
வெயில் முற்றத் தொடங்கிய வேளையில் குருவனூத்தின் சுண்ணாம்புக் காளவாசலுக்குச் சென்ற மூவரும் குதிரையிலிருந்து இறங்கினர்
முதல் நாள் குருவனூத்திலிருந்து கிளம்பிய பென்னியும் மற்ற இன்ஜினீயர்களும் அடுத்த நாள் விடியலில் கூடலூரைச் சுற்றியிருந்த வாழையாற்றுப் படுகை, கல் அடைச்சான் படுகை, கழுதை மேடு உள்ளிட்ட இடங்களின் சுண்ணாம்புக் காளவாசல்களுக்குச் சென்று வந்தார்கள்.

மொக்கை மாயனை வரச்சொல்லி ஆள் அனுப்பியவுடன், அவரும் அவரின் மகன் பேயத் தேவன், அவன் நண்பர்கள் ஏழெட்டுப் பேருமாகச் சிறு படையே வந்துவிட்டது.
மொக்கை மாயன் பேயத் தேவனின் கூட்டாளிகளை, “டேய் எளந்தாரிகளா, எங்கங்க காளவாசல்க இருக்குன்னு பாத்து, அதுல எது தோதா இருக்கும்னு நம்ம தொரைக்கு ஒளவு சொல்ல நீங்கதான் ஒத்தாசையா இருக்கணும். நம்மள நம்பி வந்திருக்காரு” என்று அவ்வப்போது ஏவிவிட்டுக் கொண்டிருந்தார்.
குருவனூத்துக் காளவாசலில் சுண்ணாம்பைச் சுட்டவுடன் தகவல் சொல்லியனுப்பினார் ரத்தினம் பிள்ளை. இளஞ்சிவப்பு நிறத்திலான கெம்புக் கல் (மாணிக்கம்) காதில் ஒளிர, அடர்த்தியான முடிக்கற்றையைத் தூக்கிக் கொண்டை போட்டுக்கொண்டு, வாயில் வெற்றிலைச் சிவப்புடன் ஓடியாடிக் கொண்டிருந்த ரத்தினம் பிள்ளையைப் பென்னிக்கு மிகவும் பிடித்தது. பிள்ளையின் மூலம் வேலை நடக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் மிகப்பெரிய காரியங்கள் நடந்து கொண்டிருப்பதான பாவனையைப் பிள்ளையால் உருவாக்க முடிவதைக் கவனித்தார் பென்னி. இப்போதைய மனநிலைக்கு அந்தப் பாவனை தேவையாக இருந்தது. அணை கட்டுவதற்கான ஆரம்பப் பணிகள் என்ன நடந்திருக்கிறது என்றால், பதில் ஒன்றுமில்லைதான். ரத்தினம் பிள்ளையின் பாவனையைப் பார்க்கும்போது, பாதி வேலைகள் தொடங்கி விட்ட ஆறுதல் கிடைக்கிறது. அதற்காகவே பென்னி, பிள்ளையின் ஓட்டங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
விழித்தெழுந்த பறவைகள், கூடடைந்திருந்த மரத்தை விட்டு இன்னும் பறந்திருக்கவில்லை. நாளின் தொடக்கத்தைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதைப்போல் அதனதன் குரலில் சொல்லிக்கொண்டிருந்தன. இரவு மழை பெய்திருக்கிறது. இலைகளின்மேல் படிந்திருந்த மண்ணின் செம்மண் நிறம் கரைந்தோடி, துடைத்துவைத்ததுபோல் பளிச்சென்று இருந்தது. ரத்தம் சிந்தி நித்தம் சூரியனைப் பிரசவிக்கும் வானத்தின் இளம் வயிற்றில் வெண்மஞ்சள் நிறக் கீற்றுகள் பிரசவ ரேகைகளாகப் பரவி நின்றன. காலை நேரத்தின் புத்துணர்ச்சிக்கு நிகராக வேறொன்றைச் சொல்ல முடியுமா? பென்னியின் மனம் காலைப்பொழுதின் அழகில் மயங்கித் தோய்ந்தது.

இன்ஜினீயர்கள் லோகனும் டெய்லரும் முன்னால் செல்ல, பென்னியின் மன ஓட்டம் அறிந்த குதிரை நிதானமாகச் சென்றது.
வெயில் முற்றத் தொடங்கிய வேளையில் குருவனூத்தின் சுண்ணாம்புக் காளவாசலுக்குச் சென்ற மூவரும் குதிரையிலிருந்து இறங்கினர். பேயத் தேவனின் சிற்றப்பன் முங்கிலித் தேவன் இவர்கள் வருவதற்கு முன்பு அங்கிருந்தார்.
ரத்தினம் பிள்ளை எல்லோரையும் ஒதுங்க வைத்துவிட்டு முன்னால் வந்தார். “கல்லு சுட்டுத் தயாரா இருக்கு துரை...” கும்பிட்டபடி சொன்னார். சூரியனின் துளிக் கீற்று, அவரின் கெம்புக் கடுக்கனில் பட்டு, செங்கீற்றாய் எதிரொளித்தது.
மல்லாத்திப் போட்ட கூம்பின் வடிவத்தில் இருந்த காளவாசலிலிருந்து புகை காற்றில் நடனமாடியபடி மெல்ல மறைந்துகொண்டிருந்தது.
சுட்டுத் தயாராக இருந்த கற்களின் அருகில் சென்ற பென்னி, “தண்ணீரை ஊற்றுங்கள்” என்றார்.
ரத்தினம் பிள்ளை சாடை காட்டவும், மண் பானைகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக சுட்ட கல்லின்மேல் ஊற்றினார்கள்.
மேலே நீர்பட்டவுடன் இருந்த நிலையிலேயே நன்றாக வெந்திருந்த சுண்ணாம்பு பொங்கியது. உள்ளிருந்த சிறு துகள்கள் பட் பட் என்று வெடித்துச் சிதறி வெளியேறின. குமிழியிட்ட சுண்ணாம்புக்கற்கள் கொதிநீரில் கரைவதைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தனர் கூடியிருந்தோர்.
பொங்கிய சுண்ணாம்பு மென்மையான மாவாகக் குழைந்து நின்றது. குளிர்ந்த சுண்ணாம்புக்குழம்பைக் கையில் எடுத்துப் பார்த்தார் பென்னி. அவர் மனத்தில் வெற்றிலை போட்ட ஜீசஸ் போன்ற பெரியவர் வந்து சென்றார். முதிர்ந்தவர்களின் அனுபவம்தான் சிறந்த பரிசோதனை. மனத்திற்குள் நிறைவு வந்தது.
“பிள்ளை, குழைந்த சுண்ணாம்பைப் பெரிய பலகையளவு ஊற்றிக் காய விடுங்கள், நன்றாகக் காய்ந்த பிறகு அதன்மேல் கருங்கற்களை எடைகட்டி வையுங்கள். இரண்டு வாரம் இருக்கட்டும். பிறகு நான் வந்து பார்க்கிறேன்.”
“உத்தரவு துரை.”
“எசமான், இந்தச் சுண்ணாம்பு தொட்டா மை மாதிரிதான் இருக்கும். இறுகிடுச்சின்னா, குருணி சோழக் கூழ் குடிச்சுச் செமிக்கிற இளந்தாரி பய போடுற கடப்பாறைகூட உள்ள எறங்காது” மொக்கை மாயன் தன் அனுபவம் சொன்னார்.
“நல்லது மாயன். நாங்களும் ஒருமுறை சோதிச்சுப் பார்த்துடுறோம். சர்க்காருக்குச் சொல்லணும்” என்ற பென்னி, ரத்தினம் பிள்ளையிடம் திரும்பி, “மலைமேல் ஓரிடத்தில் சுண்ணாம்புக்கல் இருக்குன்னு சொன்னீங்களே பிள்ளை? மலைமேலயே கிடைச்சிட்டா நல்லது. டன் கணக்கில் சுண்ணாம்புக்கல்லை மேலே ஏற்றும் பெருஞ்சிரமமான வேலை நமக்குக் குறையும்” என்றார்.
“ஆமாம் துரை... இங்க பார்த்துட்டு, நீங்க தங்கியிருக்கிற இடத்துக்குப் போறதுக்குள்ள கண்ணகி கோயில் பூசாரி அக்கா வந்துடுவாங்க. வண்ணாத்திப் பாறையில இருந்து இறங்கி வரணும் துரை. அதான் தாமசம், இப்போ வந்துடுவாங்க.”
“சரி வரட்டும்” என்ற பென்னி, பேயத் தேவனையும் கூட்டாளிகளையும் பார்த்தார்.
“அம்மையநாயக்கனூர்ல இருந்து மாட்டு வண்டிகளை இங்க வரச் சொன்னால் பயப்படுறாங்களே தேவன்? மாடுகள் களவு போயிடுமாமே, இங்கயும் கள்ளர்கள் பயம் இருக்கா?” என்று கேட்டார் பேயத் தேவனிடம்.
ரத்தினம் பிள்ளை திடுக்கிட்டார். யாரிடம் என்ன கேள்வி கேட்கிறார் என்ற திகைப்பு அவர் முகத்தில். பிள்ளை விழிப்பதைப் பார்த்துப் பென்னி, என்ன என்பதுபோல் கேட்டார். சட்டென்று அருகில் வந்த பிள்ளை பென்னியின் அருகில் குனிந்து, “இவங்க எல்லாருமே கள்ளருங்கதான் துரை. இவங்க கிட்டயே கேக்குறீங்களே?” என்றார்.
“மாயன், நீங்க கள்ளரா? உங்களப் பார்த்தா அப்படித் தெரியலையே?”
“காவக் காத்த ஜனங்க தொர நாங்க. எவனோ ஒரு தோத்தாங்கோலி எங்களைக் கள்ளன்னு பரப்பி விட்டுட்டான் சாமி. ஆத்தா கருவுக்குள்ள ஜனிக்கிற பச்சை மண்ணு களவுக்குப் போகணும்னா தீர்மானம் பண்ணிக்கிட்டு வருது? வெளையாட்டுக்கு மாட்ட பத்துறேன், காட்ட பத்துறேன்னு சொல்லுவானுங்க. இவனுங்க கூறுகெட்ட பசங்க. களவுக்குப் போனியான்னு கேட்டா, போவாதவன்கூட, `ஆமாம் போனேன்’னு நெஞ்ச நிமித்துவான். பய புள்ளைக்கு அது ஒரு பெரும. இப்போ ஆண்டிப்பட்டி பக்கம் கள்ளப் பாதையில போய் நின்னு பாருங்க சாமி. வயிறு காஞ்ச அத்தன சாதி பாவப்பட்ட கும்பலும் மறைஞ்சு நிக்குது...” மொக்கை மாயன் நீளமாகப் பேசினார்.
பென்னிக்கு மாயன் பேசியதைப் பின்தொடர்வதில் சிக்கல் இருந்தது. ரத்தினம் பிள்ளை உள்நுழைந்தார். “யோவ் மாயன்... போய்யா எல்லாம் தெரியும்” என்றார்.
முங்கிலித் தேவன் நீண்ட வேல்கம்புடன் முன்னால் வந்து நின்றார்.
“நீ யார் என்னான்னு தெரியாது அப்பு. எங்காளு சர்க்காரோட வெள்ளைக்கார தொரகிட்ட பேசயில சப மருவாதி தெரியாம பேசுற. தொரமாருக இருக்காங்கன்னுகூட பாக்க மாட்டேன். நெஞ்செலும்ப எண்ணிடுவேன்” முகத்தில் கோபம் காட்டாமல் அழுத்தமாகப் பேசிய முங்கிலித் தேவனை மிரட்சியாகப் பார்த்தார் பிள்ளை. அகன்ற கை கால்களும், நீண்டிருந்த நகங்களும் அச்சமூட்டின. ‘ராட்சச அவதாரம் போலிருக்கிறானே?’ என்று மனத்திற்குள் எண்ணியவர், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பின்னகர்ந்தார்.
“மாயன்... எனக்கு இருநூறு, முந்நூறு வண்டி மாடுகள் வேணும். நீயும் தேவனும்தான் ஏற்பாடு செய்யணும்.”
மொக்கை மாயன் பேயத் தேவனைப் பார்த்தார். ‘இருக்குமா?’ என்ற கேள்வி அவரின் பார்வையில் புதைந்திருந்தது.
“வண்டி மாடு எதுக்குன்னு சொன்னீங்கன்னா அதுக்குத்தக்கன ஏற்பாடு செய்யலாம் தொரை” என்றான் பேயத் தேவன்.
“இந்தச் சுண்ணாம்பு முழுக்க மலைமேல் ஏத்தணும்.”
“மலைமேலயா? மலைமேல எங்க தொரை?”
“அணை கட்டப் போற இடத்துக்கு...”
“அணை எங்க கட்டப்போறீங்க தொர?” ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த செய்தி உண்மைதான் போலும் என்ற யோசனையுடன் பேயத் தேவன் கேட்டான்.
“மூவாயிரம் அடி உயரத்தில். வண்ணாத்திப் பாறையில்...”
“கண்ணகி அம்மை கோயில ஒட்டியா?”
“கோயிலுக்குக் கீழ...”
“கோயிலுக்கு பாதிப்பு வராதுங்களா தொர? எங்க வீடுகள்ல மொதக் கொழந்தைக்கு முடி எடுக்கிறது கண்ணகி கோயில்லதான். ஏற்கெனவே கோயில் சிதிலப்பட்டுக் கெடக்குது...”
பேயத் தேவன் சொன்னவுடன் மொக்கை மாயனும் பேச்சில் கலந்தார்.
“பேயத் தேவன் கைப்புள்ளையா இருக்கையில இந்த ஊருக்கு வந்தான் சாமி. அப்ப ஜனங்க நெனச்சா மூச்சுக்கு முப்பது தடவை அம்மனுக்குப் பொங்க வைக்கப் போய் வருவாங்க. ஒரு வருஷம் பேய் மழை. வெள்ளத்துல செவருல ஒரு விரிச வந்துச்சு. விரிச மேலயே பெருத்த மரம் ஒன்னு காத்துல விழுந்து, செவரும் விழுந்துபோச்சி. யானைக முட்டி மோதி சுத்துச் சுவரு முழுக்க விழுந்துபோச்சி...”
“மலைமேல போற அளவுக்கு இங்க வண்டி மாடுக இல்லை தொரை... மேய்ச்ச காட்டுக்கு அதது போயிட்டு வருமே தவிர, செமைய ஏத்திக்கிட்டு மலையேறாதே?” பேயத் தேவனின் குரலில் யோசனையும் இருந்தது.
“வண்டி மாடு சுமையை ஏத்திக்கிட்டு நடக்கும்தானே?” டெய்லர் கேட்டவுடன், “மலைமேல ஏர்றதுக்கு மாட்டுக்குத் தெம்பு மட்டும் போதாது தொர. எறக்கத்துல சக்கரத்தோட இழுவையை நிறுத்துற மாதிரி காலைப் பின்னுக்குத் தள்ளியே நடக்கணும். மேட்டுல ஏறத் தவிக்கிற சக்கரத்தை விசையா சேர்த்திழுக்கணும். ஜல்லிக்கட்டுக் காளைய வண்டி இழுக்கச் சொல்லுங்க? ஒன்னும் ஆகாது. வண்டிக் காளையை வாடிவாசல்ல நிறுத்த முடியுமா? அததுக்கு அம்சம் இருக்கு தொர...” முங்கிலித் தேவன் பதில் சொன்னார்.
“அவங்க பயத்துலயும் காரணம் இருக்குதுதானே? போலீசுக்காரங்களே நம்மள சொல்லித்தானே ஜனங்கள பயமுறுத்துறாங்க? கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்களையும் மிரட்டுனாங்க தொர. மேல்மலைக்கு அணை கட்டுற வேலைக்கு எங்கள பிடிச்சுக்கிட்டுப் போவப் போறாங்க. அதுக்குத்தான் இல்லாத கேசை எல்லாம் திரிச்சிக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க. மலைமேல மாடுகள பத்திவிடுறதுக்கும் லைசென்ஸ் வாங்கணும். மாட்டுக்கு முத்திர போடணும். இல்லைன்னா மாடு மேய்க்கிறவங்களுக்குத் தோள்ல சூட்டு முத்திர போடணும்னு சொல்லி மிரட்டினாங்க. என்ன நடந்துச்சின்னு தெரியல. ரெண்டு, மூணு மாசமா கமுக்கமா இருக்காங்க” பேயத் தேவன் சொல்ல,
“மழை, வெயில், காடு, மேடுன்னு தாங்கி நின்னு வேலை பார்க்கிற ஆளுங்கள ஊருக்குப் பத்திருபது பேர் பார்த்து வைங்கன்னு சொன்னால், தோள்பட்டையில சூடு போடுறேன்னு சொல்லியிருக்காங்க. காட்டு வழியைச் சுத்தம் பண்ணி வைங்கன்னா காட்டில் புதையல் இருக்குன்னு ஆளுங்கள அனுப்பி, அநியாயமா மூணு குழந்தைகளைக் கொன்னுட்டாங்க. எதுவுமே நேராவே செய்யத் தெரியாதா உங்க ஆளுங்களுக்கு?” மூன்று குழந்தைகளின் நினைவு வந்தவுடன் பென்னிக்குக் கோபம் வந்தது.
“எல்லாமே இந்தக் கங்காணிங்களும் கொத்தனார்களும் செய்யிற வேலைதான் துரை...” பிள்ளை குறுக்கிட்டார்.
“அவங்களுக்குச் சர்க்கார் குடுக்கிற பணத்துல காவாசிகூட செலவழிஞ்சிடாமப் பாத்துக்கணும். அதுக்கு அங்கங்க என்னென்ன வழின்னு தெரிஞ்சு வச்சிப்பாங்க. சர்க்கார் உத்தியோகஸ்தருங்க கூடவும், ஜனங்க கூடவும் கூட்டாளியா இருக்கிறது அவங்கதானே? ஒரு ஊருக்கு வந்து அந்த ஊரு சிப்பந்திய பிடிச்சா மொத்தத்தையும் வாங்கிடலாம்...”
“பெரியாறு விஷயத்துல யாராவது இந்த மாதிரி ஏமாத்துற வேலையை வச்சிக்கிட்டா அவ்வளவுதான்னு சொல்லிடுங்க. ஊருக்கு ஊரு செய்தியைப் பரப்புங்க. ஊருக்குள்ள வேலை செஞ்சா என்னா கூலி கிடைக்குமோ, அதுக்கு ரெண்டு மடங்கு கூலி மலைமேல வேலை செஞ்சா கிடைக்கும்னு சொல்லுங்க. ஒரே நிபந்தனை... வேலைக்கு வந்துட்டுப் பாதியில வந்துடக் கூடாது. அதுதான் எங்களுக்குப் பெரும் பிரச்சினையாயிடும்.”
பென்னி சொன்னதற்குப் பிள்ளையும் மற்றவர்களும் ‘சரிதான்’ என்பதுபோல் தலையாட்டியபடி நின்றிருந்தார்கள்.
“தேவன்... உன்னுடைய வயதில் இருக்கிற ஆள்கள் வந்தால் மலைமேல் வேலை செய்ய நிரம்பக் கஷ்டமிருக்காது. உனக்கு வேண்டியவர்களிடம் சொல்லி, கம்பம், கூடலூர், பாளையம்... சுற்றி என்னென்ன ஊரிருக்கோ எல்லா ஊருக்கும் தகவல் சொல்லி விடு. இன்னும் நான்கைந்து மாசத்தில் வேலை ஆரம்பிச்சிடலாம்.”
“சரிங்க தொர...” பேயத் தேவன் சொல்லும்போதே, “மன்னிக்கணும் தொரைமாரே... பேயத் தேவனோட நல்லப்பன்தான் நானு. என் அண்ணன் மகன்தான் அவரு. இந்த ஊருக்கு அவர்தான் பஞ்சாயத்து. அதனால நாங்க அவர மரியாதைக்கொறவா நீ வான்னுகூட சொல்ல மாட்டோம். ஆனா தொரைமாரு சொன்னதுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்... காடுமேடெல்லாம் என் வயசு ஆளுகளுக்குத்தான் நல்லா பரிச்சியம். இங்க ஆனை வெரட்டிக இருக்காங்க. புலி வெரட்டிக இருக்காங்க. கதம்ப வண்ட அழிக்கறதுக்குன்னே ஆளுக இருக்கு. புலியோட சிறுநீர மோப்பம் புடிச்சிக்கிட்டே மொத்த காட்டுலயும் புலி இல்லாத பகுதிக்குப் பத்திரமா கூட்டிக்கிட்டுப் போறதுக்கு வயசாளிக இருக்காங்க. அதனால கொஞ்ச வயசு பயலுகதான் மலைமேல சுதாரிப்பாங்கன்னு இல்ல தொரை. மன்னிக்கணும். தொரையை மீறி வார்த்தைச் சொல்றதா நெனைச்சிக்கக் கூடாது. என்னப் பாருங்க, ஒரு ஆன நிக்கிற கணக்கா இருக்கா?” கேட்டுக்கொண்டே நெஞ்சை நிமிர்த்தி, வேல்கம்போடு கம்பீரமாக நின்று காண்பித்தார் முங்கிலித் தேவன்.
உடனிருந்தவர்கள் சிரித்தார்கள்.
“முங்கிலி, கட்டாயம் இருக்கிறீங்க. நீங்களே ஆளுங்கள கூட்டியாங்க. நான் வயச வச்சி யோசிச்சேன். நீங்க சொல்றதுதான் சரி... அனுபவசாலியா கூட்டிக்கிட்டு வாங்க” என்ற பென்னி, பிள்ளையிடம் “போகலாமா?” என்றார்.
“பூசாரி அக்காவும் அவங்ககூட மன்னான்களோட காணிங்களும் வந்திருக் காங்களாம் துரை. இப்போதான் தகவல் வந்தது.”
காட்டுப் பூவைக் காடன்றி வேறெங்கு பார்த்தாலும் அந்நிய உணர்வு வருவதைப்போல், தேவந்தி சூழலில் அந்நியப்பட்டு நின்றிருந்தாள். மனிதர்களிடம் அதிகம் பழகியிராத அவளுக்கு வெள்ளைக்காரர்களும் சர்க்கார் அதிகாரிகளும் கூடியிருக்கும் இடம் கூச்சத்தைத் தந்தது.
தன்னை வெள்ளைக்காரத் துரை கூடலூருக்கு வரச் சொன்னதாக, கூடலூரில் இருந்து சர்க்கார் உத்தியோகம் பார்க்கும் ஒருவர் வந்து கூப்பிட்டவுடன் தேவந்திக்கு உடல் நடுங்கியது. தன்னை எதற்காகக் கூப்பிடுகிறார்கள் என்று அஞ்சினாள். அணை கட்டும் இன்ஜினீயர் துரைதான் கூப்பிடுகிறார் என்று தெரிந்துகொண்டவுடன், அவள் ஓடிச்சென்று கண்ணகியை வணங்கினாள். “உன் கோயிலைக் காப்பாற்ற என்ன வழி என்று தடுமாறிக்கொண்டிருந்த எனக்கு இவ்வளவு சீக்கிரம் ஒரு நல்ல வழி காட்டிவிட்டாயே என் அம்மையே... யாரைப் போய்ப் பாக்குறது, யார்கிட்ட முறையிடறதுன்னு தடுமாறிக்கிட்டு இருந்த எங்களுக்கு நல்ல வழியைக் காட்டியிருக்க தாயே... நீயே என்கூட வந்து, என் நாக்குல சொல்லா இரு என் அம்மையே” என்று நன்றியும் வேண்டுதலுமாக மனம் நெகிழ்ந்தாள். உடையானுக்கும் ஆள் அனுப்பினாள். உடையான், 42 காணிகளையும் தேவந்தியுடன் போகச் சொல்லி உத்தரவு கொடுத்தார். மன்னான் குடிகளையும் கண்ணகி கோயிலையும் எப்படியாவது காப்பாற்றித் தர வேண்டும் என்று தைரியமாகத் தேவந்தியைப் பேசச் சொல்லி, காணிகளிடம் சொல்லி விட்டிருந்தார்.
பொழுது சாய்வதற்குள் 42 காணிகளும் விண்ணேற்றிப் பாறைக்கு வந்துவிட வேண்டும், நடுசாமத்தில் மலையிறங்க வேண்டும் என்று உடையான் திட்டமிட்டுக் கொடுத்தபடி எல்லாம் சரியாகவே நடந்தன.
“துரை, இவங்கதான் பூசாரி அக்கா. பேரு தேவந்தி. வண்ணாத்திப் பாறையில இருக்க கண்ணகி கோயிலோட பூசாரி. வண்ணாத்திப் பாறைக்குப் பக்கத்தில் இருக்கிற கல்லோடை கிட்டதான் சுண்ணாம்புக் கல் இருக்குன்னு சொன்னாங்க. இவங்களுக்கும், கூட வந்திருக்கிற மன்னான்களுக்கும் மேல்மலையோட இண்டு இடுக்கெல்லாம் தெரியும். அதான் வரச் சொன்னேன் துரை.”
தேவந்தி ஆச்சரியமாகப் பார்த்தாள். ‘நாம்தானே மன்னான்களை அழைத்து வந்தோம்? என்னை மட்டும்தானே சர்க்கார் ஆள் கூப்பிட்டார்?’
காட்டின் மரம், செடி, கொடிகளைப்போல் வெள்ளந்தியாய் இருக்கும் தேவந்திக்கு எப்படித் தெரியும், நாட்டு மனிதர்களின் சாதுர்யங்கள்?
கோயிலின் பூசாரியாகப் பெண் ஒருவர் இருக்கிறார் என்ற தகவல் தந்த ஆச்சரியத்தில் இருந்தார் பென்னி. அதிலிருந்து அவர் மீள்வதற்கு முன்பாகவே தேவந்தி பேச ஆரம்பித்தாள்.
“கும்பிடுறேன் தம்புரான், நீங்க எனக்கொரு சகாயம் செய்யணும்” பேசத் தொடங்கும்போதே தேவந்தியின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.
தேவந்தி அழத் தொடங்கியதற்கான காரணம் புரியாமல் பென்னியும் இன்ஜினீயர்களும் திகைத்தனர். ரத்தினம் பிள்ளைக்கும் புரியவில்லை.
“எதுக்கு அக்கா அழறீங்க?” பிள்ளை கேட்டார்.
“கண்ணகி அம்மை கோயில இடிச்சிட்டுத்தான் நீங்க பேரியாத்துல அணை கட்டப் போறீங்களாமே?” குரல் உடைந்து பேசினாள்.
“யார் சொன்னது உங்களுக்கு?”
“எங்க புவனேந்திர தம்புரான் (பூஞ்சாறு அரசர்) சொன்னாரு. மன்னான்களும் மலைக்குக் கீழ வந்தப்ப அங்கங்க ஜனங்க பேசிக்கிறாங்கன்னு சொன்னாங்க.”
“கண்ணகி கோயிலை நாங்க இடிக்க மாட்டோம். அணை கட்டத் தேர்வு செஞ்சிருக்கிற இடம் கோயிலுக்குத் தென்மேற்குத் திசையில் இருக்கு. அணை கட்டுற இடத்திலிருந்து ஆயிரம் அடி உயரத்தில்தான் கோயில் இருக்கு. கோயிலுக்கு ஒரு பாதிப்பும் இருக்காது.”
பென்னி சொல்லியவுடன் இறுகிய பாறையாகக் கனத்திருந்த தேவந்தியின் மனம், பனிபோல் உருகியது. இரு கைகளையும் ஒன்று சேர்த்துக் கும்பிட்டாள். “கண்ணகி அம்மை வெறும் தெய்வம் மட்டுமல்ல தொர. வஞ்சிக்கப்பட்ட ஆன்மா. வாழ்ந்த காலத்துலதான் அவளுக்கு நிம்மதியில்ல. தெய்வமா இருக்கிற காலத்திலயாவது அவ நிம்மதியா இருக்கணும். அவதான் இந்த மேல்மலையைக் காவக் காக்குறா. அவளோட கோபம் தணிஞ்சு பூவா நின்ன இடம் இந்த மலை. காலாகாலத்துக்கும் அவ மனசு குளுந்த இடத்தைக் காப்பாத்தணும். எங்க பூர்வீகம் பூம்புகார். கண்ணகி ஆத்தாகூட ஒண்ணு மண்ணா பழகியது எங்க மூதாதை. அவங்க பேர் தேவந்தி. அதனாலதான் எங்க வம்சத்துலயே தலைப் பொம்பளப் பிள்ளையா பொறந்த பொட்டப் பொறப்ப தேவந்தியா நேர்ந்து விடுறாங்க. நம்ம காலத்துக்குப் பெறகும் கண்ணகி அம்மை கோயிலுக்கு ஆபத்து வந்துடக் கூடாது.”
தேவந்தியின் உணர்வெழுச்சிகளைப் புரிந்துகொள்ள முயன்றார் பென்னி.
“உங்ககூட வந்திருக்கிற இவங்கெல்லாம்?”
“மன்னானுங்க தம்புரான். மலைமேல பளியருங்க, ஊராளி, மலைப்பண்டாரம், அரையன், மன்னான்னு அங்கங்க காணிங்க இருக்காங்க. மன்னானுங்கதான் 42 காணியில இருக்காங்க. இவங்க உடையான்தான் எனக்குத் தொணையா இருக்கட்டும்னு என்கூட அனுப்பி வச்சிருக்காரு.”
மன்னான்களின் காணிகள் எங்கெங்கு இருக்கிறது என்று விசாரித்தறிந்த பென்னி, மனம் சோர்ந்தார்.
“தொரைமார் சொல்லிட்டீங்கன்னா எங்க காணிங்களுக்கு ஒன்னும் ஆகாது. எங்களுக்கு அந்தக் காட்டைத் தவிர வேற ஒன்னும் தெரியாதுங்க தொரை” என்றார் குப்பான் காணி.
பென்னி, லோகனிடம் சொல்லி, வரைபடத்தை எடுத்து வரச்சொன்னார்.

அந்த இடமே அமைதியானது. லோகனின் பூட்சு ஒலி மட்டுமே உரத்து எழுந்து, தேய்ந்து, மீண்டும் உரத்துக் கேட்டது.
“பென்னி...” என்று அழைத்து வரைபடத்தைக் கையில் கொடுத்தார் லோகன்.
வரைபடத்தை வாங்கிய பென்னி, கொஞ்சம் தள்ளியிருந்த அகலமான பலகையொன்றின்மீது விரித்தார். நீண்ட விவாதங்களுக்கும் ஆய்வுக்கும் பிறகு இறுதி செய்யப்பட்ட திட்ட வரைபடம். பென்னி அணையின் தலைப்பிடத்தில் இருந்து மெல்லப் பார்த்து வந்தார். குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தாகிற நேரத்தில் சென்று வந்த அன்றும் தனக்குக் கோயிலும் கோயிலுக்கு அருகில் இருக்கிற மலைக் காணிகளின் குடியிருப்பும் பற்றிய எண்ணம் ஏன் தோன்றாமல் போனது என்று எண்ணினார். திருவிதாங்கூர் சமஸ்தானம் கொடுத்த நெருக்கடியும், பிரிட்டிஷ் சர்க்கார் தள்ளிப்போட நினைப்பதுபோல் தோற்றம் தந்த நடவடிக்கைகளும் அவரின் நிதானத்தைக் குலைத்து அமைதியிழக்கச் செய்திருந்தன.
மன்னான்கள் சொல்லிய இடங்களில் நிச்சயம் இருபதுக்கு மேலான காணிகள் நீரில் மூழ்கும். மன்னான்களும் பளியன்களும் ஊராளிகளும் இருக்கிற காணிகள் பெரும்பாலும் நீரில் மூழ்கும். நீர்ப்பிடிப்புப் பகுதி அதிகம் கிடைக்கும் என்ற காரணத்திற்காக இன்ஜினீயர் ஸ்மித் பரிந்துரைத்த இடத்தைத் தான் மாற்றியதில் நடந்த நல்ல விஷயம் கண்ணகி கோயில் காப்பாற்றப்பட்டி ருப்பதுதான். இப்போது மன்னான்களுக்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்தார். லோகனும் டெய்லரும் பென்னியின் முகம் மாறுவதைப் பார்த்து என்ன என்று பார்வையில் கேட்டனர். இருவரிடமும் மன்னான் காணிகள் மூழ்கிவிடும் என்பதை இங்கிலீஷில் சொன்னார்.
“வெரி சிம்பிள்... அவர்களுக்கு மலையடி வாரத்தில் சர்க்கார் குடிசைகள் போட்டுத் தந்துவிடலாமே?”
“குடிசை போட்டு? அவர்கள் வாழ்க்கையே காட்டுக்குள்தான். மீனைத் தண்ணீரிலிருந்து வெளியில் எடுத்துவிடுவதைப்போல் கொடுமையானது மலைவாசிகளைச் சமவெளிக்கு அழைத்து வருவது. நாம் செய்கிற எந்த வேலையும் அவர்களுக்குச் செய்யத் தெரியாது. நாம் சாப்பிடும் உணவும் அவர்களுக்கு ஒவ்வாதது. காட்டு மரம்போல் அவர்கள் காட்டில் இருந்தால்தான் நல்லது டெய்லர்.”
“அதுக்கு வழி?”
“அதுதான் யோசிக்கணும். இப்போது வரைபடத்தைப் பார்த்ததில் இன்னொன்றும் தெரிகிறது. கண்ணகி கோயிலுக்கு பாதிப்பிருக்காது. ஆனால் கோயிலுக்குச் செல்லும் வழிகளிலெல்லாம் நீர் தேங்கும். பூசாரியின் முகத்தில் தெரியும் நிம்மதியைப் பார்த்தால் இந்த உண்மையை எப்படிச் சொல்வது என்று தயக்கமாக இருக்கிறது.”
பென்னியின் முக மாற்றத்தைக் கவனித்த தேவந்தி, அவர்கள் அருகில் வந்தாள்.
“தம்புரான் முகம் மாறுதே? மன்னான்களுக்கு எதுவும் ஆபத்தா தம்புரான்? காட்டு மண்புழு அவங்க. மண்ண விட்டு வரமாட்டாங்க. தூக்கிப் போட்டாலும் மண்ணைத் துளைச்சிக்கிட்டு உள்ள நுழைஞ்சிடுவாங்க.”
“நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. நான் பார்த்துக்கிறேன்” என்றார் பென்னி தயக்கத்துடன்.
அப்போது பென்னியும் இன்ஜினீயர்களும் தங்கியிருந்த சர்க்கார் அலுவலகத்தின் வளாகத்திற்குள் இரண்டு குதிரைகள் மூச்சிரைக்க வந்து நின்றன.
குதிரையின் மீதிருந்த வீரர்களைப் பார்த்தவுடன், தேவந்தி, “நம்ம புவனேந்திர ராஜாவோட ஆளுக” என்று சொல்லி, எழுந்து நின்றாள்.
ரத்தினம் பிள்ளை பென்னியின் அருகில் சென்று, “பூஞ்சாறு அரசர் கோட வர்மாவின் வீரர்கள் துரை” என்றார்.
குதிரையிலிருந்து இறங்கிய வீரர்கள் பென்னியைப் பார்த்து வணங்கினர். ஒரு வீரன் முன்னால் வந்து நின்று உறையிலிடப்பட்டிருந்த கடிதத்தைப் பென்னியிடம் கொடுத்தான். வாங்கிப் பிரித்த பென்னி, கடிதத்தில் இருந்த வாக்கியத்தை எழுத்துக் கூட்டி வாசித்தார்.
‘பேரியாறு அணை கட்டப்போவதில் பூஞ்சாறு சமஸ்தானத்தின் இடமும் அடங்கியிருக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்துகொண்ட குத்தகை ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது. உடன் என்னை நேர்முகம் காணவே இந்த நேர்முகக் கடிதம் – கோட ராம வர்மா.’
சடசடவென்று இறங்கிய மழையின் சாரல் கடுதாசியின் மேலும் விழுந்து உருண்டது. உயர்ந்த மேல்மலையினைச் சூழ்ந்த கருமேகங்கள் முகடுகளுக்குக் கீழிறங்கி, மலையின் கிரீவத்தை (கழுத்து) நெரிப்பதுபோல் அடர்ந்தன.
- பாயும்