
சின்னப்பிள்ளை மாதிரி யோசிக்கிறாய். இரண்டு அரசாங்கங்கள் சம்பந்தப்பட்டது. நீயென்ன ரெசிடென்டா, திவானா, கலெக்டரா? எந்த அடிப்படையில் போய்ப் பேசுவாய்?
மலைமுகட்டின் வெண்மேகங்களுக்கிடையில் பிரபஞ்சம் தன் சுடரை உயர்த்திப் பிடித்ததுபோல் ஏழ்பரியோனின் ஒளிக்கற்றை மேலெழுந்தது. விடியலின் பேரழகெல்லாம் ஆயிரஞ்சோதியுள்ளோனின் ஒளித்தாரைகளின் வழியே பூமியை வந்தடைந்தது. பழனிமலை மரகதப் பச்சையின் பேரழகில் மயங்கிய பிரபஞ்சத்தின் நிரந்தர முதல்வன் ஆதித்தன் புன்னகைக்க, வெய்யோனின் கதிர்கள் அவ்வளவு தண்மையாய், குழந்தையின் கடைவாய் எச்சில்போல் சில்லித்திருந்தது.
லெப்டினென்ட் கர்னல் பென்னியின் குதிரை ஏரியை அடைந்தது. நீர் உறைந்திருந்த கொடைக்கானல் ஏரியில் காலைநேர இளம்பனி நிறைந்து ததும்பிக்கொண்டிருந்தது. மீன்களுக்காகக் காத்திருந்த கொக்குகள் பனியின் ததும்பலைக் கொத்தி, இரையின்றி ஏமாந்தன. கரையோரப் புதர் முழுக்கப் பழுப்புநிறக் கொக்குகள் சிறகடித்தன.

பழனி மலை இல்லையென்றால் மெட்ராஸ் பிரசிடென்சியில் பிறக்கும் ஐரோப்பியக் குழந்தைகளில் பாதிகூட பிழைத்திருக்காது. இங்கிலாந்தின் காலநிலையில் வாழ்ந்தவர்களுக்கு இந்தியாவின் வெயில் பெரும் தண்டனை. உயர் அதிகாரிகள் நீலமலையில் அடைக்கலம் சென்றால், இடைநிலை அதிகாரிகள் பழனி மலையைத் தத்தெடுத்துக்கொண்டார்கள். கடந்த ஐம்பதாண்டுகளில் (1885) பழனி மலை கொடைக்கானல் ஆக்கப்பட்டிருந்தது.
பென்னிக்குக் கொடைக்கானலில் இருப்பதில்தான் விருப்பம். எங்கு அலைந்து திரிந்தாலும் வீட்டுக்குத் திரும்பிவரும் உணர்வு கொடைக்கானலுக்கு வரும்போதுதான் கிடைக்கிறது என்பார். கொடைக்கானலின் காற்றும் இளம்வெயிலும் இனிமையான சூழலும் குழந்தைகளுக்கு உகந்தவை என்பதால் ஜார்ஜியானாவையும் குழந்தைகளையும் கொடைக்கானலில் குடிவைத்தார்.
நீண்ட இரண்டு மூங்கில் கழிகளில் கட்டப்பட்டிருந்த கித்தான் நாற்காலியில் ஜார்ஜியானா உட்கார்ந்திருந்தாள். அவளின் மடியில் எடித் தூங்கிக்கொண்டிருந்தது. டோராவும் லூசியும் தனித்தனித் தூளிகளில் இருந்தார்கள்.
இரவு முழுக்க பென்னி ஜார்ஜியானாவிடம், அவளின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கேட்டார். ‘வேலை சம்பந்தமான பிரச்சினை, நான் பார்த்துக்கொள்கிறேன், மூன்று குழந்தைகளோடு நீ வர வேண்டாம்’ என்று எடுத்துச் சொல்லியும் ஜார்ஜியானா மறுத்துவிட்டாள். ‘நீ நிம்மதியின்றி அலையும்போது நான் மட்டும் எப்படி அமைதியாக இருக்க முடியும் பென்னி? என்னாலான முயற்சியும் செய்கிறேன்’ என்று கிளம்பிவிட்டாள். குழந்தைகளுக்குத் தேவையானவையெல்லாம் மரப்பெட்டிகளில் எடுத்து வைத்தாள். விடாப்பிடியாய்ப் பயணம் தொடங்கிவிட்டது.
ஏரியில் படபடத்துக்கொண்டிருந்த நீர்ப்பறவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜார்ஜியானா, “பென்னி...” என்றழைத்து நிற்கும்படி கையசைத்தாள்.
பென்னி குதிரையைக் காலால் அணைந்தார். ஜார்ஜியானாவின் அருகில் வந்தார்.
“வட்டக்கானல்வரை நான் உன்னுடன் வருகிறேன் பென்னி.”
பல்லக்குத் தூக்கிகள் ஜார்ஜியானாவின் டோலியைக் கீழே இறக்கினார்கள். வெண்பனி உறைந்திருக்கும் அவ்வேளையிலும் பல்லக்குத் தூக்கிகளுக்கு வியர்த்திருந்தது. எடித்தின் தூக்கம் கலையாமல் டோலியில் படுக்க வைத்தாள்.
பென்னி குதிரையை விட்டுக் கீழே இறங்கினார். ஜார்ஜியானா குதிரையின் சேணத்தில் கால் வைத்து ஏறி முன்னுக்கு நகர்ந்து உட்கார்ந்தாள். பென்னியும் குதிரையில் ஏறி உட்கார்ந்தவுடன், “நீங்கள் முன்னால் சென்று வட்டக்கானலில் நில்லுங்கள்” என்று டோலிக்காரர்களை அனுப்பினார்.
“இரவு முழுக்கத் தூக்கமில்லை. டோலியில் உட்கார்ந்தவுடன் தூங்கிடுவேன்னு நினைச்சேன். தூய்மையான இந்தக் குளிரும் உன்னுடன் செல்லும் பயணமும் தூக்கத்தை விரட்டிவிட்டது.”
முகவாய்வரை நீண்டிருந்த இறுக்கிய மேலாடையும் அரைப்பாவாடையும் அணிந்திருந்தாள் ஜார்ஜியானா. காற்றில் அலைந்தெழுந்த அவளின் செவ்வண்ணக் கூந்தல் பென்னியின் முகத்தில் உரசியது. உரசிய முடியையும் மென்கழுத்தையும் சேர்த்தணைத்துக் கொண்ட பென்னியின் மார்பில் சாய்ந்தாள் ஜார்ஜியானா.
“பென்னி...”
“யெஸ் டியர்...”
“இந்தப் பயணம் நம்மோட வாழ்க்கையில் என்னைக்கும் நினைச்சுப் பார்க்கிற பயணமா இருக்கும்.”
“ஆமாம், இரண்டுவிதத்திலும்.”
“புரியலை?”
“போகிற காரியம் நடந்தாலும் நடக்காவிட்டாலும்...”
“ஓ டியர்... நடக்கும். நடக்கணும்.”
“சின்னப்பிள்ளை மாதிரி யோசிக்கிறாய். இரண்டு அரசாங்கங்கள் சம்பந்தப்பட்டது. நீயென்ன ரெசிடென்டா, திவானா, கலெக்டரா? எந்த அடிப்படையில் போய்ப் பேசுவாய்?”
“பெரியார் புராஜெக்ட் ஸ்பெஷல் ஆபீசர் லெப்டினென்ட் ஜான் பென்னி குக்குடைய மனைவியாக...”

பென்னிக்குச் சிரிப்பு வந்தது. தன் மார்பில் சாய்ந்திருந்த ஜார்ஜியானாவின் நெற்றியில் முத்தமிட்டார்.
“என் அம்மாவின் ஆசீர்வாதம், நீயெனக்குக் கிடைத்திருக்கிறாய்.”
காலைநேரத்தின் பொலிவுறு முகத்திற்குக் காதல் கூடுதல் பொலிவைத் தந்தது.
“நாம் எங்கு போகப் போகிறோம் பென்னி?”
“மேடம்தானே திட்டம்போட்டுக் கிளம்பியிருக்கீங்க. நீங்களே சொல்லுங்க.”
“ஓ அப்படியா? சொல்லிட்டாப் போச்சு. இந்த மலையில் இருந்து என்னைக் கீழிறக்கிக் கொண்டு போயிடு. மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.”
“உத்தரவு மேடம்.”
நிமிர்ந்து பென்னியின் கண்களைப் பார்த்த ஜார்ஜியானா, அவருடைய முகவாயில் முத்தம் கொடுத்தாள்.
குழந்தைகள் இருந்த தூளிகள் முன்னுக்குச் சென்றுகொண்டிருந்தன. பல்லக்குத் தூக்கிகளின் நடையசைவு, சீராக இருந்ததில் தொட்டிலை ஆட்டிவிடுவதுபோல் குழந்தைகள் தூங்குவதற்கு இதமாக இருந்தது. அவர்களின் ‘ஹ... ஹோ... ஆஹ்... ஹோ...’ சத்தம் இயற்கையோடு ஒத்திசைந்து பாதையோரப் புல்வெளிகள் மேலும் தூக்கத்தில் ஆழ்ந்தன.
இயற்கையின் மோனத்தில் தங்களின் பேச்சொலி குழைந்து ஒன்றிணையுமோ என்ற தயக்கத்திலேயே பென்னியும் ஜார்ஜியானாவும் வழிக்காட்சிகளில் ஐக்கியமாயினர்.
பாம்பாற்று அருவியைக் கடந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் வட்டக்கானல் அருகே தூக்குத் தூக்கிகள் காத்திருந்தனர். பென்னியும் ஜார்ஜியானாவும் குதிரையில் சென்றடைந்தனர்.
பழனிமலையில் இருந்து பெரியகுளம் செல்பவர்கள் பாம்பாற்று அருவியருகே அதிகாலையிலேயே காத்திருப்பார்கள். அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் தனியாகப் பயணிக்க பயம். பத்துப் பேர், இருபது பேராகச் சேர்ந்த பிறகுதான் கீழிறங்குவார்கள். கொள்ளையர் களுடன் கரடி, ஓநாய், காட்டெருமைகளைப்போல் எப்போதாவது வழியில் வந்துவிடும் சிறுத்தைக்கும் புலிக்கும்தான் ஜனங்களுக்கு அதிக பயம். அங்கிருந்து கீழிறங்கும் கழுதைப் பாதை, கடந்த பத்தாண்டுகளாக வழிசாரிகளின் பாதையாகி, சற்றே அகலமாகியிருந்தது.
மேடு பள்ளங்களும் கூர்மையான பாறைக்கற்களாலுமான பாதையில் நடப்பது மிகக் கடினம். ஆண்கள் குதிரைகளிலும் மட்டக் குதிரைகளிலும் பயணிப்பர். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் கித்தான் நாற்காலிகளும் டோலிகளும் உருவாகிவிட்டன. பிரிட்டிஷ்காரர்கள் ஆழ்கடலில்கூட குடியிருப்பு களை உருவாக்கிவிடுவார்கள். மிஷனரிகள் அதற்குப் பாதை போட்டு விடுவார்கள்.
பல்லக்குத் தூக்கிகள் என்ற புதிய தொழிற்காரர்கள் உருவாகிவிட்டார்கள். நாற்பது, ஐம்பது திடகாத்திரமான ஆட்களை வேலைக்கு வைத்துக்கொண்டு பல்லக்குத் தூக்கிகளுக்கென்று ஒரு மேஸ்திரி உருவாகிவிட்டார். நான்கு பேர் ஓராளைத் தூக்கிக்கொண்டால் அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் நீண்ட கழிகளுடனும் குத்துவாள், ஈட்டிகளுடனும் பாதுகாப்புக்கு நான்குபேர். நான்கைந்து மைல் தூரம் சென்றவுடன் டோலி தூக்கிச் செல்கிறவர்கள் பாதுகாப்புக்கும், பாதுகாப்பாளர்கள் டோலிகளைத் தூக்கிக்கொள்வதுமாகப் பணிமாற்றிக்கொள்வார்கள்.

ஜார்ஜியானா குதிரையிலிருந்து இறங்கினாள். மரக்குடுவையில் இருந்த நீரருந்திவிட்டு, குழந்தைகள் தூளியருகில் சென்றாள். தூக்கத்திலிருந்து விழித்த மூன்றும் ஜார்ஜியானாவைப் பார்த்துச் சிரித்தன. ஜார்ஜியானா அப்படியே தரையில் உட்கார்ந்து மூன்று குழந்தைகளையும் மடியில் வாங்கிக்கொண்டாள்.
“வெள்ளக்கவி வரை போயிடலாம் துரை. அங்க போய்க்கூட கூட்டத்தோடு சேர்ந்துக்கலாம். குழந்தைங்களுக்குக் கொஞ்சம் ஆசுவாசம் கொடுப்போம்” மேஸ்திரி சொன்னான்.
வெள்ளக்கவியில் பெரும்பாலும் பிரிட்டிஷார் குடியிருப்புகள்தான். கொடைக்கானல் மரகதக் காடென்றால் அதில் பதித்த வைர மகுடம் வெள்ளக்கவி. நூறாண்டுகளுக்கு முன்பு பாலஸ்தீனப் பகுதியிலிருந்து ஓடிவந்த யூதர்கள் கொச்சியிலும் வெள்ளக்கவியிலும் குடியேறினர். அவர்களோடு சேர்ந்து பிரிட்டிஷாரும் இப்போது வெள்ளக்கவியில் குடியிருக்கிறார்கள். அமைதியின் பூரணத்துவம் ததும்புமிடம். பென்னிக்கு உடனே செல்ல மனம் பரபரத்தது.
“கிளம்பலாம்.”
பென்னி குதிரையில் ஏற, குழந்தைகளும் ஜார்ஜியானாவும் டோலிகளில் ஏறினார்கள்.
‘ஏலா ஏலா ஏலா...’ உற்சாகமாகக் குரலெடுத்துப் பாடியபடி மூங்கில் கழிகளைப் பூப்போல் தோள்களில் தாங்கி நடந்தனர் பல்லக்குத் தூக்கிகள். கறுப்பு அங்கியணிந்த யூதப் பாதிரியார் ஒருவர் தோளில் சிறு பையுடன் பென்னியையும் பல்லக்குத் தூக்கிகளையும் வேக நடையில் தொடர்ந்தார்.
டோரா, பாதிரியாரைப் பார்த்துக் கையசைத்துச் சிரித்தது.
“கிறிஸ்துவின் பூரண கிருபை உண்டாகட்டும் குழந்தை” மார்பில் தொங்கிய சிலுவை தொட்டு ஆசீர்வதித்து, விண்நோக்கிக் கைகுவித்தார்.
எதிர்மலையில் இருக்கும் தேயிலைத் தோட்டத்திற்குச் செல்லும் கூலிக்காரர்கள் நான்கைந்து பேர், கும்பக்கரையில் பிரிட்டிஷ் வர்த்தகரின் பங்களா கட்டும் வேலைக்குச் செல்பவர்கள் என்று சின்னக் கூட்டம் ஒன்றிணைந்தது.
“தேன் இனிமையிலும் யேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே...”
பாதிரியாரின் இனிய குரல் வனாந்தரத்தில் பறவையின் இனிய கீதம்போல் உயர்ந்தெழுந்தது. நடந்துகொண்டிருந்தவர்களில் ஒன்றிருவருக்குப் பாடல் தெரிந்திருந்தது.
“தேடியே நாடி ஓடியே வருவாய்
தினமும் நீ மனமே...” என்று அடுத்த வரியைப் பாடினார்கள்.
“பாவியை மீட்கத் தாவியே உயிரை
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே...”
ஆறாவது ஏழாவது வரிகளுக்குள் பாதிரியாரின் குரலுக்குள் மற்றவரின் குரல்களும் சேர்ந்திணைந்தன.
இயற்கையின் உன்னதத்தில் நின்று, இயற்கையின் முழுமுதல் உன்னதமாய் நிற்கும் இறைவனைப் பாடுவது எவ்வளவு பேரானந்தம். பரவசத்தின் உச்சத்தில் மேஸ்திரி சிலுவை எடுத்து நெற்றிலும் இதயத்திலும் வைத்து வணங்கினான்.
பென்னி வழியில் இருந்த செண்பக மரங்களை மட்டும் பார்த்துச் சென்றார். ஒரே தாவர இனம். பூத்தல், காய்த்தல், உதிர்தல் எல்லாம் ஒன்றுதான். ஒரு விதையிலிருந்து முளைத்த மரத்தின் ஒவ்வொரு கிளைக்கும், கிளையின் ஒவ்வொரு காம்புக்கும் காம்பின் ஒவ்வொரு இலைக்கும் எத்தனை வேறுபாடு. ஒன்றுபோல் பிறிதொன்றில்லையே? பார்ப்பதற்கு ஒன்றுபோலவே இருக்கும் பூக்களெல்லாம் நிஜத்தில் ஒன்றுபோல் இல்லை. அதன் வாசத்திலும் வேற்றுமை இருக்குமோ? செண்பக மணம் என்றொரு மணத்தை மூளை பதிவு செய்திருக்கிறது. ஒவ்வொரு செண்பகப் பூவுக்கும் வாசத்தில் வேறுபாடு நிச்சயம் இருக்க வேண்டும். ரெசிடென்ட் ஹானிங்டனிடம் கேட்க வேண்டும். அவர் நிச்சயம் அறிந்திருப்பார். ஒன்று என்பதைப் பிரித்துப் பிரித்து உள்ளே சென்றால் எத்தனை ஒன்றுகள் இருக்குமோ? வேறுபாடுகள் கூடித்தான் வேறுபாடின்மை உருவாகிறதோ?
பாதிரியாரின் கீதம் எனக்குள் உருவாக்கும் கிறிஸ்து ஒருவர். அவர் நினைந்துருகும் கிறிஸ்து வேறொருவர். உடன் பாடி வருகிறவர்களின் நினைவுகளின் கிறிஸ்து வேறு. கிறிஸ்துவுக்கும் கிறிஸ்து வேறானவர்தானே? சிந்தனை கட்டுப்பாடின்றி ஓடியது.
பரிசுத்தத்தின் ஆன்மாவாகப் பழனிமலை மிளிர்வதை பென்னி துளித் துளியாக ரசித்துக்கொண்டு சென்றார். பாதையோரம் முழுக்க கரு ஊதா நிறப்பூக்கள் மலர்ந்திருந்தன. பூக்களின் மகரந்தம் பருகிய வண்டுகள் மயங்கியும், மது உண்ட களிப்பில் ரீங்கரிப்பதுமாக இருந்தன. பென்னியின் மனமும் ரீங்கரித்தது.
வழி முழுக்க கொடைக்கானலுக்கு அறிமுகமில்லாத பூக்களும் மரங்களும் பெருகிவிட்டன. நாட்டு மரங்களுடன் பைன் மரங்கள் வளரத் தொடங்கியிருந்தன. எங்கு சென்றாலும் சொந்த நாட்டின் சூழலுடன் வாழ விரும்பும் மனித மனம் பலமா, பலவீனமா? புல்வெளிகளையும் பைன் மரங்களையும் வளர்த்துக் கொடைக்கானலை இங்கிலாந்தாக்கப் பார்க்கிறார்கள் பிரிட்டிஷார். பிற்பகலுக்குள் சின்னஞ்சிறிய குடில்கள் நிரம்பிய வெள்ளக்கவிக்கு வந்தடைந்தனர் வழிசாரிகள்.
“ரெண்டு நாழி ஓய்வெடுத்துக்கோங்க. ரொம்பத் தாமசிச்சா, கும்பக்கரைக்குப் போய்ச் சேர ஜாமம் ஆயிடும். பாதை தெரியாது. கும்பக்கரையில மாட்டு வண்டியைப் பூட்டணும். வண்டிக்காரன் காத்திருந்துட்டுப் படுத்துட்டா அவனக் கெளப்ப முடியாது. அதனால கை கால கழுவிக்கிட்டு வயித்துக்குச் சாப்பிட்டுக் கெளம்பிடலாம்.”
உத்தரவு போட்ட மேஸ்திரி, “டோலி தூக்கப் போறவன் கா வயிறு சாப்பிடப்பு. மூச்சிரைச்சிக்கிட்டு நிக்கக் கூடாது” எனத் தன் ஊழியக்காரர்களை அறிவுறுத்தினான்.
படுக்கை விரித்ததுபோல் பரந்து விரிந்திருந்த கரும்பாறையொன்றில் பென்னியும் ஜார்ஜியானாவும் குழந்தைகளுடன் உட்கார்ந்தார்கள். பென்னியின் வேலைக்காரர்கள் இருவருக்கும் குவளையில் தேநீர் ஊற்றிக் கொடுத்தார்கள்.
“மூணு பேருக்கும் பாலும் ரொட்டியும் கொடுத்துட்டு, கொஞ்சம் விளையாட விடு. எடித் பத்திரம். கீழ விடாதே. அட்டை இருக்கப் போகுது.”
வேலைக்காரனிடம் சொல்லிவிட்டு, ஜார்ஜியானா தேநீர்க் குவளையைக் கையில் எடுத்தாள். அதற்குள் பாதித் தேநீரைக் குடித்திருந்த பென்னியின் முகம் யோசனையில் இருந்தது.
“பல நூற்றாண்டாக வெள்ளக்கவி எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. ஆனால் பத்திருபது வருஷத்தில் கொடைக்கானலைக் குடியிருப்பாக மாற்றிட்டாங்களே பென்னி?”
“ஆமாம். இப்பவாவது அம்மையநாயக்கனூர் வரை ரயில் வந்துடுச்சு. முன்னல்லாம் மதுரையிலிருந்து வரணும்னா தேவதானப்பட்டி வரைக்கும் மாட்டு வண்டி, குதிரை வண்டியில்தான் வரணும். இல்லை நடைதான். தேவதானப்பட்டியிலிருந்து மேலே ஏறுவது ரொம்பக் கஷ்டம். அடுக்கம் பாதை வழியா செண்பகனூர் வந்து கொடைக்கானல் வரணும். நடைக்கு பயந்தே யாரும் வரலை. தேவ ஊழியம் செய்கிற அமெரிக்க மிஷனரிகள் அஞ்சாம நடந்தே வந்து குடியிருப்புகளை உருவாக்குனாங்க. மதுரை கலெக்டரா இருந்த பிளாக்பெர்ன் இங்க பங்களா கட்டி குடியேறினார். புதுக்கோட்டை இளவரசர் துரைராஜா வந்தபிறகுதான் ஊருக்கு நிறைய வளர்ச்சி வந்துடுச்சு.”
“நம்ம ரெண்டு பேருக்கும் பிரச்சினையில்லை. இந்தியாவிலேயே பிறந்து வளந்தவங்க. இங்கிலாந்துல இருந்து வர்றவங்களுக்கு இந்தியாவோட சீதோஷ்ணம் தாக்குப் பிடிக்கவே முடியாது. கொடைக்கானல், உதகமண்டலம் மாதிரி மலைப்பகுதிக இருக்கிறதால உயிரைப் பணயம் வச்சாவது வாழக் கத்துக்கிட்டாங்க.”
இரண்டு கருங்குரங்குகள் அவர்கள் முன்னால் வந்து நின்றன.
“இரண்டையும் பாரு, ஒரே மாதிரி இருக்கா?”
“ஒரே மாதிரிதான் இருக்கு. உனக்கு எதுவும் வித்தியாசம் தெரியுதா பென்னி?”
“நல்லாப் பார்.”
ஜார்ஜியானா நிதானமாக இரண்டு குரங்குகளையும் பார்த்தாள்.
“ஆமாம், ஒரு குரங்கின் முகம் கொஞ்சம் படர்ந்திருக்கு. இன்னொன்றுக்கு நீளமுகமா இருக்கு.”
“அப்புறம்?”
“ஏய், இதென்ன குரங்கு ஆராய்ச்சியா? குரங்குன்னா குரங்குதான். போதும் அவ்ளோ எனக்கு.”
“நான் வழியில் இருந்த செண்பக மரங்களை மட்டும் பார்த்துக்கிட்டு வந்தேன். ஒரு மரத்தில் இருக்கிற ஆயிரக்கணக்கான இலையும் ஆயிரம் விதமா இருந்துச்சு. பூவும் ஒவ்வொரு விதம்.”
“உன்னுடைய ரெசிடென்ட் வேலையை நீ செய்யப் போகிறாயா?”
“ரெசிடென்ட் உத்தியோகம். தாவர ஆராய்ச்சி தேடல். அவர் மனசுக்குப் பிடிச்ச தேடல்.”
“உனக்கு அணை கட்டுவது மாதிரி.”
“அதைத்தான் கட்ட விடமாட்டேங் கிறாங்களே?”
“கட்டிடலாம், கவலைப்படாதே.”
இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டிருந்த குரங்குகள் இரண்டும் இருவரையும் விழி இமைக்காமல் பார்த்தன.
“நான் ரெசிடென்ட்டை சந்திக்கவா பென்னி? நீ என்ன யோசிக்கிறாய்? என்னால் முடியுமான்னு சந்தேகிக்காதே. நாம் எங்கு போகிறோம்? என்ன முடிவு செய்திருக்கிறாய்?”
“கீழே இறங்குவோம் முதலில். பெரியகுளம் போய் அங்கிருந்து தேனி வழியாகப் பாளையம்*(உத்தமப்பாளையம்) போவோம். பக்கத்தில் அனுமந்தம்பட்டி இருக்கு. அங்கு தேவாலயம் கட்டும் பணி முடிவடையப்போகிறது. ஒரு சிரியன் கிறிஸ்துவப் பாதிரியார் அங்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவருக்குத் திருவிதாங்கூர் மூலம் திருநாளின் காதலி வடசேரி அம்மாச்சி அறிமுகம் இருக்காம். இரண்டு நாள் முன்னால் லா சலேத் தேவாலயத்துக்குப் போனேன் அல்லவா, அங்கு ஒரு அமெரிக்கன் மிஷனரியைச் சேர்ந்த ஏசு சபை பாதிரியாரைப் பார்த்தேன். அவர்தான் சொன்னார். நீ சொன்னதை முயன்று பார்க்கலாம் என்று அப்போதுதான் தீர்மானித்தேன்.”
“ஓ ஜீசஸ்... கிறிஸ்துவின் கிருபையே கிருபை. வடசேரி அம்மாச்சியைச் சந்திக்க ஏற்பாடு செய். அதுவே போதும்.”
பென்னி ஜார்ஜியானாவை வியப்புடன் பார்த்தார்.
“உனக்கெப்படி இவ்வளவு துணிச்சல்?”
“இதிலென்ன துணிச்சல். பஞ்சத்தின் கோரத்தை நேரில் பார்த்தவள் நானும்தானே? பிரிட்டிஷ் பேரரசியின் கீழுள்ள குடிகளை பஞ்சத்திலும் பட்டினியிலும் சாக விடுவதற்கா இத்தனை அதிகாரிகள்? ராணுவம்? ஐசிஎஸ் அதிகாரிகள்? உன் முயற்சியில் மதுரா டிஸ்ட்ரிக்ட் கொடைக்கானல் போல் மாறணும். கொடைக்கானல் இயற்கையின் ஆசீர்வாதம். மதுரா பெரியாற்றின் ஆசீர்வாதமாகட்டும்.”
மின்னும் ஜார்ஜியானாவின் கண்களை மனம் நெகிழப் பார்த்தார் பென்னி.
“கடவுள் இப்படித்தான் காட்சி தருவார் போலிருக்கிறது.” ஜார்ஜியானாவின் விரல்களைத் தன் விரல்களோடு கோத்துக்கொண்டார் பென்னி.
“பென்னி, உன்மேல் உள்ள காதலில் நான் கிளம்பி வருகிறேன். எதிலும் நீ தோற்றுவிடக்கூடாது என்ற விருப்பத்தினை நிறைவேற்றக் கிளம்பியிருக்கிறேன். யோசித்தால் முட்டாள்த்தனமாக இருக்கிறது.”
“பழனி மலையின் மலை முகட்டில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவனைப் பாம்பாற்று அருவியில் திடீரென்று தள்ளிவிடுகிறாயே, ஏன் இந்தத் தடுமாற்றம்?”
“தடுமாற்றமில்லை. பெரியாறு அணை ஒப்பந்தம் தடைபட்டு நிற்க பிரதானமான காரணமே, திருவிதாங்கூரின் கோரிக்கைகளைப் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாததுதான். திருவிதாங்கூர் கேட்கும் அஞ்சு தெங்கு கோட்டையையோ, தலைச்சேரியையோ கொடுக்க நம்முடைய அரசாங்கம் மறுக்கிறது. தங்கள் கோரிக்கைக்கு இணங்க வைக்கத்தான் திருவிதாங்கூர் வேறு வேறு சின்ன மீன்களைப் போடுவதுபோல் கோரிக்கைகளை வைக்கிறது. கண்டுகொள்ளாமல் விட்டால் வழிக்கு வருவார்கள் என்பதுபோல் அரசாங்கமும் விட்டுப் பிடிக்கிறது. அஞ்சு தெங்கு கோட்டையைக் கொடுக்கிறோம், கொடுக்க முடியாது என்று சொல்லுமிடத்தில் நாம் இல்லை. எந்த அதிகாரமும் இல்லாத இன்ஜினீயரான நீயும் உனக்காக நானும் என்ன உறுதியளித்துப் பேச்சைத் தொடங்க முடியும்?”
“கிளம்பும்முன் யோசித்திருக்க வேண்டியது அன்பே. வெள்ளக்கவிதான் வந்திருக்கிறோம். ஒரு யூத வீட்டிற்குப்போய் உருளைக்கிழங்கு கட்லட் சாப்பிட்டுவிட்டு அந்திக்குள் வீடு திரும்பிவிடலாம்.”
ஜார்ஜியானா கோபம் காட்டினாள்.
“திரும்பிப் போக நான் யோசிக்கவில்லை. நம் பக்கம் பலவீனம் என்ன என்று ஆராய்கிறேன். முன்பு நான் சொன்னது பலவீனம். நம் பக்கம் பெரிய பலமிருக்கிறதே?”

பென்னியின் புருவங்கள் வியப்பில் உயர்ந்தன.
“இரண்டு அரசாங்கங்களின் கொடுக்கல் வாங்கல், லாப நஷ்டங்களைவிட, இயற்கையைப் பகிர்ந்துகொள்வது நாகரிக சமூகத்தின் அடிப்படை. திருவிதாங்கூரும் நாகரிகமடைந்த பண்பாட்டில் மேம்பட்ட சமஸ்தானம்தான். தண்ணீரை, வீணாய்ப் போகும் தண்ணீரைப் பகிர்ந்துகொள்வது நாகரிகமடைந்த உங்கள் சமஸ்தானத்திற்கு மிகச் சாதாரணம். இருபத்தைந்து லட்சம் மக்களின் வாழ்க்கையைவிட நீங்கள் எதிர்பார்க்கும் வர்த்தக உடன்பாடு முக்கியமல்ல என்பதை எடுத்துச் சொன்னால் போதும். அதிகாரிகளான நீங்கள் பேசும் பேச்சில் சட்ட நடைமுறைகளைத்தான் பேசியிருப்பீர்கள். ஆர்தர் காட்டன் சொல்ல நினைத்தது இதைத்தான் என்று நினைக்கிறேன். இறுக்கமான சட்டங்களுக்குப் பின்னால் உள்ள இதயங்களைத் தொடுவதற்குச் சம்பிரதாயங்கள் நிரம்பிய உங்களின் கூட்டங்கள் தேவைப்படாது.”
“பெரிய ராஜதந்திரிபோல பேசுகிறாய் ஜார்ஜி.”
“இம்முயற்சியில் வெற்றிபெற்றால் நான் சொல்வதெல்லாம் அரசியல் தந்திரங்கள்தானே?”
பென்னியின் அடர்ந்த மீசையைக் கடந்து இதழ்களில் இளநகை இழையோடுவதைக் கண்கள் சொல்லின.
“நம்பிக்கையோடு முயல்வோம்.”
“யெஸ், யெஸ்” இருவரும் இணைந்து சொன்னார்கள்.
செடிகொடிகளில் இருந்த காய்களையும் பழங்களையும் பறித்துத் தின்ற வேலைக்காரர்கள், அருகில் ஓடிய பளிங்குபோன்ற ஓடையில் நீரள்ளிக் குடித்தார்கள்.
“சூரியன் மேற்கால போவதற்குள் நாம் மலையிறங்கிடணும். இருட்டிடுச்சின்னா அபாயம் அதிகம். சின்னக் குழந்தைங்க இருக்குங்க. வெரசா கிளம்புங்க” மேஸ்திரியின் சொற்களில் தார்க்குச்சி தயாராக இருந்தது.
ஜார்ஜியானா வேலைக்காரர்களை அழைத்து, குழந்தைகளின் தூளியுடனே வர வேண்டும் என்று அறிவுறுத்தியபின், தன்னுடைய டோலியில் ஏறினாள். பென்னி குதிரையில் ஏறித் தயாராக இருந்தார். முப்பது பேருக்குமேல் திரண்டிருந்தனர் பயணத்திற்கு.
“விறுவிறுன்னு ஒரே ஓட்டம்தான். வழியில் எங்கும் நிக்கக் கூடாது” கட்டளைபோல் சொல்லிவிட்டு, இடுப்பு உயரத்திற்கிருந்த கோலால் முன்னால் தட்டிக்கொண்டே நடந்தான் மேஸ்திரி.
ஆளுயரப் புற்கள், தங்களைக் கடந்து காட்டிற்குள் ஊடுருவ முடியாது என்பதைப்போல் மாயத்திரையாக வளர்ந்திருந்தன. ஆபத்தின்றிப் பாதையைக் கடக்க வேண்டுமே என்ற அச்சத்தை மறைத்து ஒவ்வொருவரும் சத்தமாகப் பேசியும் பாடியும் நடந்தனர். பல்லக்குத் தூக்கிகள் ஐந்தாறு மைல்களுக்கொரு முறை தோள் மாற்றி நடந்தனர்.
வழியில் இரண்டொரு இடத்தில் நிறுத்தி, ஓடைகளில் முகம் கால் கழுவி நீரருந்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டனர்.
“இந்த இடத்தில்தான் காட்டெருமை ஒருமுறை கூட்டமா வந்து மடக்கிடுச்சு.”
“இதோ இந்த மரத்துக்கிட்டதான் ஒரு கருங்குரங்கு செத்துக்கெடந்தது. குடலைப் புடுங்குற நாத்தம். நாலு நாள் இந்தப் பக்கமே நடக்க முடியலை.”
“பொழுது கசங்கலுக்குப் பூச்சிங்க கெளம்பிடும். மூஞ்சியிலேயே பறக்கும்.”
தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்பவர்கள் ஒவ்வொரு முறையும் நடந்த கதைகளைச் சொல்லிக்கொண்டே வந்தார்கள்.
மேகம் உருத்திரண்டது தெரியாமல் சடசடவென்று மழை கொட்டியது. நடை சுவார சியத்தில் பூமியைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் வானத்தைப் பார்க்கவில்லை.
அசலான காட்டின் மழையை ஊகிக்கவும் முடியாது. சுதாரிப்பதற்குள் சுளீரென்று அறைந்தன நீர்த்தாரைகள். சட்டென்று எங்கும் ஒதுங்கிவிடக்கூடாது. புதர்களுக்குள் காட்டு விலங்குகள் ஓய்வில் இருக்கும். காட்டின் நுட்பம் உணர்ந்த மேஸ்திரி நடையை நிறுத்தாமல் முன்னேறினான். ஜார்ஜியானா பதற்றத்துடன் குழந்தைகளைப் பார்த்தாள். தயாரிப்பாக கனமான கம்பளிகளைத் தூளியின் அடியில் வைத்திருந்தாள். டோலிக்காரர்கள் கம்பளிகளைக் குழந்தைகளின்மேல் போர்த்தினார்கள். எடித் மழைச் சத்தம் கேட்டு வீறிட்டது. லூசியும் டோராவும் பயந்து தூளிக்குள் தலையைப் புதைத்துக்கொண்டார்கள். பாதிரியார் பாடிச்செல்லும் கிறிஸ்துவின் துதி, மழையுடன் கரைந்து சேர்ந்திறங்கியது.
சின்னஞ்சிறு குகைபோன்ற பாறைக்குள் எல்லோரையும் அழைத்துச் சென்றான் மேஸ்திரி. பென்னி குதிரையை மழையில் விட்டு, இறங்கி ஓடிவந்து, பிள்ளைகளைத் தூக்கினார். ஜார்ஜியானா எடித்தைத் தூக்கிக்கொண்டு பாறைக்குக் கீழே வந்தாள். அவளுக்கு உடல் நடுக்கியது.
வானம் இருப்பதே தெரியவில்லை. மழையாக மாறித் தரையிறங்கியதுபோல் பிளந்து கொட்டியது.
“காட்டின் மழை அப்படித்தான் இருக்கும். கொஞ்ச நேரத்திலேயே இந்த வானமா கொட்டித் தீர்த்தது என்பதுபோல் வெளிவாங்கி நிற்கும். பயப்படாதே. தலை துவட்டி விடு எடித்துக்கு” பென்னி ஆறுதலாய்ச் சொன்னார்.
வானம் வாய் பிளந்து கொட்டுவது போலவே பூமியும் வாய் திறந்து பெருவெள்ளத்தைக் குடித்தது. பெய்யப் பெய்ய விழும் மழை எங்கு போகிறது என்பதே தெரியாமல் வெள்ளம் ஓடி மறைந்தது. எல்லோரும் உதடு கெட்டித்துக் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
“இவர் இப்போ சிறுத்தை மாதிரி சீறிக்கிட்டு இருக்காரு. கொஞ்ச நேரத்துல பாருங்க, முசுலுக் குட்டி மாதிரி தவ்விக்கிட்டுக் கெடப்பாரு” மேஸ்திரி தனக்குக் கட்டுப்பட்ட ஒரு பல்லக்குத் தூக்கியை நையாண்டி பேசுவதுபோல் வானத்தை நையாண்டி செய்தார்.
இரண்டு நாழிகை நேரம் விடாமல் பெய்த மழை, அடையாளம் காட்டாமல் வந்ததுபோலவே சட்டென்று நின்றது. உடைகளின் ஈரமும் வேகமாக உலர்ந்தது.
“அந்தி கசங்கலுக்கு முன்னால கும்பக்கரை போயிடலாம்னு பாத்தேன். முடியாதுபோல. எல்லாம் பத்திரமா ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டே வாங்க. டேய், டோலியைத் தூக்குங்கடா.”
மேஸ்திரியின் உத்தரவு வரும்முன்பே தூக்குத் தூக்கிகள் தயாராகி நடந்தனர். எல்லோரும் கிளம்பிவிட்டார்கள். முன்னால் சென்ற தூளியில் இருந்து எடித் வீறிட்டு அழுதது.
ஜார்ஜியானா என்ன என்பதுபோல் முன்னால் பார்த்தாள்.
பென்னி, தன் குதிரையை எடித்தின் அருகில் செலுத்தினார். குனிந்து எடித்தின் தலையில் தட்டிக்கொடுத்தார். எடித்தின் அழுகை குறையவில்லை. ஜார்ஜியானா டோலியை நிறுத்தச் சொல்லி, இறங்கி எடித்திடம் சென்று குழந்தையைத் தூக்கிச் சமாதானம் செய்தும் அழுகை குறையவில்லை. ஜார்ஜியானாவுக்கும் அழுகை பீறிட்டது.
ஜார்ஜியானா, எடித்தின் தூளி தூக்கியவர்கள் மட்டும் பின்தங்க, மற்றவர் முன்னேறினர்.
சுற்றியிருந்த பூக்களை, வண்டுகளைக் காண்பித்தாள் ஜார்ஜியானா. அப்போதும் அழுகை குறையவில்லை. குரங்கொன்று அருகில் இருந்த பைன் மரத்தில் உட்கார்ந்திருந்தது. முழுமையாக நனைந்திருந்த குரங்கு ‘ஈ’யென்று இளித்தது. குரங்கைக் காட்டினாள். குரங்கைப் பார்த்தவுடன் எடித் அழுகை தணிந்து சிரித்தது. விளையாட்டுக் காட்டி, எடித் இயல்பானவுடன் கிளம்பினர்.
கிருஷ்ணபட்சம் என்பதால் வானத்தில் வெளிச்சம் இல்லை. முன்னால் எடுத்து வைக்கும் அடி தெரியாத அளவு இருள் அடர்ந்திருந்தது.
எடித்தைத் தன்னுடனே வைத்துக்கொண்டு டோலியில் ஏறினாள் ஜார்ஜியானா.
“துரை, நீங்க மேம்சாப்கூட வாங்க. சத்தம் குடுத்துக்கிட்டு நாங்க முன்னால போறோம்.”
ஓங்கி வைத்த நடைச் சத்தம் சீராக முன்னேறியது. கொஞ்ச தூரம்தான் போயிருப்பார்கள்.
“சிக்கிட்டோம் துரை” கத்தினான் பல்லக்குத் தூக்கி. அதிர்ந்துபோன பென்னி, முன்னால் பார்த்தார்.
எடித் இருந்த தூளிக்கும் இரண்டடி முன்னால் நாக்கைச் சுழற்றியபடி சிறுத்தை நின்றிருந்தது.
- பாயும்