மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 14

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

தங்களின் தண்ணீரை விட்டுக் கொடுப்பதற்கு ஈடாக, சமஸ்தானத்திற்கும் நல்லது நடக்க வேண்டும். எனவே அஞ்சுதெங்கு கோட்டையையோ தலைசேரி கோட்டையையோ அவசியம் கொடுக்க வேண்டும்.

மதராசப்பட்டினத்தின் ஒவ்வொரு அகன்ற வீதியும் தன் காலடி பட்டதுதான். விட்டுச் சென்ற இடத்திலேயே இருக்கும் அடியெடுத்து வைத்துப் பழகாத குழந்தைபோல் நகரம் அப்படியே இருப்பதைப் பார்த்து வெம்பாக்கம் ராமய்யங்காருக்கு வியப்பாக இருக்கும்.

இரண்டு குதிரை பூட்டிய கோச் வண்டியின் திரையை விலக்கி, நகரை வேடிக்கை பார்த்துச் செல்வது ராமய்யங்காருக்குப் பிடித்தமான ஒன்று. சாம்பல் வெளிச்சத்திலிருந்த அதிகாலைப் பாதையின் அமைதி ரம்மியமாக இருந்தது ராமய்யங்காருக்கு.

இரண்டு பக்கமும் அடர்ந்திருந்த மா, புளி, இலுப்பை மரங்களில் புள்ளினங்கள் ஒன்றிரண்டுதான் விழித்திருந்தன. அகன்ற மண்பாதையில், ஒரு மரத்தின் நிழல் கீழே விழுந்துவிடாமல் அடுத்த மரத்தின் நிழல் தாங்கிப் பிடித்திருந்தது. நிழல்களின் சங்கிலியாக நீண்டிருந்தது மயிலாப்பூரின் பாதை. விரைந்தோடும் குதிரை காலால் எத்தித் தள்ளிச் செல்லும் பாதையைத் தான் தாங்கிப் பிடித்துக்கொள்வதுபோல் கவனமாகப் பார்த்து வந்தார் ராமய்யங்கார்.

நீரதிகாரம் - 14

மாமரத்தின் துளிர் இலைகளின் நிறமும், முதிர்ந்த இலைகளின் கரும்பச்சையும் கலந்து அப்பாதையே செம்மஞ்சள்நிறப் பொன்போல் விரிந்திருந்தது. ஒவ்வொரு வேளையின் மர நிழலுக்கும் வெவ்வேறு பொருள். காலை நேர மர நிழல், மரத்தின் உறக்கம். இரவு முடிவுறும் வேளையில் மரம் உதிர்த்த உறக்கம்தான் நிழலாக மரத்தடியிலேயே சோம்பல் முறித்துக் கிடந்தது.

மர்மலாங்கு பாலத்தின் மேலாக கோச் வண்டி விரைந்துகொண்டிருந்தது. நகரம் இன்னும் முழுமையான இயக்கத்தை ஆரம்பித்திருக்கவில்லை. இரு கரையையும் தழுவிக்கொண்டு புரண்டோடியது அடையாறு.

‘அடையாற்றில் பெருக்கெடுத்தோடும் வெள்ளம் பார்த்து எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டன. ஒரு வருஷம் மழை பெய்தால் இரண்டு, மூன்று வருஷத்திற்குச் சேர்த்து வைத்துக் காய்ந்தது வானம். கரையோரத்தில் பச்சைப்பசேலென்று ஒரு புல்லைக்கூடப் பார்க்க முடியாமல் இருந்தது. இந்த வருஷம் பரவாயில்லை. நல்ல மழை பெய்துள்ளது.

அடையாற்றில் மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது சுற்றியுள்ள பகுதிகளெல்லாம் தண்ணீரில் மிதக்கும். நதியின் ஆக்ரோஷம் குறையும்வரை யாருமே அணுக முடியாதென்று அந்தக் காலத்தில் பேச்சிருந்தது என்று அப்பா சொல்லுவார். வைர நகை வியாபாரியான கோச்சா என்றொருவர் 150 வருஷத்திற்கு முன்னால் மதராசப்பட்டினத்தில் பெரிய பரோபகாரியாக இருந்திருக்கிறார். ருஷ்யாவை அடுத்துள்ள ஆர்மேனிய தேசத்தவர். பிரிட்டிஷார் வருவதற்கு முன்னால் மதராசப்பட்டினத்தில் ஆர்மேனியர்கள் கணிசமான அளவில் வியாபாரம் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருஷமும் தங்களுடைய குடிசைகளும் பிழைப்புக்கு ஆதாரமான ஆடு, மாடு, கோழிகளும் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போவதில், மாம்பலம் பகுதி குடிமக்கள், ‘நாங்கள் குடியிருக்கிற பகுதியில் வெள்ளம் சூழாமல் வழிசெய்து கொடுங்கள்’ என்று கோச்சாவிடம் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவில் கோச்சா கட்டியதுதான் மர்மலாங் பாலம்.

மர்மலாங் பாலத்தைக் கடக்கும்போதெல்லாம் கோச்சா நினைவுக்கு வருகிறார். சர்க்கார் உத்தியோகத்தில் இருக்கிறதால் தனக்கு இந்த விஷயம் தெரிகிறது. கோச்சாவை நினைக்கிறேன். தினம் இந்தப் பாலத்தைக் கடக்கிற மக்கள் எல்லோரும் நினைத்துக்கொண்டா இருப்பார்கள்? பாலத்தையொட்டி இருக்கிற மாம்பலத்து மக்களுக்குத் தங்கள் ஊரின் பெயரான மாம்பலம்தான் உச்சரிக்கத் தெரியாத ஐரோப்பியர்களால் மர்மலாங் ஆனதென்று தெரிந்திருக்குமா? ஆறு ஓடிக்கொண்டே இருப்பதுபோல், மக்களின் வாழ்க்கையும் கடந்துபோய்க்கொண்டிருக்கிறது.’ மனம் தத்துவ விசாரத்தில் சிறிது நேரம் மூழ்கியது. கரையோரத்தில் மிதந்துகொண்டிருந்த வெண்ணுரைகள் விசாரத்தை மேலும் தீவிரப்படுத்தின.

கிண்டி லாட்ஜ் நோக்கி கோச் வண்டி விரைந்துகொண்டிருந்தது. மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னரைச் சந்திப்பதற்காகத் தாம் பட்டினம் வந்திருக்கிறோம் என்பதை பென்னி குக் சொன்னதும் ஆச்சரியமாக இருந்தது. தம்புராட்டி லெட்சுமி கொச்சம்மைதான் இந்த ஆலோசனையைச் சொன்னது. அரசர் மூலம் திருநாள் வயதில் இளையவர். விசாகம் திருநாள் தன் சகோதரர் ஆயில்யம் திருநாள் அரசராக இருந்தபோதே, இளவரசராகப் பல்வேறு அரசியல் காரியங்களை முன்னெடுத்திருக்கிறார். விசாகம் திருநாளுக்கு உலக அனுபவமும் இருந்தது. மெட்ராஸ் பிரசிடென்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரையும் அவர் பழகிவைத்திருந்தார். மூலம் திருநாள் அப்படியல்ல. அவர் திருவிதாங்கூரைக் கடந்து வேறெங்கும் சென்றதில்லை. தன்னிரு மாமாக்களின் செல்வாக்கில் வளர்ந்தவர். கல்வியும் அவருக்குத் திருவிதாங்கூரிலேயே. அக்காரணத்தினால்தான் தம்புராட்டி மிகவும் கவனமாக ஒவ்வொன்றையும் ஆராய்ந்து சொல்கிறார்.

மெட்ராஸ் கவர்னரிடம் அவருக்கு மூன்று கோரிக்கைகள் இருந்தன. ‘பேரியாற்றில் அணைகட்ட அரசருக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதேநேரம் தங்களுடைய சமஸ்தானத்தின் நலத்திற்கு எதிராகவோ, திட்டத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமலோ ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட விருப்பமில்லை. இரண்டாவது, தங்களின் தண்ணீரை விட்டுக் கொடுப்பதற்கு ஈடாக, சமஸ்தானத்திற்கும் நல்லது நடக்க வேண்டும். எனவே அஞ்சுதெங்கு கோட்டையையோ தலைசேரி கோட்டையையோ அவசியம் கொடுக்க வேண்டும். மூன்றாவது, பேரியாற்று அணைத் திட்டத்தை ஆராய, பிரிட்டிஷ் இன்ஜினீயர்களை உடன் அனுப்ப வேண்டும்.

மூன்று கோரிக்கைகளையும் குறிப்பிட்டுக் கடிதம் அனுப்பி, ‘ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கவர்னர் ஒரு வார்த்தையில் நிராகரித்துவிட்டால், தாங்களாக வலிய வந்து ஒப்பந்தம் பற்றிப் பேச வேண்டியிருக்கும். பேசாமல் இருந்தால் ரெசிடெண்ட் அவர் அதிகாரத்தைக் காட்டுவார். சமஸ்தானத்திற்கு வரவேண்டிய நிதி அப்படியே நிலுவையில் தொங்கும். அதற்குமுன் முயல்வது நல்லதென்று தம்புராட்டி, தன்னை சொந்த வேலையாகச் செல்வதுபோல் மதராசப்பட்டினம் அனுப்பினார். எப்படியோ பென்னி அறிந்திருக்கிறாரே?’

செவலை நிறக் குதிரைகளின் கழுத்தில் மின்னிய கருமையைப் பார்த்தார். கழுத்தில் ஆபரணம் பூட்டியதுபோல் தனி சோபையைத் தந்தது கறுப்பு நிறம். குதிரைகளுக்குப் பொதுவாகத் தெரிகிற நீள்முகத்தைக் கடந்து கூர்ந்து பார்த்தால், கண்களும் தாடையும் அவற்றின் முக அமைப்பையே வேறொன்றாகக் காட்டுவதைப் பார்க்கலாம். நவாபுகளுக்குக் குதிரை விற்கும் அரேபியக்காரனிடம் நல்ல பிராயத்தில் வாங்கிய ஜாதிக் குதிரைகள். சோர்வென்பதையே அறியாதவை. இப்படியே திருவிதாங்கூர்வரை போகலாம். கூண்டு வண்டிக்குள் உட்கார்ந்து நமக்குத்தான் இரண்டாக உடைவதுபோல் இடுப்பு வலி குடையும்.

திவானின் கோச், மெட்ராஸ் கவர்னரின் கிண்டி லாட்ஜுக்குள் நுழைந்தது. மாளிகையின் பிரமாண்டமும் வேலைப்பாடும் பிரமிக்க வைத்தன. மனிதர்களின் குடியிருப்புக்குப் பிரதான பங்கு இருக்கிறதுதான். உள்ளே இருப்பவர்களை எப்படி அணுக வேண்டும், அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை நுழையும்போதே சொல்லிவிடுவதுடன், உள்ளே வருபவரை, தன் தோற்றத்தின் வாயிலாகப் பாதி தயார் செய்துவிடுகிறது. ‘பிரிட்டிஷ் பாணியில் பங்களா கட்டுகிறேன்’ என ஆரம்பித்துத் தன் அரசு உத்தியோகத்தின் சேமிப்புகளையெல்லாம் பங்களாவில் போட்டதைத் தன் உறவினர்களும் நண்பர்களும் வெகுவாக விமர்சித்தார்கள். ‘வெட்டிச் செலவு’ என்பதே அவர்களின் புரிதல். மனிதர்களுக்கு எப்படிச் சுய தோற்றம் முக்கியமோ, அவ்வளவு முக்கியம் குடியிருக்கும் வீடும். தன் தேர்ந்த ரசனையின்மீது பெருமிதம் உண்டு ராமய்யங்காருக்கு.

புகழ்வாய்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் செல்வாக்கான திவானாக இருந்தாலும், உள்ளே நுழையும்போதே கிண்டி லாட்ஜ் ராமய்யங்காருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது.

வாசலில் கோச் வண்டியை நிறுத்தினான் சாரதி. மடியில் இருந்த தலைப்பாகையை எடுத்துத் தலையில் வைத்துச் சரிசெய்துகொண்டு, கீழே இறங்கி நின்றார். நீண்ட வெண்பட்டு அங்கவஸ்திரத்தை இரண்டு பக்கமும் சரிசமமாக இழுத்துவிட்டுக்கொண்டு, கைத்தடியின் தங்கப் பூணைத் தடவிபடியே நின்று பங்களாவைச் சுற்றிப் பார்த்தார். எவ்வளவு விஸ்தாரம்; எவ்வளவு கம்பீரம்; வியப்பில் விரிந்தன அவரின் கண்கள். ‘எல்லாம் நல்லபடியாய் முடிந்தால், மாளிகையைச் சுற்றிப் பார்த்துவிட வேண்டும். அடுத்த வருஷம் பொங்கலுக்கு வெள்ளையடிக்கும்முன், நம்முடைய பங்களாவில் மேலும் சில மாற்றங்களைச் செய்துவிட வேண்டும்.’ திவானுக்குள் தன் பங்களாவைப் பற்றிய கனவு விரிந்தது.

கோச் நிறுத்தும் இடத்திற்குச் சாரதியைப் போகச் சொல்லிவிட்டு, ராமய்யங்கார் மாளிகையின் வாசல் நோக்கி நடந்தார்.

வெயில் இளஞ்சூடாகி இருந்தது. மாளிகைக்கு வடபகுதியில் இருந்த பெரிய அரச மரத்தில் விதவிதமான பறவைகள் குரலெழுப்புவதும், வாலையாட்டிக் கொண்டு கிளையில் உட்கார்ந்து தலையைச் சுற்றும் முற்றும் திருப்புவதும், விருட் விருட்டென்று கிளை விட்டுக் கிளை பறப்பதுமாக உற்சாகமாக இருந்தன. இலைகளின் பச்சையத்துடன், பறவைகளின் வண்ணங்கள்கூடி, மரம் பொலிவாய் இருந்தது.

நான்கைந்து கேழையாடுகள் மரத்தடியில் புற்களைக் கடித்தவண்ணம் வேடிக்கை பார்த்தன. புல்லைக் கடித்தாலும் அவற்றின் பார்வை, திவான் மேல் இருந்தது. கவர்னர் மாளிகையின் ஆடுகளும் பார்வையாளர்களை வேடிக்கை பார்க்கப் பழகிவிட்டன போலும்.

மரத்தடியை அடுத்து நீண்ட லாயம். லாயத்தில் கடுதாசி எடுத்துச் செல்லும் ஒட்டகங்கள் வரிசையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தன. ஒட்டகச் சுவார்கள் (வீரர்கள்) லாயத்தின் முன்னால் குத்தங்கால் வைத்து உட்கார்ந்து, மணலில் கோடு கிழித்து ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டி ருந்தார்கள். ‘எந்த க்ஷணத்திலும் அழைக்கப்படுவோம்’ என்ற சுதாரிப்பு அவர்கள் உட்கார்ந்திருந்த விதத்தில் தெரிந்தது.

வாயில் இருந்த வெற்றிலையை இன்னும் கொஞ்ச நேரம் குதப்பலாம். ஆனால், கவர்னரைச் சந்திக்கும்போது வெற்றிலை போட்ட தடம் தெரியாமல் இருந்தால் நலம். எங்காவது ஓரமாகத் துப்பிவிட்டு, வாய் கொப்பளிக்கலாம் என்று நினைத்தார். ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த வெள்ளையர் களைப் பார்க்கும்போது தயக்கமாக இருந்தது. ‘எங்காவது கண்ட இடத்தில் துப்பி, துப்பியதால் புதுச்சிக்கல் வந்து, வந்த காரியம் கெட்டுவிடப்போகிறது’ என்றெண்ணிய ராமய்யங்கார், குதப்பிய வெற்றிலையைச் சாற்றுடன் சேர்த்து விழுங்கினார். பரந்து விரிந்த கவர்னர் மாளிகையில் வெற்றிலை துப்ப இடமில்லை. ஒருவாய் தண்ணீர் குடித்தால் பரவாயில்லை என்ற எண்ணத்தையே தண்ணீர்போல் விழுங்கிவிட்டு, வேகமாய் நடந்தார்.

வழி முழுக்க மரப்பெட்டிகள். வெண்கலப் பிடி வைத்து, கணமான பூட்டுப் போட்டுப் பூட்டியிருந்தார்கள். வேலைப்பாடுகள் நிரம்பிய தோற்பைகள் வரிசையாக இருந்தன. இருபதடி நீளத்திற்குப் பெட்டிகளும் பைகளுமாக இருந்தன. ‘மாளிகைக்குள் நாற்காலி, கட்டில், மர அலமாரிகள் தவிர மற்ற எல்லாம் வெளியில் இருக்கிறதே?’ யோசனையுடன் நடந்தார் ராமய்யங்கார்.

மாளிகையின் வாசலில் ஐந்தாறு பேர் காத்திருந்தார்கள். திவான் அவர்கள் அருகில் செல்லாமல், விலகி நின்றார். கவர்னரைச் சந்திக்க வருகிற சாதாரணப் பார்வையாளர் என்று தன்னை நினைத்துவிடக் கூடாதே என்ற கவனம் அவரின் விலகலில் இருந்தது. காத்திருந்தவர்களில் வெள்ளையர்கள்தான் அதிகம். தன்னைத் தவிர்த்து, ஒரே ஒருவர் அங்கிருந்தார். அவர் யாராக இருக்கும் என ராமய்யங்கார் கூர்ந்து கவனித்தார். யூகிக்க முடியவில்லை.

காவலாளிகள் அனைவரும் பரபரப்பாக உள்ளே செல்வதும், பெட்டிகளைத் தூக்கிவந்து வெளியே வைப்பதுமாக இருந்தார்கள். காத்திருப்பவர்களை யாரும் பொருட்படுத்தவில்லை.

காலையில் சாரதியிடம், ‘போகலாம்டா’ என்று சொல்லும்போது, வடதிசைச் சுவரில் இருந்த கெவுளியும் ‘ஆமாம்’ என்பதுபோல் குரல் கொடுத்தது. வடக்கிலிருந்து கெவுளி சத்தம் கொடுத்தால் செல்லும் காரியம் ஜெயமாகுமென்பது நம்பிக்கை. இங்கிருக்கிற சூழலைப் பார்த்தால் கெவுளி வார்த்தை பொய்க்கும் போலிருக்கிறதே?

தன்னுடைய தோற்றத்தை வைத்துத் தன் முக்கியத்துவம் அறிந்துகொள்ளலாம் என்றாலும் கவர்னர் மாளிகை ஊழியர்கள் அப்படிச் செய்வதில்லை. அவர்கள் மூட்டையைத்தான் தூக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இமயத்தைப் புரட்டி வைப்பதுபோன்ற பாவனையுடன் நடந்துகொள்கிறார்களே? திவானுக்குக் கோபம் வந்தது.

“டேய்...”

பெட்டியொன்றைத் தூக்கிச் சென்ற வேலையாளை ராமய்யங்கார் அழைத்தார். அவன் காதில் விழுந்ததோ விழவில்லையோ, பெட்டியின் கனம் வேறெதையும் கேட்க விட்டிருக்காது.

“காது கேட்கலையாடா மடப் பயலே.”

பெட்டியை இறக்கி வைத்தவன், ராமய்யங்காரைப் பார்த்துக் கும்பிட்டான்.

“சாமி...”

“வாசக் காவக்காரன் யாருடா? எங்க இருக்கான்? கூப்புடு.”

“சாமி, எல்லாருமே உள்ள பொட்டிங்களுக்குள்ள தஸ்தாவேஜெல்லாம் எடுத்து வச்சி பூட்டிக்கிட்டு இருக்கிறாங்க சாமி.”

“எதுக்கு?”

“கவர்னர் நீலமலைக்குப் போறாரே சாமி?”

“எப்போ?”

“எடுத்து வச்சிட்டா கெளம்பிடுவாரு. அதோ ரயிலு வண்டி மாஸ்டரு வந்திருக்காரே?”

எதிரில் காத்திருந்தவர்களில் ஒருவரைச் சுட்டிக்காட்டி காவலாளி பதில் சொன்னான்.

திவானுக்குக் குழப்பமாக இருந்தது. மனத்திற்குள் அன்றைய நாள், கிழமை, நேரமெல்லாம் சரிபார்த்துக்கொண்டார். கவர்னர் கொடுத்த நேரம் தவறிவிடக் கூடாது என்பதற்காகத்தானே, ஒளிகளவாய்க் (இருள் அகலாத வேளை) கிளம்பி வந்தேன். கவர்னர் ஊட்டிக்குப் போகிறார் என்கிறார்களே? திவானுக்குப் பதற்றம் கூடியது.

நீரதிகாரம் - 14

“நீ எனக்கொரு உபகாரம் பண்ணு. உள்ள கவர்னர் செக்ரட்டரி இருப்பாரு. அவருகிட்ட போய் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் ராமய்யங்கார் வந்திருக்கார்னு சொல்லு.”

சமஸ்தானம், திவான் போன்ற வார்த்தைகள் கொடுத்த பிம்பத்தில், காவலாளி திவானை உற்றுப் பார்த்தான்.

“ஓடுடா, போய்ச் சொல்லு.”

“கும்பிடுறேன் சாமி. அதோ ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்கிறவங்களும் அவங்களப் பத்திச் சொல்லி, போய்ச் சொல்லு, போய்ச் சொல்லுன்னுதான் சொன்னாங்க சாமி. உள்ள இருக்க செக்ரட்டரிகிட்ட நான் போய்ச் சொன்னேன். ‘யார் வந்தாலும் வெளிய இருக்கட்டும்’னு சொல்லிட்டார். இப்போ நீங்க வந்திருக்கீங்கன்னு சொன்னாலும் அதான் சொல்லுவாரு.”

காவலாளி நீட்டி முழக்கினான்.

அப்போது எதிரில் இருந்தவர்கள் பரபரப்பானார்கள். திவான் வாயிலைப் பார்த்தார். கவர்னரின் செயலாளர் வெளியில் வந்திருந்தார். நின்றிருந்தவர்களைப் பார்த்தார். திவானைப் பார்த்து, “மிஸ்டர் அய்யங்கார், வெல்கம்” என்றார். திவானுக்கு மூச்சு வந்தது. செயலர் தனக்குக் கொடுத்த மரியாதையைக் காவலாளி பார்த்தானா என்பதை அறிய அவனைத் தேடினார். செயலாளர் வாசலுக்கு வந்ததைப் பார்த்தவன், அடுத்த விநாடி அங்கில்லை.

“மிஸ்டர் அய்யங்கார், ஸ்டேஷன் மாஸ்டர் வந்திருக்கிறார். அவரைப் பார்த்துவிட்டு வருகிறேன்.”

திவான் பதில் சொல்வதற்குள் செயலாளர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்றிருந்தார்.

“சலூன் (அனைத்து வசதிகளும் கொண்ட சொகுசு கோச்) தயாராக இருக்கிறதா மிஸ்டர் ஜான்?”

“தயாராக இருக்கிறது மிஸ்டர் செக்ரட்டரி. வழக்கமான ரயிலில் கவர்னருக்கென்று தனி கம்பார்ட்மென்ட் தயாராக வைத்திருந்தோம். நீங்கள் தனியாக சலூன் கேட்டு அனுப்பியதால், அந்த ரயில் புறப்பட்டுச் சென்ற பிறகு இன்ஜினும் சலூனும் தயார் செய்துவிட்டு வருகிறேன்.”

“சென்ற முறை அவசரத்தில் பயணிகள் ரயிலில் கவர்னர் பயணம் செய்தார். மேட்டுப்பாளையம் சென்று சேரும்வரை எத்தனை அசௌகரியங்கள்? கோச்சுக்குச் சரியாகத் திரைச்சீலை போடாமல், கரித்துகள்களும் புகையும் உள்ளே வந்துவிட்டன. மற்ற பயணிகளின் கூச்சல். ஒவ்வொரு ஊரிலும் நின்று நின்று ஐந்து மணி நேரம் தாமதமாகச் சென்றது. கவர்னர் அலுவலகப் பணியாளர்களையும் அதே ரயிலில் ஏற்றிக்கொண்டீர்கள். கவர்னர், ‘என்னையும் ஒரு பெட்டியில் போட்டுப் பூட்டி அனுப்பியிருக்கலாமே, இந்தக் கோச்கூடத் தேவைப்பட்டிருக்காதே?’ என்று கோபித்துக்கொண்டார். அதனால்தான் இம்முறை கவனமாகச் சலூன் கேட்டோம்.”

“தயாராக இருக்கிறது மிஸ்டர் செக்ரட்டரி. நீங்கள் எதிர்பார்க்கிற அத்தனை வசதிகளும் செய்துவிட்டோம். ஐம்பது கிலோமீட்டருக்கு ஓரிடத்தில் நிறுத்தும்போது கவர்னருக்கு வேண்டியதைச் செய்ய தகவல் அனுப்பிவிட்டேன்.”

“மேட்டுப்பாளையத்திலிருந்து உதகமண்டலம் செல்ல, நல்ல திடகாத்திரமான பல்லக்குத் தூக்கிகளைச் சொல்லி வையுங்கள். சென்ற முறை வந்திருந்த எட்டுப் பேரில் இரண்டு பேருக்குக் காய்ச்சல், ஒருவன் மூக்கை உறிஞ்சிக்கொண்டே இருந்தான். உங்களுக்கே தெரியும், ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னருக்குச் சின்னத் தொற்று ஏற்பட்டாலும், பிரிட்டிஷ் அரசிக்கு நாம்தான் பதில் சொல்ல வேண்டும்.”

“பிரிட்டிஷ் அரசிக்கா?”

“பிறகு? ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் காரணம் எழுதி அனுப்ப வேண்டுமே? பல்லக்குத் தூக்கிகளின் மூலம் ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னருக்குக் காய்ச்சலும் ஜலதோஷமும் என்றுதான் எழுதியனுப்ப வேண்டும்.”

“ஐயோ... மிஸ்டர் செக்ரட்டரி, எல்லாமே பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்திருக்கிறோம். கவலை வேண்டாம்.”

“இந்த முறை தப்பு நடந்தால், என்னிடம் வருத்தப்பட்டுப் பிரயோஜனமில்லை.”

“தப்பிருக்காது மிஸ்டர் செக்ரட்டரி.”

“இன்னொரு விஷயம். ரயில்வே சமையல்காரரை நீங்கள் அனுப்ப வேண்டியதில்லை. அவருக்குச் சுவையாய்ச் சமைப்பதென்பதே மறந்துவிட்டிருக்கிறது. நாங்கள் கிண்டி லாட்ஜின் சமையல்காரரையே அழைத்துக்கொள்கிறோம்.”

“ரயில்வே சாப்பாடு பிரபல்யம் மிஸ்டர் செக்ரட்டரி. நிறைய பேர் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.”

“விரும்பிச் சாப்பிடுகிறவன் வீட்டில் உன் ரயில்வே சமையல்காரனைவிட மோசமாகச் சமைக்கும் சமையல்காரனோ மனைவியோ இருக்கிறார்கள் என்று பொருள்.”

தான் சொன்ன நகைச்சுவையைத் தானே ரசித்துச் சிரித்தார் செயலாளர்.

திவானுக்குப் பொறுமை குறைந்தது. செயலாளரின் அருகில் சென்றார்.

“மிஸ்டர் செக்ரட்டரி, எட்டு மணிக்கு ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னரைச் சந்திக்க நேரம் வாங்கியிருக்கிறேன். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசர் ஹிஸ் எக்ஸலென்ஸி மூலம் திருநாளின் பிரதிநிதியாக இந்தச் சந்திப்பு கோரப்பட்டது.”

“யெஸ் மிஸ்டர் அய்யங்கார். நீங்கள் எட்டு மணிக்குத்தான் சந்திக்க வேண்டும். ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னர் அவர்கள் நேற்று இரவே மேட்டுப்பாளையம் புறப்பட வேண்டியது. இதோ புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்.”

“நேற்று இரவா, பிறகெப்படி இன்று காலை எட்டு மணிக்குச் சந்திப்புக்கான நேரம் கொடுத்தீர்கள்?”

“நேரம் கொடுத்தபிறகு, மெட்ராஸ் பிரசிடென்சியில் வெயில் அதிகமாகிவிட்டது. அதனால் கவர்னர் உடனடியாக உதகமண்டலம் புறப்பட வேண்டுமென்று சொல்லிவிட்டார்.”

“மிஸ்டர் செக்ரட்டரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் போலிருக்கிறதே.”

“பாராட்டுக்கு நன்றி மிஸ்டர் அய்யங்கார்.”

“இந்தக் குளிர்காலத்தில் வெயில் கூடிவிட்டது என்று சொல்கிறீர்கள். பரவாயில்லை. நான் உடனடியாக கவர்னரைப் பார்க்க வேண்டும். பத்து நிமிடங்கள் போதும். சந்திப்பின் நோக்கத்தைச் சுருக்கமாகச் சொல்லிவிடுவேன்.”

“ஹிஸ் எக்ஸலென்ஸி புறப்படத் தயாராகிவிட்டார் அய்யங்கார். மெட்ராஸ் திரும்பிவர நாளாகும். வந்த பிறகு, முதலில் உங்கள் சந்திப்பிற்கான நேரம் வாங்கித் தருகிறேன்.”

”மிஸ்டர் செக்ரட்டரி, இந்தச் சந்திப்பிற்காக நான் ஐம்பது காத தூரம் (1 காதம் = 10 கி.மீ) பயணித்து வந்திருக்கிறேன். முயலுங்கள். மிக அவசரமும்கூட.”

“எதிர்பாராமல் சில நேரங்களில் மட்டும்தான் கவர்னரின் சந்திப்பு தள்ளிப்போகும். அல்லது நடக்காமல்போகும். உங்களுடையது எப்படி என்று தெரியவில்லை. பார்ப்போம்.”

எப்படியும் சந்தித்துவிடலாம் என்றிருந்த திவானுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

செயலாளர் உள்ளே போகத் திரும்பினார்.

“மிஸ்டர் செக்ரட்டரி, எனக்காக முயலுங்கள். ஹிஸ் எக்ஸலென்ஸி கிளம்பும்முன், ஐந்து நிமிடங்கள் கிடைத்தால்கூடப் போதும். கனிவுகூர்ந்து முயற்சி செய்யுங்கள்.”

“நிச்சயம் முயற்சி செய்கிறேன் மிஸ்டர் அய்யங்கார். ஹிஸ் எக்ஸலென்ஸியின் மனநிலை அறிந்து சொல்கிறேன்.”

தலைமுழுக்க வியர்த்தது. தலைப்பாகையைக் கழற்றி, அங்கவஸ்திரத்தால் துடைத்துக்கொண்டு மீண்டும் அணிந்தார். கைத்தடியினால் தரையில் ஓங்கிக் குத்தலாம்போல் திவானுக்குக் கோபம் வந்தது.

கவர்னரிடம் பதில் வந்திருந்ததே? மேஜர் பென்னி குக் கவர்னரைச் சந்தித்து, இந்தச் சந்திப்பு நடக்காத வகையில் விவரம் ஏதேனும் சொல்லியிருப்பாரா? திவானுக்குச் சிந்தனை பரபரத்தது.

கவர்னர் தன்னைத் தவிர்க்கிறாரோ என்றெண்ணினார்.

“நான் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பிரதிநிதி மிஸ்டர் செக்ரட்டரி. உங்கள் மேம்போக்கான பதில்களும் பொறுப்பற்ற நேர நிர்ணயமும் எனக்குச் சந்தேகத்தைத் தருகிறது. என்னைக் காத்திருக்கச் சொல்வதும் சந்திப்பைத் தவிர்ப்பதும் எங்கள் சமஸ்தானத்துடன் பிரிட்டிஷ் சர்க்கார் வைத்திருக்கும் நல்லுறவுக்கு முரணானது.”

“இத்தனை காரணங்களை யோசிக்க வேண்டியதில்லை மிஸ்டர் அய்யங்கார். யதேச்சையாகத் தங்களுக்குக் கொடுத்த நேரம் தவறிப்போகும் சூழல்.”

“தவறிப்போகும் சூழல்? அப்படியெனில் ஹிஸ் எக்ஸலென்ஸி யுடனான என் சந்திப்புக்கு வாய்ப்பில்லை என்கிறீர்களா?”

“இரண்டு நாளுக்கு முன்தான் ஹிஸ் எக்ஸலென்ஸி தன்னுடைய சந்திப்புகளையெல்லாம் ரத்து செய்து விட்டு, உதகமண்டலப் பயணத்தை அறிவித்தார்.”

நீரதிகாரம் - 14

“இரண்டு நாளுக்கு முன்பா, நேற்று பிற்பகலுக்குப் பின்பா? மிஸ்டர் செக்ரட்டரி, மேஜர் பென்னி ஹிஸ் எக்ஸலென்ஸியைச் சந்தித்துச் சென்றபின்னர் கவர்னரின் பயணம் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.”

“மிஸ்டர் அய்யங்கார்... ஹிஸ் எக்ஸலென்ஸியின் பயணத் திட்டம் பற்றி, ஹிஸ் எக்ஸலென்ஸி வைஸ்ராய் அவர்கள்கூடக் கேள்வி கேட்பதில்லை. கட்டுப்படுத்துவதில்லை. உங்கள் எல்லையை மீறி பேச்சைத் தொடர வேண்டாம். அய்யங்கார் மெட்ராஸ் பிரசிடென்சியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் நன்கறியப்பட்டவர், திறமையாகச் சேவை செய்தவர் என்ற காரணத்தினால்தான் முக்கியத்துவம் கொடுத்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.”

கோபத்துடன் சொல்லிவிட்டு, செயலர் உள்ளே சென்றார்.

வழக்கமாக கவர்னர்கள் உதகமண்டலம் சென்றால், திரும்பப் பட்டினம் வர இரண்டு மூன்று மாதங்கள் ஆகலாம். வெயில் அதிகமென்றால் வெயிலுக்குப் பயந்துகொண்டு ஆறு மாதத்திற்குக்கூடப் பட்டினம் பக்கமே திரும்ப மாட்டார்கள். இது குளிர்காலமென்பதால் ஒரு மாதத்திலும் திரும்பலாம். குளிர்காலத்திலும் கொசுவும் காய்ச்சலும் அவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தல். கொசுக்களுக்கு பயந்து பயணத்தைத் தள்ளிப்போட்டாலும் போடலாம்.

‘மூன்று மாதம்வரை காத்திருக்க முடியாது. ரெசிடென்ட் ஹானிங்டன் எனக்கு அழுத்தம் கொடுப்பார். அவருக்கு பதில் சொல்ல முடியாது. என்ன செய்யலாம்... என்ன செய்யலாம்?’ திவானின் சிந்தனை பாய்ச்சலெடுத்தது.

நின்றவாக்கிலேயே சிந்தனையைத் துரத்திக்கொண்டிருந்த திவான், தன்னைச் சுற்றி நின்ற எல்லோரிடமும் தொற்றிக்கொண்ட பரபரப்பைப் பார்த்தார்.

“தள்ளி நில்லுங்க, எல்லாரும் தள்ளி நில்லுங்க.”

காணாமல்போயிருந்த வாசல் காவலாளி ஆஜராகியிருந்தான்.

அவன் ஒழுங்கு செய்யும் அளவிற்கு அங்கு கூட்டமில்லையென்றாலும், கூட்ட மிருக்கும்போது காட்டும் ஜபர்தஸ்துகளில் ஒன்றும் குறையாமல் செய்தான்.

அவன் ஒழுங்கு செய்வதற்குள், இரண்டு பேர் அமரும் அலங்காரமான கோச் வண்டி வாசலுக்கு வந்தது.

கவர்னரின் செயலாளர் முன்னே நடந்து வர, கவர்னர் கிரான்ட் டப்பும் அவரின் மனைவி அன்னா ஜூலியாவும் பின்னால் நடந்து வந்தார்கள். கவர்னர் கிளம்புகிற செய்தி பரவிய விநாடியில், ஆங்காங்கே வேலை செய்துகொண்டிருந்த வேலையாள்கள் எல்லோரும் வாசலில் கூடி, கவர்னரின் பார்வையில் நேரடியாகப் படாமல் தள்ளி நின்றார்கள்.

கிரான்ட் டப், வெளியில் காத்திருந்தவர்களைப் பார்வையால் அளந்துவிட்டு மெதுவாக நடந்தார். திவான் ராமய்யங்காரைப் பார்த்துத் தயங்கியவர், ஒன்றும் சொல்லாமல் நடந்தார்.

திவானுக்குப் பகீரென்றது. கவர்னர் புறப்பட்டுச் சென்றுவிட்டால் இன்னும் எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டுமோ? கவர்னர் படியிறங்கிச் செல்ல, திவான் பின்னால் தொடர்ந்தார்.

‘வண்டியில் ஏறும்முன்பாவது பார்த்துவிட வேண்டும்’ என்ற அவசரத்தில் இருந்தார்.

கவர்னரிடம் நேரடியாக வழியை மறித்துப் பேசுவது மரபாகுமா? பிரிட்டிஷ் அதிகாரிகளின் சட்டதிட்டங்கள் எல்லாமே பதவி முறை சார்ந்தவை. தவறாக ஏதேனும் நடந்துவிட்டால்? வந்த நோக்கத்திற்கு எதிராகத் தன் காரியம் திரும்பிவிட்டால்? ராமய்யங்காரின் வேகம் குறைந்தது. ஆனாலும் பின்தொடர்ந்தார். கவர்னர் தன்னைக் கவனித்துக் கூப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று விரும்பினார்.

வேக நடை நடந்த கவர்னர், நேராகக் கோச் வண்டியின் அருகில் வந்தார். நின்றிருந்த அனைவரையும் பார்த்துப் பொதுவாகக் கையாட்டிவிட்டு, வண்டியில் ஏறினார். குதிரையின் சேணத்தை இறுக்கிப் பிடித்த சாரதி, வண்டி ஆடாமல் இழுத்துப் பிடித்தான். மேலே ஏறிய கவர்னர், தன் மனைவி ஜூலியாவுக்குக் கை நீட்டினார். அவரின் கைபிடித்து ஜூலியா மேலே ஏறிய பின், இருவரும் இருக்கையில் உட்கார்ந்தனர்.

சாரதி, மரியாதை தொனிக்கும் பாவனையுடன் கோச்சில் ஏறி உட்கார்ந்தான். “போகலாம்” என்ற கவர்னரின் உத்தரவு வந்த விநாடி, சாட்டையைச் சொடுக்கினான்.

குதிரைகள், காத்திருந்ததுபோல் வேகமெடுத்தன.

செய்வதறியாது திகைத்து நின்றார் திவான்.

- பாயும்