
தங்கசேரியைக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நமக்கு நிரந்தரத் தலைவலி. மெட்ராஸ் பிரசிடென்சியின் மலபார் மாவட்ட எல்லையில் இருந்தாலும், நமக்குத்தான் நட்ட நடுவில் இருக்கிறது.
“உங்களின் கவனக்குறைவு ஒட்டுமொத்த சமஸ்தானத்திற்கும் அவப்பெயரைக் கொண்டு வந்திருக்கும் மிஸ்டர் அய்யங்கார்.” தன்னுடைய குதிரையான டாமினேஷனின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தி, அருகில் வந்துகொண்டிருந்த திவான் ராமய்யங்காரிடம் சொன்னார், பிரிட்டிஷ் ரெசிடென்ட் ஹானிங்டன்.
திவானும் தன் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து நிறுத்தினார். ஹானிங்டனின் குற்றச்சாட்டை மறுப்பதற்கு திவானிடம் அழுத்தமான காரணமோ நியாயமோ இல்லாததால், அவரின் வார்த்தைகளை அமைதியாக ஏற்றுக்கொண்டார்.
மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர் கன்னிமாரா, நாஞ்சில் நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லவிருந்த ஒரு மணி நேரத்திற்கு முன்பு தொடங்கியது பிரச்சினை. கவர்னர் கன்னிமாரா திருவனந்தபுரத்தின் வல்லமொன்றில் பயணம் செய்ய விரும்பினார். ஏதேனுமொரு நதியில் செல்லலாம் என்று திவான் திட்டமிட்டார். சமஸ்தானத்திலிருந்து பிரிட்டிஷ் ஆளுகையுள்ள அஞ்சுதெங்கும் தங்கசேரியும் சென்றுவிட்டுத் திரும்பலாம் என்று ஹானிங்டன் திட்டமிட்டார். அருகில் இருக்கும் அஞ்சுதெங்கு மட்டும் செல்லலாம் என்று திவான் பயணத்திட்டத்தில் மாற்றம் சொன்னார். குறிப்பாக தங்கசேரி வேண்டாமென்பது திவானின் எண்ணம். பெரியாறு அணை கட்ட இடம் கொடுப்பதற்குப் பதிலியாக தங்கசேரியையும் அஞ்சுதெங்கையும் சமஸ்தானம் கேட்டிருந்தது. கொடுக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் சர்க்காரால் கடைசி நேரத்தில் கொடுக்க முடியாமல் போய்விட்டது.
தங்கசேரியின் குடிகள் சமஸ்தானத்துடன் சேர்வதற்கு மறுத்ததோடு, லண்டனில் இருக்கும் இந்தியச் செயலருக்குத் தங்கள் விருப்பமின்மையை எழுதினார்கள். 96 ஏக்கரில் இருக்கும் சின்னஞ்சிறிய ஊர்தான் தங்கசேரி. 1665 பேர் மக்கள் தொகையில் நான்கு இந்துக்களும், இரண்டு துலுக்கரும், ஐரோப்பியர் ஒருவரும் தவிர்த்து தங்கசேரியில் 1658 பேர் கிறிஸ்துவர்கள். சமஸ்தானத்துடன் சேர்ந்தால் தங்களின் உரிமைகள் பறிபோய்விடும் அச்சத்தில் சமஸ்தானத்துடன் சேர்வதற்குத் தங்கசேரியில் இருந்த கிறிஸ்துவர்கள் உறுதியாக மறுத்தார்கள். கிறிஸ்துவர்களின் ஆட்சேபனை என்பதால் இந்தியச் செயலரும் ஏற்றுக்கொண்டார். தங்கசேரியை ஒப்படைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, பெரியாறு அணை குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே தங்கசேரியில் அமைதி திரும்பியது.
பிரச்சினை வெடித்து, அமைதியானதுபோல் தோற்றம் கொண்டிருக்கிற தங்கசேரிக்கு மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னருடன் மகாராஜாவை அழைத்துச் செல்ல வேண்டாம் என்பது ராமய்யங்காரின் எண்ணம். தங்கசேரி குடிகளுக்கு பிரிட்டிஷ் சர்க்கார் உதவியது என்றாலும், சூழலின் அசாதாரணம் காரணமாக அங்கு போக வேண்டாமென்றார். ஹானிங்டன், திருவிதாங்கூருக்கு அருகில் உள்ள காயல் என்பதுடன், அஞ்சுதெங்கு, தங்கசேரி குடிகள் கவர்னருக்கு நன்றி தெரிவிக்க ஒரு வாய்ப்பு அமையுமே என்று பயணத்திற்கு அனுமதி கொடுத்தார்.
பயணம் சிறப்பாக, எந்தச் சிக்கலுமின்றி முடிந்து, எல்லோரும் திருவனந்தபுரம் திரும்பிய பிறகுதான் நாயர் படை மூலம் ஹானிங்டனுக்குத் தகவல் வந்தது. “மகாராஜாவும் கவர்னரும் ரெசிடென்டும் அஞ்சுதெங்கில் இறங்கி, மீண்டும் வல்லத்திற்குத் திரும்பிச் செல்வதற்கு ஒரு நாழிகை நேரத்திற்கு முன்பாக, காளைகள் பூட்டப்பட்ட இரண்டு மாட்டு வண்டிகள் கவர்னர் வரும் பாதையில் சென்றதாம். கவர்னரின் பாதுகாப்பு வீரர்கள் கடக்கும்வரை அந்த வழியில் ஒருவரும் செல்லக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் யாருடைய வண்டி செல்கிறது என்று நாயர் படையின் ஜமேதாரனுக்குச் சந்தேகம். வண்டியின் பின்னால் ஒரு பிரிட்டிஷ்காரன் உட்கார்ந்திருந்ததில் குழப்பம் குறைந்தது. ஆனாலும் அருகில் சென்று பார்த்திருக்கிறார்கள்.
வண்டியில் இருந்த பிரிட்டிஷ்காரன் யாரென்று விசாரித்ததில் அவன் சரியாகப் பதில் சொல்லவில்லை. அவன் பதில் சொல்லாததில் சந்தேகம் கூடியது. விசாரித்ததில், அவன் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சாம்சன். சமஸ்தானத்தின் கிடங்கில் மிளகு மூட்டைகளைக் குறைத்துக் கணக்குக் காட்டி, பலமுறை தப்பித்து, ஹானிங்டனால் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டவன். சிறையில் இருந்து எப்போது, எப்படித் தப்பினான் என்று தெரியவில்லை.’’
சாம்சன் சென்ற வண்டியில் வெடிமருந்து பவுடர் இரண்டு பைகளில் இருந்திருக்கிறது. போதையில் இருந்த அவனிடம் உண்மையான தகவல்களைப் பெற முடியாமல் நாயர் படையும் திருவிதாங்கூர் சர்க்கார் போலீசும் திணறின. அசம்பாவிதங்கள் நடக்கவில்லையென்றாலும் இரண்டு பெரும் பிரச்சினைகள் எழுந்தன. கவர்னரின் பயணப்பாதையில் எப்படி மாட்டு வண்டி வந்தது என்றும், வெடிமருந்து எதற்காகக் கொண்டு செல்லப்பட்டது என்றும் விளக்கங்கள் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஹானிங்டன்மேல் விழுந்தது. சாலைகளில் நடக்கும் அசம்பா விதங்களுக்குச் சுதேசி சமஸ் தானங்கள்தான் பொறுப்பென்பதால் ஹானிங்டன், திவானின் பொறுப் பின்மையைச் சாடினார். ஹானிங்டனின் கண்காணிப்பிலும் திட்டமிடலிலும்தான் கவர்னரின் பயணத்திட்டம் இறுதிசெய்யப் பட்டிருந்தாலும், சரியாக நடத்திக்கொடுக்க வேண்டிய பொறுப்பு திவானுடையது.
கன்னிமாராவுடன் பெரியாறு அணைக் கட்டுமானத்தைத் தொடங்கி வைக்க உடன் செல்லவிருந்த ஹானிங்டன், தன் பயணத்தை ரத்து செய்தார். ரெசிடென்ட் இல்லாமல், கவர்னரின் பயணம் தொடர முடியாது. ஹானிங்டன் விடுமுறையில் சென்றிருந்தாலோ, மருத்துவக் காரணங்களால் முன்கூட்டி விடுமுறை எடுத்திருந்தாலோ தற்காலிக ரெசிடென்ட் பொறுப்பில் செயல்பட உடனடியாக பிரிட்டிஷ் சர்க்கார் நியமிக்கும். கன்னிமாரா கிளம்புவதற்குச் சில மணி நேரம் முன்பு நடந்த குளறுபடிகளால் கன்னிமாராவுடன் ரெசிடென்ட் பொறுப்பில் யாரையும் அனுப்ப முடியவில்லை. ஹானிங்டன் கன்னிமாராவிடம் தனியாகச் சந்தித்து, சூழலை விளக்கி, பயணத்திலிருந்து தனக்கு விலக்கு கோரினார். எல்லாவற்றையும்விட, அவர் மனம் அணை கட்டத் தொடங்கும் நாளன்று பென்னியுடன் இருக்க விரும்பியது. தனக்கும் அந்த நற்காரியத்தில் பங்கிருந்ததில் மேல்மலையில் இருக்க நினைத்தார். அடுத்த நொடி என்ன நடக்கப்போகிறது என்று தீர்மானிக்க முடியாத சுவாரசியத்தை வைத்திருப்பதால்தான் காலம் நித்தியக் கடவுளாக இருக்கிறது என்று நினைத்தபடி, மனம் துவண்டார்.

ராமய்யங்காரை அழைத்திருந்தார் ஹானிங்டன். எதையும் சரியாகத் திட்டமிட்டு, நேர்த்தியாகச் செய்யும் ராமய்யங்காரை விசாரணைத் தோரணையில் நடத்த ஹானிங்டன் விரும்பவில்லை. ரெசிடென்ட் அலுவலகத்தில் பேசினால் விசாரணை என்ற எண்ணம் அய்யங்காருக்கு வந்துவிடும் என்பதால், திருவனந்தபுரத்தில் இருந்து கல்குளத்திற்குக் குதிரையில் சென்று வரலாம் என்று அழைத்திருந்தார். நிதானமாகப் பேச வேண்டுமென்ற உறுதியில் இருந்தாலும் வழக்கம்போல் ஹானிங்டனால் தன் உறுதியில் நிற்க முடியவில்லை. குருவாயி பலமுறை அறிவுறுத்தி அனுப்பினாள். ‘வயதிலும் அனுபவத்திலும் திவான் உங்களுக்கு இணையானவர், அவரின் மனம் நோகும்படி பேசிவிடாதீர்கள், ஏற்கெனவே திவான் பதவியைத் துறக்க நினைத்திருக்கும் அய்யங்காருக்கு, தாம்பூலம் வைத்ததுபோல் ஆகிவிடப்போகிறது.’
திவானுக்கும் மனதில் உறுத்தல் இருந்தது, தன்னுடைய கவனமின்மையால் கன்னிமாராவுக்கோ, மகாராஜாவுக்கோ ஆபத்து நேர்ந்திருந்தால், தன்னுடைய சர்க்கார் உத்தியோகத்தில் படிந்த களங்கமாக அது இருந்திருக்கும். நம்பிக்கையான நாயர் படையும் போலீசும், பிரிட்டிஷ் சர்க்காரின் பாதுகாப்பு வீரர்களும் இருந்தும், அயோக்கியன் சாம்சன் எப்படி உள்நுழைந்தான் என்று திவான் அதிர்ந்து போனார். தீமை, தனக்குகந்த சூழலை உருவாக்கிக்கொள்ளும் திறன் பெற்றிருக்கிறது. இத்தனை பாதுகாப்பை மீறி, அவன் மாட்டு வண்டியில் சர்வசாதாரணமாக உள்நுழைந்துவிட்டானே? திவானின் வருத்தம் தீராமல் பெருகியது.
“யுவர் எக்ஸலென்ஸியின் கோபத்தில் நியாயம் உள்ளது. நடந்த தவற்றுக்கு நான் மட்டும் காரணமல்ல என்றாலும், நானே காரணமாக வேண்டியவன். அடியேன் மன்னிப்பைக் கோருகிறேன்.”
குதிரையின் கடிவாளத்தை விட்டு, இரு கரங்கள் குவித்து ஹானிங்டனை நோக்கித் தலை கவிழ்ந்தார் ராமய்யங்கார்.
ஹானிங்டனின் மனம் சட்டென்று தான் நினைத்திருந்த உறுதிக்குத் திரும்பியது. திவானைக் காயப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தானே இந்தப் பயணமே என்று நினைத்து, வருந்தினார்.
“வருத்தம் வேண்டாம் அய்யங்கார். ஏதேனும் பிசகாகியிருந்தால் நாமிருவரும்தான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். பொறுப்பென்ன பொறுப்பு, வருத்தம் தெரிவித்துக் கடிதம் கொடுத்தால் பொறுப்பு கழிந்துவிடும். ஆனால் நம் உள்மனசு நம்மைச் சிதைத்துவிடும். அதனிடமிருந்து தப்பிக்க முடியாது. கன்னிமாரா குடும்பத்தில் ஏற்கெனவே பெரிய இழப்பு இருக்கிறது. மகாராஜாவின் குடும்பத்திலும். இதையெல்லாம் யோசித்தால் எனக்குப் பகீரென்று இருக்கிறது.”
“நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை யுவர் எக்ஸலென்ஸி. எப்படி நடந்தது என்றே யூகிக்க முடியவில்லை. மகாராஜாவும் கவர்னரும் வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாகக்கூட நாயர் படை வீரர்கள் சாலையினைக் கண்காணித்துக்கொண்டிருந்தார்கள். ஒருவரையும் அனுமதிக்கவில்லை. சாம்சன் மாட்டு வண்டியில் அத்துமீறி நுழைகிறவரை நம்முடைய வீரர்கள் எப்படிக் கவனிக்காமல் போனார்கள் என்று நம்ப முடியாமல் இருக்கிறது.”
“கவனிக்காமல் நிச்சயமாக இருக்க முடியாது மிஸ்டர் அய்யங்கார். வீரர்களில் ஒருவனோ, இரண்டு பேரோ சாம்சனுக்கு உடந்தையாக இருந்திருப்பார்கள். அல்லது, சமஸ்தானத்திலிருந்து கிடைத்த சமிக்ஞையின் மூலம் அவனுக்குத் துணிச்சல் வந்திருக்கும்.”
திவானுக்கு, ஹானிங்டன் யாரை மனத்தில் வைத்துச் சொல்கிறார் என்று புரிந்தது.
“அவனைச் சிறையில் அடைத்து விசாரித்ததில் என்னதான் தகவல் கிடைத்தது?”
“யுவர் எக்ஸலென்ஸி, அவன் வாயைத் திறக்கவில்லை. எகத்தாளமாகப் பார்க்கிறானாம். அடித்துத் துவைக்கச் சொல்லியிருக்கிறேன்.”
“அடித்துத் துவைக்கிறேன் என்பார்கள். ஆனால் நடக்காது. சங்கரன் தம்பியைப் பற்றி நீங்கள் ஏன் மகாராஜாவிடம் பேசக்கூடாது? ஆனந்த விலாசத்தின் காரியக்காரன், நேரடியாக நிர்வாகத்தில் தலையிடுவதில்லையென்பதால் இதுவரை நான் பொறுத்துக்கொண்டேன். அஸ்திவாரத்தையே அசைக்கத் துணிந்துவிட்ட பிறகு நாம் பொறுமையோடு இருக்கக்கூடாது. பாராமுகமும் குற்றமே. நான் பேசினால் அவர் சங்கடப்படுவார் என்பதால் தவிர்க்க எண்ணுகிறேன்.”
“அவசியம் பேசுகிறேன் யுவர் எக்ஸலென்ஸி. மெட்ராஸ் பிரசிடென்சியின் சீப் செக்ரட்டரியின் முதன்மை உதவியாளர், நாமக்கல் சப் கலெக்டர், தஞ்சாவூர் மாவட்ட சிரஸ்தார் எனப் பல உயர்பதவிகளை எம்பெருமானின் அருட்பார்வையால் எந்தவித ஊறுமின்றிச் செய்து முடித்துவிட்டேன். மறைந்த விசாகம் திருநாள் என்மேல் கொண்ட அன்பின் மிகையால் என்னைத் திவானாக்கினார். அவரின் நம்பிக்கை பொய்த்துவிடக்கூடாது. அனந்தனிடம் என் வேண்டுதல் இது ஒன்றே ஒன்றுதான்.”
டாமினேஷனுக்கும் திவானின் குதிரைக்கும் நடையில் ஓர் ஓர்மையும் எஜமான் பற்றிய புரிந்துணர்வும் இருந்தன.
“அணை வேலை தொடங்குவதை அருகிருந்து பார்க்க வேண்டுமென்று மிகவும் விரும்பினேன். குருவாயியும் தயாராக இருந்தாள். பிரிட்டிஷ் சர்க்காரில் உயரதிகாரியாக இருப்பதே நெருப்பின்மேல் நிற்பதுதான். போதுமான தூரத்தில் இருக்கிறதே என்று கவனமில்லாமல் இருந்தால் போதும், சட்டென்று சுட்டுவிடும்.”
“இன்னொரு குற்றச்சாட்டும் என்மீது பரவத் தொடங்கிவிட்டது யுவர் எக்ஸலென்ஸி” திவானின் குரலில் வருத்தம் மேலோங்கியது.
“என்ன குற்றச்சாட்டு?”
“99 வருஷ குத்தகை, 999 வருஷமாக மாறியதற்கு நான்தான் காரணமாம். நான் மெட்ராஸ் பிரசிடென்சியைச் சேர்ந்தவன் என்பதால் இந்தத் தந்திரம் செய்து குத்தகை வருஷத்தைக் கூட்டிவிட்டேனாம்.”
ஹானிங்டன் சிரித்தார். “அப்படியென்றால் நான்தான் பிரிட்டிஷ்காரன். எனக்குத்தானே நேரடியாகப் பொறுப்பிருக்கிறது?”
திவான் அமைதியாக இருந்தார்.
“மிஸ்டர் அய்யங்கார். நீங்கள் உடனே மகாராஜாவைச் சந்தித்துப் பேசுங்கள். சமஸ்தானத்திற்குள் இனி நம் கட்டுப்பாட்டை மீறி ஒருத்தர் நுழையக் கூடாது, பிரிட்டிஷ் பிரஜைகளாக இருந்தாலும் பாஸ்போர்ட் இல்லாதவருக்கு அனுமதி கிடையாதென்று செய்தி அனுப்புங்கள்.”
“உத்தரவு யுவர் எக்ஸலென்ஸி. இன்று மாலையே மகாராஜாவைச் சந்திக்கிறேன்.”
இருவரின் மனமும் லேசானதை அறிந்த குதிரைகள் தன்னிச்சையாக வேகமெடுக்கத் தொடங்கின.
“தகவல் அறிந்தீர்களா அய்யங்கார்?” மகாராஜா மூலம் திருநாள்.
“யுவர் ஹைனெஸ் குறிப்பிடும் தகவல்?” திவான் தயக்கமாய் கேள்வியை நிறைவு செய்தார்.
“சாம்சனுக்கு நாயர் படையில் இருந்து இரண்டு வீரர்கள்தான் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அவன் தன்னுடைய வண்டியுடன் கடற்கரையை ஒட்டிய பெரிய மரத்தடியில் மறைந்து நின்றிருந்தானாம். கவர்னர் வருகிற வழியில் வரவேற்பிற்காக வெடித்த பாணத்தின் சத்தம் காதில் விழுகிறவரை காத்திருந்து சரியாக கவர்னர் வருகிற நேரத்தைக் கணக்கிட்டு நுழைந்திருக்கிறான். அவனுடைய நோக்கம் யாரையும் கொல்வதா, அல்லது, கொல்வதற்கு முயற்சியென்ற அச்சமுண்டாக்குவதா என்று தெரியவில்லை.”
‘நாம்தான் மகாராஜாவுக்குத் தகவல் சொல்ல வேண்டும், மகாராஜா சொல்லி நாம் கேட்கும் நிலை இருக்கிறதே?’ என்று திவானுக்கு வருத்தமாக இருந்தது. ‘தன்னுடைய நிர்வாகத்திறன் மங்குகிறதோ, தான் விடைபெறுவதற்கான நேரமென்பதைச் சுட்டத்தான் இதுவரை சமஸ்தானத்தில் நடக்காத சம்பவங்களெல்லாம் நடக்கிறதோ?’ என்றும் கலங்கினார்.
“யுவர் ஹைனெஸ், நிறைய சதி வேலைகள் தொடங்கிவிட்டன. மகாராஜாவிடம் எப்படிச் சொல்வது என்று தயங்குகிறேன். தனிநபர் தூஷணையாகப் புரிந்துகொள்ளப்படும் அபாயமும் இருப்பதால் என் தயக்கம் கூடுகிறது.”
“பேரியாற்று அணைக்கு இடம் கொடுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கத்தான் கோட்டயம் தாலுகாவிலிருந்து தூண்டிவிட்டிருக்கிறார்கள்.”
திவானுக்குக் குழப்பம் கூடியது. ‘இதென்ன, புதுக்கதையாக இருக்கிறதே?’
“கோட்டயத்தில் இருந்தா?”
“ஆமாம் அய்யங்கார். உங்களுக்கு நினைவிருக்குமே, கோட்டயம் திவான் பேஷ்கர் ராமா ராவ் பேரியாற்றால் பயனடையும் ஐந்து தாலுகாவின் ஆறு பிரவிருத்தியைச் (வருவாய் கிராமம்) சேர்ந்த பிரஜைகளிடமிருந்து கருத்து வாங்கிக் கொடுத்திருந்தாரே?”
“நான் சமஸ்தானத்திற்கு வந்த வருஷமது யுவர் ஹைனெஸ், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.”
“ஆமாம், இரண்டு லட்சம் தென்னை மரங்கள், ஐந்நூறு மீனவர்கள், ஐம்பதாயிரம் பேர் படகில் செல்லும் நீர்ப்பாதை, எட்டாயிரம் மரக்கட்டைகளைக் கொண்டு செல்வது எல்லாம் பாதிக்கும் என்று கோட்டயத்தில் பேரியாறு பாயும் தாலுகா பிரஜைகளிடமிருந்து கையெழுத்து வாங்கி, பிராது கொடுத்திருந்தார்கள்.”
“பிரதானமாக உணவுப் பயிரான நெல் விளைச்சலுக்குப் பேரியாற்றுத் தண்ணீர் தேவையில்லை என்பதுதான் நிதர்சனம். அதை நம்முடைய கோட்டயம் திவான் பேஷ்கர் ராமா ராவ் தெளிவாகச் சொல்லியிருப்பார்.”
“உண்மைதான். ஒரு காட்டிலாகா அதிகாரியும் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தாரே? அவர் சொன்னதில் நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்க வேண்டிய கருத்து ஒன்றிருந்தது. பேரியாறும் முல்லையாறும் ஒன்றிணையும் முல்லைக்கூட்டுக்குக் கீழே வரும்போது, பேரியாறு பனிரெண்டு சிற்றோடைகளைச் சேர்த்துக்கொண்டு ஓடிவருகிறது. பேரியாற்றின் பிரவாகம் தடைபட்டால் பனிரெண்டு சிற்றோடைகளும் வறண்டுபோகும். வருஷத்தில் இரண்டு, மூன்று மாதங்கள் அதிகபட்சம் நான்கு மாதங்களுக்குத் தண்ணீர் இல்லாமல் வறண்டுபோகும். ஆலப்புழா வரும் பேரியாற்றின் மிக முக்கியமான நன்மை, காயல்களினால் நிலங்களில் படிந்திருக்கிற உப்பை அடித்துச் செல்லுவதுதான். நேரடியாக நெல்லுற்பத்திக்குப் பேரியாறு பயன்படவில்லையென்றாலும், இருக்கிற உப்பு நிலங்களில் வண்டல் சேர்த்துப் பயிர் செய்ய உதவுகிறது. நாளடைவில் பேரியாற்றின் நீர்வரத்துக் குறையக் குறைய பயிர் உற்பத்தி குறைந்து நம்முடைய சமஸ்தானத்திற்கு என்ன பாதிப்பு வருமோ?” மகாராஜாவின் குரலில் கலக்கமிருந்தது.
“பேரியாறு காட்டாறு மகாராஜா. வருஷம் முழுக்க ஓடும் பேரியாற்றிலிருந்து ஆறில் ஒரு பங்கு நீரைத்தான் மதுரைக்குத் திருப்பி விடுகிறார்கள். அதுவும் கடலில் வீணாய்ச் சென்று கலக்கும் நீர்...”
“அவர்களைப்போல் நீங்களும் வீணாக என்று சொல்லாதீர்கள் அய்யங்கார். உங்களுக்கே தெரியும், ஒரு நதி கரை புரள்கிறது என்றாலே அவ்விடம் செல்வத்தின் செழிப்பும் பிரவாகமெடுக்கும். நதி ஓடி வரும் வழி முழுக்க எத்தனை புல் பூண்டுகள், தாவரங்கள், சின்னச் சின்ன உயிரினங்கள் பிழைக்கும் தெரியுமா அய்யங்கார்? நதியின் தடமென்பது நாம் உணர முடியாத ஜீவராசிகளின் சங்கமம்.”
“பாண்டிய நாட்டில் மனிதக் கூட்டம் பேரியாற்றுத் தண்ணீருக்காக உயிரைக் கண்ணில் தேக்கி, நூறு வருஷமாகக் காத்திருக்கிறார்கள் மகாராஜா. பேரியாற்றுத் தண்ணீர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு மதுரைக்குச் சென்றிருந்தால், பர்மாவுக்கும் மலாயாவுக்கும் சிலோனுக்கும் நாடோடிகளாக எலும்பும் தோலுமாகப் போயிருக்க மாட்டார்கள். ஹிஸ் ஹைனெஸ் விசாகம் திருநாள் இந்த உண்மையை உணர்ந்திருந்தார். பேரியாற்றின் தண்ணீரை விட்டுக் கொடுப்பதால் திருவிதாங்கூர் இழப்பதையும், பேரியாற்றின் தண்ணீரைப் பெறுவதால் மதுரை பெறும் நன்மையையும் மகாராஜா ஒப்பீடு செய்தார். திருவிதாங்கூர் இழப்பது ஒன்றுமில்லை. பெறும் நன்மைகளில் ஒன்றிரண்டு குறையலாம். மதுரையின் குடிகளுக்கோ வாழ்வாதாரம். கோட்டயத்தில் குறையும் தென்னைகள் கம்பம், கூடலூரில் பிழைத்து நிற்கட்டும். மரங்களைக் காரணம் காட்டி மானுடர்களின் வாழ்வினைத் தொலைக்கக் கூடாது என்றுதான் மகாராஜா நினைத்தார். அவரின் உயரிய உள்ளமும், பரந்த மானுடச் சிந்தனையும் எப்போதுமே ஆச்சரியப்படுத்தும். நம்முடைய காட்டிலாகா அதிகாரியும் ஓவர்சீயரும் பிரசிடென்சி எடுக்கப்போகும் தண்ணீரின் அளவைத் தவறாகச் சொல்கிறார்கள். பேரியாற்றுத் தண்ணீரில் ஆறில் ஒரு பங்கு நீரை எடுக்கப்போவதில்லை. கடலில் சென்று கலக்கும் நீரில் ஆறில் ஒரு பங்கு நீரைத்தான் எடுத்துக்கொள்ள இருக்கிறார்கள். அதனால்தான் ‘வீணாக’ என்ற வார்த்தையைச் சொன்னேன்.”
மூலம் திருநாளும் விசாகம் திருநாளின் நினைவுகளில் மூழ்கினார். ‘அரசன் என்பவன் வரையறுக்கப்பட்ட எல்லையை ஆள்பவன் மட்டுமல்ல, அரசமை என்பது பெருங்குணம். மனித உயிர்களைக் காக்கும் பெரும் நேசம். மாமா விசாகம் திருநாளுக்கு மானுட நேசமிருந்தது. தானும் அந்நிலைக்கு உயர வேண்டும்’ என்கிற எண்ணம் எழுந்தது மகாராஜாவுக்கு.
“மகாராஜா மீண்டும் பழைய பேச்செடுப்பதன் காரணம் நான் அறியலாமா?”

“இப்போது புதுப்பிரச்சினையைக் கொண்டு வந்திருக்கிறார்கள் திவான். சங்கரன் தம்பி பின்னால் நின்றுகொண்டு பிரச்சினைகளை முன்னுக்குத் தள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார்.”
திவானுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சங்கரன் தம்பி குறித்து மகாராஜாவே பேச்சு எடுத்ததில் தன்னுடைய சுமை குறைந்த ஆசுவாசம்.
“ஆலப்புழா, ரானீ வழியாக, ஏலமலைக்குச் செல்லும் பாதையெல்லாம் பேரியாற்று அணைக்காகத் தேக்கி வைக்கும் நீரில் மூழ்கிப் போகுமாம். சபரிமலை, ரானீ வழியாகப் புதிய பாதை ஒன்று அமைத்துத் தர வேண்டுமாம். மேல்மலையில் பயிரிடும் ஏலத்தோட்டங்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்றும் ஏலத்தோட்ட முதலாளிகளும் நஷ்டஈடு கேட்கிறார்கள் என்றும் சங்கரன் தம்பி இன்று காலை என்னுடனான நேர்முகத்தில் தெரிவித்தார்.”
“மகாராஜாவுக்கு நன்றாகத் தெரியும். மேல்மலையில் பாதையென்று தனியாக எதுவுமே இல்லை. மதுரையிலிருந்து ஒரு வணிகப்பாதையும், திருநெல்வேலியிலிருந்து ஒரு வணிகப்பாதையும், இரண்டுமே இரண்டாள் நடக்குமளவிற்கான மண்பாதைகள்தான், முல்லைக்கூட்டு வரை இருந்தது. அடர்ந்த காட்டில் நிரந்தரமான பாதை இருக்க சாத்தியமில்லை. அணை அமைய இருக்கிற இடத்தை ஆய்வு செய்யச் சொல்லி அனுப்பிய குழு, பல இடங்களில் பாதை இல்லாததால் செல்ல முடியவில்லையென்று ஒரு வாரத்திற்குள் திரும்பி வந்துவிட்டார்களே? பிறகுதானே காட்டிலாகா ஆள்களுடன் ஏலத்தோட்டத்தில் வேலை பார்க்கும் பர்வதக்காரன் (மலைவேலை செய்பவன்) ஒருவனையும் அமில்தார் ஒருவனையும் அனுப்பி வைத்தோம். ஏலத்துறை ஊழியர்கள் என்பதால் மலைக்குள் புகுந்து வந்துவிட்டார்கள். அவர்கள் வந்து சொன்னதுதான், பேரியாற்றுக்குக் கீழே இருக்கும் பனிரெண்டு சிற்றாறுகளும் வறண்டு விடுமென்று. வறண்டுபோனாலும் பெரிய பாதிப்பில்லை மகாராஜா. பேரியாற்றில் இருந்து கிளை பிரியும் இரண்டு நதிகளில் ஒன்று வருஷத்திற்கு இரண்டு, மூன்று மாதம் இப்போதும் நீரின்றிதான் இருக்கும். செறுதோணி ஆற்றில் கோடையிலும் வெள்ளம் பெருகும். செறுதோணியில்தான் மரக்கட்டைகளைக் கொண்டு செல்கிறார்கள். இரண்டாவது, ஏலத்தோட்டத்திற்குச் செல்லும் பாதைக்கும் பேரியாற்று அணை நீர் தேங்கப்போகும் இடத்திற்கும் தொடர்பே இல்லை. ஏலத்தோட்டங்கள் மூழ்குவதற்கும் வாய்ப்பில்லை மகாராஜா. பேரியாற்று அணையின் நீர்தேங்கும் இடமான எட்டாயிரம் ஏக்கரில் மன்னான்களும் பளியர்களும் இருக்கும் காணிகளில் கொஞ்சம் மூழ்கலாம். கண்ணகி அம்மை கோயிலுக்குச் செல்லும் வழியும் மூழ்கிப் போகலாம். ஏலத்தோட்டம் எல்லாமே அணை கட்டப்போகும் மலைக்கு அடுத்த மலைத்தொடரில்தானே இருக்கின்றன? பேரியாற்று அணையின் நீர் தேங்கப்போகும் எட்டாயிரம் ஏக்கர் நிலம் நமக்குத்தானே மகாராஜா? அதில் படகுகள் விடலாம். மீன் ஏலம் விடலாம். எதிர்காலத்தில் நீர்தேங்கும் ஏரிக்கும் ஏரியைச் சுற்றியிருக்கும் நிலங்களுக்கும் நிச்சயம் மதிப்புகூடும் என்று பென்னி குக் சொல்லியிருக்கிறார் மகாராஜா.”
“அய்யங்கார், என்னிடம் மனம் திறந்து உண்மையைச் சொல்லுங்கள். நாம் செய்தது சரிதானா? நம்முடைய காரியத்தில் வரும்தலைமுறையினர் குற்றம் கண்டுபிடிக்கக் கூடாது. பழிக்கவும் கூடாது.”
“மகாராஜா, ராயல் இன்ஜினீயர் பென்னி குக் சமஸ்தானத்திற்கு எழுதிய தபாலில் குறிப்பிட்டிருந்த விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். இரண்டே விஷயங்கள்தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. அணை கட்ட நாம் கொடுக்கும் இடத்தின் மதிப்பென்ன? அணை கட்டினால் மதுரைக்குக் கொண்டு செல்லும் நீரின் மதிப்பென்ன? இரண்டிற்கும் பதிலை யோசித்தால், சமஸ்தானத்திற்கு இழப்பு ஏற்படும் காரியமெதையும் நாம் செய்யவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். மேல்மலையில் நிலத்திற்கான மதிப்பென்பது அதிகமில்லை. அப்படியும் நாம் ஏக்கருக்கு ஐம்பது வீதம் கணக்கிட்டு நான்கு லட்சம் ரூபாயும், அவர்கள் எடுத்துக்கொள்ளப்போகும் தண்ணீருக்கும் மரத்திற்குமான மதிப்பு இரண்டு லட்ச ரூபாயும் எனக் கொண்டு ஆறு லட்சம் கேட்டிருந்தோம். அவர்களும் ஆறு லட்சம் தர சம்மதித்தார்கள். ஆறு லட்சத்துடன் தங்கசேரி, அஞ்சுதெங்கு, சர்க்கார் தோட்டங்களைக் கேட்டதில்தான் சிக்கல் ஆரம்பித்தது.”
“தங்கசேரியைக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நமக்கு நிரந்தரத் தலைவலி. மெட்ராஸ் பிரசிடென்சியின் மலபார் மாவட்ட எல்லையில் இருந்தாலும், நமக்குத்தான் நட்ட நடுவில் இருக்கிறது. தங்கசேரியைச் சுற்றி மூன்று பக்கம் கடலும் நம் சமஸ்தானத்தின் எல்லையும்தான் இருக்கிறது. சமஸ்தானத்தில் குற்றங்களைச் செய்துவிட்டு தங்கசேரிக்குச் சென்று அடைக்கலமாகிவிடுகிறார்கள். உப்பு, புகையிலை, மிளகு, சாராயம் எல்லாம் கள்ளத்தனமாக விற்பனை நடக்கிறது. மலபார் கலெக்டருக்குத் தங்கசேரி வருவது சுற்றுலா செல்வதுபோல் அரிய நிகழ்வு. குடிகளுக்கும் பிரச்சினைதானே?”
“குடிகள்தானே சமஸ்தானத்துடன் இணைய மறுக்கிறார்கள்? கிறிஸ்துவர்களுக்குச் சிறப்பு உரிமைகள் கொடுத்திருக்கும் நம்முடைய சமஸ்தானத்தைக் கிறிஸ்தவர்கள் சந்தேகிப்பது வியப்புதான். பெரும்கூட்டமொன்று தவறாக வழிநடத்தப்படுகிறது என்றால் இரண்டே இரண்டு விஷயங்கள்தான் மகாராஜா அதன் பின்னணியாக இருக்க முடியும்...” சிறிது இடைவெளி விட்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார் ராமய்யங்கார்.
“எந்தக் காரியத்திலும் லாபம் பார்க்க நினைக்கும் வர்த்தகர்கள், எந்தக் காரியத்திலும் புகழ் வெளிச்சம் பெற நினைக்கும் மத துவேஷிகள், இவர்கள் நிச்சயம் பின்புலத்தில் இருப்பார்கள். தங்கசேரி விஷயத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள குடிகளைத் தூண்டிவிட்டிருக்கிறார்கள்.”
“சரி, ஏலத்தோட்டங்களுக்குச் செல்ல புதிய பாதை கேட்டிருப்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது?”
“ஏற்கெனவே எப்படிச் சென்றார்களோ அப்படியே செல்ல வேண்டியதுதான் மகாராஜா. அவர்களின் நோக்கம் பாதை கேட்பதல்ல, பேரியாற்றுத் திட்டத்தைச் சீர்குலைப்பது. கள்ளர்கள் யாரேனும் விளக்கெரிக்கச் சொல்லிக் கோரிக்கை வைப்பார்களா? இவர்களின் கோரிக்கை அப்படித்தான் முரண் நகை கொண்டது. ஒழுங்கற்ற வழித்தடங்கள் இருந்தால்தான் ஏலத்தோட்டத்தில் திருட்டு மூடைகளைக் கடத்த முடியும். அணை வந்துவிட்டால் அணை கட்டிமுடிக்கும் வரை இவர்களின் கடத்தலுக்கு இடையூறு. அணை என்பது நிரந்தர இடையூறு அல்லவா?”
திவான் பேச்சைக் கேட்டு மகாராஜாவின் முகம் யோசனையில் ஆழ்ந்தது.
“மகாராஜா பேச்சை ஆரம்பித்த துணிவில் நானும் சில விஷயங்கள் சொல்ல நினைக்கிறேன். தரவாட்டின் காரியக்காரன் சங்கரன் தம்பியின் துர்காரியங்கள் எல்லைமீறிச் செல்கிறது. அவர்தான் காரியகர்த்தா என்று தெரிந்த பிறகு, மகாராஜா இன்னும் அனுமதிப்பதன் காரணமென்ன?”
“சங்கரன் தம்பி துஷ்டன். துஷ்டனை நம் கண்பார்வையில் வைத்திருப்பதில் தந்திரம் இருக்கிறது. அவனை வெளியேற்றுவது கண நேரத்தைய வேலை. தரவாட்டில் இருக்கிறவரை அவனின் துஷ்டத்தனத்தை பயந்துகொண்டு செய்கிறான். இப்போது வெளியேற்றினால் ராட்சசத்தனமாய் சமஸ்தானத்திற்கு எதிரான எல்லாக் காரியங்களும் செய்வான். அவனுடைய நன்மைக்காக அல்ல, நம்முடைய நன்மைக்காகச் சிலகாலம் விட்டு வைப்போம். சங்கரன் தம்பி மட்டும் அசுரத்தனம் செய்ய வாய்ப்பில்லை. அவனுக்குப் பின்னால் இருப்பவர்களையும் முழுமையாக அறிந்த பிறகு மொத்தமாய் வேரறுப்போம்.”
திவான் வியந்தார்.
“சரிதான் மகாராஜா. துஷ்டர்களை விலக்கி வைத்தால் அச்சம் விலகி அசுரபலம் பெற்றுவிடுவார்கள்.”
திவான் சொல்லி முடிப்பதற்கும் குட்டன் நாயர் தேநீர்க் கோப்பைகளோடு உள்ளே வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.
- பாயும்