மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 37 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

மேஜர் ரைவ்ஸ் தேர்வு செய்த இடத்தின் பாறை உறுதியாக இருக்குமா என்ற சந்தேகம் மேஜர் ஸ்மித்துக்கும் மேஜர் பெய்னுக்கும் இருந்தது.

நீரதிகாரம் - 37 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

குமுளி அடிவாரத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சின்னஞ்சிறு குடிலில் பெரியாறு அணைக் கட்டுமானத்தின் சூப்பிரன்டென்டிங் இன்ஜினீயர் பென்னி குக், திட்டத்தின் உதவி இன்ஜினீயர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்.

திருவிதாங்கூர் சமஸ்தானமும் மெட்ராஸ் பிரசிடென்சியும் 999 வருடக் குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு பென்னி குக், ஓய்வின்றி வேலைகளைத் திட்டமிட்டார்.

பிரிட்டிஷ் ரெசிடென்ட் ஹானிங்டன், ஒப்பந்தம் கையெழுத்தாகும் நாளன்று பென்னி தன்னுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மிகவும் நாசூக்காக ரெசிடென்டின் கோரிக்கையை மறுத்துவிட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகும் வேளையில் மேல் மலையின் அடர் வனத்திற்குள் இருக்க நினைத்தார். இருள் விலகுவதற்காகக் காத்திருக்க விரும்பாத பென்னி, இரவின் குறைந்த ஒளியில் மலையேறினார்.

குமுளி, தேக்கடி வழியாக மேல் மலை ஏறிய பென்னியின் குதிரை, மலை ஏறுவதற்குத் தடுமாறியது. மரங்களும் முட்புதர்களும் அடர்ந்த இடங்களுக்குள் குதிரையால் நுழைந்து வெளியேற முடியவில்லை. புதர்களின்மேல் கொடிகள் மண்டிக்கிடந்த ஓரிடத்தில், கொடியொன்று குதிரையின் கழுத்தில் மாட்டி இழுத்ததில் குதிரை தடுமாறியது. முன்னேற முயன்று முடியாமல் சுழன்று நின்றது. கொடிகளை வெட்டி வீசி, பயணத்தைத் தொடர்ந்த பென்னியால், அடுத்த ஒரு மைல் தூரத்துக்குமேல் சமாளிக்க முடியவில்லை. குதிரையை மேலும் சிரமப்படுத்த விரும்பாத பென்னி, குதிரையை அங்கேயே விட்டார். கட்டிப் போட்டால் காட்டு விலங்குகள் அடித்துவிடுமோ என்று அஞ்சியவர், குதிரையைச் சுதந்திரமாக விட்டார். “காட்டில் நான் தவறவிடும் முதல் ஆளாக நீ இருந்துவிடாதே. நான் வரும்வரை பத்திரமாக இரு. நீ பத்திரமாக இருந்து எனக்குத் திரும்பக் கிடைத்துவிட்டால் அணை கட்டி முடிப்பேன் என்று நம்பிக்கை கொள்வேன்” என்று சொல்லி, குதிரையின் கழுத்தைக் கட்டியணைத்து, முதுகைத் தழுவி சில கணங்கள் நின்றுவிட்டு, திரும்பிப் பார்க்காமல் மலை ஏறினார். குதிரை கனைப்பது சிறு குன்று ஏறிக்கடக்கும் வரை கேட்டுக் கொண்டிருந்தது.

நீரதிகாரம் - 37 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

ஒப்பந்தம் கையெழுத்தாகும் அன்று மலையேறுவதற்கு பென்னியைத் தீவிரமாகத் தன்னை நோக்கி இழுத்தது பெரியாறு நதிதான். இனி வரப்போகும் தன்னுடைய ஒவ்வொரு நாளையும் தீர்மானிக்கப்போவது பெரியாறுதான் என்ற எண்ணம் உதித்த நிமிடத்தில் இருந்து பென்னிக்குப் பெரியாற்றைப் பார்க்கும் ஈர்ப்பு, பெரியாற்றின் மழைக்கால நீர்மட்டம்போல் உயர்ந்துகொண்டே சென்றது. நீரைத் தேக்க வேண்டிய அவசியமே இல்லையென்ற தேசத்தில் இருந்து வந்த ஒரு இன்ஜினீயர், முதன்முறையாக ஓடும் நதிநீரின் போக்கை திசை மாற்றும் திட்டத்தோடு செல்வது முரணல்லவா என்று வியந்தார் பென்னி.

முதுகில் சுமந்திருந்த குடுவையின் நீரை அவ்வப்போது பருகிய பென்னிக்கு, பசி, அயர்ச்சி, மூச்சிரைத்தல் ஒன்றும் பொருட்படுத்தக்கூடியதாக இல்லை. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. நினைவில் இருந்த தடத்தைக் கால்கள் பின்தொடர்ந்தன.

மலை முகடுகளிலும், ஆழப் பள்ளத்தாக்கிலும் பாறை இடுக்குகளிலும் புரண்டோடிக்கொண்டிருந்தது பெரியாறு. குதித்தும் நடந்தும் மேலெழும்பியும் தாழ்ந்தும் காட்டையே நடுங்க வைத்து ஓடிக்கொண்டிருந்த பெரியாற்றின் பிரவாகம் அச்சுறுத்தியது. `கடவுளே நினைத்தாலும் பெரியாற்றில் அணை கட்ட முடியாது’ என்று சொன்ன ஆர்தர் காட்டனின் குரல் நடுக்காட்டில் ஒலிப்பது போலிருந்தது பென்னிக்கு. விடாமுயற்சி வென்றெடுக்கும் காரியத்தில் உள்ளுறைந்திருப்பது தெய்வமல்லவா? எல்லாத் தெய்வங்களும் பெரியாறு நதியாய் மாறி, எடுத்திருக்கும் வேலையை முடிக்கும் துணிவைத் தர வேண்டும் என நதியிடம் வேண்டிக் கொண்டார்.

இயற்கையின் போக்கிற்கு எதிர்நிற்க வேண்டிய கட்டாயம் மனத்திற்குள் கலக்கத்தைக் கொடுத்திருந்தது. அதற்கான மன வெளிச்சத்தை இயற்கையே கொடுக்க வேண்டும். இயற்கையின் பேராசீர்வாதம் இருந்தால் மட்டுமே தன்னால் நடுக்காட்டில் அணைகட்ட முடியுமென்று நம்பினார் பென்னி. அணை கட்டி முடிக்க மெட்ராஸ் பிரசிடென்சி திட்டம் தீட்டியிருந்தாலும், திருவிதாங்கூர் சமஸ்தானம் இடம் கொடுக்க ஒத்துக் கொண்டிருந்தாலும் இயற்கையின் மனத்தில் கருணை சுரக்க வேண்டும். இயற்கையிடம் மன்றாடிப் பிரார்த்தனை செய்துகொள்ளவே பென்னி, யாருமற்று அன்று மேல் மலையில் பெரியாற்றுடன் தனித்திருக்க விரும்பினார்.

பெரியாற்றின் விசுவரூபத்தைப் புரிந்துகொள்ள, அதன் பிறப்பிடத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்பதே பென்னியின் விருப்பம். அவர் இருக்கும் மேல் மலையில் இருந்து பெரியாறு பிறப்பெடுக்கும் சிவகிரி மலைக்குச் செல்ல வேண்டுமென்றால், அடர்ந்த வனத்திற்குள் இரண்டு, மூன்று நாள்களாகிவிடும். அத்தனை நாள் செலவழிக்கும் பொறுமை இல்லை. உற்பத்தியாகும் இடத்திற்குப் பதிலாக, பெரியாறும் முல்லையாறும் கூடும் இடத்திற்குச் செல்ல மனம் விரும்பியது. முதன்முதலில் அணை கட்டலாம் என நம்பிக்கை கொடுத்த இடமல்லவா?

முல்லையாறும் பெரியாறும் சந்திக்கும் முல்லைத் தவளத்தில்தான் மேஜர் ரைவ்ஸ் அணை கட்டலாம் என்றார். 162 அடி உயரத்திற்குக் கற்களை அடுக்கி, நீரின் போக்கை மட்டும் தடுத்து, மெட்ராஸ் பிரசிடென்சிக்குப் பெரியாற்றின் தண்ணீரைத் திருப்பத்தான் மேஜர் ரைவ்ஸ் திட்டம் கொடுத்திருந்தார். நீரின் போக்கைத் தடுத்து நிறுத்தி, கிழக்குத் திசைக்குத் திருப்ப நினைத்த ரைவ்ஸின் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாகச் சொல்லி, அதிகாரிகள் திட்டத்தைத் திருப்பியனுப்பினார்கள். மங்கலதேவி கண்ணகி கோட்டத்திற்குக் கீழுள்ள முல்லைக்கூட்டிடத்தில் நின்று பெரியாற்றைப் பார்த்தார் பென்னி. சீறிப் பாயும் வெள்ளத்தினை எதற்கு ஒப்பிட முடியும்? வேகமும் மூர்க்கமும் கொண்ட இரண்டு நதிகளும் ஒன்றிணைந்து, கால்முளைத்த நீர்மலைபோல் பாய்ந்துகொண்டிருந்தன.

ஒவ்வொரு முறையும் போதுமான புள்ளிவிவரங்கள் இல்லை, புள்ளிவிவரங்கள் இல்லையென்று, இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் இர்ரிகேஷன் பெரியாறு அணைத் திட்டத்தைத் திருப்பியனுப்பிக்கொண்டிருக்கும் கோபத்தில், மேஜர் பெய்ன் மேல் மலைக்கே பல பருவங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டார். எவ்வளவு மழை? எவ்வளவு வெள்ளம்? பாறையின் உறுதி, மணல் சேகரமாகும் பகுதி, நீரின் போக்கு, சுரங்கம் வெட்டினால் வெளியேற்றக்கூடிய தண்ணீரின் அளவு என ஒவ்வொன்றையும் அயராமல் கணக்கெடுத்தார். மழைக்காலங்களில் காட்டுக்குள் நடக்கவே முடியாது. ஈரத்தில் உடல் விறைத்துக்கொள்ளும். பொருட்படுத்தாது காடு முழுக்க அலைந்து திரிந்து கணக்கெடுத்து முடித்து, மரக்குடிலின் மேலேறி பூட்ஸையும் காலுறையையும் கழற்றும்போதுதான் தெரியும் அட்டைகள் கடித்துக்கொண்டிருப்பது. உடம்பில் ஏறிய அட்டைகளை எளிதில் பிய்த்தெறிய முடியாது. ரத்தம் குடித்து முடித்தால்தான் உடம்பிலிருந்து அட்டைகள் தசையைவிடும். அட்டைகளைப் பிய்த்தெடுத்தால் கடிவாயில் ரத்தம் நிற்காது. நான்கைந்து இடங்களில் அட்டையைப் பிய்த்துப் போடுவதற்குள், உடம்பிலிருந்து வெளிவரும் ரத்தத்தைப் பார்த்தால், மயக்கம் வரும். அட்டைகளே குடித்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடத் தோன்றும். தான் கொடுக்கும் புள்ளிவிவரங்களை பிரிட்டிஷ் சர்க்கார் மறுத்துவிடக் கூடாது என்பதற்காக, தீர்மானத்தோடு வேலை செய்தார் பெய்ன்.

பெய்ன் கொடுத்த புள்ளிவிவரங்களை அடிப்படையாக வைத்து மேஜர் ஸ்மித் இரவு பகலாகத் திட்டத்தைச் சரிசெய்தார். இவர்கள் இருவரும் கொடுத்த திட்டத்தை பிரிட்டிஷ் சர்க்கார் பரிசீலனை செய்துகொண்டிருந்த வருஷத்தில் (கி.பி.1867) பஞ்சம் தொடங்கியது தென்னிந்தியாவிலும் தக்காணத்திலும். திரும்பிய திசையெங்கும் பஞ்சம், சாவு, மக்கள் அகதிகளாக வெளியேறும் செய்தி… நான்காண்டுகளுக்குள் பஞ்சம் அரசாங்கத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. கஞ்சித் தொட்டிகள் அமைத்து அரசாங்கத்தின் கஜானாக்கள் காலியாகிக் கொண்டிருந்ததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

மேஜர் ரைவ்ஸ் தேர்வு செய்த இடத்தின் பாறை உறுதியாக இருக்குமா என்ற சந்தேகம் மேஜர் ஸ்மித்துக்கும் மேஜர் பெய்னுக்கும் இருந்தது. அவர்களின் ஆய்வில் அணை கட்டுமிடத்தை மாற்றத் தீர்மானித்திருந்தார்கள். முல்லைத் தவளத்தில் இருந்து இன்னும் இறக்கத்தில் இருந்த இடத்தை மேஜர் ஸ்மித் ஏற்றுக்கொண்டார். பஞ்சம் நாட்டின் சூழலை மோசமாக்கியவுடன் நீர் ஆதாரங்களை வளப்படுத்த வேண்டிய கட்டாயம் பிரிட்டிஷ் சர்க்காருக்கு எழுந்தது. மீண்டும் பெரியாறு அணைத் திட்டத்தைக் கையில் எடுத்தார்கள். மேஜர் ஸ்மித்துடன் அப்போதுதான் கேப்டன் பென்னி குக் திட்டத்தில் சேர்க்கப்பட்டார். மேஜர் ஸ்மித்தும் பென்னி குக்கும் மூன்றாவதாக ஓரிடத்தைத் தேர்வு செய்து, திட்டத்தைச் சமர்ப்பித்தார்கள். மேஜர் ரைவ்ஸ் 17.49 லட்சத்தில் திட்டமிட்டிருந்த அணை, எட்டாண்டுகளில் மூன்று மடங்கு திட்டச்செலவு கூடியிருந்ததைப் பார்த்தவுடன் அதிகாரிகள் கோப்பைத் தூக்கி வைத்துவிட்டார்கள்.

நீரதிகாரம் - 37 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

மனம் சலித்த பென்னி குக், மருத்துவ விடுப்பில் லண்டன் சென்றுவிட்டார். இரண்டாண்டுகள் திட்டம் கிடப்பில் கிடந்தது. லண்டனில் இருந்து திரும்பியபோது பஞ்சம் தேசத்தினைப் படுபாதாளத்திற்குத் தள்ளிக் குழியும் பறித்திருந்தது. மூன்று வேளை சாப்பிட்டவர்களுக்கு ஒரு வேளைச் சோறு இல்லை. கஞ்சி குடித்தவர்களுக்கு, ஒரு குவளைத் தண்ணீர் இல்லை. உணவுக்காக எல்லாக் குற்றங்களுக்கும் துணிந்துவிட்ட மக்கள் கூட்டம் பெருகிய சூழலில், நாடு நாற்றமெடுத்துக்கொண்டிருந்தது.

இருபத்தைந்து வருஷங்களாகிவிட்டன, பெரியாறு அணைத் திட்டத்துடன் பென்னியின் பெயர் இணைந்து. பென்னியுடன் சேர்ந்து அறிக்கை தயாரித்துக் கொடுத்த ஸ்மித், திட்டத்திற்கு அனுமதி கிடைப்பதற்குள் இறந்துவிட்டார். தாது வருடப் பஞ்சத்தினை எதிர்கொண்ட சர்க்கார், மீண்டும் ஒரு பஞ்சம் வருவதற்குள் சுதாரித்துக் கொள்ளவில்லையென்றால், கஜானாவுக்கு வருவாய் செலுத்த குடிமக்களே இருக்க மாட்டார்கள் என்று புரிந்து கொண்டது. பெரியாறு அணைத் திட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுத்தது. பென்னி குக்கிடம் திட்டத்தைச் சரிசெய்யச் சொல்லி ஒப்படைத்தது சர்க்கார். பென்னியே தேர்வு செய்த, தற்போது அணை கட்டலாம் எனத் திட்டமிட்டுள்ள நான்காவது இடத்திற்கு நடந்தார் பென்னி. முதலில் திட்டமிட்டிருந்த இடத்தில் இருந்து 7 மைல்கள் கீழே இருந்தது அந்தப் பகுதி.

பென்னி தேர்வு செய்திருந்த அணை கட்டுமிடத்தைச் செங்குத்தான மலை உச்சியில் நின்று பார்த்தார். சிறியதும் பெரியதுமான குன்றுகள் நிறைந்திருந்த இடம். பெய்னும் ஸ்மித்தும் தேர்வு செய்த இடங்களை மாற்றியதற்கு முக்கியமான காரணமே, உயரிய இந்த மலையுச்சியும், சிறியதும் பெரியதுமான குன்றுகள் சூழ்ந்த இவ்விடத்தில் அதிகப் பரப்பில் நீர் தேக்க முடியும் என்பதற்காகவும்தான்.

வெண்ணிறத் திவலைகளைச் சிதறவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் பெரியாற்றைப் பார்த்தபடியே நின்றார். தன் வாழ்நாளைத் தீர்மானிக்கப் போகும் இடம். பல்லாயிரக்கணக்கான மக்களைத் தங்க வைத்துப் பாதுகாப்பாகத் திருப்பியனுப்ப வேண்டிய பொறுப்பு, அணை கட்டத் தொடங்கிய பிறகு ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்று தன்னால் திட்டமிடவே முடியாத அசாதாரண சூழல், எல்லாம் கண்முன் ஓடியது பென்னிக்கு. கையெழுத்தில் இருந்த திட்டம், தாள்களில் தட்டச்சு செய்யப்பட்டு எழுத்தாக்கப்பட்டுள்ள திட்டம், இதோ… இந்தக் காட்டின் பாறையிலும் தண்ணீர் தேங்கும் அணையாக எழுந்து நிற்க வேண்டும்.

பிரிட்டிஷ் தேசத்தில் ஆண்டு முழுவதும் பெய்யும் மழைக்கும் பனிக்கும் ஏற்ப விவசாயம் செய்துகொள்வார்கள். கால்வாய் வெட்டுவது, கண்மாய் அமைப்பது எல்லாம் இந்தியாவுக்கு வந்த பிறகே பிரிட்டிஷ் இன்ஜினீயர்கள் அறிந்துகொண்டார்கள். உலகத்தின் முதல் அணை பிரெஞ்சுத் தேசத்தில் கட்டப்பட்டது. அதனாலேயே பிரெஞ்சுக்காரர்களைத் தேர்ந்த இன்ஜினீயர்கள் என்று பிரிட்டிஷ்காரர்களே நம்புகிறார்கள். பெரியாறு நதியின் போக்கைத் திசை திருப்புவது குறித்து முதன்முதலில் ஆலோசிக்கப்பட்ட போதும், பிரெஞ்சு இன்ஜினீயர்களிடம் அணைத் திட்டத்தை அனுப்பி வைத்துக் கருத்து கேட்டது பிரிட்டிஷ் சர்க்கார்.

பென்னி குக் தொழில்நுட்பத்தின் துணையோடு அணைத் திட்டத்தைச் சமர்ப்பித்திருந்தார். இயற்கை உதவும் என்று பெரும் நம்பிக்கையில் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாரானார். நீரின்றி வறண்டு கிடக்கும் ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலங்களை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரும் நல்லெண்ணத்தில் அணை கட்டத் துணிந்திருக்கிறார். தயங்கவோ, அச்சம் கொள்ளவோ, பின்வாங்கவோ இனி இடமில்லை என்ற உறுதியை மனத்திற்குள் வரித்துக்கொள்ளவே காட்டை அங்குலம் அங்குலமாக நடந்து கடந்தார். மலைக்குன்றுகளிடம் மோதி, உரசிச் சென்ற வெள்ளம் மலைப் பாம்பெனக் கடந்ததைப் பார்த்துப் பிரமித்து நின்றார். ஆங்காரமாய் ஓடிக்கொண்டிருக்கும் இவ்வளவு பெரிய வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி, அணை கட்ட வேண்டும். நினைத்து நினைத்து பென்னி அன்று முழுக்க இயற்கையின் பேரழகில் உள்ளுறைந்திருக்கும் அச்சத்தில் மூழ்கினார். அச்சம் தவிர்க்க, அச்சம் தருவதிடமே அடைக்கலமாவதுதானே ஒரே வழி. அந்தச் சித்தாந்தத்தை நம்பித்தான் பென்னி அன்றெல்லாம் காட்டில் கிடந்தார்.

பென்னியின் அச்சத்தைப் பின்தள்ளிய அவர் ஆழ்மனத்தில் அணை, மெல்ல மேலெழுந்துகொண்டிருந்தது. பெரிய பெரிய பாறைகள் உடைபடுவதும், காளவாயில் சுண்ணாம்புக் கற்கள் கொப்பளித்து உடைந்து சிதறுவதும், நூறடி, ஐம்பதடி மரங்களை வெட்டிச் சரிக்கும் காட்சியும் கண்முன் விரிந்தன. அணையின் சுவர் மேலெழுவதைக் கண்முன் உணர்ந்தார் பென்னி.

புறச்சூழலின் நினைவழிந்து, அகத்திற்குள் ஆழ்ந்து அணை கட்டிக்கொண்டிருந்த பென்னியை தூரத்தில் கேட்ட யானையின் பிளிறல் தன்னிலைக்குக் கொண்டு வந்தது. உடல் ஒரு கணம் அதிர்ந்து அடங்கியது. பகலடங்கி, வனத்திற்குள் இருள் கவிழ்ந்துவிட்டதை அப்போதுதான் கவனித்தார். மலையில் இருந்து இறங்கத் தொடங்கினார். பகலில் மலையேறியபோது இருந்த காடு, இருள் கூடிய பொழுதில் வேறொன்றாகி இருந்தது. காடு தன் ரகசியங்களை முழுமையாக மறைத்துக்கொண்டு அமைதியின் பேரெழிலில் தவழ்வதைப் பார்த்த பென்னி வியந்தார்.

மேலேறி வந்த பாதையும் திரும்பும் பாதையும் ஒன்றுதானா என்றறிய முடியாத பென்னி, கால்கள் நடந்த பாதையில் சென்றார். தன் குதிரை காத்திருக்குமா? வழி மாறி அடர்ந்த காட்டுக்குள் சென்றிருக்குமா? காட்டு விலங்குகளுக்கு இரையாகியிருக்குமா என்றெல்லாம் மனத்தின் உற்சாகத்தைக் குறைக்கும் சிந்தனைகள் எழுந்தன. எதுவொன்றும் தன்னிடம் சேர்வதையும் தன்னிலிருந்து பிரிவதையும் தீர்மானிக்கக்கூடிய சக்தி தன்னிடம் இல்லாதபோது அதுகுறித்து அஞ்சுவதில் பயனில்லையென்று நடந்தார். காட்டில் பாதைகளைக் கண்டறியும் நுட்பம் தெரிந்துகொள்ள வேண்டும், மலையில் இருக்கும் குடிகளைப் பழக்கிக்கொள்ள வேண்டும், பெய்னுக்குத் தெரிந்த பழங்குடிகள் இருக்கும் மலையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைத்தபடி பென்னி மலை இறங்கினார்.

நள்ளிரவில் மலையடிவாரத்தை அடைந்தபோதுதான் தெரிந்தது, ஏறிய பகுதியல்ல இறங்கிய பகுதி என்று. குதிரையை நினைத்தார். அணை கட்டும் பாரத்தையே குதிரைமேல் ஏற்றியிருந்தது நினைவில் வந்தது. அணை கட்டி முடிக்கும்வரை சோர்வென்பதே தன்னை நெருங்கக்கூடாது என்று எடுத்த முடிவையும் நினைத்து அமைதியானார்.

குடிலை நெருங்க நெருங்க, இருளைத் தன் வாலினால் சுழற்றித் தள்ளியபடி நின்றுகொண்டிருந்த குதிரையின் நிழலுருவம் தெரிந்தது. ஒரே எட்டில் பாய்ந்தோடிய பென்னி, கண்ணீர் வர குதிரையைத் தழுவினார். குதிரையின்மேல் காட்டின் பசும் தழைகளின் வாசம் வீசியது. குதிரையின் முதுகில் தழைந்து படுத்து, தழை வாசத்தை ஆழமாக உள்ளிழுத்தார். அவர் நரம்புகளின் உள்ளோடி ஆழப் புதைந்தது பசுங்காட்டின் மணம்.

மெக்கன்ஸி, லோகன், டெய்லர் உள்ளிட்ட ஆறு உதவி இன்ஜினீயர்களைக் கூர்ந்து கவனித்துப் பேசிக் கொண்டிருந்தார் பென்னி குக். லோகன் கொடைக்கானலில் பென்னி இருக்கும் பகுதியில் இருக்கிறார். லோகனின் மனைவியும் குழந்தைகளும் ஜார்ஜியானாவிடம் மிகுந்த நட்பு பாராட்டுகிறவர்கள். பென்னியைப் போலவே லோகனும் கொடை கிளப்பின் உறுப்பினர். பென்னிக்குக் கிரிக்கெட் விருப்பம் என்றால் லோகனுக்குக் கால்பந்து. புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளைய ராஜா துரைராஜாவுடன் கால்பந்து விளையாடுவார் லோகன். இருவரும் சேர்ந்து கால்பந்துப் போட்டிகளை நடத்துவார்கள்.

பென்னி தன் முன்னிருந்த வரைபடத்தைப் பார்த்தார். எங்கிருந்து தொடங்குவது என்ற சிந்தனை, சுருங்கி விரிந்த அவரின் நெற்றி ரேகைகளுக்குள் அழுந்தி எழுந்தது.

“நண்பர்களே, ஒரு வழியாக ஒப்பந்தம் கையெழுத்தாகி, கையெழுத்தான செய்தி ஹிஸ் எக்ஸலென்ஸி ரெசிடென்ட் வழியாக, ஹிஸ் எக்ஸலென்ஸி மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னருக்குச் சென்று சேர்ந்திருக்கிறது. ஒப்பந்தப் பத்திரம் திருவிதாங்கூர் சமஸ்தான மகாராஜாவின் பார்வைக்குச் சென்றிருக்கிறது. அவர் பார்த்த பின்பு, திவான் ராமய்யங்கார் ரெசிடென்டிடம் ஒப்படைப்பார். ஒப்பந்தப் பத்திரம் பிரிட்டிஷ் இந்தியச் செயலருக்குச் சென்ற பிறகுதான், திட்டத்திற்கான நிதியை ஒதுக்குவார்கள். இந்த ஆண்டுக்கான பொதுப்பணித் துறையின் திட்ட ஒதுக்கீட்டில் அணைக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. திருவிதாங்கூர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பொழுது, அவர்களிடம் குத்தகைக்கோ, விலைக்கோ நிலத்தை வாங்க வேண்டியிருந்தால் அதற்கான செலவினங்களுக்காக ஐந்து லட்சம் ஒதுக்கப்பட்டிருப்பதோடு வேறு தொகை ஒதுக்கப்படவில்லை. என்னுடைய எதிர்பார்ப்பின்படி அடுத்த நிதியாண்டில்தான் பெரியாறு அணைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்படும். அதுவரை நாம் செய்ய வேண்டிய வேலைகள் ஏராளமாக உள்ளன.”

“நிதியே இல்லாமல் என்ன வேலை செய்ய முடியும் மிஸ்டர் பென்னி?”

“திட்டத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொன்றுக்கும் திட்டம்தான் வகுத்திருக்கிறோம். எப்படிச் செய்யப் போகிறோம் என்பதை நாம்தானே தீர்மானிக்க வேண்டும் மிஸ்டர் டெய்லர்? உதாரணத்திற்கு, நாம் இருக்கும் குமுளிதான் மலையடிவாரத்தையும் மலையையும் இணைக்கும் இடம். கீழிருந்து வரும் ஒவ்வொரு கட்டுமானப் பொருளும் குமுளி வந்து குமுளியில் இருந்துதான் மேலே அணை கட்டும் இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். மலைமேல் போவதற்குப் பாதைகளே கிடையாது. பாதைகளைத்தான் முதலில் அமைக்க வேண்டும். குமுளியிலிருந்து அணை கட்டப்போகும் இடமுள்ள எட்டு மைல் தூரமும், வெவ்வேறு வழிகளில் நாம் ஆறு பேரும் ஏறி இறங்கி ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்த பிறகுதான், எது தோதான பாதையென்று முடிவுசெய்து, காட்டுக்குள் மண்பாதை அமைக்க முடியும். நாம் தேர்ந்தெடுக்கப்போகும் பாதை செங்குத்தாக இருக்கக் கூடாது. சுமை ஏற்றிக்கொண்டு மேலேறும் மாட்டு வண்டிகள் தடுமாறும். குதிரைகளும், கழுதைகளும் மேலேற முடியாமல் திணறும். கொஞ்சம் கொஞ்சமாக உயரம் கூடிக் கொண்டு போகும் பாதையைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்குப் பணம் தேவையில்லையே மிஸ்டர் டெய்லர்.”

“செங்குத்தான பாதைகள் என்றால் ரயில் பாதை அமைப்பதுதானே ஏற்புடையதாக இருக்கும்? ரயில் பாதையை அமைக்கும் வரைதான் கடினம். அமைத்த பிறகு, அதிக சுமையுள்ள இரும்பு மெஷின்கள், சுண்ணாம்பு, சுர்க்கி எல்லாமே ஏற்றிச் செல்ல வசதியாக இருக்கும்.”

“என்னுடைய திட்டத்தில் கூடலூரில் இருந்தே 13 மைல் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்க 50,000 ரூபாய் மதிப்பீடு கொடுத்திருந்தேன். ரயில் பாதைக்காக ஐம்பதாயிரம் ரூபாய் செலவு செய்வது அதிகம் என்று நானே அந்த யோசனையைக் கைவிட்டுவிட்டேன். மாட்டு வண்டிகளால் சுமை ஏற்றிச்செல்ல முடியாத நேரத்தில், நீரைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துவோம், தேக்கடியில் இருந்து முள்ளியபஞ்சன் நதியில் படகுகள் மூலம் பொருள்களை ஏற்றி வருவதற்கு வழி என்ன என்றும் ஆலோசித்துப் பார்க்க வேண்டும். நீரைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினால் எனக்கு இரண்டு நற்பெயர்கள் கிடைக்கும்” என்றார் பென்னி, சிரித்தபடி.

நீரதிகாரம் - 37 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“இரண்டு நற்பெயரா? யார் யாரிடமிருந்து?”

“இரண்டுமே ஒரே நபரிடமிருந்துதான். பிரிட்டிஷ் இந்தியாவின் அணை நாயகன் ஆர்தர் காட்டனிடமிருந்து…”

“ஆர்தர் காட்டனா?” லோகன் வியந்தார்.

“ஆமாம். நான் ரயில்வே வேண்டாம் என்று முடிவெடுத்ததற்கு வெகுவாகப் பாராட்டுவார். ரயில்வே வேண்டாமென்றதோடு, நீரைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினேன் என்று சொன்னால், நான் செய்த ஆகச்சிறந்த காரியமென்று புகழ்ந்து தள்ளிவிடுவார்.”

“ஆமாம்… ரயில்வேயைத் தூக்கிப் பிடிக்கும் ஐ.சி.எஸ் அதிகாரிகளைத் திட்டித் தீர்ப்பதுதானே காட்டனின் முதல் வேலை?”

“யாரையும் விமர்சிக்க வேண்டுமென்பது அவரின் விருப்பமில்லை. ரயில்வேயில் போடும் முதலீடு அதிகம். முதலீடு குறைவான நீர்நிலைகளை ஆழப்படுத்திப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாமே என்கிறார். நீர்நிலைகளைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த ஒரு முறை ஆழப்படுத்தினால் போதும்.”

“மிஸ்டர் பென்னி, நீரில் போடும் முதலீடும் குறைவு, வருமானமும் குறைவு. ஹர் எக்ஸலென்ஸி பிரிட்டிஷ் மகாராணி இந்தியாவுக்குச் சேவை செய்ய, உள்ளூர் ஆட்சியாளர்களுடன் ரத்தம் சிந்திப் போரிட்டு சமஸ்தானங்களை வெற்றி கொள்ளவில்லை. எந்த முதலீட்டிலும் அதிகபட்ச லாபமென்ன என்பதுதான் நம் பிரிட்டிஷ் சர்க்காரின் இலக்கு. பிரிட்டிஷ் இந்தியாவில் ரயில்வே ஏன் அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்று இன்னுமா புரியவில்லை? பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு உறவினர்களும் நண்பர்களும், பிரபுக்களின் உறவினர்களும்தான் இந்தியாவின் ரயில்வேயில் முதலீடு செய்திருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் போக்குவரத்து என்றாலே அது ரயில்தான் என்ற நிலையை பிரிட்டிஷ் இந்தியா எட்டிவிடும்.”

“மிஸ்டர் லோகன் சொல்வது நடக்கலாம். அப்படியெனில் நீர்நிலைகள் தங்களின் முக்கியத்துவம் இழக்கும். இந்தியா போன்ற விவசாயத்தை நம்பிய பெரும் மக்கள்தொகை இருக்கும் தேசத்திற்கு அது நல்லதல்ல. சரி, நம் திட்டத்திற்கு வருவோம். குமுளியிலிருந்து அணை கட்டப்போகும் இடத்திற்கு முதலில் ஒரு மண்பாதை அமைக்க வேண்டும். பாதை அமைக்கும் முன், அடர்ந்த புதர்களையும் மரங்களையும் வெட்டி அகற்றிச் சரிசெய்ய வேண்டும்.”

“மரங்களையும் புதர்களையும் வெட்டி அப்புறப்படுத்தும் வேலைக்காக, கம்பம் கூடலூர்ப் பகுதியில் இருக்கின்ற கிராம மணியம்களையும் கர்ணங்களையும் கூட்டி வரச் சொல்லி கொத்தனார்களிடம் சொல்லியிருக்கிறேன். கிராமத்துச் சனங்களிடம் வெட்டிப் போடும் மரங்களை எடுத்துக்கொள்ளலாம், வெட்டும் மரங்களுக்கான கூலியும் கொடுக்கலாம் என்று சொல்லி, கூப்பிடச் சொல்லியிருக்கிறேன். ஊர் மக்களை மொத்தமாக ஒரு வாரம், இரண்டு வாரத்திற்கு வேலைக்கு வர வைத்தால் புதர்களை அகற்றிவிடலாம். அதன்பின் மெட்டல் ரோடு போடுவது எளிது.”

“குட் மிஸ்டர் லோகன். நல்ல யோசனை. மரங்கள் நமக்குத் தேவைப்படும். பரவாயில்லை. அணை கட்டப்போகும் இடத்தில் வெட்டும் மரங்களை எடுத்துக்கொள்வோம்.”

“முதலில் இந்தக் குமுளியில் ஒரு இன்ஸ்பெக்‌ஷன் பங்களாவைக் கட்டிக்கொள்ளப் பணம் ஒதுக்கக் கடிதம் எழுதுங்கள் மிஸ்டர் பென்னி. நாம் எல்லாரும் எங்கு தங்கி வேலை செய்வது? வசதிகளற்ற இந்த இடத்தில் ஒரு நாள்கூட என்னால் இருக்க முடியாது.”

பேசி முடித்த டெய்லரைப் பார்த்து எல்லோரும் சிரித்தார்கள்.

“ஏன் எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரிக்கிறீர்கள்? நானொன்றும் தவறாகச் சொல்லவில்லையே? இந்த ஓலைக் குடிசைக்குள் என்னால் உட்கார முடியவில்லை.”

“மலைமேல் எந்தப் பங்களாவில் உட்கார்ந்திருப்பீர்கள் மிஸ்டர் டெய்லர்?”

“ஏன், மலைமேல் நமக்குக் கட்டப்போகும் பங்களாவில்தான்…”

“ஆமாம்… கோடை வாசஸ்தலத்திற்குச் செல்கிறீர்கள். உங்களுக்குச் சொகுசு பங்களா கட்டிவிடலாம்.”

“ஏன், நம் எல்லோருக்கும் அங்கு வீடு கட்டித்தானே ஆக வேண்டும்?”

“ஆம், இப்போதைக்கு எல்லோரும் ஓரிடத்தில் தங்குவதுபோல் சின்னதாக ஒரு மர வீடு.”

“எல்லாரும் ஓரிடத்திலா, என்னால் முடியவே முடியாது…”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பென்னியின் உதவியாளன் உள்ளே வந்தான்.

“தொரை…” அவன் அழைப்பில் பதற்றம் தெரிந்தது.

“என்ன?”

“தொரை… காட்டுல ரெண்டு மூணு கொழந்தைங்கள ஆன அடிச்சிடுச்சாம்…”

“ஓ ஜீசஸ்… குழந்தைங்களா? குழந்தைங்க ஏன் காட்டுக்குள்ள போனாங்க? குழந்தைங்களுக்கு என்ன ஆச்சு?” பென்னி அதிர்ந்தார்.

``காட்டுல பொதையல் கெடைக்குதுன்னு ஊரே காட்டுல கெடக்கு துரை. சுக்காங்கல்பட்டியில இருந்து போன கொழைந்தைங்களாம். ஆன அடிச்சா அவ்ளோதானே தொரை…” அவன் குரலில் துயரம் தோய்ந்திருந்தது.

குடிலின் ஜன்னல் வழியே தெரிந்த மலையைப் பார்த்தார் பென்னி.

‘உன் விளையாட்டு ஆரம்பமா?’ என்ற கேள்வி அவர் விழிப்படலத்திற்குள் இருந்தது.

- பாயும்