மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 16 - முல்லைப் பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சி சரித்திரம்

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

பிறந்த சமஸ்தானம் என்பதற்காகத் தலைக்குமேல் கத்தியை வைத்தால் பொறுத்துப் போக முடியாது தம்புரான்.

குதிரைகளின் குளம்போசை மண்பாதையில் புதைந்து எழுந்தது. பூஞ்சாறு அரசர் கோட வர்மாவும் பாகீரதி தம்புராட்டியும் சொற்களற்று, பின்னால் நகரும் பாதையை வேடிக்கை பார்த்தபடி வந்தனர்.

அரசரின் சாரட்டுக்குப் பின்னால் எட்டுக் குதிரை வீரர்களும், முன்னால் பத்துக் குதிரை வீரர்களும் அணிவகுத்திருந்தனர். பயணங்களில் பாகீரதி பேசாமல் வருவது அபூர்வத்திலும் அபூர்வம். மரங்கள், மரங்களில் படபடக்கும் பறவைகள், பாதையில் குறுக்கிடும் ஓணான், முயல், காட்டுப் பன்றி, காட்டுக்கோழி எல்லாவற்றையும் பார்த்துப் பேசிக்கொண்டே வருவாள்.

நீரதிகாரம் - 16 - முல்லைப் பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சி சரித்திரம்

“பாகீரதி, நான் அருவி பார்ப்பதற்கென்று தனியாகச் செல்ல வேண்டியதில்லை” என்று பூஞ்சாறு அரசர் சொன்னால், ‘ஏன்?’ என்பதுபோல் புருவம் உயர்த்துவாள்.

“என்னுடன்தான் வண்டியில் பயணிக்கிறதே?”

“அப்படியெனில், இனி நான் பேசாமல் வருகிறேன்” என்று கோபிப்பாள்.

“அருவி உடனிருக்கிறது என்று சொன்னதில், ஏதும் குற்றமிருக்கிறதா பாகீரதி?”

“உங்கள் மனசுக்குத்தானே தெரியும்?”

“அருவி என்பது வெறும் சத்தம் மட்டும்தானா? உற்சாகமில்லையா? குளிர்ச்சி இல்லையா? குழந்தை போன்ற களங்கமின்மைதானே அருவி? கணவன் என்றாலே குற்றச்சாட்டை மட்டுமே நினைக்கக் கூடாது என் செல்லக்கிளியே.”

“பூஞ்சாற்று அரசர் எப்போது புலவரானார்?”

“பாகீரதியைப் பார்த்த பொழுதில்தான்.”

இருவரின் பயணங்களும் எப்போதும் பேச்சும் காதலுமாகத்தான் இருக்கும். பயணங்களுக்கென்றே நினைவுகளைச் சேகரித்து வைத்திருப்பார்கள். அன்றாடங்களில் பேசிக்கொள்ள முடியாமல் சேகரமாகும் செய்திகளைப் பயணங்கள் பரிமாறிக்கொள்ள வழிவிடும்.

இன்றைய பயணம் அவர்கள் இருவருமே விரும்பாத பயணமாக இருந்தது. தூரத்தில் குயிலின் கூவல் கேட்டது. குயிலின் குரல் இனிமையென்கிறார்கள். பாகீரதிக்கோ குயிலின் குரல் பெருத்த துயரம். அழுகையைத் தன் இனிமையான குரலில் குயில் ஆலாபனை செய்வதுபோலவே உணர்வாள்.

“நம் துயரம் போதாதென்று குயிலும் துணைக்கு வருகிறது” என்றாள் பாகீரதி.

நீரதிகாரம் - 16 - முல்லைப் பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சி சரித்திரம்

“குயிலுக்கென்ன துயரம் இருக்கப்போகிறது? நீயாகக் கற்பனை செய்கிறாய்.”

“குயிலுக்குத் துயரம் இருக்காதா?”

“பொதுவாக மனிதர்களைத் தவிர மற்ற ஜீவராசிகளுக்குத் துயரம், கஷ்டம் இருக்காதென்று நினைக்கிறேன். அதெல்லாம் நம் மனத்தின் கற்பனைகள். இயற்கையைப் பார்த்துப் பார்த்து நாமாக யூகித்துக்கொள்வதுதான்.”

“நீங்கள் சொல்வது உண்மையாகக்கூட இருக்கட்டும். எனக்காக ஒரு உயிர், என் துயரத்தில் பங்கேற்கிறது என்று நினைத்தால், துயரம் குறைந்ததுபோல் உணர்கிறேன்.”

கோட ராமவர்மா பாகீரதியின் வலது கையை எடுத்து, தன் இரு கைகளுக்குள் வைத்துக் கொண்டார்.

“கலங்காதே பாகீரதி. அரசாண்ட மதுரை மண்ணையும் மக்களையும் விட்டு வெளியேறிய எங்களுடைய மூதாதையர்களைவிடவா பெரிய துன்பம் எனக்கு வந்துவிடப்போகிறது?”

“நிலத்தை இழப்பது நம் உரிமையை இழப்பது அரசே. இன்று மேல்மலையின் காட்டை எடுத்துக்கொள்பவர்கள் நாளை நம் சமஸ்தானத்தையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?”

“என் கவலையும் அதுதான் பாகீரதி. எதிரி என்றால் படைகொண்டு எதிர்கொள்ளலாம். திருவிதாங்கூர் நீ பிறந்த சமஸ்தானம். என் கவலை அதிகமாக அதுவே காரணம்.”

“பிறந்த சமஸ்தானம் என்பதற்காகத் தலைக்குமேல் கத்தியை வைத்தால் பொறுத்துப் போக முடியாது தம்புரான். என்பொருட்டு நீங்கள் தயங்காதீர்கள். பூஞ்சாற்று சமஸ்தானத்திற்கு அதன் தம்புராட்டியால்தான் ஆபத்து வந்தது என்ற அவப்பெயர் எனக்கு வந்துவிடக்கூடாது. நான் பிறந்த சமஸ்தானம் என்று நீங்கள் யோசிக்கும்போது, தங்கள் சமஸ்தானத்தின் இளைய தம்புராட்டி வாழச் சென்ற சமஸ்தானம் என அவர்களுக்கு யோசனை இல்லையே?”

சொல்லும்போதே பாகீரதிக்குத் துக்கம் பொங்கியது. அரசரின் தோளில் சாய்ந்தாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

ராம வர்மா பாகீரதியைச் சேர்த்தணைத்து நெற்றியில் முத்தமிட்டார். தாயின் இறகுகளுக்குள் பொதிந்துகொள்ளும் கோழிக் குஞ்சொன்றைப்போல் பாகீரதி, தம்புரானின் விரிந்த மார்புக்குள் அடைக்கலமானாள். அவள் நெஞ்சின் விம்மல், கோட வர்மாவின் இதயத் துடிப்பை அதிகரித்தது.

இரு கைகளாலும் பாகீரதியின் முகத்தை ஏந்தினார். காற்றில் அலைபாய்ந்த திரைச்சீலையைப் பாகீரதியின் கைகள் இழுத்து நிறுத்த, கோட வர்மா பாகீரதியின் இதழ்களைப் பற்றினார்.

கார்மேகக் கூட்டம் அதுவரை எங்கிருந்தது என்றே தெரியவில்லை. சடசடவென்று மழைத் தாரைகள் விண்ணையும் மண்ணையும் இணைத்தன.

சாரட்டுக்குள் தம்புரானும் தம்பிராட்டியும் அன்பின் பெருமழையில் நனைய, குதிரை வீரர்கள் வான்மழையில் முழுமையாக நனைந்தனர். குதிரையும் வேகம் குறையவில்லை; வீரர்களும் தயங்கவில்லை; பயணம் தொடர்ந்தது.

வெப்பம் தணிக்கும் மழையும் முத்தமும் கலந்த பொழுதுக்குள்ளிருந்து வெளியேறத் துணிவு கொண்டவர் யாருளர்? கோட வர்மாவும் பாகீரதியும் கலந்து கரைந்தனர்.

காற்று வெகுண்டெழுந்து மழைத் தாரையை எண் திசையும் அள்ளித் தெறித்தது. திரைச்சீலை நனைந்து உள்ளே ஈரம் படர்ந்தது. கோட வர்மாவிடமிருந்து விடுபட்ட பாகீரதி திரைச்சீலையை விலக்கி, வெளியில் பார்த்தாள்.

“வீரர்கள் நனைகிறார்களே அரசே?”

“ஒதுங்குவதற்கு இடமில்லை பாகீரதி. பந்தளம் கொட்டாரத்தை நெருங்கிவிட்டோம். அரைக் காத தூரம்தான். சென்றுவிடலாம்.”

வேகம்கூடிய பெருமழை அடர்ந்த வெண்மையான திரைச்சீலையாகிப் பின்னால் வரும் வீரர்களைக் கண்பார்வையில் இருந்து மறைத்தது. குளம்போசை மழைச் சத்தத்தில் புதைந்தது.

“காலை நன்முகூர்த்தத்தில் கிளம்பியிருந்தால் மழைக்குமுன் வந்திருக்கலாமே பாகீரதி?”

பந்தள அரசர் ராஜசேகராவின் தம்புராட்டி அம்பாலிகா, பாகீரதியை விசாரித்தாள்.

“மழையில் நனைவதும், வெயிலில் காய்வதும் அரசர்களும் தம்புராட்டிகளும் பொருட்படுத்தக்கூடிய விஷயமே அல்ல” ராஜசேகரா சொன்னவுடன் அம்பாலிகாவின் முகம் சுண்டியது.

“விசாரிக்கும் மரபு இருப்பதால் பேச்சுக்குச் சொல்லியது தம்புரான். நீங்கள் பேசிக்கொண்டிருங்கள், நான் வருகிறேன்.”

அம்பாலிகா புறப்பட்டாள்.

“நானும் வருகிறேன் அக்கா” பாகீரதி அம்பாலிகாவைப் பின்தொடர்ந்தாள்.

“தம்புராட்டியிடம் ஏன் சுடுசொல்?”

“சுடுசொல் அல்ல கோட வர்மா. சிறுபிள்ளை நடவடிக்கைகளைப் பொறுக்க முடியாது என்னால். நாம் களம் பல கண்ட சந்திரகுலத்து வீர மரபினர் என்பதை மறந்து வெளிவரும் ஒரு சொல்லையும் நான் விரும்புவதில்லை.”

“தம்புராட்டியின் கேள்வியில் அப்படியொன்றும்...?”

“சந்திக்க வந்த நோக்கத்தைப் பேசுவோம் கோட வர்மா.”

கோட வர்மா சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பந்தள அரசரின் குணம் தெரிந்ததுதான். பேச்சு என்றால் நறுக்குத் தெறித்ததுபோல்தான் இருக்க வேண்டும். தேவையற்ற ஒரு சொல்லும் பேச மாட்டார். வாளேந்தும் வீரனுக்கான இலக்கின் துல்லியம் சொற்களுக்கும் வேண்டுமென்பதே அவர் நிலை. அவரைக் கையாண்டு பேச்சை நகர்த்துவது எளிதல்ல. யானைப் படைத்தளபதியின் தேர்ச்சி வேண்டுமதற்கு. தன்னைவிட வயதில் மூத்த பந்தள அரசரிடம் அளவுகடந்த பிரியம் வைத்திருந்தார் கோட வர்மா.

அரண்மனையின் சேடியர்கள் பழங்களும் பானங்களும் நிரப்பிய தட்டுகளை இருவர் முன்னும் வைத்தனர்.

“தேனில் ஊறிய பலாச்சுளையை முதலில் சாப்பிடு கோட வர்மா. மேல்மலையிலிருந்து மன்னான்கள் கொண்டு வந்தது. ருசியென்றால் நம் மேல்மலையின் தேனும் பலாச்சுளையும்தான்.”

கோட வர்மா, பலாச்சுளையைக் கையில் எடுத்தார். எடுத்தவர் அப்படியே வைத்திருந்தார்.

“ஏன் அமைதியிழந்த முகம்?”

“இதுவரை உங்களுக்குச் செய்தி எட்டியிருக்காது என்பதை நான் நம்பவில்லை தம்புரான்.”

“எண்திசைகளில் இருந்தும் வீரர்கள் சேதிகளைக் கொண்டு வருகிறார்கள். அதற்கென்ன குறை. உன் அமைதிக் குலைவிற்குக் காரணமென்ன? திருவிதாங்கூர் அரசர், பாகீரதியின் தந்தையின் மறைவு உங்கள் இருவரையும் நிலைகுலைய வைத்திருக்கும். மரணத்தைத் தடுக்கும் ஆற்றல் நம்மிடமில்லை. அவர் முன்னால் சென்றிருக்கிறார். மற்றவர்கள் பின்தொடர இருக்கிறோம்.”

கோட வர்மாவின் சிந்தனை அலைபாய்ந்தது. சமாளித்துப் பேச்சைத் தொடங்கினார்.

“பேரியாற்றில் அணை கட்டப்போகிறது பிரிட்டிஷ் சர்க்கார். அதற்காக எட்டாயிரம் ஏக்கர் நிலத்தைத் திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் கேட்டு, அவர்களிடம் குத்தகை ஒப்பந்தம் செய்ய ஏற்பாடாகிவருகிறது அரசே.”

“மேல்மலையில்தானே அணை கட்டப் போகிறார்கள்?”

“ஆமாம், பூஞ்சாறு சமஸ்தானத்திற்குச் சொந்தமான இடம்.”

“ஓ, உன்னுடைய இடத்தில் அணை கட்டப் போகிறார்கள். திருவிதாங்கூருடன் ஒப்பந்தம் போடுகிறார்கள். சரிதானே?”

“உண்மையில் உங்களுக்குத் தெரியாதா தம்புரான்?”

“கோட வர்மா, எனக்குத் தெரியும். சபரிமலைக்கு நீ தனியாகச் சென்றது, மேல்சாந்தியிடம் பிரசன்னம் பார்த்தது, எல்லாம் தெரியும். எனக்குத் தெரிந்ததை வைத்து நான் பேசக்கூடாது. தொடர்புடைய நீ சொல்லுவதைத்தான் நான் அறிந்துகொள்ள வேண்டும்.”

“திருவிதாங்கூரின் கட்டுப்பாட்டுக்குள் வராமல் இன்னும் பூஞ்சாறு சமஸ்தானம் மட்டும்தான் இருக்கிறது. உங்களின் பந்தள அரசையும் திப்பு சுல்தானுடன் போர் நடந்த நெருக்கடியான சூழலைப் பயன்படுத்தி, தங்களின் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டது சமஸ்தானம். இப்போது பூஞ்சாற்றுக்குக் குறி வைத்திருக்கிறார்களோ என்று அச்சமாக உள்ளது.”

ராஜசேகராவின் முகம் சோர்ந்தது.

“திப்பு சுல்தான் படையெடுப்பையொட்டி நடந்த குழப்பத்தில் தங்களுக்குக் கட்ட வேண்டிய இரண்டு லட்ச ரூபாய்க்காகப் பந்தள அரசையே தம்முடன் இணைத்துக்கொண்டது திருவிதாங்கூர். ஒவ்வொரு முறையும் மைசூரில் இருந்து படைகள் வரும்போது, பூஞ்சாற்று சமஸ்தானமும் பந்தள அரசும் திருவிதாங்கூருக்கு எவ்வளவு உதவியாக இருந்திருக்கிறோம். படை கொடுத்திருக்கிறோம், எதிரியை அச்சுறுத்தியிருக்கிறோம். எல்லைச் சாமிபோல் நின்று அவர்களின் ராஜ்ஜியத்தைக் காத்திருக்கிறோம். அவர்களோ பெற்ற உதவிகளைச் சடுதியில் மறந்துவிட்டு, சின்ன வாய்ப்பு கிடைத்தாலும் சிற்றரசர்களை விழுங்கிவிடக் காத்திருக்கிறார்கள்.”

“பூஞ்சாற்றுக்கும் அந்த அச்சுறுத்தல் தொடங்கிவிட்டதோ என்று அஞ்சுகிறேன் தம்புரான்.”

“உன் அச்சத்தில் நியாயம் இருக்கிறது கோட வர்மா. நீ சந்தேகிப்பது உண்மையாக இருக்கலாம்.”

“அதே மேல்மலையில் தேயிலை பயிரிடப் போகிறேன் என்று எங்கள் பூஞ்சாறு சமஸ்தானத்துடன்தான் ஒப்பந்தம் போட்டார் டேனியல் மன்றோ. அவரும் பிரிட்டிஷ்காரர்தான். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ரெசிடெண்டாக இருந்த ஜான் மன்றோவின் பேரன் அவர் என்பது உங்களுக்குத் தெரியும். பத்து வருஷத்திற்கு முன்புகூட பிரிட்டிஷ் சர்க்காருக்கு அந்த இடம் எங்களுக்குச் சொந்தமானது என்று தெரிந்திருந்தது. முன் நடந்தது எதுவும் தெரியாதது மாதிரி அவர்களும் இப்போது புதியதாகச் சிலந்தி வலையைப் பின்னுகிறார்கள்.”

நீரதிகாரம் - 16 - முல்லைப் பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சி சரித்திரம்

“ஆமாம், உன்னுடைய தந்தையுடன் மன்றோ செய்துகொண்ட ஒப்பந்தம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் அந்த மன்றோ நியாயமாக நடந்துகொள்ளவில்லை. முன்பணமாகப் பூஞ்சாற்று அரசரிடம் ஐயாயிரம் கொடுத்ததோடு சரி. வருஷத்துக்கு மூவாயிரம் தருகிறேன் என்று ஒப்பந்தம் செய்தான். ஒரே ஒரு வருஷம்கூட குத்தகைப் பணம் கொடுக்கவில்லை. அதை நினைவுபடுத்தி, உன் தந்தை இரண்டு முறை கேட்டார் என்பதற்காக, திருவிதாங்கூர் திவான் மாதவ ராவ் மூலம், அரசர் ஆயில்யம் திருநாளிடம் சொல்லி, உன் தந்தையுடன் செய்துகொண்ட குத்தகை ஒப்பந்தத்தின்மீது மேலொப்பம் வாங்கிக்கொண்டான். அதில் ஒரு லட்சம் ஏக்கருக்குமேல் பூஞ்சாற்று நிலம் பறிபோனது.”

“இந்தப் பின்னணியில் என் அச்சமும் கவலையும் அதிகரிப்பது நியாயம்தானே அரசே?”

உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த பாகீரதிக்குக் கண்ணீர் பெருகியது. இத்தனை பிரச்சினைகள் இருந்தும் அரசர் விசாகம் திருநாள், பூஞ்சாற்று அரசருக்குத் தன்னைத் திருமணம் செய்து வைத்ததைப் பற்றி நினைத்தாள். இதற்கெல்லாம் என்ன பொருள் இருக்க முடியும்? அவளுடைய இதயம் சிக்கல்களைப் பிரித்துணர முடியாமல் திணறியது.

“அந்த மேலொப்பம், பூஞ்சாற்றுக்கு எதிரானது என்று திருவிதாங்கூர் சமஸ்தானம் எண்ணியிருக்காது. பிரிட்டிஷ் சர்க்காரிடம் நல்ல பெயர் வாங்க, இந்தியா முழுக்க உள்ள சமஸ்தானங்கள் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நிற்கின்றன. திவான் மாதவ ராவ் தனக்கொரு சர் பட்டத்தையும் சமஸ்தானத்தின் அரசருக்கு மகாராஜா பட்டத்தையும் வாங்கிக் கொடுக்க நினைத்திருப்பார். அதற்கு வழியென்ன என்று அவரின் தந்திர மூளைதான் யோசித்திருக்கும். மேலொப்பம் செய்வதன் வாயிலாக, பூஞ்சாற்றின்மேல் தன் மேலாண்மையை நிரூபித்ததாகவும் ஆகும். பிரிட்டிஷ் சர்க்காரிடம் நெருக்கத்தைக் காண்பித்ததாகவும் ஆகும். திவான்கள்தான் சமஸ்தானங்களின் சாரதியாக இருக்கிறார்களே, என்ன செய்வது?”

“பேரியாற்று அணைக்காக எம் சமஸ்தானத்தில் உள்ள எவ்வளவு நிலங்கள் பறிபோக இருக்கிறதோ? கேள்விப்படும் செய்திகள் எதுவும் அனுகூலமாக இல்லை.”

இருவருமே அமைதியானார்கள்.

மதுரையின் ஸ்திரமற்ற அரசியல் சூழல், தாயாதிகளே பகைவர்களுக்கு முகமன் கூறி வரவேற்ற துரோக வரலாற்றின் கறுப்புப் பக்கங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, மதுரையின் மேற்குப் பக்கமிருந்த காடுகளில் பூஞ்சாறு அரசர்களைப் போலவே அடைக்கலமானவர்கள்தான் பந்தள அரசர்களும். திருவிதாங்கூருக்கு வடக்கில் பத்துக் காத தூரத்திலும், கோட்டயத்திற்குத் தெற்கில் ஐந்து காத தூரத்திலும் பத்தனம்திட்டாவின் மேற்கில் ஒன்றரைக் காத தூரத்திலும் இருக்கிறது பந்தளத்து அரசரின் கொட்டாரம். அச்சன்கோவில் ஆற்றின் வடகரையில் ஒரு கொட்டாரமும் பம்பையின் வடகரையில் இன்னொரு கொட்டாரமுமாகப் பந்தளத்து அரசர் செல்வாக்கோடு இருந்தார்.

சபரிமலை சாஸ்தாவின் தந்தைதான் பந்தள அரசர் என்றொரு ஐதீகம் உண்டு. வேட்டைக்குச் சென்ற பந்தள அரசருக்கு அடர்ந்த காட்டில், ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டிருக்கிறது. சத்தம் எங்கிருந்து வருகிறது என்று தேடியவர் கண்களுக்கு ஆளரவமற்ற பம்பையாற்றின் கரையில் கிடந்த குழந்தை தெரிந்திருக்கிறது. வாரிசு இல்லாத தன் அரச குடும்பத்திற்கு அந்த அரிகரனே வாரிசாக அவதரித்திருப்பதாக எண்ணி, சாஸ்தா எனும் ஐயப்பனை எடுத்து வந்து வளர்த்தவர்தான் பந்தள அரசர் என்ற நம்பிக்கை சாஸ்தா வழிபாட்டுடன் சேர்ந்தே வளர்ந்திருந்தது.

சபரிமலை மகர விளக்குப் பூஜை வேளையில் சாஸ்தாவை அலங்கரிக்கும் ஆபரணங்கள் அடங்கிய திருவாபரணப் பெட்டியைப் பந்தள அரசர்தான் கோயிலுக்கு எடுத்து வருவார். மகர விளக்குப் பூஜையின் முதல் நாள் திருவாபரணப் பெட்டியுடன் கையில் வாளேந்தி, பக்தர்கள் புடைசூழ பல்லக்கில் கிளம்பும் அரசர் மூன்றாம் நாளன்று கோயிலை வந்தடைவார். அங்குள்ள ராஜமண்டபத்தில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதல் தந்திரிகள், மேல்சாந்தி வரை அனைவரும் அரசரிடம் விபூதியும் பிரசாதமும் பெற்று, ஆசி வாங்குவார்கள். ஐந்தாம் நாள் அரசர் கொண்டுவந்த நகைகளையணிந்து சாஸ்தா முழு அலங்காரப்பூஷனாக ஒளிர்வார். ஏழாம் நாள் பந்தள அரசரையும் அவருடைய மகன் சாஸ்தாவையும் கோயிலின் கருவறையில் தனித்து விட்டுவிட்டு கோயில் மேல்சாந்தியும் வெளியேறிவிடுவார். தந்தையும் தந்தையைப் பிரிந்த மகனும் பேசிக்கொள்ளும் வேளை, உணர்வுப் பிரவாகமாக இருக்கும். மகனைப் பிரிய மனமின்றி, அரசர் கலங்கி வெளியேறியவுடன் மேல்சாந்தி கோயிலின் நடையைச் சாத்துவார். அன்றுடன் மகர விளக்குப் பூஜை நிறைவடையும். விழா நிறைந்தது என்பதை வானத்தில் வட்டமிடும் கிருஷ்ணப் பருந்து உறுதி செய்யும்.

“அரசரும் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டீர்களே?”

“ஆமாம் கோட வர்மா. நம் இழந்த உரிமைகளை நினைத்தால் நினைவுகள் பெரும் சுமைகளாகி விடுகிறதே?”

“சொந்த மண்ணை விட்டு வெளியேறியவர்களின் நினைவுகள் எப்போதுமே சுமைகள்தான் அரசே.”

“திருவிதாங்கூர் எங்களுக்கு வருடாந்திர பணம் *(பென்ஷன்) கொடுப்பதன் மூலம் உதவுவதாக நினைக்கிறது. நிலுவையில் இருந்த போர் உதவித் தொகையைச் சபரிமலை வருமானத்தில் இருந்து, சிறு சிறு தவணைகளில் கொடுக்கலாம் என்று எங்களிடம் நட்பாகப் பேசிய திவான், எங்களிடம் சொல்லாமல் நேரடியாக அவர்களே வருவாயை எங்களின் அதிகாரிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள். தாயைக் குழந்தையிடமிருந்து பிரிப்பதுபோல், என்னிடமிருந்து என் மகனையும் பிரித்துக் கொண்டார்கள். சபரிமலை பறிபோனதில் பந்தள சமஸ்தானத்தின் ஜீவாதாரமே பறிபோனது போலாகிவிட்டது. மதுரையிலிருந்து கிளம்பி வந்த நமக்கு, அம்பாலிகா தாயாக இருக்கிறாள். சாஸ்தா மகனாக இருக்கிறார். மகனைப் பிரித்தெடுத்துக் கொண்டார்கள். சபரிமலைக் கோயில் இப்போது திருவிதாங்கூர் தேவசம் போர்டு வசம் சென்றுவிட்டது. திருவாபரணம் எடுத்துச்செல்லும் உரிமையை மட்டும் இன்னும் என்னிடம் விட்டு வைத்திருக்கிறார்கள்.”

கோட வர்மா பந்தள அரசரின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“மேல்மலையின் பதினெட்டுக் குன்றுகள் எங்கள் சமஸ்தானத்தில் இருந்தன. எல்லாம் போனது. இந்தக் கொட்டாரமும் பந்தள அரசர் என்ற பட்டமும்தான் மிச்சம். பந்தளத்தைப் போலவே பூஞ்சாற்று சமஸ்தானத்தையும் எடுத்துக்கொள்ளத் திட்டமிடுகிறார்களோ?”

“பிரிட்டிஷ் சர்க்காரையும் நம்ப முடியவில்லை. திருவிதாங்கூரையும் நம்ப முடியவில்லை. பாகீரதியை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது. நாங்கள் இப்போது கிளம்பி வந்ததே, ஒப்பந்தம் கையெழுத்தாவதை எப்படித் தடுப்பது என்று உங்களிடம் ஆலோசிக்கத்தான். பாகீரதி, அவளுடைய அம்மாச்சி, லெட்சுமி தம்புராட்டியைச் சந்திக்கப் போகிறேன் என்கிறாள். தம்புராட்டி என்ன சொல்லுவார்? மகள்மேல் அன்பிருக்கலாம். ராஜ்ஜியக் காரியங்களில் பாசத்தைக் கொண்டுவர விரும்ப மாட்டார்.”

“வாஸ்தவம்தான்.”

அம்பாலிகாவும் பாகீரதியும் உள்ளே வந்தார்கள்.

“நானொன்று சொல்கிறேன், கேட்டுக்கொள்ள முடியுமா?” என்றாள் அம்பாலிகா.

“நீங்கள் சொல்லுங்கள் தம்புராட்டி. தம்புரானுக்குக் காரணமற்ற கோபம் வருகிறது” கோட வர்மா சொன்னார்.

“பாண்டிய அரசர்களுக்கே அந்தக் குணம் பொதுவானதுதான்.”

“வம்சாவளியை வீதிக்கு இழுத்து வரவில்லையென்றால் இந்தப் பெண்களுக்கு உறக்கமேது?”

“தம்புராட்டி சொல்ல வருவதைக் கேட்போம் முதலில்.”

“நம் பிரச்சினை திருவிதாங்கூருடனும் இருக்கிறது, பிரிட்டிஷ் சர்க்காருடனும் இருக்கிறது. இருவரையுமே நாம் பகைக்க முடியாது. இருவருக்குமே நாம் கட்டுப்பட்டவர்கள். நம்மீது மேலான அதிகாரம் கொண்டவர்கள். பந்தள அரசு ஏற்கெனவே வருடாந்திர பணம் வாங்கிக்கொண்டு, தன் ராஜ்ஜியத்தின் முழு உரிமையைத் திருவிதாங்கூருக்கு விட்டுக்கொடுத்து விட்டது. பூஞ்சாறு சமஸ்தானம், கொஞ்சம் கொஞ்சமாக அதை நோக்கிச் செல்கிறது.”

“இதில் ஏதாவது நீயறியாத செய்தி இருக்கிறதா கோட வர்மா?”

“நிதானியுங்கள் தம்புரானே...” அம்பாலிகாவின் குரலில் தெளிவு இருந்தது.

“இரண்டு சர்க்காருக்கிடையில் நடக்கிற இழுபறிகள் இருக்கட்டும். இந்தத் திட்டமென்ன? பேரியாற்றில் கட்டப்போகிற அணைத் தண்ணீர் எங்கு செல்லப் போகிறது? நம்முடைய ஆதி மண்ணுக்கு. நம் முன்னோர்கள் அரசாண்ட பாண்டிய மண்ணுக்கு. பஞ்சத்திலும் வறுமையிலும் செத்து விழுகிற நம் குடிகளின் உயிரைக் காப்பாற்ற நம்முடைய தண்ணீர் போகப்போகிறது. பாண்டிய மண்ணுக்கும் நமக்குமான உறவு புதுப்பிக்கப்பட ஒரு வாய்ப்பு. காய்ந்து கிடக்கிற நம் ஆதி பூமிக்கு, நம் மேல்மலையிலிருந்து நாம் அனுப்பப்போகிற உயிர்த் தண்ணீர்.”

அம்பாலிகா பேசுவதை வியப்புடன் பார்த்தார்கள்.

“இந்தச் சேர நாட்டில் நம்மைச் சேர அரசர்களாக ஏற்றுக்கொள்கிறார்களா? திருவிதாங்கூர் அரசர்களின் வம்சாவளியில் நமக்கு இடம் இருக்கிறதா? பிரிட்டிஷார் எழுதுகிற ஆவணங்களில் எல்லாம், நம்மை மதுரையிலிருந்து குடிபெயர்ந்து வந்த பாண்டிய வம்சாவளியினர் என்றுதான் சொல்கிறார்கள். நாம் சேர நாட்டில் இருந்தாலும் பாண்டியர்கள்தான். பாண்டிய தேசத்துக் குடிகளும் நம் குடிகள்தான். நம் குடிகள் வறட்சியில் வாடிக் கிடக்கும்போது, மேல்மலையின் பேரியாற்றுத் தண்ணீர் வீணாகப் போக வேண்டுமா?”

“தம்புரானே, நம் முன்னோர்கள் வழிவழியாய்ச் சொல்லும் விஷயமொன்று நினைவிலிருக்கிறதா?” பந்தள அரசரைப் பார்த்துக் கேட்ட அம்பாலிகா, அவர் அமைதியாக இருப்பதைப் பார்த்துப் பேச்சைத் தொடர்ந்தாள்.

“மதுரையில் இருந்து போகுமிடம் தெரியாமல் மானவிக்ரம ராஜா தன் பெண்டு பிள்ளைகளுடனும் குடிகளுடனும், முதலில் வந்து சேர்ந்த இடம் பாலக்காட்டுச்சேரி. அங்கே ஒரு பிராமணர் வீட்டில் விருந்தினராகத் தங்க இடம் கொடுத்தார்களாம். நாளாக நாளாக விருந்தினர்களின் நடவடிக்கையிலிருந்து வந்திருப்பது பாண்டிய அரசர்தான் என்று தெரிந்துகொண்ட பிராமணர், துலுக்கர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து, அரசரென்றும் பாராமல் உடனே வீட்டை விட்டு வெளியேறச் சொல்லியிருக்கிறார். மீண்டும் ஒரு நாடோடிக் காலம். அங்கிருந்து வன்னேரிக்கு* (திருச்சூர்) வந்த அரசர், சிறிது காலம் அங்கே தங்கினார். பாண்டிய அரசர் தங்கியிருப்பதையறிந்த கம்பம், கூடலூர், தேனிப் பகுதி பாளையக்காரர்கள் அரசரைத் தேடி வந்துவிட்டார்கள். ‘என்ன நேர்ந்தாலும் எதிரிகளை எதிர்ப்போம், உங்களுக்கு அரணாய் நிற்போம்’ என்றவர்கள், அரசரைப் பாண்டிய ராஜ்ஜியத்துக்குத் திரும்பி வர அழைத்தனர். அரசரின் மனம் மாறவில்லை. ‘கசந்ததை இனிக்க வைக்க முடியாது’ என்று மறுத்துவிட்டார். ஆனாலும் அரசர் திரும்ப வருவார் என்று கூடலூர் எல்லையில் அவருக்காக ஒரு கொட்டாரம் கட்டிக் காத்திருந்தனர். பிறகுதான் வன்னேரியிலிருந்து எர்ணாகுளம் போய், கடைசியாகப் பூஞ்சாற்றிலும் பந்தளத்திலும் அவரவர் கொட்டாரங்களை அமைத்து புதிய அரசாட்சியைத் தொடங்கினார்கள். நம் எதிரிகள் வலிமையானவர்கள் என்பதால், நம்மைக் கண்டாலே விலகியவர்களும், ஓடி ஒளிந்தவர்களுமாக இருந்த வேளையில், ‘என்ன நடந்தாலும் நாங்கள் உடன் நிற்கிறோம்’ என்றவர்கள் கம்பம், கூடலூர் பாளையக்காரர்களும் குடிகளும் என்று நம் குடும்பங்களில் சொல்லி வந்திருக்கின்றனர். ஆபத்தில் உடன் நின்ற நம் குடிகளுக்கு, சோதனைக் காலத்தில் நாம் உதவி செய்ய வேண்டாமா?”

அம்பாலிகாவின் கேள்வி, அங்கிருப்பவர்களுக்கு மட்டுமல்ல என்பது போலிருந்தது கோட வர்மாவுக்கு.

“நம் இடத்தை நாமே பிரிட்டிஷாருக்குக் கூப்பிட்டுக் கொடுக்க வேண்டும். அவர்கள் நம்மைப் புறக்கணித்து, மகாராஜாக்கள் என்று திருவிதாங்கூரிடம் ஒப்பந்தம் செய்ய விரும்பினாலும் பரவாயில்லை. நம் ஆதரவைத் தெரிவிப்பதுதான் முறை. தேயிலை விற்றுப் பணம் சம்பாதிக்கிற வர்த்தகனுக்கு இடம் கொடுத்திருக்கிறீர்கள். அவன் பணமே கொடுக்கவில்லையென்றாலும் உங்களால் என்ன செய்ய முடிந்தது? விவசாயத்திற்கு நீர் கேட்கும் நம் குடிகளுக்கு நாம்தானே உதவ வேண்டும்? மாமதுரை மழையின்றி வறண்டு போகக்கூடாது. பந்தள அரசரும், பூஞ்சாற்று அரசரும் உங்களின் ஒத்துழைப்பை, பிரிட்டிஷ் சர்க்காருக்குக் கடிதம் மூலம் உறுதிப்படுத்தினால் மெச்சத்தகுந்த நடவடிக்கையாக இருக்கும். பூஞ்சாற்றுக்குப் பயனின்றி இருக்கும் மேல்மலையின் சிறு இடம்தானே கொடுக்கப்போகிறோம்? மூவேந்தர்களாய் இமயத்தில் கொடி நாட்டிய சோழ அரசர்களின் வம்சாவளி எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. சேரர்களின் வம்சாவளி சிதறுண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அங்கமாகிவிட்டார்கள். பாண்டிய தேசத்தின் வம்சாவளியாய், மூவேந்தர்களின் தொப்புள் கொடியாக எஞ்சியிருப்பது நம் இரண்டு சமஸ்தானங்கள்தான். பாண்டிய தேசத்தைக் காப்பாற்றும் கடமை நம்மைவிட வேறு யாருக்கு பிரதானமாக இருக்க வேண்டும் தம்புரானே?”

அம்பாலிகா மழையெனக் கொட்டி முடித்தாள்.

“கொட்டாரத்தில் இருக்கும் இவளுக்கு இத்தனை செய்திகள் எப்படித் தெரியுமென்று பார்க்கிறீர்களா அரசே?”

விரும்பாத இடத்தில் வெளிப்படும் உண்மையின் பேரொளியை உடனிருப்பவர்களால் தரிசிக்க இயலாது. பார்வைக் கூச்சம்போலவே மனக்கூச்சமும் உண்டாகும். பந்தள அரசர் இறுகிய முகத்துடன் உட்கார்ந்திருந்தார்.

அம்பாலிகாவை பாகீரதி அணைத்துக் கொண்டாள்.

“அக்கா, நீங்க மீனாட்சியம்மையேதான். அவளேதான் உங்கள் ரூபத்தில் பேசினாள்.” இரு கை குவித்து அம்பாலிகாவை வணங்கினாள்.

கோட வர்மா திக்குமுக்காடிப் போயிருந்தார். தன்னை மதிக்கவில்லையே என்ற ஆணவத்தில், என்ன நடக்கப்போகிறதென்பதைக்கூட அறிந்துகொள்ளாமல் அருங்காரியத்தைத் தடுக்க நினைத்தோமே என்ற திகைப்பும், தன் முன்னாலிருந்த அடர்ந்த கருந்திரைச்சீலையை அம்பாலிகா அகற்றிய வியப்புமாகத் திணறினார்.

வெண்முண்டு கட்டிய சேடிப் பெண் உள்ளே வந்தாள்.

“திருவிதாங்கூர் மகாராஜா விசாகம் திருநாளின் தம்புராட்டி, லெட்சுமி கொச்சம்மை வருகை தந்திருக்கிறார்” என்ற சேதியைச் சொல்லிவிட்டுப் பின்னகர்ந்தாள்.

அம்பாலிகாவின் பேச்சில் கரைந்திருந்த பாகீரதி, லெட்சுமி கொச்சம்மையின் எதிர்பாராத வருகையில் மகிழ்ந்து, “எண்ட அம்மாச்சி...” என்றழைத்துக்கொண்டே சேடிப் பெண்ணுடன் வெளியேறினாள்.

குழப்பம், துயரம், ஏமாற்றத்தின் வலி என அலைபாய்ந்துகொண்டிருந்த உணர்வுகள், நியாயம் என்னும் ஒளியின் தரிசனத்தில் ஒன்றிணைந்து நின்ற வேளையில், லெட்சுமி கொச்சம்மையின் வருகை உண்டாக்கிய உணர்வலைக்கு என்ன பெயர் சொல்ல முடியும்?