
தொடர்கதை
“அரசன் என்பவன் குடிகளைக் காப்பவன்.”
குதிரையின் வேகத்தை மிதப்படுத்தி, இடது கையில் சேணத்தைப் பிடித்திருந்த ஹானிங்டனின் குரல் நெகிழ்ந்திருந்தது.
வலது கையிலிருந்த பைப் புகைந்தது. சின்னஞ்சிறிய அவர் கண்களின் ஓரங்களில் ஈரம் கோத்திருந்தது.
``மெட்ராஸ் பிரசிடென்ஸியில் பஞ்ச காலத்தில் ஒரே ஒரு பிடிச் சோற்றுக்கு மக்கள் அடித்துக்கொண்டு செத்தபோது, மூட்டை மூட்டையாகத் தானியங்கள் கப்பலேறியதே? திருவிதாங்கூரிலோ கப்பக்கிழங்கைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார்கள். விசாகம் திருநாள் இந்தச் சமஸ்தானத்து மக்களுக்காக மலாயாவிலிருந்து வரவைத்த அரிய உணவு. முதன்முதலில் பதினைந்து செடிகளைக் கொண்டுவந்து நட்டார். எவ்வளவு அடர்ந்து பரவியிருக்கிறது பார் பென்னி.”
கறுப்புநிறக் குதிரையில் இருந்த பென்னி குக், சுற்றிலும் இருந்த கப்பக்கிழங்குச் செடிகளைப் பார்த்தார். இடுப்புயரம் வளர்ந்திருந்த செடிகளின் இலைகள் பளபளத்தன.
“அந்நிய தேசத்திலிருந்து வந்த இந்தத் தாவரத்திற்கு விதையேதும் தேவையில்லை. கரும்புபோல் வளர்ந்த செடியின் மொலியை வெட்டினால் நூறு செடிகள் நடலாம். நீர் பாய்ச்சத் தேவையில்லை. ஆடுமாடுகளுக்கு கப்பக்கிழங்குச் செடியின் வாசனை பிடிக்காததால் விலங்குகள் தொந்தரவு இல்லை. ஊரே பஞ்சத்தில் செத்தபோது, திருவிதாங்கூர் கப்பக்கிழங்கைச் சாப்பிட்டுப் பிழைத்துக்கொண்டது. நம் கவர்னர்கள் இப்படி ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்களா? கண்டுபிடிக்க மாட்டார்கள். குடிகளின் பசிபோக்க நினைக்கும் இவர்கள்தான் உண்மையான அரசர்கள். குடிகளைக் காக்க நினைக்கும் ஆட்சியாளர்கள். நாம் வணிகர்கள். பயிற்றுவிக்கப்பட்ட வணிகர்கள்.”

அரசர் விசாகம் திருநாளின் மரணச் செய்தி வந்ததிலிருந்து ரெசிடெண்ட் ஹானிங்டன் ஒருமிதத்தில் இல்லை. மனம் உடைந்திருந்தார். அரசரும் ஹானிங்டனும் ஆப்த சிநேகிதர்கள்.
“மகாராஜாவின் வாழ்வு பாதியில் நின்ற அத்தியாயமாகிவிட்டது. மகாராஜாக் களிலேயே இவர் அறிவுத்தாகம் மேலோங்கியவர். மெட்ராஸ் யுனிவர்சிட்டி அவரைத் தன்னுடைய ஃபெல்லோ ஆக்கியிருந்தது என்றால் பார்த்துக்கொள்.”
ஹானிங்டனின் உணர்ச்சிகள் கரைந்து வெளியேற வழிகொடுத்தபடி பென்னி அமைதியாக இருந்தார்.
ஹானிங்டன் குதிரையிலேயே விசாகம் திருநாளின் ஆனந்த விலாசம் அரண்மனைத் தோட்டத்தைச் சுற்றி வந்தார்.
“நாற்பத்தெட்டு வயதுதான் ஆகிறது. மகாராஜாவுக்குத் திடீர் மரணம் நிகழும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. இரண்டொரு நாளில் சரியாகிவிடுவார் என்று நம்பியிருந்தேன். பென்னி, உனக்குத் தெரியுமா, அவரும் என்னைப்போல் பாட்டனிஸ்ட். சிறிய செடி ஒன்று புதிதாகப் பார்த்துவிட்டால் போதும், அதென்ன குடும்பம் என்று தெரியும்வரை ஓய மாட்டார். நான் திருவிதாங்கூர் ரெசிடென்ட்டாக வந்தவுடன், எங்களுக்குள் நெருங்கிய நட்பு வந்துவிட்டது.”
பென்னி, ஹானிங்டனுக்கு அருகில் தன் குதிரையைச் செலுத்த நினைத்து, குதிரையைக் காலால் அணைந்தார். குதிரை திரும்பியது.
“இந்த அரண்மனையைப் பார். அமைப்பு நம் ஊர்க் கட்டடங்கள் போல். ஆளுயர சாளரம், உயர்ந்த தளம். கட்டுவதற்கு உள்ளூர்த் தொழில்நுட்பம். ஆசை ஆசையாகக் கட்டிய அரண்மனையில் நான்கைந்து வருடம்கூட அவர் வாழவில்லையே? தோட்டம் பார், செடி கொடிகள்மேல் அவருக்குள்ள காதல் தெரியும்.”
பரந்து விரிந்திருந்த தோட்டத்தின் குறுக்கும் நெடுக்குமாக இருவரின் குதிரைகள் நடைபோட்டன. அரண்மனையின் முன்வாசலில் துக்கம் மண்டிய முகங்களுடன் மக்கள் நின்றிருந்தனர்.
“பென்னி, இன்னொரு இடத்திற்கு உன்னைக் கூட்டிச் செல்கிறேன், வா.”
பென்னியின் கண்கள் வியப்பில் விரிந்தன.
சமஸ்தானத்தின் மகாராஜா இறந்திருக்கிறார். அவருக்கான இறுதிச்சடங்குகள் இன்னும் முடியவில்லை. ஹானிங்டன் அவருக்கு அஞ்சலி செலுத்தப் போகாமல், தன்னையழைத்துக்கொண்டு எங்கெங்கோ செல்கிறாரே!
ஹானிங்டனின் குதிரை வேகமெடுத்திருந்தது. பென்னியும் பின்தொடர்ந்தார்.
இருபது நிமிடப் பயண நேரத்தில் இருவரின் குதிரையும் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்தன. ஐந்தாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிவப்புநிறக் கட்டடத்திற்குள் நுழைந்த ஹானிங்டன், பின்புறம் இருந்த தோட்டத்திற்கு விரைந்தார்.
‘ஹானிங்டன் அடிக்கடி தீவிரமாக ஏதோ யோசிக்கிறார். பின் அவர் நடவடிக்கை மாறிவிடுகிறது’ என்று நேற்றிரவு, அரண்மனையின் வெளியே உலாத்திக் கொண்டிருந்தபோது குருவாயி சொன்னது பென்னி குக்கிற்கு நினைவு வந்தது.
ஹானிங்டன் இப்போதும் சமநிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.
“பென்னி, இங்கே பார், இங்கே பார், இரண்டு ரப்பர் செடியை இலங்கையில் இருந்து வரவழைத்தார். இதுவரை இப்படியொரு தாவர வகை இருப்பதே இங்குள்ளவர்களுக்குத் தெரியாது. இதைப் பிழைக்க வைக்க, அவர் என்ன பாடுபட்டார் தெரியுமா? தினம் காலையில் அவரே இங்கு வந்துவிடுவார். தன்னுடைய குழந்தையைப்போல் பராமரித்தார்.”
ஹானிங்டன் குதிரையில் இருந்து இறங்கினார். ஆளுயரம் வளர்ந்திருந்த ரப்பர் செடியைத் தொட்டுப் பார்த்தார்.
“மை டியர் பிரெண்ட்...”
குரல் தழுதழுக்க, ரப்பர் செடியின் முன்னால் மண்டியிட்ட ஹானிங்டன், கண்களை மூடி மௌனித்தார்.
பதறிய பென்னி குக் குதிரையில் இருந்து இறங்கி, ஹானிங்டனைப் பார்த்தபடி நின்றார்.
நிமிடங்கள் கரைந்தன.
தோட்டம் முழுக்க வண்ணத்துப் பூச்சிகள். பலவண்ணத்தில் இருந்த அவை, இலைகளின் பச்சையத்தைத் தழுவி, மேலேழும்பி, புது வண்ணக் கலவையுடன் சிறகடித்தன.
பென்னி குக் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தார். மூங்கில், பலா மரங்கள் அடர்ந்திருந்த தோட்டம். இடையில் வெளிறிய பச்சையில் ரப்பர் மரம் தழைத்திருந்தது.
ஹானிங்டன் தடுமாறி எழுந்தார். வயது கூடிவிட்டதை அடிக்கடி மறந்து போகிறார்.
“பத்மநாபசாமி ஆட்சி செய்வதால், திருவிதாங்கூர் கடவுளின் தேசம். கடவுள் ஆட்சி செய்தாலும், கடவுளின் தாசர்கள்தானே குடிகளைக் காக்க வேண்டும்? விசாகம் திருநாள் திருவிதாங்கூரின் வளர்ச்சிக்காகவே ரப்பரைக் கொண்டு வந்தார். பென்னி, அடுத்த இருபது வருடங்களில் காபி இருக்குமிடங்களை ரப்பர் ஆக்கிரமித்துவிடும். நான் சொல்வது சரிதானே?”
“யெஸ் யுவர் எக்ஸலென்ஸி.”
பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளைப் பார்த்தவுடன், ஹானிங்டன் முகம் குழந்தையைப் போலானது. ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சியாகப் பார்த்தார்.
“விசாகம் இதிலொரு வண்ணத்துப்பூச்சியாக மாறியிருப்பாரோ? காலையில் எழுந்ததும் அவரால் ரப்பர் மரத்தைப் பார்க்காமல் இருக்க முடியாதே!”
பென்னிக்கு வயிறு பிசைந்தது.
“ஹிஸ் எக்ஸலென்ஸி, உங்கள் பங்களாவுக்குத் திரும்பலாமா? ஹர் எக்ஸலென்ஸி காத்துக்கொண்டிருப்பார்.”
“யெஸ், போகலாம்.”
ஹானிங்டன் பிடிவாதம் பிடிக்காமல் எழுந்தார்.
அவர் உடல் முற்றிலும் தளர்ந்திருந்தது.
பென்னி அவரது கையைப் பிடித்துக் குதிரையில் ஏற்றினார்.
“துரதிர்ஷ்டம் பிடித்த திட்டமாக இருக்கே?”
ஹானிங்டன் குரலில் சலிப்பிருந்தது.
இரவும் மதுவும் அவருக்கு நிதானத்தைத் தந்திருந்தன. சுடர்விடும் ஒளியைக் கண்ணாடி மட்டுப்படுத்தியதில், அறை இதமான மங்கிய வெளிச்சத்தில் இருந்தது.

பென்னியின் மனம் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. ‘பெரியாறு ஆற்றில் அணை கட்டுவதற்காக, அடர்ந்த மேல்மலைக் காட்டிற்குள் சென்று, அணை கட்டும் சாத்தியத்தைப் பத்துத் தடவைக்குமேல் ஆய்வு செய்துவிட்டார்கள் பொறியாளர்கள். பிரிட்டிஷ் அரசாங்கமும் திருவிதாங்கூர் அரசரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் வேலையைத் தொடங்கலாம் என்றால், எத்தனை தடங்கல்கள்! தென்னிந்தியர்கள் நிற்பதற்கும் நடப்பதற்குமே நிமித்தம் பார்ப்பவர்கள். குத்தகை ஒப்பந்தத்திற்காகப் பேசிக்கொண்டிருக்கும்போது மகாராஜா இறந்துவிட்டார் என்பதைக் கட்டாயம் தீநிமித்தமாகப் பார்ப்பார்கள். அடுத்து வரப்போகும் திருவிதாங்கூர் அரசரிடம், உடனடியாகக் குத்தகை பற்றிய பேச்சையே எடுக்க முடியாதே! கையெழுத்துடன்தான் திரும்பிவர வேண்டும் என்று கவர்னர் என்னை அனுப்பினார். ரெசிடெண்ட் ஹானிங்டனை நம்பி வந்தேன். அவர் உணர்ச்சிக் கொந்தளிப்பின் இருநிலைகளில் நிற்கிறார். இவரைச் சமாளித்து, அடுத்த நிலைக்கு நகர்வது எப்படி?
மகாராஜாவின் திடீர் மரண அதிர்ச்சியில் இருப்பவர்களிடம் இப்போதைக்கு ஒன்றும் பேச முடியாது. அடுத்து எவ்வாறு அணுகுவது என்று முடிவு செய்துகொண்டு மெட்ராஸுக்குப் புறப்பட வேண்டியதுதான்’ என்ற முடிவுக்கு வந்தார் பென்னி குக்.
மனம் பெரியாற்று அணைக்கு உருவாகும் தடங்கல்களையே யோசித்தது. மனத்தின் பலவீனமே மறக்க நினைப்பதை நினைக்க வைப்பதுதானே?
``என்ன பென்னி, தீவிர யோசனை?”
“எண்பது வருஷமா கிடப்பில் கிடந்தது. ராமநாதபுரம் அரசர் முத்துராமலிங்க சேதுபதி காலத்திலேயே வந்திருக்க வேண்டியது.”
“நின்றுபோனதற்கு நாம்தானே காரணம் பென்னி? அரசராக அவர் ராமநாதபுரம் அரண்மனையில் இருந்த காலத்தைவிட, திருச்சி, மெட்ராஸ் என நம் சிறைச்சாலைகளில் கழித்த காலம் அதிகம்.”
“நம் கடற்கரையில் சில கப்பல்கள் நின்றிருக்கும். தம்முடைய முதல் பயணத்திலேயே துரதிர்ஷ்டம் பிடித்த கப்பல் என்று பெயர் வாங்கியிருக்கும். அப்படித்தான் இந்தத் திட்டமும் என்று நினைக்கிறேன் ஹிஸ் எக்ஸலென்ஸி.”
“அதேதான். எத்தனை தடங்கல்கள்? சேதுபதி அரசரின் பிரதானி முத்திருளப்ப பிள்ளையும் கெட்டிக்காரர்தான். அவருக்கு எப்படித்தான் இந்த யோசனை வந்ததோ? ராமநாதபுரத்து மக்கள் பஞ்சத்தின் கொடுமை தாங்காமல் ஊர் ஊராகப் பஞ்சம் பிழைக்க வெளியேறியபோது, பெரியாறு ஆற்றை வைகையுடன் இணைக்க நினைத்தார். ஊரே பஞ்சத்தில் கிடந்த நேரம். பணமில்லாததால் நடக்காமல்போச்சு.”
“நம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தாலேயே முடியவில்லையே? நானே மூன்று முறை திட்டத்தைச் சரிசெய்து கவர்னரிடம் கொடுத்திருக்கிறேன். இந்த முறை நடந்துவிடும் என்று நம்பிக்கையோடு இருந்தேன். நான் கிளம்பும்போது, ஜார்ஜினா, ‘கட்டாயம் மகாராஜாவின் கையெழுத்தோடு வருவீர்கள் பென்னி’ என்றாள். நீங்கள் கையெழுத்து வாங்கிவிடுவீர்கள் என்று கவர்னர் உறுதியாக நம்பக் காரணம், நீங்கள் இருவரும் நண்பர்கள் என்பதால்தான் ஹிஸ் எக்ஸலென்ஸி.”
“ராஜாங்க விஷயங்கள் வேறு. தனிப்பட்ட நட்பு வேறு. மகாராஜா என்னுடன் கொட்டாரத்தில் நடந்தபடியே மணிக்கணக்கில் பேசுவார். வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றி ஆர்வமாக விவாதிப்பார். ஒரு வார்த்தை ராஜ்ஜிய காரியங்களைப் பேச மாட்டார். நமக்குக் கப்பம் கட்டுகிறவர்கள், எதுவரை நம்மை அனுமதிக்க வேண்டும் என்று அறிந்திருக்க மாட்டார்களா?”
“யெஸ் ஹிஸ் எக்ஸலென்ஸி, திவானுக்கு அணை கட்டுவதில் உடன்பாடில்லையோ?”
“தேர்ந்த ராஜதந்திரி வெம்பாக்கம் அய்யங்கார். ஒரு விஷயத்திலும் அவர் கருத்தென்ன என்று நம்மால் ஊகிக்க முடியாது. அவருக்கு இதில் உடன்பாடு இல்லையென்றுதான் நினைக்கிறேன். உடன்பாடிருந்தால் மகாராஜாவின் அனுமதியை அவர் என்றோ வாங்கியிருப்பார்.”
“நேற்று திவானுடன் பேசும்போது நீங்கள் பூஞ்சார் அரசர் குறித்துச் சொன்னீர்களே யுவர் எக்ஸலென்ஸி? உண்மையில் பெரியாற்று அணைகட்ட நாம் தேர்வு செய்துள்ள இடம் திருவிதாங்கூர் அரசருக்குச் சொந்தமானதா? பூஞ்சார் அரசருக்குச் சொந்தமானதா?”
ஹானிங்டன், பென்னி குக்கை உற்றுப் பார்த்தார்.
அரையிருளிலும் அவரின் பார்வையைச் சந்திக்க முடியாமல் தலைகுனிந்தார் பென்னி.
“மன்னிக்க வேண்டும் ஹிஸ் எக்ஸலென்ஸி. நான் ஏதும் தவறாகச் சொல்லிவிட்டேனா..?”
“பெரியாற்று அணைக்கான மொத்த விவரமும் விரல் நுனியில் வைத்திருக்கும் ஒரு நபர், என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கலாமா?”
“வருவாய்த் துறை ஆவணங்களில் இருந்து மேற்கு மலைத்தொடர் காட்டின் பெரும்பகுதி பூஞ்சார் அரசருக்குச் சொந்தமானதுதான். எனக்குச் சந்தேகமே இல்லை. என் சந்தேகமெல்லாம், நம் கவர்னர்கள் ஏன் தொடக்கத்திலிருந்தே பூஞ்சார் அரசரை விட்டு, திருவிதாங்கூர் அரசரிடம் குத்தகை ஒப்பந்தம் பேசுகிறார்கள் என்பதுதான்.”
ஹானிங்டன் தன் மென்மையான குரலின் ஒலியை மேலும் குறைத்தார்.
“பென்னி, நீயும் நானும் இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். படிப்புக்காக நம் நாட்டுக்குச் சென்று, படித்து, பயிற்சி பெற்று வந்திருந்தாலும், லண்டனில் பிறந்து வளர்ந்து இங்கு ஆட்சியாளர்களாக வந்துள்ளவர்களோடு ஒப்பிட்டால், நமக்குக் குயுக்தி குறைவுதான். வலுத்தவனிடமே ஒப்புதல் வாங்கிவிட்டால், வலு குறைந்தவன் அடங்கித்தானே போக வேண்டும்?”
பென்னியின் முகத்தில் குழப்பம் அதிகரித்தது.
“பூஞ்சார் அரசரிடம் குத்தகைக் கையெழுத்து வாங்கியிருந்தால்?”
“திருவிதாங்கூர் அரசர் சும்மா விடுவாரா? அணை கட்டும் இடம்தான் பூஞ்சார் அரசருடையது. அணையிலிருந்து வெளியேறும் நீர், திருவிதாங்கூர் வழியாகத்தான் மதுரைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லி, அணை கட்டுவதை அவர் தடுத்து நிறுத்த முடியும். காரணமே இல்லையென்றாலும், தன்னுடைய சிற்றரசனுடன் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்பந்தம் செய்வதன்மூலம், தன்னை அவமதித்ததாகத் திருவிதாங்கூர் அரசர் நினைக்கக்கூடும். பலமிக்கவனை அமைதியாக்கிவிட்டால் பிரச்னை முடிந்தது. பூஞ்சார் அரசர், தன்னிடம் ஏன் ஒப்பந்தம் செய்யவில்லை என்று நம்மைக் கேட்க மாட்டார். இதை நீயும் நானும் யோசிக்க முடியாது.”
“ஓ, சிக்கலான தொழில்நுட்பங்களைக் கூட என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அரசியல் தந்திரங்கள்தான் புரியவில்லை.”
“அதனால்தான் நீ ராணுவ இன்ஜினீயர். நான் ரெசிடெண்ட். கன்னிமாரா கவர்னர்.” ஹானிங்டன் சிரித்தார்.
“பூஞ்சார் அரசர் ராம வர்மா, மகாராஜா விசாகத்தின் மருமகன்தானே?”
“விசாகம் திருநாளின் மனைவி லெட்சுமியின் கடைசி மகள்தான் பூஞ்சார் அரசரின் மனைவி. லெட்சுமியை விசாகம் விரும்பித் திருமணம் செய்திருந்தார். மனைவிமேல் பெரும் காதல். அன்றிருந்த அரசருக்கும் சமஸ்தானத்தில் இருந்தவர்களுக்கும் விசாகத்தின் முடிவில் விருப்பமில்லை. அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மனத்துக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.”
`‘ஓ!”
“பூஞ்சார் அரசரை இதில் தலையிடாமல் இருக்க வைப்பதும், தலையிட வைப்பதும் நம் கையில்தான் இருக்கிறது. பெரியாற்று விஷயத்தில் பூஞ்சார் அரசர் முடிவெடுக்கலாம். அந்த இடத்தை நோக்கி நாம் நகர்ந்தால், திருவிதாங்கூர் சமஸ்தானம் பதறிவிடும். மார்த்தாண்ட வர்மா காலத்திலிருந்துதான் இவர்கள் சுதந்திர அரசர்களாக இருக்கிறார்கள். போர்ச்சுக்கீசியர்களின் பிடியில் இருந்து வெளியேறியவர்கள், தங்களின் அரச பதவி பறிபோய்விடக் கூடாது என்பதற்காகத்தான் நம்மிடம் கப்பம் கட்ட சம்மதித்தார்கள். அவர்களால் நம்மை எதிர்த்து நிற்க முடியாது. ஆனால், எந்த நேரத்திலும் நம் எதிரிகளுக்குத் துணைபோக முடியும்.”
வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, சமஸ்தானத்தின் மரபுப்படி விசாகம் திருநாளின் நல்லடக்கம் நடந்து முடிந்தது. திவான் ராமய்யங்கார் உடனடியாக ரெசிடெண்ட் ஹானிங்டன்னைப் பார்க்க வந்திருந்தார்.
“இந்த நள்ளிரவில் வந்திருக்கிறீர்களே, திவான்?”
“ஹிஸ் எக்ஸலென்ஸி, மன்னிக்க வேண்டும். அகாலத்தில் தங்களைத் தொந்தரவு செய்வதற்கு. விடிந்தால் பத்மநாபசாமிக்குப் பூசை தொடங்குவார்கள். உலகத்தையாளும் பத்மநாபசாமிக்கு, இந்தச் சமஸ்தானத்தின் நிரந்தர அரசரான அவருக்கு, தலைமைச் சேவகன் யாரென்று பூசைக்கு முன்னால் முடிவு செய்ய வேண்டும்.”
“தெரிந்ததுதானே? மகாராஜா விசாகம் திருநாளுக்கு ஒரே சகோதரிதான். அவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் அஸ்தம் திருநாளுக்கு அரசராகும் வாய்ப்பில்லை. உடல், மனநிலைக் கோளாறுகள். மூலம் திருநாள்தானே அடுத்த அரசர்?”
“தம்புராட்டிகள் அப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். யாரைத் தேர்வு செய்தாலும், உங்கள் பரிந்துரை இருந்தால்தானே வைஸ்ராய் அனுமதி கொடுப்பார்? உங்கள் பரிந்துரை வேண்டியே உடனடியாகத் தங்களைச் சந்திக்க வந்தேன்.”
ஹானிங்டன் உதவியாளனைப் பார்த்தார். அவன் பைப்பைப் பற்ற வைத்துக் கொடுக்க, இரண்டு மூன்றுமுறை இழுத்துப் புகையை வெளியேற்றினார்.
“தட் யங்க் மேன்?” என்றார் யோசனையுடன்.
“யெஸ் யுவர் எக்ஸலென்ஸி, அவர்தான்.”
“வயசு?”
“இருபத்தெட்டு.”
“இவரின் தம்புராட்டிதானே குஞ்சுலெட்சுமி? இரண்டாண்டுகளுக்குமுன் இறந்தாரே?”
“ஆமாம் ஹிஸ் எக்ஸலென்ஸி.”
‘`அடுத்த அரசராகப் பதவியேற்றவுடன் புதுத் தம்புராட்டியா?”
“இருக்கலாம் ஹிஸ் எக்ஸலென்ஸி. தம்புராட்டி இறந்ததிலிருந்து வேறு திருமண எண்ணம் இல்லாமல்தான் இருந்தார். இப்போதுதான் வடசேரி அம்மாச்சியின்மேல் விருப்பம் கொண்டிருக்கிறார்.”
கதவு திறக்கும் ஓசையை உணரும்முன், ஹானிங்டனின் செயலாளர் உள்ளே வந்திருந்தார்.
“யுவர் எக்ஸலென்ஸி, ஹிஸ் எக்ஸலென்ஸி மெட்ராஸ் கவர்னரிடம் இருந்து கேபிள் வந்திருக்கிறது.” எதிரில் இருந்த குட்டை மர டீப்பாவின்மீது, உறையை வைத்துவிட்டுப் பின்னகர்ந்து சென்றார்.
ஹானிங்டன் உறையைப் பிரித்தார்.
“கல்கத்தா கவர்னர் ஜெனரல் ஹிஸ் எக்சால்ட்டட் ஹைனெஸ் லார்ட் டப்ரின் அண்ட் லேடி டப்ரின், மகாராஜா விசாகம் திருநாள் மரணத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கின்றனர். அபாரமான அறிவுத்திறன் நிரம்பிய அவரை டெல்லி மேல்சபையின் உறுப்பினராக்க மேன்மைமிகு பிரிட்டிஷ் அரசர் விரும்பினார். டெல்லி சீதோஷ்ணம் தனக்கு ஒத்துக்கொள்ளாது என்று சொல்லி, மகாராஜா டெல்லி மேல்சபை உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். அவர் ஆட்சிக்காலத்தில் நம் இரண்டு அரசாங்கங்களுக்கும் இடையில் நல்லுறவு நிலவியதை நினைவுகூர்கிறேன்.”
அடுத்ததாக மெட்ராஸ் கவர்னரின் தந்தியைப் படித்த ஹானிங்டன், கடித உறைக்குள் இன்னொரு தாளும் இருந்ததை எடுத்தார்.
“அடுத்த மெட்ராஸ் கவர்னராகப் போகும் ஹிஸ் எக்ஸலென்ஸி கன்னிமாராவும் கேபிள் அனுப்பியிருக்கிறார்.”
“ஹிஸ் ஹைனெஸ் விசாகம் திருநாள் இஸ் அ கிரேட் பிரெண்ட் ஆப் மைன். அவர் மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் வகுப்பு நடத்தும்போது, மாணவர்களோடு மாணவனாக உட்கார்ந்து பாடம் கேட்ட நாள்களை நினைவுகூர்கிறேன்.”

ஹானிங்டன் வாசித்ததைக் கேட்ட ராமய்யங்கார் மனம் நெகிழ்ந்தார்.
“நெகிழ்ச்சியாக இருக்கிறது ஹிஸ் எக்ஸலென்ஸி. மகாராஜாவின் தம்புராட்டிகளிடமும் சொல்லிவிடுகிறேன். ரொம்பச் சந்தோஷப்படுவாங்க.”
“வெம்பாக்கம், நீங்கள் எனக்கு ஒரு உறுதியைக் கொடுக்க வேண்டும். அரசர் மூலம் திருநாள் பெரியாற்று அணை ஒப்பந்தம் பற்றி என்ன அபிப்ராயத்தில் இருக்கிறார் என்று எனக்கு முதலில் தெரிந்தாக வேண்டும்.”
“யுவர் எக்ஸலென்ஸி, தெய்வீகமாகிவிட்ட விசாகம் திருநாள் கையெழுத்திடத் தயாராகத்தான் இருந்தார். அவருடன் எப்போதும் இருப்பவர்கள் தடுத்துவிட்டார்கள்.”
“எப்போதும் இருப்பவர்கள் என்றால்... நீங்களும்தானே?”
“நான் ராஜாங்க காரியங்கள் மட்டும் பார்ப்பவன். அரசரின் முடிவுகளைப் பெரும்பாலும் தர்க்கசாஸ்திரிகள்தான் தீர்மானிப்பார்கள்.”
ஹானிங்டன் யோசனையுடன் உதவியாளரிடம் பைப்பைத் திரும்பக் கொடுத்தார்.
“ராஜாங்க காரியங்களின் போக்கை தர்க்கசாஸ்திரிகள் அறிவார்களா என்பது சந்தேகம். அரசர் எந்தவொரு காரியத்தைச் செய்வதற்கு முன்பும் தர்க்கசாஸ்திரிகளிடம் கருத்து கேட்பார். அவர்கள் சொல்வதற்கு முக்கியத்துவம் உண்டு.”
“உங்கள் ஆலோசனையைவிடவா திவான்?”
“யுவர் எக்ஸலென்ஸி, காலங்கள் மாறிவிட்டன. முன்பிருந்த கேசவ தளவாய்போல நான் மகாராஜாக்களை நிர்பந்திக்க முடியாது. அதுவும் உங்கள் ஆட்சி வந்த பிறகு, ஊட்டி, மெட்ராஸ், கல்கத்தா என்று மகாராஜாக்கள் அடிக்கடி போய்வருவதால் அவர்களுக்குப் பல விஷயங்கள் தெரிகிறது. நாங்கள் சொல்வதை மற்றவர்களிடம் சரிபார்த்துக்கொள்கிறார்கள். கேசவ தளவாய் அளவு எனக்குத் தகுதியில்லையென்றாலும் என்னால் முடிந்தவரை முயல்கிறேன். வேண்டுமென்றால் மகாராஜா மூலம் திருநாளுடன் உங்களைச் சந்திக்க வைக்கிறேன்.”
“உங்கள் வேலையை என்னைப் பார்க்க வைக்காதீர்கள் அய்யங்கார். வேண்டுமானால் லெப்டினென்ட் பென்னியையும் அரசரையும் சந்திக்க வையுங்கள். சாதகமான பதில் வரும்வரை, அடுத்த மகாராஜா யாரென்று மெட்ராஸ் கவர்னருக்கு என் பரிந்துரைக் கடிதம் போகாது.”
திவான் அதிர்ந்தார்.
“நீங்கள் புறப்படலாம்.”
எழுந்து நின்று தரையில் புரண்ட வஸ்திரத்தைச் சரிசெய்துகொண்ட திவான் ராமய்யங்கார், ஹானிங்டனை வணங்கி விடைபெற்றார்.
சாளரத்திற்கு வெளியில் நட்சத்திரங்களுமற்று இருண்டிருந்த வானத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார் ஹானிங்டன். திவானின் பல்லக்கு வெளியேறுவது மங்கலாகத் தெரிந்தது.
பல்லக்கு வெளியே செல்லக் காத்திருந்ததுபோல் சீறிப் பாய்ந்த குதிரையொன்று உள்ளே வந்தது.
“இந்நேரத்தில் வருவது யார்?”
ஹானிங்டன் ஆச்சரியத்துடன் பார்த்தார்.
சில நிமிடங்களில் அறைக்கதவைத் திறந்து காவலாளி உள்ளே வந்தான்.
“ஹிஸ் எக்ஸலென்ஸி, அரண்மனையிலிருந்து சேதிக்காரன் ஒருவன் வந்திருக்கிறான். அவசரச் செய்தியாம்.”
“வரச் சொல்.”
உள்ளே வந்த வீரன் ஹானிங்டனை வணங்கி, கையில் இருந்த கடிதமொன்றைக் கொடுத்தான். பதிலுக்குக் காத்திருக்கத் தனக்கு உத்தரவில்லாததால் வெளியேறினான்.
விசாகம் திருநாளின் மனைவி அம்மாச்சி லெட்சுமி கொச்சம்ம தம்புராட்டி, தன்னைச் சந்திக்க வரும்படி, தெளிவான ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.
ஹானிங்டன் வெளியில் பார்த்தார்.
நட்சத்திரங்களற்ற வானம் முன்பைவிட இருண்டிருந்தது.
- பாயும்..