மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 46 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

சுண்ணாம்பின் வலிமையைச் சோதித்துக்கொண்டிருந்த அன்று, ‘நேர்முகம் காண வர வேண்டும்’ என்று பூஞ்சாற்று அரசர் கோட ராம வர்மாவின் கடிதம் வந்தபோது, பதற்றம் கூடியது.

மீனாட்சி நதியில் கால் நனைத்து நின்றிருக்கும் இந்தக் கணத்தில் நிறைந்து ததும்பும் மனத்தின் மகிழ்வினை, கால் விரல்களின் வழியாக நீரில் பரவ விட்டார் பென்னி குக். நான்கு நாள்களாக நீடித்த உளப் போராட்டம் முடிவுக்கு வந்ததுடன், பூஞ்சாறு சமஸ்தானத்துடன் நல்லுறவும் உண்டானதில் மனம் அமைதியில் திளைத்தது.

பூஞ்சாற்று அரசர்களின் ரசனை வியக்க வைத்தது. மீனாட்சி நதி நளினமாகப் பெருகிவரும் ஆற்றின் கரையில் அரண்மனையை எழுப்பியுள்ளார்கள். அரண்மனையின் குசினியில் இருந்து பின்னோக்கி நடந்தால் இரண்டாள் உயரப் புறக்கதவு. புறக்கதவின் தாழ் திறந்தால், மீனாட்சி பளிங்குபோல் ஓடுகிறாள். அரண்மனையின் புறவாசலில் காலெடுத்து வைக்கும் இடம் நதியாக இருக்க வேண்டும் என்று நினைத்த மனிதர் எத்தனை அற்புதமானவராக இருந்திருக்கக் கூடும்? பொதுவாக இந்திய அரசர்களின் அரண்மனைகளைச் சுற்றி நீரால் சூழப்பட்ட அகழிகள் இருப்பதைப் பார்த்திருக்கிறார். புனேவிலும் பாம்பேவிலும் இருக்கும் பேரளவிலான கோட்டைகள் அகழிகளால் சூழப்பட்டவை. அகழியில் யாரும் கால் நனைக்க முடியாது. அகழி எதிரிகளுக்கு மட்டும் எச்சரிக்கை அல்ல, அதன் அரசனுக்கும் வீரர்களுக்குமே அணுக முடியாத இடம்தான்.

பாண்டிய அரசர்களாக இருந்தவர்கள் தாயாதி சண்டையை வெறுத்து, சொந்த மண்ணை விட்டு வெளியேறி, பிறகுதான் இங்கு பூஞ்சாறு சமஸ்தானத்தை நிறுவினார்கள். போரை வெறுத்து, எதிரிகளை வெறுத்து வெளியேறியவருக்கு, ரம்மியமான வாழ்வின்மீது தீராத விருப்பம் இருந்திருக்கிறது. அடர்ந்த காட்டில் தங்களுக்கென சமஸ்தானத்தையும் குடிகளையும் உருவாக்கிக்கொண்டு கனவுலகம் போல் வாழ்ந்திருக்க நினைத்திருக்கிறார்.

பென்னி இரண்டு நாள் பூஞ்சாறு சமஸ்தானத்தில் தங்கியிருக்க நேர்ந்தது. அதிகாலையில் ஆற்றுக்குச் செல்ல வந்தவர் திகைத்து நின்றார். அரண்மனையின் புறவாசலில் இருபது, முப்பது கற்படிகள். ஒவ்வொரு படியினையும் தாங்கி நிற்க வேலைப்பாடு களுடனான கல்தூண்கள். கல்தூண்களின் கழுத்துப் பகுதியில் உள்ளங்கையைக் குவித்து வைத்ததுபோல் அளவான கல்விளக்குகள். நீர் மட்டத்திற்கு மேலாக உள்ள கல்விளக்கில் தீபம் பொருத்தி வைத்திருந்தார்கள். பளிங்குபோன்ற நீரின் ஓட்டமும் மெல்லிருளும்; மெல்லிருளை விரட்டுவதற்காக அல்ல, இருள் இருக்கிறது என்பதைச் சொல்வதற்காகத் தான் நான் ஒளிர்கிறேன் எனச் சரணடைந்துவிட்ட தொனியில் பவ்வியமாய் இருந்த கல்விளக்கின் ஒளி என அவ்விடம் இயற்கைப் பேரெழிலின் நிறைவில் ததும்பி நின்றது. நீரில் கால் வைத்து இறங்க நீண்ட நேரம் தயங்கினார் பென்னி. இரவு முழுக்கப் பயணித்து, நள்யாமம் கடந்து, நற்புலரியில் பூஞ்சாற்றைக் கடக்கும் நதியின் எண்ணம் என்னவோ என்ற சிந்தனை. நீரின் சலசலப்பு சும்மா இருக்க விடவில்லை. ‘இறங்கி வா’ என்ற அதன் இடைவிடா அழைப்புக்குப் பணிந்தார் பென்னி. உடலும் மனமும் திளைத்துச் சோர்வுறும் வரை நீரில் கிடந்தார். கீழ்வானம் சிவக்க சூரியன் மேலெழுந்த பிறகும் மீனாட்சியின் தண்ணீரில் வெம்மை ஏறவில்லை.

சுண்ணாம்பின் வலிமையைச் சோதித்துக்கொண்டிருந்த அன்று, ‘நேர்முகம் காண வர வேண்டும்’ என்று பூஞ்சாற்று அரசர் கோட ராம வர்மாவின் கடிதம் வந்தபோது, பதற்றம் கூடியது. கடிதத்தில் அரசர், அணை கட்டப்போகும் இடம் தனக்குச் சொந்தமானது என்று குறிப்பிட்டிருந்ததுதான் பதற்றத்திற்குக் காரணம். பிரிட்டிஷ் ரெசிடென்ட் ஹானிங்டன், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் ராமய்யங்காருடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, திருவிதாங்கூர் மகாராஜா குத்தகை ஒப்பந்தத்திற்கு உடன்பட வில்லையென்றால் பூஞ்சாறு சமஸ்தானத்தின் அரசரிடம் உடன்படிக்கை செய்துகொள்வதாக மறைமுக எச்சரிக்கை விடுத்தார். திவானும் ரெசிடென்டின் எச்சரிக்கை கேட்டு அச்சமுற்றார்.

நீரதிகாரம் - 46 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

சந்தேகமுற்ற பென்னி ஹானிங்டனிடம் ‘உண்மையில் அணை கட்டப்போகும் இடம் யாருக்குச் சொந்தமானது’ என்ற கேள்வியைக் கேட்டபோது, ‘பென்னிக்குத் தெரியாதா?’ என்று கேள்வியைக் கடந்துவிட்டார். 1869, 1870ஆம் ஆண்டுகளில் பெரியாறு அணை கட்டுவதற்காக ஆய்வுக்காகப் பென்னி மேல்மலையில் தங்கியிருந்த காலங்களில் பிரிட்டிஷ் சர்க்காருக்கு, திருவிதாங்கூர் முழுமையான ஒத்துழைப்பைத் தந்தது. தங்களுக்கு எந்தவிதத்திலும் பயன்பாடில்லாத, கடுமையான காய்ச்சலை மீறி மனிதர்கள் பிழைத்திருக்கவே முடியாத காட்டினை பிரிட்டிஷ் சர்க்கார் எடுத்துக் கொள்வதைப் பற்றித் தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லையென்றுதான் முதலில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அன்றைக்கிருந்த ராஜாக் களுக்கு, மேல்மலை என்பது கண்காணாத தேசம். அதனால் அவர்கள் அணை கட்ட இடம் கொடுப்பதற்கு எந்த நிபந்தனையும் சொல்லவில்லை. வீணாகச் செல்லும் தண்ணீரைத் தானே எடுத்துக் கொள் கிறார்கள் என்ற உயர்ந்த எண்ணமும் இருந்தது.

கம்பம், கூடலூரிலிருந்து முந்நூறு கூலிகளுக்கு மேல் அப்போது அடர்காட்டில் ஆய்வுக் குழுவுடன் இருந் தார்கள். பென்னி, பெரியாறு நதிப்படுகைக்குக் கீழிருந்த பாறையின் தன்மையை ஆய்வு செய்தார். நதிப்படுகைக்குக் கீழே முப்பது அடி, நாற்பதடி, அறுபதடி என்று ஒவ்வொரு இடத்திலும் கடினமான பாறைகள் தட்டுப்படும் வரை தோண்டி எடுத்து ஆய்வு செய்தார்கள். அணை கட்டுவதற்கு ஏற்ற கடினமான பாறைப்பகுதி இருந்த இடத்தைக் கண்டறிய நான்கு பருவங்கள் கடந்தன. மேல்மலையில் வருஷத்திற்கு இரண்டு பருவங்களில்தான் மனிதர்கள் தங்கியிருந்து வேலை செய்ய முடியும். பூஞ்சாறு சமஸ்தானத்தின் அரசரும் ஆய்வுக் குழுவினருடன் அணுக்கமாக இருந்தார்.

அரசர் கோட ராம வர்மா அழைக்கிறார் என்றவுடன் நேரில் சந்திக்கச் செல்வதில் பென்னிக்கு உடன்பாடில்லை. பென்னி செல்லாதபட்சத்தில், கடிதம் மெட்ராஸ் கவர்னருக்குச் செல்லக்கூடும். அரசியல்ரீதியாகச் சென்றால், பதில் கடிதங்கள் எழுதியே இவர்கள் யுகங்களைக் கடத்திவிடுவார்கள் என்று லோகனும் டெய்லரும் எச்சரித்தனர். கோட வர்மா, ஹானிங்டனுக்கும் மெட்ராஸ் கவர்னர் கன்னிமாராவுக்கும் கடிதம் எழுதாமல் நேரடியாகப் பென்னிக்கு எழுதியிருப்பதில் இருந்து, அவர் பென்னியைச் சந்திக்க விரும்பித்தான் இந்தக் கடிதம் அனுப்பியிருக்கிறார் என்று சமாதானம் செய்து பென்னியை அனுப்பி வைத்தார்கள். மீண்டும் மேல்மலைக்குப் பயணம் என்றவுடன் பென்னியும் உற்சாகமாகக் கிளம்பினார்.

பூஞ்சாறு சமஸ்தானம் செல்ல ஓரளவுக்குச் சீரான பாதைகள் இருந்தன. குதிரைக்கு அதிக சோர்வில்லை. காலை கிளம்பி மாலைக்குள் சென்றுவிட முடிந்தது. தூரத்தில் பார்க்கும்போதே கண்ணில் பட்டது திருவிதாங்கூரின் கட்டடக் கலையில் எழும்பி நின்ற அரண்மனை. சுற்றிலும் உயர்ந்தோங்கிய மரங்கள். ஆயுதங்களைப் பார்த்தே தலைமுறையாகிவிட்ட வீரர்கள். வயிறு முன்தள்ளியிருந்ததில் அவர்கள் போர்க்களம் சென்றதே இல்லையென்று புரிந்தது. அரண்மனையில் வெப்பக்காற்று சுழலும் அசாதாரண சூழல் இல்லையென்பது பென்னியை வரவேற்றதில் உறுதியானது.

கருப்பட்டி, எலுமிச்சை, இஞ்சி சேர்த்த பானமொன்று கொடுத்தார்கள். இனிப்பும் புளிப்பும் கலந்த வித்தியாசமான சுவையிலிருந்த பானத்தைப் பருகியபடியே பென்னி எதிர்ச் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்த்தார். பார்த்துக்கொண்டே வந்தவரின் பார்வை, மடியில் சிறு குழந்தையை வைத்திருந்த அரசரின் ஓவியத்தின்மேல் நின்றது. ‘எங்கோ பார்த்திருக்கிறோமே?’ என்று சிந்தனையைப் பின்னோக்கி நகர்த்தினார்.

தம்புராட்டி பாகீரதி வருவதை அரண்மனைப் பெண்ணொருத்தி சொல்லிவிட்டு மறைந்தாள். சில நிமிடங்களுக்குள் பாகீரதி வந்துவிட்டார். குழந்தை முகம் மாறாத பொற்சிலை போலிருந்தார். பார்வையிலேயே இணக்கத்தைத் தெரியப்படுத்தி, பென்னியின் பதற்றம் குறைக்கச் செய்தார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் இளவரசி என்ற தோரணையோ, பூஞ்சாறு சமஸ்தானத்தின் தம்புராட்டி என்ற அதிகாரமோ இல்லாமல் மிக இயல்பாகப் பென்னியின் முன் அமர்ந்தார். அவரின் இடப்பக்கம் சரிந்திருந்த கொண்டையில் செண்பகக் கொத்து மலர்ந்திருந்தது.

நீரதிகாரம் - 46 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

பாகீரதியுடன் பேசத் தொடங்கும் முன்பே அரசர் கோட வர்மா வருவது வீரர்களின் கட்டியத்தில் தெரிந்தது. கோட வர்மாவுக்கும் இளமை இன்னும் விடைபெற்றுவிடவில்லை. உருண்டையான முகம். உருண்டையான முகம் கொண்ட இந்திய ஆண்களுக்கு இயல்பிலேயே பெண் தன்மை வெளிப்படையாகத் தெரிவதை பென்னி உணர்ந்திருக்கிறார். ரத்தினம் பிள்ளைக்கும் உருண்டையான முகம்தான். வெற்றிலையால் எப்போதும் சிவந்திருக்கும் அவரின் உதடுகள் பென்னியின் அனுமானத்தை உறுதிப்படுத்துபவை.

கோட வர்மாவின் முகம் இறுக்கமாக இருந்தது. கோட வர்மாவைப் பார்த்த பாகீரதியின் முகமும் மாறியது. வியர்ப்பதுபோல் அவள் தன் நெற்றியைத் துடைத்துவிட்டுக்கொள்வதில் இருந்து தன்னிலையை வெளிப்படுத்தினாள். ‘உண்மையில் நாம்தானே பதற வேண்டும்?’ எனப் பென்னி தனக்குள் கேட்டுக்கொண்டார். ‘பதறி என்ன ஆகப்போகிறது... வில்பட்டிப் பூசாரி சொன்னதுபோல், இந்தக் காரியத்தைச் செய்ய நான்தான் பணிக்கப்பட்டிருக்கிறேன்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார் பென்னி. கோட வர்மா பேசும் முன் பென்னி பேச்சை ஆரம்பித்தார்.

“பெரியாறு அணை கட்ட இடம் தேடி நாங்கள் ஆய்வுக்கு வந்தபோது நீங்கள் சிறுவனாக இருந்தீர்கள் ராஜா...”

கோட வர்மாவுக்கு அதிர்ச்சி.

“என்ன... தாங்கள் என்னை அறிவீர்களா?”

“உங்களுக்கு மறந்துவிட்டிருக்கும்.”

“ஆம், நினைவுகூர இயலவில்லை.”

“தங்களின் மாமா மான வர்மா அரசராக இருந்தபோது சிறுபிள்ளையாக நீங்கள் உடன் வந்திருக்கிறீர்கள். நாங்கள் அப்போது ஆய்வில் இருந்த நேரம்.”

கோட வர்மாவுக்கு வியப்பாக இருந்தது. பிரிட்டிஷ் இன்ஜினீயரான பென்னி தன்னை அறிந்திருக்கிறார் என்பதோடு, தன் மாமாவையும் தெரியும் என்கிறாரே?

அப்போது அரண்மனையின் உள்ளிருந்து வந்த சேடிப் பெண், வெள்ளித் தட்டு நிறைய மேல்மலையின் கொழுந்து வெற்றிலையையும், பாக்கு, வாசனை சுண்ணாம்பையும் வைத்துச் சென்றாள்.

“பூஞ்சாற்று அரசர், உங்களின் மாமா, ஆய்வு நேரத்தில் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார். அவரின் உத்தரவின்பேரில்தான் கம்பம் பகுதி ஆள்கள் மேல்மலைக்கு வேலைக்கு வந்தார்கள். காட்டில் வேலை செய்ய பயந்தவர்களிடம் பேசி, நம்பிக்கை கொடுத்து வரவைத்தவர் அவர்தான்.”

“அப்படியா?”

“உங்களுக்கு வியப்பாக இருக்கிறதா? மதுரா தேசத்திற்குத் தண்ணீர் செல்லப்போகிறது என்பதில் அரசருக்குப் பெருத்த மகிழ்ச்சி. மதுரா தேசம்தான் அவர்களின் பூர்வீகம் என்று சொன்னார்.”

“வெள்ளைக்காரர்களுக்கு வெற்றிலைப் பழக்கம் இருக்காதென்று எண்ணு கிறேன். எங்கள் உபசாரம் இது. அந்த வழக்கத்திற்கு வைத்துள்ளோம். உங்களுக்குச் சாப்பிட வேறென்ன வேண்டுமென்று சொன்னால் உடனடியாக ஏற்பாடு செய்கிறேன்...” கோட வர்மா சொன்னவுடன் பென்னி, “வேறொன்றும் வேண்டாம்” என்று மறுத்தார்.

கோட வர்மாவுக்கு மனத்தில் வியப்பு. ‘பந்தள அரசர் ராஜசேகராவின் மனைவி அம்பாலிகா சொல்லியதைப் போலத்தான் மாமாவும் சொல்லி யிருக்கிறாரே?’ ஆனாலும், தங்களுக்குச் சொந்தமான இடத்தில், தங்களின் அனுமதியின்றி இடத்தை விட்டுக்கொடுப்பது பலவீனமான நடவடிக்கை யென்று கோட வர்மாவுக்குத் தோன்றியது.

“அப்போதும் நீங்கள் பூஞ்சாறு சமஸ்தானத்திற்குச் சொந்தமான இடத்தில்தான் அணை கட்ட ஆய்வு செய்தீர்களா?” கோபம் காட்டினார் கோட வர்மா.

“எங்கு அணை கட்டலாம் என்று இடத்தைத் தேர்வு செய்வது மட்டும்தான் என் வேலை ராஜா. எனக்குத் தெரிந்ததும் அதுமட்டுமே. இடம் யாருடையது, எப்படி அனுமதி வாங்குவது என்பதெல்லாம் பிரிட்டிஷ் சர்க்காரின் செயலரும் கவர்னரும் முடிவு செய்வார்கள்.”

“அவர்களுக்கு எடுத்துச் சொல்வது உங்களின் கடமையல்லவா?”

என்ன பதில் சொல்வதென்று பென்னிக்கு யோசனையாக இருந்தது.

“ராஜா, பழைய கதைகளைப் பேசுவது நேரம்தான் வீண். தாங்கள் இப்போது என்னிடமிருந்து அறிந்துகொள்ள நினைப்பதைச் சொன்னால் உதவியாக இருக்கும்.”

“இப்படி அறுத்து விட்டாற்போல் பேசுவது முறையற்றது மிஸ்டர் பென்னி.”

கோட வர்மாவின் குரல் உயர்ந்தவுடன் பாகீரதி பதறினாள்.

“நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் பூஞ்சாறு சமஸ் தானத்திற்கு உரிமை யானதுதானே?’’ என்றாள் பென்னியிடம்.

“பூஞ்சாற்றுக்கும் உரிமையானது. அணை கட்டப் போகும் இடம் திருவிதாங்கூர் சமஸ் தானத்திற்குச் சொந்தமானது. அணை கட்டப்போகும் இடத்தை மட்டும்தான் எங்களால் தீர்மானிக்க முடியும். நதியின் குறுக்கே அணையைக் கட்டி முடித்த பிறகுதான் நீர் எங்கெங்கு தேங்கி நிற்கும் என்று தெரிய வரும். எட்டாயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படலாம் என்பது என்னுடைய கணக்கு. திவான் ராமய்யங்கார், குத்தகை ஒப்பந்தம் எழுதும்பொழுது 7436.5 ஏக்கர் என்று துல்லியமாக எழுதித் தந்தார். பிரிட்டிஷ் இந்தியச் செயலர், அதில் திருத்தம் செய்து எட்டாயிரம் ஏக்கர் என்று மாற்றி எழுதினார். அதுதான் நிதர்சனம். நதியைத் தடுத்து நிறுத்தியவுடன் மேடு, பள்ளம், குன்று என எங்கெங்கு நீர் பரவி நிற்குமென்று சொல்ல முடியாது. காடு மலைகளுக்குள் எந்த இடம் யாருக்குச் சொந்தமென்று எப்படித் தீர்மானிக்க முடியும்? உங்கள் சமஸ்தானத்தின் இடமும் நிச்சயம் இருக்கலாம்.”

“திருவிதாங்கூருக்கு இந்தப் பதிலை உங்களால் சொல்ல முடியுமா?”

“அணை கட்டப் போகிற இடம்தான் உறுதியாகச் சொல்லியிருக்கிறோம். நீர் பரவி நிற்கப் போகும் இடங்களை உறுதியாகச் சொல்ல இயலாது. நீரின் போக்கை வைத்து யூகமாகச் சொல்ல முடியும்.”

“எப்படியென்றாலும் பூஞ்சாறு சமஸ்தானத்தின் இடம் இருக்கிறது. மன்னான்களின் காணியும், பளியர்களின் காணியும், கண்ணகி கோயிலுக்கு அருகில் வரையுள்ள இடங்களும் பூஞ்சாறு சமஸ்தானத்திற்குச் சொந்தமானவைதான்.”

“கண்ணகி கோயில் எங்கள் மெட்ராஸ் பிரசிடென்சியில் தான் இருக்கிறது. கோயில் உங்களின் இரண்டு சமஸ்தானங்களுக்கும் சொந்தமானதில்லை. கண்ணகி கோயிலுக்குக் கீழேதான் அணை வருகிறது. நீர் தேங்கும் இடங்களின் சிறு பகுதி உங்கள் சமஸ்தானத்தில் வரலாம். மன்னான்களின் பாதிக் காணிகள் நீரில் மூழ்கிப்போகும் ஆபத்திருக்கிறது. மன்னான்கள் வந்து சொல்லிய பிறகுதான் எனக்கே புரிகிறது. அவர்களுக்கு என்ன வழிசெய்வதென்று யோசித்துக் கொண்டிருக் கிறேன்.”

“அதெல்லாம் எங்கள் சமஸ்தானத்திற்குச் சொந்தமான இடங்கள்தான்.”

“தாங்கள் திருவிதாங்கூரின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டதாக ஹிஸ் எக்ஸலென்ஸி ஹானிங்டன் சொல்லியிருக்கிறாரே?”

பென்னி சொன்னவுடன், கோட வர்மாவுக்குப் பெருத்த அதிர்ச்சி. தன்னுடைய பயத்தை உண்மையாக்குகிறார்களே? எப்போது திருவிதாங்கூரின் மேலாண்மையின் கீழ் நாமிருந்தோம்? ரெசிடென்ட் எப்படிச் சொல்லலாம்?

“திருவிதாங்கூரின் ரெசிடென்ட்டுக்குக் கூடுதலான வேலையைக் கொடுத்திருக்கிறதா உங்களுடைய பிரிட்டிஷ் சர்க்கார்? பெரிய பெரிய சமஸ்தானங்களை இந்திய வைஸ்ராய் வலை வீசிப் பிடிக்கிறார் என்றால், சிறிய சமஸ்தானங்களைப் பிடிக்கும் பணியை ரெசிடென்டிடம் கொடுத்திருக்கிறார்களோ?”

“தாங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்கள் ராஜா. திருவிதாங்கூர் சுதேசி சமஸ்தானம்தான். ஆனால் தங்களின் சமஸ்தானத்திற்குள் யார் குடியிருக்கலாம், யார் குடியேறக் கூடாது என்று மறுக்க சமஸ்தானத்திற்கு உரிமை இருக்கிறதா? ஒவ்வோராண்டும் வரவு செலவு விவரத்தை பிரிட்டிஷ் சர்க்காருக்குச் சமர்ப்பித்தே ஆக வேண்டும் திருவிதாங்கூர். இதிலென்ன சுதந்திர சுதேசி சர்க்கார்?”

“நீங்கள் சொல்லும்படி பார்த்தாலும் நாங்கள் திருவிதாங்கூருக்கோ, பிரிட்டிஷ் சர்க்காருக்கோ வரவுசெலவு விவரம் சமர்ப் பிப்பதில்லை. வருவாயில் இருந்து அவர்களுக்கு வரியும் கட்டுவதில்லை. உங்கள் ரெசிடென்ட்டுக்குத் தெரியாதா இந்த நடைமுறை?”

பென்னி, கோட வர்மாவை உற்றுப் பார்த்தார். நெற்றியில் கனத்த குச்சியொன்றினால் கோடிழுத்ததுபோல் தழும்பிருந்தது.

“உங்கள் நெற்றித் தழும்பு? மன்னிக்க வேண்டும். பொதுவாக உடல் தோற்றம் குறித்துக் கேட்பது நாகரிகமல்ல...”

பென்னியின் கேள்வியில் திகைத்து, பின் இயல்பான கோட வர்மா, தன் நெற்றித் தழும்பை நீண்ட நடுவிரலால் மெதுவாகத் தடவிக் கொடுத்தார். பின் மெல்லப் புன்னகைத்தார்.

“என் மாமா, பூஞ்சாற்றுத் தம்பிரான் இந்தத் தழும்பைப் பற்றிய பேச்செடுத்தாலே பதறிவிடுவார். பேச்சைத் திசைமாற்றி, வேறு யாரும் அதைப் பற்றிப் பேசிவிடாமல் தடுத்து விடுவார்” என்று சொன்ன கோட வர்மா, “யாருக்கும் பெரிதாகத் தெரியாதே? உங்களுக்கு எப்படி அவ்வளவு கூர்மையாகப் புலப்பட்டது?” என்றார்.

பாகீரதிக்கும் ஆச்சரியம். கொட்டுக் கல்யாணம் முடித்து வந்ததில் இருந்து பலமுறை கோட வர்மாவிடம் கேட்டிருக்கிறாள். ‘தெரியாதே?’ என்பதுபோல் இதே புன்னகைதான்.

“பார்த்தவுடன் தெரியுமளவுக்குத் தெரிகிறதா மிஸ்டர் பென்னி?”

“இல்லை ராஜா. உங்களின் அரண்மனைக்கு வந்து, இங்கிருக்கும் ஓவியங்களைப் பார்க்கும்வரை, உங்களைப் பற்றிய நினைவே என்னிடத்தில் சிறிதும் இல்லை. உங்கள் மாமாவின் ஓவியம் பழைய நினைவுகளை நினைவூட்டியது. அதனால்தான் உங்களைப் பார்த்தவுடன் நான் உங்கள் நெற்றித் தழும்பைத் தேடினேன்.” பாகீரதியும் கோட வர்மாவும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் கொண்டார்கள்.

“உங்களுக்கெப்படித் தெரியும்?” பாகீரதி முந்திக்கொண்டாள்.

“அந்தத் தழும்பு உண்டானதே என்னால்தானே?”

“உங்களாலா?” இருவரும் ஒரே குரலில் கேட்டார்கள்.

“ஆம். அப்போது இவர் இளவரசர். அரசர் மான வர்மா, எங்களின் ஆய்வுக் குழுவின் வேலைகளைப் பார்வையிட வந்திருந்தார். இளவரசராக இருந்த கோட வர்மா, அரசரின் கோச் வண்டியை விட்டு இறங்கவில்லை. அரசரும் வீரர்களைப் பாதுகாப்புக்கு நிறுத்திவிட்டு, பாறைகளைத் தகர்த்துக் கொண்டிருந்த இடத்தில் நின்று என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். கம்பத்தில் இருந்து அரசர் அழைத்து வந்திருந்த ஒரு ஒப்பந்ததாரர் பாறைகளை உடைக்க எங்களுக்கு நாட்டு வெடி மருந்துகளைக் கொடுத்திருந்தார். நதியின் கீழே இருக்கும் பாறை எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு இடத்திலும் அகழ்ந்து பார்ப்பது கடினமாக இருந்தது. கடினமான பாறைகள் இருக்கும் இடத்தில் வெடி வைத்துத் தகர்த்து, சிதறும் கற்களையெடுத்துச் சோதித்துப் பார்ப்போம். அப்படிச் சோதித்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் அரசர் மான வர்மா அங்கு வந்திருந்தார். நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகிலேயே வெடி வைத்திருக்கிறார்கள். வெடித்துச் சிதறிய பாறைகளில் இருந்து கூர்மையான கல்லொன்று, எங்களுடன் பேசிக் கொண்டிருந்த அரசரை நோக்கி வந்தது. கல்லின் திசையறிந்த நான் அருகில் இருந்த கம்பொன்றை எடுத்து, கிரிக்கெட் பந்தை எதிர்கொள்வதுபோல் எதிர்கொண்டு திசை திருப்பினேன். வருத்தமென்ன வென்றால், திசை திரும்பிய கல், வண்டிக்கு வெளியில் கால்களைத் தொங்கவிட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உங்களின் நெற்றியைச் சிராய்த்துப் போனது. நிமிடத்தில் உங்கள் முகம் முழுக்க ரத்தமானது. அரசர் பயந்துபோனார். பூஞ்சாறு சமஸ்தானத்தின் வாரிசைக் கொன்றுவிட்டீர்களா எனக் கதறி விட்டார். எனக்கு மூச்சு நின்றுபோன தவிப்பு. என்ன செய்வதென்றே தோன்றாமல் ஸ்தம்பித்து நின்றோம். நல்ல வேளையாக அன்று எங்களுடன் முகாமில் ஒரு டாக்டர் இருந்தார். ரத்தத்தை நிறுத்த அவர் கட்டுப்போட்டு மருந்தும் கொடுத்ததில் மயக்கமான நீங்கள் உடனடியாக விழித்துப் பார்த்தீர்கள். பிறகுதான் அரசருக்கு உயிர் வந்தது. எங்களுக்கும் உயிர் வந்தது.”

“ஓ, இத்தனை பெரிய சம்பவம் இருக்கிறதா இந்தத் தழும்புக்குப் பின்னால்?”

“ஆம். சுமார் இருபதாண்டுகளில் மறந்தே போனேன்.”

“நாங்கள் பாண்டிய அரசர்களின் வம்சாவளியில் வந்தவர்கள். சேர நாட்டிற்குள் அரசமைத்த நாளிலிருந்து சேர நாட்டின் நடைமுறைகளைக் கொஞ்சங் கொஞ்சமாகப் பூஞ்சாறு சமஸ்தானமும் ஏற்றுக்கொண்டது. சேர நாட்டின் மருமக்கள் வழி அரசாட்சியைத்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். என் தாய் ஒருவரே அரசரின் உடன்பிறந்தவர். என் தாய்க்கு நான் ஒருவனே ஆண் வாரிசு. எனவேதான் அரசர் மானவர்மா பதறியிருப்பார்.”

“இருக்கலாம். ஆனால் அரசரை மட்டும் பார்த்த நான், வண்டியில் உட்கார்ந்திருந்த உங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டது பெரும் தவறல்லவா? எல்லாம் மறந்துவிட்டது எனக்கு. உங்களைப் பார்த்தவுடன் இப்போதுதான் நினைவுக்கு வருகிறது.”

“கிரிக்கெட் என்று ஏதோ சொன்னீர்களே, அதென்ன?”

“அதொரு பந்து அடிக்கும் விளையாட்டு. எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. எங்களின் இங்கிலாந்து தேசத்தவர்கள் விளையாடும் அற்புதமான விளையாட்டு. மெட்ராஸிலும் கிரிக்கெட் விளையாட ஒரு மைதானமே சேப்பாக்கத்தில் நான் கட்டினேன். விளையாட்டுச் சங்கத்துக்கும் நான் செயலாளராக இருந்தேன்.”

நீரதிகாரம் - 46 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“நீங்கள் ஓய்வாக இருக்கும்போது எங்களுக்கும் கற்றுக்கொடுங்கள்.”

“அவசியம். அந்த விளையாட்டு ஒரு தொற்றுபோல்; விளையாடுபவர்களையும் விடாது, வேடிக்கை பார்ப்பவர்களையும் விடாது...” என்று சொல்லிய பென்னி, “என்னை மன்னிக்க வேண்டும் நீங்கள். நல்லவேளையாக டாக்டர் இருந்ததால் எந்த ஆபத்துமில்லாமல் போனது” என்றார்.

“என்னை அடித்ததற்கு ஈடு கொடுத்துவிடுங்கள். சரியாகிவிடும்.”

“ஈடென்றால்..?”

“அடித்ததைச் சமன் செய்ய ஏதேனும் பரிசு?”

“அரசருக்குப் பரிசு கொடுக்குமளவிற்கு என்னிடம் என்ன இருக்கிறது? கேளுங்கள், இருப்பதைக் கொடுக்கிறேன்.”

“மன்னான்களின் காணி மூழ்குமென்றீர்களே? அதைத் தடுத்து, வேறு திட்டம் யோசியுங்கள். எங்களுடன் மதுரையில் இருந்து கிளம்பி வந்தவர்கள்தான் மன்னான்கள். அவர்களின் நலத்திற்கு நாங்கள் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். நீங்கள் பூஞ்சாறு சமஸ்தானத்திற்குச் சொந்தமான எந்த இடத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் மன்னான்களின் காணிகளைக் காக்க வேண்டும். நான் உங்களிடம் அவசியம் எதிர்பார்க்கிறேன்.”

“கண்ணகி கோயிலுக்குச் செல்லும் பாதைகளும் நீரில் மூழ்கும். மன்னான்களின் காணிகளும் வெள்ளத்தில் மூழ்கும். இவை இரண்டுக்கும் உடனடியாக மாற்று என்னவென்று என்னால் சொல்ல முடியாது. நதியின் பாதையை நாம் மறிக்கும்போது, நதிநீர் புதுப்புதுப் பாதைகளை அதுவே தேர்வு செய்யும். வெள்ளக் காலத்தில் நிச்சயம் அதன் பாதை கிளை விரித்து ஓடும். அணை கட்டத் தொடங்கிய பிறகுதான் சொல்ல முடியும். புதிதாகத் திட்டத்தை மாற்றி, மீண்டும் சர்க்காருக்கு அனுப்பி, என் பேரனின் தலைமுறை வந்தாலும் அணை கட்ட முடியாது. நானே பெரியாறு திட்டத்துடன் இருபது வருஷங்களாக ஓடிக்கொண்டிருக்கிறேன். மன்னிக்க வேண்டும் தம்புரான்...”

‘கண்ணகி கோயிலுக்குச் செல்லும் பாதை மூழ்கிப்போனால் கோயிலுக்கு யார் செல்வார்கள்? நடுக்காட்டில் ஒற்றை முலைச்சியாக நின்ற துயரம் போதாதென்று, பூஜையும் அலங்காரமும் அற்று, பக்தர்களும் இல்லாத் தனிமையில் கண்ணகி தனித்திருப்பாளோ?’ கோட வர்மாவுக்கு மனம் தத்தளித்தது. மன்னான்களின் நிலையை நினைத்தும் வருந்தினார்.

ஓர் உரையாடலுக்குள் எப்போது நுழைய வேண்டும் என்று சொற்களைவிட மௌனத்திற்குத் தீர்க்கமாகத் தெரிந்திருக்கிறது. அடுத்து வந்த நிமிடங்கள் மௌனத்தில் கலந்தன.

செண்பகப்பூவின் மணம் மட்டும் சிந்தனையின் ஊடாகக் கலந்து மணத்தது.

“மேல்மலையில் நமக்குச் சொந்தமான எவ்வளவோ இடமிருக்கிறது தம்புரான். அவர்களை மலையை விட்டுக் கீழிறக்க வேண்டுமென்பதில்லையே? மலைக்காணிகள் வழக்கமாக, நான்கைந்து பருவங்களுக்குத் தங்களின் நிலங்களைப் பயன்படுத்திவிட்டால், அந்த நிலத்தை மேலும் உழுது சிரமப்படுத்தாமல் புதிய இடங்களுக்குச் சென்றுவிடுவார்கள். பூமித் தாயினைச் சுரண்டி வாழ அவர்கள் விரும்புவதில்லை. நாம் காட்டிற்குள் செல்லுமிடங்களில் பளியர்களும் மன்னான்களும் தங்களின் குடியிருப்புகளை மாற்றியுள்ளதைப் பார்த்திருக்கிறோமே? அவர்களுக்குப் புதியதாக இடமும் கொடுத்து, குடிசைகளும் கட்டிக் கொடுத்துவிட்டால், அவர்கள் வருத்தம் கொள்ள மாட்டார்கள்” பாகீரதி, சிக்கலை அவிழ்க்கும் தீவிரத்தில் ஒவ்வொரு சொல்லாகக் கோத்துப் பேசினாள்.

பென்னிக்குச் சரசரவென்று தலைச்சூடு குறைந்த ஆறுதல். கோட வர்மாவுக்கும்.

பூஞ்சாற்று அரசருடனான சிக்கலும் மலைக் காணிகளின் சிக்கல்களும் ஒரே இழையில் முடிவுக்கு வந்ததில் பென்னிக்குப் பேராறுதல். பெரியாறு அணை கட்டும் திட்டம் தொடங்கியதிலிருந்து நித்தம் ஒரு பிரச்சினை.

சிறு குழந்தையின் குதூகலத்துடன் பெருக்கெடுக்கும் மீனாட்சியில் கால் நனைத்து, பூஞ்சாறு சமஸ்தானத்தின் விருந்தினராக அமைதியுற்று நின்றிருக்கும் பென்னிக்குத் தெரியாது, நீர்ப்பாசனத் துறையின் செயலர் அணைத் திட்டத்தில் சில தெளிவுகள் வேண்டியிருப்பதால், பென்னியை மீண்டும் ஆய்வுக்குச் செல்லச் சொல்லி அனுப்பிய கடிதத்திற்கு ஏற்பு கொடுத்து, மெட்ராஸின் புதிய கவர்னர் கன்னிமாரா கையெழுத்திட்டிருக்கிறார் என்ற செய்தி.

தன்னை அடக்க வருபவர்களையொடுக்க வெஞ்சினம் கொண்டு விரட்டியடிக்கும் காட்டுச் சூலியாகப் புன்னகை செய்தது பேரியாறு.

- பாயும்