
மரத்தடிகளில் ஊறப்போட்டிருந்த தேங்காய் மட்டைகளிலிருந்து சிலர் நார் உரித்தெடுத்தனர். சிலர் தேங்காய் மட்டைகளிலிருந்து உரித்த நாரினால் கயிறு திரித்துக்கொண்டிருந்தனர்.
அரபிக் கடலின் நீல வண்ண அலைகள் நான்கு பாதங்களைத் தழுவுவதும், விலகிச் செல்வதுமாக இருந்தன. தூரத்தில் தெரியும் சலங்குகளையும் கப்பல்களையும் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தனர் திருவிதாங்கூர் அரசர் மூலம் திருநாளும், வடசேரி கார்த்தியாயினியும். ஆங்காங்கு நின்றிருந்த நாயர் படையின் வீரர்கள், இடையில் குறுவாள் மின்ன, பார்வையின் கூர்மையினால் பாதுகாப்பை உறுதி செய்தபடி காத்திருந்தனர்.
இருபது வயதை எட்டிப் பிடித்துவிடத் தயாராகிவிட்ட கார்த்தியாயினிக்கு, வயது தன் பருவத்தின் செழுமையை உடலெங்கும் படரவிட்டிருந்தது. விரிந்தகன்ற தோள்கள் அவள் வயதைக் கூட்டிச்சொல்ல முயல, குழந்தைமை மாறாமல் மென்சிரிப்புடன் விகசித்த அவளின் கண்கள் வயதைக் குறைக்க முயன்றன. அடர்ந்து நீண்டிருந்த கூந்தலை இரண்டாக வகிர்ந்து நுனியில் முடிச்சிட்டிருந்தாள். அவளின் முழங்கை வரை நீண்டிருந்த குப்பாயம், நாயர் வீட்டுப் பெண்களின் புது வழக்கம் என்பதைச் சொல்லின. மேலாடை அணிவதை அவள் தரவாட்டுப் பெண்கள் மரியாதைக்குரிய செய்கையாக ஏற்றுக்கொள்வதில்லை. வடதிசைக் காற்று விலக்கிவிடும் அவளின் இளம் மஞ்சள் முண்டினை, தென்திசைக் காற்று சரி செய்தது. மையத்தை விட்டு ரசிக்கும் இடைவெளியில் விலகியிருந்த நீண்ட புருவங்கள் எதிரெதிர் அமர்ந்து பேசப் போகும் ஆயத்தத்தில் இருந்தன.
அரசர் மூலம் திருநாள் இடையில் வெண்பட்டு அணிந்து, நீண்ட அங்கவஸ்திரம் மார்பில் புரள, அரசருக்கான அலங்காரங்களைத் தவிர்த்து, தன் மனத்துக்கினியாளைப் பார்க்கும் பரவசமே உயரிய ஆபரணமாக எண்ணி அமர்ந்திருந்தார்.
பக்குவப்படுத்துவதற்காக வெயிலில் இடப்பட்ட மீன்களில் இருந்த உப்பின் வாசம் கடல்காற்றில் கலந்திருந்தது. தொலைவில் மீன் வலைகளை உலர்த்திக்கொண்டிருந்த மீனவர்கள் பாடுவதுபோலவே பேசிக்கொண்டிருந்தார்கள். மீனவர்களின் உச்சரிப்பில் சொற்கள் வழக்கமான ஒலியளவை நீட்டிக்கொண்டன. தமிழும் மலையாளமும் கலந்து புதுவிதமான உச்சரிப்பு அவர்களின் பேச்சில் இருந்தது. மூலம் திருநாள் இசைபோல் ஒலித்த மீனவர்களின் ஒலிப்பில் மனம் ஒன்றினார்.
மரத்தடிகளில் ஊறப்போட்டிருந்த தேங்காய் மட்டைகளிலிருந்து சிலர் நார் உரித்தெடுத்தனர். சிலர் தேங்காய் மட்டைகளிலிருந்து உரித்த நாரினால் கயிறு திரித்துக்கொண்டிருந்தனர். ஊறிய தேங்காய் மட்டைகளிலிருந்து கிளம்பிய வாசம், காற்றின் வேகத்திற்கேற்ப அவர்கள் இருவரது சுவாசத்திலும் கலந்தது.
தன்னுடைய இடப்பக்கம் தெரிந்த அஞ்சுதெங்குக் கோட்டைக் கொத்தளத்தின் மீதிருக்கும் வீரர்கள் கையில் துப்பாக்கியுடன் நடந்துகொண்டிருப்பது, மூலம் திருநாளுக்கு மங்கலாகத் தெரிந்தது. மலபார் பகுதியான அஞ்சு தெங்கில்தான் பிரிட்டிஷார் முதன்முதலில் கோட்டை கட்டி, தங்கள் வர்த்தகத்தைத் தொடங்கி னார்கள்.

அஞ்சுதெங்கு சின்னஞ்சிறிய மீன்பிடித் துறைமுகம்தான். அரபிக் கடலில் ஐரோப்பாவிற்கும், பம்பாய்க்கும் கோவாவிற்கும் பயணப்படுபவர்களையும், அங்கிருந்து வருபவர்களையும் வரவேற்கும் திறந்த நெடுங்கதவாய் இருந்தது அஞ்சு தெங்கின் அமைவிடம். அதனாலேயே ஐரோப்பியர்கள் அதனால் கவர்ந்திழுக்கப்பட்டார்கள். வர்த்தகப் பொருள்களை விற்பனைக்கு வாங்கிச்செல்லும் போர்த்துக் கீசியர்கள் தங்களின் செல்வாக்கு நிரம்பிய கோவாவுக்குச் செல்ல முடியும். பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கும் மொரீஷியஸுக்கும், பிரிட்டிஷ்காரர்கள் மெட்ராஸுக்கும் பம்பாய்க்கும் செல்லலாம். எல்லாவற்றையும்விட ஆற்றின் கல்லில் (அட்டிங்கல்) விளையும் மிளகு, அந்நிய தேசத்து வர்த்தகர்களை ஈர்த்தது.
அஞ்சுதெங்கிலிருந்து ஆறு மைல் தூரத்தில் இருக்கிறது ஆற்றின்கல் கோட்டை. நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்புவரை ஆற்றின்கல் அரசியின் கட்டுப்பாட்டில் இருந்தது அஞ்சுதெங்கு. அரசி என்றால் அவருக்குத் தனி தேசம் கிடையாது. குடிகள் கிடையாது. ஆனாலும், அவருக்கென்று ஒரு கோட்டையும் அரசி என்ற பட்டமும் இருந்தன. திருவிதாங்கூர் மகாராஜாவின் மனைவிகளுக்குக் கூட அரசி பட்டம் கிடையாது. அவர்கள் வெறும் ‘அம்மாச்சிகள்’ தான். ஆற்றின்கல் அரசிகளுக்குப் பிறக்கும் பெண்களையே திருவிதாங்கூர் மகாராஜாக்கள் மணப்பதால் ஆற்றின்கல் பெண்களுக்கு அரசி என்ற தனித்த கௌரவம் இருந்தது. திருவிதாங்கூர் மகாராஜாக்களுக்குப் பெண் கொடுக்கும் அரண்மனை என்று ஆற்றின்கல் அரண்மனைக்கும் தனிப் புகழ்.

அஞ்சுதெங்கின் வசதியான துறைமுகத்தைப் பயன்படுத்திக்கொள்ள முயன்ற ஐரோப்பிய வர்த்தகர்கள் ஆற்றின்கல் அரசியை அணுகினர். ஆற்றின்கல் அரசியோ டச்சுக்காரர்களும் போர்த்துக்கீசியர்களும் கொடுக்கும் பரிசுப் பொருள்களை ஏற்றுக்கொண்டு, அவர்கள் கோரும் உரிமைகளை வாரி வழங்கினார். தங்கள் தேசத்தின் மிளகை உள்ளூர் வியாபாரிகளும் விவசாயிகளும் விற்றுப் பலன் அடைய விடாமல், அந்நிய தேசத்து வர்த்தகர்களுக்குச் சகாயம் செய்தார்.
ஏற்கெனவே இந்தியாவில் தங்களின் வர்த்தகத்தின் மூலம் நிலைகொண்டுவிட்ட டச்சு, போர்த்துக்கீசிய, பிரெஞ்சுக்காரர்களுடன் பிரிட்டிஷாரால் போட்டியிட முடியவில்லை. இந்தியாவில் இருந்த கடும் போட்டியில் தாக்குப்பிடிக்க முடியாத பிரிட்டிஷார் தங்களுக்கென்று போட்டியில்லாத ஒரு துறைமுகத்தைத் தேடினார்கள். அந்தத் தேடுதலில் அவர்கள் கண்டடைந்ததுதான் சோழமண்டலக் கடற்கரை. (மெட்ராஸ் மெரினா கடற்கரை) அங்கு கட்டப்பட்டதுதான் செயின்ட் ஜார்ஜ் கோட்டை. சோழமண்டலக் கடற்கரையில் காலூன்றிய பிறகு பிரிட்டிஷார் தம் தந்திரத்தாலும் பலத்தினாலும் அஞ்சுதெங்குக் கோட்டையை டச்சுக்காரர்களிடமிருந்து கைப்பற்றிக் கொண்டனர்.
பிரிட்டிஷ்காரர்கள் விலையுயர்ந்த பரிசுகள் தருவதற்கு முன்வரமாட்டார்கள். அதற்கு முக்கிய காரணம், பிரிட்டிஷ் வர்த்தகர்கள் பிரிட்டிஷ் அரசரின் பிரதிநிதிகள் அல்லர். பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனியில் பிரெஞ்சு அரசர் பங்குதாரர். அதைப்போலவே டச்சுக் கம்பெனிக்கு டச்சு அரசரும், போர்த்துக்கீசிய கம்பெனிக்குப் போர்த்துக்கீசிய அரசரும் பங்குதாரர்கள். பிரிட்டிஷ் அரசரைப் பொறுத்தவரை தொடக்கத்தில் இருந்தே கம்பெனியின் பங்குதாரராய் இருந்ததில்லை. அரசரின் பெயரில் வர்த்தகம் நடக்கும்போது, தாராளமாகப் பரிசுகளை அள்ளித் தருவார்கள். பிரிட்டிஷாருக்கு அந்த வாய்ப்பில்லை யென்றாலும் வாய் வார்த்தையில் காரியம் சாதிக்கும் தந்திரம் இருந்தது. ‘பிரிட்டிஷ்காரர்கள் கடல் கொள்ளையர்கள்’ என்று போர்த்துக்கீசியர்களும் பிரெஞ்சுக்காரர்களும் ஆற்றின்கல் அரசியிடம் புகார் சொன்னாலும், பிரிட்டிஷாரை ஆற்றின்கல் அரசி நம்பினார்.
சதுர வடிவில் மிக நீண்ட நான்கு மதில்களால் சூழப்பட்ட இந்தக் கோட்டைதான், பிரிட்டிஷாருக்கு இந்திய வர்த்தகமென்னும் புதையலையெடுக்கும் கடலின் நுழைவாயிலாக இருந்தது. கற்களால் உயரிய கோட்டையொன்றைக் கட்டிக் கொத்தளத்தின்மேல் பாதுகாப்புக்கு வீரர்களையும் பீரங்கிகளையும் நிறுத்திவிட்டால் போதும், உள்ளூர் மக்களும் ராஜாவும் ஒதுங்கி விடுவார்கள். அஞ்சுதெங்கு அப்படித்தான் ஆற்றின்கல் அரசியின் ஆடம்பர விளையாட்டின் விளைவாக பிரிட்டிஷாரின் கைகளுக்கு வந்தது.
தூரத்தில் நின்றிருந்த அஞ்சுதெங்குக் கோட்டையைப் பார்த்ததில் மூலம் திருநாளின் சிந்தனை, மாமா விசாகம் திருநாள் சொல்லிய செய்திகளுக்குச் சென்று திரும்பியது.
கோட்டை கொடுக்கும் பலனுக்கு நேரெதிராக அதன் தோற்றம் இப்போது சீர்குலைந்திருந்தது. உயர்ந்த அதன் மதில்சுவர்களில் பாசி படர்ந்து, கறுத்து, கோட்டையின் வயதைச் சொல்லியது.
“ஆற்றின்கல் அரசியிடம் பேசிப் பேசியே மிளகுக்கும் புகையிலைக்கும் ஏகபோக உரிமையை வாங்கிக்கொண்டார்கள் பிரிட்டிஷார். அரசியின் தயவில் உள்ளூர் விவசாயிகளை ஏமாற்றி, மொத்தக் கொள்முதல் செய்தார்கள். இப்போது பிரிட்டிஷாரின் முழுக் கட்டுப்பாட்டில் கோட்டை இருக்கிறது.” நினைவுகளின் தொடர்ச்சியாய் பேச்சைத் தொடங்கினார் மூலம் திருநாள்.
“அரசிகள் என்பதால் பரிசுப் பொருளுக்கு எளிதாக மயங்கியிருப்பார்களோ மகாராஜா?”
“அரசிகளைக் குறைசொல்ல முடியாது. இந்தியா முழுக்க ஐரோப்பியர்கள் எத்தனை பேக்டரிகளைக் கட்டி வைத்திருக்கிறார்கள். அங்கெல்லாம் அரசிகளா இருக்கிறார்கள்? இடத்திற்கு ஏற்ற தந்திரங்களைச் செய்யத் தெரியும் ஐரோப்பியர்களுக்கு. அது வர்த்தக குணம். ஆட்சியாளர்களின் குணமல்ல. நம் கைவிட்டுப்போன அஞ்சுதெங்கை மீண்டும் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைக்க வேண்டும். அதனால்தான் பேரியாற்றில் அணை கட்டுவதற்கு மேல்மலையில் இடம் தர வேண்டுமானால், அஞ்சுதெங்கையும் தலைச்சேரியையும் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை மகாராஜா விசாகம் சொல்லியிருந்தார். முன்பிருந்த திவான் மாதவ ராவின் முயற்சியில் மிளகுக்கான ஏகபோக உரிமை ரத்து செய்யப்பட்டிருந்தாலும், கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகர்கள் பழைய வழியில் இன்னும் கள்ளத்தனம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.”
“பிரிட்டிஷாருக்கு லாபம் தரும் இந்தப் பேக்டரி இருக்கும் ஊரை விட்டுத் தருவார்களா?”
“தருவதற்கு வாய்ப்புகள் குறைவுதான். காரணம், அஞ்சு தெங்கின் பேக்டர் ஒருத்தன், ஆற்றின்கல் அரசிக்கு வருடாந்திர நசர் (பரிசுப் பணம்) எடுத்துச் செல்லும்போது, ஒரு கலகம் நடந்தது. எட்டு வீட்டில் பிள்ளைமார்களும் துலுக்கர்களும் சேர்ந்து கோட்டைத் தலைவனைக் கொன்றுவிட்டார்கள். அதற்கு ஈடாக, தலைச்சேரியில் தேவாலயம் கட்டவும், கோட்டை கட்டவும் அனுமதியும் இலவசமாக மரங்களையும் வாங்கிக்கொண்டாலும், அவர்களுக்கு உள்ளுக்குள் இன்னும் அந்தப் பழிவுணர்ச்சி இருக்கிறது. ஆனால் நாமும் விட்டுக்கொடுக்க முடியாது.”
“சேர்த்தலை கார்த்தியாயினி கோயிலையும் கேட்டிருக்கிறீர்களாம்? எப்படி விட்டுத் தருவார்களோ?”
“பத்மநாபனின் சேவகர்களான எங்களுக்குக் கார்த்தியாயினி தாயின் ஆசீர்வாதம் வேண்டுமல்லவா? பத்மநாபசாமியைப் பிரதிஷ்டை செய்துவிட்டு, வில்வமங்கலத்து சாமியார் ஆலப்புழை சென்றுகொண்டிருந்தபோது, சேற்றில் தலைபுதைந்திருந்த தேவியின் பிரதிமையை எடுத்து, பிரதிஷ்டை செய்தாராம். சக்திமிக்க அன்னை அவள். சேர்த்தலையையும் பிடித்துக்கொண்டு பிரிட்டிஷ் சர்க்கார் நம் இறை உணர்வுடன் விளையாடுகிறது. பேரியாற்றில் அணை கட்ட அவர்கள் விருப்பத்துடன் இருக்கிறார்கள். அதனால் வழிக்கு வந்துதான் ஆக வேண்டும்.”
“பிரிட்டிஷ் சர்க்கார் மலைப்பாம்பு போல், இருந்த இடத்திலிருந்தே இரையை விழுங்கும். பார்ப்போம், எப்படிப் போகிறதென்று. திடீரென்று அஞ்சு தெங்கு கிளம்பி வரச்சொல்லி, வீரனை அனுப்பியிருந்தீர்கள். எதற்கு அஞ்சுதெங்கு என்று யோசிக்கக்கூட நேரமில்லை ராஜா. ஏன் இந்தத் திடீர்ப் பயணமும் அழைப்பும்?”
“நமக்கொன்று வேண்டும் என நினைத்துவிட்டால், அதைப் பற்றியே எண்ணிக்கொண்டிருக்க வேண்டும். பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். சேர்த்தலைக்குச் செல்லத்தான் கிளம்பினேன். மனம் அஞ்சுதெங்கை நோக்கிப் பயணப்பட்டுவிட்டது. பரபரப்பான துறைமுகம். அமைதியான ஊர். இந்த ஊரின் முகமே இப்போது மாறிவிட்டது கார்த்தி.”
கார்த்தியாயினி அமைதியாக இருந்தாள். அவளுடைய மனமும் தெளிவில்லாமல் அலைபாய்ந்தது.
மூலம் திருநாளுடனான இந்த அன்புக்குப் பெயரென்ன? அவருடனான ஆத்மார்த்தமான அன்பை எண்ணி, திருமணம் செய்துகொள்ளாமல் காலம் கடத்துவது எப்படி? நாயர் வீட்டுப் பெண்ணுக்குத் தன்னுடைய துணையைத் தேர்வு செய்துகொள்ளும் சுதந்திரம் இருக்கிறது. திருவிதாங்கூர் அரசருக்கும் தடையில்லை. ஆனாலும் மகாராஜாவின் தயக்கத் திற்குக் காரணம் புரியவில்லை.
“தர்பார் மகலே நிறைந்திருந்த போதும், நீ ஒருத்தி இல்லாமல் வெறுமையாகத்தான் இருந்தது. மகாராஜாவாகப் பதவியேற்ற நாளிலும், தனிமையும் வெறுமையும் நிரம்பிய உணர்வோடு இருந்த ஒரே மகாராஜா நானாகத்தான் இருப்பேன்.”
“வெறுமை உங்கள் பதவியேற்பு உரையிலேயே இருந்தது மகாராஜா.”
“என் பிறப்பிலேயே தனிமை என்னைப் பிடித்துக்கொண்டதே? பதினொரு நாள் குழந்தையை விட்டுத் தாய் இறந்துபோகும் துரதிர்ஷ்டத்துடன் தானே நான் பிறந்தேன்.”
“அது உங்கள் அம்மையின் துரதிர்ஷ்டம். பெற்ற குழந்தையின் பசியாற்ற முடியாமல் இறந்துபோகும் தாய் அபாக்கியவதி. முலைப்பாலூட்ட தாய் ஒருத்தியால்தானே முடியும்? திருவிதாங்கூர் அம்மாச்சிகளுக்கு நேரும் அகால மரணத்திற்கான காரணம் புரியவில்லை. ஆனாலும் தர்பார் மகலில், முக்கியஸ்தர்கள் கூடி, சமஸ்தானத்தின் மகாராஜாவாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த தருணத்தில் நீங்கள் வெறுமையும் துயரமும் ததும்பப் பேசியது சரியில்லை. ஒவ்வொரு உணர்வும் இயற்கையானதுதான் என்றாலும் வெளிப்படுத்த ஏதுவான தருணமும் முக்கியம்தானே மகாராஜா? துக்க வீட்டில் சென்று சிரித்துக்கொண்டிருந்தால், சிரிப்பவருக்கு என்ன பெயர் சூட்டுவார்கள்?”
“கார்த்தி, என் அம்மை என்னைவிட்டுச் சென்றதுகூட எனக்குத் துயரமல்ல. காரணம், நான் அம்மையைப் பார்த்ததும் இல்லை; அவர் அன்பை அனுபவித்ததும் இல்லை. என் மாமா, மகாராஜா விசாகத்தின் திடீர் மரணத்தை என்னால் ஏற்க முடியவில்லை. நிலைகுலைந்து விட்டேன். எனக்கு எல்லாமுமாக இருந்தவர் திடீரென ஒரு நாளிரவில் என்னுடன் இல்லையென்பதை என்னால் ஏற்கவே முடியவில்லை.”
“மகாராஜா பதவி கிடைத்ததில் மகிழ்பவர்களைத்தான் பார்க்க முடியும். நீங்களோ இளம் வயதில் மகாராஜாவாகும் வாய்ப்புக் கிடைத்தும் அதில் நிறைவடையவில்லை.”
“என் சகோதரன் அஸ்தம் திருநாளே இந்த அரியணையில் அமர வேண்டியவன். காலவேளை பார்க்காமல் அளவுக்கு அதிகமாகப் படித்ததால் புத்திபேதமுற்ற அவனையும் காலம் என் அம்மையிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது.”
கலங்கி நின்ற மூலம் திருநாளின் கண்களைச் சந்தித்தாள் கார்த்தியாயினி. கடந்த காலத்தின் துயரங்களைத் தன்மீது கருணை கொண்ட இருவிழிகளுக்குக் கடத்திவிடும் பரிதவிப்பு அதற்குள் இருந்தது.
“அரசாளும் மகாராஜா, சுயவாழ்வின் துயரங்களுக்குக் கலங்கக் கூடாது. கலங்குவது கால்நாழிகை நேரமென்றாலும், சமஸ்தானத்தின் பல நாழிகைகள் வீணாகலாம். உங்கள் சிந்தனை நிர்வாகத்தின் மீதுதான் இருக்க வேண்டும்.”
“நான் பேசி முடிக்கும் தருணம் நீ அன்று வெளியேறியபோது மனம் கலங்கியதை வார்த்தைகளால் சொல்ல முடியாது கார்த்தி.”
“தங்களைச் சங்கடத்திற்கு உள்ளாக்கக்கூடாது என்பதற்காகத்தான் நான் வெளியேறினேன்.”
“நீ வெளியேறியதுதான் எனக்குச் சங்கடம். வெளியேறியபோதுதான், மகாராஜா பதவியேற்பிலிருந்து வெளியேறுவது யாரென்று தர்பார் மகலில் இருந்தவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். நீயில்லாமல் அந்த தர்பார் மகல் இருக்கக் கூடாதே என்பதற்காகத்தான் உன்னை வரச்சொன்னேன். நான் முன்பே மகாராஜா விசாகம் திருநாளிடம் நம் காதலைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும். அதற்குள் அவரின் அகால மரணம் நடந்துவிட்டது.”
“இளைய ராஜாக்கள் காதலிப்பதற்கெல்லாம் அனுமதி கேட்கும் அளவிற்கா திருவிதாங்கூர் சமஸ்தானம் கெடுபிடியாக இருக்கிறது? நாயர் வீட்டுப் பெண்களே தங்களின் தேர்வுக்கு யாரிடமும் அனுமதி கேட்பதில்லையே.”
“என் சகோதரன் அஸ்தம் உயிரோடு இருந்திருந்தால், எனக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. நான் இளைய ராஜாவாக இருந்ததால் நானே கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொண்டேன். மகாராஜா விசாகம் திருநாள் அறியாமல் நான் ஒரு காரியமும் செய்ததில்லை.”
“அனுமதி கொடுக்க இப்போது அவர் இல்லையே, ஏது செய்ய உத்தேசம்?”
“மகாராஜா இறந்து ஐந்து மாதங்கள் ஆகவில்லை. நான் ராஜாவாகப் பொறுப்பேற்று நான்கு மாதங்கள்தான் முடிந்திருக்கிறது. அதற்குள் ஒரு புது உறவுக்கு மனம் தயாராகவில்லை. என் தம்புராட்டி இறந்து ஆறு வருஷங்கள் கடந்துவிட்டன. அப்போதே திருமணம் செய்திருந்தாலும் பரவாயில்லை.”
“இன்னும் அறுபது நாள்கள் கடந்தால் இருபது வயது எனக்கு. இன்னும் என்ன சொல்லி நான் காத்திருக்க முடியும் மகாராஜா?”
மூலம் திருநாள் பதிலொன்றும் சொல்லவில்லை.
“வாழ்வில் இழப்புகளைச் சந்திக்காதவர்கள் யாரும் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?”
“இழப்பையே வாழ்வாகக் கொண்டவனாக நானிருக்கிறேனே?”
“உள்ளிழுக்கும் புதைமணலிலிருந்து வெளியேற முயல வேண்டும். நீங்களோ நன்றாக இழுத்துக்கொள் என்பதுபோல் உடலையே புதைமணலுக்கு ஒப்படைத்துவிடுகிறீர்கள்.”
மூலம் திருநாளின் முகம் துயரத்தில் ஆழ்ந்திருந்தது.
“கிழக்கே தோவாளையிலிருந்து மேற்கே காவனாறு வரையுள்ள வேணாடென்னும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை உருவாக்கிய மார்த்தாண்ட வர்மா, தன் அம்மாச்சி குழந்தைகளுடனும் வீரர்களுடனும் திடீரென்று ஒரு நாள், ஸ்ரீபத்மநாப பெருமாள் கோயிலுக்குச் சென்றார். கோயில் யோகக்கார் முன்னிலையில் தன் வாளையெடுத்து, பத்மநாபர் காலடியில் வைத்து, ‘இந்த வேணாட்டுக்கு இனி நீயே அரசன். உம் கட்டளைகளை நிறைவேற்றும் அடிமை நான். பத்மநாப தாசன். நிலவும் சூரியனும் உள்ளவரை, உமக்கு அடிமையாக நானும் என் பின்னால் வரும் வேணாட்டின் அரசர்கள் அனைவரும் இருப்போம்’ என்று சொல்லி, தன் மகுடத்தை, பத்மநாபர் முன்னால் வைத்தார். அன்று முதல் வேணாட்டு அரசர்கள் ஸ்ரீபண்டாரக் காரியம் செய்பவர்கள் என்றுதான் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள். யோசித்துப் பார், நாடுவாழிகளையும் தேசவாழிகளையும்* அடக்கி, அண்டை தேசத்து அரசர்களையும் ஒடுக்கி, வேணாட்டை உருவாக்கிய மார்த்தாண்ட வர்மன், புகழின் உச்சத்தில் இருக்கும்போது தன் வாளைப் பத்மநாபரிடம் ஒப்படைத்தது ஏன்? ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கையில் வாளேந்தி பத்மநாபரைத் தனிமையில் தரிசித்தது ஏன்? தரிசிக்க முடியாத நாளுக்காகத் தண்டம் செலுத்தியதேன்? சிற்றரசர்களைக் கொன்ற பாவத்தினைப் போக்க, அனந்தசயனம் கொள்ளும் பத்மநாபனின் திருக்கோயிலில் ஒவ்வொரு வருஷமும் பத்ரதீபம் ஏற்றுவதையும் வழக்கமாக்கிக் கொண்டாரே? போர்க்களத்தில் வெற்றி வாகை சூடிக்கொண்ட வீரனாக மார்த்தாண்ட வர்மா இருந்தாலும், போர்களில் சிரச்சேதம் செய்த நாடுவாழிகளைப் பற்றி அவர் வருந்தினார். தன் தேசத்தின் குடிகளுக்காகவே அந்த உயிர்ப்பலிகளைச் செய்ய நேர்ந்தது. அரசனாகத் தன் குடிகளைக் காக்கவும், இந்த தேசத்தை நிலைநிறுத்தவும் தான் செய்த பாவங்கள், மனிதப் பிறவியாகத் தன்னால் தாங்க முடியாதது, உலகம் காக்கும் அந்தக் கடவுளால் மட்டுமே தாங்க முடியும் எனத் தீர்மானித்துதான் கடவுளின் திருப்பாதங்களில் தன்னை ஒப்படைத்துக்கொண்டார். வேணாட்டின் முதல் அரசனே தன் மகுடம் துறந்த வரலாறு எங்களுக்குத்தான் இருக்கிறது. இந்து சமஸ்தானம் என இந்தியா முழுக்கவுள்ள சமஸ்தானங்களின் வேறெந்த அரசரும் தாம் வணங்கும் கடவுளைத் தம் தேசத்திற்கு அதிபதியாக்கியது இல்லை. அதிகார போதை அபினி போதையைவிட வலிமையானது. அந்த போதையைத் தூக்கியெறிந்து, தன்னுடைய மனம் சொன்னதை உணர்ந்து செயல்பட்ட மார்த்தாண்ட வர்மாவைப்போல் நானும் நடந்துகொள்ள விரும்புகிறேன்.”
“உங்களின் மனம் என்ன சொல்கிறது மகாராஜா?”
மூலம் திருநாள் முகம் சிந்தனையில் தோய்ந்திருந்தது.
“நினைப்பதைச் செய்துவிடக்கூடிய இடத்தில்தான் மகாராஜா இருக்கிறீர்கள்.”
“நினைத்துவிட முடியாத செயல் என்பதால்தான் திக்கித்துப் போயிருக்கிறேன்.”
“சொல்லுங்கள் மகாராஜா… என்னிடம் சொன்னால் மனபாரம் குறையும்.”
மகாராஜா மூலம் திருநாள் கார்த்தியாயினியின் முகவாய் பிடித்து, முகத்தைத் தன் பக்கம் திருப்பினார். ஈரம் கோத்து மின்னிய கருவிழிகள், அவர்மீதான காதலைப் பிரதிபலிப்பதைப் பார்த்து, நெகிழ்ந்து தன் விழி தாழ்த்திக்கொண்டார். தாழ்ந்த அவர் முகத்தை கார்த்தியாயினி நிமிர்த்தினாள். நான்கு விழிகளும் பேசிக்கொண்டதை இடையில் நுழைந்த காற்று மொழிபெயர்த்துக் கடலுக்குச் சொன்னது.
“என்னை விட்டுப் பிரிந்து செல் என்று நான் சொன்னால்..?” இதழ்கள் உரசிக்கொள்ளும் அருகில் விழிகள் நெருங்கி இருக்க, அவளின் பிம்பம் மங்கிய கணத்தில் உயிரை உருவி எடுக்கும் கேள்வியைக் கேட்டார் மூலம் திருநாள்.
கார்த்தியாயினியின் இதயம் நொறுங்கிய அதிர்வை விழியிரண்டிலும் திரண்ட கண்ணீர் உணர்த்தியது. விலகத் துடித்த அவளின் கன்னத்தை அழுத்திப் பிடித்தன மகாராஜாவின் விரல்கள்.
“இவ்விரு விழிகளை நான் என்று பார்ப்பேனோ? உன் விழி பார்த்துப் பேசும் துணிவு வேண்டியே நான் தவித்துக்கொண்டிருந்தேன். என் விழிகளைப் பார். அதில் துளியும் பொய்யில்லை. உன்மேல் கொண்டுள்ள பிரேமம் என் ஆன்மாவின் பிரேமம். ஆனால் நீண்ட ஜீவிதத்துடன் நீயிருக்க நான் பிரியப்படுகிறேன். என் அம்மை என்னை விட்டுப் பதினொரு நாளில் பிரிந்தாள். தந்தை நான் நடக்கத் தொடங்கும் முன்பே மறைந்தார். தன் தோள்களில் ஏந்தி என்னை வளர்த்த என் தாத்தா, மகாராஜா உத்திரம் திருநாள், நான் வளரும் முன்பே என்னைப் பிரிந்தார்.” மகாராஜாவுக்கு மூச்சுத் திணறியது.
கார்த்தியாயினி மகாராஜாவை விலக்கப் பார்த்தாள்.
அவளின் இமைகள் அவரின் இமைகளுடன் உரசும் நெருக்கத்திற்கு அவள் முகத்தை இழுத்தணைத்தார்.
“உனக்குத் தெரியுமா கார்த்தி, ராஜா உத்திரம் திருநாள் இங்கிலாந்து பேரரசி கேட்டுக்கொண்டதற்கு இணங்க தந்தத்திலான ஒரு அரியாசனம் செய்து அனுப்பினார். லண்டனிலும் பிறகு அமெரிக்காவிலும் நடந்த கண்காட்சியில் வைக்கப்பட்ட அந்த அரியாசனம் மாபெரும் புகழை பிரிட்டிஷ் பேரரசிக்குப் பெற்றுத் தந்தது. அதற்கு நன்றி சொல்லும்விதமாக, ராஜாவுக்கு இங்கிலாந்துப் பேரரசி பரிசுப் பொருள்கள் அனுப்பினார். எப்படிச் சொல்வது கார்த்தி? தாத்தா உத்திரம் திருநாளுக்கு, பிரிட்டிஷ் மகாராணி அனுப்பிய தங்கத்திலான இடுப்புக் கச்சையை அணிவித்து பிரிட்டிஷ் ரெசிடென்ட் மரியாதை செய்தார். இடுப்புக்கச்சையின் நடுவில் தங்கக் கடிகாரம் பதிக்கப்பட்டிருந்தது. கடிகாரத்தின் உள்ளே ஒரு பக்கம் பிரிட்டிஷ் பேரரசியின் படமும், எதிர்ப்பக்கம் மகாராஜாவின் படமும் இருந்தன. தனக்குப் பரிசாக வந்த இடுப்புக்கச்சையைத் தாத்தா எனக்கு அணிவித்தார். நாங்கள் இருவரும் அதைக் கட்டிப் பார்த்து மகிழ்ந்த புன்னகை மறையக்கூட இல்லை, அதற்குள் பாட்டி இருந்த தரவாட்டிலிருந்து தகவல் வருகிறது, பாட்டி இறந்துவிட்டார் என்று.”
மூலம் திருநாளின் விழிகளில் நீர் கோத்து நின்றது.
“என் அம்மை இறந்ததால், திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு வாரிசு இல்லை என்ற காரணம் காட்டி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தை பிரிட்டிஷ் சர்க்கார் எடுத்துக்கொள்ளுமோ என்ற சூழல். கவர்னர் ஜெனரல் டல்ஹௌசி பிரபு அப்போதுதான் வாரிசு இல்லாத சமஸ்தானங்களை பிரிட்டிஷ் சர்க்கார் எடுத்துக்கொள்ளும் என்று அறிவித்திருந்தார். மகாராஜா உத்திரம் திருநாள் டல்ஹௌசிக்குக் கடிதம் எழுதி, அவகாசம் பெற்று, இரண்டு பெண்களைத் தத்தெடுத்தார். என்னைவிட ஆறேழு ஆண்டுகளே மூத்த இருவரும் எனக்கு அம்மைகளாக இருந்து காத்தனர். இரண்டு அம்மையில் ஒருவரும் திடீரென்று மரணத்தைத் தழுவிவிட்டார். இப்போது எனக்கு நண்பராகவும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பெருமைக்குரிய அரசராகவும் மாமனாகவும் இருந்த விசாகம் திருநாளும் அகாலத்தில் என்னை விட்டுப் பிரிந்து சென்றார்.”
“உங்கள் பிறப்பிலிருந்து நடந்தவற்றை எல்லாம் தொகுத்துக்கொண்டு வருந்தினால் என்ன பலன் மகாராஜா? இதில் உங்களின் தவறென்ன இருக்கிறது?”
“என் தவறென்று ஒன்றுமில்லை. என் துரதிர்ஷ்டம்தான். என் பிரேமைக்கு உகந்தவர்கள் யாரும் நீண்ட ஆயுளுடன் என்னுடன் இருக்க முடியவில்லை.”
“நீண்ட ஆயுளுக்கு மனிதர்கள் யாருமே உத்திரவாதம் கொடுக்க முடியாதே மகாராஜா?”
“நான் விவாதிக்க விரும்பவில்லை கார்த்தி. என் இதயம் ஆழமாகச் சொல்கிறது. நீ என்னுடன் கொஞ்ச நாள்கள் வாழ்வதைவிட, உயிரோடு நீண்ட நாள் வாழ வேண்டும் என நான் விரும்புகிறேன்.”
கார்த்தியாயினி அதிர்ந்தாள். மகாராஜா என்ன சொல்ல நினைக்கிறார்?
“உங்களின் வார்த்தையை நான் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் மகாராஜா? நாம் வாழ்வில் ஒன்றிணையக் கூடாது என்கிறீர்களா? அல்லது, என்னைக் காத்திருக்கச் சொல்கிறீர்களா?”
“இப்போதைக்கு என்னிடம் எந்தப் பதிலும் இல்லை கார்த்தி. என்னிடமிருந்து பிரிந்து சென்றவர்களின் துயரங்கள் என்னை அழுத்துகின்றன. என் மனநிலை சரியானால் நானே அழைக்கிறேன்.”
“எனில், என்னைக் காத்திருக்கச் சொல்கிறீர்கள்?”
“அப்படித்தான் என்றும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.”
“எனில், காதலை மறக்கச் சொல்கிறீர்களா?”
“காதலை மறக்க முடியும் என்பது எவ்வளவு பெரிய பொய்.”
“நான் என்ன செய்யட்டும்?”
“நானாக அழைக்கும்வரை காத்திரு என்று சொல்ல நினைக்கிறேன். ஆனால்?”
“நான் காத்திருக்கிறேன் மகாராஜா. கார்த்தியாயினி அம்மை மாங்கல்ய வரம் கொடுப்பவள் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. அம்மை எனக்கந்த வரம் கொடுக்கிறாளா எனப் பார்ப்போம்.”
மூலம் திருநாளின் பதிலுக்காகக் காத்திராமல் கால்கள் மணலில் புதைய, கார்த்தியாயினி எழுந்து நடந்தாள்.
திக்பிரமை பிடித்து உட்கார்ந்திருந்தார் மகாராஜா. நான்கு பாதங்களைத் தழுவி விளையாடிய அலைகள், இப்போது இரண்டு கால்களை மட்டும் தழுவி ஏமாந்து திரும்பின.
மகாராஜாவின் அருகில் வந்த வீரன் ஒருவன், “மகாராஜா, தங்களைக் காண, மெட்ராஸ் பிரசிடென்சியிலிருந்து ராயல் இன்ஜினீயர் பென்னி குக் அவரின் மனைவி குழந்தைகளுடன் கோட்டையில் காத்திருக்கிறார்” என்று சொல்லி நகர்ந்தார்.
“பென்னி குக்?” எனச் சொல்லியவாறு திரும்பிய மகாராஜா, தூரத்தில் அடர்குழல் காற்றில் புரள, தளர்ந்த நடையுடன் சென்றுகொண்டிருக்கும் கார்த்தியாயினியைப் பார்த்தார்.
துக்கம் தொண்டையில் கசப்பான திரவமாய் இறங்கியது.
- பாயும்