மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 56 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

சாம்சன் விஷயம் அப்படித்தான் காட்டிடைக் கங்குபோல் உள்ளுக்குள்ளேயே கனன்றுகொண்டிருக்கிறது.

கோயிலுக்குச் செல்வதற்காக பங்களாவின் வாயிலை நோக்கி நடந்தார் திவான் ராமய்யங்கார். மனம் ஓர் அசாதாரணத்தைக் கற்பிதம் செய்து, தனக்குள் நிகழ்த்திப் பார்த்தது. பதவியின் அதிகாரம், பதவியில் இருப்பவர்களுக்குத் தரப்படும் ஜபர்தஸ்துகளால்தான் நிலைநிறுத்தப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் பதவி, அதிகாரப் படிநிலையில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. மகாராஜாவுக்கு அடுத்த நிலை என்றாலும், மகாராஜாபோல் செயல்படலாம். அவருக்காகக் கையெழுத்திடலாம். சமஸ்தானத்தின் சொத்துகள் திவான் பெயரில்தான் வாங்கப்படும்.

மகாராஜாவுக்கும் ஆட்சியதிகாரத்திற்குமான மாயத் தாம்புக்கயிறு திவான் கையில் இருக்கிறதென்று காட்டிக்கொள்ளாமல், அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள முடியும். ஒரு துளி அதிகம் என்பதுதான் எப்போதுமே ஆபத்து. அறுசுவை உணவைக் குலைக்க அதிகம் சேரும் ஒரு துளி உப்பாக இருந்தாலும் சரி, மகாராஜாவுக்கு அடுத்து தான்தான் என்பதுபோல் திவானின் தலைப்பாகை தர்பாரில் கூடுதலாக அசைந்தாலும் சரி, அதிகாரம் குலைந்துபோகும். இருப்பதைக் காட்டிக்கொள்ளாமல் காட்டிக்கொள்வதும் அதிகாரத்தின் ஒரு தந்திரம். ராமய்யங்கார் எப்போதுமே மிகச்சரியாக அந்தத் தந்திரத்தைக் கையாள்வார். பணிதல் என்பதற்குள் முழுமையாக அதிகாரத்தைக் கையிலெடுத்தல் என்பதும் அடக்கம்தானே!

மகாராஜாவின் இளமையும் ராமய்யங்காரின் முதிர்ச்சியும் சரியான கலவையாகச் சமஸ்தானத்திற்கு வலுச்சேர்த்தன. மகாராஜாவின் புதிய சிந்தனைகளுக்கு ராமய்யங்காரின் கூரிய செயல்திட்டம் அடித்தளம் அமைத்தது. குதிரையும் கடிவாளமுமாக இசைவுடனிருந்த இருவரின் புரிதலுக்குள் இடியின் நரம்புகளைப்போல் உணர்ந்தறிய முடியாத விரிசல்களை எழுப்புகிறது காலம். கவர்னரின் சமஸ்தான வருகையில் நடக்கவிருந்த அசம்பாவிதம் நடக்காமல் போனாலும், மகாராஜாவிற்கு எதிரான கலகம் என்பதால் சமஸ்தானம் முழுக்க செரிக்கவியலாத அசௌகரியம் நிலவியது. அதனால் ராமய்யங்காருக்குத் தனிப்பட்ட விதத்தில் மன உளைச்சல் மிகுந்திருந்தது.

நீரதிகாரம் - 56 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

பிரிட்டிஷ் பிரஜைகளைச் சமஸ்தானத்தில் பணி நியமனம் செய்வதற்கு ரெசிடென்ட் அனுமதி வாங்க வேண்டும். பரிந்துரைப்பது திவான். பிரிட்டிஷ் பிரஜைகளை நியமனம் செய்யும்போது, சமஸ்தானத்தில் அந்த வேலைக்கான வாய்ப்பை இழப்பவரின் பகையையும் சம்பாதிக்க வேண்டும். நியமிக்கப்படும் பிரிட்டிஷ் பிரஜைக்கு ஜவாப்தாரியாகவும் இருக்க வேண்டும். அவர்கள் சமஸ்தானத்தின் சட்டத்தை மீறினாலும் மதிக்காமல் சென்றாலும் தலைவலி திவானுக்குத்தான்.

சாம்சன் விஷயம் அப்படித்தான் காட்டிடைக் கங்குபோல் உள்ளுக்குள்ளேயே கனன்றுகொண்டிருக்கிறது. மகாராஜாவும் கவர்னரும் வரும் பாதையில் சாம்சன் வெடிமருந்துப் பையை வைப்பதற்கு உதவியதாக நாயர் படையின் வீரர்கள் பத்துப் பேரைப் பிடித்து, ஒரு வார காலமாக விசாரணை நடந்துவருகிறது. பிரிட்டிஷ்காரன் செய்த தப்புக்கு மலையாள வீரர்களிடம் எதற்கு விசாரணை என்று காரியக்காரன் சங்கரன் தம்பிக்குக் கோபம். சாம்சன், நாயர் படைப்பிரிவு ஆள் இல்லை, அரண்மனை ஊழியக்காரன் என்பதால் நாயர் படையின் பிரிட்டிஷ் கமாண்டருக்கு நிம்மதி. பிரச்சினையிலிருந்து தப்பித்தோம் என்று அவரவர் தங்களுக்குச் சாதகமான இடைவெளியில் ஒதுங்கி நின்று ஆசுவாசம் கொண்டிருக்க, ராமய்யங்கார் தன்னந்தனியாகச் சக்கரவியூகத்தில் இருந்தார். தங்கசேரியையும் அஞ்சுதெங்குக் கோட்டையையும் பயணத்திட்டத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கச் சொன்னது ராமய்யங்கார்தான். அவரின் உள்ளுணர்வு சொல்லியதில் உறுதியாகச் சொன்னார். ரெசிடென்ட் மறுத்ததில் அய்யங்காரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. போலீசும் நிர்வாகமும் மகாராஜாவிடமும் திவானிடமும்தானே இருக்கின்றன? ‘அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளதாக எனக்குத் தகவல் வரவில்லை என்பதால்தான் கவர்னரின் பயணத்திட்டத்திற்கு அனுமதி கொடுத்தேன்’ என்று ரெசிடென்ட், அவர் தரப்பை நியாயப்படுத்திவிட்டார். இதில் காரணம் சுட்ட முடியாமல் தத்தளிப்பது ராமய்யங்கார்தான்.

ராமய்யங்காருக்குத் திருவிதாங்கூரில் இரண்டு பங்களாக்கள் இருந்தன. சமஸ்தானத்தின் வளாகத்திற்குள் இருக்கும் திவான் பங்களா ஒன்று. மற்றொன்று அரண்மனையிலிருந்து இரண்டரை மைல் தூரத்தில் பருத்திக்குன்னு பங்களா. குடும்பத்தினர் மெட்ராஸில் இருக்கும் காலங்களில் ராமய்யங்கார் திவான் பங்களாவிலேயே இருந்துவிடுவார். இரவு பகலாக வேலைகளின் பின்னால் ஓடிக்கொண்டிருப்பதால் தனியாகத் தன்னுடைய பங்களாவுக்குச் செல்ல வேண்டுமென்ற எண்ணம் எழுவதில்லை. மகள்களும் பேரக் குழந்தைகளும் வரும் நேரத்தில் பருத்திக்குன்னு பங்களாவிற்குச் சென்றுவிடுவார்.

இன்று பருத்திக்குன்னுவில் இருக்கும் ராமய்யங்காரின் மனம் நிலைகொள்ளவில்லை. இரவு முழுக்க உறக்கம் வராததில் புலரிக்கு முன்பே நீராட்டு முடித்து, பத்மநாப சாமியின் அம்பலத்திற்குப் புறப்பட்டார். பேரன் பத்மநாபன் வந்திருக்கிறான். அவனையும் அழைத்துச் செல்ல ஆசை. அவன் விழித்திருக்க மாட்டானோ என்றொரு ஐயத்தில் பணியாளனைப் பார்க்கச் சொன்னார். திரும்பி வந்த பணியாளனுடன், குளித்து முடித்து, நெற்றியில் நாமமிட்டு வரும் பெயரனைப் பார்த்த ராமய்யங்காருக்கு இருக்குமிடத்திலேயே பெருமாளின் தரிசனம் கிடைத்த உவகை. இரவின் குளிர்ச்சியை முழுக்கத் தாங்கிக்கொண்டிருக்கும் மரமொன்றைத் தழுவிக்கொள்ளும் பரவசத்துடன் பெயரனை அணைத்தார். மென்மையும் குளுமையும் கலந்த மேனியில் நறுஞ்சந்தனத்தின் மணம். ஆலிங்கனக் கண்ணனின் வெண்ணெய்க் குளிர்ச்சி.

“யான பாக்க கூட்டிட்டுப் போறேளா தாத்தா?”

“போலாம், மொதல்ல கோயிலுக்கு, அப்புறம் யானை பாக்க. சரி, நீ இவ்ளோ சீக்கிரம் எப்படி எழுந்துட்ட?”

“யாரோ எழுப்பிவிட்டா தாத்தா.”

ராமய்யங்காருக்கு மனம் நெகிழ்ந்தது. தன்னைச் சுற்றி நல்லருள் சூழ்ந்திருக்கிறது என்று உளம் பூரித்தார். பத்மநாபனின் கையைப் பிடித்தபடி வாயிலுக்கு நடந்தார்.

“துப்பாக்கியத் தொட்டுப் பாக்கலாமா தாத்தா?”

“இப்போ வேணாம், சும்மா இருக்கிற நேரத்துல காட்டச் சொல்றேன்.”

சூரிய உதயத்திற்கு முன்பு திவான் வெளியில் கிளம்பும்போதும், அஸ்தமனத்திற்கு முன்பு திரும்பி உள்ளே வரும்போதும் சென்ட்ரியில் நிற்கும் வீரர்கள் அவரவர் கையில் இருக்கும் ஆயுதங்களை உயர்த்தி ‘கார்ட் ஆப் ஆனர்’ என்ற ராணுவ மரியாதை செய்வார்கள். மற்ற நேரங்களில் திவான் வருகை தந்தாலும் வெளியில் கிளம்பினாலும், வீரர்கள் ஆயுதம்தாங்கி நிற்கும் ‘கேரி ஆர்ம்ஸ்’ என்ற மரியாதை மட்டும் செய்வார்கள்.

மகாராஜாவுக்கும் இளைய மகாராஜாவுக்கும் அரண்மனையில் உள்ளவர்களுக்கும் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்படும். அரச குடும்பத்தவருக்கும் ரெசிடென்டுக்கும் மரியாதை செய்ய நேரம் காலம் வரையறை கிடையாது. மகாராஜா இருக்கும் வல்லிய கொட்டாரம், ஆனந்த விலாசம், ஸ்ரீபாதம் அரண்மனை மூன்றிற்குள்ளும் அவர்கள் அரண்மனை வாயிலைக் கடக்கும்போதெல்லாம் சென்ட்ரிகள் ஆயுதமேந்தி மரியாதை செய்ய வேண்டும். துப்பாக்கிக் குண்டுகளும் வெடிக்க வேண்டும்.

நீரதிகாரம் - 56 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

மகாராஜாவுக்கும் ரெசிடென்டுக்கும் அடுத்து திவானுக்குத்தான் ஆயுதந்தாங்கிய வீரர்கள் மரியாதை செய்வது. ராமய்யங்கார் சப் கலெக்டராகப் பணியாற்றிய காலத்தில் கலெக்டருக்கு மட்டும்தான் மரியாதை செய்யப்படும். சப் கலெக்டருக்கென்று தனித்த மரியாதை கிடையாது. சுதேசி சப் கலெக்டர்கள், பிரிட்டிஷ் கலெக்டர்கள் பின்னால் செல்லுகையில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதையை, சப் கலெக்டர்களுக்கும் சேர்ந்தது என்று எடுத்துக்கொள்ளலாம்.

திவானாக வந்த பிறகுதான் இத்தனை மரியாதையும் மிலிட்டரி அணிவகுப்பும் நாயர் படையும் பாதுகாப்பும். திவானாகப் பொறுப்பேற்ற ஒரு வாரம் வீரர்களின் அணிவகுப்பையும் விறைப்பாக ஆயுதங்கள் உயர்த்தி நிற்கும் தோரணையையும் பார்த்து இவருக்குள் பெருமிதம் உருவாகும். தினம் பார்த்துப் பழகிய பிறகு ரெசிடென்டையும் மகாராஜாவையும் சந்திக்கக் கிளம்பும் நேரத்தில் இருக்கும் மனநிலைக்குப் பல நேரங்களில் ஆயுதந்தாங்கிய மரியாதையைக் கவனிக்கவும் தோன்றாது.

இன்று பெயரன் பத்மநாபன் உடனிருக்கும் வேளையில் தனக்குக் கிடைக்கப்போகும் மரியாதையை அவன் வியந்து பார்ப்பான் என்று நினைத்தார் ராமய்யங்கார். தன்னைவிட அதிக உயரங்கள் அவனுக்குக் கிடைக்க வேண்டுமென்று அவர் மனம் பிரார்த்தித்தது. பத்மநாபனின் கைப்பிடித்துத் தலைவாயிலுக்கு வந்தார். நின்று ஒருகணம் வீரர்களைப் பார்த்தார். வீரர்கள் தயாராக நின்றிருந்தார்கள். இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் பொலிவுடன் இருந்தது. சாரதி ஏறுபலகையை இறக்கி வைத்து, அதனருகில் தயாராக நின்றான்.

அரண்மனை வெளிவாயிலில் ஆங்காங்கு எரிந்துகொண்டிருந்த அரையாள் உயரக் கல்விளக்குகள், தொங்கவிடப்பட்டிருந்த கிருஷ்ணாயில் விளக்குகளின் நெடி சில்லிட்ட காற்றுக்குப் புராதனத்தைக் கொடுத்தது. குளிர்காற்றை உள்ளிழுத்து முழுமையாக சுவாசத்தை நிரப்பினார். அகத்திலும் குளுமை பரவியது. வாயிலில் இருந்து வீதியைத் தொடும் வரையில் இருந்த அலங்காரச் செடி கொடிகளின் அருகில் சின்னஞ்சிறிய இரும்புக் கூண்டுகளில் செப்புக் குவளைகளில் எண்ணெய் ஊற்றி ஏற்றப்பட்டிருந்த விளக்குகளும் மஞ்சள் பூக்களாக ஒளிர்ந்தன.

ராமய்யங்காரின் கைப்பிடித்துப் படியிறங்கிய பத்மநாபன், ஒன்றுபோல் இடையாடை உடுத்தியிருக்கும் வீரர்களைப் பார்த்து வியந்தான். அவர்கள் கையில் இருக்கும் ஆயுதங்களை பயத்துடன் பார்த்தான். துப்பாக்கி, கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தாலும் அவன் கவனம் துப்பாக்கியின்மேல்தான் இருந்தது.

ராமய்யங்கார் முதல்படியில் கால் வைக்கும்போதே வீரர்கள் தங்கள் கால்களை ஒன்றுசேர்க்கும் படாரென்ற ஒலி கேட்கும். ஐந்தாறு படி இறங்கிய பின்னும் ஒலி எழவில்லையே என்றெண்ணிய அய்யங்கார் வீரர்களைப் பார்த்தார். சீருடையில் வரிசையில் நின்றிருந்தார்கள். ஆனால் ஒருவரும் ஆயுதத்தைக் கையில் ஏந்தவில்லை. விறைப்பாக நின்று ஆயுதத்தைத் தங்கள் உடம்போடு சேர்த்துப் பிடித்திருந்தார்கள்.

ராமய்யங்கார் கவனம் ஊன்றிக் கவனித்தார். வீரர்களின் முகங்கள் இயல்பில் இல்லை. இருட்டும் சீருடையும் அவர்களின் அசாதாரணத்தை மறைத்திருந்தன. வழக்கமாக நடக்கும் மரியாதை ஏன் நடக்கவில்லை? இரவு முழுக்க தன் சிந்தனையின் அலைக்கழிப்பு இதற்கான முன்னோட்டமா?

தன்னைப் பின்தொடரும் உதவியாளனைக் கேட்கலாமா என்று நினைத்தார். சென்ட்ரிகளின் முன்னால் தனக்கு ஏன் மரியாதை செய்யவில்லை என்று கேட்பது தனக்குத்தான் மரியாதைக்குறைவு என்றெண்ணி, பத்மநாபனின் கையை மேலும் இறுகப் பற்றிச் சாரட்டில் ஏறினார். பத்மநாபனுக்கு வீரர்கள் கையில் இருக்கும் துப்பாக்கியைத் தொட்டுப் பார்க்க முடியவில்லையே என்று ஆதங்கம். அவன் விழிகள் சாரட் கிளம்பிய பிறகும் பின்னால் திரும்பி, துப்பாக்கியின் பளபளக்கும் கறுப்பினால் ஈர்க்கப்பட்டன.

ராமய்யங்கார் அப்போதுதான் இரவு நடந்ததையும் நினைவுக்குக் கொண்டுவர முயன்றார். நேற்றிரவு தாமதமாகத்தான் வந்தார். அவசரமாக உள்ளே நுழைந்ததில் தெளிவாக நினைவில் பதியவில்லை. ஆனால் சென்ட்ரிகள் வாயிலில் நிற்கவில்லையென்பது இப்போது தோன்றுகிறது.

திவானுக்குத் தனக்கு நடந்து கொண்டிருக்கும் அவமதிப்பு புரிந்தது. வழக்கமான மரியாதையை யார் நிறுத்தியிருப்பார்கள்? மகாராஜாவின் உத்தரவுக்குத்தான் நாயர் படை கட்டுப்படும். பிரிட்டிஷ் ரெசிடென்டின் உத்தரவு வந்தாலும் மகாராஜாவின் பின்னேற்பையும் எதிர்பார்ப்பார்கள் கமாண்டென்ட்கள். கமாண்டென்ட், அசிஸ்டென்ட் கமாண்டென்ட் பொறுப்புகளில் பிரிட்டிஷார் இருப்பதால் மகாராஜாவின் உத்தரவையும் எதிர்பார்ப்பார்கள். தன்னுடைய கவனத்திற்கு வராமல் இப்படியொரு காரியத்தை, அவசர அவசரமாகச் செய்தவர் யார்? செய்ய வேண்டிய காரணமென்ன? பின்னணியில் யார் இருக்கிறார்கள்? சிந்தனையின் புரிபடாத விழுது கழுத்தை இறுக்குவதுபோல் மூச்சுத் திணறியது. பத்மநாபசாமி அம்பலத்தில் என்ன நிலைமையோ? திவானுக்குரிய வரவேற்பு இல்லையென்றால் பெருத்த அவமானம். அதுவும் பெயரன் முன்னால்.

வழுதங்கோட்டில் இருந்த மகா ஸ்ரீகணபதி கோயிலைக் கடந்தது சாரட். கோயிலுக்குள்ளும் வெளியிலும் குறைவான நடமாட்டமே தெரிந்தது.

“இங்க ஒரு கோயிலிருக்கே தாத்தா?”

“ஆமாம்ப்பா, ஸ்ரீகணபதி ஆலயம்.”

“அய்ய், எனக்குப் பிடிச்ச யானைச்சாமி.”

“ஆமாம், சுவாமிக்கும் யானை அவதாரம் பிடிச்சிருக்கும். கம்பீரமா இருப்பார்.”

“அப்போ போலாமா?”

“நாம பத்மநாபசாமியைப் பார்க்கலாம்.”

“கணபதிக்கு எப்டிப் பெரிய தொந்தி வந்துச்சு தாத்தா?”

“உன்னைய மாதிரி எல்லாச் சின்னக் குழந்தைங்களுக்கும் பிடிச்சதையெல்லாம் சாப்பிடுறாரா... அதான் தொந்தி பெருசாயிடுச்சி.”

“எனக்கு என்ன புடிக்கும்னு கணபதிக்குத் தெரியுமா?” சிரிக்கும் பாவனையில் இதழ் விரிந்தது பத்மநாபனுக்கு.

“லோகத்துல இருக்க எல்லாக் கொழந்தைங்களுக்கும் என்ன புடிக்கும்னு அவருக்குத் தெரியும்.”

வியப்பில் விரிந்த பத்மநாபனின் விழிகள் வழிக் காட்சிகளில் மூழ்கின. அவனுக்குள்ளேயே கேள்வி கேட்பதும் பதில் சொல்வதுமாக அவன் சிருஷ்டித்துக் கொண்ட உலகத்தில் இருந்தான்.

திவானுக்கு மனம் அலைபாய்ந்தது. உடனடியாக ரெசிடென்டைச் சந்திக்க நேரம் கேட்க வேண்டும். மற்றவர்களின் தவறோ, யதேச்சை நிகழ்வோ, அதற்கு தான் பலிகடா ஆக்கப்படுவதா என்று மனம் குமைந்தார்.

நண்பகலில் காடு கொள்ளும் பேரமைதியில் மரங்கள் வெட்டுப்படும் சப்தம் காடெங்கும் எதிரொலித்தது. சின்னதும் பெரியதுமான மரங்கள் ஆங்காங்கே விழுந்து கிடந்தன. ஆற்றின் வலது, இடது பக்கக் கரையோரங்கள் சுமார் நூறடி தூரத்திற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஆற்றில் வெள்ளம் மேலெழுவதும் தாழ்வதுமாக இருந்தது.

தங்குவதற்குக் குடிசைகள் அமைக்காததால் கூலிகளுக்குப் பெரும் அவஸ்தை. எலும்பை உருக்கும் குளிரும், விலங்குகளைப் பற்றிய அச்சமும் பூச்சிகளும் அவர்களைத் தூங்க விடுவதில்லை. உடல் சோர்ந்து தானாக மடங்கி உட்காரும்வரை வேலை செய்யப் பழகியிருந்தார்கள். அதிக சோர்வில் கிடைக்குமிடத்தில் தூங்கிவிட முடியுமென்ற நம்பிக்கை பொய்த்தது. கண் திறக்க முடியாத அசதியில் கூடாரத்தின் மூலையில், கிழிந்த கித்தானைப்போல் விழுந்து கிடந்தாலும் ஆழ்மனத்தில் காடு பற்றிய அச்சம் மூளையை அமைதிகொள்ள விடாமல் வைத்திருந்தது. உடலின் மீண்டெழும் விசை வியப்பூட்டும்.

பென்னியும் டெய்லரும் காட்டுக்குள் நடந்தார்கள். லோகனும் மெக்கன்சியும் கூலிகள் தங்குவதற்காக ஆற்றின் இடது கரையோரம் கொஞ்சம் மேடான இடங்களை அளந்துகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குடிசைக்கும் நான்கு பேர். குடும்பத்துடன் வந்திருப்பவர்கள் மூன்று பேரோ, நான்கு பேரோ ஒன்றாகத் தங்கிக்கொள்ளலாம். சில குடிசைகளின் அளவைக் கூட்டச் சொல்லியிருந்தார் பென்னி குக். மரங்களின் கிளைகளைக் கழித்துவிட்டு, கூரைக்குத் தோதான சரங்களை ஓர் ஓரமாக அடுக்கியிருந்தார்கள்.

ராசுமாயனுக்குத்தான் இந்தப் பொறுப்பு. ஆற்றின் கரையோரம் கூலிகள் வெட்டிப்போட்டுச் செல்லும் மரங்களின் கிளைகளைக் கழித்துவிட்டு இரண்டு மூன்று ஆள்கள் மூலம் தூக்கிக்கொண்டு வந்து, ஓர் ஒழுங்கில் அடுக்க வேண்டும். ராசுமாயன் மரக்கிளையைத் தூக்கிப் பார்க்கும்போதே, பிஞ்சு மரமா, நார் இறுகி வைரம் பாய்ந்ததுபோல் முற்றியிருக்கிறதா என்று முடிவு செய்துவிடுவான். பிஞ்சு மரங்களையும் விட்டுவிடக் கூடாது என்பது பென்னியின் உத்தரவு. எந்தப் பொருளுமே வீணானது என்று தூக்கிப் போடாதீர்கள், நடுக்காட்டில் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொன்று உபயோகமாகும் என்று எடுத்துச் சொல்லியுள்ளார். பிஞ்சு மரங்கள் நன்றாகக் காயட்டும் என்று ஆங்காங்கு குவியலாகப் போட்டு வைத்திருந்தான் ராசுமாயன்.

மரங்களையும் புதர்களையும் புல்லையும் வெட்டி அப்புறப்படுத்திய பிறகு, ஆற்றுப்படுகையின் மேல்மண்ணை அகற்றி, பொரும்பையும் வலுவற்ற பாறைகளையும் உடைத்தெடுக்க வேண்டும். அணை கட்டுமிடத்தில் நீரைத் தடுத்து நிறுத்தி, ஆற்றுப்படுகையின் மேலுள்ள பாறைகளை உடைத்தெடுக்கும் வேலையை ஆரம்பிக்கத் தயங்கினார் பென்னி. நவம்பர் – டிசம்பர் மாதங்களில் காட்டில் வேலை செய்ய முடியாது. வடகிழக்குப் பருவமழை முடிந்துவிட்டாலும் மேல்மலையில் ஆங்காங்கு பெய்யும் மழை நீர் திரண்டு பெரும் வெள்ளமாக ஓடிவரும். குளிரும் அதிகமாக இருக்கும். காட்டில் மலேரியா ஜுரமும் பரவும். எனவே, இரண்டு மாதங்களுக்கு அணை வேலையை நிறுத்தியாக வேண்டும். இரண்டு மாதம் கழித்து வந்தால் வெட்டிய இடத்தில் மீண்டும் புல்லும் புதர்களும் மண்டியிருக்கும். சுத்தப்படுத்திவிட்டுத்தான் ஆற்று நீரைச் சின்னச் சின்னத் தடுப்புகள் கட்டி, பிரித்துவிட வேண்டுமென்பதால் இந்தப் பருவத்திற்கு இடங்களைச் சுத்தம் செய்வது மட்டும் போதுமென்று முடிவு செய்திருந்தார்.

டெய்லரும் பென்னியும் நடந்துகொண்டே மரங்கள் வெட்டிக்கொண்டிருப்பவர்களை மேற்பார்வை பார்த்தபடி நடந்தார்கள்.

“சூரியன் நல்லா வெளுக்குது. ஆனாலும் குளிர் நடுக்குது. உங்ககிட்ட மட்டும் வரமாட்டேங்குதே குளிர்?”

பென்னி லேசாகச் சிரித்தார்.

“நல்லாக் குளிர் தாங்குவீங்களா?”

பெரியாறு அணை, பெரியாற்று நீர் மெட்ராஸ் பிரசிடென்சிக்குள் வரும் பாதை, பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் 12 கிளைக் கால்வாய்கள்

நீரதிகாரம் - 56 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“இந்த மலையும் குளிரும் எனக்குப் பதினேழு வருஷமா பழக்கம் மிஸ்டர் டெய்லர். ராயல் இன்ஜினீயரிங் காலேஜ்ல படிச்சு முடிச்சு இந்தியாவுக்கு வந்து ஒன்றரை வருஷத்தில் மெட்ராஸ் பிரசிடென்சியின் பொதுப்பணித்துறையில் சேர்ந்தேன். நான் வரும்போதும் பெரிய சவாலான திட்டமா பெரியாறு திட்டத்தைத்தான் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. பிறகு மேஜர் ரைவ்ஸ், கேப்டன் ஸ்மித், மேஜர் பேய்ன் என்று ஒவ்வொரு ராயல் இன்ஜினீயர் கூடவும் சேர்ந்து இந்த மேல்மலைக்கு எத்தனை முறை ஆய்வுக்கு வந்திருக்கேன் தெரியுமா? ஆய்வுக்காகப் பல மாதம் இங்குதான் இருந்திருப்பேன். அடையாளத்துக்குச் சில மரங்களைக் குறித்து வச்சிட்டுப் போய், அடுத்த சீசனுக்கு வந்து பார்ப்பேன். இப்படி ஒவ்வொரு சீசன்லயும் குறிச்சு வச்ச மரங்களெல்லாம் இப்போ நூறடிக்கு மேல வளர்ந்துடுச்சு.”

“பதினேழு வருஷம்... உண்மையில் மிக நீண்ட காலம்தான்.”

“மேல்மலையில் ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காகவே திண்டுக்கல் பகுதியின் எக்ஸிகியூட்டிவ் இன்ஜினீயராகப் பணி மாற்றம் செய்தார்கள்.”

“ஆம், அதையறிவேன். ஒரு வகையில் இந்தப் பெரியாறு அணையுடன் உங்களை வேண்டுமென்றுதான் விடாமல் கட்டிப்போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் பென்னி.”

“என்ன காரணம்?”

“இல்லையென்றால் ஒவ்வொரு டிஸ்ட்ரிக்ட்டிலும் நீங்கள் வளர்க்கும் வம்புகளுக்கு விளக்கம் கேட்டே சீப் செக்ரட்டரியும் கலெக்டர்களும் ஓய்ந்துபோயிருப்பார்கள்.”

டெய்லர் சொல்லி முடிக்கும்போதே பென்னி விளையாட்டுக் கோபத்துடன் பார்த்தார்.

“உங்களைவிட ஜூனியராக இருப்பதன் வசதியே இதுதானே, உங்களைப் பற்றிய வம்புகளை, டிபார்ட்மென்டில் மற்றவர்கள் பேசும்போது கேட்டு ரசிக்கலாமில்லையா?”

“மற்றவர்களைப் பற்றிய வம்பென்றால் கேட்டு ரசிக்கலாமா, கேட்கவே ரசமற்று இருக்கிறதே?!”

பென்னி தவறாக எடுத்துக்கொண்டாரோ என்று டெய்லருக்குப் பதற்றம் தொற்றியது.

“ஓ சாரி சார்...” என்று அலுவலக மரியாதை பேச்சில் தொற்றியது.

“பரவாயில்லை. என்னைப் பற்றி என்னென்ன வம்புகளைச் சேகரித்து வச்சிருக்க?” பென்னி இயல்பாகப் பார்த்தார்.

“எல்லாமே வம்புதானே?” என்று சொல்லிவிட்டு, “ஓ ஜீசஸ் மன்னிச்சிடுங்க...” என்று பயந்ததுபோல் காட்டி, ஓட்டம் பிடித்தார் டெய்லர். “ஜார்ஜிக்குக் கொஞ்சம்தான் தெரியும், மீதிய நீ சொல்லிடு...” சிரித்துக்கொண்டே சொன்னார் பென்னி.

கொஞ்ச தூரம் ஓடிய டெய்லர், மூச்சிரைத்தபடி பட்டுப்போயிருந்த மரத்தூரொன்றில் உட்கார்ந்தார். ஐந்தாறு நிமிடங்களில் பென்னி, டெய்லரைச் சென்றடைந்தார். காட்டின் பேரமைதியிலும் சிறு சத்தங்களிலும் இருவரும் லயித்திருந்தனர்.

“ரயில்வே இன்ஜினீயர், சிவில் இன்ஜினீயராக இருப்பவர்களுக்கும் ராயல் இன்ஜினீயர்களுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறதே பென்னி?”

“யெஸ், பெரும்பாலும் ராயல் இன்ஜினீயர்களுக்குப் பேசவே பிடிக்காதே, கவனித்திருக்கிறாயா? காரணம் வேலைதான். ஒன்று போர்க்களத்தில் இருக்க வேண்டும், இல்லை, இப்படி அணை கட்டும் ஆற்றங்கரையில் இருக்க வேண்டும். ரயில்வேக்கும் மற்ற கட்டடம் கட்டுவதற்கும் செல்பவர்கள்தான் தப்பித்தவர்கள். நாம்தான் நடுக்காட்டில் அல்லாடுகிறோம். நான் அடிக்கடி சொல்வதுதான், அணை கட்டும் இன்ஜினீயர்களுக்குப் பேசவே பிடிக்காமல் போகும். தனிமைதான் நமக்குக் கிடைக்கும் பெரிய தண்டனை. வீட்டுக்குச் சென்றாலும் பேசுவதற்குச் சோம்பலாக இருக்கும். வாரக்கணக்காக, மாதக்கணக்காக இப்படிக் காட்டில் அலைந்துவிட்டு வீட்டுக்குப் போனால், காட்டு மரம் ஒன்று வீட்டிற்குச் சென்ற மாதிரி பொருந்தாமல் போய்விடுகிறேன். ஜார்ஜியும் குழந்தைகளும் பேசிக்கொண்டே இருப்பார்கள். நான் எல்லாம் கூர்ந்து கவனிப்பேன். பதில் சொல்ல வேண்டுமென்று தோன்றாது.”

டெய்லருக்குப் புதிய அனுபவம். காட்டில் ஆய்வுக்காகவோ, அணை கட்டவோ வருவது இதுதான் முதன்முறை. காட்டின் அழகை ரசிக்கும்முன் காடு பற்றிய அச்சத்திலிருந்து விடுபட வேண்டும். பிறகுதான், காட்டின் அழகு கண்முன் விரியும். டெய்லர் இன்னும் பயத்தில் இருந்து முழுமையாக வெளியேறவில்லை. ஆனால் காடென்பதைத் தான் இன்னும் புரிந்துகொள்ளவே ஆரம்பிக்கவில்லை என்பதை நன்றாக அறிந்துகொண்டவர் டெய்லர்.

நீரதிகாரம் - 56 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“ஆற்றிலிருந்து சுரங்கம் வரை தண்ணீரைக் கொண்டுசெல்லும் கால்வாய் வெட்டுவதற்கான வேலையைத் தொடங்க வேண்டும். அங்கும் புதர்களை அகற்றும் வேலை ஏறக்குறைய முடிந்திருக்கிறது. சுரங்கத்திலிருந்து வெளியேறப் போகும் தண்ணீரைக் கொண்டு செல்லும் தடுப்பணைகளையும் கால்வாய்களையும் சரிசெய்ய வேண்டும். அதுதான் நமக்குப் பெரும் தலைவலியாக இருக்கிறது. மலைக்குக் கீழே சமவெளியில் இன்னொரு டிவிஷனையும் அதற்கென்று ஒரு சூப்பிரண்டெண்டிங் இன்ஜினீயரையும் நியமித்தால்தான் வேலை நடக்கும். பதினைந்து தடுப்பணைகள், பதினேழு கால்வாய்களைச் சரி செய்ய வேண்டும். பேரணையில் புதிதாக ரெகுலேட்டர் வைத்து, அங்கிருந்து பன்னிரண்டு புதிய கால்வாய்களை வெட்டவேண்டும். ஒவ்வொரு கால்வாய் அமையவுள்ள நிலத்தை மதுரை கலெக்டரும் தாசில்தார்களும் ஆய்வு செய்து கையகப்படுத்த வேண்டும். யார் யார் என்னென்ன பிரச்சினை செய்யப்போகிறார்களோ?”

“பெரியாற்றில் வெட்டப்போகும் பன்னிரண்டு புதிய கால்வாய் அமையப்போகும் இடங்களை முடிவு செய்துவிட்டீர்களா பென்னி?”

“அதெல்லாம் பிளான் போடும்போதே முடிவு செய்தாச்சு. அங்கு போன பிறகு முன்பின்னாகக் கொஞ்சம் மாற்றங்கள் தேவைப்படலாம். முழு நேரமாகப் பெரியகுளத்தில் ஒரு டிவிஷன் இருந்தால்தான் வேலை தடையின்றி நடக்கும்.”

“சீசன் ரிப்போர்ட் எழுதிட்டீங்களா பென்னி?”

“கொடைக்கானல் போய்த்தான் எழுதணும். இங்கிருக்கும்போது மனசு வேலையைத் தவிர எதிலும் நிலைகொள்ளவில்லை.”

“அப்புறம் எப்படி மூன்று மாசம் இங்கிலாந்து போவீங்க?”

“அதுதான் யோசனையாக இருக்கிறது. ஆனால் போய்த்தானே ஆக வேண்டும்? அணை கட்டுவதற்குத் தேவையான இயந்திரங்கள் வாங்கி வந்தால் சீக்கிரம் வேலை நடக்குமே என்று மனத்தைத் தேற்றிக்கொண்டு, போய் வர வேண்டும். சீப் செக்ரட்டரிக்கு எழுதியுள்ளேன். எப்போ அனுமதி கிடைக்குதோ பார்ப்போம்.”

“சீக்கிரம் அனுமதி கொடுத்திட்டா அவர் தப்பிச்சார். இல்லை, நீங்க எழுதப்போகிற கடிதத்தைப் படிச்சிட்டு அவர் ஊட்டிக்குக் கிளம்பிடுவார் மண்டைச்சூட்டைக் குறைக்க” இருவரும் சிரித்தார்கள்.

ஓரவிழியில் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்த மானொன்று, ஆபத்தொன்றுமில்லை என்பதாகப் புல்லின் இதழ்களைப் பறித்து உண்டது.

- பாயும்