மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 33 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

“நீயெல்லாம் பேசக்கூடாதுதான். காவக் காக்குற பயலுக்குப் பேச்சுக் கூடாதுடே. சரிதான். பேசுறதுக்கு குலமிருக்கே?”

நீரதிகாரம் - 33 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

தங்கசேரிக் கோட்டைக்குள் இருக்கும் கிறிஸ்தவர்கள் கலகம் செய்கிறார்கள் என்ற சேதி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் காரியக்காரர் சங்கரன் தம்பிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஒப்பந்தம் கையெழுத்தாகவிருந்த நிலையில் லெட்சுமி தம்புராட்டியிடமிருந்து கடிதம் வந்தவுடன் ரெசிடென்ட் ஹானிங்டன் துரிதமாகச் செயல்பட்டு, மெட்ராஸ் கவர்னருக்கு நேரடியாகக் கடிதம் கொடுத்தனுப்பினார். மெட்ராஸ் கவர்னர் தங்கசேரியை விட்டுக்கொடுப்பது குறித்து முடிவெடுப்பது தன்னுடைய அதிகாரத்திற்குள் இல்லையென்று சொல்லி, பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராய்க்குக் கடிதம் எழுதினார். வைஸ்ராய் டப்ரின் பிரபுவும் பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பகுதியை விட்டுக்கொடுப்பதெல்லாம், பிரிட்டிஷ் பேரரசியால் நியமிக்கப்பட்ட தன் அதிகார எல்லைக்குள் இல்லையென்று சொல்லி, லண்டனில் இருக்கும் பிரிட்டிஷ் இந்தியச் செயலருக்கு எழுதினார்.

ஆட்சியதிகாரம் செலுத்தும் நாடுகளில் பிரிட்டிஷார் மிகக் கவனமாக ஒவ்வொரு சிக்கலையும் கையாளுவது இந்தியாவில்தான். இந்தியாவைப் பற்றி நன்கறிந்துகொண்ட பிரிட்டிஷார், இந்தியா முழுமைக்குமாக ஒரே நீதி என்ற கொள்கையை முதலில் கைவிட்டார்கள். இந்தியாவின் வட திசைக்கொரு நீதி, அணுகுமுறை, தென் திசைக்கொன்று, சாதிக்கொன்று, மதத்திற்கொன்று, பிராந்தியத்திற்கொன்று, சமஸ்தானத்திற்கொன்று, தங்களுக்கு அணுக்கமானவர்களுக்கொன்று, கொஞ்சம் முரண்டு பிடிப்பவர்களுக்கொன்று என நீதியைப் பல பிரிவுகளின்கீழ் பகுத்திருந்தார்கள். காலச்சூழலும் சில நேரங்களில் நீதியின் போக்கை திசை மாற்றும். திருவிதாங்கூர் பிரிட்டிஷாருக்கு அணுக்கமான சமஸ்தானம். வியப்பிலும் வியப்பாய் திருவிதாங்கூர் சமஸ்தானம் பெரியாறு அணைத் திட்டத்தில் தங்களிடம் கடுமை காண்பித்ததை பிரிட்டிஷ் சர்க்கார் அனுமதித்தது.

அதிக வருவாய் வரும் அஞ்சுதெங்கு, தலைச்சேரிக் கோட்டைகளை விட்டுக்கொடுக்க மறுத்த பிரிட்டிஷ் பேரரசி, திருவிதாங்கூர் உள்நோக்கத்துடன்தான் கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கும் தங்கசேரியைக் கேட்கிறது என்றவுடன் விட்டுக்கொடுக்க சம்மதித்தது அரிய நிகழ்வு. யாரும் யூகிக்க முடியாத இம்மாற்றங்களுக்கெல்லாம் காரணம், கடந்த இருபது, முப்பது வருஷங்களில் பிரிட்டிஷார் அடக்குமுறையாளர்கள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்கள் என்ற நிலைக்கு முன்னேறியதுதான். மீரட் முதல் டெல்லி வரை பரவிய சிப்பாய்க் கலகத்தை ஒடுக்கிய பிறகு, பிரிட்டிஷாருக்கு எதிரான எழுச்சிகள் குறையத் தொடங்கின. தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் ஆயுதங்களையும் உள்ளே மறைத்து வைத்து, இந்திய அரசர்களைப்போல் ஆடைகள் உடுத்தி ஆட்சியாளர்களாய் வலம்வருகிறார்கள் பிரிட்டிஷார். வைஸ்ராய் பேரரசராகியிருந்தார். கவர்னர்கள் சமஸ்தானதிபதிகளாகியிருந்தார்கள். கலெக்டர்கள் குறுநில மன்னர்களாகியிருந்தார்கள். இப்பின்னணியில்தான் லண்டன் செயலரிடமிருந்து பெரியாறு அணை கட்ட இடம் கொடுக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குத் தங்கசேரியை விட்டுக்கொடுக்க அனுமதித்துக் கடிதம் வந்தது.

ஹானிங்டனும் பென்னி குக்கும் திவான் ராமய்யங்காரும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான நாள் குறித்தார்கள். நாள் குறித்த இரண்டு நாளுக்குள் தங்கசேரியில் கலகம் வெடித்தது. கிறிஸ்தவர்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைய மறுத்து ஒன்றுதிரண்டார்கள். தேவாலயங்களின் வாசல்களில், தங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வரை எழுந்து செல்ல மாட்டோம் என்று அமர்ந்திருக்கும் சேதி வந்தபோதுதான் சங்கரன் தம்பிக்குக் கோபம் வெடித்தது.

நீரதிகாரம் - 33 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

சேதி கொண்டுவந்த நாயரிடம் எரிந்துவிழுந்தார்.

“என்ன நடக்கிறதுன்னு முழுமையாச் சொல்லுடே.”

“சிரியன், ரோமன், ப்ராட்டஸ்ட் என எல்லாப் பிரிவு கிறிஸ்தவர்களும் அவரவர் திருச்சபை முன் அமைதியாக உட்கார்ந்திருக்கிறாங்க எசமான்.”

“ஒரே சாமியைக் கும்பிட்ற இவனுங்களுக்கே இத்தனை பிரிவு, திருச்சபை? ஆனா நம்ம மதத்துலதான் சாதி இருக்கு, ஏற்றத்தாழ்வு இருக்குன்னு ஏளனம் பேசுவானுங்க. ஏடே, இவனுங்க மொத்தப் பேரையும் அடக்கணும்டே. அதுக்குத்தான் சமஸ்தானத்தோட சேக்கணும்னு தம்புராட்டியை வச்சுக் கடுதாசி எழுத வச்சது. அங்கி போட்டவன் முன்னாடி நின்னு அப்பம் வாங்கிச் சாப்பிட்டு வந்துட்டா இவனுங்க தீட்டுப் போயிடுமாடே? சாணானும் புலையனும் பறையனும் பெரிய மனுசனாவப் பாப்பானுங்க, நாம வாயப் பொத்திக்கிட்டு அவன் ஆட்டத்தைப் பாக்கணுமாடே?” சங்கரன் தம்பிக்குக் கோபம் அடங்கவில்லை.

வீரன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

“இரண்டு, மூன்று தலைமுறையா மகாராஜாக்கள் எல்லாம் இங்கிலீஷ் படிக்கப் போனாங்க இல்லடே, அதோட விளைவுதான் இதெல்லாம். முன்ன மாதிரி இவனுங்களையெல்லாம் அப்பப்போ அடக்கி வைக்காம விட்டுட்டாங்க. திருவிதாங்கூர் என்ன லண்டனா, எல்லாம் ஒரே கோப்பையில் சாராயத்தை ஊத்திக் குடிச்சிக்கிட்டுப் பேசுறதுக்கு? யார் யாரை எங்க வைக்கணுமோ அங்கங்க வைக்கணும்டே. விசாகம் மகாராஜாவும் படிச்சுப் படிச்சு மூளை குழம்பிட்டார். திருச்சபை பாதிரியாருங்க, ஊருல கஞ்சிக்குச் செத்தவனையெல்லாம் கூட்டிக்கிட்டுப் போய், கூட்டம் சேத்துக்கிட்டாங்க. நான் பிறந்து வளந்த ஊர்டே தங்கசேரி. ஊருக்குள்ள புலையனும் சாணானும் காலை வச்சிட முடியாது. தெருவுக்குத் தெரு சுவர் இருக்கும். நம்பூரி தெருப் பக்கம் இவனுங்க நிழல்கூட நடமாட முடியாதுடே. இப்போ தலையை மழிச்சுட்டு, குடுமியை எடுத்துட்டு, ‘யேசுவே’ன்னு பின்னால் போறானுங்க. ஊர்ல ஒரு இடம் பாக்கியில்லை. நடந்து தேய்க்கிறானுங்க. அவங்களோட சாதியை விட்டுப் போயிட்டாங்களாம். குடுமியை சிரைச்சிட்டா சாதியைச் சேர்த்து சிரைச்சிட முடியும்னு நம்புறானேடே, என்ன நியாயம்? என்ன நியாயம்டே, சொல்லு?”

வீரன் பயந்தான். சங்கரன் தம்பியைப் பற்றி நன்கறிவான். ஒரு வார்த்தையை வாயில் இருந்து பிடுங்கிவிட்டுப் பத்து வார்த்தைகள் குறை சொல்லுவார். வாய் திறவாமல் கல்போல் சமைந்தான்.

“நீயெல்லாம் பேசக்கூடாதுதான். காவக் காக்குற பயலுக்குப் பேச்சுக் கூடாதுடே. சரிதான். பேசுறதுக்கு குலமிருக்கே?”

‘இவர் மட்டும் நம்பூதிரி குலத்திலா பிறந்தார்? இதே நாயர் குலத்தில்தானே பிறந்தார்? இவ்வளவு பேசுகிறார். மகாராஜாவின் உறவின்முறை குடும்பத்தில் பிறந்ததால் தம்பி பட்டத்தோடு காரியக்காரனாகிவிட்டு எவ்வளவு பேசுகிறார்’ என்று வீரன் மனத்திற்குள் நினைத்துக்கொண்டான்.

“என்னடே மிரட்சியாப் பாக்குறே? ரெசிடென்ட் காரியாலயத்துல என்ன நடக்குது? மெட்ராஸ் அய்யங்கார் என்ன குட்டையைக் குழப்பிட்டிருக்கார்டே?”

“திவானும் ரெசிடென்டும் தங்கசேரிக்குக் கிளம்பிட்டாங்க எசமான். லண்டனில் இருந்து கடுதாசி வந்ததால், ரெசிடென்டுக்கு வேறு வழியில்லையாம். தங்கசேரியைத் திருவிதாங்கூருக்குக் கொடுத்தே ஆக வேண்டுமாம். குடிகளைச் சந்தித்துச் சமாதானம் பேசப் போறாங்க. காலையிலேயே பல்லக்குத் தூக்கிங்களும் கோச் வண்டிக்காரனுங்களும் தயாராயிட்டாங்க.”

“லெட்சுமி தம்புராட்டிக்கு விஷயம் தெரியுமாடே?”

“எசமானைக் கேக்காம யாருமே தரவாட்டுக்குப் போக மாட்டாங்களே?”

“கேட்டாலும் ஒன்னும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதடே. நாயர் வீரன்லயே நீ ரொம்ப சுணங்கி. அங்கங்கே தவங்கி நிக்காமப் போய் காரியத்தைப் பார்” சொல்லிக்கொண்டே சங்கரன் தம்பி அரண்மனைக்குள் சென்றார். ‘சாதிய பிரச்சினைகளில் எப்போதுமே எதிர்நிலையெடுக்கும் பிரிட்டிஷ் சர்க்கார் இம்முறை அனுகூலமான நிலையெடுத்தும், தன்னுடைய திட்டத்திற்கு எதிரான சூழல் உருவாகிவிட்டதே’ என்று வருந்தியபடி நடந்த சங்கரன் தம்பி, ‘வேறென்ன வழி இருக்கிறது?’ என்றும் சிந்தித்துக்கொண்டிருந்தார்.

திருவிதாங்கூரிலிருந்து நாற்பத்து நான்கு மைல், கொல்லத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் அமைந்திருந்தது தங்கசேரி. நாகர்கோவில் மிஷனரியைச் சேர்ந்தவர்கள் நீண்ட காலம் இப்பகுதியின் சாணார், புலையர் சாதி மக்களுடன் நெருங்கிப் பழகியதில் பெரும்பான்மையோர் கிறிஸ்துவத்தைத் தழுவியிருந்தனர். தங்கசேரி கடற்கரையை ஒட்டிய துறைமுக நகரம் என்பதால் ஐரோப்பியர்கள் தங்களின் வர்த்தக கேந்திரமாக மாற்றிக்கொண்டார்கள். துறைமுகம் என்றாலே ஐரோப்பியர் கைவசம் என்ற நிலைதான் பிரிட்டிஷ் இந்தியாவில்.

முதன்முதலில் ஜம்புத் தீபகற்பம் (இந்தியா) எனும் மாபெரும் தேசத்தின் கடல்வளத்தைக் கண்டறிந்து, கோழிக்கோட்டில் வந்திறங்கிய போர்த்துக்கீசியர்கள் கொல்லம் அரசியின் ஆளுகையில் இருந்த தங்கசேரியைக் குத்தகைக்குப் பெற்றார்கள். கறுப்புத் தங்கமான மிளகைக் கொண்டு செல்ல அவர்களுக்குத் திருவிதாங்கூரும் மலபார் துறைமுகங்களும் தேவைப்பட்டன. மிளகுதான் ஜம்புத் தீபகற்பத்திற்கே மண் தின்னும் பேய்களை ஈர்த்து வந்த கறுப்பழகி. தங்கசேரி, கடல்வழியாக வந்த மண் திண்ணிகளுக்கு வாய் திறந்து வரவேற்ற துறைமுகம். போர்த்துக்கீசியர்களின் கப்பல்கள் தங்கசேரித் துறைமுகத்தில் இருந்து மிளகு மூடைகளை ஏற்றிக்கொண்டு உற்சாகத்துடன் கிளம்புவதையும், கிளம்பி ஆறேழு மாதங்களுக்குள் மீண்டும் திரும்புவதையும் பார்த்த ஆப்பிரிக்க மூர்கள் போர்த்துக்கீசியர்களுடன் தங்கசேரிக்காகச் சண்டையிட்டனர். கொல்லம் அரசியின் ஆதரவு போர்த்துக்கீசியர்களுக்கு இருந்ததால், அவர்களே வெற்றி மகாராணியை மணந்தனர்.

சோழ மண்டலக் கடற்கரையிலும் அரபிக் கடலிலும் ஐரோப்பா முழுக்க இருந்து கிளம்பிய கப்பல்கள் நிறைந்திருந்தன. பங்காளிச் சண்டைகள் போல் ஐரோப்பிய தேசத்தவர் வர்த்தகம் செய்ய வந்த இடத்தில் மோதிக்கொண்டனர். போர்த்துக்கீசியர்களை டச்சுக்காரர்கள் முந்திய நேரத்தில் தங்கசேரிக் கோட்டை டச்சுக்காரர்கள் வசம் சென்றது. டச்சுக்காரர்களை பிரிட்டிஷார் பின்னுக்குத் தள்ளியபோது, பிரிட்டிஷார் ஆளுகைக்குள் வந்தது. ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகளாய் தங்கள் வசமிருக்கும் கோட்டையைப் பெரியாறு அணைக்காக விட்டுக் கொடுக்க முன்வந்திருக்கிறது பிரிட்டிஷ் சர்க்கார்.

தங்கசேரியின் புனித தாமஸ் தேவாலயத்திற்குள் நுழைந்தது ஹானிங்டனின் சாரட். ஹானிங்டனுக்குப் பின்னால் வந்த கோச் வண்டியில் பென்னி குக் வந்தார். இருவரும் வருவதற்கு முன்பே திவான் ராமய்யங்கார் தேவாலயத்தில் காத்திருந்தார்.

தேவாலயத்தின் முன்புறம் அதிகாரிகள் அமர்ந்து பேசுவதற்கு வசதியாகச் சிறு பந்தல் போட்டிருந்தார்கள். வசதியான மர இருக்கைகளும் தயாராய்ப் போடப்பட்டிருந்தன. தங்கசேரியில் இருந்த அனைத்துத் தேவாலயங்களின் பாதிரிகளும் அங்கிருந்தனர்.

சாரட்டிலிருந்து இறங்கிய ஹானிங்டன் பாதிரியார்களைத் தவிர்த்து, தூரத்தில் குழுமியிருந்த கூட்டத்தைப் பார்த்தார். தோளில் துண்டு போட்ட ஆண்களும் மேல் முண்டு அணிந்த பெண்களுமாக நூறு பேருக்கு மேல் இருந்தார்கள். அம்மாவின் காலைக் கட்டிய குழந்தைகளும் ஓடி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளுமாக அவ்விடம் இரைச்சலாக இருந்தது. நேராகச் சென்று நடுவில் இருந்த இருக்கையில் அமர்ந்தார். அவருக்கு அருகில் பென்னி அமர, பிறகு ராமய்யங்கார் அமர்ந்தார்.

ஹானிங்டனை வணங்கிவிட்டு, சிரியன் பாதிரியார் ஒருவர் பேசுவதற்கு முன்வந்தார். ஹானிங்டன் சைகை காட்டி நிறுத்தச் சொன்னார்.

“நான் தங்கசேரி ஜனங்ககிட்டதான் பேச வந்திருக்கேன். நீங்கல்லாம் அப்படியே பின்னால் போய் நில்லுங்க. அவங்களை என் முன்னால் வந்து உட்காரச் சொல்லுங்க” என்று ஹானிங்டன் சொன்னவுடன், பாதிரிகள் திகைத்தார்கள். அதற்குள் ஹானிங்டனுடன் வந்திருந்த பிரிட்டிஷ் வீரர்கள், கூட்டத்தை அவர்முன் அமரச் செய்தனர்.

ஹானிங்டன் கூட்டத்தை அமைதியாகப் பார்த்தார். ஒன்றும் பேசாமல் பார்த்தவுடன், பெருங்கூச்சல் மெல்லத் தேய்ந்து, நிமிஷத்தில் அவ்விடத்தில் அமைதி வந்தது.

“தங்கசேரியுடைய குடிகளுக்கு வணக்கம். நான் திருவிதாங்கூருடைய பிரிட்டிஷ் ரெசிடென்ட். மெட்ராஸ் கவர்னர்கிட்ட இருந்து எனக்கொரு கடிதம் வந்திருக்கு. என்னன்னா, மெட்ராஸ் பிரசிடென்சி மேல்மலையில் பெரியாறு ஆற்றில் ஒரு அணை கட்டத் திட்டம் வச்சிருக்காங்க. இப்போ இல்லை, நூறு வருஷமா இந்தத் திட்டம் பேச்சு வார்த்தையில் இருக்கு. அந்த இடம் சமஸ்தானத்துக்குச் சொந்தமான இடம். அணை கட்டக் கொடுக்கப்போற இடத்துக்குப் பதிலா திருவிதாங்கூர் சமஸ்தானம் வருஷ குத்தகை கேட்கிறாங்க. அதெல்லாம் பிரச்சினை இல்லை. வருஷ குத்தகையோடு, நீங்க இருக்கிற தங்கசேரியையும் கேட்கிறாங்க. தங்கசேரி கோட்டையும் சுத்தியிருக்கிற சர்க்கார் தோட்டமும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருக்குன்னு உங்களுக்குத் தெரியும். எங்களுக்கு எப்படின்னாலும் அணை கட்டணும். அதனால் பிரிட்டிஷ் பேரரசியே தங்கசேரியைத் திருவிதாங்கூருக்குக் கொடுக்கலாம்னு அனுமதி கொடுத்துக் கடிதம் அனுப்பிட்டாங்க. ஆனா நீங்கல்லாம் அதை ஏத்துக்காம இரண்டு நாளா தேவாலயத்திலேயே கூடியிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். அதனால்தான் நானே நேரில் வந்துட்டேன். பேரரசியே சொல்லிவிட்ட பிறகு நீங்களோ, நானோ, வைஸ்ராயோ ஒன்னும் செய்ய முடியாதுன்னு புரிஞ்சிக்கணும் நீங்க.” கொல்லம் தொடங்கி, தங்கசேரி வரை தமிழ் பேசுபவர்களே அதிகமென்பதால் கூடியிருந்தவர்களிடம் ஹானிங்டன் அரைகுறைத் தமிழில் பேசினார்.

ஹானிங்டன் பேசி முடித்தவுடன் பேரமைதியானது இடம். பாதிரியார்களின் வெள்ளுடை வியர்வையில் நனைந்து உடலோடு ஒட்டியது.

“வீணா பிரச்சினை செய்யறதுல யாருக்கும் எந்தப் பலனும் இல்லை. பிரிட்டிஷார்கிட்ட கொடுக்கிற வரியை, சமஸ்தானத்துக்குக் கொடுக்கப்போறீங்க, அதானே வித்தியாசம்?”

“வேணாம். நான் குடுமி வச்சிக்கணும்னு அம்மே சொன்னா. நான் குடுமி வச்சிக்க மாட்டேன்” கூட்டத்தில் இருந்து மழலை மாறாத எட்டு, ஒன்பது வயதுப் பையன் ஒருவன் பேசினான். கூட்டமே திகைத்தது.

“யார் அது? எழுந்து நில்” ஹானிங்டன் சத்தமாகச் சொன்னார்.

பையனைக் கையில் பிடித்தபடி எழுந்து நின்ற பெண்ணின் முகத்தில் பயம்.

“என்ன சொன்ன, சொல்லு?”

“ராஜாகிட்ட போனா குடுமி வச்சிக்கணுமாம். ஊருக்குள்ள எல்லார் முன்னாடியும் வரக்கூடாதாம். மறைஞ்சி நிக்கணும். அதனாலதான் ராஜாகிட்ட சேரக் கூடாதுன்னு அம்மே ராத்திரிக்குச் சொன்னா.”

பென்னிக்கு முழுமையாகப் புரியவில்லை. ஹானிங்டனுக்கு அரைகுறையாகப் புரிந்தது. உடனே திவானைப் பார்த்தார். திவான் எழுந்து நின்று ஹானிங்டனிடம் விளக்கினார்.

“கிறிஸ்தவத்திற்குச் சென்றதால் குடுமியை மழித்து, முடியைக் கழுத்தோடு சுருக்கி வெட்டிக்கொள்கிறார்கள். சமஸ்தானத்தில் சேர்ந்தால் ஒருவேளை கிறிஸ்துவத்தை விட்டு விலகச் சொல்லிக் கட்டாயப்படுத்துவார்கள். அப்படியெனில் விட்டுப்போன பழக்கவழக்கங்களையெல்லாம் மீண்டும் தொடர வேண்டுமே என நினைத்திருப்பார்கள்.”

“குடுமியை வைத்தால் என்ன? எடுத்தால் என்ன? அதிலென்ன பெரிய பிரச்சினை?” ஹானிங்டன் சலிப்பாகச் சொன்னார்.

“மன்னிக்கணும் யுவர் எக்ஸலென்ஸி, நான் விளக்கம் சொல்லலாமா?”

முன்னால் வந்து நின்ற பாதிரியாரைப் பார்த்த ஹானிங்டன் ‘‘சரி’’ என்றார்.

“மத அதிகாரத்தின் முடிச்சே குடுமியில்தான் இருக்கிறது யுவர் எக்ஸலென்ஸி.”

ஹானிங்டன் முகம் வியப்பில் விரிந்தது.

“இந்தச் சின்னக் குழந்தை குடுமி வைக்க மாட்டேன்னு சொல்லுவதைக் கேட்கிறபோது எனக்கு மகிழ்ச்சியா இருக்கு. குடுமியை எடுக்க மாட்டோம், எடுக்கச் சொன்னா கிறிசாத்தும் வேணாம், சிலுவையும் வேணாம்னு எத்தனை பேர் தூக்கியெறிஞ்சுட்டுப் போனாங்க தெரியுமா யுவர் எக்ஸலென்ஸி? குடுமியை எடுத்துட்டா அவங்களோட மொத்த அடையாளமும் போயிட்ட பயம். அவங்க அடையாளம்றது பெருமையா சொல்லிக்கிற அடையாளமான்னு கேட்டோம். நம்பூதிரிகளை மாதிரி குடுமி வச்சிக்கிட்டா நீங்க நம்பூதிரிகிட்ட போக முடியுமா? அவங்ககூட சேர்ந்து நின்னு உங்க சாமியைக் கும்பிட முடியுமா? அவங்க குடிக்கிற கிணற்றில் தண்ணியெடுத்துக் குடிக்க முடியுமா? நாயர்களை மாதிரி குடுமி வச்சிக்கிட்டா சமஸ்தானத்தின் கொட்டாரத்துக்குப் போக முடியுமான்னு எத்தனை விவாதம். இங்க சாதியும் புற அடையாளமும் ஒன்னோட ஒன்னா கலந்திடுச்சு. அதனால் குடுமியை எடுக்க பல பேர் ஒத்துக்கலை.”

பாதிரியார் பேசி முடிக்கும் முன்பே திவான் குறுக்கிட்டார்.

“ஒத்துக்கலைன்னு நீங்க அவங்களை விட்டுடலையே பாதிரியாரே? குடுமி வச்சாலும் ஞானஸ்நானம் பண்ணலாம்னு திருச்சபையில் பேசி முடிவு செய்துட்டீங்களே? உங்களைப் பொறுத்தவரை குடிகளைக் கிறிஸ்தவத்திற்கு இழுக்கணும்” பாதிரியாருக்குப் பதில் சொன்னதுடன், ஹானிங்டனைப் பார்த்து, மேலும் விளக்கம் சொல்ல நினைத்தார்.

“யுவர் எக்ஸலென்ஸி, குடுமியில் எந்த அதிகாரமும் இல்லை. குடுமி வைக்கிறது சமீபத்திய வழக்கம்தான், உடையில் வரும் மாற்றங்கள்போல். திருவிதாங்கூரின் முதல் அரசர் மார்த்தாண்ட வர்மா போலவா இன்றுள்ள மகாராஜா மூலம் திருநாள் உடை உடுத்துகிறார்? பிரிட்டிஷாரைப் போலத்தானே மகாராஜா நீண்ட கவுன் போடுகிறார். நடை, உடை, தோரணைகள் மாறிவிட்டன. முன்பெல்லாம் ஆண்கள் கூந்தல்தானே வளர்த்திருந்தார்கள்? ஆண்களும் கூந்தல் முடிந்து அந்தந்தப் பருவத்துப் பூச்சூடுவதும் வழக்கமாகத்தானே இருந்தது? கூந்தலைச் சுருக்கி, குடுமியாக்கிவிட்டார்கள். தனியா அடையாளம் தெரிய, நம்பூதிரிகள் பின்னால் இருந்த குடுமியை உச்சிக்கு ஏற்றிவிட்டு, சின்ன மயிர்க்கற்றை வைத்துக்கொண்டார்கள். இப்போது கூந்தலும் இல்லாமல் குடுமியும் இல்லாமல் முடியை வெட்டிவிட்டுக்கொள்வது மேற்கத்திய நாகரிகமாக இருக்கிறது, அவ்வளவுதான்.”

பென்னிக்குத் தன்னைச் சுற்றி நடப்பது எல்லாமே புதிராக இருந்தது. அணை கட்டுவதற்கு முன், குடுமியைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் போலிருக்கிறதே என்று வியந்தார்.

“திவானின் கருத்தில் நான் வேறுபடுகிறேன் என்பதை இங்கு பதிவு செய்யலாமா யுவர் எக்ஸலென்ஸி?” கத்தோலிக்கத் திருச்சபையின் பாதிரியார் முன்வந்தார். ஹானிங்டனுக்குச் சோர்வு வந்தது. ‘வந்த காரியம் என்ன? ஆளாளுக்குக் கூந்தல், குடுமி என்று பேசுகிறார்களே’ என்று முகம் சுருங்கினார்.

“இங்குள்ள சிக்கலைத் தீர்க்க உதவும் செய்தியாக இருந்தால் சொல்லலாம். நேரத்தை வீணாக்க வேண்டாம்.”

“உங்களுக்கு நிச்சயம் உதவும் யுவர் எக்ஸலென்ஸி. தங்கசேரி மக்கள் ஏன் உறுதியாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஏற்க மறுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள நான் சொல்லப்போகும் சம்பவம் உதவும்.”

“சொல்லுங்கள்...”

“நன்றி யுவர் எக்ஸலென்ஸி. திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குச் சொந்தமான சர்க்கார் யானைகளுக்குத் தினந்தோறும் தீவனம் கொண்டு போய்ப் போடும் புலையன் ஒருவன் கிறிஸ்துவில் சேர்ந்தான். கிறிஸ்துவில் சேர்ந்தாலும் அவனுக்குத் தன்னுடைய குடுமியை இழக்க மனமில்லை. பாதிரியார்களும் கட்டாயப்படுத்திப் பார்த்து, அவன் விருப்பமின்மையினால் விட்டுவிட்டார்கள். சர்க்கார் யானைக்குத் தீவனம் கொண்டு வருகிறவன் கிறிஸ்தவனாக இருக்கக் கூடாது, கிறிஸ்தவனாக ஆனவனுக்குக் குடுமி எதற்கு என்று அங்குள்ள நாயர் ஒருவர் தினம் அவனிடம் வம்பிழுத்துள்ளார். சமஸ்தானத்தின் காரியக்காரருக்குத் தகவல் போனவுடன் ஒரு நாள் புலையனின் குடுமியை அறுத்துவிட்டு, இனி யானைகளுக்குத் தீவனம் கொண்டு வரக்கூடாது என்று விரட்டிவிடச் சொல்லிவிட்டார். குடுமி வைக்காத கிறிஸ்தவர்கள் எத்தனையோ பேர் சர்க்காரில் வேலை செய்கிறார்கள். பிரிட்டிஷ்காரர்கள் எத்தனை பேர் சமஸ்தானத்தில் உத்தியோகம் பார்க்கிறார்கள்? யானைக்குத் தீவனம் கொண்டுவர்றவன் கிறிஸ்தவனா இருக்கக் கூடாதாம். கிறிஸ்தவனா மாறிட்ட புலையன் ஏன் குடுமி வைக்கிறான்னு புகைச்சல் ஒரு பக்கம். குடுமி அடையாளம் இல்லைன்னு திவான் சாகிப் சொன்னாலும், அதில் உண்மையில்லை என்பதற்காகச் சொல்கிறேன் யுவர் எக்ஸலென்ஸி. கோவில்ல இருக்க அவங்க சாமிங்களும் கழுத்து வரைக்கும் தழைய தழைய கூந்தல் வச்சிருக்குங்க. சாமியார்களும் நீள நீளமா ஜடாமுடியா வளக்கிறாங்க, இல்லை தலையை மழிக்கிறாங்க. இடையில் இருக்கிறவங்கதான் குடுமி வைக்கிறதும், கொண்டை போடுறதும். அவங்கதான் சர்க்கார் உத்தியோகத்தில் இவ்வளவு குளறுபடி செய்யறாங்க யுவர் எக்ஸலென்ஸி.”

“சர்க்காருக்கு நாங்களும்தானே வரி கட்டுறோம்? வரி வாங்கின பிறகு எங்களுக்கும் சர்க்கார்ல உத்தியோகம் பார்க்க உரிமை இருக்குதானே சாகிப்?” கூட்டத்தில் இருந்து கண்கள் ஒடுங்கிய முதியவர் ஒருவர் தள்ளாடி எழுந்து நின்று பேசினார்.

“நாங்க சம்பாதிக்கிறது அஞ்சு பணம்னா, அதுல ஒரு பணம் சர்க்காருக்குப் போகுது. நாள் முழுக்க உழைக்கிற நாங்க பாதி நேரம் பட்டினியாக் கிடக்கிறோம். ஆனா பிராமணர்களுக்குச் சோறு போடுறதுக்குச் சர்க்காரே ஊட்டுப்புரை நடத்துது? வருஷத்துக்கு மூணு லெட்சம் செலவாமே? சர்க்கார்னா யார் இல்லாதவங்களோ அவங்களுக்குக் கஞ்சி ஊத்தணும். ஒரே ஒரு சாதிக்கு மட்டும், மத்த எல்லாச் சாதிக்காரங்களும் கொடுக்கிற வரிப்பணத்துல இருந்து கஞ்சி ஊத்துறதுன்னா என்ன அர்த்தம்? அரைவைக் கல்லு மாதிரி தானியத்தை அரைச்சிக் கொடுத்துட்டு எங்க வயிறெல்லாம் பசிக்காமக் கிடக்குமா என்ன? பிரிட்டிஷ் சர்க்கார்ல ஊட்டுப்புரையெல்லாம் கிடையாது. பஞ்ச காலத்துல எல்லாருக்கும்தான் கஞ்சி ஊத்தினாங்க. அதனால நாங்க பிரிட்டிஷ் சர்க்கார் கிட்டயே இருக்கோம்.”

“அந்த வரி வாங்குறதில எத்தனை பித்தலாட்டம்? அஞ்சு பணம் வரின்னு கொடுப்போம். பணம் கட்டின சீட்டு வாங்கிப் பாத்தா இரண்டு பணம்னு இருக்கும். இப்ப எங்க பிள்ளைக படிக்க தெரிஞ்சிக்கிட்ட பிறகுதான் எல்லாப் பித்தலாட்டத்தையும் தெரிஞ்சுக்கிறோம்” இன்னொருவர் பேசினார்.

நீரதிகாரம் - 33 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“துரை சாகிப்தான் ரெசிடென்ட்டுன்னு இப்போதான் பாக்கிறேன். ரெசிடென்ட் வீட்டுக்குப் புதுசா பிடிச்ச மீன் வேணும்னு எங்களைப் பாடாப்படுத்தி, உப்பு எடுக்கப் போற படகையெல்லாம் பிடிச்சு வச்சிக்கிட்டு, மீன் பிடிச்சுக் கொண்டாந்து கொடுத்துட்டுப் போன்னு உசுரை வாங்குவாங்க துரை சாகிப். நீங்க மூணு நேரமும் மீன் இல்லாமச் சாப்பிட மாட்டீங்களாமே? நாங்க கொடுக்கிற மீனெல்லாம் உங்க தட்டுக்குத்தான் வருதான்னு எங்களுக்குத் தெரியாது.”

ஹானிங்டனுக்கு அதிர்ச்சியாகவும் அவமானமாகவும் இருந்தது.

“ரெசிடென்ட்டுக்கு என்று சொல்லியா கேட்பார்கள்?”

“ஆமாம் துரை. ரெசிடென்ட் அன்னன்னிக்குப் பிடிச்ச புது மீன்தான் சாப்பிடுவார்னு சொல்லுவாங்க.”

சாப்பிட்ட மீனெல்லாம் நினைவுக்கு வந்து குமட்டியது ஹானிங்டனுக்கு. தன் ஒரு கவளச் சோற்றுக்குப் பின்னால் இருக்கும் கறைபடிந்த கதைகளைக் கேட்கக் கூசினார்.

“மெட்ராஸ் பிரசிடென்சியில் பணம் இருக்கிறவங்க யார் வேணாலும் பல்லக்கில் போலாம்னு கேள்விப்படுறோம் துரை சாகிப். நாரோயில், திந்நவேலியில் இருந்து வர்ற வியாபாரிங்க சொல்லக் கேள்வி. ஆனா இங்க? நாலஞ்சு பனந்தோப்பும் தென்னந்தோப்பும் வச்சிருக்கிற சாணான் ஒருத்தன் தன் வீட்டுக் கல்யாணத்துக்குப் பல்லக்கு வச்சான். கல்யாண மாப்பிள்ளையும் பொண்ணும் பல்லக்கில் போனாங்க. கல்யாணம் முடிஞ்ச ரெண்டாவது நாள், அவனுக்குத் தண்டம் போட்டுட்டாங்க.”

ஆளாளுக்கு எழுந்து அவரவர் குறைகளைச் சொல்லச் சொல்ல, ஹானிங்டன் குழப்பத்தின் எல்லைக்குச் சென்றார்.

“எசமான், நாங்க எங்க சாமியைக் கும்பிட்றதை விட்டுட்டோம். பொறந்ததுல இருந்து கும்பிட்ட சாமி. என் அம்மை, அப்பன் கும்பிட்ட சாமி. காலங்காலமா குடும்பத்துப் பிள்ளை குட்டிகளுக்கு உதவியா இருந்த சாமி. அந்தச் சாமியை விட்டுட்டு சிலுவையைக் கழுத்தில போட்டுக்கிட்டு யேசுவைக் கும்பிட்றோம். எந்த ஊர் சாமியோன்னு சொல்றாங்க, எனக்குப் புரியலை. நான் கும்பிட்ட சாமி ஊர்ப் பாதையில நடக்க விடலை. எனக்கு இந்தப் பூமியில சொந்தம்னு ஒரு பிடி மண்ணைக் கொடுக்கல. கிறிசாத்துக்குப் போனதால இப்போ என் பிள்ளைங்க ரெண்டு பேரும் படிச்சுட்டு, சம்பாதிச்சு சொந்தமா ஒரு காணி நெலம் வாங்கிப் பயிர் செய்றானுங்க. சாமி எதுக்கு எசமான், வயித்தக் காயப் போடாமப் பாத்துக்கவும் கௌரவமா வாழவும்தானே? இந்தச் சிலுவை அந்தக் கௌரவத்தைக் கொடுத்திருக்கு எசமான். எங்களை இப்படியே விட்டுடுங்க.”

பெரியவர் ஒருவர் பேசப் பேச, கூட்டம் கண் கலங்கியது.

“சமஸ்தானத்துல பஞ்சம்னாகூட அஞ்சு தெங்கு, தங்கசேரில்லாம் எப்பவும் பஞ்சம் வந்தது கிடையாது. ஆனா, கேட்க ஆளில்லைன்னு எங்க அண்ணனையும் தம்பியையும் காலணாவுக்குக் கொத்தடிமையா வித்துட்டாங்க துரை. நான் ஒருத்தன்தான் தப்பிச்சேன். இதெல்லாம் ராஜாவுக்குத் தெரியுமான்னு தெரியலை. ஆனா ஊருக்கு நாலு பேராவது காணாமப் போயிருக்காங்க. இப்போ சட்டம் போட்டிருக்கிறதாலதான் ஆளுங்களை விலைக்கு வாங்கி விக்கிறது குறைஞ்சிருக்கு” மத்திய வயது ஆள் சொல்லி முடித்தவுடன், கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு பெண்ணொருத்தி எழுந்தாள்.

“கும்பிட்றேன் எசமான். கும்பிட்ட சாமி இல்லைன்னாலும்கூடப் பரவாயில்லை. இப்பத்தான் எங்களுக்கெல்லாம் மேல் முண்டு போட்டுக்க அனுமதி கிடைச்சிருக்கு. நெழலோட நெழலா மறுகி, கூனிக் குறுகி யார் கண்ணுலயும் படாமக் கிடந்த நாங்க, பாதையில கூச்சமத்துப் போறோம். சாமியவிட மானம் பெரிசாச்சே? துரைங்க சர்க்கார்லயே நாங்க இருக்கிறோம் எசமான். நீங்கதான் எடுத்துச் சொல்லணும்” என்று சொல்லி, இரு கையையும் குவித்து வணங்கினாள்.

ஹானிங்டன் ஒரு கணமும் தாமதிக்கவில்லை, “தங்கசேரியை மெட்ராஸ் பிரசிடென்சி திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு விட்டுக் கொடுக்காது. நீங்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை” என்று சொல்லிவிட்டு, திவானைப் பார்த்துச் சொன்னார், “அய்யங்கார், தங்கசேரியைக் கேட்ட திருவிதாங்கூரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறதென்று பிரிட்டிஷ் பேரரசிக்குக் கடிதம் இன்றே போகும். அரசியின் பதில் வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை. நாளை ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும். அனைத்து ஏற்பாடுகளும் செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு, கூட்டத்தை நோக்கிக் கும்பிட்டுவிட்டுத் தன் சாரட்டில் ஏறினார்.

தங்கசேரிக் கடல் அலையில் கலந்திருந்த உப்பின் அடர்த்தியை விஞ்சியது, தங்கசேரி மக்கள் பேருவகையில் சிந்திய கண்ணீரின் அடர்த்தி.

- பாயும்