மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 3

நீரதிகாரம்
News
நீரதிகாரம்

நீங்கள் செல்லுங்கள், உடன் வருகிறேன்” என்ற மேல்சாந்தி, தோளில் பட்டாடையைச் சுற்றிக்கொண்டு ஓடிவந்தார்.

பத்மநாபசாமியின் மலர்ப்பாதம் அடைந்த திருவிதாங்கூர் அரசர் விசாகம் திருநாளின் நல்லடக்கத்திற்காகச் சென்றிருந்த பூஞ்சார் அரசர் கோட ராம வர்மாவும் அவரின் மனைவி பாகீரதியும் பூஞ்சார் திரும்பிக் கொண்டிருந்தனர். வரும் வழியில் சாஸ்தா கோயிலுக்குப் போக எண்ணினார் அரசர்.

பம்பை ஆற்றின் கரையில் இருந்த பந்தள அரசர் ராஜசேகராவின் அரண்மனையில் பாகீரதியைத் தங்க வைத்தார். பாதுகாப்பிற்கு வந்த குதிரைகளையும் யானைகளையும் ஓய்வெடுக்க உத்தரவிட்டார். திருவிதாங்கூரில் இருந்து பல்லக்குத் தூக்கி வந்தவர்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளச் சொன்னார். ஒருவரும் பின்தொடர வேண்டாமென்று சொல்லிவிட்டு, மலைப்பாதையில் நடந்தார் கோட ராம வர்மா.

அரசர் தனியாகச் செல்வதை அரண்மனையின் உப்பரிகையில் நின்று கவலையுடன் பார்த்தாள் பாகீரதி தம்புராட்டி. அரசரின் திடீர் சபரிமலைப் பயணமும், அவரின் பயணத்தின்போது எப்போதும் உடன்செல்லும் பந்தளத்து அரசரின் வீரர்களும் இல்லாதது பாகீரதிக்கு யோசனையைத் தந்தது.

மகாராஜாவின் அகால மரணத்தில் நிலைகுலைந்திருந்த பாகீரதிக்குத் தனிமை வேண்டியிருந்தது. அரண்மனையின் உள்ளே சென்றவள், துக்கம் சுழற்ற கண்மூடிப் படுத்தாள்.

காற்றில் குளிர்ச்சி மிகுந்தது. ஒன்றிரண்டு மைல்களுக்கு முன்னால் மழை தொடங்கியிருக்கிறது என்றெண்ணிய அரசர் கோட வர்மா, நடையில் வேகம் கூட்டினார்.

ஓடுகள் வேயப்பட்ட சின்னஞ்சிறிய சபரிமலை தேவஸ்தானத்தில் நுழைந்த பூஞ்சார் அரசரைப் பார்த்த தந்திரிகள் எழுந்து நின்று வணங்கினர். இருகரம் குவித்து சாஸ்தாவை வணங்கிய அரசர், அங்கிருந்த கற்பலகையில் அமர்ந்தார்.

மேல்சாந்திக்குத் தகவல் போனது. கோயிலின் கீழண்டையில் ஓலைக்குடிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போற்றியை உசுப்பிய தந்திரி, “வல்லிய ராஜா பூஞ்சார் வந்திருக்கிறார். திடீர் வருகை. என்னவோ ஏதோவென்று பதற்றமாக இருக்கிறது, வாரும்” என்றார்.

“கொட்டு மேளம்?”

“வந்துகொண்டிருக்கிறார்கள். மற்றபடி மாலை, மரியாதை ஆகிவிட்டது.”

“நீங்கள் செல்லுங்கள், உடன் வருகிறேன்” என்ற மேல்சாந்தி, தோளில் பட்டாடையைச் சுற்றிக்கொண்டு ஓடிவந்தார்.

“வரணும் வரணும், பூஞ்சார் தம்பிரான்” அரசரை வணங்கியபடி மேல்சாந்தி உள்ளே வந்தார். மேல்சாந்தியின் வணக்கத்தைத் தலையசைப்பில் ஏற்றுக்கொண்ட அரசர், அவரை அமரச் சொல்லி சைகை காண்பித்தார்.

மேல்சாந்தி அமர்ந்தார். தந்திரிகள் தள்ளி அமர்ந்தனர்.

மேல்சாந்தியைப் பார்த்த அரசர், “பிரசன்னம் பார்க்க வேண்டும் போற்றியாரே..!” என்றார்.

தந்திரி ஒருவர் நெய் விளக்கு ஏற்றினார்.

திருவிதாங்கூர் அரசரின் அகால மரணத்தால் மனம் கலங்கி வந்திருக்கிறார் என்பதையுணர்ந்த மேல்சாந்தி, கண்களை மூடினார். நெற்றி சுருக்கி, மனதை ஒரு புள்ளியில் நிறுத்தினார்.

கண்களை மூடியிருந்த மேல்சாந்தி, மனம் ஓர்மைபெற்ற கணத்தில் கண்களை விழித்துச் சோழிகளை விசிறினார். உருண்டோடிய சோழிகள் சுழன்று நிற்கும்வரை இமைக்காமல் பார்த்தார். சோழிகள் உருண்டோடி நின்றவுடன் எண்ணிக்கையைக் கணக்கிட்டார். சோழிகள் சுட்டிய எண்ணிக்கையில் நிறைவில்லாதவராக, சோழிகளை மீண்டும் கையிலெடுத்து, உள்ளங்கை குவித்து, கண்மூடிப் பிரார்த்தனை செய்து, உள்ளங்கைச் சோழிகளை விசிறினார். சோழிகள் உருண்டோடி நிற்கும்முன் மேல்சாந்தியின் கண்கள் பதற்றம் காட்டின. விரல்களில் நடுக்கம் தெரிந்தது. எண்ணிக்கையைப் பார்த்த மேல்சாந்தியின் முகத்தில் மேலும் நிறைவின்மை கூடியது.

நீரதிகாரம் - 3

தயங்கிய தொனியில் பிரசன்னம் சொல்ல ஆரம்பித்தார்.

“அரசருக்கு அனுகூலமாக இல்லை, இப்போதைய கால வர்த்தமானம்.”

அரசரின் முகம் மாறியது.

“உங்கள் கைமீறித்தான் நடக்கும் தம்பிரானே.”

“என்ன சொல்லுகிறீர்கள்?”

“உங்கள் சம்பத்துகள் நீர்வழிப் போகும்.”

உள்ளுக்குள் மங்கலாக இருந்த குழப்பங்கள் உருத்திரண்டு தெளிவடைவதாகத் தோன்றியது ராம வர்மாவுக்கு.

“இப்போதைக்கு நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்.” ராம வர்மாவின் குரல் துடைத்து வைத்ததுபோல் உணர்ச்சிகளற்று வெளிப் பட்டது.

“தம்புரானே, இந்த அடர்வனத்தின்மேல், பேரிருள் சூழ்ந்திருக்கிறது. பசுமை மறையச் செய்யும் காரிருள்.”

மேல்சாந்தி சோழிகளை வெறித்துப் பார்த்தார்.

திடீரென்று தரைக்காற்று மேலெழுந்து வீசியது. தூரத்தில் இருந்து மழையைக் கொணர்ந்தது. மழையும் காற்றும் சேர்ந்து கோயிலின் மரக்கதவுகளைப் படபட வெனத் தட்டி, பெருங் கூச்சலிட்டன. கோயில் கர்ப்பகிரகத்தின் ஓட்டுக் கூரையும் மரத்தாலான குறுக்குச்சட்டங்களும் பிய்த்துக் கொண்டு போவதுபோல் சூறைக்காற்று வலுத்தது.

மேல்சாந்தி முன்பாக எரிந்துகொண்டிருந்த நெய்விளக்கு அணைந்தது. மேல்சாந்தி அச்சத்தில் கைகூப்பினார்.

“நீங்கள் சொல்வது தந்திரமா, மந்திரமா, போற்றி?”

“மந்திரத்தையும் தந்திரத்தையும் மீறியது தம்புரானே. நான் சொல்வது தர்க்கத்தின் பாற்பட்டது.”

“போதும் போற்றி, வருவதை எதிர்கொள்வோம். எனக்காகச் சாஸ்தாவிடம் வேண்டிக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு எழுந்தார் பூஞ்சார் அரசர்.

“தம்புரானின் உத்தரவு.”

“பம்பையில் தம்புராட்டி பாகீரதி காத்திருக்கிறாள், கிளம்புகிறேன்” என்ற அரசர், கோயிலுக்குப் பின்புறம் இருந்த காட்டாற்று வழியாகப் பம்பை நதி நோக்கி நடந்தார்.

“தம்புரான், காட்டாற்றை நம்ப வேண்டாம். திடீரென நீர்மட்டம் உயரும். மரம் மட்டைகளை இழுத்துக்கொண்டு புதுவெள்ளம் வரும். எப்போதும் செல்லும் காட்டுப்பாதையிலேயே போய் வாருங்கள்.”

“நதிவழி போனால் தூரம் குறையும். மலைப்பாதையில் செல்லும் நேரத்தில், கால்வாசி நேரம் போதும், பம்பைக்குப் போய்விடுவேன்” என்று சொல்லி, காட்டாற்றின் கரையில் வேகமாக நடந்தார்.

`மதுர மீனாட்சி தொணை’ என்று தங்கப் பட்டயத்தில் எழுதியிருந்த தலைப்பாகை, தந்தத்திலான செங்கோல் இரண்டையும் விட்டுவிட்டு அரசர் சென்றதைப் பார்த்தார் மேல்சாந்தி.

“என் ஐயனே..!” என்று வாய்விட்டு அரற்றிய மேல்சாந்தி, தந்திரி ஒருவரிடம் அரசரின் தலைப்பாகையையும் செங்கோலையும் கொடுத்தார்.

கையில் வாங்கிய தந்திரி, காட்டாற்றின் வழியே ஓட்டமும் நடையுமாக அரசரைப் பின்தொடர்ந்தார்.

பெருமழை முகத்திலறைய, காலுக்குக் கீழே புரளும் வெள்ளத்தில் நடந்தார் கோட வர்மா.

‘மீனாட்சி விரட்டிக்கொண்டே இருக்கிறாளே? மதுரையில் இருந்து மானவிக்ரம குலசேகரப் பெருமாள், குலதெய்வமான மீனாட்சியையும், அவளுக்காகச் சுந்தரேசுவரரையும் தூக்கிச் சுமந்து தேச தேசமாக நடந்தாரே? அரசிகளோடும் பிள்ளைகளோடும் எவ்வளவு துயரத்தில் வைகையின் மேற்குக் கரையில் பயணித்தாரோ? குடிகள் பிழைப்புக்காகச் சொந்த மண்ணை விட்டு வெளியேறினாலே, அவலம். நாடாண்ட அரசனை, தன் குலதெய்வத்தையும் சுமந்து வெளியேற்றிய துர் ஊழ் என்னவோ? எழுநூறு வருஷமாகிறது. பொய்யாக் குலக்கொடி வையை வேண்டாமென்று, பேரியாற்றின் பெருவெள்ளத்தைக் கடந்து, மீனாட்சியாற்றின் கரையில் அடைக்கலமானோம். மதுரையில் தாயாதி சண்டைகளுக்கு ரத்தம் சிந்தியது போதுமென்று, சேர நாட்டின் மலைகளுக்குள் ராஜ்ஜியம் அமைத்தோம். இரு பாதங்கள் ஊன்றும் நிலம் போதுமென்று பொறுமை காத்து நிற்கிற பூஞ்சார் ராஜ்ஜியத்தை எதிரிகள் அழிக்க நினைக்கலாம்; மண உறவில் இருப்பவர்களுமா?

மகாராஜா விசாகம் திருநாள் நல்லடக்கத் திற்காகத் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்த இரு வார காலத்தில் எத்தனை செய்திகள்? பேரியாற்று அணை கட்ட, பிரிட்டிஷ்காரர்களுக்கு மகாராஜா எப்படிக் குத்தகை தர முடியும்? என்னுடைய ராஜ்ஜியத்தின் இடத்திற்கு உரிமை கொண்டாடி, கையெழுத்திடும் அளவிற்குப் பேச்சுவார்த்தைகளை நகர்த்தியிருக்கிறார்கள்? மகாராஜா எப்படி உடன்பட்டார்? குத்தகைப் பணம் நாற்பதாயிரம் திருவிதாங்கூர் அரசருக்குப் பெரிய தொகையா? வெள்ளைக்காரர்களுடனான சகவாசத்தில் அவர்களின் தந்திரத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் திருவிதாங்கூர் அரண்மனையில் உள்ளவர்கள்.

பிரிட்டிஷார் அணைகட்டக் கேட்கும் இடத்திற்குத் தாம் உரிமையாளர் இல்லையென்பது மகாராஜாவுக்குத் தெரியாதா? நாள் முழுவதும் பூவையும் செடியையும் பார்த்துக் கொண்டிருந்தாலும், நிலம் யாருக்கு உரிமையென்று மகாராஜாவிற்கு நினைவு வராதா? சமஸ்தானத்தின் தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிற திவான் ராமய்யங்காருக்குத் தெரியாதா? பூஞ்சார் அரசன் மட்டுமல்ல நான்; திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மருமகன். அவருடைய மகள் பூஞ்சார் கொட்டாரத்தில், என் அரசியாக இருக்கிறாள். எனக்குச் செய்யும் துரோகம், மகளுக்கும் சேர்ந்ததுதான் என்பதை அரசர் அறிய மாட்டாரா?

நாடில்லாமல், குடிகளில்லாமல், அதிகாரமில்லாமல் இருந்த காலத்திலும் அரசர் என்ற மேன்மை எங்கள் ரத்தத்தில் இருந்தது. நூற்றைம்பது வருஷ வரலாறு இல்லாத திருவிதாங்கூர், ஆயிரம் வருஷ வரலாறு உள்ள எங்களைத் துரோகத்தால் மட்டும்தான் வீழ்த்த முடியும். எதிரிகளைப் போர்க்களத்தில் மட்டுமே சந்திப்பவர்கள் நாங்கள். இவர்களைப் போலவா..?’

நினைவுகள் கரை புரள, ராம வர்மாவுக்கு மனம் பொங்கியது.

‘அரசர் விசாகம் திருநாள் உயிரோடு இருந்திருந்தால் அவரை எதிர்கொள்வது இன்னும் வலியாக இருந்திருக்கும். எதிரிகளை வீழ்த்தத் தேவை வரும்போது, நம்முடன் நட்பு பாராட்டுகிறார்கள். எதிரிகளற்ற காலங்களில் நம்மையே எதிரிகளாக்கிக் கொள்கிறார்கள்.’

நீரதிகாரம் - 3

பம்பை நதி தீரத்தில் சுழற்றியடித்த காற்றும், வானம் பிளந்து கொட்டிய மழையும் பூஞ்சார் அரசரின் நடைவேகத்தைக் குறைக்கவில்லை. அரசர், கடந்த காலத் துயரங்களின் சூறாவளியில் நடந்துகொண்டிருந்ததில், அவர்மேல் பெய்துகொண்டிருந்த மழை, பூத்தூவல்போல் வழிந்தோடியது.

ஆறடி உயரம், முற்றிய தேக்குபோல் வைரம் பாய்ந்த தேகம், மழையில் நனைந்த பிறகும் நடுங்காமல் மூங்கிலென நிமிர்ந்து நின்றது. மனம் மீனாட்சியைத் தியானித்தது. அவளின் குழைந்த சிரிப்பும் பளீரிடும் மூக்குத்தியின் ஒளியும் இளஞ்சூடாக உள்ளிறங்கின. தரை வரை இறங்கிய மின்னல், மீனாட்சியின் குரலில், “கவலைப்படாதே ராம வர்மா, நானே உன்னுடன் இருக்கிறேன். நிலமென்ன நிலம்?” எனச் சொல்லுவது போலிருந்தது.

தன் காலடிக்குள் சிறு கங்கு தெறித்ததுபோல் பதறிய அரசர், வேக நடைக்கு மாறினார்.

“மீனாட்சித் தாயே, நீயே தொணை” என்று அவரின் உதடுகள் உரக்கச் சொல்லின.

“நானே துணையென்று சொல்லிவிட்டு, யாருக்கு அஞ்சி ஓடுகிறாய் ராம வர்மா?”

உள்ளிருந்து ஒலித்தது மீனாட்சியின் குரல்.

“மந்திரம், தந்திரம், தர்க்கம் என்று சொன்னானே மேல்சாந்தி? உனக்கு மந்திரமும் தந்திரமும் தேவையில்லை; யந்திரம் மட்டுமே தேவைப்படும். அதைச் சபரிமலையிலேயே விட்டுவிட்டு வந்தாயே ராம வர்மா? உன் தாயின் பெயர் பொறித்த யந்திரம் உன் சிரசில் இருந்ததே? சிரசில் மகுடமணியும் உரிமை திருவிதாங்கூர் அரசனுக்குக்கூட இல்லையே?”

‘எப்படி மறந்தோம் யந்திரத்தை?’

கால்கள் பிடித்திழுத்ததுபோல் நின்றன. பூஞ்சார் அரசருக்குத் தலை சுற்றியது.

பதற்றம் குறைத்து, நடந்ததை எண்ணினார். எண்ணங்கள் ஒன்றின்மேல் ஒன்றாக வளர்ந்தன.

மழையைப் பொருட்படுத்தாமல் தந்திரி ஓடிவருவது தெரிந்தது. சட்டென்று மனத்திற்குள் நிம்மதி பரவியது. அருகில் வந்த தந்திரியின் கையிலிருந்த தலைப்பாகையையும் தந்தச் செங்கோலையும் வணங்கி வாங்கினார். தலைப்பாகையைச் சிரசில் அணிந்தார். செங்கோலைக் கையிலேந்தினார்.

“மீனாட்சித் தாயே, நீயே தொணை” என்று இரு கைகுவித்து மழைநோக்கி வணங்கிய அரசர், நிதானமாக அடியெடுத்து வைத்தார்.

பம்பை அரண்மனைக்குப் பூஞ்சார் அரசர் வந்தபோது மழை மேலும் வலுத்திருந்தது.

பெருமழையைப் பொருட்படுத்தாமல் அரசரும் பாகீரதி தம்புராட்டியும் பயணித்த நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி, பூஞ்சார் நோக்கிப் பாய்ந்தது. அரசரின் சாரட்டிற்கு முன்பின்னாக வந்த நான்கு யானைகளையும் ஆறு குதிரைகளையும் பம்பை ஆற்றங்கரையில் நிறுத்திய அரசர், “மழை விட இரண்டு நாளாகும். பல்லக்குகளோடு சேர்ந்து தங்குங்கள். மழை விட்ட பிறகு வரலாம். நாங்கள் பத்திரமாகப் போய்விடுவோம்” என்று சொல்லிவிட்டுச் சாரட்டில் கிளம்பினார்.

பயணம் சென்று திரும்பும் வேளைகளில், பூஞ்சார் கொட்டாரத்திற்கு நேரடியாக வரும் வழக்கமில்லை. மீனாட்சி ஆற்றை ஒட்டிய கொட்டாரத்தில் தங்கித்தான், பிறகு பூஞ்சார் கொட்டாரத்திற்குத் திரும்புவார். இன்றும் அவர்களின் சாரட் வண்டி மீனாட்சி ஆற்றை நோக்கிச் சென்றது.

சாரட்டின் ஒலி கேட்ட வல்லிய கொட்டாரத்துக்குள் சங்கீத வாத்தியங்கள் முழங்கின.

கொட்டாரத்துக்குள் நுழைந்தவுடன், மகாராஜா விசாகம் திருநாளின் நினைவு வந்தது தம்புராட்டிக்கு. அவருடைய அன்பிற்குரிய மகளான தனக்கு ஆற்றையொட்டிய இந்தக் கொட்டாரத்தை, தேக்கும் சந்தன மரங்களும் இழைத்துக் கட்டித் தந்தவர். கொட்டாரத்தின் ஒவ்வொரு இடமும் பத்மநாபபுரம் அரண்மனையின் நினைவைத் தரும். பொங்கிய அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், அழுதபடி பூஜையறைக்குள் ஓடினாள் பாகீரதி.

அரசருக்கும் தம்புராட்டிக்கும் தனிமை தேவைப்பட்டது.

உப்பரிகையில் அமர்ந்திருந்த பூஞ்சார் அரசர் மாலைநேர மழையையும் மழைத்துளிகள் மீனாட்சி ஆற்றில் விழுவதையும் விழி இமைக்காமல் பார்த்தார்.

பூஞ்சாரில் இருந்து நான்காவது மைலில் மேல்மலையின் மடிப்பொன்றிலிருந்து பிறந்தோடி வரும் மீனாட்சி ஆறு தனித்துவமானது. ஊற்றின் பிறப்பிடத்திலேயே பிரவாகம் எடுப்பதில்லை ஆறுகள். மெதுவாக மலை விட்டு, சமதளத்திற்கு இறங்கி, பிரவாகமெடுக்கும். ஜன்ம ஸ்தலத்திலேயே பிரவாகமெடுத்துக் கரைபுரண்டு ஓடுபவள் மீனாட்சி. அரபிக் கடலைச் சேரும்போதும் மரக் கிளைகளும், வெண் குறுமணலுமாக ஆற்றின் முகத்துவாரமெங்கும் கிடக்கும்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்மேல் மைசூர் சுல்தான் அயிதர் அலியும், அவர் மகன் திப்பு சுல்தானும் எப்போதுமே பகை பாராட்டுவார்கள். திருவிதாங்கூரை முற்றுகையிட வந்த மைசூர் படைகளிடமிருந்து திருவிதாங்கூரை இயற்கை காப்பாற்றி வந்திருக்கிறது. தொண்ணூறாண்டு களுக்கு முன்பு, திப்பு சுல்தான் திருவிதாங்கூர்மீது படையெடுத்து வந்தபோது மீனாட்சியாறுதான் மலையாள தேசத்தைக் காப்பாற்றியது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்மேல் அடிக்கடி படையெடுத்து வரும் திப்பு சுல்தானின் படைகளுக்கு நிரந்தரத் தோல்வியைக் கொடுக்க, அப்போதைய பூஞ்சார் அரசர் உதவினார்.

‘பூஞ்சார் அரசே! உங்கள் மீனாட்சியின் ஆலவாயில் வைத்து மானவர்மனான தாங்கள் பராக்கிரமம் காண்பிக்க வேண்டும்’ என்று திருவிதாங்கூர் அரசர் எழுதிய லிகிதம் இன்றும் அரண்மனையில் இருக்கிறது.

எதிரிகள் அறியாமல் பூஞ்சார் அரசர் மீனாட்சி ஆற்றில் நீர்த்தேக்கம் ஒன்றைக் கட்டி, நீர் தேக்கினார். மண்ணைக் குழைத்து, இலை, தழை சேர்த்து, மரப்பலகைகள் கொண்டு கட்டப்பட்டது அந்தத் திடீர் மண் அணை. அணையைத் தொடர்ந்து பலப்படுத்தினார். திப்பு சுல்தானின் படைகள் திருவிதாங்கூரை நோக்கிப் படையெடுத்து வரும் செய்தியறிந்தார். திப்புவின் படைகள் ஆலவாயில் ஆற்றைக் கடக்கும் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட்ட அரசர், அணையைப் படிப்படியாக உடைத்துவிட உத்தரவிட்டார்.

எட்டு மணிநேரப் பயணத்தில் ஆற்று நீர் ஆலவாயை அடைந்தபோது, புதுவெள்ளமென அசிரத்தையாக நினைத்துத் திப்புவின் முழுப்படையும் வெள்ளத்தில் குளித்து, கும்மாளமிட்டது. கண்மூடிக் கண் திறப்பதற்குள், பிரவாகமெடுத்திருந்த மீனாட்சி ஆறு, படையின் சரிபாதி வீரர்களை அடித்துச் சென்றது. நீரோட்டம் முழுக்க, மூழ்கி மூழ்கி எழுந்த வீரர்களின் தலைகள் புதுப்புனலில் பனங்காய்கள்போல் மிதந்தன.

அகன்று விரிந்த காவிரியின் பிரவாகத்தைப் பார்த்திருந்த திப்பு சுல்தானுக்கு இரு கரைகளும் தளும்பத் தளும்ப மரம், செடி, இலை தழைகளுடன் ஆக்ரோஷமாகப் பாய்ந்த காட்டாறு அச்சத்தைக் கொடுத்தது. புதுவெள்ளம் தந்த சீரழிவோடு காலராவும் சேர்ந்தது. தண்டு இறங்கியிருந்த படையில் வீரர்கள் கும்பல் கும்பலாகச் செத்து விழுந்தனர். பெரும் மனித இழப்பைச் சந்தித்த திப்பு சுல்தான், திருவிதாங்கூர் படையெடுப்பைக் கைவிட்டுச் சமஸ்தானம் திரும்பினார்.

‘மீனாட்சியின் நீரைத் தேக்கி, திருவிதாங்கூர் பகுதிக்குள் எதிரிகள் வராமல் காத்தது எம் பூஞ்சார் அரசு. இன்று பேரியாற்றில் அணைகட்ட திருவிதாங்கூர் அரசர் என்னிடம் சம்பிரதாயத்திற்குக்கூட வாதிக்கவில்லை. பீர்மேட்டில் இரண்டு வருடங்களுக்கு முன்பு, தேவாலயம் கட்டுவதற்கு நான்கு ஏக்கர் நிலம் கேட்ட பிரிட்டிஷ் கவர்னர் என்னிடம்தான் குத்தகைக்கு ஒப்பந்தம் போட்டிருந்தார். திருவிதாங்கூர் அரசரை அப்போது கலந்தாலோசிக்காத பிரிட்டிஷ் ரெசிடெண்ட், இப்போது ஏன் திருவிதாங்கூரில் ரகசிய ஆலோசனை நடத்துகிறார்?’

தன்னைச் சுற்றி நடக்கும் மர்மங்களைப் புரிந்துகொள்ள முயன்ற அரசர் திணறினார். அழுத்தம் தாங்க முடியாமல், கொட்டாரத்தின் கீழ்த்தளத்தில் இருந்த சுரங்கப்பாதை வழியாக ஆழி மண்டபத்தை அடைந்தார். கீழிறங்கி, மண்டபத்தின் கல்படிக்கட்டில் உட்கார்ந்தார். மருமகனின் தேசத்தில் விசாகம் திருநாள் தன் மகளுக்காகப் பார்த்துப் பார்த்துக் கட்டிப் பரிசளித்த வல்லிய கொட்டாரம்.

எதிர்திசை மழை. சாரல் முகத்தில் விழுந்தது. பூஞ்சார் அரசர் அடுத்தடுத்திருந்த படிகளில் நிதானமாகக் கால் வைத்து, ஆற்றில் இறங்கினார். நெஞ்சுவரை நீர்மட்டம் இருந்தது. தண்ணீர் சீரான வேகத்தில் ஓடியது. காலடியில் குறுமணல். காலைக் கடிக்கும் மீன்கள். ஸ்படிகம் போன்ற தெளிந்த வெதுவெதுப்பான ஆற்றின் பிரவாகத்திற்கு அரசரின் தலையில் விழும் குளிர்ந்த மழைத்தண்ணீர் இரண்டுவிதமான சீதோஷ்ணங்களைக் கொடுத்தது. “மீனாட்சித் தாயே..!” என்று ஆற்றில் மூன்றுமுறை மூழ்கியெழுந்தார்.

சுரங்கப் பாதையின் கல்படிக்கட்டுகளின் வழியே தும்பைப்பூ போன்ற முண்டு அணிந்த பாகீரதி வந்தாள். அவளுடன் நான்கு சேடியர். ஆற்றுக்குள் நின்றிருக்கும் அரசரைப் பார்த்து வெட்கச் சிரிப்பு சிரித்த பெண்கள், தம்புராட்டியைப் பார்த்தனர். “போங்கள்...” என்று சேடிகளுக்குப் பார்வையால் அனுமதி கொடுத்த பாகீரதி, படிக்கட்டில் உட்கார்ந்து அரசரைப் பார்த்தாள்.

‘`பம்பை ஆற்றில் குளித்தேன் தம்புரானே. தலைக்குள் நீர்க்கோத்தது போல கனமாக இருக்கிறது. தலைவலியும். மீனாட்சியில் நீராட்டுச் செய்ய நினைத்தேன். நீங்களும் மீனாட்சியுடன் இருப்பதாக அறிந்தேன். நானும் இறங்கலாமா?”

நீரதிகாரம் - 3

“கேட்க வேண்டுமா? வா, தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்கிறது. குளிர்ந்த மழையில் நனைந்துகொண்டே ஆற்றில் மூழ்கியெழுந்தால் எல்லாம் சரியாகிவிடும் பாகீரதி. வஸ்திரமில்லாமல் குளித்தால் உடல்நோய் தீர்வதுடன், புண்ணியமென்று சொல்வார்கள்.”

பாகீரதி சிரித்தாள்.

“இருக்கிற புண்ணியம் போதும், தம்புரானே.”

‘`நான் கைகொடுக்கிறேன் வா..!” என்று அரசர் அவளை நோக்கி நடந்தார்.

தண்ணீருக்குள் மெதுவாகத்தான் நடக்க முடிந்தது.

“கஷ்டப்படுத்திக்கொள்ள வேண்டாம் தம்புரானே. நானே இறங்கிக்கொள்கிறேன். மீனாட்சி எனக்கும் வேண்டியவள்தான்” என்றபடி தண்ணீருக்குள் இறங்கிய பாகீரதி, அரசரை நோக்கி முன்னேறினாள்.

அவர் தோளைப் பற்றியணைத்த பாகீரதி, அவரது மார்பில் முகம் புதைத்து விம்மினாள்.

“வல்லிய ராஜா, என் தம்புரானே, என் ப்ரிய நம்பூதிரியே, நம் எதிர்காலம் எப்படியிருக்கும்? சாஸ்தாவின் சந்நிதியில் பிரசன்னம் பார்த்தபோது திடீரென வந்த சூறைக்காற்றும் தலைப்பாகையை நீங்கள் விட்டுவிட்டு வந்ததும், எனக்கு அச்சமாக இருக்கிறது.”

“அச்சப்பட ஒன்றுமில்லை, பாகீரதி. வாழ்க்கை இழப்புகளையும் ஆசீர்வாதங்களையும் சரிசமமாக வைத்திருக்கிறது. இப்போது நாம் எதிர்கொள்ள வேண்டியது இழப்பா? ஆசீர்வாதமா? அதுதான் நமக்குத் தெரிய வேண்டியது.”

“மகாராஜாவின் இழப்பை, அம்மாச்சி (அம்மா) எப்படித் தாங்குவாரோ? தன்னுடைய வாழ்வு நிறைவுக்கு வந்துவிட்டதை மகாராஜா இறப்பதற்கு ஒருநாள் முன்பே உணர்ந்துகொண்டார். அம்மாச்சியையும் எங்களையும் பார்க்க நினைத்திருக்கிறார். அம்மாச்சியும் நாங்களும் மகாராஜாவைப் பார்க்கச் சென்றோம். மகாராஜாவின் அருகில் செல்ல உணர்ச்சிகளற்ற சம்பிரதாயங்கள் அனுமதிப்பதில்லை. உங்களுக்கே தெரியுமே? மகாராஜாவுடன் அம்மாச்சி சரிசமமாக எங்குமே அருகில் நிற்க முடியாது. ஆனால் மகாராஜா ஒவ்வொருவராக எங்களை அருகில் அழைத்துத் தொட்டுப் பார்த்தார். கண் கலங்கியவர், அங்கிருந்து கிளம்பச் சொன்னார். தயங்கித் தயங்கித்தான் கிளம்பினேன். வாசலருகில் நின்று திரும்பிப் பார்த்தேன் அரசே. மகாராஜா இருகரம் குவித்து என்னையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர் திருவடியிலேயே விழுந்து அழ வேண்டும் போலிருந்தது.”

பேச்சை முடிக்க முடியாமல் பாகீரதி வெடித்தழுதாள்.

ராம வர்மா பாகீரதியின் நனைந்த கூந்தலை வருடினார்.

முதிராச் சிறுமியாக அழும் பாகீரதியைப் பார்த்து, ராம வர்மாவுக்கும் துயரம் பொங்கியது. காலடியில் விரைந்தோடும் மீனாட்சியை நினைத்தார். காலமும் அவ்வாறே விரைந்தோடிக் கொண்டிருக்கிறது என்று மின்னலென சிந்தனை ஓடி மறைந்தது அவருக்குள்.

சூழலை இலகுவாக்க நினைத்தார்.

“மகாராஜாவின் மகள் நீ. உன் வயிற்றில் பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் திருவிதாங்கூர் மகாராஜாவாகலாம். பெண்ணாக இருந்தால் மகாராஜாவிற்கு மனைவியாகலாம்.”

பாகீரதி விசும்பலை நிறுத்தி, கோட வர்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

“ஆணாகப் பிறந்து மகாராஜாவாவது நல்லதுதான். பெண் பிறந்து தம்புராட்டியானால் நம் பூஞ்சார் தேசம்போல் அரசரோடு சரிசமமாக உட்கார முடியாது. அரசியென்று அரண்மனையில் உள்ளவர்கள் பேருக்குக்கூட அழைக்க மாட்டார்கள்.”

“அரசன் உண்டு; அரசி இல்லை. உங்களுடையது அதிசய சமஸ்தானம்.”

“ஆமாம் அரசே. அரசரின் தம்புராட்டி ராஜ்ஜியத்தின் முதல் பெண்ணாக அரசருடன் நின்று எந்த மரியாதையையும் பெற முடியாது. மகாராஜாவின் பிள்ளைகளைச் சுமந்து பெற்று, தரவாடுகளில் அம்மாச்சிகளாக இருக்க வேண்டியதுதான்.”

“திருவிதாங்கூருடனான மண உறவு உன்னுடன் முடியட்டும். நம் பிள்ளைகள் துரோகத்தின் அரியணையில் அமர வேண்டியதில்லை” என்ற ராம வர்மா அவளை அணைத்தபடி ஆற்றுக்குள் மூழ்கினார்.

அரசரை அணைத்திருந்த பிடி நெகிழ, மூச்சுத் திணறினாள் பாகீரதி.

- பாயும்