மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 17 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சி சரித்திரம்

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

திவானின் சிந்தனை குழம்பிக் கலங்கியது. தலை கிறுகிறுத்தது. காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாதது நினைவில் வந்தது.

பூமி பிளந்து தன்னை உள்ளிழுத்துக்கொள்வதுபோல் உறைந்து நின்றார் திவான் ராமய்யங்கார். கால்கள் துவண்டன. உடல் எடைகூடிக் கீழே விழத் தவித்தது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான், மெட்ராஸ் நகராட்சியின் முன்னாள் கமிஷ்னர், பதிவுத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல், பிரிட்டிஷ் இந்தியாவில் லெஜிஸ்லேட்டிவ் அசெம்ப்ளிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ஆபீஸின் செல்வாக்குமிக்க சிரஸ்தார், டெபுடி கலெக்டர், சப் கலெக்டர் என மெட்ராஸ் பிரசிடென்சியின் முக்கிய உயர் பதவிகளை வகித்த தன்னை, மெட்ராஸ் கவர்னர் கிரான்ட் டப் பொருட்படுத்தாமல் கிளம்பிச் சென்றது பெருத்த அவமானமாக இருந்தது. மாட்சிமை தாங்கிய இங்கிலாந்துப் பேரரசியால் லண்டனுக்கு அழைக்கப்பட்ட மரியாதைக்குரிய தன்னிடம் நின்றுபேசி, காரணம் சொல்லியிருந்தாலாவது மனம் சமாதானமாகியிருக்கும்.

ராமய்யங்கார் என்ற நபரின் தனிப்பட்ட பெருமைகளை கவர்னர் அறியாமல் இருக்கலாம். ஆனால் தான் வந்திருப்பதோ இந்தியாவின் புகழ்மிகு அரசர்களின் வம்சாவளி கொண்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பிரதிநிதியாக. முன்கூட்டியே சந்திப்புக்கான நேரம் பெற்றிருக்கிறேன். நிச்சயமாகத் தன்னுடைய காத்திருப்பைச் செயலர் சொல்லியிருப்பார். கவர்னர் என்னைப் புறக்கணிப்பதன்மூலம் சமஸ்தானத்தை அவமானப்படுத்த நினைக்கிறாரா? அப்படியும் நினைத்துவிட முடியாது. திருவிதாங்கூர் எப்போதுமே பிரிட்டிஷ் சர்க்காருக்கு அணுக்கமான சமஸ்தானம்.

புதிய மகாராஜா மூலம் திருநாள் பதவியேற்று இருக்கின்ற வேளையில், பிரிட்டிஷ் சர்க்காருடன் அவரின் பிரதிநிதியாக முதல் சந்திப்பு இது. இப்படியொரு அவமானத்தை கவர்னர் செய்தது ஏன்? ராமய்யங்காருக்குத் தனது நிலை இரக்கத்தைக் கொடுத்தது. முப்பதாண்டுகளாக எல்லாச் சர்க்கார் உத்தியோகங்களிலும் இருந்த தான், இதுவரை இப்படியொரு புறக்கணிப்பை எதிர்கொண்டதில்லை.

அடுத்து என்ன? தன்னை அவமதித்த சேதியை சமஸ்தானத்திற்கு அனுப்பிவிடலாமா? கவர்னர் ஊட்டிக்குக் கிளம்பிச் சென்றது எதேச்சையாக நடந்ததுபோல் காட்டிக்கொள்வோமா? திட்டமிட்டுத் தவிர்த்தார்கள் என்று உறுதியாகச் சொல்வோமா?

பிரிட்டிஷ் சர்க்கார், தம் சமஸ்தானத்தின் பிரதிநிதிக்கு மதிப்பளிக்கவில்லை என்பது சமஸ்தானத்திற்குப் பெருத்த அவமானம். விளைவாக, இரு சர்க்காருக்கும் இடையிலான நல்லுறவு முறியும். மகாராஜா பேரியாற்று அணைத் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுப்பது பற்றிப் பேச்செடுக்க மாட்டார். ரெசிடென்ட் ஹானிங்டன் கடிதம் அனுப்பினாலும் பதில் எழுதுவதை ஒத்திவைக்கச் சொல்வார். நல்லிணக்கம் குறைந்தால், திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு பிரிட்டிஷ் சர்க்கார் கொடுக்கும் நிர்வாக உதவிகளை ரெசிடென்ட் நிறுத்துவார். பிளவு அதிகமாகுமே தவிர, இரண்டு பக்கமும் நல்லது நடக்கப்போவதில்லை.

திவானின் சிந்தனை குழம்பிக் கலங்கியது. தலை கிறுகிறுத்தது. காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாதது நினைவில் வந்தது. வெற்றிலை போடலாமா என யோசித்தவருக்கு, முதலில் எங்காவது உட்கார்ந்தால் பரவாயில்லையென்று தோன்றியது.

நீரதிகாரம் - 17 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சி சரித்திரம்

அங்கவஸ்திரத்தினால் முகத்தைத் துடைத்துக்கொண்டு, சாரதி தென்படுகிறானா என்று பார்த்தார். அவன் குதிரையையும் வண்டியையும் விட்டுவிட்டு வரமாட்டான். ஓடிக் களைத்த குதிரைகளுக்குத் தண்ணீர் காட்டி, உணவு கொடுத்து ஆசுவாசப்படுத்துவான். குதிரைகள் இரண்டும் இரண்டு குழந்தைகள் அவனுக்கு. ஓடிவந்த சோர்வு தெரிந்துவிடாத வண்ணம் அவற்றுடன் பேசிக்கொண்டிருப்பான். அடுத்த பயணத்திற்கான தயாரிப்பும் அவன் பேச்சில் இருக்கும்.

குதிரை லாயம் நோக்கி நடக்க அடியெடுத்து வைத்தார். ஐம்பதடி நடப்பதற்குள் மனச்சோர்வு உடம்பின் ஆற்றலையெல்லாம் உறிஞ்சியிருந்ததில், அவரால் நடக்க முடியவில்லை. மரத்தடியிலிருந்த கற்பலகையில் உட்கார்ந்தார். கண்கள் இருண்டன.

கண்மூடி கால்நாழிகை நேரம் அமர்ந்திருந்த திவான், கொஞ்சம் சுதாரித்துக் கண் திறந்தார். உள்ளே நுழைகையில் பார்த்த கேழையாடுகளில் இரண்டு காலடியில் இருந்த புற்களைப் பற்களால் கடித்தபடி, திவானைப் பார்த்தன. புறக்கணிப்பு, துரோகத்திற்கு நிகரான ஆயுதமாக திவானை வருத்தியது.

மீண்டும் கண்மூடிக்கொண்டார் திவான்.

“வணக்கம் சாமி...”

குரல்கேட்டு விழித்தவர்முன், சிவப்பும் வெண்மையுமான சீருடையில் பளிச்சென்று நின்றிருந்தான் இருசன்.

“நான் இங்க குசினிங்க சாமி. சாமியைத் தெரியும். சாமி மெட்ராஸ் சர்க்கார்ல அதிகாரியா இருந்தப்பதான் கவர்னர் பங்களாவுக்குக் கவுச்சி ஆக்குற குசினி வேணும்னு கேட்டாங்கன்னு என்னைச் சேத்துவிட்டீங்க.”

திவானுக்கு நினைவில் இல்லை.

“நானா சேத்துவிட்டேன்?”

“ஆமாம் சாமி. பேர் இருசன். கவுச்சி ஆக்கறதுக்கு ஆள் வேணும்னு என்னைச் சேத்து விட்டீங்க.”

“ஓ, ஜோரா கால்ச்சராய்ல்லாம் போட்டுக்கிட்டு இருக்கிறதுல ஆள் அடையாளம் தெரியல.”

“சரிங்க சாமி. சாமி உள்ள வரும்போதே பார்த்துட்டேன். எப்படியாவது பார்த்துடணும்னு நெனைச்சேன். கண்ணு கிறங்கின மாதிரி இருக்கே. குடிக்க எதுனா தரட்டுங்களா?”

“ஒண்ணும் வேணாம்டா.”

“கவர்னர் துரையைப் பாக்க முடியலையேன்னு ரோசனையா இருக்கா சாமி?”

“ஆமாம்டா.”

“அந்தா இருக்கு பாருங்க அனபெல் பாப்பா, துரையோட மக. அதுகிட்ட கேளுங்க. ஏதுனா ரோசனை சொல்லும்.”

இருசன் காட்டிய திசையில் பார்த்தார் திவான். பத்து வயதிருக்கும் அனபெல்லுக்கு. குட்டி யானையொன்றைப் பாகன் பிடித்திருக்க, அனபெல் யானைக்குத் தேங்காய் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

“துரையுடைய மகளா?”

“ஆமாம் சாமி. ரொம்பச் சூட்டிகை. எல்லா விவரமும் சொல்லும். துரை எங்க போறார், வர்றார், எத்தனை நாள் தங்குவார், எல்லாம் அத்துப்படி அனபெல்லுக்கு.”

திவானுக்குத் தலைச்சுற்றல் குறைந்தது.

“நான் கூட வரக் கூடாது சாமி. செக்ரட்டரி துரைகிட்ட நம்மாளுங்களே ஒண்ணுகிடக்க ஒண்ணு சொல்லிடுவாங்க.”

“சரி, நீ கிளம்பு.”

இருசன் கிளம்பிச் சென்றபிறகு திவான் எழுந்து அனபெல் இருக்குமிடம் சென்றார். நடக்க நடக்க நெருங்கிவந்தது நெல்வயல்களின் சேற்று மணம். கவர்னர் மாளிகைக்குள் இருந்த வயல்களில் நாற்று விட்டிருந்தார்கள். இளம்பச்சையின் குளுமை மனத்தை ஆசுவாசப்படுத்தியது.

குதிரை லாயத்தை நெருங்கினார். திவான் கிளம்புகிறார் என நினைத்து சாரதி, குதிரையைப் பூட்ட கோச் வண்டியைத் தூக்கி நிறுத்தினான். திவான், ‘பொறு’ என்பதுபோல் கையசைத்து லாயத்தைக் கடந்தார். லாயத்தில் குறைந்தது நூறு குதிரைகள் இருக்கும். அரேபிய, மணிலாவிலிருந்து வரவழைக்கப்பட்ட உயர்ரக வெள்ளை, கறுப்புக் குதிரைகள் அங்கிருந்தன. குதிரை லாயம் வீட்டின் நடுக்கூடம்போல் பளபளவென்று துடைத்து வைக்கப்பட்டிருந்தது. முகமதியப் பெண்ணொருத்தி, குதிரையொன்றுக்குக் கொள்ளு வைத்துக்கொண்டிருந்தாள்.

லாயத்தைக் கடந்தவுடன் சின்னஞ்சிறிய குளம். குளத்தைச் சுற்றி மண் பாதை. பாதை முழுக்க வண்ணப்பூக்கள். எங்கிருந்துதான் இத்தனை பூ வகைகளைக் கொண்டு வந்திருப்பார்கள்? திவான் வியந்தார். சிவப்பு என்றால் எத்தனை வகை சிவப்பு? கருநீலத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட பூ வகைகள் இருந்தன. பெரும்பாலும் திவான் பார்த்தறியாத புதுவகைகள்.

காற்றில் மலர்ந்து விரிந்திருந்த பூக்களின் அழகில் மயங்கிய திவான், குளக்கரையின் மண்பாதையில் நடந்தார். ஒவ்வொரு பூவாகப் பார்த்து நடந்தவரின் நடை ஓரிடத்தில் நின்றது. செடிகளுக்கிடையில் அமர்ந்து, தன் முன்னால் இருந்த கித்தானில் அருகிருந்த பூவொன்றைப் பார்த்து வரைந்துகொண்டிருந்தான் ஒருவன். திவானின் நடைச்சத்தத்தில் அவனின் கவனம் குலையவில்லை. சங்கு மலர்போல் ஒரு வரிசை இதழ்கள் கொண்ட ஊதா வண்ண மலரொன்று அவன் தூரிகையின் நீர்வண்ணத்தில் மலர்ந்துகொண்டிருந்தது.

வரைபவனைப் பார்த்தார். இடுப்பில் இழுத்துக் கட்டிய துண்டொன்றைத் தவிர ஆடையெதுவும் இல்லை. நடுமுதுகுவரை நீண்டிருந்த அடர்ந்த செம்பட்டை நிறத் தலைமுடி. முகத்தில் தாடி. தோட்டத்தின் செம்மண் புழுதி அப்பியிருந்ததில், உடல் இளங்கறுப்பும் செம்மையுமாய்ப் பொலிந்தது. அவன் நிகழ் உலகத்தில் இல்லையென்பதை, புற உலகத்திற்கு எதிர்வினை செய்யாத அவன் புலன்கள் சொல்லின. அவன் வரைந்து முடித்து ஆங்காங்கு இருந்த ஓவியங்களின் ஒழுங்கற்ற வரிசை பேரழகாக மிளிர்ந்தது. ஒரு நாள் ஆயுள் போதாதென்று ஓவியன் விரல்களினால் தம்மை வரைந்துகொண்டு வாடா மலராகும் மாயம் தெரிந்திருந்தன அத்தோட்டத்து மலர்கள். வரைபவனின் தியானத்தைக் குலைக்க விரும்பாமல் ஓவியங்களை ரசித்துப் பார்த்துவிட்டு, அனபெல்லை நோக்கி நடந்தார்.

பிறந்து சில மாதங்களே ஆகியிருந்த யானைக் குட்டியொன்று பாகனின் கட்டளைக்குக் கட்டுப்படாமல் சுற்றிச் சுற்றி வந்தது. அனபெல் யானையிடமிருந்து விலகி நின்றிருந்தாள். பாதுகாப்புக்கு ஐந்தாறு சிப்பாய்கள் உடனிருந்தார்கள். திவான் அருகில் வருவதைப் பார்த்த வேலைக்காரர்கள் வணங்கிப் பின்னகர்ந்தனர். எல்லாருமே சுதேசி சிப்பாய்கள்.

திவான் அனபெல்லிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அனபெல்லிடம் பேசும்போதும் பேரனின் நினைவில் யானைக் குட்டியின்மீதே கவனம் இருந்தது. பத்மநாபனுக்கும் இதேபோல் ஒரு குட்டி யானை அவன் விளையாட்டுத் தோழனாகச் சீக்கிரம் வந்துவிடும். யானைக் குட்டியோ அங்கிருப்பது தனக்கு ஒப்பவில்லை என்பதாக முரண்டியது.

“மைசூர் மகாராஜா எனக்காக இந்தப் பரிசை அனுப்பி வைத்தார். ஆனால் இந்தக் குட்டி வந்ததில் இருந்து யாருடனும் பழகவில்லை. எப்பவுமே கோபமாக இருக்கிறது.” அனபெல் இயல்பாகத் தன்னிடம் பேச ஆரம்பித்தது பிடித்திருந்தது திவானுக்கு.

“தாயைப் பிரிந்து வந்திருக்கும் அல்லவா? சில குட்டிகளுக்குப் பழக நாளாகும்.”

“வந்து ஒரு மாதமாகிவிட்டது. வந்ததில் இருந்து சரியாகச் சாப்பிடவுமில்லை” அனபெல்லின் குரலில் சோகம் மண்டியிருந்தது.

“பத்மநாபா... பச்சைப்பிள்ளை வயிறு காயுதா?” கடவுளிடம் திவான் தன் வருத்தத்தைப் பகிர்ந்தார்.

“என்கிட்ட எல்லாப் பிராணியும் உடனே பழகிடும். இந்தக் குட்டிதான் முரண்டு பண்ணுது. இந்த மைனா பாருங்க. ஒரே வாரத்துல பேசக் கத்துக்கிடுச்சி” கையிலிருந்த குட்டி மைனாவைக் காட்டினாள் அனபெல்.

திவானுக்கு அனபெல்லைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது.

“என்ன பாக்கிறீங்க? என்கிட்ட ஒரு மலபார் அணில் இருக்கு. பச்சைக்கிளி நாலு, நிறைய நாய்ங்க, பூனை எல்லாம் வளக்கிறேன். எனக்கும் என் தம்பிக்கும் போனி இருக்கு தெரியுமா? என்னோட போனி பேர் உமர். என் தம்பியோட போனி அலி. உமர் இதுவரைக்கும் என்னை நாலுமுறை கீழதள்ளிவிட்டு எலும்பை உடைச்சிருக்கு.”

மூச்சுவிடாமல் தேவை, தேவையில்லை என்ற சிந்தனையற்று எல்லாம் சொன்னாள். அனபெல்லின் குழந்தைமை மாறாத முகமும் பேச்சும் பார்த்து திவானுக்குள் நேயம் பொங்கியது. பெண் குழந்தை இருந்தாலே லெட்சுமி கடாட்சம்தான். இந்தத் தோட்டத்தில் விதவிதமான நூற்றுக்கணக்கான பூக்கள் இருந்தாலும் தேவமலராய் இந்தப் பெண்ணே மணம் வீசுகிறாள் என்று தோன்றியது ராமய்யங்காருக்கு.

“குதிரை பழகுற வரைக்கும் கொஞ்சம் கவனமா இருக்கணும்.”

“ஆமாம். இப்போ கொஞ்சம் பழகிட்டேன். போனி தள்ளிவிடறதில்லை.”

“அங்க படம் வரையறவர் அருமையா வரைந்திருக்காரே?”

“ஆமாம் சாகிப். நான் அடுத்த மாதம் லண்டன் போகும்போது எடுத்துப் போறதுக்கு வரையச் சொல்லியிருக்கேன். ராஜு நல்லா வரையறார். பிரிட்டிஷ் ஓவியரைத்தான் வரையச் சொல்லணும்னு மம்மா சொன்னாங்க. இந்த ஊர்ப் பூவை இந்த ஊர் ஓவியர் வரைஞ்சா நல்லா இருக்குமேன்னு பப்பாதான் ராஜுவை வரையச் சொன்னார்.”

“ரொம்ப நல்லா வரையறான். சரி, குழந்தே, நீ போகலையா ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னருடனும் ஹர் ஹைனெஸ்ஸுடனும்?”

“பப்பாவும் மம்மாவும் நீலகிரி போக 20 நாள் ஆகும் சாகிப். வழி முழுக்க கேம்ப் போடுவாங்க. நானும் தம்பியும் அவங்க நீலகிரி போய்ச் சேர்ற முதல் நாள் கிளம்பினாப் போதும், நாங்க நீலகிரி போயிடுவோம்.”

“இப்பவும் வழியில் கேம்ப் இருக்கா குழந்தை?”

“இருக்கு சாகிப். பப்பா 50 கிலோமீட்டர்கூட ஒருசேரப் போக மாட்டாங்க. இப்பவும் அரக்கோணத்தில் சலூன் நின்னுடும். கிளம்பியதிலிருந்து அரக்கோணம் போனதுவரை பப்பா டைரியில் எழுதுவார். பப்பாவுக்கு உடனுக்குடன் டைரியில் எழுதியாகணும்.”

“குழந்தை, சரியாச் சொல்கிறாயா?”

“சந்தேகமென்ன சாகிப்? பப்பா அரக்கோணம் விடுதியில் தங்கித்தான் கிளம்புவார்.”

“அந்த மகாலட்சுமியே உன் ரூபத்தில் வந்து பேசிட்டா குழந்தை. அடுத்து என்னன்னு குழம்பி நின்னேன். நான் முன்னெடுத்து ஒரு காரியம் தோத்துடுச்சின்னா நான் பத்மநாபனைச் சோதிக்கிற நெருக்கடியை நீ போக்கிட்ட.”

“பத்மநாபனா, யார்?”

“திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு அதிபதி. எல்லாமே அவன்தான் குழந்தை. இப்போ உன்னைத் தொட்டு ஆசீர்வாதம் செய்யணும்னு மனசுக்குத் தோணுது. இருந்தாலும் அம்பாளை வணங்குற மாதிரி வணங்கிட்டுக் கிளம்புறேன். புறப்படறேன் குழந்தை.”

வேகமாக லாயத்தை நோக்கிப் பரபரப்புடன் நடந்த திவான், “டேய்... குதிரையைப் பூட்டு” என்று சாரதியைப் பார்த்து சத்தம் போட்டார்.

மெட்ராஸ் நகரத்தின் புறத்திலிருந்த கிண்டி லாட்ஜை விட்டு வெளியே வந்த திவானின் குதிரைகள் பாய்ச்சலெடுத்தன. ஆளரவற்ற பாதையில் குதிரைகளின் குளம்பொலி எதிரொலித்தது. அரக்கோணம் விடுதியில் கவர்னரைச் சந்தித்துவிட வேண்டுமென்ற சிந்தனை குதிரைகளை முந்தியோடியது. கவர்னர் ஓய்வுக்காகத் தங்கும் விடுதியில் தன்னைப் பார்க்க அனுமதிப்பாரா? இங்கு நடந்த அவமானம் அங்கும் நடக்குமா? பரவாயில்லை, என்ன நடந்தாலும் சமாளிப்போம். இரண்டு சர்க்காருக்கிடையில் நட்புறவு குலைந்ததற்குத் திவான்தான் காரணம் என்று பெயர் வந்துவிடக் கூடாது.

சின்னஞ்சிறு கற்கள் வண்டியின் சக்கரத்தில் பட்டுத் தெறித்தன. யானைக் கவளமளவு இருந்த கற்கள் சக்கரத்தைக் கவிழ்க்கப் பார்த்தன. சாரதி, சக்கரத்தின் ஏற்ற இறக்கம் தெரியாமல் கவனமாகக் குதிரைகளைச் செலுத்தினான்.

பசுமை படர்ந்த வயல்களும் உயர்ந்த செழிப்பான மரங்களுமாக இருந்த கிண்டி லாட்ஜின் வளத்திற்கு நேரெதிராக இருந்தது வெளியுலகம். சாலையின் இரண்டு பக்கங்களும் பட்டுப்போனவை தவிர்த்து, விடாப்பிடியாய் உயிரைப் பிடித்துக்கொண்டிருந்த மரங்கள் துளிர்த்திருந்தன. பஞ்ச காலத்தில் லெஜிஸ்லேட்டிவ் மெம்பராகக் கஞ்சித் தொட்டிகளைப் *(பஞ்ச நிவாரண முகாம்) பார்வையிட வந்தபோது வழிமுழுக்க பட்டுப்போன மரங்கள். பசுமை என்பதே அப்போது கண்ணில் படவில்லை.

தாமஸ் குன்றைக் கடந்தது வண்டி. கோகுலத்துக் கண்ணன் தாங்கிப்பிடித்த கோவர்த்தனம் போலவே வெண்கொற்றக் குடை வடிவில் இருந்த மலையடிவாரத்தின் கஞ்சித் தொட்டிக்கு வந்தபோது, அங்கு வெறும் எலும்புக்கூடாய் இருந்த ஒருவனைப் பிடித்துக் கட்டி வைத்திருந்தார்கள். கயிறா, கையா என்று தெரியாத அளவிற்கு அவன் கைகள் இளைத்திருந்தன. கட்டி வைக்கவில்லை என்றாலும் அவனால் அங்கிருந்து ஓட முடியாது. அவன் பெயர் இன்னும் நினைவில் இருக்கிறது, மாயன்.

இரண்டு நாள் முன்பு கஞ்சிக்காக நீண்ட வரிசையில் நின்றிருக்கிறார்கள். மாயன் முறை வரும்போது கஞ்சி தீர்ந்துவிட்டிருக்கிறது. அடியில் ஒட்டியிருந்த கஞ்சியின் திப்பியை வழித்துக் கையில் ஊற்றியிருக்கிறான் சிப்பாய். இரு கை குவித்து மாயன் அடிமண்டை கஞ்சியை வாங்கியபோது, பின்னால் இருந்தவன் பாய்ந்து வந்து பிடுங்கி, அவன் வாய்க்குள் போட்டுக் கொண்டான். வாய்க்குள் திணித்துக்கொண்ட ஒரு கவளம் கஞ்சியை, திணித்துக்கொண்டவன் வாய்க்குள் கைவிட்டு மாயன் எடுக்கப் பார்த்திருக்கிறான். அவன் அவசர அவசரமாக விழுங்கிவிட, மாயன் அவன் வாயைப் பிடித்துக் கிழித்துவிட்டானாம். தொண்டைக்குழியில் மிச்சமிருந்த கஞ்சி கடைவாயில் வழிய, அவன் இறந்துவிட்டான். கிழித்துவிட்ட மாயன் வெறிபிடித்தவன்போல் நடந்துகொண்டதில், மாயனைக் கட்டிப்போட்டு அவன் முன்னாலேயே மற்றவர்களுக்குக் கஞ்சி ஊற்றியிருக்கிறார்கள். மாயன் கண்களில் இருந்த குரோதம் அச்சுறுத்தியது. நான்தான் மாயனை அவிழ்த்துவிடச் சொல்லி, தட்டு நிறையக் கஞ்சி ஊற்றிக் கொடுத்தேன். இதோ இந்த மரம்தான் மாயனைக் கட்டியிருந்த மரம். துளிர்க்கத் தொடங்கியிருந்த புளியமரம் ஒன்றை நினைவுகூர்ந்தார் திவான்.

மெட்ராஸில் சோறும் ரொட்டியும் குவித்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி அன்றைக்குச் செங்கல்பட்டுக்கும் வேலூருக்கும் எப்படியோ பரவிவிட்டது. குழந்தைகளை இடுப்பிலும் தோளிலும் சுமந்துகொண்டு மக்கள் புற்றிலிருந்து கிளம்பிய எறும்புகளைப்போல் ஊர்ந்தார்கள். வழிகளில் இருக்கும் ஊர்களின் மக்களும் சேர்ந்து, நிவாரண முகாம்களில் கிடைக்கப்போகும் ஓர் அகப்பைக் கஞ்சிக்காகப் பெரும் பிரளயமெனத் திரண்டு வந்தது மக்கள் கூட்டம்.

முதன்முதலில் பஞ்ச நிவாரணமாகக் கஞ்சித் தொட்டிகள் வைக்கப்பட்டபோது, ஊற்றும் கஞ்சியை வாங்குவதற்குக் கூச்சப்பட்டுக்கொண்டு உயர்சாதியினர் வரவில்லை. தட்டேந்திச் செல்ல வேண்டுமா என்ற தயக்கம். பசியைப்போல் மேடு பள்ளங்களை நிரப்பக்கூடிய கடவுள் வேறு யார்? பஞ்சம் உச்சக்கட்டத்திற்குப் போனவுடன் முகாம்களில் ஏழைகள், நாடோடிகள், பறையர்கள், வேளாளர்கள், பார்ப்பனர்கள் எல்லோரும் கையேந்தினார்கள். நிவாரண முகாம்களிலும் பறையர்களுக்கும் கிறிஸ்துவப் பறையர்களுக்கும் தனி வரிசை, வேளாளர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் தனி வரிசை என்று கூட்டம் குறைவாக இருந்தபோது வர்ணப் பாகுபாடு உயிர்ப்போடு இருந்தது. ஒரு துண்டு ரொட்டி கிடைத்தால் போதும் என்ற நிலை வந்தபோது, வரிசையே காணாமற்போனது. நாய்களுடன் மனிதர்களும் போட்டி போட்டார்கள். உதடுகள் உள்ளிழுத்துக்கொண்டு, கருவிழிகள் மட்டும் மேடிட்டு எலும்பும் தோளுமாய் இருந்த மனிதர்களின் முகங்கள் இன்னும் கண்ணுக்குள் இருக்கின்றன. உடம்பு சிலிர்த்தது திவானுக்கு.

சொந்த ஊர்களில் இருந்திருந்தாலாவது முகத்தாட்சண்யம் பார்க்கும் மக்களுடன் இருந்திருப்பார்கள். அந்நியர்களுடன் திரண்ட கூட்டம் முதலில் தொலைத்தது பொது நேயத்தைத்தான். பசிக்கொடுமையால் மெட்ராஸிலிருந்து அரக்கோணம் செல்லும் பாதை முழுக்க வன்முறைக்களமாகிவிட்டது. சாப்பிட ஒன்றும் கிடைக்காமல், சாலைகளில், மரத்தடிகளில், மலையடிவாரங்களில், புதர்களில் காத்திருந்த மனிதர்கள் திருடர்களானார்கள். அடித்துப் பறித்துத் தின்னும் கள்வர்களானார்கள். அந்தப் பகுதியைக் கடக்கும் மாட்டு வண்டி, குதிரை வண்டி ஒன்றையும் விடுவதில்லை. நிவாரண முகாம்களுக்கு உணவு ஏற்றிச் செல்லும் வண்டிகளைக் கடுமையான பாதுகாப்புடன் அனுப்பியது சர்க்கார். கொள்ளைக் கூட்டமான மனிதர்களின் கைகளில் இருந்த ஒரே ஆயுதம் கூர்மையான எலும்புகள். செத்துவிழுந்த மனிதப் பிண்டங்களின் எலும்புகள், செத்து விழப்போகும் எலும்புக் கூடுகளுக்கு ஆயுதமாகின.

அவ்வாண்டு வடகிழக்குப் பருவமழை சரியான நேரத்திற்கு வந்துவிடும் என அதிகாரிகள் மதிப்பிட்டார்கள். அன்றைய கவர்னர் பக்கிங்காம் வருவாய்த்துறை அதிகாரிகளின் அறிக்கைகள் உண்மையாக இருக்குமென்று முழுமையாக நம்பிவிட்டார். களநிலவரத்தைச் சொல்லும் நம்பகமானவர்கள் அவரருகில் இல்லை. மாவட்டங்களிலிருந்த வருவாய்த் துறை அதிகாரிகளும் பருவமழை பற்றிச் சரியான அறிக்கைகளைக் கொடுக்கவில்லை. அறிக்கைகளை நம்பி, பல ஆண்டுகளுக்குத் தேவையே படாத ஒரு ரயில் தடம் பற்றி விவாதிக்க கவர்னர் சிலோனுக்குச் சென்று, அங்கிருந்து அந்தமான் தீவுக்கும் ரங்கூனுக்கும் சென்றுவிட்டார். கவர்னரின் வழக்கமான பயணத்தால் பஞ்சம் வர வாய்ப்பில்லை போலும் என்று மெட்ராஸ் பிரசிடென்சி வழக்கம்போல் இயங்கியது.

நீரதிகாரம் - 17 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சி சரித்திரம்

பருவமழை பொய்த்துப் பஞ்சம் இயல்பு பிறழ்ந்த கொடிய விலங்கொன்றைப்போல் விழித்துக்கொண்டதை சர்க்கார் உணரவே இல்லை. முதலில் உணர்ந்துகொண்டவர்கள் வணிகர்கள்தான். வங்காளத்திலும் பாம்பேயிலும் தெரிந்த அறிகுறிகளில் இருந்து வணிகர்கள் சுதாரித்தார்கள். கையிருப்பு இருந்த தானியங்கள் பதுக்கப்பட்டன.

சிலோன் பயணத்தை முடித்துக்கொண்டு வந்த உடனே கவர்னர் பக்கிங்காம் டெல்லிப் பயணத்திற்குத் தயாரானார். விக்டோரியா மகாராணியை பிரிட்டிஷ் இந்தியத்தின் முதல் பேரரசியாக அறிவிக்கப்போகும் விழா*(1876, மே 1) கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள கவர்னர் டெல்லி கிளம்பிச் சென்றார். கரை தொட்டுக் கடல் திரும்பும் பேரலை, கரையோரச் சிற்றலைகளையும் உடன் அழைத்துச் சென்றுவிடும். சில நொடிகள் கடற்கரை பாத அடி நனையுமளவுகூட நீரின்றிப் பரிதாபமாக நிற்கும். அப்படி, மெட்ராஸ் பிரசிடென்சியே கவர்னருடன் பரிவாரம் கட்டிச் சென்றது.

இங்கிலாந்தில் நடைபெற்ற விழாவிற்கு இணையாக டெல்லி நகரமும் இங்கிலாந்துபோல் ஜொலித்துக்கொண்டிருந்த விழாவில் மெட்ராஸ் கவர்னர் பங்கேற்றார். கோலாகலத்துடன் உணவு மேஜைகள் ததும்பிக்கொண்டிருந்தபோது மெட்ராஸ் பிரசிடென்சியில் மட்டும் மூன்று லட்சம் மக்கள் பட்டினியால் செத்து வீழ்ந்தனர். ஒரு தேசத்தின் பேரரசியாகப் பதவியேற்றதற்கான விழா நடந்துகொண்டிருக்கும்போது, அத்தேசத்தின் குடிகள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற நிதர்சனம், பிரிட்டிஷ் பேரரசியின் கிரீடத்தை அலங்கரிக்கும் மகோன்னதமான வைரங்களின் கருநிழலாக அப்பிக்கொண்டது.

கவர்னர் பக்கிங்காம் நிலைமையின் அபாயத்தை உணர்ந்து சுதாரிக்கும்முன் பஞ்சம் மனிதர்களைத் தின்னும் அரக்கனாய் உருக்கொண்டு நடமாடத் தொடங்கிவிட்டது. பிறகு நடந்ததெல்லாம் ஊழியின் விகாரக்கூத்து. இருபது, முப்பது லட்சம் மக்கள் அந்த அரக்கனுக்குத் தீனியானார்கள். வயல், காடு, கழனிகளில் இருந்த பச்சையைக் கருக்கிய பஞ்சம் கால்நடைகளைப் பட்டினி போட்டது. புல் பூண்டுகளும் தீவனமும் இல்லாமல் கால்நடைகள் செத்து விழுந்தன. செங்கல்பட்டில் மட்டும் பத்தாயிரம் கால்நடைகள் 1877-ம் வருஷத்தில் இறந்தன. வீட்டுக் கதவுகளையும் ஜன்னல்களையும் பெயர்த்தெடுத்து, அடகு வைக்க அலைந்தவர்கள் எத்தனையோ பேர். பெண்கள் புடவைக்குள் மறைத்துவைத்து செம்பு, வெண்கலம், பித்தளைப் பாத்திரங்களை அடகு வைக்கப் போனார்கள். பஞ்ச காலத்தின் முதல் பலி, மானம் மரியாதைதான். பசிக்கு முன்னால் அவையெல்லாம் வெறும் கற்பிதங்கள். வெட்கம், கூச்சம், ஜாதி என்பதெல்லாம் மறந்த மனிதர்களை அப்போதுதான் பார்க்க முடிந்தது.

விழாக் கொண்டாட்டம் முடிந்து மெட்ராஸ் திரும்பிய கவர்னர் பக்கிங்காம், மெட்ராஸின் சீரழிவைப் பார்த்து மனம் நிலைகுலைந்தார். நோய் தாக்கிய வயற்காட்டைப்போல் மொத்த மெட்ராஸும் பஞ்ச நோயின் பிடியிலிருந்ததைப் பார்த்து அதிர்ந்தார். தன்னுடைய கவுன்சிலர்களை உடனடியாகக் கூட்டி, ஆலோசித்து நிவாரண முகாம்களின் பணிகளை முடுக்கிவிட்டார். ஆனாலும் ஏழைகளின் பசிதீர்க்க எந்த மணிமேகலையின் அட்சயப்பாத்திரமும் சர்க்காருக்குக் கிடைக்கவில்லை.

சர்க்காரிடம் போதுமான பணம் கையிருப்பு இல்லை. வங்காளத்திலிருந்து தானியங்கள் வந்தாலும் அங்கம் முழுக்க பசியின் கண்கள் திறந்துகொண்ட விநோத விலங்கான கொடிய வற்கடத்தின்* (பஞ்சம்) முன் தானிய மூட்டைகள் வெறும் உமிகளாயின.

கவர்னர் பக்கிங்காம் தம் பொறுப்பின்மையை உணர்ந்து வருந்தினார். மக்கள் பசியில் செத்து விழுவதைப் பார்த்து, ‘`அரை மில்லியன் டன் தானியம் கிடைத்தால்கூடப் போதும். கவர்னர் பதவியை விடத் தயாராக இருக்கிறேன்’’ என்று உள்ளம் வருந்திச் சொன்னார். இரக்கமற்ற பிரிட்டிஷ் சர்க்கார், செத்து விழும் மக்களென்றாலும் அவர்களை உட்கார வைத்துக் கஞ்சி ஊற்ற யோசித்தது. செலவு மட்டும் செய்து கொண்டிருப்பதற்கு வைஸ்ராய் கண்டனம் தெரிவித்தார்.

பர்மாவிலிருந்து ரயிலில் தானியம் கொண்டுவர சர்க்கார் திணறியது. குறைவான பெட்டிகளையும் ஆட்களையும் வைத்துக்கொண்டு ரயில்வே தடுமாறியது. கிழக்குக் கடற்கரைச் சாலையின் கால்வாயை மெட்ராஸ்வரை நீட்டித்திருந்தால் தானியங்கள் கொண்டுவருவது எளிதாக இருக்குமென்று கவர்னர் கவுன்சில் பரிந்துரைத்தது. கவர்னர் உடனடியாக வேலையைத் தொடங்கினார். நடமாடத் தெம்பு இருக்கிறவர்கள் கால்வாய் தோண்டும் வேலை செய்தால் ஒரு நாளைக்கு அரை சேர் அரிசி என்று நிவாரண முகாம்களில் இருந்தவர்களை அழைத்துச் சென்றார்கள். மரக்காணத்தில் இருந்து பழவேற்காடுவரை வந்த நீண்ட கால்வாயை மெட்ராஸ் பிரசிடென்சிக்குள் கொண்டு வர ஆட்களைக் கொண்டு சென்றது சர்க்கார். இன்று ஒரு நாளைக்கு ஐந்நூற்றுக்கும் மேல் படகுகள் வந்து செல்லும் பக்கிங்காம் கால்வாயை, அன்றைய கவர்னர் பஞ்சத்தில் பிழைத்தவர்களை வைத்துத்தான் கட்டி முடித்தார். இன்னொரு பக்கம் அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் ரயில்வே பாதை அமைக்கும் வேலைக்கும் பஞ்ச முகாம்களிலிருந்து ஆட்கள் சென்றார்கள். ஊர் இப்போதுதான் கொஞ்சம் குதிர்ப்பட்டிருக்கிறது.

நினைவுகளிலிருந்து மீண்ட திவான், மெட்ராஸைக் கடந்து தன்னுடைய சொந்த மாவட்டமான செங்கல்பட்டு எல்லை வந்துவிட்டதை அறிந்தார். மனம் தம் ஊரான வெம்பாக்கத்தை நினைத்தது. ‘ஊருக்குச் சென்று எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டன. சிறு பிள்ளையாகி அவர் மனம் ஊருக்குத் தாவிச் சென்றது. தூரத்தில் அரக்கோணம் ரயில் நிலையமும் அதில் நின்றிருக்கும் சலூனும் கண்ணில் பட்டது.

அம்மை வந்து இறங்கிய உடம்புபோல் வெம்மை தணிந்து திவான் உடம்புக்குள் குளுமை இறங்கியது.

- பாயும்