைய பேரனுக்கு யானை என்றால் வெகு பிரியம். நான் ஊருக்கு வரும்போதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்காக மலபார் யானைக்குட்டியொன்று வாங்கி வந்தேன்.”
பென்னி சத்தம் போட்டுச் சிரித்தார். பென்னி சிரிக்கும் சத்தம் கேட்டு, உள்ளே இருந்து ஐந்தாறு வயதுடைய குழந்தையொன்று எட்டிப் பார்த்தது.
“பத்மநாபா... இங்கே வா” அய்யங்கார் பேரனை அழைத்தார்.
தயங்கியபடியே வந்த குழந்தை, ராமய்யங்காரின் அருகில் வந்து நின்றது.
“உனக்குத்தான் யானை வந்திருக்கிறதா யங் பாய்?”
பென்னியின் தமிழ் அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
தலையாட்டிவிட்டு, பத்மநாபன் கூச்சத்துடன் உள்ளே ஓடினான்.
“கெடுபிடியான திவான், பேரனுக்காக யானைக் குட்டியை வாங்கிக்கொண்டு, முந்நூறு மைல் பயணம் செய்து வருகிறார்.”
திவான் முகத்தில் மந்தகாசம்.
“நான் பார்த்தவரை அய்யங்கார் இரண்டு குணங்களோடு இருக்கிறீர்கள். முரட்டுப் பிடிவாதம், உருகும் மனசு. இரண்டுமே உங்களிடம் சமவிகிதத்தில் இருக்கிறது.”
“இந்தக் குணங்களோடுதான் நான் குடும்ப வறுமையைப் போக்கி, இந்த உயரங்களை அடைந்திருக்கிறேன். என் காலம் முடியப் போகிறது. இனி மாற்றிக்கொள்ள என்ன இருக்கிறது?”
“உங்கள் உயரங்களை விடுங்கள் அய்யங்கார். எங்களிடம் முரட்டுப் பிடிவாதத்தைக் காட்டுகிறீர்களே? மெட்ராஸின் பஞ்சத்தை நேரில் பார்த்தவர் நீங்கள். பெரியாற்றின் தண்ணீரைத் திருப்பிவிட்டால் மதுரை, ராமநாதபுரம் மக்கள் பிழைத்துப் போவார்கள். துன்பப்படுவதற்காவது அவர்கள் பிழைத்திருக்க வேண்டு மல்லவா?”
“அதுவே என் விருப்பமும் மேஜர்.”
“அப்படியெனில் இந்தத் திட்டம் நீங்கள் சமஸ்தானம் திரும்பியவுடன் கையெழுத்தாகணும். அதற்கு வழி செய்யுங்கள்.”
“மெட்ராஸ் பிரசிடென்சியும் திருவிதாங்கூர் சமஸ்தானமும் சம்பந்தப்பட்ட இவ்விஷயத்தில் நானொரு கருவி மட்டும்தானே? அரசர் சொல்வதைச் செய்வேன்.”
அய்யங்காரை பென்னி உற்றுப் பார்த்தார். அய்யங்கார் பென்னியின் பார்வையைச் சந்திக்க முடியாமல் தலை தாழ்த்தினார்.
“அஞ்சுதெங்கு கோட்டையையாவது விட்டுக்கொடுக்கச் சொல்லுங்கள். ஒப்பந்தத்தில் அடுத்த நாழிகையிலேயே நான் கையெழுத்து வாங்கித் தருகிறேன்.”
“பேச்சு மட்டும்தான் முற்றுப்புள்ளி அற்றது திவான். நீங்கள் எதற்காக மெட்ராஸ் வந்திருக்கிறீர்கள் என்பதை நான் சொல்கிறேன்.”
“சொன்னேனே மேஜர், யானைக் குட்டி வந்து கொண்டிருக்கிறது.”
“நீங்கள் ஹிஸ் எக்ஸலென்ஸி மெட்ராஸ் கவர்னரைப் பார்க்க தனிப் பயணமாக வந்திருக்கிறீர்கள்.”
திவான் அதிர்ந்து நின்றார்.
கிண்டி கவர்னர் லாட்ஜின் முன்வராந்தாவில் பென்னி குக் காக்க வைக்கப்பட்டிருந்தார். பிற்பகலுக்குமேல் கவர்னர் பார்வையாளர்களைச் சந்திப்பதில்லை. மதிய வெயிலைக் கடக்க சிறு உறக்கம், பின் மாலை வேளையில் தோட்டத்திற்குள் நண்பர்களுடன் பேசியபடி உலா, இரவு விருந்து, நள்ளிரவுக்குப்பின் உறக்கம் என்ற வழமையை மாற்ற மாட்டார். இதற்கு முன்பிருந்த கவர்னர் நண்பகலில்தான் எழுந்திருப்பார். அவரின் காலைத் தேநீரே நண்பகல் பன்னிரண்டு மணிக்குத்தான். வாசல் காவலன் தள்ளி நின்று பென்னியிடம் லாட்ஜின் நடைமுறைகளைச் சொல்லிக்கொண்டிருந்தான்.
மானொன்று சாய்ந்த பார்வையோடு, நீண்டு வளைந்த கொம்புகளை உயர்த்தியபடி, மாளிகையின் படியருகில் நின்றது. பென்னி மானைப் பார்த்தார். மானும் பென்னியைப் பார்த்தது. அதன் கண்களில் மிரட்சியில்லை. பழகிய இடம் என்பதால் இருக்கலாம். காடு போலிருக்கும் இடத்தில் அழகான கவர்னர் பங்களா கட்டிய பின்னும், சுற்றி இருக்கிற மரங்களையும் விலங்குகளையும் தொந்தரவு செய்யாமல் அப்படியே விட்டிருந்தார்கள்.
‘இன்று ஒரு மானைப் பார்க்கிறோம், தினம் மான்களோடும் புலிகளோடும் விடியும் நாள்கள் விரைந்து வர வேண்டும்’ என்று எண்ணியபடியே மானைக் கூர்ந்து பார்த்தார்.
கொஞ்சமும் தயங்காமல் மான் பென்னியின் அருகில் வந்தது. பென்னிக்கு ஆச்சரியம். அதன் கொம்புகளைத் தொட்டு நீவினார்.
“தொர, அது ஒரு நேரம் மாதிரி எப்பவும் இருக்காது. திரும்புச்சின்னா கொம்பு ஒடம்பக் கிழிச்சிடும், உசார்” என்றான் காவலன்.
பென்னி அவனின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. பழுப்பு வண்ணத்தில் ஒளிரும் அடர்மஞ்சள் புள்ளிகளைத் தொட்டுப் பார்த்தார். பென்னியின் கைகளுக்கு வாகாக முதுகைத் திருப்பிய மான், இப்போது காவலனை நோக்கி முகத்தைத் திருப்பியிருந்தது.
“உனக்குக்கூட தெரிஞ்சிருக்குது. இவெர் தொரை, இவென் தோட்டின்னு. என்னா பதுவுசா ஒட்டிக்கினு நிக்கிற?” செல்லமாக மானை மிரட்டினான் காவலன்.
கணீரென்று வெளிச்சுவரில் இருந்த வெண்கல மணியடித்தது. திடீர்ச் சத்தத்தில் மிரண்ட மான், இரண்டே தாவலில் அருகில் இருந்த புதர்களுக்குள் ஓடி மறைந்தது.
காவலன் பதறி வாசலுக்கு ஓடிவந்து, உள்ளே எட்டிப் பார்த்தான்.
கவர்னரின் செக்ரட்டரி, காவலனை உள்ளே அழைத்தார்.
“பேச்சுச் சத்தம் கேட்கிறதே, பார்வையாளர்கள் வெளியில் இருக்கிறார்களா?”
“ஒரு தொரை இருக்காரு, தொரை.”
“துரையா, யார்?” என்று கேட்டபடியே கவர்னரின் செயலர் வெளியில் வந்தார்.
அவரைப் பார்த்தவுடன் பென்னி எழுந்து நின்று, இடது கைக்குத் தொப்பியை மாற்றிக்கொண்டு, வலது கையில் கை குலுக்கினார்.
“பென்னி? நீங்க எதுவும் அப்பாயின்ட்மென்ட்ஸ் கேட்டுக் கடிதம் கொடுக்கலையே?”
“யெஸ் சார், அவசர நிமித்தம். உடனே ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னரைப் பார்க்க வேண்டும்.”
“மாலையில் யாரையும் கவர்னர் சந்திப்பதில்லையே?”
“அவசரம் என்பதால்தான் முன் அனுமதி வாங்காமல் வந்திருக்கிறேன் சார்.”
“அவசரம் என்றால், நாளின் பொழுதில் ஒரு மணிநேரம் கூட்டிக்கொள்ள முடியுமா என்ன? நாளை காலை வாருங்கள் பென்னி.”
“நோ சார், எனக்கு இப்போதே சந்திக்க வேண்டும். நாளை காலை ஹிஸ் எக்ஸலென்ஸி, திருவிதாங்கூர் திவானைச் சந்திக்கவிருக்கிறார். அதற்குமுன் நான் பார்த்தே ஆக வேண்டும்.”
“ஹிஸ் எக்ஸலென்ஸியின் ஒரு நாளின் நிகழ்வுகள் ஒரு வாரத்திற்கு முன்பே திட்டமிட்டு டைரி அச்சாகிவிடும் என்பதை அறியாதவரல்ல நீங்கள்.”
“நன்றாக அறிவேன் மிஸ்டர் ஜான், இன்னும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறேன். ஹிஸ் எக்ஸலென்ஸி உலா வரும்போது நான் பார்த்துப் பேசுகிறேன். பொதுவாக அந்நேரம் அவர் நண்பர்களுடன் பக்கிங்காம் அரண்மனையின் கிசுகிசுக்களைத்தான் பேசிச் சிரிப்பார் என்று தெரியும்.”
“பென்னி...” ஜான் கூச்சலிட்டார்.
பென்னி அமைதியாக நின்றார்.
“நீங்கள் எவ்வளவு நேரம் நின்றாலும் என்னால் இன்று அனுமதிக்க முடியாது.”
“ரொம்ப நல்லது. அப்படியெனில் எனக்கொரு சகாயம் செய்யுங்கள். திவான் ராமய்யங்காரின் சந்திப்பை வேறொரு நாளைக்கு ஒத்திப் போடுங்கள். ரத்து செய்துவிட்டால் மெத்த மகிழ்வேன்.”
“நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களிடம் ஆலோசனை பெற வேண்டுமா மிஸ்டர் பென்னி?”
“இந்த உரையாடல் அவசியமற்றது மிஸ்டர் ஜான். நான் கேட்பது அரைமணி நேரம். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். வேண்டுமானால் திருவிதாங்கூர் ரெசிடெண்ட் ஹிஸ் எக்ஸலென்ஸி ஹானிங்டன் அவசரமாக என்னை அனுப்பியுள்ளார் என்ற தகவலைச் சேர்த்துச் சொல்லலாம்.”
“அவர் அனுப்பினாரா, அல்லது, அவர் பெயரை நீங்கள் பயன்படுத்திக்கொள்கிறீர்களா?”
“எதைச் சொன்னால் ஹிஸ் எக்ஸலென்ஸியிடம் நேரம் வாங்க முடியுமோ, அதைச் சொல்லுங்கள் மிஸ்டர் ஜான்.”
ஜான் முகத்தில் கடுமை கூடியது. தன் சின்னஞ் சிறிய புஷ்கோட்டை இழுத்துவிட்டுக்கொண்டு உள்ளே சென்றார்.
கவர்னரைச் சந்திப்பதற்கே இத்தனை சிக்கல்கள். பேசிப் புரிய வைத்துவிட முடியுமா? பென்னிக்கு அயர்ச்சியாக இருந்தது. அரை மணி நேரம், ஒரு மணி நேரமானது. வெயில் குறைந்து காற்றில் குளுமை கூடியிருந்தது. மான் புதர் ஓரத்தில் அவ்வப்போது வந்து தன்னைப் பார்த்துவிட்டுச் செல்வதைக் கவனித்தார் பென்னி. எழுந்து அதனருகில் செல்ல விருப்பமாக இருந்தது. செல்லும் நேரத்தில் இங்கு அழைப்பு வந்துவிட்டால்? மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.
“ஐந்தே நிமிடங்கள்தான். ஹிஸ் எக்ஸலென்ஸி தேநீர் அருந்தும் நேரத்திற்குள் வந்த விஷயத்தைச் சொல்லி முடிக்க வேண்டும்.”
கண்மூடி அமர்ந்திருந்த பென்னி குக், அருகில் கேட்ட கவர்னரின் செயலர் குரலில் பதறி எழுந்தார்.
கோட்டை சரி செய்துகொண்டு, தொப்பியைத் தலையில் அணிந்து, நன்றிக்கு அறிகுறியாக லேசாக ஒரு புன்னகையை மட்டும் செலுத்திவிட்டு உள்ளே சென்றார்.
மிக நீண்ட நீள்வட்ட உணவு மேசையின் மைய நாற்காலியில் ஹிஸ் எக்ஸலென்ஸி மெட்ராஸ் கவர்னர், கிரான்ட் டப் அமர்ந்திருந்தார். ஓய்வுக்கான தளர்வான ஆடையில் வயதுகூடித் தெரிந்தார்.

பென்னி வணங்கியவுடன், உட்காரச் சொன்னார்.
“தேநீர்...”
“வித் ப்ளஷர், யுவர் எக்ஸலென்ஸி.”
பட்லரிடம் சைகை காட்டினார் கவர்னர்.
வேலைப்பாடுகள் நிரம்பிய கோப்பையில் தேநீர் நிரப்பிக் கொடுத்தான்.
“சொல்லுங்கள் மிஸ்டர் பென்னி.”
“யுவர் எக்ஸலென்ஸி, முன்தகவலின்றிச் சந்திக்க வந்ததற்காக என் மன்னிப்பைக் கோருகிறேன்.”
“பரவாயில்லை.”
“பெரியாறு அணைத் திட்டம் தொடர்பாக இதுவரை நடந்திருக்கிற விஷயங்களை, யுவர் எக்ஸலென்ஸியிடம் நேரில் விளக்கலாம் என்பதற்காகவே இந்த நேரத்தை எடுத்துக் கொள்கிறேன்.”
கவர்னர் தேநீரைக் குடிப்பதில் கவனமாக இருந்தார்.
“திருவிதாங்கூர் திவான், பெரியாறு திட்டம் பற்றி அவர்களும் ஆய்வு செய்ய வேண்டுமென்று யுவர் எக்ஸலென்ஸிக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் ஆய்வு நடத்தி முடிவு சொல்ல எத்தனை மாதங்கள் ஆகுமோ? நாம் எல்லா ஆய்வும் முடித்து, அணை கட்டுவதற்குத் தயாராய் இருக்கிறோம் யுவர் எக்ஸலென்ஸி.”
“அவர்கள் ஆய்வு நடத்துவதில் நமக்கெதுவும் சிக்கலா?”
“யுவர் எக்ஸலென்ஸி, சிக்கல் இல்லை. அவர்கள் குழு அமைத்து, மலைமேல் ஏறி, இடத்தைப் பார்த்து, ஆற்றைப் பார்த்து, அணைத் திட்டத்தை ஆராய்ந்து சொல்ல பல மாதங்கள் ஆகலாம். இந்த அணையை இப்படித்தான் கட்டப்போகிறோம் என்று முடிவு செய்வதற்கு நமக்கே முப்பது வருஷமாகியிருக்கிறது.”
“இடம் அவர்களுடையது. அவர்கள் கேட்பதற்கு நாம் மறுக்க முடியாதே?”
“யுவர் எக்ஸலென்ஸி நினைத்தால் முடியும். நம் திட்ட அறிக்கையைக் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லுங்கள். விளக்கங்கள் தேவையெனில் என்னால் சொல்ல முடியும்.”
கையிலிருந்த கோப்பையை மேசையில் வைத்துவிட்டு, வேறொரு கோப்பையில் தேநீர் ஊற்றச் சொன்னார்.
“கொஞ்சம் சூடு குறைந்தாலும் குடிக்கப் பிடிப்பதில்லை.”
“இந்தத் திட்டமும் அப்படித்தான் யுவர் எக்ஸலென்ஸி. தள்ளிப்போட்டால் சூடு ஆறிப்போகும். மீண்டும் உயிர்கொடுக்க, நீங்களோ நானோ இந்தத் தேசத்தில் இருப்போமா என்பது உறுதியில்லை.”
“யார் இருந்தாலும் இல்லையென்றாலும் நடக்க வேண்டியது நடக்கும் மிஸ்டர் பென்னி. காரியங்கள்தான் நபர்களைத் தேர்வு செய்துகொள்கின்றன.”
“ஏற்கெனவே முப்பதாண்டுகளாகக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். மீண்டும் ஒரு முப்பதாண்டுகள் கிடப்பில் போட்டால், மதுரா டிஸ்ட்ரிக் இருக்குமா என்பது சந்தேகம்தான் யுவர் எக்ஸலென்ஸி.”
“எதற்காக இத்தனை வருஷமாகக் கிடப்பில் போட்டிருக்கிறது நம் சர்க்கார்?”
“நடக்கவே முடியாத, முட்டாள் தனமான திட்டமென்று இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தூக்கிப் போட்ட திட்டத்திற்குத்தான், இருபதாண்டுகளுக்குமுன், மேஜர் ரீவ்ஸ் உயிர் கொடுத்தார் யுவர் எக்ஸலென்ஸி. தாளில் எழுதி அவர் உயிர் கொடுக்கவில்லை. பதினாறு வருஷம். ஒவ்வொரு பருவத்திற்கும் மேல்காட்டிற்குச் சென்று மாதக்கணக்கில் தங்கினார். பல்லக்கிலோ சாரட்டிலோ ஏறி, சொகுசாய்ப் போய் இறங்கும் இடமல்ல அந்த இடம். மண் பாதை கிடையாது. வண்டி போகிற பாதையில் இருந்து எட்டு மைல் காட்டுக்குள் நடக்க வேண்டும். மக்கள் வசிக்கிற இடத்தில் இருந்து இருபது மைல் உள்ளே போக வேண்டும். ரயில் பாதையில் இருந்து எண்பது மைல். சென்னையில் இருந்து கிளம்பினால் முந்நூற்று இருபது மைல் பயணம் செய்து அடர்ந்த காட்டுக்குள் செல்ல வேண்டும். காடென்றால், மன்னிக்க வேண்டும், மெட்ராஸ் வெயிலுக்கு பயந்து, ஆறு மாசத்திற்கு செக்ரட்ரியேட்டையே நகர்த்திச் சென்றுவிடும் உதகமண்டலம்போல் அல்ல, அசல் காடுகள். வெர்ஜின் பாரஸ்ட். பேய் மழை பெய்யும். அட்டைகள் அடையாகக் காலை அப்பும். உடம்பு முழுக்க ஏறி ரத்தம் குடிக்கும். விலங்குகள் எந்தத் திசையில் இருந்தும் எப்போது வேண்டுமானாலும் தாக்கும் ஆபத்து. மலேரியா, காலரா என்று காய்ச்சல் வரும். தங்குவதற்கு இதைப்போன்ற வீடோ, பங்களாவோ கிடையாது. உதவிக்கு ஆள் கிடையாது. அவரவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே பெரும்பாடு. அப்படிப்பட்ட குமுளிக் காட்டில் பதினாறு வருஷம் மேஜர் ரீவ்ஸ் சர்வே செய்தார். அணை கட்டுவது பிரிட்டிஷ் ராயல் இன்ஜினீயர்களுக்கு மிகவும் விருப்பமான பணி யுவர் எக்ஸலென்ஸி. ஆனால் மக்கள் போகவே முடியாத அடர்ந்த காட்டுக்குள் அணை கட்டுவது பெரும் சாகசம்; அதற்குக் கடவுளின் ஆசீர்வாதமும் இருக்க வேண்டும்.”
பென்னியின் குரல் நெகிழ்ந்து நின்றது. ஆண்களின் குரலுக்கு அழுகையை மறைக்கும் நுட்பம் தெரியுமென்பதால், அது அழுகையைக் குரலின் கரகரப்புப்போல் வெளிக்காட்டிக் கொண்டது.
இன்னொரு கோப்பைத் தேநீரைக் கொடுத்தான் பட்லர்.
“அப்புறம் ஏன் அப்போது நடக்காமல் போனது?”
“காரியத்தைத் தள்ளிப்போட பெரிய காரணங்கள் தேவைப்படாது யுவர் எக்ஸலென்ஸி. செய்வதற்குத்தான் மலையளவு காரணங்கள் சொல்ல வேண்டும். இப்போது நான் சொல்வதுபோல்.”
“உன் முயற்சியைப் பாராட்டுகிறேன் பென்னி.”
“மிக்க நன்றி யுவர் எக்ஸலென்ஸி. மேஜர் ரீவ்ஸ் கொடுத்த திட்டத்தை வைஸ்ராய் கிடப்பில் போட்டார். கல்கத்தாவில் பல ஆண்டுகள் கோப்பு கவனிப்பாரின்றிக் கிடந்தது. செக்ரட்ரியின் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் தங்களைப் பெரிய தொழில்நுட்ப வல்லுநர்களைப்போல் எண்ணிக்கொண்டு, சாத்தியமே இல்லாத திட்டம் என்று நிராகரித்தார்கள். அதிக செலவு, சர்க்காரால் இப்போது ஐம்பத்திரண்டு லட்சம் செலவு செய்ய முடியாது என்றார்கள். அடுத்து, இந்தத் திட்டத்தின் பிரச்சினையே அணை கட்டுவதல்ல, ஆற்று நீரைத் திசை திருப்புவதுதான், அதை ஒருபோதும் செய்ய முடியாது என்று தூக்கியெறிந்தார்கள். மீண்டும் சரிசெய்து கொடுத்தார்கள் இன்ஜினீயர்கள். அதற்குள் பஞ்சம் வந்துவிட்டது. பத்தாண்டுகள். நாடு முழுக்கப் பஞ்சம். மக்களுக்கு நிவாரணம் செய்யவே பணமில்லை, அணையாவது ஒண்ணாவது என்று சர்க்கார் மறந்தே போனது. மதுரையிலும் ராம்நாட்டிலும் தாது வருஷப் பஞ்சத்தில் மக்கள் ஊர் ஊருக்குச் செத்து விழுந்தபோதுதான், வறட்சியைப் போக்க வேண்டுமென்றால், வைகைக்குப் பெரியாற்றுத் தண்ணீரைத் திருப்பிவிடுவதுதான் தீர்வு என்பதை உணர்ந்தது நம் சர்க்கார்.”
“இத்தனை நெருக்கடிகளா நம் திட்டத்திற்கு?”
“யுவர் எக்ஸலென்ஸி, சொல்லப் போனால், இது நம் திட்டமே இல்லை. ராம்நாடு சேதுபதியின் மந்திரி பிரதானி முத்திருளப்ப பிள்ளை யோசித்த திட்டம். அவர்கள் நாட்டின் மக்களும் பஞ்சம் பொறுக்காமல் திருட்டுக் கப்பலில் அந்நிய தேசத்திற்குச் செல்வதைத் தடுக்கத்தான் பெரியாற்றை வைகையில் திருப்ப நினைத்தார்கள். பஞ்சத்தினால் அவர்களாலும் செலவு செய்ய முடியவில்லை.”
“இத்தனை தடங்கலுக்குப் பிறகும் இந்தத் திட்டம் உயிரோடு இருக்கிறது என்றால்...”
“நானும் இதைத்தான் சொல்ல வருகிறேன் யுவர் எக்ஸலென்ஸி. இந்தத் திட்டத்திற்கான தேவை இன்னும் தீர்ந்தபாடில்லை” பென்னியின் குரல் மகிழ்ச்சியில் சத்தமாக ஒலித்தது.
“புதிதாக என்ன சிக்கல் மிஸ்டர் பென்னி?”
“திருவிதாங்கூருடன் ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சு வார்த்தையில்தான் இப்போது நிற்கிறது யுவர் எக்ஸலென்ஸி.”
“அவர்கள் கோரிக்கையில் சிலதை ஏற்றும் சிலதை நிராகரித்தும் நான் பதில் அனுப்பச் சொல்லியிருந்தேனே?”
“அதிலும் அவர்கள் நிறை வடையவில்லை யுவர் எக்ஸலென்ஸி. தங்களுக்கு வேண்டியதைக் கோரிக்கையாக வைத்துக் கொண்டி ருந்தவர்கள், இப்போது பத்தடி பின்னகர்ந்து தொடங்கிய இடத்திற்கு வந்துவிட்டார்கள். அவர்கள் அணை கட்டுமிடத்தை ஆய்வு செய்ய வேண்டுமாம். நம் ராயல் இன்ஜினீயர்கள் ஒன்றிருவரை அவர்களுடன் அனுப்ப வேண்டுமாம். இதெல்லாம் தொடக்கத்தில் நடந்திருக்க வேண்டும்.”
“வைஸ்ராய்க்கும் செக்ரட்டரி ஆப் இந்தியாவுக்கும் நான் காரணம் சொல்ல வேண்டும் பென்னி. திருவிதாங்கூரை நாம் நேரடியாகப் பகைத்துக்கொள்ளவும் முடியாது. நமக்குப் பெரும் ஒத்துழைப்பாய் இருக்கும் பிரின்ஸ்லி ஸ்டேட்.”
பென்னி, அவர் அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்பதுபோல் பார்த்தார்.
“அவர்கள் கேட்பதுபோல் ஆய்வுசெய்ய அனுமதிப்போம்.”
அதிர்ந்துபோய்ப் பார்த்தார் பென்னி.
“ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்காமல், உடனே கொடுக்க வேண்டுமென்று சொல்வோம்.”
“யுவர் எக்ஸலென்ஸி, இது செப்டம்பர் மாதம். அக்டோபர், நவம்பர் காட்டுக்குள் இருக்க முடியாது. மழைக்காலம். வெள்ளம் பெருக்கெடுக்கும். ஜனவரியில் இருந்து மார்ச், இந்த மூன்று மாதங்களில் சென்று வந்தால் உண்டு. ஏப்ரலில் இருந்து ஜூன் வரை காட்டுக்குள் காய்ச்சல் பரவிவிடும். அடுத்து பருவ மழைகளின் காலம். இதற்குள் என்ன செய்வார்கள் யுவர் எக்ஸலென்ஸி?”
“மிஸ்டர் பென்னி, ரெசிடெண்ட் ஹானிங்டன் ஹிஸ் எக்ஸலென்ஸி மகாராஜா விசாகம் திருநாளிடமே முயன்று ஒப்பந்தம் பெற்றிருக்கலாம். மகாராஜாவின் திடீர் மரணத்தினால் இந்தக் காரியம் மேலும் சிக்கலாகிறது. நாம் பொறுத்துத்தான் ஆக வேண்டும்.”
“வேறு வழியொன்றும் இல்லையா யுவர் எக்ஸலென்ஸி?”
“காத்திருப்போம் மிஸ்டர் பென்னி.”
கவர்னர் கிரான்ட் டப் எழுந்து உள்ளே நடந்தார்.
- பாயும்