
எடித்தை நாற்காலியில் உட்காரவைத்துப் பால் குடிக்க வைத்துக்கொண்டிருந்தாள் ஜார்ஜியானா. அருகில் இருந்த படுக்கையில் லூசி உறங்கிக் கொண்டிருந்தாள்.
“உண்மையைத்தான் சொல்றேன் பென்னி, பெரியாற்றில் அணை கட்ட கடவுளாலும் முடியாது.”
“கிருஷ்ணா, கோதாவரியில் பிரமாண்ட அணைகள் கட்டியவர் நீங்க. நீண்ட அனுபவம் வாய்ந்தவர். நீங்க இப்படிச் சொல்லலாமா மிஸ்டர் காட்டன்?”
“அனுபவம் இருப்பதால்தான் சொல்கிறேன் பென்னி. ராயல் இன்ஜினீயர்னு வர்ற எல்லாரும் இன்ஜினீயர்தான். ஆனா எல்லாராலும் அணை கட்ட முடியாது. கிறிஸ்துவின் கிருபை பூரணமாகப் பெற்றவன்தான் அணை கட்ட முடியும்.”
“நற்காரியங்களுக்குப் பூரண கிருபை கொடுக்கிறவர்தான் கிறிஸ்து. பெரியாற்றின் நீரை மதுரைக்குத் திருப்பினால் இருபது லட்சம் மக்கள் வாழ்க்கை வளமாகும். இதில் இறைவனின் திருவுள்ளத்திற்கு மாறான எண்ணம் ஏதுமில்லையே மிஸ்டர் காட்டன்?”
“மனிதர்கள் வசிக்க முடியாத அடர்ந்த காட்டில் அணை கட்டப்போகிறாய். அங்கு வேலை செய்ய யார் வருவார்கள்?”
“நம் இன்ஜினீயர்கள் வருஷக்கணக்கில் அங்கு தங்கியிருக்காங்களே?”
“தங்கியிருக்காங்கதான். ஆனா, மழைமானியை வச்சிட்டு, மரத்துமேல குடில் கட்டிக்கிட்டு நிம்மதியா உட்காந்திருப்பாங்க. நேரத்துக்குச் சாப்பாடு, தூக்கம். விரும்பும்போதெல்லாம் முயல், மான், காட்டுப்பன்றின்னு வேட்டையாடிக்கிட்டு இருந்திருப்பாங்க. மனுஷங்களைப் பார்க்காம காட்டிலேயே இருந்ததுதான் அவங்களுக்கு மன உளைச்சலாகியிருக்கும். காட்டுடைய சீதோஷ்ணம் பொறுக்க முடியாம இருந்திருக்கும். இதுவரை நடந்தது புள்ளிவிவரம் சேகரிக்கிறதுதானே? கட்டுமானம் அப்படியில்லை. நடுக்காட்டுல நின்னு வேலை பார்க்கணும். எந்தப் பக்கம் யானை வரும், ஓநாய் வரும், புலி வரும்னு தெரியாது. விஷப் பூச்சிங்க கணக்கில்லாம இருக்கும். ஒரே ஒரு வண்டு போதும், மொத்த ஜனங்களையும் விரட்டியடிக்க. ஒரு ஆளுக்கு வண்டு கடிச்சு முகம் வீங்கினாலோ, விஷம் ஏறிட்டாலோ அவ்வளவுதான், மொத்த கூடாரமும் காலியாயிடும். ஊருக்குள்ள பத்துப் பேர் போய்ச் சொன்னாப்போதும், அடுத்து எவ்வளவு கூலி கொடுத்துக் கூப்பிட்டாலும் ஒரு ஆள் வரமாட்டான். ‘பசியில செத்துப் போயிடுவோம், இங்க வந்தா சாப்பாடு கிடைக்குமே’ன்னு வேலைக்கு வருவாங்க. இங்க வந்தும் சாவுதான்னா, ஊர்லயே செத்துப்போகலாமேன்னு இருந்துக்கிடுவாங்க. மலேரியா கொசுங்க கடிச்செடுத்துடும். வேலையாள்களை விடு. உனக்கும் பாதுகாப்பு இல்லை. பொதுப்பணித்துறையோட இன்ஜினீயர்ஸுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறது பிரசிடென்சியோட கடமை. பாதுகாப்பில்லாத இடத்துக்கும் வேலைக்கும் அவங்கள அனுப்பக் கூடாது. அனுப்பவும் மாட்டாங்க.”

“ராயல் இன்ஜினீயர்ஸை மெட்ராஸ் பிரசிடென்சி போருக்கு அனுப்புதே? போர்க்களம் பாதுகாப்பான இடமா? என் அப்பா, அண்ணன் ரெண்டு பேருமே போரில்தான் இறந்தாங்க.”
“போருக்கு அனுப்புறது தனி. அதையும் இதையும் ஒப்பிடக் கூடாது.”
“பாதுகாப்பு எங்கதான் இருக்கு மிஸ்டர் காட்டன்? நமக்குக் கீழ இருக்கிற பூமி நம்மைக் கீழதள்ளி விடாதுன்ற நம்பிக்கையில்தான் வாழ்க்கை ஓடுது. காவேரி இந்த விநாடி பிரவாகமெடுத்தா நடுத்திட்டில் கூடாரம் போட்டு உட்கார்ந்திருக்கும் நம் இருவரின் நிலையும் என்னாகும்?”
“இதற்கெல்லாம் பூஜ்யம் வாய்ப்பு என்பது நம்மிருவருக்கும் தெரியும் பென்னி. நீ போகிற இடம் நூறு சதவிகிதமும் பாது காப்பில்லையென்பதும் தெரிந்த உண்மை. 20 வருஷத்துக்கு முன்பு நான் இங்கிருந்து லண்டன் கிளம்பும்போதும் என்னிடம் கேட்டாங்க, நீங்க பெரியாறு அணை கட்டணும்னு. நான் முடியாதுன்னுதான் சொல்லிட்டுக் கிளம்பினேன்.”
“அப்போ கேப்டன் கால்டு வெல் சொன்னது தான் சரின்னு நீங்களும் சொல்ற மாதிரி இருக்கே?”
“கால்டுவெல் அணையே கட்ட முடியாது, தண்ணிய கிழக்குப் பக்கம் திருப்ப முடியாதுன்னு சொன்னான். நான் அணை கட்ற இடம் பாதுகாப்பில்லைன்னு சொல்றேன்.”
“எப்படிச் சொன்னாலும் நீங்கள் இருவரும் சொல்லுவதன் பொருள், பெரியாற்றில் அணைகட்ட முடியாதென்பதுதான். நான் இனி யாரிடமும் இதுகுறித்து விவாதிக்கவோ, ஆலோசிக்கவோ போவதில்லை மிஸ்டர் காட்டன். அணை கட்டி முடிப்பேன். இதை மட்டும் இப்போது உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்.”
ஆர்தர் காட்டன் பென்னியை உற்றுப் பார்த்தார். அலைகளற்ற காவேரி ஆற்றின் நீரில் பென்னியின் முகம் சிற்பம்போல் உறைந்திருந்தது.
“ரோம் நகரம் ஒரே நாளில் கட்டி முடிக்கப்படவில்லை, மை பாய். முயற்சி செய். மே காட் ப்ளஸ் யு மை டியர் சன்.”
ஆர்தர் காட்டன் பென்னியை வாழ்த்தினார். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த பென்னியின் காதில் ஆர்தரின் வாழ்த்து விழவில்லை.
“டோரா, மை டியர் டோரா...”
பென்னி தன் மகளை அழைத்தார்.
“யெஸ் பப்பா” என்று ஓடோடி வந்த ஐந்து வயது டோரா மார்கரெட், பென்னியின் மடியிலேறி அமர்ந்துகொண்டாள்.
“டோரா...”
“சொல்லுங்க பப்பா... கூப்பிட்டுட்டு ஒண்ணும் பேச மாட்டேங்கிறீங்களே?”
“டோரா... டோரா...”
“அப்போ நீங்க தனியா கூப்பிட்டுக்கிட்டே இருங்க, நான் போறேன்.”
“நோ டியர்...” பென்னி, டோராவை இறுக்கியணைத்துக்கொண்டார்.
“உன்னைப் பார்த்து, பெயர் சொல்லிக் கூப்பிட்டு எத்தனை மாசமாச்சு? அதான் கூப்பிட்டுப் பார்க்கிறேன்.”
“நீங்க எங்க போறீங்க பப்பா? நாளைக்கு வரமாட்டேங்கிறீங்க?”
டோராவின் மழலை பென்னிக்கு இனித்தது. என்ன பதில் சொன்னாலும் அது அவளுக்கு நியாயம் சொல்லும் பதிலாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை.
பதிலொன்றும் பேசாமல் டோராவின் தலையை வருடிவிட்டார்.
“எடித் எங்க?”
“எடித் மம்மாவைவிட்டு வர மாட்டா. உங்களைப் பாத்தாலே அழறாளே?”
“எடித் சின்னக் குழந்தையில்லையா? அதான் அவளுக்குப் பப்பாவை மறந்து போகுது.”
“நீங்க இங்கயே இருக்க மாட்டேங்கிறீங்க?”
“பப்பாவுக்கு ஒரே இடத்தில் வேலை இல்லையே? வேற வேற ஊருக்குப் போகணும். அதனால்தான்.”
“சரி, வாங்க பப்பா, எடித்கிட்ட நான் கூட்டிக்கிட்டுப் போறேன். நம்ம பப்பாதான், அழாம பப்பாகிட்ட இருந்துக்கோன்னு சொல்றேன், வாங்க.”
டோரா பென்னியின் மடியிலிருந்து இறங்கி, அவரின் கையைப் பிடித்து இழுத்தாள். பென்னி டோராவைத் தூக்கியணைத்துக்கொண்டு, ஜார்ஜியானா இருந்த அறைக்குச் சென்றார்.
எடித்தை நாற்காலியில் உட்காரவைத்துப் பால் குடிக்க வைத்துக்கொண்டிருந்தாள் ஜார்ஜியானா. அருகில் இருந்த படுக்கையில் லூசி உறங்கிக் கொண்டிருந்தாள். பென்னியும் டோராவும் உள்ளே நுழைந்ததைப் பார்த்த எடித், பால் குவளையைக் கையால் விலக்கியது. பற்கள் முளைக்காத சிவந்த ஈறுகள் தெரிய, டோராவைப் பார்த்துச் சிரித்தது.
“சீ யுவர் டாட்...” வாயைத் துடைத்துவிட்டுக் கொண்டே பென்னியைக் காட்டினாள் ஜார்ஜியானா.
டோராவிடமிருந்து பார்வையை விலக்கிய எடித், பென்னியைப் பார்த்தவுடன் முகத்தைச் சுருக்கி அழப் பார்த்தது. டோரா வேகமாக எடித்தின் அருகில் ஓடி, “பப்பா வந்துட்டாங்க பார், இங்க பார்” என்று சொல்லி, எடித்தின் கையைப் பிடித்திழுத்தாள்.
“பப்பா... சொல்லு, பப்பா...” டோரா எடித்தை உற்சாகப்படுத்தினாள். எடித்திடம் கிளம்பிய அழுகை, கிளம்பிய இடத்திலேயே காணாமல்போக, எடித், பென்னியைப் பார்த்துச் சிரித்தது. பென்னிக்குக் கண்கள் கலங்கின.
“மை டார்லிங்...” எடித்தைத் தூக்கி அழுந்த முத்தமிட்டார்.
சத்தம் கேட்டு விழித்த இரண்டு வயது லூசி, சுற்றி நின்றவர்களைப் பார்த்து மலங்க விழித்தது. பென்னி லூசியையும் மற்றொரு கையில் தூக்கி முத்தமிட்டார்.
“எனக்கும் பப்பா...” டோரா இரண்டு கைகளையும் தூக்கியபடி நின்றாள்.
பென்னி டோராவையும் சேர்த்தணைத்து, அழுந்த முத்தமிட்டார்.
“நானும் இருக்கேன் டியர்” ஜார்ஜியானாவின் குரலில் இருந்த காதலை மொழிபெயர்த்துவிட முடியுமா என்ன?
கொடைக்கானலின் முன்னிரவுக் குளிர் அனுபவிக்க உகந்தது. உச்சி வெயிலுக்குள் அதிகரிக்கும் வெப்பம், பிற்பகலுக்குள் குறையத் தொடங்கும். மழையென்றால் பிற்பகலிலேயே குளிரெடுக்கும். மழையற்ற நாள்களில் முன்னிரவுக் குளிர், தாலாட்டுப்போல் மனத்தை அமைதியாக்கும். தோட்டம் பார்த்திருந்த முற்றத்தில் பென்னியும் ஜார்ஜியானாவும் உட்கார்ந்திருந்தார்கள். உயர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் விண்ணைத் தொடும் உத்வேகத்தோடு நின்றிருப்பதை அவற்றின் நிழல்கள் சுட்டின.
கொடைக்கானல் ஏரியைப் பார்த்தபடி இருந்தது பென்னியின் பளிங்குநிற ட்ரெடிஸ் பங்களா. பென்னியின் பங்களாதான் கொடைக்கானலில் முதலில் கட்டப்பட்ட இரண்டடுக்கு பங்களா. மெட்ராஸைச் சேர்ந்த பாரிஸ்டர் முத்துக்கிருஷ்ணன் கட்டியது. முழுக்க மரத்தாலான பங்களாவின் முன்பக்க சாளரத்தில் இருந்து பார்த்தால் கொடைக்கானல் ஏரி துலக்கமாகத் தெரியும். தூரத்தில் அழகிய பழனி மலைத்தொடர் விரியும். மனிதர்களின் சப்தமே அரிதாகக் கேட்கும் பங்களாவுக்கு வெளிப்புறத்தில் நீண்டு விரிந்து சரிவில் இறங்கும் மண்பாதை ஒன்று.
பென்னிக்கு அந்த மண்பாதை பிரியமானது. பனிவிலகாத இருளில், மலையேறுவதற்கான தயாரிப்புடன் முழங்கால் வரையிலான தோல் பூட்ஸ் அணிந்து பாதையில் நடக்கத் தொடங்குவார். மலைக் காணிகள் முயல் பிடிக்க, காட்டுக்குள் உலாவிக்கொண்டிருப்பார்கள். மலைக்காடுகளுக்குள் நடப்பது பென்னிக்குப் பிடித்தமான ஒன்று. நுரையீரலைப் போலவே தன் இதயமும் பரிசுத்தமடையும் வேளை என்பார். விடியலில் கிளம்பும் பென்னி, அந்தி சாய்வதற்குள் 15 மைல் தூரமிருக்கும் பழனி மலைக்கோவில்வரை சென்று திரும்புவார்.
காட்டுக்குள் நடை போகாத நாள்களில் கொடை இங்கிலீஷ் கிளப்புக்குச் சென்று நண்பர்களோடு விளையாட்டு. கிளப்பின் டென்னிஸ் மைதானத்தில் நண்பர்கள் குவிந்திருக்க, பென்னியோ கிரிக்கெட் மட்டையுடன், தன்னுடன் கிரிக்கெட் விளையாட ஆட்களைத் திரட்டுவார். மெட்ராஸ் சேப்பாக்கத்தில் கிரிக்கெட் மைதானம் கட்டியதுபோல், கொடைக்கானலிலும் கட்ட வேண்டும் என்பது பென்னியின் விருப்பம். பெரியாறு அணைத் திட்டத்திற்காக நியமிக்கப்பட்டதில் இருந்து, வேறு சிந்தனைகளே இல்லாமல்போனது.
“எங்களுடன் இருப்பதற்காக வந்துவிட்டு, இன்னும் வேறெங்கோ இருந்தால் எப்படி மை டியர்?”
ஜார்ஜியானாவின் குரலில் வருத்தம் தெரிந்தது. பென்னி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தாலும், அவள் கேட்கும் கேள்வி காதில் விழுந்தாலும் பதிலொன்றும் சொல்லவில்லை.
ஜார்ஜியானாவின் ப்ளாக்கி காலுறை அணிந்த அவளின் இரண்டு பாதங்களுக்கிடையில் நுழைந்து படுக்கப் பார்த்தது. தரை விரிப்பைமீறி உடம்பில் பட்ட சில்லிப்பில் வாலை மடக்கி, ‘மியாவ்...’ என்றபடி நாக்கைச் சுழற்றி அவளைப் பார்த்தது.
“சில்லுனு இருக்கா ப்ளாக்கி, வா. என் மடியில் படுத்துக்கோ” என்று ஜார்ஜியானா தன் செல்லப்பிராணியைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள். அவளின் வெதுவெதுப்பான முழங்கையின்மேல் கழுத்தை நீட்டி வைத்தபடி, மடியில் படுத்து, ‘இனி நீங்கள் பேசலாம்’ என்பதுபோல் கண்மூடிக்கொண்டது.
“ரொம்ப சொகுசாயிட்ட...” ஜார்ஜியானா ப்ளாக்கியின் உடம்பைத் தடவியபடி சொன்னாள்.
“எத்தனை நாள் பயணத்தில் வந்திருக்கிறாய் பென்னி?”
“முடிவு செய்யவில்லை.”
“சென்றமுறை வந்ததற்கு இம்முறை முகத்தில் சோர்வு அதிகரித்திருக்கிறது.”
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.”
“இல்லையென்றாலும் இருக்கிறது என்பதை உன் கண்கள் சொல்கின்றன. சரி, திருவிதாங்கூரில் இருந்து நீ ஏன் மெட்ராஸ் சென்றாய்?”
“திவான் ராமய்யங்கார் மெட்ராஸ் கவர்னரைப் பார்க்கச் செல்கிறார். ‘அவர் கவர்னரைச் சந்தித்து, திட்டத்திற்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவெடுக்கும்படி ஆகிவிடப்போகிறது, நீ உடனே சென்று திவானை நிறுத்தப் பார். அல்லது கவர்னரைச் சந்தித்து, அவரிடம் விளக்கமாகச் சொல்’ என்று ரெசிடென்ட் ஹானிங்டன் என்னை அனுப்பினார். திவான் இவ்விஷயத்தில் சமஸ்தானத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றத்தான் முயல்கிறார். இனி அவரிடம் பேசிப் பலனில்லை. கவர்னரைப் பார்த்துப் பேசியும் அவர் என்ன முடிவில் இருக்கிறார் என்று என்னால் முடிவுக்கு வர முடியவில்லை. சமஸ்தானத்திற்கு அழுத்தம் கொடுக்க கவர்னர் தயங்குகிறார்.”
“கவலைப்படாதே பென்னி. ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டம். புதிதாக ஒன்றும் குழப்பிவிட மாட்டார்கள்.”
“பெரியாறு அணைத் திட்டத்தை மட்டும் அப்படியெடுத்துக் கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கை உள்ளே ஓடுது.”
“கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது, விடு. கிண்டி லாட்ஜ் பார்த்தியா? எல்லாரும் அதைப் பற்றி வியந்து பேசுவார்களே?”
“வியக்க என்ன இருக்கு? அதிகாரத்தின் கோரம் வெளித்தெரியாமல் இருக்க, கட்டடங்களை அலங்காரமாக்கிக் கொள்கிறார்கள். எனக்கொன்றும் அதைப் பார்த்து வியப்பில்லை.”
“எதையுமே புதுக்கோணத்தில் பார்க்கிறாய்.”
ஜார்ஜியானா புன்னகைத்தாள்.
“ஜார்ஜி, அங்க ஒருத்தரைப் பார்த்தேன். அதான் அங்க சுவாரசியம். சொல்ல மறந்துட்டேன்.”
பென்னியின் குரலில் உற்சாகம் வந்தது.
“சொல்லு சொல்லு, என்ன சுவாரசியம்.”
“கவர்னர் எந்த முடிவும் சொல்லாமல், ‘பார்க்கலாம்’ என்பதுபோல் சொல்லிவிட்டு அவர் அறைக்குச் சென்றார். அவர் போகும்வரை மரியாதைக்காக அங்கேயே நின்று கொண்டிருந்தேன். கவர்னரின் படுக்கையறைக்குச் செல்லும் மாடிப்படியருகே இரண்டு பேர் காவலுக்கு நின்றிருந்தார்கள். ‘கையில் ஈட்டியுடன் மாளிகைக்கு உள்ளே எதற்குப் பாதுகாப்பு? வெளியில் இருக்கும் அத்தனை பாதுகாப்பை மீறி யார் உள்ளே வந்துவிடப் போகிறார்கள்? அதுவும் படியேறும் இடத்தில் எதற்கு இரண்டு பேர்’ என யோசனையாக இருந்தது. கவர்னர் படியேறி அறைக்குச் செல்லும்வரை காத்திருந்தேன். செயலருக்கு எங்கள் பேச்சுவார்த்தை முடிந்தது தெரியாது. அவர் வெளியில் கவர்னர் உலா செல்வதற்கான ஏற்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.”
“என்ன பென்னி, திகில் கதைபோல் சொல்கிறாய்.”
“ஆட்சியதிகாரத்தைப்போல் திகில் நிரம்பிய விஷயம் வேறென்ன இருக்கு? கேளு. படிக்கட்டில் காவலுக்கு நின்ற இருவரிடமும் சென்றேன். ‘இங்கு என்ன வேலை, எதற்கு இங்க நிக்கிறீங்க’ன்னு கேட்டேன். அவங்க இருவருக்கும் பதில் தெரியலை. அவங்க தாத்தா காலத்தில் இருந்து அவங்க குடும்பத்து நபர்கள்தான் அங்க வேலை செய்றாங்க என்றார்கள். நாள் முழுக்க படியருகில் நின்றிருக்க வேண்டும். இதுதான் அவர்கள் வேலை.”
“கவர்னர் பங்களாவிலும் கலெக்டர் பங்களாவிலும் தோட்டத்திலிருக்கிற களையெடுக்கணும்னாகூட புல் பிடுங்க ஒருத்தன், பூண்டு எடுக்க ஒருத்தன்னுதான் இருப்பாங்க. இதுக்கு ஆசைப்பட்டுத்தானே லண்டனில் இருந்து பிரிட்டிஷ் இந்திய அதிகாரிகளைக் கல்யாணம் செய்துக்க கப்பல் கப்பலா பெண்கள் கிளம்பி வந்தாங்க. ‘மாப்பிள்ளை கப்பல் கிளம்பிடுச்சி’ன்னு நம்ம ஊர்ல கிண்டல் செய்வாங்களே, நினைவிருக்கா?”
ஜார்ஜியானா சொன்னவுடன் பென்னிக்கும் சிரிப்பு வந்தது.
“எனக்கு ஒரு பெண்ணும் எந்தப் பிரிட்டிஷ் கப்பலிலும் வரலையே ஜார்ஜி?”
“இப்பவும் அந்த அத்தியாயம் முடியவில்லை மிஸ்டர் பென்னி. மெட்ராஸ் பிரசிடென்சிக்கு வரும் அடுத்த கப்பலில் முயற்சி செய்து பாருங்கள்.”
“நோ டியர். என் அம்மா சாரா அனுப்பியிருக்கிற தேவதை நீதான்.”
“ஓ... வீழ்த்தும் ஆயுதமா?”
“அன்பைவிட பெரிய ஆயுதம் இருக்கிறதா மை டியர்?”
“போதும். படிக்கட்டு ஆள் என்ன ஆனார், அதைச் சொல்லு.”
“கிண்டி லாட்ஜ்லயே இருந்த வயசான ஒரு பிரிட்டிஷ்காரரிடம் கேட்டேன். அவர்தான் மெதுவாக உண்மையைச் சொன்னார்; மெட்ராஸ் பாணியில் இருந்த பழைய கிண்டி லாட்ஜை ஐம்பது வருஷத்துக்கு முன்னால் இப்ப இருக்கிற கவர்னர் பங்களாவா விரிவுபடுத்திக் கட்டியிருக்காங்க. கட்டும்போது, படிக்கட்டுகளுக்குச் சிவப்பு வண்ணச் சாந்து பூசிக் காயவிட்டிருக்காங்க. அடர்த்தியான சாந்து காய நாளாகும் என்பதால் படிக்கட்டுக்கு இரண்டு ஆளைக் காவலுக்குப் போட்டிருக்காங்க. நியமித்த நோக்கமே மறந்துபோய் மூன்று தலைமுறையாய் அவர்கள் படிக்கட்டுக் காவல் பார்த்து, அரசாங்க சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.”
ஜார்ஜியானாவும் பென்னியும் சிரித்தார்கள்.
“அரசாங்கத்தில் கண்மூடித்தனமாக என்னென்னவோ நடக்கும். நடக்க வேண்டியது நடக்காது” சிரித்து முடிப்பதற்குள் பென்னியின் குரலில் மீண்டும் சோர்வு.
“திட்டத்தை இறுதிசெய்தோமா, அணை கட்டினோமா என்றில்லாமல், பல சிக்கல்கள். அணை கட்டத் தேர்ந்தெடுத்த இடத்திற்குக் குத்தகை ஒப்பந்தம் போடவே இவ்வளவு இழுபறி. பிரிட்டிஷ் அரசாங்கம் இப்படியொரு சிக்கலை இதுவரை எதிர்கொண்டிருக்காது. ஏற்கெனவே இந்தத் திட்டம் துரதிர்ஷ்டம் பிடித்தது என்று பெயர் வாங்கிவிட்டது. இதில் இத்தனை பேர் சேர்ந்து சிக்கலாக்குகிறார்கள்.”
“தொடங்குவதுதான் தாமதம் பென்னி. பிறகு நீ சமாளித்துவிடுவாய்.”
“அந்த நம்பிக்கை முக்கொம்பில் ஆர்தரைப் பார்த்தவுடன் தகர்ந்துவிட்டது. கடவுளாலும் இந்த அணையைக் கட்ட முடியாது என்று அவர் சொல்லிவிட்டார்.”
“ஜீசஸ்...” ஜார்ஜியானா அதிர்ந்தாள்.
“எதேச்சையாக அவரைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. அந்தச் சந்திப்பு எனக்கு உதவுமென்று நினைத்தேன். ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இல்லை உண்மையான பிரச்சினை, கையெழுத்தானாலும் அணை கட்ட முடியாது என்று ஆர்தர் சொல்கிறார். அணை கட்டுவதில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். அவரின் அனுமானம் சரியாக இருக்குமோ என்று நானும் நம்பத் தொடங்குகிறேன்.”
“எந்த முடிவெடுத்தாலும் மறுபரிசீலனை செய்ய மாட்டியே பென்னி?”
“தொண்ணூறு வருஷம் முன்பே ஒருத்தர் இந்த அணை கட்டுவதற்கு எந்தச் சாத்தியமும் இல்லையென்று சொல்லியிருந்தார். இப்போது என்னைச் சுற்றியுள்ளவர்கள் மீண்டும் மீண்டும் அதைச் சொல்லும்போது, முதன்முறையாக எனக்கும் அவநம்பிக்கை வருகிறது.”
ஜார்ஜியானா பென்னியைப் பார்த்தாள்.
பென்னி அதிகம் பேச மாட்டார். அவருடைய முகபாவனையே அவர் பேச விரும்பாதவர் என்பதைச் சொல்லிவிடும். அபிசினியா (எத்தியோப்பியா) போருக்குப் போய் வந்தபிறகு பென்னியின் குணாம்சங்களில் மேலும் நிறைய மாற்றங்கள். பக்குவம். அபிசினியாவில் இருந்து இந்தியா திரும்பிய கொஞ்ச நாள்களிலேயே பென்னியின் அம்மா இறந்துபோனார். அவரின் அம்மா இறந்தபிறகுதான் ஜார்ஜியானாவுடன் திருமணம் நிச்சயமானது. பென்னிக்கும் ஜார்ஜியானாவுக்கும் 18 வயது வித்தியாசம். இளமையின் பூரணத்துவம் பரிபூரணமாய் இருந்த 20 வயது ஜார்ஜியானா 38 வயதான பென்னியைத் திருமணம் செய்துகொள்ள சம்மதித்ததே தனக்கு அமைந்த நல்லூழ் என ஜார்ஜியானாவை நினைத்து பென்னியின் மனம் நெகிழும்.
ஜார்ஜியானா பென்னியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மற்றவர்களின் முடிவுகளின் வழியாக நீ எந்த முடிவுக்கும் வர மாட்டாயே?”
பென்னி உடனே பதில் சொல்லவில்லை. அவர் சிந்தனை, பேச்சை நிறுத்திய இடத்திற்கு உடனடியாக மீளவில்லை.
“இதுவரை ஒப்பந்தம் கையெழுத்தாவதுதான் சிக்கல் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். கையெழுத்தாகி, அடர்ந்த காட்டுக்குள் அணை கட்ட முடியாமல்போனால், அது எனக்குப் பெரிய தோல்வியல்லவா? ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னர் அந்தத் திட்டத்திற்காகவே பொதுப் பணித்துறையில் எனக்குத் தனிப் பொறுப்பு கொடுத்திருக்கிறார். எனக்குத் தோல்வியென்பதுகூட இரண்டாம்பட்சம்தான். நான் ராயல் இன்ஜினீயராக இந்தியா வந்ததில் இருந்து, மெட்ராஸ் பிரசிடென்சியையும் மதுரையையும் பார்த்துக்கொண்டிருக்கிறவன். பஞ்சத்தினால் செத்தவர்கள், பஞ்சத்தால் அநாதையாக்கப்பட்டவர்கள், தேசம்விட்டுச் சென்றவர்கள், பைத்தியமானவர்கள், குற்றவாளிகளானோர், நோயாளிகளானோர் எல்லோரையும் நான் பார்த்திருக்கிறேன். பஞ்சம் இயற்கையின் தண்டனையல்ல, வளங்களை நாம் சரியாகப் பயன்படுத்தாததுதான் காரணமென்று அறிந்தவன் நான். மனிதர்களால் சரிசெய்யக்கூடிய மாபெரும் மனிதகுல இழப்பை, ஈடுசெய்யவிடாமல் இத்தனை சக்திகள் ஒன்றுசேர்ந்து தடுக்கிறதே என்ற எண்ணம் தரும் வலிதான் அதிகமாக இருக்கிறது.”
“பென்னி, நீ எத்தனையோ கடுமையான சூழல்களைச் சந்தித்திருக்கிறாய்.”
“இதில் எனக்கெந்த தனிப்பட்ட நெருக்கடியும் இல்லை. ஆனால் நானே கல்லும் மண்ணும் அள்ளிக்கொட்ட முடியாதே? வேலை செய்ய ஆட்கள் வர மாட்டார்கள் என்கிறார் ஆர்தர். வந்தாலும் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடிப்போய் விடுவார்களாம்.”
ஜார்ஜியானா அமைதியாகப் பார்த்தாள்.
“எல்லாத் திட்டத்திற்கும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன பென்னி. பொறுத்திருந்து பார்ப்போம்.”
“நாலு வருஷமாச்சு... பெரியாற்றுத் திட்டத்துக்கு என்னை நியமிச்சு. திட்டத்தினைச் சரிசெய்து மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் அரசியிடம் ஒப்புதல் வாங்கிய வேலை மட்டும்தான் நடந்திருக்கிறது.”
“எல்லாம் ஒவ்வொண்ணாத்தானே நடக்கும்?”
“ஒவ்வொண்ணா எப்ப நடக்கும்? இன்னும் பத்து வருசத்தில் ஐம்பத்திரண்டு வயசாகி ஓய்வுபெற்றுவிடுவேன். அப்புறம் நான் லண்டனுக்குப் போக வேண்டியதுதான்.”
“பென்னி, ஆர்தரைப் பார்த்ததில் ரொம்பக் குழம்பிட்டாய்.”
பென்னியின் முகத்தில் எந்தவொரு பதிலும் இல்லை.
“ஓ டியர், இங்க பாரு. இப்போ உனக்கு என்னென்ன சிக்கல்கள் தீரணும், சொல்லு.”
“எல்லாமே சிக்கல்தான் கிரேஸ்.”
பென்னி, நல்ல மனநிலையில் இருக்கும்போது கிரேஸ் என்று அழைக்க மாட்டார். ஜார்ஜியானாவுக்கு பென்னியின் மனநிலை புரிந்தது.
“சொல்லு பென்னி, உடனடியா என்ன நடக்கணும்?”
“இப்போ உடனடியாக நடக்க வேண்டியது, திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் அணை கட்டுவதற்கான இடத்திற்கு ஒப்பந்தம் போடணும்.”
“அடுத்து?”
“ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அடர்ந்த காட்டுக்குள்ள பாதை போடணும். வேலையாட்கள் குடியிருக்க வீடு கட்டணும். அணை கட்டத் தேவையான சாமான்களை, மலைக்குக் கீழே இருந்து மேலே ஏத்த வழி கண்டுபிடிக்கணும். எல்லாத்தையும்விட முக்கியமா, நாலாயிரம், ஐயாயிரம் ஆளுங்கள மலைக்கு வேலைக்கு அழைச்சிக்கிட்டு வந்து தங்க வைக்கணும். இதெல்லாம் மேலோட்டமா சொல்றேன். காட்டுக்குள்ள பாதை போடும்போது வர்ற பிரச்சினைகளிலிருந்து காட்டுக்குள்ள யானை, புலி, அட்டை, காய்ச்சல்னு வரப்போற பிரச்சினைகள் தனி.”

“எல்லாப் பிரச்சினையையும் ஒண்ணாச் சேர்த்து யோசிக்க வேணாம். எனக்கே தலை சுத்துது. முதல்ல நடக்க வேண்டியது ஒப்பந்தம். அதில் என்ன சிக்கல் இருக்கு?”
“மொத்தச் சிக்கலுமே அங்கதான் இருக்கு. நான் சொன்ன மத்ததெல்லாம் எனக்குப் பிரச்சினையே இல்லை.”
“சொல்லு, பென்னி.”
இதுவரை நடந்தவற்றை பென்னி ஜார்ஜியானாவிடம் சொன்னார்.
“இவ்வளவு தூரம் அலைஞ்சு திரிஞ்சும் காரியம் நடக்கலையே. நடக்காததோடு சிக்கல்மேல் சிக்கலாகக் கூடிக்கிட்டே போகுதே பென்னி?”
“அதான் என் கவலையே!”
“ஆர்தர் சொன்னாருன்னு சொன்னியே? நாலாவது, ஐந்தாவது நிலையில யாராவது இருந்தா அவங்க மூலம் முயற்சி செய்னு. அது எனக்கு நல்ல யோசனையாய்ப் படுது பென்னி.”
“எனக்குக் கோடு போடத்தான் தெரியும். சுத்தி வளைச்சு ஒண்ணும் யோசிக்கத் தெரியாது. ரெசிடென்ட் பங்களாவுக்கு நான் வழக்கமா போறேன். அங்க ரெசிடென்ட் மனைவி குருவாயி தவிர வேறு ஒருத்தரும் எனக்குத் தெரியாது. நான் போகும்போதெல்லாம் என் குதிரையைப் பிடித்து லாயத்தில் நிறுத்தும் இளைஞன் ஒருத்தன், அவனின் கண்களை நன்றாகப் பரிச்சயம் செய்திருக்கிறேன். ஆனால் பேர்கூடத் தெரியாது.”
“எடுத்த காரியம் தவிர வேறொன்றும் கண்ணில் படாத ஞானியாகிவிட்டாயா பென்னி?”
“சிரிக்கும் மனநிலை இல்லை.”
“சிரித்தால்தான் நல்ல மனநிலை வரும் மை டியர்.”
“குட் கமெண்ட்.”
“நன்றி... நன்றி...”
பென்னியின் கைவிரல்களைக் கோத்துக்கொண்ட ஜார்ஜியானா, “நானொரு யோசனை சொல்லவா?” என்றாள்.
“யோசனை சொல்கிறேன் என்றுதானே வந்ததிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறாய்.”
“இப்போ நிஜமாவே சொல்லப்போகிறேன். பென்னி, நான்காவது, ஐந்தாவது நிலையில் உள்ள நபர்களை நாம் தேடிப் போக வேணாம். நானே அந்த நபரா இருந்தா என்ன?”
பென்னியின் முகத்தில் வியப்பு.
“என்ன சொல்கிறாய் ஜார்ஜி?”
“யெஸ் டியர். நானே ஒப்பந்தம் கையெழுத்தாக முயற்சி செய்கிறேன்.”
“எப்படி?”
“எப்படின்னு தெரியாது. நீ சொல்லும்போது தோணுன யோசனை. ஆனா உனக்கு உதவ முடிவு செஞ்சுட்டேன்.”
“மூன்று சின்னக் குழந்தைகளை விட்டுவிட்டு நீ எங்கு சென்று யாரைச் சந்திப்பாய்?”
“ஏன் விட்டுவிட்டு? என்னுடன்தான் குழந்தைகளும் வருவார்கள்.”
“இன்னும் நீ விளையாட்டை விடவில்லை?”
“பென்னி, கேலி செய்கிறாயா? நம்பிக்கை இல்லையா?”
“யாருமே நீ அணுகக் கூடியவர்கள் அல்ல.”
“யார் அனுமதி தர வேண்டும்?”
“திருவிதாங்கூர் மகாராஜா மூலம் திருநாள்.”
“அவரைச் சந்தித்தாயா?”
“அவரை நேரடியாகச் சந்திக்க முடியாது. அவர் பிரதிநிதியாக திவான்தான் வருவார். ஒப்பந்தத்திலும் மகாராஜா சார்பாக திவான்தான் கையெழுத்துப் போடுவார்.”
“மகாராஜாவின் மனைவி பெயர்?”
“அவருக்கு மனைவி இல்லை. நான்காண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.”
“காதலி இருக்கிறாளா?”
“இருக்கணும்.”
“நான் மகாராஜாவைச் சந்தித்து அனுமதி வாங்குகிறேன்.”
ஜார்ஜியானாவை பென்னி குக் ஆச்சரியமாகப் பார்த்தார்.
- பாயும்...