மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 29 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

அண்ணனுக்குப் படையல் போடவில்லை. அவன் பெரியவர் (யானை) அடித்து இறந்துபோனான். நாள் வந்து சாகாமல், கெடுசாவில் போகிறவர்கள் தெய்வக் குற்றமிழைத்தவர்கள்.

“நல்ல சந்தன மாமரமே அல்லி லாலோநம்ம சாமி பிறந்த இடம் அல்லி லாலோநம்ம கூடப் பிறந்த இடம் அல்லி லாலோ...”

இருளின் கனத்தைக் கூரான ஊசி கொண்டு கீறி விடுவதுபோல், பொன்னையனின் குரல், கூடியிருந்தவர்களின் மனத்திற்குள் படிந்திருந்த துயரத்தை மெல்லக் கீறியது. மன்னான்குடியின் குடிகளெல்லாம் இருளிலும் அரை வெளிச்சத்திலும் ஆங்காங்கே நின்றிருந்தனர். குழந்தைகளும் வயதானவர்களும் ஓலைத் தடுக்குகளின்மேல் உட்கார்ந்திருந்தனர். மத்திம வயது ஆண்களும் பெண்களும் கவலைதோய நின்றுகொண்டிருந்தனர்.

மன்னான்கள் வருஷத்திற்கொரு முறை கொண்டாடும் கஞ்சிவைப்புப் பண்டிகையின் ஒன்பதாவது நாளின் இரவு. சென்ற வருஷம் கஞ்சிவைப்பு முடிந்து, இந்த வருஷம் கஞ்சிவைப்பு தொடங்குவதற்குமுன் மன்னான்குடியில் இறந்திருந்த ஒன்பது பேருக்கு அவரவர் வீட்டில் படையல் வைத்திருந்தார்கள்.

பேய்ச்சியின் அப்பாவும் அண்ணனும் ஒரே வருஷத்தில் அடுத்தடுத்த மாதத்தில் இறந்து போனதில் நிலைகுலைந்திருந்தாள் பேச்சி, ஒன்பது நாளும் அடையும் கீரையும் செய்து படையலிட்டாள். அப்பாவுக்கு விருப்பமான கஞ்சாவையும், அவர் உடுத்தியிருந்த செம்மண் படிந்த துண்டொன்றையும் ஈத்தைப் பாயில் வைத்திருந்தாள். அவரின் கையில் எப்போதும் இருக்கும் கம்பு, பாய்க்கு அருகில் கிடந்தது. அவரின் கைபட்டு உரசி உரசி கம்பு வழுவழுவென்று மாறியிருந்தது. காட்டில் எங்கு சென்றாலும் இந்தக் கம்பிருந்தால் போதும் அப்பாவுக்கு.

காட்டில் அப்பா எங்கு போகிறார், எதற்குப் போகிறார் என்று அவராலும் சொல்ல முடியாது. ஒவ்வொரு மலையடுக்கிலும் ஏறி இறங்குவார். ஓடைகளில் நீரள்ளிப் பருகிவிட்டு, கால்கள் அசந்தால் அங்கேயே படுத்துறங்குவார். காட்டில் ஒருமுறை தூங்கிக்கொண்டிருந்த அப்பாவை, கரடி ஒன்று முகத்தருகே வந்து மோந்திருக்கிறது. மிருகங்களின் நடமாட்டத்தையும் அவற்றின் மேல் வீசும் வாடைகளையும் அப்பாவின் நாசி நன்கறியும். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் அப்பாவுக்குக் கரடியின் வாடை தெரிந்துவிட்டது. அசையாமல் கொள்ளாமல் கைக்கருகில் இருந்த மூங்கில் கம்பையெடுத்துக் கரடியின் முன் நெற்றியில் ஓங்கியடித்தார். “கககககக...” என்று ஊளையிட்டபடி கரடி ஓடிவிட்டதாம். காட்டில் சுற்றி வருவது மட்டும்தான் அப்பாவின் விருப்பம். சில நேரங்களில் மன்னான்குடியில் இருந்து பேரியாறு பிறக்கும் சிவகிரி மலை வரை நடப்பார். கிளம்பிய எட்டாம் நாள்தான் வீடு திரும்புவார். அவரின் உயிர் மூங்கில் கம்பில்தான் இருக்க வேண்டும். பேச்சி மூங்கில் கம்பைத் தொட்டெடுத்துப் பார்த்து அழுதாள். அப்பாவுக்கு வயிற்று வலி வரும்போதெல்லாம் அவர் ஊதும் சிலும்பி அருகில் கிடந்தது.

அண்ணனுக்குப் படையல் போடவில்லை. அவன் பெரியவர் (யானை) அடித்து இறந்துபோனான். நாள் வந்து சாகாமல், கெடுசாவில் போகிறவர்கள் தெய்வக் குற்றமிழைத்தவர்கள். அவர்களுக்குப் படையல் வைப்பதில்லை. அவனை மன்னான்குடிக்குக் கொண்டு வராமல் பெரியவர் அடித்த இடத்திலேயே புதைத்துவிட்டு வந்துவிட்டார்கள்.

நீரதிகாரம் - 29 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

தேவந்தியும் பூஞ்சார் தம்புரானும் நம்பிக்கையாகச் சொல்லிச் சென்ற பிறகும் காணிகளுக்கு அச்சம் நீங்கவில்லை. உடையான் ராஜமன்னான் நாற்பத்திரண்டு காணிகளையும் தானாவதிகளையும் மூப்பன்களையும் வரச்சொல்லி ஆளனுப்பினார். எல்லாரும் கூடிய பிறகு, பேரியாற்றில் வெள்ளைக் காரர்கள் அணை கட்டப் போகிற சேதியைச் சொல்லி, பூஞ்சார் தம்புரான் அணை கட்டுகிற இடத்தை மாற்றுவதாகச் சொல்லிச் சென்றதையும் சொன்னார்.

மன்னான்குடிகளின் எல்லாக் காணிகளும் கூடிப் பேசிக்கொண்டிருந்த அன்று, உடையானின் மாமன் மனைவி மூப்பத்தி, கம்பூன்றியபடி வந்தாள். மூப்பத்திக்கு எண்பது வயதுக்குமேல் இருக்கும். தளர்ந்த உடம்பை முண்டினால் சுற்றிவைத்திருந்தாள். கருவிழியின் கருமை குறைந்திருந்ததால் அவள் கண்கள் கோபம் கொண்டிருக்கும் பாவனை இருந்தது. இயல்பில் மூப்பத்தி தன்மையானவள். உடையான் ராஜமன்னானுக்கு மூத்தவன் ஒருவன் இருந்தான். அவன் வனத்தில் வேட்டையாடியும் வனத்தில் மரங்களை வெட்டியும் சுற்றி வந்தான். மிருகங்களைத் துன்புறுத்துபவன் குடிகளைக் காக்க மாட்டான் என்று தன் கணவனிடம் சொல்லி, அவர் சகோதரியின் இரண்டாவது மகனான (மன்னான்களும் மருமக்கள்தாயத்தைப் பின்பற்றுகிறவர்கள்) இளைய ராஜாவை உடையானாக்கியவள். மூப்பத்தியின் பேச்சை உடையான் ஒருபோதும் மீறுவதில்லை.

‘தம்புரான் வந்தாலும் வெள்ளைக்காரன் வந்தாலும் தங்களோட துன்பத்தைத் தீர்க்க முடியாது. முத்தியம்மையும் சாஸ்தாவும் கண்ணகி அம்மையும் மூதாதைகளும்தான் வனத்தில் என்ன துன்பம் வந்தாலும் சரிசெய்ய முடியும். தம்புரானுக்கு அதிகாரம், ஆள் படை எல்லாம் இருந்தாலும் மன்னான்குடிகளுக்கு வனத்துக்குள் வரும் துன்பங்களைத் தம்புரான் அறிய முடியாது. எண்ணூறு தேவர்களும் உடன் நிற்க முத்தியம்மை மனசு வைத்தால்தான் மன்னான்களுடைய துன்பங்கள் நீங்கும். ‘கஞ்சிவைப்புக்கு எல்லாக் காணிக்கும் சொல்லியனுப்பு’ என்று சொல்லியதில் உடையான் மறுக்காமல் கஞ்சிவைப்புக்கு நாள் குறிக்கச்சொல்லிக் கணியனிடம் சொல்லிவிட்டார்.

அறுவடை முடிந்து தானிய தவசங்களோடு அவரவர் காணிக்கையைச் செலுத்தியபின், இறந்தவர்களின் ஆன்மாவை ஒன்பது நாள் சாந்தி செய்துவிட்டு, நடுக்கூர் சாமத்தில் உடையான் வீட்டில் படையலிட்டார்கள். முத்தியம்மை, சாஸ்தா, ஒன்பது தேசத்துக் காணிகளின் கடவுள்கள் எல்லோருக்கும் தனித்தனி கோயிமாக் கட்டிலில் (கடவுளின் இருக்கைகள்) கடவுள்களின் பிரதிமைகளை வைத்து வழிபட்டார்கள்.

“ஏழ, பாழ, முண்டச்சி, தண்டச்சி, படுவன் (மனைவி இல்லாதவர்), பாட்டாளி, கூன், குருடு, மொண்டி, முடவு, ராவுன்னா ராவு, பகலென்னில் பகல், ஏமத்தில் சாமத்தில் விளிச்ச விளி, ஏதாகினும் அனுசரிச்சு வாராமே” என்று யார் கூப்பிட்டாலும் எப்போது கூப்பிட்டாலும் வந்து காக்க வேண்டும் என்று காணிகளின் மூப்பன் பொன்னையன் முத்தியம்மையிடம் உரத்த குரலில் உத்தரவிட்டுப் பேசினார். பொன்னையனின் தம்பி மகளான பேச்சி, அவனருகில் நின்று, அவன் முகக்குறிப்பறிந்து காரியங்கள் செய்தாள். முத்தியம்மைக்குப் பூசைகள் செய்யும் உரிமை பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவன் பொன்னையன். படையலிட்டு, அம்மைக்கு முன் நின்று பொன்னையன் குரலெடுத்துப் பாடி அழும்போது வனமே மென்மிருகமாகி அவன் காலடியில் உறைந்து நிற்கும்.

நடுக்கூர் சாம பூசை முடிந்து முன் அந்தியில் முத்தியம்மையின் பிரதிமையை மரத்தடியில் வைத்து, குங்குமம் மஞ்சளிட்டிருந்தார்கள். மூப்பன் பொன்னையனின் வீட்டிலிருந்து படையலிட கேப்பைக் களி கொண்டு வந்திருந்தான். அகலமான மர இலைகள் ஏழின் நுனி அம்மையை நோக்கி இருக்கும்படி வைத்து, ஒவ்வொன்றிலும் களி வைத்து, அருகில் மரக்குடுவையொன்றில் நீர் முகந்து வைத்துக் காத்திருந்தார்கள். அம்மை ஒவ்வொரு இலையில் இருந்தும் சாப்பாடு எடுத்துச் சாப்பிட்டு, நீர் பருகிப் பசியாறி, கேட்கும் வரம் கொடுத்துச் செல்வாள் என்ற நம்பிக்கை. படையலிட்ட கொஞ்ச நேரத்தில் மரக்குடுவையில் நீரின் சலசலப்பு கேட்டால் அம்மை நீரருந்தி தாகம் தீர்ந்தாள் என்பது நம்பிக்கை. இன்று நீண்ட நேரம் காத்திருந்தும் குடுவையின் நீரில் சத்தமெழவில்லை. சுற்றி நின்ற உடையானும் காணிகளும் பதறினார்கள். தங்களைச் சூழும் ஆபத்திலிருந்து காக்க வேண்டிய தெய்வமே அமைதி காத்ததில் அவர்கள் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்தது.

கஞ்சிவைப்பு நாளின் ஒன்பது திவசங்களின் இரவிலும் தெய்வங்களை வணங்கும் பாடல்களையும் கண்ணகி – கோவலன் கதையையும் பாடுவார்கள். மூன்றாவது திவசத்தின் இரவில் தொடங்கும் கண்ணகியின் கதை, ஒன்பதாம் திவசத்தில் முடிவடையும்.

கடைசி திவசமான இன்று கண்ணகி வஞ்சி தேசம் வந்து சேரும் கதை. தொடங்கும்போதே எல்லோர் மனத்திலும் நடுக்கூர் சாமத்தில் முத்தியம்மை நீர் பருகாத கவலை இருந்தது.

“எண்ணூறு தேவரெல்லாம்எங்களைக் காக்க வேணுமேபெரிய நங்கை எங்களைக் காக்க வேணுமேநல்ல வனத்தில் குடியிருக்கும் வன தேவதையெல்லாம்எங்களைக் காக்க வேணுமேநல்ல குலத்தில் குடியிருக்கும்குலதெய்வங்களெல்லாம்எங்களைக் காக்க வேணுமேமதுரா மீனாட்சியே எங்களைக் காக்க வேணுமே..!”

என மூப்பன் பொன்னையன் பாடத் தொடங்கியபோதே மன்னான்கள் அச்சத்தின் அந்தகாரத்தில் விழுந்தார்கள்.

மூதாதையர்களை வழிபட்டு, மூப்பன் கண்ணகியின் கதையைத் தொடங்கும்போது நடுச்சாமம் நோக்கி இரவு நகர்ந்தது. கண்ணகியின் துயரக் கதையைத் தம்மால் கேட்க முடியாதென்று மரத்தின் இலைகள் உள்மடங்கின. மிருகங்கள் புதர்களுக்குள் ஒளிந்தன. பூச்சியினங்கள் மண்ணுக்குள் புதைந்தன. காற்றும் தன் அசைவைச் சுருக்கியது. தப்பிக்க வழியற்ற மனித ராசிகள் மட்டும் துயரத்திற்குத் துயர் சேர்க்கும் கண்ணகியின் கதையைக் கேட்டன.

கண்ணகியின் பெருமையை மூப்பன் உரத்துப் பாடினான்.

“அழகுள்ள பர்வத பத்தினி கண்ணகை இதயம் கேட்டுவிட்டுத்தானேசித்தெறும்பும் வழி போவும் மாட்டுக்காரன் ஆட்டுக்காரன் புள்ளகுட்டிகமனுஷங்க எல்லாம் ஜெனிச்சு ஓடி வரும்...”

“எல்லாம் ஓடி வரும்...” கூட்டம் பின்னே சொன்னது.

“நல்ல குடி பிறந்த மட்டும் அல்லி லாலோநல்ல ஆகாச காலம் அல்லி லாலோநல்ல மதுரைக்கு மேல் குலத்து அல்லி லாலோநல்ல மாரியம்மை தெப்பக்குளம் அல்லி லாலோநான் ஆறுவகை மீன் பிடிச்சு அல்லி லாலோநல்ல ஆறுவகை மீன் எடுத்து அல்லி லாலோஅழகுள்ள பர்வத பத்தினி கண்ணகை இதயம் கேட்டுவிட்டுத்தானே அல்லி லாலோ...”

குப்பான் காணியைச் சைகை காட்டி உடையான் அழைத்தார். குப்பான் காணி உடையானின் அருகில் சென்றவுடன், தன்னை எழுப்பிக் கூட்டிப் போகச் சொன்னார்.

உடையானின் தோள்பிடித்து, கைத்தாங்கலாக அழைத்து வந்து, கூத்து நடந்துகொண்டிருந்த இடத்திற்குப் பின்னாலிருந்த பாறையில் உட்கார வைத்தான் குப்பான் காணி.

“ஒன்னோட நில்லையம்மா (அம்மா) எங்க?” உடையான் குப்பானிடம் கேட்டார்.

“நில்லை படுத்திருக்கு. சுகமில்லாம இருக்கே?”

“இந்தக் கஞ்சிவைப்புக்குத் தப்பிட்டா. இன்னும் வருஷந்தள்ளுவா” என்ற உடையான், குப்பானிடம் சிலும்பியைக் கேட்டார்.

ஈத்தைக் குச்சியின் மேலே பலா இலையைக் கூம்பாக்கி, அதில் பதமாக்கிய கஞ்சா இலை அடைக்கப்பட்டிருந்த சிலும்பியை உடையானிடம் கொடுத்தான் குப்பான். இடது கை முட்டியை மடித்து, குழலைக் கை மடிப்புக்குள் வாகாக வைத்து, மடக்கிய கையை, வாய்க்கருகில் கொண்டுவந்து ஊதினார் உடையான். குழலின் இடைவெளியில் புகை வெளியேறாமல் முழுமையாக வாய்க்குள் இழுத்து மூக்கு வழியாக வெளியேற்றும் நுட்பமறிந்த உடையானுக்கு முதல் இழுப்பிலேயே மனசு கொஞ்சம் ஆசுவாசமானது.

“இந்த வருஷம் எல்லா துர்நிமித்தத்தையும் காடு நமக்குக் காட்டிடுச்சி உடையான்.”

உடையான் கஞ்சாவின் இனிமையைப் பேச்சில் தொலைக்க விரும்பவில்லை.

“சொப்பனத்துல நானொரு பெரிய மரத்தை வெட்டிச் சாய்க்கிறேன். சொப்பனத்துல மரத்த வெட்டிச் சாய்ச்சா நம்ம நாட்டுக்கு ஆபத்துன்னு அன்னைக்கே மூப்பத்தி சொல்லுச்சு.”

மனத்தின் பதற்றத்தைக் கஞ்சா குறைக்கக் குறைக்க, உடையானின் முகத்தில் அமைதி கூடி வந்திருந்தது.

“தேனெடுக்கப் போனவங்களும் சொன்னாங்கல்ல உடையான், எல்லா அடையிலும் வழக்கத்தைவிட தேன் ரொம்ப அதிகமா இருந்துச்சின்னு.”

கஞ்சாவின் மதுரம் கூடி உடையான் களிப்பின் உச்சத்தில் இருந்தார்.

“இந்த வனம் நம்மோட வனம்டே. நம்ம வெரட்டாது. நாம வனப்பேச்சியோட பிள்ளைங்களாக்கும். பிள்ளையை எந்த அம்மையாவது விரட்டுவாளா?” கவலை விலகிய உடையானின் குரலில் வனத்தின் பிள்ளையாகி நிற்கும் உற்சாகமிருந்தது.

“பாண்டிய ராஜா கூட கெளம்பி வந்ததில இருந்து, இந்த வனம்தானே நம்மள சொந்த பூமியா அரவணைச்சுக்கிட்டது? நமக்குக் காட்டப் பத்தி, மலையப் பத்தி என்ன தெரியும்? முத்தியம்மை வனதேவதையா இருந்து எல்லாம் சொல்லிக் குடுத்தா. வன மிருகம்கூட நம்மள ஒன்னும் செய்யறதில்லையே? நம்ம பயிர் பச்சையைக் கடிக்க வர்ற பெரியவர் (யானை) நம்ம ஆன வாத்தி போடுற மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு, என்னைக்காவது பயிர மேய்ஞ்சிருக்காரா? வரகு வெள்ளாமையிலோ, நெல்லு வயல்லயோ பெரியவர் எறங்கியிருக்காரா? வனத்துல வாழுற ஜீவராசிங்க எதுனா நமக்கு ஊறு செய்யுதா? கடுவான் (புலி) நம்ம எல்லைக்குள்ள வர்றதில்ல. நாம அதோட எல்லைக்குப் போறதில்ல. போனாலும் நாம ஒன்னும் ஊறு செய்யறதில்லை. எப்பவாவது கடுவான் காணிக்குள்ள வந்துட்டாலும் வாத்தியோட வட்டத்தைத் தாண்டி அதால வர முடியாது. நம்மவிட பலசாலியான மிருகங்கள வசக்கி வச்சிக்கிட்டு இந்த வனத்துல நாம வசிக்கிறோம்னா வனப்பேச்சியோட அநுக்ரகம் இல்லாம நடக்காதே?”

உடையான் பேசிக்கொண்டிருக்கையில் மன்னான்குடியின் தானாவதி ஜக்கான் அங்கே வந்தான். ஜக்கானிடமும் குப்பான் சிலும்பி ஒன்றை எடுத்து நீட்டினான். தானாவதி, கூட்டம் நடக்கையில் உடையானின் அருகில் நிற்பவர். காணிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டாலும், அடித்தாலும் காணியின் விதிகளை மீறினாலும் தானாவதி கடுமையான தண்டனை கொடுப்பார். ஜக்கானின் முதுகிலிருந்து தலைக்குமேல் நீண்ட குச்சியொன்றைச் செருகியிருந்தார். தேவனின் ரூபமான அந்தக் குச்சியின் நுனியில் மரத்தின் பசையில் ஒன்றின்மேல் ஒன்றாக தேனடையைப் போல் ஒட்டியிருந்த குன்றிமணிகள் கம்பின் பூண்போல் திரண்டு நின்றன.

“பூஞ்சாறு தம்புரான் நமக்கு வனராஜா பட்டத்த சும்மா குடுக்கல. நம்ம குடிங்க இந்த வனத்தோட எவ்ளோ தூரம் ஒத்து வாழறாங்கன்னு சோதிச்சார். ராஜான்னா இருக்கிற குடி படைகளையெல்லாம் அடக்கி ஒடுக்கிக் கட்டுக்குள்ள வச்சிக்கணும்தானே? இங்க இருக்க மிருகங்களும் செடி கொடிங்களும் ஜீவராசிங்களும்தானே நம்ம குடி படைங்க? மன்னான்களோட கால் நரம்புல இந்த வனம் ஒளிஞ்சிருக்கே. ஒருமுறை தம்புரான்கூட தம்புராட்டி வந்தாங்க. ஒங்களுக்கு இந்த வனமே கட்டுப்படுமான்னு கேட்டாங்க. சின்ன வயசு தம்புராட்டிக்கு. நம்ம பத்தித் தெரிஞ்சுக்கிற ஆசையில கேட்டாங்க. தம்புராட்டி நம்ம மன்னாங்ககிட்ட, ‘நான் இன்னும் கொம்பனைப் பாத்ததில்லை. எனக்குக் கொம்பனைக் காட்டுங்க’ன்னு சொல்லியிருக்காங்க. ‘கொம்பனைத் தேடிப் போக வேணாம். இங்கயே வர வைக்கிறோம்னு சொல்லிட்டு, ஒரு மன்னான் மந்திரம் சொன்னானாம். ரொம்ப நேரம் ஆயிடுச்சாம். ‘என்ன கொம்பனைக் காணோம். சும்மா சொல்றீயா நீ?’ன்னு தம்புராட்டி கோபப்பட்டிருக்காங்க. அதுக்கு மன்னான், வாயில இருந்த எச்சியைத் துப்பி, ‘என் எச்சி நுரை அடங்கறதுக்குள்ள கொம்பனை இங்க வரவைக்கலைன்னா என் தலையைச் சீவிடுங்க’ன்னு சொல்லியிருக்கான். சொன்னவன் கண்ண மூடி, கண்ணத் தொறந்து, ‘அங்க பாருங்க மரத்துப் பின்னாடி கொம்பன் நிக்குது’ன்னு சொல்லியிருக்கான். தம்புராட்டிக்குக் கொம்பனைப் பார்த்து ஒரே சந்தோஷம். தம்புராட்டியோட சவால்ல ஜெயிச்சதுலதான் தம்புரான் நம்ம மன்னான்களுக்கு ‘வனராஜா’ன்னு பட்டம் கொடுத்தார். கருங்காலி மரத்துல பூண் போட்ட, இந்தா இருக்கே, இந்தச் செங்கோலக் கொடுத்தார்.” உடையான் பழைய கதைக்குள் மூழ்கினார்.

“தம்புரான் என்னைக்குமே நமக்கொன்னுன்னா காப்பாத்த வந்துடுவாரு. சரி உடையான், பேரியாத்தோட தண்ணி நம்ம காணிக்கு வருமா?”

“முல்லைக் கூட்டுக்குப் (பேரியாறும் முல்லையாறும் சேருமிடம்) பக்கத்துல பேரியாத்துத் தண்ணி ஓடுது. ஆனா அணையைக் கெட்டி, முன்னாடி தண்ணியத் தேக்குவாங்களாம். அது எத்தன கல் தொலைவுக்குத் தண்ணி தேங்கும்னு தெரியாது. அப்படித் தேங்குனா வழியில இருக்க நம்ம ஏசாத்துக் காணிங்க முழுவிப்போவும். மங்கலா தேவி கோவிலும் முழுவிடும்.”

உடையான் குப்பானிடம் சிலும்பியைக் கொடுத்து, இன்னும் கொஞ்சம் இலைத்தூள் போடச் சொன்னார்.

“மனுஷ ராசி பத்தி யோசிக்கிறீங்களே, இங்க இருக்க ஜீவராசிங்களப் பத்தி யோசிக்கிறீங்களாடா? இங்க இருக்க ஜீவராசிங்க எங்க போவும்? நம்மள மாதிரி அதுங்களுக்கு விரட்டி விடுற இடத்துக்கெல்லாம் போவத் தெரியுமா? எத்தினியோ முறை காட்டு வெள்ளம் வந்து அடிச்சிக்கிட்டுப் போனப்ப, நம்ம மூப்பனுங்க காணிங்கள வேற வேற எடத்துக்கு மாத்தியிருக்காங்க. இப்போ வெள்ளைக்காரன் சொல்றது காலாகாலத்துக்கும் இருக்கும். நம்ம தெய்வங்கதான் நம்ம பேச்சைக் கேக்கும். தம்புரான்க நம்ம பேச்சைக் கேட்க மாட்டாங்க. இப்போ இந்த வனத்தோட ஜீவராசிங்களுக்காகத்தான் யோசிக்கிறேன். ரெண்டாவது, வனம் நம்ம பூமி. நம்ம சொத்து. நம்மள காப்பாத்துற தெய்வம். வனத்துல என்னென்ன இருக்கணும், எப்படி இருக்கணும்னு தெய்வமே ஒழுங்கு பண்ணினது. அதது அப்படி அப்படியே இருக்கணும். நாம எதுவுமே மாத்தம் செய்யக்கூடாதுன்னுதான் என்னோட மூப்பன் மூப்பத்தி எல்லாம் சொன்னது. நம்ம பாண்டிய தேசமான மதுராவுக்குத்தான் தண்ணி போப்போதுன்னாலும் ஓடுற ஆத்த மறிக்கிறது தப்புக் காரியம். வனத்தோட சட்டத்துல தெய்வக் குத்தம். பெரிய பாவம். அந்தப் பாவத்தைப் போக்குறதுக்குத்தான் கஞ்சிவைப்பன்னைக்குப் பூசை செய்யலாம்னு நாப்பத்திரண்டு காணிங்களையும் வரச்சொன்னேன்.”

“பேசிட்டுச் சொல்றதா தம்புரான் சொல்லியிருக்காரே உடையான்?” குப்பான் கேட்டான்.

“தம்புரான் கேக்கட்டும். நமக்கு முத்தியம்மை என்ன உத்தரவு கொடுக்கிறான்னு பாப்போம். கோவலன் – கண்ணகை கதையைத் தலைமுறை தலைமுறையா சொல்லுறோம். நெருப்பா புகையுற கண்ணகை அம்மையோட துயரத்தைப் பாடிப் பாடி ஆத்துறோம். அவ அடைக்கலமா வந்த மலை இது. கோவலனோட கடைசியா சேந்து நின்ன வனம். அவ என்ன பண்ணுறான்னு பாப்போம்.”

ஜக்கான் கஞ்சாவைப் புகைத்துவிட்டு, கூட்டத்திற்குள் வந்தான்.

கோவலன் படுகளம் கண்ட காட்சியைக் கதையாகச் சொல்லியும் பாட்டாகப் பாடிக் கொண்டுமிருந்தார் மூப்பன். கண்ணீர் கசிய கூட்டம் அமர்ந்திருந்தது.

“அழகுள்ள பர்வத பத்தினி கண்ணகை இதயம் கேட்டுவிட்டுத்தானேபோகும்போது மன்னவன் படுகளம் சென்றுமே விட்டான்.மன்னவன் படுகளம் சென்றுமே விட்டான்...”மீண்டும் மீண்டும் மூப்பன் பாட, கூட்டமும் “மன்னவன் படுகளம் சென்றுமே விட்டான்” என்று உடன் சேர்ந்து பாடியது.

“மன்னவன் வானுலகமே போனே னானோஉனக்கு பஞ்சனையுண்டோ படுத்துறங்கஉனக்கு மண்ணு உண்டோ உனக்குக் கல்லு இல்லை உனக்குப் பூசை உண்டோஉனக்குப் படையல் உண்டோ..?”

படுகளத்தில் வெட்டுப்பட்டு வீழ்ந்துகிடக்கும் கோவலனைப் பார்த்துக் கண்ணகியும் மாதவியும் கதறி அழுததையும், கோவலன் யாருமற்று விண்ணுலகம் போவதையும் சொல்லி அழுத மூப்பன், கோவலன் உடலை எரிப்பதைப் பாடினார்.

“மாங்கட்டை சந்தனக் கட்டை தடி அடுக்கிமே விட்டேன்படியின்மேல் மன்னவனைத் தூக்கிப் போட்டுவிட்டேன்மாதகி கால் வழியும்கண்ணகை தலை வழியும் நிறுத்திவிட்டேன்படியில் அக்னி பொருந்தும்போதுஅக்னி ஒருபோதும் பொருந்தவில்லை...”

`கோவலனின் உடலைத் தீ தீண்டவில்லையே’ என்று சொல்லி, அதற்குக் காரணம் யோசித்தார்.

“கண்ணகை இதயம் பார்த்துவிட்டுத்தானே அடியேன் சக்களச்சி மாதகையே கேளோகுடிப் பொண்டாட்டி தலை வழியே நிக்க வேணும் வீட்டுப் பொண்டாட்டி கால் வழியே நிக்க வேணும்” என்று பாட,

மாதவியைத் தலைப்பக்கமும் கண்ணகியைக் கால்ப்பக்கமும் நிறுத்தினார்கள்.

`மீண்டும் அக்னியைப் பொருத்தும்போது, கோவலனின் உடலைத் தீத்தீண்டியது தலைப்பக்கம் நின்றிருந்த மாதவி படையில் விழுந்து தன்னையும் தீப்பிடிக்க வேணுமென்று சொல்லித்தானே, தீப்பொருந்தும்போது அவர் இருவரும் பஸ்மமாகப் போகக் கண்டார். பாண்டிய ராஜ்ஜியத்தில் எரிந்து பஸ்பமான மாதவியும் கோவலனும் காவிரி ஆற்றில் விழும்போது தாமரைப் புஷ்பமாகி, உலாவி, கொஞ்சிக் குலாவிதான் போகக் கண்டேன்.’

நீரதிகாரம் - 29 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

இறப்பிலும் கண்ணகியைத் தனித்து விட்டுச் சென்றதை மூப்பன் கதையாகச் சொல்ல, இருளின் அடர்த்தி கூடியது.

“அழகுள்ள பர்வத பத்தினி கண்ணகையும்தானே பாண்டிய ராஜன் அரமனைக்குத் தன்னே ஓடோடிப் போனாள். கண்ணகை பாண்டியன் அரமனைக்குப் போனவுடன் தானே...”

மூப்பன் பாட, பின்னால் உட்கார்ந்திருந்தவர்கள், “கண்ணகை பாண்டியன் அரமனைக்குப் போனவுடன்தானே” என்று நீட்டிப் பாடினர்.

“ `நாடு தழைய வேணாம் சாமிநல்ல மழை பெய்ய வேணாம் சாமி’ என்று சொல்லி, பாண்டியன் அருகில் சென்றாள் கண்ணகி...’’

“கோபமாய்ப் போனாள்தானே கண்ணகை, பாண்டிய ராஜா அருகில் கோபமாய்ப் போனாள் தானே” கூட்டம் பின்னால் சொன்னது.

“ `பாண்டியனே கேளோ, என் சிலம்பைத் தர வேணும்’ என்று கண்ணகி கேட்கும்போது, `உன் சிலம்பு இங்கே எங்குமே இல்லையே’ என்று பாண்டிய ராஜா சொல்ல, `இங்கே வா’ என்று வானில் பறந்த கருடனைப் பார்த்து விளித்தாள் கண்ணகை.

`கெருடா, பாண்டிய ராஜன் பொண்டாட்டி சிலம்பு எங்கிருந்தாலும் போய்க் கொண்டு வர வேணும். நான் பழிக்குப் பழி கொடுப்பேன்’ என்று கோபமாய்ச் சொன்னாள்.’’


“பழிக்குப் பழி கொடுப்பேன். நான் பழிக்குப் பழி கொடுப்பேன்” கூடியிருந்தவர் சொல்லினர்.

“கெருடன் இதையுமே கேட்டு ஏழு கடல் கடந்து போய், ஏழு தலை நாகம் கையில் இருந்த சிலம்புதான் எடுத்து வந்தது.”

“கெருடன்தான் சிலம்பெடுத்து வந்தது.”

`` `பாண்டியனே கேளோ, உன் பொஞ்சாதி சிலம்பு. இதோ கொலுவில் வைத்தேன்’ என்று சொல்லி, பாண்டிய ராஜாவின் சிலம்பை அவன் அவையில் வைத்து, `என் சிலம்பைத் தர வேணும்’ என்று கேட்டாள் கண்ணகி.

`உன் சிலம்பு என் அரண்மனையில் எங்குமே இல்லை’ என்று பாண்டிய ராஜா சொல்ல...’’


மூப்பன் நிறுத்தினார்.

“என் பாதச் சிலம்பு பாண்டிய ராஜன் அரமனையில் எங்க இருந்தாலும் என் வலது கையில் ஏற வேணும் என்று சொல்லிக் கேட்டேன்.”

மூப்பன் கண்ணகிக்காக வாதாட,

கண்ணகியாய் உருவகித்தவன் வலது கையை நீட்டினான். பத்தினியின் பாதச் சிலம்பு அவனின் வலது கையில் ஏறியதைக் கண்டு கூட்டம் கைகுவித்தது.

கண்ணகி காளி ரூபமெடுத்தாள்.

“வஞ்சித்த தட்டான் குடலைக் குத்தி உருவிவிட்டுத் தானே தன்னோட வலது முலையைப் பிடிச்சு வலிச்சு எரியும்போது முலையின் பால்பட்ட இடங்கள் எல்லாம் அக்னியாகப் பொருந்திக் கொண்டுமே இருக்கக் கண்டேன்.”

“பால்பட்ட இடங்கள் எல்லாம் அக்னியாகப் பொருந்திக் கொண்டுமே இருக்கக் கண்டேன்” கூட்டம் பின்னால் சொல்லியது.

மதுரையை அக்னியில் பொருத்திய பின், வையைக் கரை பிடித்து நடந்தாள் கண்ணகை.

“பாண்டியன் பட்டணம், அக்னிப் பட்டணம் என்று சொல்லி, பொல்லாத சாபம் போட்டுவிட்டு வஞ்சிக் கெட்டு மலையாளம் குளிர்ந்த தேசம் என்று சொல்லி, விண்ணேத்திப் பாறை ஏறி நிலைகொண்டாள் பொன்னு கண்ணகை...”

“நிலைகொண்டாள் பொன்னு கண்ணகை”

“நிலை கொண்டாள் பொன்னு கண்ணகை.”

“கண்ணகி நிலைகொண்ட வனத்தினிலே முத்தியம்மை நம்மைக் குடிவைத்தாள்...”

“முத்தியம்மை நம்மைக் குடிவைத்தாள்.’’

“பொறந்த சோழ மண்ணை விலக்கினாபாண்டிய ராஜ்ஜியத்தை விலக்கினாஅம்மை மனம் குளிர்ந்து நின்ன வஞ்சி தேசத்துலவஞ்சி தேசத்துல...”

“அம்மை மனம் குளிர்ந்து நின்ன வஞ்சி தேசத்துல” கூட்டம் ஓவென்று அழுது பாடியது.

“அம்மை நின்ன இந்த வனத்துலஇந்த வனத்துல...”

உச்சஸ்தாயியில் எழுந்த அலறலில் உடையான் தனியாகவே நடந்து அங்கு வந்திருந்தார்.

“அம்மை நின்ன இந்த வனத்துல...”

காணிகளின் அழுகை காட்டின் அமைதியில் கலந்தது.

உடையான் பின்னாலிருந்து தன் குடிகளின் உயிர் பறிக்கும் துயரத்தைப் பார்த்தபடி நின்றார். அவர் கண்களிலிருந்தும் நீர் வழிந்தோடியது.

- பாயும்