
பிரிட்டிஷ் அதிகாரிகள் பயணக்காலங்களில் தங்கிச் செல்வதற்கான ஓய்வு விடுதி ரயில் நிலையத்தை ஒட்டியிருந்தது.
எஜமானனின் மனோவேகத்தை அறியும் நுட்பமுள்ள திவான் ராமய்யங்காரின் குதிரைகள் இரண்டும் காதுகளைப் பின்னோக்கி மடக்கி, ‘புரிந்துகொண்டோம்’ என்பதாக வேகம் கூட்டின.
ராமய்யங்காரின் மனநிலை எதிரெதிர் துருவங்களுக்கிடையிலான விசையாக இழுபட்டது. கிண்டி லாட்ஜில் யதேச்சையாகத் தவிர்ப்பதுபோல் தன்னைத் தவிர்த்துவிட்டுக் கிளம்பிய கவர்னர், அரக்கோணம் விடுதியில் சந்திக்க அனுமதிப்பாரா? அதிகாரத்தில் இருப்பவர்களின் மொழியே மாயம் நிறைந்தது. பலவண்ணங்களும் பல முகங்களும் கொண்டவை. ராமய்யங்காரும் அதிகாரப் படிநிலையில் இருப்பதால் மாயத்தின் திரைக்குப்பின் உள்ள முகத்தினை ஓரளவுக்கு உணர்ந்தார். கவர்னர் தன்னைத் திட்டமிட்டுத்தான் புறக்கணித்திருப்பார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கோரிக்கையை ஏற்க முடியாத சூழல் இருக்கலாம். அவற்றை நிராகரிப்பதன்மூலம் எழும் கசப்புணர்வைவிட, தன் சந்திப்பைத் தவிர்ப்பதால் உண்டாகும் கசப்புணர்வு குறைவென்று எண்ணியிருக்கலாம். “பெருமாளின் அனுகிரகம் என்னவோ, அப்படியே நடக்கட்டும்” வாய்க்குள் முணுமுணுத்தபடியே அரக்கோணத்திற்குள் நுழைந்தார்.
பிரிட்டிஷ் அதிகாரிகள் பயணக்காலங்களில் தங்கிச் செல்வதற்கான ஓய்வு விடுதி ரயில் நிலையத்தை ஒட்டியிருந்தது. அகன்ற அவ்வீதியில் நுழைகையிலேயே, கவர்னர் விடுதிக்கு வந்துவிட்டதை உணர்ந்தார் திவான். வீதியின் நுழைவாயிலில் வரவேற்புத் தோரணங்களும், பூ அலங்காரங்களும் விசேஷமாக இருந்தன. கவர்னர் திடீர் பயணமாகக் கிளம்பியிருந்தால், நேர்த்தியான, ஆடம்பரமான வரவேற்பு ஏற்பாடுகள் எப்படி நடந்திருக்கும்? உண்மையில் கவர்னரின் பயணம் திட்டமிட்டதுதானோ? சமஸ்தானத்திற்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட நாளும் நேரமும்தான் தவறோ?
‘எத்தனை முறை இந்தக் கேள்வி? எத்தனை முறை நாள், நேரத்தைச் சரிபார்ப்பது?’ எனத் தன்னையே கடிந்துகொண்டார் திவான்.
கவர்னர் வந்து நேரமாகியிருக்க வேண்டும். வரவேற்பு பாணம் விட்டதில் வெடித்துச் சிதறியிருந்த மருந்துத்துகள்களைக் காற்று பாதையோரத்தில் குவித்திருந்தது.
நுழைவாயிலில் ராணுவத்தினரும் வருவாய்த்துறை அலுவலர்களும் கண்ணில் படவில்லை. வரவேற்க வந்தவர்களிடம் அளவளாவிவிட்டு கவர்னர் ஓய்வெடுக்க உள்ளே சென்றுவிட்டிருப்பார். நல்லதுதான். சிறிது தூக்கம், ஓய்வுக்குப்பின் தன்னைப் பார்த்தால் சந்திக்க விருப்பம் தெரிவிக்கலாம். தூக்கம் கோபத்தையும் கசப்பையும் குறைக்கும் அருமருந்து.
வீதியின் இரண்டு பக்கங்களையும் பார்த்தபடி முன்னேறினார் திவான். விடுதிக்கு மிகத் தொலைவிலேயே பல்லக்குத் தூக்கிகளும் சாரதிகளும் குவிந்திருக்க, குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும், சாரட் கோச் வண்டிகளுமாக நின்றிருந்தன.
திவானுக்குத் திக்கென்றது. கவர்னரைச் சந்திக்கும் வேகத்தில் கிளம்பி வந்துவிட்டோம். மெட்ராஸ் பிரசிடென்சியின் அத்தனை அதிகாரிகளும், முக்கியஸ்தர்களும் இருப்பார்களே? அவர்கள்முன் தனக்கு ஏதேனும் அவமானம் நிகழ்ந்தால்? சமஸ்தானத்தின் பெருமைக்குத் தான் தேடித்தரும் களங்கமாக இருக்குமே? திவானுக்கு மனம் குழம்பியது. குதிரைகள் வேகம் குறைந்தன. இடம் வந்துவிட்டது மட்டும் காரணமல்ல; திவானின் சிந்தனை குழம்பியதைக் குதிரைகள் அறிந்ததும் ஒரு காரணம்.
விடுதியின் முன்னால் பிரிட்டிஷ்காரர்களும் உள்ளூர் முக்கியஸ்தர்களும் குழுமியிருந்தார்கள். மெட்ராஸ் பிரசிடென்சியின் முக்கியஸ்தர்களில் தன்னை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கவர்னரைச் சந்திக்க அரக்கோணம்வரை வந்திருக்கிறேன் என்பதுதான் இன்று பிரசிடென்சியின் பேச்சாக இருக்கப்போகிறது. நான் என்ன செய்ய முடியும்? அந்தப் பரமாத்மாவே சாரதியாக இருக்கிறான். அவன் விட்ட வழி. மனத்தைத் தேற்றிக்கொண்டு விடுதியின் முன் இறங்கினார்.
நின்றிருந்தவர்களின் உடைகளைப் பார்த்தாலே அவர்களின் வேலையைச் சொல்லிவிடலாம். தலைப்பாகையும் சோமனும் கட்டிய கிராம முன்சீப்கள் விடுதியின் வாசலிலிருந்து ஒதுங்கி கடைசியில் நின்றிருந்தார்கள். முழங்கை வரை நீண்டிருந்த மேல்சட்டையும் தார்பாய்ச்சுக் கட்டிய சோமனும், தோளில் துண்டுமாக இருந்தனர் தாசில்தார்கள். அவர்களின் கண்ணசைவைப் பார்க்கும் தூரத்தில் முன்சீப்கள் இருந்தார்கள்.
தாசில்தாருக்கு முன்னால் கலெக்டரின் ஹெட் அசிஸ்டெண்ட். கலெக்டர் இல்லாதபோது அவர் கலெக்டர் தோரணை காட்டுவார். கலெக்டர் இருக்கும் நேரத்தில் அவர் உடல் தாசில்தாரின் பவ்வியத்திற்குக் குனிந்திருக்கும்.

கலெக்டரின் ஹெட் அசிஸ்டெண்டுக்குமேல் பெரும் பாலும் பிரிட்டிஷ்காரர்கள்தான் பதவியில் இருந்தார்கள். ஹெட் அசிஸ்டெண்டுக்கு முன்னால் வேலூர் சப் கலெக்டரும், டிஸ்ட்ரிக்ட் இன்ஜினீயரும் நின்றிருந்தார்கள்.
வாசலில் மெட்ராஸ் மிலிட்டரி வீரர்கள், செவ்வண்ணச் சீருடையில் கையில் துப்பாக்கியுடன் இருந்தார்கள்.
‘சப் கலெக்டர் ஒதுங்கி நிற்பதைப் பார்த்தால், வடாற்காடு மாவட்ட கலெக்டரும் வந்திருப்பார் போல...’ யோசித்தவாறு திவான், விடுதியின் வாயிலுக்கு வந்தார்.
“வாங்கோ வாங்கோ, திருவிதாங்கூர் சமஸ்தானத்தோட திவானைப் பாக்குறதுன்னா அந்தப் பத்மநாபனையே பாக்குறதோ இல்லையோ? இந்த நாள் திவ்வியமான நாளாயிடுச்சே...” வாயில் போட்டிருந்த வெற்றிலைச் சாறு ஒழுகிவிடாமல் இருக்க அண்ணாந்து பேசியவரைத் திரும்பிப் பார்த்தார் திவான்.
“லக்ஷ்மணனா... வரணும்... வரணும்.” திவானும் முகமன் கூறினார்.
ஜெய்ப்பூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்து ஓய்வு பெற்றிருந்த லக்ஷ்மணன் அய்யங்கார், இப்போது வேங்கடகிரி ஜமீனில் இருக்கிறார். மகாராஜா வெளியில் செல்லும் நேரங்களில் உடன் வருவார்.
“கார்த்தால கெளம்பலையே நல்ல சகுனமாத்தான் இருந்துச்சி. திவான் ராமய்யங்காரைப் பார்ப்பேன்னு நினைக்கலை.”
அண்ணாந்து பேசினாலும் எச்சில் தெறித்தது.
“மொதல்ல துப்பிட்டு வாங்கோ. எதிராள்மேல அபிஷேகம் பண்ணிடாதீங்கோ.”
“சட்டுனு துப்பிட முடியுமா? இப்பத்தான் வாசனை சீவலைப் போட்டிருக்கேன். இன்னும் ஒருமுறையாவது சவைக்கணுமே?”
“பேஷா சவைச்சுட்டு வாங்கோ. நான் அப்புறம் பாக்கிறேன்.”
திவான் உள்ளே போகத் திரும்பினார்.
“இன்னும் ராமய்யங்கார் மாறவே இல்லை. பொசுக்குனு மூக்குமேல கோபம் வந்துட்டுறதே ஓய். இரும், துப்பிட்டு வாறேன். சீவல் விக்கிற விலைக்கு, பாக்கிறவா பேசும்போதெல்லாம் துப்பிட முடியுமா?”
“உம்ம யார் ஓய் துப்பச் சொன்னா? ஜோலிய பாரும்.”
திவான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, லக்ஷ்மணன் தள்ளிச் சென்று வெற்றிலையைத் துப்பிவிட்டு வந்தார்.
“வேங்கடகிரி ராஜா வந்திருக்கார்” என்றார் வாயை அங்கவஸ்திரத்தால் துடைத்தபடி.
“கவர்னர் வரப்போகிற தகவல் முன்னாடியே வந்துடிச்சா?”
“முந்தா நேத்துதான் சொன்னாங்க. உறுதியாவும் சொல்லலை. ராத்திரி தந்தி வந்துச்சாம். ராஜா காலம்பற பொறப்பட்டு வந்துட்டாரு.”
“உள்ள யார் யார் இருக்காங்க?”
“நம்ம மகாராஜா, வடாற்காடு கலெக்டர் ரெண்டு பேருந்தான் இருக்காங்க. கவர்னர் கோவமா இருக்காராம். ஒரு என்கொயரி. பாரஸ்ட் ஆபீசரைக் கூப்பிட்டு விட்டிருக்காங்க.”
“பாரஸ்ட் ஆபீசரா, எதுக்கு?”
“காலையில கவர்னர் ரயில்ல வரும்போது, வழியில இருக்க மலையில நெருப்புப் பிடிச்சிருந்ததாம். ஒண்ணு ரெண்டு எடத்துல இல்ல, நாலஞ்சு எடத்துல நெருப்பாம். வந்து எறங்கும்போது அவர் முகம் காட்டுத் தீ மாதிரியே சிவந்து இருந்துச்சி. புதர் மாதிரி தாடி இருந்ததால கொடூரம் கொஞ்சமா வெளிய தெரிஞ்சது. இந்துக்களெல்லாம் வரவேற்பு சொல்லிப் பேசறதுக்கு ஒரு பக்கம் நின்னுருந்தாங்க. துலுக்கங்க ஒரு பக்கம் நின்னுருந்தாங்க. வரவேற்பே வேணாம்னு சொல்லிட்டு நேரா வந்துட்டாரு. அவருக்குப் பிடிக்கும்னு ‘பீப் ஷோ’வாம், அதை ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. எல்லாம் நின்னுபோச்சு.”
“பீப் ஷோன்னா?”
“முன்னபின்ன செத்தாத்தானே சுடுகாடு தெரியும் ஓய்! எனக்கு மட்டும் தெரியுமா என்ன? ஏதோ பொட்டி மாதிரி வச்சிடுவாங்களாம். அதுல பெரிய லென்ஸ் கண்ணாடி இருக்குமாம். கண்ணாடியில வரிசையா படம் வச்சா, நல்லாத் தெளிவாக் காட்டுமாம். லண்டன்ல இருந்துதான் வந்திருக்கு.”
“என்ன எழவோ?” திவானுக்குச் சலிப்பாக இருந்தது. கவர்னரின் மனநிலையை அறிந்தவுடன் நம்பிக்கை தளர்ந்தது.
“மேட்டுப்பாளையம் போறதுக்குத்தான் தனி சலூன் ஏற்பாடு செய்து வந்திருக்காரு. வழியில காட்டுத் தீயைப் பார்த்தவுடனே, என்ன நினைச்சாரோ, கேம்ப் இங்கியே போடச் சொல்லிட்டாரு. ஊர்ல இருக்க, ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், ஜெயில், தாலுக்கா ஆபீஸ் எல்லாத்தையும் பாக்கணும்னு சொல்லிட்டார். ‘கவர்னர் வருவாரு. பூ கொடுத்தமா, வரிசையில நின்னு வணக்கம் சொன்னமா, கிளம்பிடுவாரு’ன்னு எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. இப்போ இன்ஸ்பெக்ஷன் மாதிரி ஆகிப்போச்சு. மொத்தப்பேரும் பேயறைஞ்ச மாதிரி நிக்குறாங்க பாருங்க.”
‘தன் நிலையும் அதுதான், இதிலெங்கே மற்ற பேய்களைப் பார்ப்பது’ என்று திவான் யாரையும் திரும்பிப் பார்க்கத் துணியவில்லை.
“ராஜா மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வந்தாரா? காரிய அனுகூலம் எதிர்பார்த்தா?”
“என்ன ஓய் பெருசா அனுகூலம் கெடக்கு? பஞ்சத்துல கெடந்து எழுந்து, இப்பத்தான் ஊர் ஜனங்கல்லாம் கொஞ்சம் தெளிச்சியா இருக்காங்க. இதுல சர்க்காரு குஸ்தியோ கிஸ்தியோ இவ்ளோ பாக்கி, லெவி இவ்ளோ கட்டணும்னு ஓலை அனுப்பிக்கிட்டே இருக்கு. அப்படி மிரட்டினாத்தானே ஜமீனுங்களும் சர்க்காருக்கு எதிரா போமாட்டாங்க. இல்லைன்னா நாலு பொழுது போகாத பயலுக, ‘பிரிட்டிஷ் சர்க்காரை ஒழிக்கணும், பிரிட்டிஷ்காரனுங்களைக் கொல்லணும்’னு வந்தா வேட்டைக்குப் போற துப்பாக்கியை எடுத்துக் குடுப்பாங்க. இல்லை நாட்டு வெடிக்கு மருந்து கொடுத்துவிடுவாங்க. அதான் பிரிட்டிஷ் சர்க்கார் ஜமீன்க கழுத்தை இறுக்கிப் பிடிச்சிக்கிட்டே இருக்கும். அந்தந்த ஊர்ப் பசலியை எடுத்தாரச் சொல்லியிருக்காங்க, எவ்ளோ பேஷ்குஷ்* (ஜமீன்தார்கள் வருடந்தோறும் கட்ட வேண்டிய தொகை) வருவாய்ப் பாக்கி நிக்குதுன்னு பாக்க.”
திவானின் முகத்தில் அயர்ச்சி கூடியது.
“கவர்னர் வரும்போதுதானா காட்டுத் தீ வரணும்? மலையில இருக்க புல் பூண்டு காத்துக்கு ஒரசுனா தீப்புடிச்சி எரியும். கொஞ்ச நேரம் கழிச்சி அதுவா அவிஞ்சி போகும். இதுல என்ன பெருசா விசாரணைன்னு தெரியல. சாக்குப் பை மாதிரி பாரஸ்ட் ஆபீசரே மேல விழுந்துதான் நெருப்பை அவிச்சிருக்கணும்னு எதிர்பாக்கிறாங்க.”
“மெதுவா பேசு ஓய். பிரிட்டிஷ் சர்க்கார் பெரிய யானை. காது நல்லா கேட்கும் அதுக்கு.”
“வாஸ்தவம்தான். பேச்சைக் குறைக்கத்தான் வாயில வெத்தலையைப் போட்டுச் சவைக்கிறது. அதையும் கெடுக்கிறீர். பகவானே...” லக்ஷ்மணன் தழைந்திருந்த இடுப்பு சோமனை அவிழ்த்துக் கட்டிக்கொண்டு தூரத்தில் நின்றிருந்த அடப்பக்காரனைக் கூப்பிட்டார். இலைப்பெட்டியைத் திறந்து தயாராக மடித்து வைத்திருந்த வெற்றிலையை எடுத்துக் கொடுத்தான்.
வாயில் திணிக்கப் போனவர், “நீர் எம்மட்ட சேதி கேட்டீர். நீர் வந்த காரியம் சொல்லலையே?” என்று கேட்டு, வெற்றிலையை வாய்க்குள் திணித்தார்.
“இப்பம்தானே நீர் கேட்கிறீர்.”
“சரி சொல்லும்.”
“வெற்றிலை சவைத்தால் போதும், பதிலுக்கு ‘ம்’ போட வேண்டாம்.”
“ம் போடாத பேச்சில் என்ன சுவாரசியம் இருக்கப்போது?”
“நானென்ன நள தமயந்தி கதையா சொல்றேன்? சமஸ்தானத்தின் காரியமாக வந்தேன். வேறொன்னும் இல்லை.”
“என்ன காரியம்?”
“சொன்னேனே, சமஸ்தானத்தின் காரியம்.”
“இன்னும் நீர் மாறலை. வாயில் இருந்து ஒரு சொல்லைப் பிடிங்கிட முடியாதே. வந்த காரியத்தைப் பாரும். நான் நிம்மதியா வெத்தலை போடுறேன்.” முகம் கோணி நகர்ந்தார் லக்ஷ்மணன்.
கவர்னர் இருக்கும் சூழலில் சந்தித்துப் பேசினாலும் காரியம் கனியுமா? நின்ற இடத்திலேயே சிந்தனை ஓடியது.
பாரஸ்ட் ஆபீசர் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு வெளியில் வந்தார். கவர்னரைச் சந்திக்க அவசரமாகக் கிளம்பியிருக்கலாம், முழுச் சீருடையில் இல்லை. பூனை விழியும் சுருங்கிய சின்னக் கண்களும் கொண்ட அவர் முகத்திலிருந்து ஒன்றும் கண்டறிய முடியவில்லை.
ஓய்வு விடுதியின் விஸ்தாரமான அறையில் கலெக்டர், கவர்னர், வேங்கடகிரி ராஜா மூவரும் இருக்க வேண்டும். கவர்னர் அழைத்தாலும் மூவர் முன்னால் எப்படிப் பேச்சுவார்த்தை நடத்துவது? சமஸ்தானத்தின் கோரிக்கைகளை எப்படி வெளிப்படையாகச் சொல்வது? அடுக்கடுக்காய்ச் சிக்கல் கூடிக்கொண்டிருக்கிறதே?

வேங்கடகிரி ராஜா ராஜகோபால கிருஷ்ண யச்சேந்திர பகதூர் வெளியில் வந்தார். ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட மகாராஜாவுக்கு, வலிமையான தேகம் கொடுத்த பொலிவைவிட, அவரின் எளிமையும் கம்பீரமும் நிறைந்த தோற்றத்தைக் கொடுத்திருந்தது. இருபத்திரண்டு வயதிலேயே மகாராஜாவானவர். இங்கிலீஷ் கற்றுக்கொண்டதோடு, மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்த மகாராஜாக்களோடு சேர்ந்து வேட்டையாடுவது, குதிரையில் நீண்ட தூரப் பயணங்கள் செல்வது, மாலைகளில் விருந்து, இரவுகளில் ஆடல் – பாடல், மாதத்திற்கொரு முறை புதிய இடங்களுக்குப் பயணம் செல்வது என்று பிரிட்டிஷ் அதிகாரிகளைப் போலவே வாழ்பவர். பிரிட்டிஷ் சர்க்காருக்கு மிக நெருக்கம். பிரிட்டிஷ் கவர்னர்கள் அரக்கோணம் வந்தாலும், காட்பாடி, வேலூர், சித்தூர் வந்தாலும் வரவேற்க முதல் ஆளாய் நிற்பார். வேங்கடகிரிக்கு வருகிறார்கள் என்றால் சொல்லவே வேண்டாம், ஜமீனே கோலாகலப்படும்.
இப்போதிருக்கிற கவர்னர் கிரான்ட் டப்பை விசேஷ அழைப்பின் பேரில் இரண்டாண்டுகளுக்கு முன் வேங்கடகிரிக்கு அழைத்திருந்தார். வேங்கடகிரியில் ஒரு டவுன் ஹால் கட்ட அடிக்கல் அமைக்கும் விழாவையும், இந்திர மகால் என்றொரு ஓய்வு விடுதியைத் திறந்து வைக்கும் விழாவையும் வைத்திருந்தார். தன்னுடைய ஜமீனுக்கு எல்லோரும் வந்து தங்கியிருந்து மகிழ்ந்திருக்க வேண்டுமென்று நினைக்கும் மகாராஜா, மிகுந்த இறைநேயம் கொண்டவர்.
திவான் மகாராஜாவைப் பார்த்த நேரத்தில், மகாராஜாவும் திவானைப் பார்த்தார்.
“திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒளிபொருந்திய திவான் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.”
“மகாராஜாவின் வரவேற்புக்குத் தன்யனானேன்.”
“வெளியில் காத்திருக்கிறீர்கள்? நீங்கள் வந்திருக்கிற செய்தி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே?”
“அவசரம் ஒன்றுமில்லை மகாராஜா. இப்போதுதான் வந்தேன்.”
“உள்ளே வாருங்கள். வெளியில் கவர்னரின் அறையையொட்டி ஒரு அறை இருக்கிறது. அங்கு உட்காரலாம்.”
“கவர்னரைத்தான் சந்திக்க வேண்டும் மகாராஜா.”
“நானே அழைத்துச் செல்கிறேன் வாருங்கள்.”
வேங்கடகிரி ராஜா திரும்பி உள்ளே நடந்தார்.
“மகாராஜா, சமஸ்தானம் தொடர்பான கோரிக்கைகளுடன் வந்திருக்கிறேன்...”
“திருவிதாங்கூரும் எனக்கு வேண்டிய சமஸ்தானம்தான். மகாராஜா விசாகம் திருநாளின் திடீர் இழப்பைக் கேள்விப்பட்டேன். மிகச்சிறந்த அறிவாளி. இயற்கை உபாசகர். மெட்ராஸ் சென்றிருந்த சமயங்களில் அவரைச் சந்தித்திருக்கிறேன். மூலம் திருநாளும் எனக்குச் சகோதரர் போன்றவர். நாமெல்லோருமே பத்மநாபனின் தாசர்கள்தானே, வாருங்கள் திவான்.” வலுக்கட்டாயமாகச் சொல்லிவிட்டு, மகாராஜா முன்னே சென்றார்.
திவானுக்கு வியர்த்தது. பெருமூச்சொன்றை வெளியேற்றி ஆசுவாசப்படுத்திக்கொண்டு மகாராஜாவைப் பின்தொடர்ந்தார்.
மகாராஜாவைப் பார்த்தவுடன் பங்கா இழுப்பவன் தலைப்பாகையைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு எழுந்து நின்றான்.
மகாராஜா வெளியில் வந்ததைத் தூரத்தில் இருந்து பார்த்த லக்ஷ்மணன், வெற்றிலையைத் துப்பிவிட்டு ஓடோடி வந்தார். அதற்குள் இருவரும் உள்ளே செல்லவே, அவரும் பின்தொடர்ந்தார்.
மகாராஜா கவர்னரின் அறைக்குள் நுழைய, உடன் திவான் ராமய்யங்காரும் சென்றுவிட, தான் போகலாமா வேண்டாமா என்பதுபோல் தயங்கி நின்றார்.
‘வெத்தலையை ருசிக்க விடறாங்களா? போடற வெத்தலையெல்லாம் வீணாத்தான் போகுது’ மனத்துக்குள் சலித்துக்கொண்டு, வந்ததுக்கு இவனைச் சும்மா விடக்கூடாது என நினைத்தார்.
“கவர்னர் வந்தாலும் கலெக்டர் வந்தாலும் தலைப்பாகையைக் கழட்டுவியா?”
பங்கா இழுப்பவனைப் பார்த்துக் கேட்டார்.
“சாமி...”
“காது மந்தமாடே?”
“சாமி...”
“சாமிதான்டா. கேட்டதுக்குப் பதில சொல்லு.”
“எழுந்து நின்னாப் போதும் சாமி.”
“இப்ப ஏன் தலைப்பாகையைக் கழட்டினாய்?”
“இப்ப போனது எல்லாம் நம்ம சாமிங்க சாமி.”
“தெளிவாத்தான் இருக்கே. கவர்னருக்குப் பங்கா இழுக்கிறவன்னாலும் ஊருக்குள்ள உனக்கு என்ன மரியாதைன்னு தெரிஞ்சிருக்கியான்னு பாத்தேன். வேகமா இழு.”
லக்ஷ்மணன், தழைந்த சோமனை மீண்டும் இழுத்துக் கட்டிக்கொண்டு வெளியேறினார்.
“ஹிஸ் எக்ஸலென்ஸி, இவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் ராமய்யங்கார்.”
திவான் வணங்கினார்.
“ஹிஸ் எக்ஸலென்ஸி மகாராஜா விசாகம் திருநாள் மறைவுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு அணுக்கமான நட்புறவை விரும்பியவர்.”
“உண்மை யுவர் எக்ஸலென்ஸி.”
“அடுத்த மகாராஜா பதவியேற்றாரா?”
“யெஸ் யுவர் எக்ஸலென்ஸி. ஒரு மாதம் ஆகிறது.”
“தங்களைச் சந்திக்க வெளியில் காத்திருந்தார். நான்தான் அழைத்து வந்தேன் யுவர் எக்ஸலென்ஸி.” வேங்கடகிரி மகாராஜா இடையில் சொன்னார்.
“திவான் இவ்வளவு தூரம் வருகை தரக் காரணம்?”
தன்னைச் சந்திக்க வரச் சொன்னதாகவே காட்டிக் கொள்ளாமல் கவர்னர் பேசத் தொடங்கியதில் திவான் திகைத்தார்.
“சமஸ்தானத்தின் செய்தியோடு வந்திருப்பதாகச் சொன்னார்.”
“ஓ, அப்படியா, சொல்லுங்கள் மிஸ்டர் ராமய்யங்கார்.”
“திருவிதாங்கூர் மகாராஜா ஹிஸ் எக்ஸலென்ஸி மூலம் திருநாள், யுவர் எக்ஸலென்ஸியைச் சந்தித்து, பேரியாற்று அணை தொடர்பாகப் பேசுவதற்கு என்னை அனுப்பியுள்ளார்.”
“யெஸ், சொல்லுங்கள்.”
“பிரிட்டிஷ் ரெசிடென்ட் ஹிஸ் எக்ஸலென்ஸி ஹானிங்டனுடன் நடந்த பேச்சு வார்த்தையில் எங்களின் கோரிக்கைகளை எடுத்துச் சொல்லியிருந்தோம். மகாராஜா விசாகம் திருநாளின் திடீர் மறைவுக்குப் பின்னால் பேச்சு வார்த்தையில் தேக்கம் வந்துவிட்டது. ரெசிடென்ட்டும் லெப்டினென்ட் பென்னி குக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் மிகுந்த வேகம் காட்டுகிறார்கள். அணை கட்டும் திட்டத்தை ஒத்திப்போடுவதாகவோ, ஒத்துழைப்பு தராமல் நாங்கள் காலம் தாழ்த்துவதாகவோ யுவர் எக்ஸலென்ஸி தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்பதை யுவர் எக்ஸ லென்ஸியிடம் தெளிவுபடுத்தவே என்னை இந்த நேர் சந்திப்புக்கு அனுப்பினார்கள்.”
“குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இன்னும் என்ன சிக்கல் இருக்கிறது? நான் மெட்ராஸ் பிரசிடென்சிக்கு கவர்னராக வந்து நான்காண்டுகளாகிவிட்டது. வந்ததிலிருந்து பேச்சுவார்த்தைதான்.”
“ஓரளவுக்குப் பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது யுவர் எக்ஸலென்ஸி. ஹிஸ் எக்ஸலென்ஸி மகாராஜா சில கோரிக்கைகள் சொல்லியுள்ளார். எட்டாயிரம் ஏக்கர் நிலம் கொடுக்கப்போகிறோம். பிரதி உபகாரமாக...”
“பிரதி உபகாரமாக பிரிட்டிஷ் பேக்டரி இருக்கும் அஞ்சு தெங்கு கோட்டையையும் தலைச்சேரியையும் கொடுக்க முடியுமா? இடம் கொடுக்கிறீர்கள், அதற்குரிய விலையைக் கேட்கலாம். குத்தகைத் தொகை கேட்கலாம். அதுதானே நடைமுறை?”
‘தன் வருகைக்குக் காரணம் தெரியாதவர் போலவும், என்ன கோரிக்கை என்பதறியாதவர் போலவும் காட்டிக்கொண்டவர், ஒரு கேள்வியில் பிரச்சினையின் முடிச்சைக் கத்தரித்துவிட்டாரே. இருபத்தைந்தாண்டுகள் சர்க்கார் உத்தியோகங்களில் இருந்தாலும் ஆட்சியாளர்களை மதிப்பிடுவதில் தோற்றுத்தான் போகிறோம்’ திவான் வியந்தார்.
“மகாராஜா, சொல்லுங்கள்... உங்கள் ஊர் வழக்கமென்ன? ஓரிடத்தை அரசாங்கம் கேட்கிறது என்றால் விலைக்கோ குத்தகைக்கோ விடுவதுதானே வழக்கம்? அதை விட்டு, நாங்கள் தண்ணீர் கொடுத்தால், நீங்கள் உங்கள் பேக்டரியைக் கொடுங்கள் என்று கேட்க முடியுமா?”
வேங்கடகிரி மகாராஜாவுக்குப் பதில் சொல்வதில் சங்கடமிருந்தது. இருதரப்பும் தனக்கு வேண்டியிருப்பதில் தயங்கினார்.

“பிரிட்டிஷ் சர்க்காருக்கு வருவாய் இருப்பதால், தங்களுக்கும் வருவாய் தரும் உபகாரத்தைக் கேட்கலாம் என யோசித்திருப்பார்கள்” மையமான பதிலொன்றைச் சொன்னார் மகாராஜா.
“பிரிட்டிஷ் சர்க்காருக்கு இதிலென்ன வருவாய் இருக்கிறது? இந்தத் திட்டமே வருவாயைத் திட்டமிட்டு யோசித்ததல்ல. வறட்சியில் ஒவ்வோராண்டும் வாழ்வா, சாவா எனத் தத்தளிக்கும் மதுரா டிஸ்ட்ரிக் மக்களைக் காப்பாற்றத்தான். இதில் திருவிதாங்கூருக்கு நேரடியாகத் தொடர்பில்லை. பெரியாற்றுத் தண்ணீர். மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்து ஓடிவருகிறது. திருவிதாங்கூருக்கும் ஆதாரமான பெரிய நதி பெரியாறுதான். நீங்கள் பயன்படுத்தியது போக மீதமுள்ளது கடலுக்குப் போகிறது. கடலுக்கு வீணாய்ப் போகும் நீரைக் கிழக்கே திருப்பி, இருபத்தைந்து லட்சம் மக்களின் வாழ்க்கையை வளப்படுத்தக் கேட்கிறோம். உலகம் முழுக்கவே இயற்கை வளங்களை அரசியல் எல்லைகளின் மூலம் தடுக்கப் பார்ப்பதும், கட்டுப்படுத்துவதும் காலாவதியாகிவருகிற போக்கு இருக்கிறது. பிரிட்டிஷ் பேரரசியின் பெருமைமிகு குடையின்கீழ் நடக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின்மேல் அன்பு கொண்டது திருவிதாங்கூர் சமஸ்தானம். உங்களுடன் இணைந்து நிற்கவே நாங்கள் விரும்புவோம். நீங்களும் அந்நடைமுறையைப் பின்பற்றுங்கள். அஞ்சு தெங்கு, தலைச்சேரி... எல்லாம் மறந்துவிடுங்கள். இடத்திற்கு என்ன குத்தகை அல்லது விலை கேட்கிறீர்கள், அதைச் சொல்லுங்கள்.”
கிரான்ட் டப்பின் மெலிந்த குரல் உச்சஸ்தாயியில் கூச்சலிடுவதைப்போல் இருந்தது. அவரின் உறுதியான சொற்களைப் பிரதிபலிக்க குரல் ஒத்துழைக்கவில்லை.
கிரான்ட் டப்பின் தந்தை, ஜேம்ஸ் கிரான்ட் டப் புகழ்மிகு எழுத்தாளர். கீழைத் தேயத்தினைப் பற்றிய நற்சிந்தனை நிரம்பப் பெற்றவர். ‘தி ஹிஸ்டரி ஆப் மராத்தாஸ்’ என்றொரு அரிய நூலை எழுதியவர். கிரான்ட் டப்பின் மாமனாரும் எழுத்தாளர். அரசியல் செல்வாக்கு, இலக்கியப் பின்புலம் இரண்டும் கலந்த அருமையான கலவை இருந்தாலும் கிரான்ட் டப்பின் அரசியல் வரைபடம் ஏற்ற இறக்கங்கள் கொண்டதாகவே அமைந்தது. பல்துறை ஞானம் கொண்ட அவரால், கவனிப்புப் பெறும் பேச்சாளராகவோ, பாராளுமன்றவாதியாகவோ சோபிக்க முடிந்ததில்லை. மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர் பதவி கிடைத்தவுடன், அவரின் நண்பர்கள் ‘இருட்டில் தள்ளப்பட்ட மெட்ராஸ் பிரசிடென்சி’ என்று கேலி பேசித்தான் அனுப்பி வைத்தார்கள். நிறைய தகவல்கள் தெரிவதாலேயே அவரால் தீர்க்கமாகப் பேச முடியாமல் போகும் பலவீனம் கொண்டவர். சில நேரங்களில் அசாத்தியமான தெளிவுடன் பேசுவார். இன்று அப்படியொரு அசாதாரணமான நேரம்.
திவான் பதில் சொல்வதறியாமல் அமைதியாக இருந்தார்.
கவர்னருக்கு அதிகம் பேசியதால் வியர்த்ததோ என்னவோ, கைக்குட்டையை எடுக்கப் பார்த்தார். அவரின் நோக்கம் புரிந்துகொண்ட மகாராஜா, உதவியாளனை அழைக்கலாமா என முயற்சி செய்தார்.
கவர்னர் அருகிலிருந்த கயிற்றைப் பிடித்திழுத்தார். வெளியில் வெண்கல மணி அடிக்கும் சத்தம் உள்ளே கேட்டது.
ஓடிவந்த உதவியாளன், கைக்குட்டையை எடுத்து எதிரிலிருந்த நாற்காலியில் வைத்துவிட்டு வெளியேறினான்.
“கண்பார்வையில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது?”
திவான் அருகில் குனிந்து மெதுவாகச் சொன்னார் வேங்கடகிரி மகாராஜா.
‘என்னது?’ அதிர்ந்துபோய்ப் பார்த்தார்.
கவர்னர் முகம் துடைத்து நிமிர்ந்துவிட்டதில் மகாராஜா சுதாரித்தார்.
‘பத்மநாபா...’ திவான் மனசுக்குள் இறைவனை அழைத்தார். ‘உண்மையில் நாம் இன்று காலை கவர்னரின் கண்களுக்குத் தெரியவில்லையோ? யாரையுமே பார்க்காததுபோல் அவர் நடந்து சென்றதன் காரணம் இதுதானோ?’
“பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் நிலை இதுதான். இதற்குமேல் விவாதிக்க ஒன்றுமில்லை மிஸ்டர் திவான்.”
கவர்னரின் குரல் கேட்டு இயல்புக்குத் திரும்பிய திவான், “ஹிஸ் எக்ஸலென்ஸி மகாராஜாவுடன் கலந்து பேசிவிட்டு யுவர் எக்ஸலென்ஸிக்குப் பதிலளிக்க விரும்புகிறேன். இத்துடன் இன்னொரு கோரிக்கையும் இருக்கிறது.”
“சொல்லுங்கள்.”
“தொடக்கத்திலிருந்தே பிரசிடென்சி சொல்லும் தகவல்களைத்தான் நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அணை கட்ட இருக்கிற இடம் எது, எப்படி அணை கட்டப்போகிறார்கள்? எவ்வளவு தண்ணீர் வருஷத்திற்கு எடுக்கப் போகிறீர்கள், திருவிதாங்கூருக்கு அதனால் இழப்பு இருக்கிறதா? அணை கட்டுவது திருவிதாங்கூருக்குப் பாதுகாப்பானதா... இவையெல்லாம் பற்றி எங்கள் இன்ஜினீயர்களும் ஆய்வு செய்வதுதான் சரியென்று நினைக்கிறோம். எங்களுடைய குழு உறுப்பினர்களுடன் பிரசிடென்சியின் ராயல் இன்ஜினீயர்களையும் யுவர் எக்ஸலென்ஸி அனுப்பி வைத்தால், பேரியாற்று அணை பற்றிச் சம்பந்தப்பட்ட இருதரப்புக்கும் தெளிவு பிறக்கும்.”
“எங்களுக்குத் தெளிவான பிறகுதான் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளோம் மிஸ்டர் திவான்.”
“யுவர் எக்ஸலென்ஸி மன்னிக்க வேண்டும். புரிதலுக்காகச் சொன்ன வார்த்தை.”
“உங்களுக்குத் தெளிவு பிறக்குமென்று சொல்லுங்கள்.”
“எங்கள் தெளிவுக்காகத்தான் கேட்கிறோம் யுவர் எக்ஸலென்ஸி.”
“ராயல் இன்ஜினீயர் பலர் சரிபார்த்திருக்காங்களே.”
“எங்கள் தரப்புக்கும்...”
“என்ன செய்யலாம் மகாராஜா பகதூர்?”
“அவர்கள் அமைக்கும் குழு சென்று பார்த்துவிட்டு வந்துசொன்னால் அவர்களுக்கு ஒரு நிறைவிருக்கும் யுவர் எக்ஸலென்ஸி.”
“நியாயம்தான்...”
கவர்னர் யோசித்தார்.
“திவானின் கோரிக்கைப்படி இரண்டு ராயல் இன்ஜினீயர்களை உங்கள் குழுவுடன் அனுப்புகிறேன். மீண்டும் சொல்கிறேன், தெளிவு உங்களுக்குத்தான், எங்களுக்கல்ல. உங்களுக்கு என்னென்ன தெரியவில்லையென்று சொல்கிறீர்களோ, எல்லாம் ஆய்வுசெய்து தெரிந்துகொள்ளலாம். மற்றபடி திட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் இந்திய செக்ரட்டரி அங்கீகரித்து அனுமதித்த திட்டமது.”
“யுவர் எக்ஸலென்ஸி...” திவான் மிரண்டார்.
“எதற்கு அஞ்சுகிறீர்கள்? முதலில் போய் ஆய்வு செய்யுங்கள். மாற்றம் இருக்குமென்று முதலிலேயே ஏன் தீர்மானித்துப் பேசுகிறீர்கள்?”
“மாற்றம் தேவைப்படின்...”
“ஏற்க முடியாது.”
கவர்னரின் குரல் கீறிச்சிட்டது.
“அதுமட்டுமல்ல, இன்றிலிருந்து இருபது நாள்களுக்குள் உங்கள் ஆய்வறிக்கை எனக்கு அனுப்ப வேண்டும்.”
“இருபது நாள்களுக்குள்ளா...” திவானுக்குத் தலைசுற்றியது.
- பாயும்