மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 49 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

கட்டடங்களைப் பார்க்கும்போதே ‘பிரிட்டிஷ் ராஜ்’ என்ற பெரும் சாம்ராஜ்ஜியத்தின் முழக்கத்தைப் பிரதிபலிக்க வேண்டுமென்று விரும்பிய பிரிட்டிஷ் சர்க்கார், கவர்ந்திழுக்கும் கட்டட மாதிரியை வடிவமைத்தது

நீரதிகாரம் - 49 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

பிரிட்டிஷ் இந்தியாவின் பொதுப்பணித் துறை அண்டர் செக்ரட்டரி மேஜர் மார்ஷல், தன் முன்னால் உட்கார்ந்திருக்கும், மெட்ராஸ் பிரசிடென்சியின் பொதுப்பணித் துறை இன்ஜினீயரும் அரசு செயலருமான லெப்டினென்ட் கர்னல் பென்னி குக்கின் இருப்பைப் பொருட்படுத்தாமல் ஹூக்காவில் இருந்து வெளியேறும் புகையை சுவாரசியமாகப் பின்தொடர்ந்துகொண்டிருந்தார். பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைக்காலத் தலைநகரமான சிம்லாவின் குளிரில் இதமாக இருந்தவருக்கு மெட்ராஸின் வெயில் பாலைவனமாய்ச் சுட்டெரித்தது. முகம் அனலில் வதங்கி, செம்மை கூடியிருந்தது.

வெங்காயத்தைக் கவிழ்த்து வைத்தது போன்ற முகப்பு கோபுரமும், உயர்ந்த சாளரங்களும், சாளரத்தின் வெளிப்பக்கம் கூம்புபோல் கீழிறங்கிக் குவியும் கீழ்மாடங்களுமாக மெட்ராஸ் பிரசிடென்சியின் பொதுப்பணித் துறைக் கட்டடம் கம்பீரமானது. ஐரோப்பியர்களின் வருகைக்குமுன் இந்தியாவின் பெரும்பகுதியை ஆட்சி செய்துகொண்டிருந்த முகம்மதியர்களின் கட்டடக் கலை, பிரிட்டிஷாருக்கு விருப்பமான கிழக்கு ரோமானியம் என்றழைக்கப்படும் பைசான்டியன் கட்டடக் கலை, இந்து மரபின் கட்டடக் கலை ஆகிய மூன்றின் அழகியலையும் நேர்த்தியையும் உயரிய தொழில்நுட்பங்களையும் கிரகித்துக் கொண்ட பிரிட்டிஷார் அலங்காரமான கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிவந்த செங்கற்களால் சுண்ணாம்புப்பூச்சின்றி எழுப்பப்படும் கட்டடங்கள் பிரசிடென்சிக்குப் புதுப்பொலிவைக் கொடுக்கத் தொடங்கியிருந்தன. பிரெஞ்சு, டச்சு, போர்த்துக்கீசியர்களுடனான போர்கள், கர்நாடகப் போர்களால் சிதைவுற்றுப் பொலிவிழந்திருந்த மெட்ராஸ், சிதைவுகளிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறது. நகரத்தின் எழிலுக்குப் பிரிட்டிஷார் கட்டிக்கொண்டிருக்கும் கட்டடங்களே பிரதான காரணம்.

கட்டடங்களைப் பார்க்கும்போதே ‘பிரிட்டிஷ் ராஜ்’ என்ற பெரும் சாம்ராஜ்ஜியத்தின் முழக்கத்தைப் பிரதிபலிக்க வேண்டுமென்று விரும்பிய பிரிட்டிஷ் சர்க்கார், கவர்ந்திழுக்கும் கட்டட மாதிரியை வடிவமைத்தது. “யோசனையும் தொழில்நுட்பமும் எங்களுடையதாக இருந்தாலும், உள்ளூர் வேலையாட்கள் ஒவ்வொருவரின் உழைப்பினால்தான் இந்தக் கட்டடங்கள் உயிர்பெறுகின்றன. அவர்கள் கைகளுக்குள் ஏதோ ஒரு மாயம் இருக்கிறது’ என்ற பிரிட்டிஷ் கட்டடங்களின் வடிவமைப்பாளர் ராபர்ட் சிஷோல்மின் வார்த்தையைச் சர்க்கார் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பிரிட்டிஷாரின் தனித்த முத்திரைகளாகத்தான் கட்டடங்கள் வளர்ந்துகொண்டிருந்தன.

மெட்ராஸ் பிரசிடென்சி முழுக்க கட்டடங்களையும் அணைகளையும் கட்டும் பணியைச் செய்யும் பொதுப்பணித் துறையின் அலுவலகம், பென்னியின் ஆத்மார்த்தமான வேலையகம். பெரியாறு அணைக் கட்டுமானத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தாலும் பொதுப்பணித் துறையின் சீப் இன்ஜினீயராகவும், அரசு செயலராகவும் இருக்கும் பென்னியைத் தேடிக் கோப்புகள் வந்துவிடுவதால், பல மாதங்களுக்குப் பிறகு தன் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். மெட்ராஸ் பிரசிடென்சி எனும் இளைத்துச் சுருங்கிப்போன உருவத்துக்குப் பொலிவேற்றும் காரியங்களைச் செய்யும் பொதுப்பணித் துறையின் செயலரே அரசு செயலர். பிரிட்டிஷ் சர்க்காரின் இந்த ஏற்பாடு, அரசுத்துறையின் முதுகெலும்பாய்ப் பொதுப்பணித்துறை இருப்பதைப் பிரதிபலிக்கும். பென்னியின் அறையில், அவரின் இருக்கையில் அமர்ந்துகொண்டு, அவரை எதிரில் அமரவைத்து விசாரணைக்காகக் காத்திருக்கும் மார்ஷல் முன்னிருப்பதில் சுவாசப் பிரச்சினைபோல் மூச்சுத் திணறினார் பென்னி.

மார்ஷல் புகையை ஊதி ஊதிக் கடுமையான விசாரணைக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்கிறார் என்பதையறிவார் பென்னி. இரண்டு, மூன்று வருஷங்களாகப் புகைந்து கொண்டிருக்கும் விஷயம்தான். இன்ஜினீயரிங் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் அவரவரின் வேலை பாணிக்கு ஏற்றாற்போலத்தான் செய்ய முடியுமே தவிர, சிறந்த தொழில்நுட்பமென்றாலும் பிறரின் பாணியைத் தன்னால் செயல்படுத்த முடியாது என்பது பென்னியின் தீர்மானம். கலக்கமென்பதே அணுக முடியாத இடத்திற்குத் தன்னை நகர்த்திக்கொண்ட பென்னி, மார்ஷலின் முன்னால் நிச்சலனத்துடன் அமர்ந்திருந்தார்.

“மிஸ்டர் பென்னி...”

“யெஸ் மேஜர் மார்ஷல்?”

“உடனடியாக உங்களை வரச்சொல்லியிருப்பதன் காரணத்தை யூகித்திருப்பீர்கள்தானே?”

“யூகிக்க அவகாசமே கொடுக்கவில்லையே? குமுளியில் சீப் செக்ரட்டரியிடமிருந்து வந்த கடிதத்தைப் படிக்கும் முன்பே உங்களின் தந்தி வந்தது. குமுளியிலிருந்து மெட்ராஸுக்கு வந்து சேர்வதே எனக்குப் பெரும் சவால். குமுளியிலிருந்து அம்மையநாயக்கனூர் வரை குதிரையில் வந்து, அங்கிருந்து ரயில் பிடித்து, எக்மோர் வந்து, உங்களைச் சந்திக்க வருவதற்குள் எனக்கு இரண்டு நாள் ஓடிவிட்டது. என் குதிரையை அம்மையநாயக்கனூர் ஜமீனின் குதிரைக்காரனிடம் விட்டு வந்திருக்கிறேன்.”

“இரண்டு நாள் பயணத்தில் என்னதான் யோசித்தீர்கள்?”

“குமுளியிலிருந்து அணை கட்டுமிடத்திற்கு ஒற்றையடிப் பாதை ஒன்று ஓரளவுக்குத் தயாராகி இருக்கிறது. நிதியொதுக்கீடு வந்தால் வரும் பருவத்தில் வேலை தொடங்க வேண்டும். அதற்குத் தேவையான ஏற்பாடுகளைத் திட்டமிட்டுக்கொண்டிருந்தேன் மேஜர்.”

“பெரியாறு அணை கட்டுவதற்கு ஹர் மெஜஸ்டியின் மேன்மைமிகு இந்தியச் செயலர் கொடுத்திருக்கிற அனுமதியை ரத்து செய்ய வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே?”

பென்னிக்கு முகத்தில் அறைந்தது போலிருந்தது.

நீரதிகாரம் - 49 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

மார்ஷல், அருகில் இருந்த கயிற்றைப் பிடித்து இழுத்தார். வெள்ளுடையும் அதன்மேல் சிவப்புப் பட்டியும் அணிந்து நேர்த்தியாக இருந்த வேலையாள் உள்ளே வந்தான். மார்ஷல் கண்களால் கொடுத்த உத்தரவைப் புரிந்துகொண்டு வெளியேறியவன், சில நிமிடங்களில் மீண்டும் உள்ளே வந்தான். மார்ஷலின் முன்னால் கனத்த உயரமான கண்ணாடிக் குவளையை வைத்து, பாட்டிலில் இருந்து மதுவைச் சரித்தான். மார்ஷலின் வழக்கமென்ன என்பதைத் தான் நன்கறிந்தவன் என்பது அவன் கைகளின் நிதானத்திலும் நேர்த்தியிலும் தயக்கமின்மையிலும் நன்கு தெரிந்தது. வழக்கமான அளவிற்குக் குவளையில் மதுவை ஊற்றியவன், மூடியிருந்த கெட்டிலைத் திறந்து கிடுக்கியினால் பனித் துண்டங்களை எடுத்துக் குவளையில் நழுவவிட்டான். நிமிடத்தில் குவளையின் உள்ளேயும் வெளியேயும் நீர்த்துளிகள் கோத்து நின்றன. பென்னிக்கு வேண்டுமா என்பதுபோல் அவர் பக்கம் பார்த்தான். தனக்கு வேண்டியதில்லையென்று பென்னி சைகை காட்டினார். உதவியாளன் வெளியேறினான். பென்னி பதில் சொல்ல ஆரம்பிக்கும்போது, மார்ஷல் மீண்டும் கயிற்றைப் பிடித்திழுத்தார்.

“பங்கா புல்லர் தூங்கிட்டானா? பிளாக் டாக்… முதுகில் ஓர் அடி போட்டு எழுப்பிவிடு…” என்று கூச்சலிட்டார்.

உதவியாளன் பக்கவாட்டில் இருந்த அகன்ற துணி விசிறியை நிமிர்ந்து பார்த்தான். வேகமாக அசைந்து சில்லென்ற காற்றும் வந்தது.

“உத்தரவு சாகிப்…”

‘துரையின் வார்த்தையைச் சரிபார்ப்பதுபோல் நிமிர்ந்து பார்த்ததைத் துரை பார்த்திருந்தால் தன் முதுகுத்தோல் உரிந்திருக்கும்’ என்று எண்ணியபடியே வெளியேறினான்.

இப்போது பங்கா மேலும் வேகம் கூடியிருந்தது.

“மிஸ்டர் பென்னி, பெரியாறு புராஜெக்ட் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். கோப்பின் கயிறு சரியாகக் கட்டப்படவில்லையென்று காரணம் சொல்லிக்கூட திருப்பியனுப்ப சர்க்கார் அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள். எல்லாம் தெரிந்தும் சர்க்காரின் உத்தரவை மதிக்காமல் இப்படியொரு தவற்றை எப்படிச் செய்தீர்கள்?”

“தவறா?” புரிந்துகொள்ள முடியாத தடுமாற்றம் தெரிந்தது பென்னியின் கேள்வியில்.

“உண்மையில் உங்களுக்குப் புரியவில்லையா? ஐந்து வருஷம் முன்பு (1882) நீங்கள் கொடுத்த திட்டத்தில் தெளிவற்று இருந்த பகுதிகளுக்கு விளக்கம் கேட்டு மேன்மைமிகு ஹர் மெஜஸ்டியின் மேன்மைமிகு இந்தியச் செயலர் கடிதம் எழுதியிருந்தார். உங்களுக்கு நிறைய அவகாசம் கொடுத்து மீண்டும் ஆய்வு செய்ய அனுப்பி, திட்டத்தின் தெளிவற்ற பகுதிகளுக்கு விளக்கம் கொடுத்து சமர்ப்பிக்கச் சொல்லியிருந்தார்கள்.”

“மேன்மைமிகு இந்தியச் செயலர் அனுப்பிய கடிதத்திற்கு நான் அறிக்கை சமர்ப்பித்துவிட்டேனே? என்னுடைய திட்டத்தினை பிரெஞ்சு இன்ஜினீயர் பொவியருக்கும், பிரிட்டிஷ் இந்தியாவின் ஆலோசகராக இருக்கிற இன்ஜினீயர் மோல்ஸ்வொர்த்துக்கும் அனுப்பினார்களே? இருவரின் கருத்துகளையும் பெற்றுக்கொண்டுதானே இர்ரிகேஷன் இன்ஸ்பெக்டர் ஜெனரல் திட்டத்திற்கான ஒப்புதலே கொடுத்தார்?”

“ஒப்புதல் கொடுத்தார். உங்களின் திட்டத்தில் அவர் ஏற்றுக்கொள்ளாத இரண்டு இடங்களைத் திருத்தம் செய்து அனுப்பச் சொன்னார். நீங்கள் திருத்தம் செய்யாததோடு, உங்களுடைய கருத்துதான் சரியானது என்று தனியாகக் குறிப்பும் வைத்து அனுப்பியிருக்கிறீர்களாமே? இர்ரிகேஷன் ஜெனரல் பிரௌன்லோ கோபத்தில் இருக்கிறார். ‘பென்னி குக் மாதிரி திறமையான, தொழில்நுட்ப அறிவு நிரம்பிய ஒரு இன்ஜினீயர் எப்படி இவ்வளவு மடத்தனமான யோசனையை முன்வைக்கிறார்? முன்வைப்பதோடு நிற்காமல், அவரின் கருத்து தவறு, அணைக்குப் பெரும் ஆபத்தாக முடிந்துவிடும் என்று மற்ற இன்ஜினீயர்கள் சுட்டிக் காட்டிய பிறகும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்பது அபத்தத்திலும் அபத்தம்’ என்று சொல்லிக் கடிதம் எழுதியுள்ளாராம். பிரௌன்லோ சொல்லும் யோசனையை ஏற்று, திருத்தம் செய்த பிறகுதான் பெரியாறு புராஜெக்டுக்குப் பண ஒதுக்கீடு செய்யச் சொல்லி இந்தியச் செயலருக்கு எழுதுவாராம்.”

பென்னி அமைதியாக இருந்தார். பிரௌன்லோவுடன் தனக்கிருக்கும் பனிப் போரில் அவர் பெரியாறு திட்டத்தைத் தடுத்து நிறுத்தப் பார்க்கிறார், அல்லது தன்னைத் திட்டத்தில் இருந்து வெளியேற்ற நினைக்கிறார் என்று நன்றாகப் புரிந்தது.

``பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எப்போதுமே பிரெஞ்சு இன்ஜினீயர்கள்தான் அதிக திறமையானவர்கள், புத்திசாலிகள் என்பது நம்பிக்கை. பொவியர் பெரிய இன்ஜினீயராக இருக்கலாம். ஆனால் என்னுடைய புராஜெக்டுக்கு நான்தான் எஜமான். பெரியாறு நதியை அவர் பார்த்திருக்கிறாரா? நதியின் போக்கு அவருக்குத் தெரியுமா? நதியை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டுமென்று அவருக்குப் புரிபடுமா? வெறும் தியரி மட்டும் கட்டுமானத்திற்கு உதவாது. அடிப்படையான ஒரு விஷயத்தை நீங்கள் எல்லோருமே மறந்துவிடுகிறீர்கள் மிஸ்டர் மார்ஷல். மற்ற அணைகளைக் கட்டுவதுபோல் அல்ல, பெரியாறு அணை கட்டுவது. ஓடும் நதியின் போக்கைத் திருப்பிவிட வேண்டுமென்பதை நினைவில் கொள்ளுங்கள்.”

“உங்களைவிட பிரௌன்லோவுக்குப் பெரியாறு நதி பற்றி நன்றாகத் தெரிகிறது மிஸ்டர் பென்னி. அதனால்தான் உங்கள் சிறுபிள்ளைத்தனமான யோசனையைப் பார்த்துச் சிரிப்பதோடு கோபமும் கொள்கிறார்.”

“இதிலென்ன சிறுபிள்ளைத்தனம்?”

“ஒரே நாளில் பத்திருபது இஞ்ச் மழை பெய்யும் பகுதியில் இருக்கும் பெரியாற்றில் எவ்வளவு வெள்ளம் வரும்? அணை கட்டும் நேரத்தில் பெருகும் வெள்ளத்தை இரண்டு நீர்போக்கிகளை வைத்து வெளியேற்றுவேன் என்று சொல்கிறீர்கள். பளிங்குபோல் ஓடக்கூடிய வெள்ளமா பெரியாறு நதியின் வெள்ளம்? மலைகளில் இருக்கும் பெரிய பெரிய மரங்களின் கிளைகளையும் கொத்துக் கொத்தாகக் காட்டுப் புற்களையும் வேரோடு இழுத்துக்கொண்டு வரும் காட்டாறு. நீங்கள் வைப்பதாகச் சொல்லும் நீர்போக்கி, வெள்ளம் வந்தால் ஒரு மணி நேரத்திற்குத் தாங்காது. அணையையும் சேர்த்துக் கையோடு இழுத்துச் சென்றுவிடும்.”

“நதிமட்டத்திற்கு நீர்போக்கியை வைத்தால்தான் நீங்கள் சொல்லும் சிக்கல் எழும். நதிப்படுகைக்குப் பத்தடிக்கு மேலாக நீர்போக்கியை வைக்கப்போகிறேன்.”

“எத்தனை அடி உயரத்தில் வைத்தால் என்ன? வெள்ளம்தான் இருபதடி முப்பதடி உயரத்திற்குப் போகுமே?”

”மிஸ்டர் பிரௌன்லோ சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.”

“அவர் சொல்வது பாதுகாப்பானது. குழாய்கள் மூலமாகத் தண்ணீரைப் பக்கவாட்டில் வெளியேற்றுங்கள் என்கிறார்.”

“குழாய்கள் இருபதடி வெள்ளத்தினைத் தாங்கி நிற்குமா?”

“உங்களின் நீர்போக்கி தாங்கி நிற்குமா?”

“நிற்கும். அதிக வெள்ளமென்றாலும், குறைந்த வெள்ளமென்றாலும் நீர்போக்கி இருந்தால் நீர் வடிந்துகொண்டே இருக்கும். நீரை வடியவிட தனியாக ஆட்களை நியமிக்க வேண்டியதில்லை. நீர் வடிந்து தரை உலர்ந்திருந்தால் மட்டுமே வேலை செய்ய முடியும்.”

“மிஸ்டர் பென்னி, அணையென்பது பல்லாண்டுகளுக்கு நிலைத்து நிற்க வேண்டிய கட்டுமானம். பாதுகாப்பு அதிகம் தேவைப்படுவது. உங்களுடன் இரண்டு விஷயங்களில் முரண்படுகிறார்கள். இரண்டையும் சரிசெய்து அனுப்பி வைக்கச் சொல்லி உங்களுக்குத் தகவல் அனுப்பியும் நீங்கள் சரியாகக் கையாளவில்லையென்று, என்னை விசாரிக்கச் சொல்லி இந்தியச் செயலரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. மெட்ராஸ் பிரசிடென்சியில் பயணத்தில் இருந்த நான், உங்களை நேரிலேயே விசாரித்துவிட விரும்பினேன்.”

“பிரெஞ்சு இன்ஜினீயருக்கும் என்னுடைய திட்டத்திற்கும் அணையின் உயரம், நீளம், அகலம், அணையின் உள்கட்டுமானத்தில் அரை சதவிகிதம் மட்டுமே வித்தியாசம் இருக்கிறது.”

“அரை சதவிகிதமென்பது அறுபத்து நான்கு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதின்மூன்று ரூபாய்க்கான நஷ்டம் மிஸ்டர் பென்னி. பெரியாறு அணைக் கட்டுமானம் என்பதே அசாதாரணமானது. 155 அடி உயரத்தில் எழுப்பப்போவது கல்லணை. சின்னத் தவறு நடந்தாலும் மொத்த முதலீடும் வீணாகப் போகும். உங்களுக்கே தெரியும், பெரியாறு அணையினால் முதல் வருஷத்தில் இருந்து எத்தனை ஆயிரம் ஏக்கர் பலனடையும், அதிலிருந்து எத்தனை லட்சம் ரூபாய் சர்க்காருக்கு லாபமாக வரும் என்று ஆய்வு செய்யவே கிளாக்ஸ்டவுனை நியமித்தார்கள். நீங்கள் அரை சதவிகிதம்தான் வேறுபாடு என்று சொல்லுவதில் கால் சதவிகிதம் தவறானால்கூட மொத்த முதலீடும் நீரில் மூழ்கிப்போகும். கிளாக்ஸ்டவுன் வருஷத்துக்கு ஆறு லட்சத்து இருபத்தெட்டாயிரத்து இருநூற்றுப் பதினொரு ரூபாய் வருமென்றும், அதில் பராமரிப்புச் செலவு ஒரு ஏக்கருக்கு ஒரு ரூபாய் இருபத்தைந்து காசு வீதம் போன பிறகு, ஐந்து லட்சத்து இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதிநான்கு ரூபாய் வருவாய் வருமென்று சர்க்காருக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார். சர்க்கார் கடன் வாங்கி, முதலீடு செய்தால், குறைந்த வருவாய் மட்டும் கிடைக்கும், அதுவும் அணை கட்டி ஏழெட்டு வருஷங்கள் கழித்துதான் வருவாய் என்ற சூழல் இருந்தாலும் இந்தத் திட்டத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்க காரணம் இருக்கிறது.”

“கோப்பின் கயிற்றை அவிழ்க்க முடியவில்லையென்றாலும் திட்டத்தை ஒத்திவைத்துவிடுவார்கள் என்றீர்களே?”

பென்னியின் ஏளனம் புரிந்து மார்ஷல் கண்களில் கோபம் தெறிக்க கோப்பையிலிருந்த மதுவைச் சுவைத்தார்.

“ஆமாம், கோப்பின் கயிற்றை அவிழ்க்க முடியவில்லையென்றால் ஒத்தி வைத்து விடுவார்கள். மீண்டும் மதுரா கன்ட்ரியின் கடுமையான பஞ்சமும் வறட்சியும் தாளாமல் திருட்டுக் கப்பலேறி மக்கள் அகதிகளாகச் செல்வதைப் பார்த்தவுடன், மேல்மலையைக்கூட முடிந்தால் தூக்கி தூர வைத்துவிட்டு பெரியாற்றை மதுரா கன்ட்ரிக்குக் கொண்டு வந்துவிட வேண்டுமென்று சர்க்கார் நினைக்கும். அதனால்தான் உங்களைப் போன்ற இன்ஜினீயர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு சரிசெய்யப் பார்க்கிறது.”

“நீங்களும் இன்ஜினீயர்தானே மேஜர்?”

“இன்ஜினீயர் என்றாலும் துறையின் மற்ற இன்ஜினீயர்கள் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்வேன்.”

“அப்படியென்றால் உங்கள் அறிவின்மீது உங்களுக்குப் போதாமை இருக்கிறது என்று அர்த்தம்.”

“மிஸ்டர் பென்னி…” கண்ணாடிக் குவளையைச் சுவரின்மேல் வீசியெறிந்தார் மார்ஷல். பங்கா சட்டென்று நின்றது. உதவியாளன் உள்ளே ஓடிவந்தான். அப்படியே வெளியேறச் சொல்லிக் கையசைத்தார். சிவந்த முகம், கழுகின் கூர் அலகின் நுனி போல் மேலும் சிவந்தது. குடிக்காமல் இருந்த மது சுவரில் தெறித்து, பழுப்பு நிற ஓவியமொன்றைத் தன் விருப்பத்திற்கு வரைந்தது.

“இந்த நிமிஷமே உங்களைப் பெரியாறு புராஜெக்டிலிருந்து வெளியேற்ற முடியும்.”

“தாராளமாக… பெரியாறு புராஜெக்ட் என்ன என் சொந்த புராஜெக்டா? சர்க்கார் என்னை நியமித்தது. போனேன். இப்போது வேண்டாமென்று விடுவித்தால் வெளியேறப்போகிறேன். பொதுப் பணித்துறையின் இந்த அறையின் வாசலில் பங்கா இழுத்துக் கொண்டிருக்கிறாரே, அவருக்கு இந்த வேலையின்மீது என்ன எண்ணம் இருக்கிறதோ அதே எண்ணம்தான் எனக்கும்.”

“விதண்டாவாதம் பேசி உங்களின் வேலையை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள் மிஸ்டர் பென்னி.”

“முடிவு உங்களிடம் மிஸ்டர் மார்ஷல்.”

“நீர்போக்கியை அமைப்பது அணைக்குப் பாதுகாப்பு அல்ல. குழாய்கள் மூலம் நீரை வெளியேற்றலாம் என்று பிரௌன்லோ சொன்ன ஆலோசனையை ஏற்றுத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக ஒப்புதல் கடிதம் கொடுங்கள். உங்களுக்கொரு நற்செய்தி சொல்கிறேன்.”

மார்ஷலின் குரல் திடீரென்று மாறியதைக் கவனித்தார் பென்னி. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்று எப்போதுமே புரியாமல் திகைப்பது பென்னியின் வழக்கம்.

இம்முறை என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க விரும்பினார். திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டுக்கான அனுமதியை இந்தியச் செயலர் அனுப்பியிருப்பார். ஆனால் இர்ரிகேஷன் கவர்னர் ஜெனரலான பிரௌன்லோ அவருடைய ஆலோசனையைக் கேட்டால்தான், நிதி ஒதுக்கப்பட்ட செய்தியைச் சொல்ல வேண்டுமென்று மேஜர் மார்ஷலைத் தன் விருப்பத்திற்குப் பயன்படுத்தியிருக்கலாம். மார்ஷலின் முன்பின்னான செயற்கையான நடவடிக்கைகள் பென்னியின் யூகத்தை உண்மையென்று சொல்லின.

“என்னுடனான உங்களின் சந்திப்புக்குப் பதினைந்து நிமிடங்கள்தான் ஒதுக்கப்பட்டிருந்தன மிஸ்டர் பென்னி.”

“இன்று மாலைவரை எனக்கு நேரம் கொடுங்கள் மேஜர். மாலை நான்கு மணிக்கு நான் என் கருத்தைச் சொல்கிறேன்.”

மார்ஷலின் முகத்தில் யோசனை படர்ந்தது. பிறகு, “நான்கு மணி என் ஓய்வு நேரம். உங்களுக்காகவும் பெரியாறு புராஜெக்ட்டுக்காகவும் நான் அர்ப்பணம் செய்கிறேன். வாருங்கள்” என்று விடை கொடுத்தார்.

நீரதிகாரம் - 49 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

பொதுப் பணித்துறை அலுவலத்தின் முன்வராந்தாவில் உட்கார்ந்து அங்கிருந்த கற்பலகையின் மீது மைக்கூடும் தாளும் வைத்து எழுதிக்கொண்டிருந்தார் பென்னி. பார்வையாளர் அறைக்கோ, ஓய்வறைக்கோ செல்ல மனம் விரும்பாததில் வளாகத்தின் நாவல் மரத்தினடியில் உட்கார்ந்தார். மரம் முழுக்க நாவல் பழம் காய்த்திருப்பதுபோல் வௌவால்கள் தொங்கிக் கொண்டிருந்தன. கிளைக்கு இருபது, முப்பது வௌவால்கள். வௌவால்களின் சத்தம் எரிச்சலூட்டுவதாக இருந்தாலும் மரத்தின் குளிர்ச்சி பென்னியை அங்கேயே உட்கார வைத்திருந்தது.

பென்னியின் குமாஸ்தா சுந்தரமய்யர் ஓடி வந்தார்.

“துரை சாகிப், உள்ள வாங்க. உங்களோட ரெஸ்ட் ரூமுக்குப் போலாம். மரம் குளிர்ச்சியா இருக்கிற மாதிரி இருக்கும். ஆனா வெக்கை காந்தும். உங்க உடம்புக்குச் சேராது. உள்ள வாங்க துரை சாகிப்.”

“நல்லா இருக்கீங்களா ஐயர்? நான் இங்கியே இருக்கேன்.”

அலுவலகத்தின் ஊழியர்கள் பென்னியைச் சூழ்ந்தார்கள், பிரிட்டிஷாரைவிட உள்ளூர் ஊழியர்கள் பென்னிக்கு நெருக்கமாக இருந்தார்கள். பென்னி மரத்தடியில் உட்கார்ந்ததில் மனம் வருந்தினார்கள்.

எல்லோரிடமும் சில நிமிடங்கள் நலம் விசாரித்த பென்னி, அலுவலகத்தின் முகப்பில் இருந்த பெரிய மணிகூண்டில் நேரம் பார்த்தார். பிற்பகல் 3.15 மணி. அவசர வேலையிருப்பதைச் சொல்லி, குமாஸ்தா கொண்டுவந்து கொடுத்திருந்த மையுறிஞ்சு பேனாவினால் பாதியில் நிறுத்தியிருந்த கடிதத்தைத் தொடர்ந்தார்.

டியர் மேஜர் மார்ஷல்,

சர்க்கார் உத்தியோகத்தின் பொருட்டு உங்களுக்கான எந்த விளிப்புமின்றி நேரடியாகத் தொடங்கும் இந்தக் கடிதத்திற்காகப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

என் தந்தையும் சகோதரனும் ஒரே நாளில், ஒரே போர்க்களத்தில் பிரிட்டிஷ் சர்க்காருக்காக உயிர் துறந்தவர்கள். அப்போது எனக்கு எட்டு வயது. பதினொரு பிள்ளைகளைப் பெற்ற என் அம்மா சாரா, கணவனையும் மகனையும் பறிகொடுத்துவிட்டுச் சின்னஞ்சிறிய பிள்ளைகளான எங்களை அழைத்துக்கொண்டு பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு, லண்டனுக்குக் கப்பலில் புறப்பட்டார். போரில் கணவனையும் மகனையும் இழந்த விதவைப் பெண்ணுக்கான கருணையுடன் பிரிட்டிஷ் சர்க்கார் என் அம்மாவை மரியாதையாக நடத்தியது. பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து நான் என் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பிரிட்டிஷ் இந்தியாவுக்கு வந்தேன். பொதுப்பணித்துறையில் தான் முதன்முதலில் பணியில் அமர்த்தப்பட்டேன். மெட்ராஸ் பிரசிடென்சியில் பொதுப்பணித்துறை தொடங்கப்பட்டு(1858) அப்போது இரண்டாண்டுகள் ஆகியிருந்தன. பொதுப்பணித் துறையில் நீர்ப்பாசனம் தனித்துறையாகப் பிரிந்தபோது நான் நீர்ப்பாசனத் துறைக்குத்தான் சென்றேன். பாலாறு, செங்குன்றம் அணைக்கட்டு என மிகச் சவாலான கட்டுமானங்களைத்தான் நான் கையாண்டிருக்கிறேன். என் குடும்பத்தின் ராஜவிசுவாசம் எப்போதும் சர்க்காரின் பாதுகாப்பிற்காகவும் நற்பெயருக்காகவும் மட்டுமே. உலகத்தையே கட்டியாளும் பிரிட்டிஷ் இந்தியப் பேரரசியின் பொன்விழா ஆண்டின் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் என்னைப் போன்ற ஏராளமானோரின் குடும்பங்களின் தியாகத்தில்தான் அவரின் அரியணை அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய சுதேசி சமஸ்தானங்களின் பெண்களை மணமுடிப்பதற்காகவும், ஜமீன்தார்களிடம் நல்லுறவு வளர்த்து, செல்வந்தராக வாழ்வதற்காகவும் பிரிட்டிஷ் இந்தியக் கப்பலேறும் ஆயிரக்கணக்கானவர்களில் நிச்சயம் நானும் என் குடும்பத்தாரும் இல்லை. பேரரசியின் நற்பெயர் ஒன்றே எங்களின் இலக்கு.

போர்க்களத்தில் நின்று பிரிட்டிஷ் இந்திய சர்க்காருக்கு வெற்றியைத் தேடித் தந்தது எவ்வளவு உன்னதமானதோ, அவ்வளவு உன்னதமானது பிரிட்டிஷ் இந்தியக் குடிகளைக் காப்பதும். என் சகோதரனின் தியாகமும் என்னுடைய அர்ப்பணிப்பும் ஒன்றுதான், என்னளவில்.

பெரியாறு அணை, நீங்கள் குறிப்பிட்டதுபோல் வழக்கமான இன்ஜினீயரிங் சவால் அல்ல. இயற்கையுடனான சவால்கள் கூடிக்கொண்டு செல்வதோடு எங்களின் கற்பனைக்குப் புலனாகாத சவால்களையும் எதிர்கொள்ளக் காத்திருக்கிறோம். காட்டாற்றின் போக்கினைத் திசை திருப்புவதோடு, மனிதர்கள் வாழ்ந்திட பெரும் அச்சுறுத்தலைத் தரும் அடர்ந்த காட்டில் மனிதர்களை வைத்து வேலை செய்ய வேண்டும். பெரியாறு அணையின் தொழில்நுட்பம் என்னுடையது மட்டுமல்ல; முப்பது, நாற்பதாண்டுகளாக ஆய்வு செய்த பல்வேறு இன்ஜினீயர்களின் ஆய்வும் அறிவும் சேர்ந்திருக்கிறது. பெரியாறு அணை தொடர்பாக எட்டாண்டுகளுக்கு முன்பு (1879ஆம் வருஷம்) அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று ஆய்வு செய்யவும் போர்ட் ஆப் ரெவெனியூவிடம் அனுமதி கேட்டிருந்தேன். திட்டம் முழுமையான வடிவம் பெறவில்லை, திட்டத்தின் தொடக்க நிலையில் இந்தப் பயணம் தேவையற்றது என்று என் பயணத்திற்கு போர்டு உறுப்பினர்கள் அனுமதி மறுத்தார்கள். ஆனாலும் நான் சோர்ந்துவிடவில்லை. நானும் ராயல் இன்ஜினீயர்கள் ரைவ்ஸும், ஸ்மித்தும் பலமுனை ஆய்வுகள் நடத்திதான் திட்டத்தைச் சர்க்காருக்குச் சமர்ப்பித்தோம்.

மேஜர் மார்ஷல், உங்களின் பரபரப்பான வேலைச் சூழலில் உங்களின் நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. வெகு சுருக்கமாக ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். முதலில் பெரியாறு புராஜெக்ட்டை, இந்தத் துறையின் ஒரு இன்ஜினீயராக எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையாக மட்டும்தான் நினைத்திருந்தேன். கடந்த நான்கு வருஷங்களில் பெரியகுளம் தாலுக்காவின் ஒவ்வொரு கிராமத்தையும் சுற்றி வந்துவிட்டேன். மதுரா டிஸ்ட்ரிக்ட்டின் கலெக்டர்களுக்குக்கூடத் தெரியாத தகவல்களும் ஊரைப் பற்றிய புரிதலும் எனக்கு அதிகம். பெரியாறு அணை எப்படிக் கட்டப்படும் என்று என் உள்மனசு கற்பனை செய்தபடி இருக்கிறது.

மிஸ்டர் பிரௌன்லோவுக்கு முதலில் இருந்தே என்னுடைய பாணி ஏற்புடையதாக இருப்பதில்லை. அவர் என்னுடைய திட்டத்தினைச் சரிசெய்யச் சொல்லி மூன்று முறை திருப்பியனுப்பியிருக்கிறார். நானும் அயர்வில்லாமல் திருத்தம் செய்து அனுப்பியிருக்கிறேன். திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்திலும் அவர் தன்னுடைய ஆயுதத்தை எடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. அவர் பிரிட்டிஷ் இந்தியாவின் இர்ரிகேஷன் ஜெனரல் என்பதால் நீங்கள் அவரின் உத்தரவையேற்று என்னிடம் கோபம் கொள்வதாகப் பாவனை காட்டுவதை ஒரு நிலைக்குமேல் நான் ரசிக்கத் தொடங்கிவிட்டேன். உங்களுக்கு அந்தச் சிரமம் வேண்டாம். பிரௌன்லோ அல்ல, இந்தியச் செயலரே ஓர் உத்தரவு கொடுத்தாலும், உத்தரவு கொடுப்பதுடன் அவர்களின் வேலை முடிந்துபோகும். களத்தில் இருக்கும் நாங்கள்தான் தீர்மானிப்போம். உங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன்.

உங்களுக்கான இந்தக் கடிதத்துடன் இன்னொரு கடிதத்தையும் சேர்த்துத் தருகிறேன். பிரௌன்லோவின் ஆலோசனையைப் பெரியாறு அணைத் திட்டத்தில் ஏற்கிறேன். என்னுடைய திட்டத்தின் குறைகளைக் களைய அவர்கள் சொல்லும் ஆலோசனையைச் சிறந்ததாக ஏற்கிறேன்.

நான் மீண்டும் உங்களின் நேரத்தை எடுத்துக்கொள்ள நேர் சந்திப்பிற்கு நேரம் கேட்கப்போவதில்லை. மெட்ராஸில் இருந்து உடனே கிளம்புகிறேன். நான் தேக்கடி முகாமுக்குச் செல்லும்முன், மெட்ராஸ் கவர்னரின் பயணத்திற்கான தேதியைத் தீர்மானிக்கிறீர்கள். அணை கட்டும் பணியைத் தொடக்கி வைக்க மேல்மலைக்கு கவர்னர் வருகை தரும்போது பிரசிடென்சியில் தங்கியிருப்பதால் அவசியம் நீங்களும் கலந்துகொள்ள உடன் வர வேண்டும்.

நாமிருவரும் மட்டுமல்ல, மிஸ்டர் பிரௌன்லோவும் சர்க்காரின் உத்தியோகஸ்தர்தான். அதை மறந்துவிட வேண்டாம்.

இது என் எழுத்து.

உங்களின் சக பணியாளன்,

லெப். ஜே. பென்னி குக், ராயல் இன்ஜினீயர்,

சூப்பிரன்டெண்டிங் இன்ஜினீயர், பெரியாறு திட்டம்.

எழுதி முடித்து நிமிர்ந்து பார்த்தபோது மணி நான்கடிக்க ஐந்து நிமிடங்கள் இருந்தன. பென்னி, தள்ளி நின்றிருந்த தன்னுடைய குமாஸ்தா சுந்தரமய்யரை அழைத்து, கடிதங்களை ஒட்டி, அண்டர் செக்ரட்டரியிடம் சேர்ப்பிக்கச் சொன்னார்.

பேரொளி ஒன்று தன் தலையைச் சுற்றி எழுமோ, இவ்வளவு வேகம் கொள்கிறோமே என்று நினைத்த பென்னி, ஒளியைத் தள்ளிவிடுவதுபோல் தலையையாட்டினார். தொப்பியை அணிந்துகொண்டு வேகமாக வெளியேறிய பென்னி, காத்திருந்த சாரட்டில் ஏறி உட்கார்ந்தார். சாரட் எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி விரைந்தது.

- பாயும்