
ஒவ்வொரு முறையும் ரயிலை நிறுத்திவிட்டு நிலக்கரியைக் கொட்ட முடியாது என்பதால், ஓடும் ரயிலின் வேகத்தைக் குறைத்து, நிலக்கரியைக் கொட்டுவார்கள்
ரயில் பயணத்தின் இறுதியில் சோர்வுதான் மிஞ்சியது. இன்ஜின் புகையும் கரித்துகள்களும் காதடைக்கும் சத்தமும் தாங்க முடியவில்லை. பென்னி குக் ரயில் பிரயாணங்களைத் தவிர்க்க நினைத்தாலும் அவசர, துரிதப் பயணங்களுக்கு ரயில்தான் உதவுகிறது.
ஒவ்வொரு முறையும் ரயிலை நிறுத்திவிட்டு நிலக்கரியைக் கொட்ட முடியாது என்பதால், ஓடும் ரயிலின் வேகத்தைக் குறைத்து, நிலக்கரியைக் கொட்டுவார்கள். நிலக்கரியைக் கொட்டும்போது கரித்துகள்கள் காற்றில் பறந்துவந்து உடைகளில் படியும். நெருப்புப் பிடிக்கும்வரை புகைக்கூண்டு வெளியேற்றும் கரும்புகை மூச்சடைக்க வைக்கும். ரயில் பிரயாணத்தின் அசௌகரியமே புகையும் கரித்துகள்களும்தான். மூக்கை மூடிக்கொண்டாலும், முகத்தில் அப்பிய துகள்கள் நேரடியாக சுவாசத்தில் கலப்பதுபோலவே திணறலாக இருக்கும். நுரையீரல் பிரச்சினை இருக்கிறவர்கள் ரயிலில் பயணம் செய்தால், அவர்களின் கடைசிப் பயணம் அதுவாகக்கூட இருக்கலாம்.
ரயிலிலிருந்து இறங்கியவுடன் கைக்குட்டையைக் கொண்டு உடைகளின்மேல் லேசாக விசிறினார் பென்னி. கரித்துகள்கள் பறந்தன. அவரருகில் நின்றிருந்தவர், தன் உடையில் கையை வைத்துத் தூசிகளைத் துடைத்துக்கொண்டிருந்தார். அவர் கையிலும் உடையிலும் கரி அப்பியது. முதன்முறையாக ரயிலில் பயணம் செய்கிறவராக இருக்கும். காற்றில் பறந்து வந்து படிந்த மாதிரியே விசிறி விட்டால்தான் துகள்கள் ஒட்டாமல் உதிருமென்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
மெட்ராஸிலிருந்து பன்னிரண்டு மணி நேரப் பயணத்தில் திருச்சிராப்பள்ளி வந்தடைந்தபோது ஒரு வாரத்திற்கான சோர்வு உடம்பில் தெரிந்தது. அருகிலிருந்த குதிரை பூட்டிய சாரட் ஒன்றை அழைத்து அதில் கிளம்பினார். சிராப்பள்ளியில் இருந்து முக்கொம்புக்கு வந்து, காவேரிப் படித்துறையில் மூழ்கி எழுந்தவுடன், காவேரியின் வெள்ளத்துடன் சேர்ந்து சோர்வும் ஓடோடிப்போனது.

தன்னுடைய சந்திப்பின் நோக்கத்தை கவர்னர் கிரான்ட் டப் புரிந்துகொண்டாரா? வழக்கமான ஒன்று எனக் கடந்துவிட்டால்? அடுத்து என்ன? பிரிட்டிஷ் இந்தியாவின் செயலாளர் பெரியாறு அணை கட்ட அனுமதி கொடுத்தவுடன், அதற்கான நிதியையும் ஒதுக்கிவிட்டார். நிதி ஒதுக்கியே இரண்டு கோடைக்காலங்கள் கடந்துவிட்டன. இந்த லட்சணத்தில் தொடக்கப் புள்ளிக்கே திரும்பிக்கொண்டிருக்கும் சூழல்.
‘இங்கிலாந்து மகாராணியின் நேரடி நிர்வாகத்தில் பொதுப் பணித்துறையில் ஊழியம் செய்பவன் நான். என் எல்லையைக் கடந்த எதிர்பார்ப்பும் ஈடுபாடும் நல்லதில்லை. எனக்குக் கொடுக்கிற வேலையை மட்டும் நான் செய்ய வேண்டும். அதற்குமேல் எனக்கென்ன ஈடுபாடு இருக்கிறது?’ பென்னியின் மனம் தன்னையே கடிந்துகொண்டாலும், ‘என்ன வழி, என்ன வழி’ என்று இன்னொரு பக்கம் அலைபாய்ந்தது.
‘மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு லண்டன் சென்றுவிடலாமா? ஜார்ஜியானாவை லண்டனுக்கு அழைத்துச் செல்ல முடியாது. கப்பலில் மூன்று மாதங்கள் பயணம் செய்யும் அளவிற்கு அவளின் உடல்நிலையும் குழந்தைகளின் உடல்நிலையும் இன்னும் சீர்படவில்லை. அவர்களை மெட்ராஸில் விட்டுவிட்டு, தான் மட்டும் லண்டனுக்குச் சென்று நிம்மதியாகவும் இருக்க முடியாது. அம்மா இன்னும் சிறிதுகாலம் வாழ்ந்திருக்கலாம். நான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று மிகவும் எதிர்பார்த்திருந்தார். அவர் இறந்த அடுத்த ஆண்டுதான் கடவுளின் திருவுள்ளம் என் திருமணத்தைச் சாத்தியப்படுத்தியது.
தந்தை ஜான் பென்னி குக் சீக்கியப் போரில் இறக்கும்போது எனக்கு எட்டு வயது. என் இரண்டாவது அண்ணன் அலெக்சாண்டரும் தந்தையும் ஒரே நாளில் ஒரே இடத்தில் உயிர்த்தியாகம் செய்தனர். பிரிட்டிஷின் 24வது ரெஜிமெண்ட் காலாட்படையில் அப்போதுதான் சேர்ந்திருந்தான் அண்ணன். லாகூரிலிருந்து 150 மைல் தூரத்தில் இருந்த சில்லியன்வாலாவில் பிரிட்டிஷ் படைக்கும் சீக்கியர்களுக்கும் நடந்த போர் எங்கள் குடும்பத்தில் இருவரைப் பலிகொண்டது. அதற்கு ஓராண்டுக்கு முன்பே பிரிட்டிஷாருக்கும் சீக்கியர்களுக்கும் போர் நடந்து பிரிட்டிஷ் படை பின்வாங்கியிருந்தது. பிரிட்டிஷ் படையின் தோல்வி, உள்ளூர் அரசப் படையினரிடம் எழுச்சியை உண்டாக்கியிருந்தது. உடனே அவர்களை அடக்க நினைத்த பிரிட்டிஷ் படை, போதுமான திட்டமிடல் இல்லாமலேயே அடுத்த போருக்கு ஆயத்தமானது. போர் நடக்கும் பகுதியின் நிலவியலைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். அதில் தவறு நடந்தால், போரில் வெற்றிபெறுவது சாத்தியமில்லை.
தந்தை ஜான் பென்னி குக் கமாண்டராக இருந்த போரிலும் அதுதான் நடந்தது. சிந்து - சீலம் நதிகளுக்கிடையில் அடர்ந்த காட்டில், இடதும் வலதுமாய் இருந்த இரண்டு படைகளை ஒரே பிரிகேடியர் கையாள வேண்டிய சூழல். அவர் கொடுக்கும் உத்தரவுகள் அடுத்த நிலை அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் சென்று சேர முடியாத குழப்பமான நிலவியல். தந்தை கமாண்டராக இருந்த வலப்பிரிவுப் படைக்கான உத்தரவுகள் வீரர்களிடம் சரியாக வந்தடையவில்லை. துப்பாக்கித் தாக்குதல் நடக்குமென்று எண்ணி, தந்தையின் படையணியினர் கத்திமுனைத் துப்பாக்கிகளுடன் முன்னேறினர். சீக்கியர்களோ பீரங்கிகளுடன் வந்தனர். சுதேசிகள் நவீன ஆயுதங்களுடன் வருவார்களென்பதை பிரிட்டிஷ் படையினர் எதிர்பார்க்கவில்லை. சீக்கியர்களின் பீரங்கிக் குண்டுகள் பாய்ந்து வந்தவுடன் பிரிட்டிஷ் படைப்பிரிவில் இருந்த வங்காள வீரர்கள் சிதறினர். படைக்குப் பின்னடைவு என்று தெரிந்தால் பிரிட்டிஷ் படைப்பிரிவில் இருக்கும் வங்காள வீரர்கள் உடனே தப்பித்தோடப் பார்ப்பார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் போர்ப் பயிற்சி இல்லாதவர்கள். பலர் அன்றன்றைய கூலிக்கு வருபவர்கள். ஆளுக்கொரு திசையில் பிரிந்தோடிய வீரர்களை, சீக்கியப் படையினர் துரத்திக் கொன்றனர்.

பிரிட்டிஷ் அரசியின் கொடியை உயர்த்திப் பிடித்துப் படையின் முன்னணியில் சென்ற அண்ணன், படைக்குப் பின்னடைவு என்றவுடன் கொடி எதிரிகள் கையில் அகப்படக்கூடாது என்று இறுகப் பற்றிக்கொண்டான். பின்தொடர்ந்து வந்த படை சிதறியோடியதைப் பார்த்த அண்ணனும் தப்பி ஓடுகையில், அடர்ந்த புதரொன்றின் அருகில் கால்தடுக்கிக் கீழே விழுந்திருக்கிறான். குனிந்து பார்த்த அண்ணனுக்கு அதிர்ச்சியில் மயக்கம் வந்தது. அங்கே அப்பா குண்டு தாக்கி இறந்து கிடந்தார்.
சீக்கியப் படை நெருங்கும் சத்தம். எதிரிப் படையிடம் அப்பாவின் உடல் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக, அண்ணன் அப்பாவின் உடலைப் புதருக்குள் இழுக்க, பாய்ந்து வந்த பீரங்கிக் குண்டொன்று அண்ணனைத் துளைத்தது.
முதல் படைப்பிரிவின் பிரிகேடியராக முன்னேறிய அப்பா மார்புக்குக் கீழே குண்டடி பட்டுக் குதிரையில் இருந்து கீழே விழுந்திருக்கிறார். ரத்தம் அதிகம் வெளியேறிய நிலையில், அவரின் உதவிக்கு வந்த சார்ஜெண்டுகளைத் தடுத்து, படையுடன் முன்னேறச் சொல்லியிருக்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பாவை விட்டுச் செல்ல அவர்கள் தயங்கியபோதும், அப்பா படையுடன் முன்னேறச் சொன்னாராம். ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்பாவை வங்காள வீரர்கள் இருவர் பார்த்து உதவிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் அப்பாவைப் பாதுகாப்பான இடத்திற்குத் தூக்கிக்கொண்டு நடக்கும்போதே அப்பாவின் உயிர் பிரிந்துவிட்டது. அப்பாவின் இறந்த உடலைத் தூக்கிக்கொண்டு நடந்தவர்கள், சீக்கியப் படை நெருங்கியவுடன், அப்பாவின் உடலைப் புதரோரம் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். அவ்வுடலைப் பாதுகாக்கச் சென்ற அண்ணனும் இறந்தான்.
கணவனையும் 17 வயது மகனையும் ஒரே போரில் பலி கொடுத்த அம்மா சாரா, எங்களை அழைத்துக்கொண்டு லண்டன் திரும்பினார். 15 வயதில் திருமணம் செய்துகொண்டு பதினொரு பிள்ளைகளைப் பெற்ற அம்மா, அப்பாவின் இறப்புக்குப்பின் எங்களை வளர்க்க எடுத்துக்கொண்ட சிரமங்கள் சொல்லவியலாதவை. இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் குடும்பத்தின் மூத்த மகனுக்குத்தான் சொத்துரிமை. அப்பாவுக்குச் சொத்துரிமை இல்லாமல்போனதால், அம்மாவுக்கு எங்களை வளர்ப்பதே பெரும்பாடானது. போரில் இறந்தவர்களின் பிள்ளைகளுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்தும் இலவசப் பள்ளியில் படித்து, எப்படியோ இன்று இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன்.
உயர்த்திப் பிடித்திருந்த அரசியின் கொடி கடைசிவரை எதிரிகள் கையில் கிடைக்காமல் பார்த்துக்கொண்ட அண்ணன் அலெக்சாண்டருக்கும் எனக்கும் வேறுபாடு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. போர்க்களத்தின் வெற்றியும் ஆட்சி நிர்வாகத்தின் வெற்றியும் ஒன்றுதான். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிரந்தர நற்பெயருக்காக முயலும் நான் மட்டும் தோற்றுவிடுவேனா என்ன?’
சிறு வயது நினைவுகளும், இப்போதைய போராட்டங்களுமாக பென்னி காலச்சக்கரத்தின் மேலும் கீழும் சென்று வந்தார்.
சாரட்டின் சக்கரத்தில் அரைபடும் மென்மணலின் நறநறப்பு, உடம்பினைக் கூசச் செய்தது. மணலின் நறநறப்பை விட்டு குதிரைகளின் குளம்புச் சத்தத்தைக் கவனிக்கத் தொடங்கினார் பென்னி. சீராக அடியெடுத்துப் போகும் குளம்பின் ஒழுங்கில் மனம் கொஞ்சம் சீர்ப்படத் தொடங்கியது.
“தண்ணிமேல எவ்வளவு வேணும்னாலும் முதல் போடலாம். தண்ணில ஒரு ரூபாய் முதல் போட்டா அம்பது ரூபாய் வருமானம் வரும். இதை நான் அம்பது வருஷமா சொல்லிக்கிட்டிருக்கேன். யார் கேட்குறா?”
காவேரி, கோதாவரி நதிகளின் குறுக்கே பிரமாண்ட அணைகளைக் கட்டிய பிரிட்டிஷ் இந்திய ராணுவ இன்ஜினீயர் ஆர்தர் காட்டனின் சின்னஞ்சிறிய முகம், வயதின் முதிர்வில் மேலும் சுருங்கியிருந்தது. கண்களின் தீட்சண்யம் கூடியிருந்தது.
“உங்களைப் பார்ப்பேன்னு நினைச்சிப் பார்க்கலை சார். கொடைக்கானலுக்குப் போய்க்கொண்டிருந்தவன், ஏன் சிராப்பள்ளியில் இறங்கினேன் என எனக்கு நானே யோசிக்கிறேன். உண்மையில் நீங்க இந்தியா வந்திருக்கிறீங்க என்ற செய்திகூட எனக்குத் தெரியாது.”
“சிலநேரம் அப்படி நடக்கும்.”
“ஆச்சரியமா இருக்கு. இந்த வயதில் நீங்க இந்தியா வர உங்க குடும்பத்தார் எப்படி அனுமதிச்சாங்க சார், அதுவும் தனியாக?”
“இந்த வயதென்றால், எனக்கென்ன வயது அதிகமாகிவிட்டது? ஜஸ்ட் எண்பத்தாறு டியர் பாய். ஒரு நடை வருகிறாயா என்னுடன்? குறைந்தபட்சம் பத்து மைல், யார் முதலில் வர்றதுன்னு பார்ப்போம்?”
“உங்க உற்சாகம் என் சோர்வைக் குறைக்குது, மிஸ்டர் காட்டன்.”
“சோர்வே வரக்கூடாது யங் மேன். அரசாங்க வேலைன்னாலே நாம மட்டும் சம்பந்தப்பட்டது கிடையாது. நாமே ஆரம்பிச்சு, நாமே முடிப்போம்ங்ற உத்தரவாதமில்லை. இருக்கிற வரைக்கும் செய்வோம். கோதாவரி அணை கட்டும்போதும் ஒரு வருஷம் நான் ஆஸ்திரேலியா போய்ட்டேன், உடம்பு முடியலைன்னு. இன்னொரு இன்ஜினீயர்தான் பார்த்துக்கிட்டார்.”
“நானே செய்யணும்னே சொல்லலைங்க சார். யாரோ ஒருத்தர் செய்தா போதும்னுதான் சொல்றேன். சுத்திச் சுத்திக் கிளம்பின இடத்துலயே வந்து நிக்குதே? அதான் சோர்வு.”
“சில திட்டங்கள் அப்படித்தான் இழுக்கும். கோதாவரித் திட்டம் தயார் செய்து, இந்தியச் செயலருக்கு அனுப்பி, அவர் பணம் ஒதுக்கி, எல்லாம் ஆறுமாசம்தான், உடனே வேலை ஆரம்பிச்சுட்டோம். அப்போ கோடைக்காலம். வேலை ஆரம்பிக்கவும் ரொம்பப் பொருத்தமான நேரமா இருந்துச்சு.”
“அப்படி ஆரம்பிச்சு நடந்தாத்தான் நமக்கும் ஆர்வமா இருக்கும். பெரியாறு திட்டம் தொண்ணூறு வருஷமா இழுக்குது.”
“கோதாவரியில் அடுத்த மழைக்காலம் வர்றதுக்குள்ளேயே கால்வாசி வேலைகளை முடிச்சிட்டோம்.”
பேச்சு எங்கு தொடங்கினாலும், இறுதியில் கோதாவரியிலேயே சென்று நின்றது. எந்த வண்டியை இழுத்து வந்தாலும் சிலர் தன்னுடைய மாட்டையே பூட்டி ஓட்டுவதுபோல், ஆர்தர் தன்னை கோதாவரிக்கு இழுத்துச் செல்வதை உணர்ந்தார் பென்னி. அவரின் வயதும் ஒரு காரணம்.
“கேப்டன் ஜேம்ஸ் கால்டுவெல் எந்த வேளையில், ‘இது ஒருபோதும் சாத்தியமில்லாத திட்டம்’னு அறிக்கை கொடுத்தாரோ, இன்னைக்கு வரைக்கும் நடக்காமலேயே இழுக்குது.”
ஆர்தர் காட்டன் சத்தமாகச் சிரித்தார். ‘சிரிக்க என்ன நடந்தது’ என்பதுபோல் பார்த்தார் பென்னி.
“இந்த கால்டுவெல், எல்லாத்துக்கும் முட்டுக்கட்டையைப் போட்டிருக்கான். கி.பி.1804-ல் தஞ்சாவூர் மாவட்டம் உருவாக்கின உடனே பிரிட்டிஷ் அரசாங்கம் காவேரியில அணை கட்டி, தஞ்சாவூர் வரைக்கும் தண்ணிய விடுறதுக்கு ஆய்வு செய்ய இவனைத்தான் அனுப்பியிருக்காங்க. போனவன் பெரியாறுக்குச் சொன்ன மாதிரிதான், ‘காவேரியே இன்னும் கொஞ்ச நாள்ல விவசாயத்துக்குப் பயன்படாது’ன்னு சொல்லிட்டான். அப்புறம் முப்பது வருஷம் கழிச்சு நான் வந்து, முக்கொம்புல மேலணை கட்டினேன். யோசிச்சுப் பார் பென்னி, ஒருத்தன் முட்டாள்தனமா ‘முடியாது... முடியாது’ன்னு அறிக்கை எழுதி வச்சிட்டுப் போன திட்டங்களுக்கு ஒவ்வொண்ணு உயிர் வருது. முப்பது வருஷம் கழிச்சு ஒண்ணு, தொண்ணூறு வருஷம் கழிச்சு இன்னொண்ணு. அவன் ஓராளை ஜெயிக்க நாம இத்தனை பேரு வர வேண்டியிருக்கு” என்று சொல்லிவிட்டு ஆர்தர் மீண்டும் சிரித்தார்.
“நாம் கொஞ்சம் நடப்பமா பென்னி?” பென்னியின் பதிலுக்குக் காத்திராமல், தொப்பியை எடுத்துத் தலையில் வைத்து, நடப்பதற்கு ஊன்றுகோலை எடுத்தார். குனிந்து கால் பூட்சின் கயிறுகளை இறுக்கிக் கட்டிக்கொண்டு ‘தயார்’ என்பதுபோல் பார்த்து, முன்னால் நடந்தார்.
“பேசலாம் யங் பாய், கம்.” பென்னி அசையாமல் நின்றிருப்பதைப் பார்த்துச் சொல்லிவிட்டு, வெளியேறினார். அரைகுறை விருப்பத்துடன் பென்னி பின்தொடர்ந்தார்.
இருவரும் காவேரி நோக்கி நடக்கத் தொடங்கினர். தூரத்தில் குணசீலம் கோயிலின் காண்டாமணிச் சத்தம் கேட்டது. லேசாகக் கூன் போட்டிருந்தாலும் ஆர்தர் காட்டனின் உயரம் வசீகரமாய் இருந்தது. தொப்பியைக் கடந்து பின்புறம் நீண்டிருந்த அவரின் வெளுத்த முடி, காற்றில் அலைபாய்ந்தது.

“கோதாவரி எப்படிப்பட்ட நதி தெரியுமா? காட்டாறு. மழைக்காலத்துல அதுல ஒரு நாளைக்கு ஓடுற தண்ணி, நம்மூர்ல வருஷம் முழுக்க தேம்ஸ் நதியில ஓடுற தண்ணிக்குச் சமம். இவ்ளோ தண்ணிய வச்சிக்கிட்டுத்தான் இந்தியா ‘தண்ணி இல்ல, தண்ணி இல்ல’ன்னு ஒப்பாரி வச்சிக்கிட்டு இருக்கு.”
‘ஓ ஜீசஸ்... மீண்டும் கோதாவரியா?’ பென்னி மனத்திற்குள் கிறிஸ்துவின் முன்னால் மண்டியிட்டார்.
“பென்னி, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?”
“சொல்லுங்க மிஸ்டர் காட்டன்.”
“இந்தியாவுக்கு ஒரு வருஷத்துக்கு எவ்ளோ தண்ணி தேவையோ, அதுக்குப் பத்து மடங்கு தண்ணி அதிகமாவே இருக்கு. ஆனா அதெல்லாம் எங்க போகுது?”
பென்னி அமைதியாக இருந்தார்.
“சொல்லு மேன், எங்க போகுது?”
“கோதாவரியில்…” என்று சொல்ல நா தவித்தாலும், “சார்...” என்றார்.
“எல்லாமே கடல்ல வீணாப் போகுது. நான் எப்போ இந்தியாவுக்கு வந்தனோ, வந்த அஞ்சு வருஷத்துல கண்டுபிடிச்சிட்டேன், இங்க தண்ணிய சரியாப் பயன்படுத்தல, வீணாக்கறாங்க. அதான் இரண்டு வருஷத்துக்கு ஒருமுறை, அஞ்சு வருஷத்துக்கொருமுறைன்னு பஞ்சம் வருது. அம்பது வயசுல எனக்கொரு பெரிய கனவுத் திட்டம் இருந்துச்சு. இந்தியாவுல இருக்கிற எல்லா நதிகளையும் இணைக்கணும்னு. சர்க்கார்க்குத் திட்டத்தைக் கொடுத்தேன். ஆனா அடுத்த இரண்டு வருஷத்துல ரிட்டயராகி லண்டன் போயிட்டேன். இதோ முப்பது வருஷமாச்சு. இன்னும் அதை யாரும் கையில எடுக்கலை. அது மட்டும் நடந்தா போதும், இந்தியாவுல வருஷம் முழுக்க விவசாயம் நடக்கும். உணவுப் பஞ்சமே வராது.”
“பெரியாறு திட்டமும் அப்படித்தான் சார். கோடைக்காலத்திலும் மழை குறைவா பெய்யுற வருஷத்திலும் வைகை வறண்டு போகுது. பெரியாற்றை இணைச்சிட்டா, வைகையில் வருஷம் முழுக்கத் தண்ணீர் இருக்கும். உண்மையைச் சொல்லணும்னா, நான் கொடைக்கானல் போறதுக்காகத்தான் ரயில் ஏறினேன் மிஸ்டர் காட்டன். சிராப்பள்ளி வந்தவுடனே என்னவோ இறங்கணும்னு தோணுச்சு. இறங்கி ஒரு சாரட் பிடிச்சு, காவேரிக்குப் போனேன். நீங்க கட்டுன அணையைப் பார்த்துட்டு, ஓய்வு விடுதியில் உட்கார்ந்திருக்கும்போதுதான் அங்க இருந்த லஸ்கர்*(மதகு திறந்து விடுபவன்) சொன்னான், நீங்க வந்திருக்கீங்கன்னு. தேடிப் பிடிச்சு வந்துட்டேன். உங்கள பாக்கணும்னு எனக்குத் தோணுனதுக்குக் காரணம், ஹிஸ் எக்ஸலென்ஸி இந்திய வைஸ்ராய் டப்ரின் உங்களுக்கு நெருக்கமானவர். நீங்க சொன்னால் அவர் உடனே எதுவும் செய்வார்னு கேள்விப்பட்டிருக்கேன். நீங்க எனக்கு உதவணும்.”
“இதில் வைஸ்ராய் செய்யக்கூடியது ஒண்ணுமில்லையே? திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்து, பணமும் ஒதுக்கிட்டாரே?”
“தெரியும் சார், ஆனால் ஹிஸ் எக்ஸலென்ஸி திருவிதாங்கூர் மகாராஜாவிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடச் சொல்ல வேண்டும்.”
“இந்த இடம் கொஞ்சம் சிக்கலானது பென்னி. மகாராஜாவுக்குச் சில கோரிக்கைகள் இருக்கும். வைஸ்ராய் அதை ஏத்துக்க முடியாத சூழல் இருக்கும். இரண்டு முக்கியஸ்தர்களையும் நாம நேராப் பேச விடக்கூடாது. நேரடியா இவங்க இரண்டு பேரையும் பேச விட்டோம்னா, இரண்டு பேருமே பெரிய இடைவெளியை உருவாக்கிடுவாங்க.”
“திருவிதாங்கூர் திவான் ராமய்யங்கார் மெட்ராஸ் கவர்னரைப் பார்க்கப் போயிருக்கார். திவான் நேரடியா கவர்னரைப் பார்க்கப் போறாங்கன்னா அவங்க பெரிய அளவில் முயற்சி செய்யறாங்கன்னுதானே அர்த்தம்?”
“திவான் போனார். கவர்னர் பார்த்தாரா?”
“பார்த்திருப்பார்.”
“பார்த்தாரா?”
“திவான் சந்திப்பைத் தள்ளிப் போடுங்கன்னு நான் ஹிஸ் எக்ஸலென்ஸி மெட்ராஸ் கவர்னரைப் பார்த்துக் கேட்கப் போனேன். அவர் நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதது போலத்தான் பேசினார்.”
“திவானை கவர்னர் சந்தித்திருக்க மாட்டார் பென்னி.”
பென்னிக்கு நம்ப முடியவில்லை.
“உண்மையாகவா சொல்றீங்க சார்?”
“என் கணிப்பு அதுதான்.”
“என்னிடம் கவர்னர் அப்படிச் சொல்லியிருந்தால் இவ்வளவு மனக்கஷ்டத்திற்கு ஆளாகியிருக்க மாட்டேனே?”
“உயரதிகாரிகள் எவ்வளவு குறைவான செய்திகளைப் பகிர்கிறார்களோ அவ்வளவு அவர்கள் பதவிக்கு மரியாதை கூடும்.”
பென்னிக்கு சுவாசம் சீர்பட்டது. இரண்டு நாளாய் மனத்திற்குள் பாரமாய் இருந்த கருங்கல்லொன்று கரைந்தோடிய நிம்மதி.
“மதுரையும் ராம்நாடும் தண்ணீரில்லாமல் வறண்டு கிடக்கிறது. இந்த அணையைக் கட்டிவிட்டால் போதும், நிம்மதியாய் ஓய்வுபெற்று நான் நிரந்தரமாய் லண்டன் சென்றுவிடுவேன்.”
“அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதே. இன்னைக்கு என்ன நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ அதைச் சிறப்பாகச் செய். நாளை என்ன நடக்கணும்னு நீ தீர்மானிக்காதே.”
பென்னிக்கும் சரியென்று தோன்றியது.
“தாது வருஷப் பஞ்சம் குறையுற நேரத்துல, ஹர் மெஜஸ்டி இங்கிலாந்து பேரரசி பார்லிமெண்ட்டோட இரண்டு அவையிலும் பேசினாங்க. ‘பிரிட்டிஷ் இந்தியாவில் பஞ்சத்தின் கோரத்தாண்டவம் குறைந்து இயல்பு நிலை திரும்பறது பார்த்துக் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. ஆனா, பஞ்சம் வராம தடுக்கிறதுக்கும் நம்மோட வருவாயைக் கூட்டுவதற்கும் வழி என்னன்னு இந்தியாவில் வேலை செய்து லண்டன் திரும்பியிருக்கிற அனுபவமிக்கவங்களோடு கலந்துபேசி எனக்கு ஓர் அறிக்கை கொடுங்க’ன்னு சொன்னாங்க. அவங்க கருத்து கேட்ட பத்துப் பேர்ல நானும் ஒருத்தன். எனக்குத் தொள்ளாயிரம் கேள்விங்க அனுப்பினாங்க. நான் சொன்ன ஒரே வழி, ‘இந்தியாவுல ரயில்வே போடுற திட்டங்கள நிறுத்துங்க. நாடு முழுக்க இருக்கிற நீர்நிலைகளைச் சரிசெய்ங்க. அடுத்த அஞ்சு வருஷத்துல பிரிட்டிஷ் இந்தியாவுடைய வருமானம் அறுபது சதவிகிதம் அதிகரிக்கும்’னு சொன்னேன். உன்னோட பெரியாறு அணைத் திட்டத்துக்கும் நான் சொன்ன பிறகுதான் ஒப்புதல் கொடுத்தாங்க.”
“ஓ... கால்டுவெல்லை இங்கிலாந்து பாராளுமன்றத்துல வச்சு வீழ்த்தியிருக்கீங்க.”
“ஆமாம், ஆனா கால்டுவெல் இன்ஜினீயர்ன்றதால கோப்புல எழுதி வச்சிட்டுப் போயிட்டான். பிரிட்டிஷ் இந்தியாவில் இருக்கிற ஒவ்வொரு ஐ.சி.எஸ் அதிகாரியும் பத்து கால்டுவெல்லுக்குச் சமம். அவங்க நினைக்கிறதுதான் நடக்கணும்.”
“ஒரு கால்டுவெல்லையே இன்னும் நாம் சரிசெய்ய முடியலை.”
“அதான் சொல்ல வர்றேன். நம்ம தேசத்துலயே இல்லாத ஐ.சி.எஸ் பதவியை இந்தியாவுல உருவாக்கியிருக்காங்கன்னா, அதுக்குக் காரணம் நிறைய இருக்கு. ஐ.சி.எஸ் பதவிதான் இந்தியாவுக்கு வரமும் சாபமும். இந்தத் தேசத்துக்கு என்ன தேவைன்னு யோசிக்க மாட்டேங்கிறாங்க. தேசம் முழுக்க தண்டவாளம் போடணும், ரயிலை விடணும், இதான் பல ஐ.சி.எஸ்களோட ஒரே குறிக்கோள். ‘இரும்புல போடுற காசைத் தண்ணியில போடுங்க, காலாகாலத்துக்கும் பிரயோஜனப்படும்’னு நானும் பலமுறை சொல்லிட்டேன். யாருக்குமே புரியல.”
“பொதுப்பணித்துறையில உங்கள பெருமையா பேசினாலும் நீங்க ரயில்வேக்கு ரொம்ப எதிரா இருந்ததால உங்களோட பெருமைகளைப் பல அதிகாரிங்க வெளிய சொல்லக்கூடத் தயங்குறத நான் பார்த்திருக்கேன்.”
“அவனுங்க என்ன சொல்றது? கோதாவரியில போய்ப் பாரு. நான் அணைகட்டி முப்பது வருஷமாச்சு. இன்னைக்கும் ராஜமுந்திரியில அமாவாசை அன்னைக்கு ஆத்துல எனக்குத்தான் திதி கொடுக்கிறான். அவங்க முன்னோர்களுக்குச் செய்ற பூஜையை எனக்குப் பண்றான். நான் ஊர விட்டுப் போனவுடனே செத்துட்டேன்னு நினைப்பு. இன்னும் ஊருக்கு நாலு ஆர்தரப்பா, காட்டனப்பா இருக்கிறாங்க. ஜனங்களோட மனசுல நான் என்னைக்கும் இருப்பேன். முதன்முதலா கல்லணைக்குப் போனப்ப அதான் நினைச்சேன். கல்லணை கட்டி எத்தனை நூற்றாண்டு ஆச்சுன்னே தெரியலை. பாறை கண்டம் முடிஞ்சு வண்டல் மண் ஆரம்பிக்கிற இடத்துல அணை கட்டணும்னா கரிகாலன் எவ்வளவு கெட்டிக்காரனா இருக்கணும்? எப்படி இந்த அணை கட்டியிருக்கான்னு தெரிஞ்சுக்கவே எனக்கு இரண்டு வருஷமாச்சு. கரிகால் சோழன் இஸ் தி பயோனியர் இரிகேஷன் இன்ஜினீயர் ஆப் த வேல்டு. என்னைய உன்னைய மாதிரி இரிகேஷன் இன்ஜினீயர்களுக்கு அப்பன்.”
“கல்லணை ஓர் அதிசயம். ஒவ்வொரு முறையும் கரிகாலனை நானும் வியந்து பார்த்திருக்கேன்.”

“ஊர் முழுக்கக் கால்வாய், ஏரி, குளம்னு சுதேசி ராஜாக்கள் ஏற்கெனவே வெட்டி வச்சிருக்காங்க. பயன்படுத்தாம, பராமரிக்காம அப்படியே எல்லாம் பாழாய்ப்போகுது. ‘ரயில் இருந்தா, வங்காளத்துல விளையுற நெல்லை மெட்ராசுக்குக் கொண்டாருவேன்’னு சொல்லுறான் ஐ.சி.எஸ் அதிகாரி. ‘வங்காளத்துல விளையுற நெல்ல எதுக்குடா மெட்ராசுக்குக் கொண்டாரணும்’னு நான் கேட்கிறேன். மெட்ராசுலயே நெல்லு விளையுறதுக்கு வழியை நான் சொல்றேன்னா அதைக் கேட்க மாட்டேங்கிறாங்க. அந்தந்த ஊர்ல இருக்கிற கால்வாய்களை ரொம்பக் குறைவான செலவுல ஆழப்படுத்தினா, போக்குவரத்துக்கும் பயன்படும். விவசாயத்துக்கும் பயன்படும். விவசாயத்துக்கு என்ன தேவை? சூரியன். இந்தத் தேசத்துல எப்பவும் இருக்கு. இரண்டாவது மண். அதுலயும் ஒண்ணும் குறை இல்லை. தண்ணிதான் பிரச்சினை. மழை ஏமாத்தினா மத்த ரெண்டும் இருந்தும் பிரயோஜனம் இல்ல. மழை பெய்யும்போது சேமிச்சு வச்சுக்கங்கன்னு சொல்றேன். தண்ணிதான் ஒரே மூல ஆதாரம். அதைச் சரியா நிர்வாகம் பண்ணிட்டா, நாட்டில் முக்கால்வாசிச் சிக்கல்கள் தீர்ந்துடுச்சுன்னு அர்த்தம்.”
பென்னியின் முகத்தில் சிந்தனையின் அழுத்தம் கூடியிருந்தது.
“உங்க யோசனையை நடைமுறைப்படுத்தறவன் நான். எனக்கு எப்படியாவது நீங்க உதவணும். உங்களப் பார்த்தவுடனே தீர்வு உங்ககிட்ட இருக்குன்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு.”
“நான் சொல்லி மறுக்க மாட்டாங்கன்னா சொல்லலாம். சொல்லி மறுத்துட்டா இந்தத் திட்டம் இன்னும் பலவீனமாப் போயிடும். நான் ரிட்டயரான பிறகு பிறந்து வளந்தவங்கெல்லாம்தான் பொறுப்பில் இருக்காங்க. அவங்களுக்கு என்னை எப்படித் தெரியும்? உன்னை மாதிரி, இந்தத் துறையில இருக்கிறவங்களுக்கு என்னைத் தெரியும். இப்போதுகூட மேலணையில் நீர்க்கசிவு இருக்குன்னு சொல்லி யோசனை கேட்க பொதுப்பணித்துறையில வரச் சொல்லியிருந்தாங்க. அதனால்தான் வந்தேன். ஹிஸ் எக்ஸலென்ஸி வைஸ்ராயிக்கு என்னால் கடிதம் அனுப்ப முடியும். அதனால் உனக்கு நன்மை கிடைக்குமான்னு தெரியாது.”
“உங்கமேல பெரிய மரியாதை இருக்கு எல்லோருக்குமே. நீங்க சொன்னா மறுக்க மாட்டாங்கன்னு நான் நம்புறேன்.”
“ஏறக்குறைய ஒரு வடிவத்துக்கு வந்துடுச்சு திட்டம். இனிமேல் இதில் வரும் சின்னச் சின்னத் தடங்கல்களைச் சரிசெய்ய, நீ பெரிய அதிகாரிகளைத் தேடிப் போகக்கூடாது. அதுவும் நம் தரப்பு அதிகாரிகளை. மூன்றாவது நான்காவது இடத்தில் இருக்கிற நபர்கள் யாருன்னு பார். அவங்க மூலம் காரியத்தை நடத்து. பெரிய பாறையை மலைமேல் இருந்து உருட்டித் தள்ளியாச்சு. எங்கோ சின்னக் கல் ஒண்ணு வாகாய்த் தடுத்து நிறுத்தியிருக்கு. அதை லேசா விலக்கிவிட்டாப் போதும். பாறை உருண்டோடிடும்.”
“சவாலான வேலைகளை நான் சாதாரணமாகச் செய்துடுவேன். முதலில் அரசியல் குழப்பங்கள் தீரட்டும்.”
“பட் மிஸ்டர் பென்னி, உங்ககிட்ட வெளிப்படையாச் சொல்றேன், எனக்கு முதலில் இருந்தே பெரியாறு திட்டத்தில் உடன்பாடில்லை. கடவுள் தனக்குன்னு சில இடங்களைப் பரிசுத்தமா வச்சிருப்பார். அதுக்குள்ள நாம் போகக்கூடாது. பரிசுத்தமான காடு, மனுஷங்களுக்குக் கட்டுப்படாத நதி இதையெல்லாம் நாம கையாள முடியாது. உற்பத்தியாகிற இடமே கண்ணுக்குத் தெரியாம, அதுவா ஊருக்குள்ள ஓடிவந்து ‘நான் இருக்கேன்’னு கண்ணு முன்னாடி நிக்கும் பார், அந்த நதி நமக்குக் கட்டுப்படும். ரொம்ப அச்சுறுத்தாது. கோதாவரியும் காட்டாறுதான். பிரவாகம், பிரளயம் மாதிரிதான் இருக்கும். ஆனா அது சமவெளி. நம்மால் நின்னு வேலை செய்ய முடியும். நீ சொல்ற பெரியாறு, காட்டாறு. அணை கட்ட நீங்க எடுத்திருக்கிற இடம், ஆபத்தான இடம். நீ இவ்ளோ கஷ்டப்பட்டு அனுமதி வாங்கினாக்கூட, அங்கபோய் வேலை செய்ய ஆளுங்க வரமாட்டாங்க. வந்தாலும் ஒரு வாரம் உயிரோட இருப்பாங்களான்னே தெரியாது.”
“என்ன சொல்றீங்க சார்?”
“பெரியாற்றில் அணைகட்ட கடவுளாலும் முடியாது.”
“மிஸ்டர் காட்டன்...” பென்னி அதிர்ந்தார்.
- பாயும்