மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 58 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

இந்திய சுதேசி சமஸ்தானங்களில் மகாராஜாவின் பெயரில் ஆட்சி நடத்துகிறவர்கள் திவான்கள்தான்

சங்கரன் தம்பி, குட்டன் நாயனிடம் இருந்து பிரதமனை வாங்கிச் சாப்பிட்டார். “இன்னும் நாலு முந்திரியைப் போட்டிருக்கலாமேடே?” என்று நாவின் ருசி ஊறப் பேசினார்.

“தம்புரானுக்கு எதுக்கு இவ்ளோ ஆகோஷம்னு (கொண்டாட்டம்) அறியலாமா?”

“சமஸ்தானமே அறிஞ்சிருக்கு. முட்டாள் நாயனுக்குத் தனிச்சுப் பறையணுமோ?”

குட்டன் நாயன் அமைதியாக நின்றான்.

“சத்ரு கதை முடிஞ்சுதுடே. முடிஞ்சுது. அய்யங்கார் மூட்டையைக் கட்டிக்கிட்டுக் கெளம்பப் போறார்டே. இந்தச் சங்கரன் தம்பியைப் பகைச்சிக்கிட்டா என்னா நடக்கும்னு சமஸ்தானத்துக்கே பறஞ்சாச்சு.”

“என்ன சொல்றீங்க எசமான், திவானுக்கு என்னாச்சு?”

“திவானுக்கு என்னாச்சு?” சங்கரன் தம்பியும் முகத்தைச் சோகமாக்கிக் கொண்டு, குட்டன் நாயன் கேட்ட கேள்வியை அவரும் பிரதி செய்தார்.

“திவான் சரித்திரம் முடிஞ்சுதுடே. பதவி வேணாம்னு ராஜவிலக்கம் சொல்லிட்டு, இன்னிக்கு மதராஸுக்குப் புறப்படப் போறாராம். சங்கரன் தம்பியை ஒழிக்க நெனச்சு மகாராஜாகிட்ட போய் சகுனி காரியம் செஞ்சார். பத்மநாபர் சும்மா இருப்பாரா? ‘போதும்டே உம்ம சேவை, புறப் படுங்கோ’ன்னு அனுப்பறார்.” சங்கரன் தம்பி, உச்சிக் குடுமியை அவிழ்த்து முடிந்தார்.

சங்கரன் தம்பி குட்டன் நாயனிடம் கொக்கரித்தாலும், உண்மையில் அவருக்கும் ஏன் திவான் பதவியை விட்டு விலகுகிறார் என்று தெரியாது. திவான் மகாராஜாவைக்கூட சந்திக்காமல் மெட்ராஸ் புறப்பட ஆயத்தமாகிறார் என்ற சேதி வந்தவுடன், தன்னால் நடந்த நற்காரியம் என்று விளம்பரப்படுத்த முனைந்தார் சங்கரன் தம்பி.

ராமய்யங்கார் திருவிதாங்கூர் சமஸ் தானத்திற்குத் திவானாகப் பொறுப்பேற்று ஏழாண்டுகள் ஆகின்றன. மறைந்த மகாராஜா விசாகம் திருநாள், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் ஃபெல்லோவாக இருந்தவர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சர் அலெக்ஸாண்டர் அர்புத்நாட், திவானுக்கு நெருங்கிய நண்பர். திவானின் அறிவுக்கூர்மைமீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். திவான் மெட்ராஸ் பிரசிடென்சியின் சர்க்கார் உத்தியோகத்தில் இருந்தபோது, மெட்ராஸின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட கமிட்டிகளில் ராமய்யங்காரையும் நியமித்தவர். அர்புத்நாட் பரிந்துரைத்ததன் பேரில் விசாகம் திருநாள், முழு மனதாக, ராமய்யங்காரைச் சமஸ்தானத்தின் திவானாக நியமித்தார்.

இந்திய சுதேசி சமஸ்தானங்களில் மகாராஜாவின் பெயரில் ஆட்சி நடத்துகிறவர்கள் திவான்கள்தான். ராமய்யங்காரின் நண்பரும் பள்ளியில் உடன்படித்தவருமான மாதவ ராவ் காலம்தொட்டு, திருவிதாங்கூரின் நிலையும் இதுதான். ராமய்யங்கார் பொறுப்பேற்ற நேரத்தில் சமஸ்தானத்தின் பொருளாதார நிலைமை மிகவும் பின்னடைவில் இருந்தது. விசாகம் திருநாளும் அப்போதுதான் அரச பதவியேற்றிருந்தார். இருவருக்குமே சமஸ்தானத்தின் வளர்ச்சியில் ஒத்த கருத்திருந்ததால், பல வளர்ச்சித் திட்டங்களை எளிதாகச் செயல்படுத்த முடிந்தது.

மெட்ராஸ் நகரத்தின் முனிசிபல் கமிஷனராக எட்டாண்டுகள் பணியாற்றிய அனுபவம், லார்டு நேப்பியர் நியமித்திருந்த சட்ட வரைமுறைகள் உருவாக்கக் குழுவில் இருந்த அனுபவம், சப் கலெக்டர் அனுபவம் என நிர்வாகமும், நிர்வாகச் சீர்திருத்தங்களும் நன்கறிந்திருந்த ராமய்யங்கார், குறைந்த காலத்திலேயே சமஸ்தானத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். சமஸ்தானத்தின் நிலங்கள் முதன்முறையாகச் சரியாக அளக்கப்பட்டு, வகை பிரிக்கப்பட்டன. நஞ்சை, புஞ்சை, சாலாபோகம் நிலங்களுக்கேற்ப வரி நிர்ணயிக்கப்பட்டதில் சமஸ்தானத்திற்கும் வருவாய் கூடியது. ரெசிடென்ட் ஹானிங்டன் ஒவ்வொரு வருஷமும், வருடாந்தர ஆய்வறிக்கையை, மெட்ராஸ் சீப் செக்ரட்டரிக்கு அனுப்பும் நேரங்களில், ராமய்யங்காரைப் புகழ்வார். ‘நிலவருவாய் நீங்கள் வந்த பிறகுதான் அதிகரித்திருக்கிறது மிஸ்டர் திவான்’ என்பார்.

ராமய்யங்காருக்கு இருந்த ஒரே சிக்கல், பணி ஓய்வுக்குப் பிறகு அவர் திவான் பதவியில் அமர்த்தப்பட்டிருந்தாலும் அவரின் வேகத்திற்குப் பணியாற்றக்கூடிய உதவியாளர்களை உடனடியாகச் சமஸ்தானத்தில் கண்டறிய முடியவில்லை. மெட்ராஸில் தான் முன்பு பணியாற்றிய இடங்களில் தன்னிடம் வேலை பார்த்த திறமையானவர்களை நல்ல ஊதியத்தில் தனக்குக் கீழ் நேரடியாகப் பணி செய்ய நியமித்தார். ஒரு கட்டத்தில் திவான் அலுவலகமே மெட்ராஸ் பிரசிடென்சியின் பணியாளர்களால் நிரம்பியிருக்கும் தோற்றம் தந்தது. அப்போதுதான் சங்கரன் தம்பி உள்ளிட்ட சமஸ்தானத்தின் ஆள்களுக்கு சந்தேகமும் கோபமும் எழுந்தன. ‘திவான், மலையாள நம்பூதிரிகளையும் நாயர்களையும் விடுத்து, மெட்ராஸ் பிராமணர்களைச் சமஸ்தானத்தில் குடியேற்றிவிட்டார். மகாராஜா கொஞ்சம் அசந்தாலும் சமஸ்தானம் திவான் ஆள்கள் வசம் சென்றுவிடும்’ என்று திட்டமிடப்பட்ட பொய்ச்சேதி பரப்பப்பட்டது.

விசாகம் திருநாளுக்குத் திவான் செய்யும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் தெரியுமென்பதால் அவர் துஷ்டர்கள் பரப்பிய புறணிகளைக் காதில் வாங்கவில்லை. இன்னொரு பக்கம், பிரிட்டிஷ் பிரஜைகளைச் சமஸ்தானத்தில் நியமிப்பதற்கும் திவான் கடுமையான விதிகளை விதித்தார். சுதேசி இன்ஜினீயருக்கு மாதம் 80 ரூபாய் ஊதியமென்றால், அதே வேலையைச் செய்யும் பிரிட்டிஷ் இன்ஜினீயருக்கு 160 ரூபாய் ஊதியம் தர வேண்டும். பிரிட்டிஷ் கிளார்க் என்றாலும் இரண்டு மடங்கு ஊதியம்தான். சுதேசி ஆள்களே திறமையுடன் இருக்கும்போது ஏன் இரண்டு மடங்கு ஊதியம் கொடுத்து, பிரிட்டிஷ் பிரஜைகளை நியமிக்க வேண்டுமென்று சமஸ்தானத்தில் பிரிட்டிஷ் பிரஜைகள் நியமனங்களைக் குறைத்தார் ராமய்யங்கார். ரெசிடென்ட் உட்பட பிரிட்டிஷ் சர்க்காரின் வெறுப்பையும் சம்பாதித்திருந்தார். நிர்வாகச் சீர்திருத்தம் என்பது இரண்டு பக்கமும் கூர்மை கொண்ட ஆயுதம். பழைமைதட்டிய நடைமுறைகளை நீக்கிக்கொண்டே செல்லும் அதேவேளை, திருத்துபவரையும் ரத்தம் பார்க்கச் செய்யும். ராமய்யங்கார் தன் நற்செயல்களின் ஊடாக வெளியேற்றிய தீமைகள் திரண்டு, அவருக்கெதிரான சாட்சியங்களாய் உருமாறி நின்றன.

நீரதிகாரம் - 58 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

திவான் பதவியைத் துறக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்து இரண்டு மூன்று மாதங்களாகியிருந்தன. அவசர காரியங்கள் எண்ணத்தைத் தீவிரம் கொள்ளாமல் பாதுகாத்து வைத்திருந்தன. சூழ்நிலை எதிர்நின்று வழியனுப்பத் தயாராகிவிட்டது.

பத்மநாபசாமியின் அம்பலத்திற்குப் பெயரனுடன் கிளம்பிச் சென்ற ராமய்யங்காருக்கு அன்று சென்ட்ரிகள் ராணுவ மரியாதை கொடுக்காததில் மனம் துவண்டார். பத்மநாபரைப் பார்க்கக் கிளம்பியவருக்கு மனம் நிலைகொள்ளவில்லை. ரெசிடென்ட்டிடம் சந்திப்புக்கு நேரம் கேட்க வேண்டுமென்று நினைத்தவர், தாமதிக்காமல் நேராக ரெசிடென்டின் அரண்மனைக்குப் போகச் சொன்னார் சாரதியிடம்.

“தாத்தா, யானைச் சாமி எப்போ வரும்?” என்று கேட்ட பெயரனிடம், “இன்னொரு நாள் போகலாம் கண்ணா” என்று சமாதானம் சொல்லி, ரெசிடென்ட் பங்களாவுக்குச் சென்றார்.

பொழுது விடிவதற்குமுன் திவானின் சாரட் வந்து நின்றதைப் பார்த்த ரெசிடென்ட் சென்ட்ரிகள், வியப்புடன் அரண்மனையின் புறவாயில் கதவை விரியத் திறந்தனர். ‘நம்மைப்போல் பிரிட்டிஷாருக்குப் புலரியில் விழிக்கும் வழக்கம் இல்லையே? கோயிலுக்குப் போயிட்டுக்கூட வந்திருக்கலாம். உணர்ச்சியின் வேகம், தவறாக வழிநடத்துகிறதே?’ என்று குழம்பினார் ராமய்யங்கார்.

“அய்யங்கார் சந்தனம் துலங்க, பேரனோடு காலையில் தரிசனம் கொடுக்கிறீங்களே, வாரும் வாரும்.”

குருவாயியின் குரல் கேட்டு, வியந்து பின், “யுவர் எக்ஸ்லென்சிக்கு வணக்கம்” என்றார்.

“வாருங்கள் அய்யங்கார்” என்ற குருவாயி குளித்து முடித்து, வெண்மஞ்சள் நிறப்பட்டு முண்டு உடுத்தி, புத்துணர்ச்சியுடன் நின்றிருந்தாள்.

“இவ்வளவு சீக்கிரம் தயாராகி இருக்கிறீர்கள்?”

“இரவு உறங்குவதற்கு எவ்வளவு தாமதமானாலும், காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எனக்குக் கண் விழித்தாகணும். விழித்த ஐந்தாவது நிமிஷம் குளித்து முழுகி, தோட்டத்திற்கு வந்து உட்கார்ந்து காபி குடித்தால்தான் பொழுது ஆரம்பிக்கும் உணர்வு வரும். ரெசிடென்ட் இல்லாமல் நான் குடிக்கும் ஒரே காபி, அதிகாலைக் காபிதான்.” குருவாயியின் குரலில் தெரிந்த குளிர்ச்சி ராமய்யங்காருக்கு இதமாக இருந்தது.

“பேர் என்ன மோனே?”

“பத்மநாபன்...” மழலை மாறாத குரலில் பதில் சொன்னான்.

“ஓ... அனந்தன் பெயரைத்தான் உனக்கு வைத்திருக்கிறாரா தாத்தா?” குழந்தையை அருகில் அழைத்து, அணைத்தாள்.

எதிரில் இருந்த உதவியாளர்கள் தோட்டத்தில் தயாராக மூன்று நாற்காலிகளை ஒழுங்கு செய்து, காபி கொடுப்பதற்குத் தயார் செய்தனர்.

“வாங்க அய்யங்கார், காபி குடிக்கலாம்.”

“நான் புறப்படும்போதே சாப்பிட்டுத்தான் கிளம்பினேன் யுவர் எக்ஸ்லென்ஸி.”

“இரண்டாவது காபி வழக்கம்தானே, வாருங்கள்” குருவாயி பத்மநாபனின் கைப்பிடித்து அழைத்துச் சென்று நாற்காலியில் உட்கார வைத்து, அருகில் இருந்த நாற்காலியில் அவளும் அமர்ந்தாள்.

திவான் சௌஜன்யமின்றி அமர்ந்திருப்பதைப் பார்த்த குருவாயி, பேச்சை வளர்த்தாமல் காபியைக் குவளையில் ஊற்றிக் கொடுத்தாள். மறுப்பேதுமின்றி வாங்கிப் பருகினார் ராமய்யங்கார்.

குருவாயி உதவியாளனை அழைத்து, பத்மநாபனை அழைத்துச் சென்று உணவு கொடுக்கச் சொன்னாள். பத்மநாபன் யோசனையுடன் ராமய்யங்காரைப் பார்க்க, அவர் பார்வையால் அனுமதி கொடுத்தார்.

ரெசிடென்ட் தோட்டத் திற்குள் வரப் போவதற்கான முஸ்தீபுகள் நடந்தன. சென்ட்ரிகள் விறைப்பாக நின்றார்கள். ஆயுதங்களை உயர்த்தி வைக்கும்முன், நீண்ட விசில் சத்தம் எழுந்தது. ஹானிங்டன் தோட்டத்திற்குள் நுழையும்போது துப்பாக்கிக் குண்டுகள் முழங்கின. வீரர்கள் கார்டு ஆப் ஹானர் செய்தார்கள்.

நீலவண்ண நீண்ட அங்கி மட்டும் அணிந்திருந்தார் ஹானிங்டன். குளித்துத் தயாராகியிருந்தாலும் அலுவலக உடைக்கு மாறாமலிருந்தார்.

“மிஸ்டர் அய்யங்கார்...” உற்சாகமாக இருந்தது ஹானிங்டனின் குரல். மரியாதை நிமித்தம் எழுந்து நின்றிருந்த ராமய்யங்காரும் குருவாயியும் ஹானிங்டன் உட்காரும் வரை நின்றிருந்தனர். ‘இவ்வளவு இயல்பாக இருக்கிறாரே ரெசிடென்ட்?’ என்று ராமய்யங்காருக்கு வியப்பு எழுந்தது.

“காலையிலேயே சுவாமியை தரிசிக்கப் போவீர்களே?”

“போக முடியாத மனநிலை யுவர் எக்ஸ்லென்ஸி.”

“ஏன் உங்கள் குரல் சுரத்தில்லாமல் இருக்கிறது அய்யங்கார்?”

“நடப்பதைக் கேட்டறியவே தங்களிடம் வந்திருக்கிறேன் யுவர் எக்ஸலென்ஸி.”

“என்ன நடக்கிறது?”

“இன்னும் நம்மிருவருக்கும் இடையில் ஒரு திரைச்சீலை வேண்டுமா?”

ஹானிங்டன் அமைதியாக இருந்தார். சூழல் சரியில்லை என்று தெரிந்திருந்ததால்தான் குருவாயி, பத்மநாபனை அழைத்துச் செல்லச் சொல்லியிருந்தாள்.

“நான் எளிய குடும்பத்திலிருந்து வந்தவன்தான் யுவர் எக்ஸலென்ஸி. ஆனால் கடந்த முப்பது வருஷங்களில் நான் பார்க்காத உயரமில்லை. விவரமென்னவென்று எனக்குச் சொல்லப்படாமல் எனக்குத் தரப்பட்ட ராணுவ மரியாதை எதற்காக நிறுத்தப்பட்டது? உங்களுக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லையென்பதால்தான் நான் காலநேரம் பார்க்காமல் காலையிலேயே தங்களைச் சந்திக்க வந்துவிட்டேன். பெருத்த அவமானம். உங்களுக்குத் தெரியும், சமஸ்தானத்திற்காக நான் எத்தனை பாடுபட்டிருக்கிறேன் என்று.”

“பதற்றப்படாதீங்க அய்யங்கார்.”

“என் உடலும் மனமும் அதிர்வதைச் சொல்ல முடியாமல் தவிக்கிறேன் யுவர் எக்ஸலென்ஸி. வாசலில் நின்று தினம் எனக்குச் சல்யூட் அடிப்பவனிடம், நாளை முதல் அந்த மரியாதையைச் செய்யாதே என்ற உத்தரவு கொடுக்கப்பட்டால், அவன் என்ன நினைப்பான்? தினம் மரியாதை செய்பவன் செய்யாமல் நின்றுகொண்டிருக்கும்போது, அவனை நான் எப்படிக் கடக்க முடியும்? திவான் என்பது அவனைப் பொறுத்தவரை, அவன் எனக்குச் செய்யும் மரியாதைதான். அந்த மரியாதையை எனக்குத் தர வேண்டாமென்று சொல்லும்போது, அவனுக்கு முன்னால் நான் மதிப்பிழந்துபோகிறேன். யுவர் எக்ஸலென்ஸி என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். இப்படியொரு நிலையில் சமஸ்தானத்தை விட்டு நான் வெளியேறுவது, என் நிர்வாகத்தில் நேர்ந்த தோல்வியாகப் புரிந்துகொள்ளப்படும். ஏற்கெனவே, என்மீது சொந்த சாதிக்குச் சாதகம் செய்கிறவன் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. மெட்ராஸ் பிரசிடென்சிக்குப் பேரியாறு அணைத் திட்டம் தாமதப்படுவதற்கு நானே காரணமென்று, பிரசிடென்சியில் குற்றச்சாட்டு. பிரிட்டிஷ் பிரஜைகளைச் சமஸ்தானத்தில் பணியமர்த்தவில்லையென்பது உங்கள் குற்றச்சாட்டு. யோசித்துப் பார்த்தால் ஒரு தரப்புக்கும் நான் நியாயம் செய்யவில்லையென்பது போன்ற தோற்றம். என் முப்பது வருஷ சர்க்கார் உத்தியோகத்தில் எனக்கிந்த மன உளைச்சல் நேர்ந்ததில்லை. லார்டு நேப்பியர், கவர்னர் பக்கிங்காம் என எத்தனையோ பிரிட்டிஷ் கவர்னர்கள் என்மீது வைத்திருந்த நன்மதிப்புக்கு நான் நம்பக மானவனாக இருந்திருக்கிறேன்...”

“அய்யங்கார், கொஞ்சம் அமைதியாக இருங்க. உணர்ச்சிவசப்படுவது உங்கள் வயதுக்கு நல்லதில்லை” குருவாயி வருத்தத்துடன் ராமய்யங்காரைச் சமாதானப்படுத்தினாள்.

“ஒரே ஒரு நேர்முகக் கடிதம்? யுவர் எக்ஸலென்ஸி எனக்கு ஒரே ஒரு நேர்முகக் கடிதம் அனுப்பியிருந்தால் போதுமே? இரண்டு சர்க்காருக்குமிடையில் நாமிருவரும்தானே பாலம்? பாலத்தின் ஒரு கரையை வெட்டி விட்டீர்களே?”

ஹானிங்டன் சங்கடத்தில் உட்கார்ந்திருந்தார்.

“உங்களோடு இணைந்து நான் பணி செய்த காலம் மறக்க முடியாதது அய்யங்கார்.”

ராமய்யங்காருக்கு முகத்திலறைந்தன ஹானிங்டனின் சொற்கள். அடுத்து என்ன என்று அவருக்குப் புரிந்தது.

சட்டென்று எழுந்து நின்று இருவரையும் பார்த்து வணங்கிவிட்டுக் கிளம்பினார். ராமய்யங்கார் கிளம்புவதைப் பார்த்த உதவியாளன், ஓடிச் சென்று குழந்தை பத்மநாபனைத் தூக்கி வந்து சாரட்டில் உட்கார வைத்தான்.

“வேலை முடிஞ்சுதா தாத்தா?” பத்மநாபனை நிமிர்ந்து பார்த்தவர், “எல்லாம் முடிந்தது கண்ணா” என்றார். தலையில் இருந்த தலைப்பாகையைக் கழற்றி மடியில் வைத்துக்கொண்டவர், குதிரைகள் பாய்ந்தோடுவதற்கு முன்னோடும் மண்பாதையைப் பார்த்தார். உயர்ந்தெழுந்த புழுதி மண்டலம் பாதையை மறைத்தது.

“உங்களுக்குத் திவானின் நற்குணம் தெரியும். பிறகேன் நீங்கள் இதில் தலையிடவில்லை ஹனி? குணத்திலும் பதவியிலும் உயர்ந்த மனிதர் மனம் வருந்திச் செல்வதைப் பார்க்க துக்கமாக இருக்கிறது” குருவாயியின் குரலில் கவலை கலந்திருந்தது.

“கொஞ்சம் தவறியிருந்தால் இதே நிலை எனக்கு வந்திருக்கும் குருவாயி.”

“என்ன?” குருவாயி அதிர்ந்தாள்.

“ஆமாம், ஒரு மாதம் முன்பு நான் மெட்ராஸ் சீப் செக்ரட்டரிக்கு எழுதிய ஒரு கடிதம்தான் என்னைக் காப்பாற்றியது. திவானுக்குத் தீங்கு உண்டாக்கியது.”

“விளக்கமாச் சொல்லுங்க ஹனி” குருவாயி பதறினாள்.

“பெரியாறு அணை வேலை தொடங்கியவுடன் பெரிய பிரச்சினை எழுந்தது. வேலைக்குச் செல்லும் கூலிகள், குமுளி வழியாக மலைக்கு வந்து, நேராக அணை கட்டுமிடத்திற்குச் செல்லாமல், அருகில் இருக்கும் ஏலத்தோட்டங்களுக்குப் போறாங்களாம். அங்கே போய் ஏலக்காய் மூடைகளைத் திருடி பக்கத்தில் ஏதாவது ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு, வேலை முடிந்து திரும்பும்போது மூட்டைகளைத் தூக்கிட்டு வந்து வித்துடுறாங்களாம். திருவிதாங்கூர் சமஸ்தானத்துல ஏகபோகமா இருக்கிற உப்பு, அபின், கஞ்சா, மூக்குப்பொடி இதெல்லாம் அவங்க மூலமா மெட்ராஸ் பிரசிடென்சியில் அதிக விலைக்கு விற்பதற்காக, கடத்தல்காரங்க கூலிகளைப் பயன்படுத்துகிறார்கள். அணை வேலை ஆரம்பித்து ஏழெட்டு மாதங்களுக்குள் ஏல விற்பனையில் ஐந்து சதவிகிதம் குறைந்துவிட்டதாக அந்தத் துறையின் சூப்பிரண்டெண்டிங் மேஜிஸ்திரேட் மகாராஜாவிடம் புகார் கொடுத்துவிட்டார். ஏற்கெனவே அணை கட்டுவதற்காக இடம் கொடுத்ததற்கு ஆங்காங்கே சின்னச் சின்ன எதிர்ப்பும் புகார்களும் இருக்கின்ற நேரத்தில் மகாராஜாவுக்குச் சென்ற இந்தச் சேதி, மிகப்பெரிய அதிருப்தியாகிவிட்டது. மகாராஜாவின் வருத்தத்தைத் தெரிவித்து திவான் எனக்கு ஒரு நேர்முகக் கடிதம் அனுப்பியிருந்தார். கடிதம் அனுப்பிய பிறகுதான் கவர்னர் வருகை, வெடிமருந்துப் பிரச்சினை என ஏகப்பட்ட நெருக்கடிகள். திவான் ஏலத்தோட்ட மேஜிஸ்திரேட்டின் புகாரை உடனடியாகக் கவனத்தில் கொள்ளவில்லை. நாளுக்கு நாள் திருட்டு அதிகமானதும் அவர் பொறுமை இழந்து திவான் பற்றி மகாராஜாவிடம் மீண்டும் புகார் சொல்லிவிட்டார்.”

“அவங்க பயந்த மாதிரியே நடந்துவிட்டதே.”

“யெஸ் குருவாயி. சமஸ்தானத்தில் பிரச்சினைகள் ஒன்றுடன் ஒன்று முடிச்சிட்டுக்கொண்டு, பூதாகரமாய் மாறி வருகின்றன.”

குருவாயியின் முகம் துயரத்திலும் சிந்தனையிலும் ஆழ்ந்தது. ராமய்யங்காரின் வருத்தமும் குருவாயிக்குக் கவலை தந்தது.

“நீங்கள் தலையிடவில்லையா இப்பிரச்சினையில்?”

“நான் முதலிலேயே சீப் செக்ரட்டரிக்குக் கடிதம் எழுதினேன். மெட்ராஸ் கூலிகள் சமஸ்தானத்தின் எல்லைக்குள் வராமல் செல்ல வேண்டும். இரண்டு சர்க்காரின் எல்லைப் பகுதி என்பதால், கவனமாகக் கையாளச் சொல்லி, பென்னிக்கும் தகவல் அனுப்பியிருந்தேன். பென்னி என்ன செய்ய முடியும்? அணையில் வேலை செய்ய வந்த பிறகு அங்கிருக்கும் நேரத்தில் நடப்பதற்குத்தான் அவரால் பொறுப்பேற்க முடியும். கூலிகள் வருகிற வழி முழுக்கக் கண்காணித்துச் சரிசெய்ய அவரால் முடியாதே? இதில் கூலிகளை அழைத்துச் செல்லும் கங்காணிகளுக்குப் பொறுப்பிருக்கும். அவர்கள் கூலிகளிடம் சில அணாக்கள் கொடுத்து, ஆளுக்குக் கொஞ்சம் ஏலத்தையோ, கஞ்சாவையோ மூட்டை கட்டித் தூக்கி வரவைத்து, கீழே கம்பம், தேவாரத்துக்கு வந்து நல்ல விலைக்கு விற்று விடுவார்கள். இதுதான் கங்காணிகளின் வேலை. அடர்ந்த காட்டுக்குள் எத்தனை பாதுகாப்பு செய்தாலும் கூலிகள் ஏதாவது ஒரு வழியில் வந்துவிடுகிறார்கள். ஏலத்துடன், உப்பு, அபின், கஞ்சா கடத்தலும் அதிகமாகி விட்டதால்தான் பிரச்சினையே.”

“திவான் இதில் என்ன தவறிழைத்தார்?”

“பெரியாறு அணை கட்டுமிடத்தில் பாதுகாப்புக்கு ஒரு போலீஸ் கச்சேரி வைக்கச் சொல்லலாம் என்பது என் யோசனை. திவானுக்கு இந்தப் பிரச்சினை இவ்வளவு பெரிதாக வளருமென்று நினைக்கவில்லை. அவர், ‘கூலிகள் எவ்வளவு எடுத்துச் சென்றுவிடுவார்கள்? மலையில் கடினமான வேலை. அதிக குளிர். அதனால் கஞ்சாவும் அபினும் அவர்களுக்கு அத்தியாவசியமாக இருந்திருக்கும். சாப்பிடுவதற்காக கொஞ்சம் கொண்டு சென்றிருப்பார்கள். நாம் இதனை ஒழுங்கு செய்துவிடலாம். கூலிகள் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குப் போகும் வழியில் இருக்கும் சமஸ்தானத்தின் ஏகபோக விற்பனைக்குட்பட்ட பொருள்களைத் தேவையான அளவுக்குச் சாப்பிட்டுக்கொள்ளலாம், கையிலோ, துணிகளில் மூட்டை கட்டியோ எடுத்துச் செல்லக்கூடாது’ போன்ற சாதாரண கட்டுப்பாடுகளை விதித்தார். சமஸ்தானத்தின் ஆப்காரிதான் பெரிய வருமானம். திவானுக்கும் நன்றாகத் தெரியும். இருந்தும், கூலிகள் மேலுள்ள நம்பிக்கையில் திவான் தவறான முடிவெடுத்துவிட்டார். கூலிகள் கூலிகளாக இருக்கும்வரை பிரச்சினையில்லை. அவர்கள் சமூக விரோதிகளால் வழிநடத்தப்பட்டால்? இன்னும் எச்சரிக்கை தேவை என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.”

“நீங்கள் திவானுக்குச் சொல்லியிருக்கலாமே ஹனி? சமஸ்தானத்தின் நிலவருவாயைப் பெருக்கியவர், காலியாக இருந்த கஜானாவில் ஐஸ்வரியத்தைத் தங்க வைத்தவர், அல்ப காரணத்துக்காகப் பதவி விலக நிர்ப்பந்திக்கப்படலாமா?”

“அய்யங்கார் இந்நேரம் முடிவெடுத்திருப்பார். பதவி விலகல் கடிதத்தை மகாராஜாவுக்கு அனுப்பிவிட்டு, இன்றோ நாளையோ திவான் மாளிகையை விட்டுக் கிளம்புவார்.”

“சமஸ்தானத்தில் பணி செய்தவர்கள் யார் ஓய்வு பெற்றாலும், விலகினாலும் ஒரு விருந்தும் விடைபெறல் கூட்டமும் நடப்பதுண்டு. மறக்காமல் நீங்கள் உடனடியாக திவானுக்கு விருந்து ஏற்பாடு செய்யுங்கள்” என்ற குருவாயி, மீண்டும், “இன்னும் திவான் பதவி விலகவே இல்லை, நம் சிந்தனைகள் வழியனுப்புவதுவரை சென்றுவிட்டன” என்றாள். அவளுக்கு மனம் கசந்தது.

சர்க்கார் என்ற காட்டு மிருகம் தின்று செரிக்கும் உயிர்களுக்குக் கணக்குண்டா என்ன?

குதிரையின் வேகத்திற்கு மிரண்ட பத்மநாபன், ராமய்யங்காரின் கழுத்தைக் கட்டிக்கொண்டான். ராமய்யங்காரின் மனநிலையுணர்ந்த குதிரையிடமும் மிரட்சி தெரிந்தது.‘மகாராஜாவிடம் சொல்லிக்கொண்டு செல்வதா? பேஷ்கார் திவானிடம் பொறுப்புகளை ஒப்படைத்துச் செல்வதா? பேஷ்கார் திவான்தான் அடுத்து திவானாக வாய்ப்பிருக்கும். சமஸ்தானத்துடன் இருந்த ஏழாண்டு உறவை, சொல்லிக்கொள்ளாமல் சென்று கறுப்பு அத்தியாயமாக்கிக்கொள்ள வேண்டாம். நாமென்ன தவறிழைத்திருக்கிறோம், சொல்லாமல் கொள்ளாமல் செல்வதற்கு? சமஸ்தானத்தின் வளர்ச்சியைத் தவிர, தன்னுடைய மனத்தில் வேறெந்தச் சிந்தனையும் இல்லை. தான் மெட்ராஸ் பிரசிடென்சியைச் சேர்ந்தவன், அதனால்தான் பேரியாறு அணைத் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்க வைத்தேன் என வரும் காலத்தில் குற்றச்சாட்டு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே மறைந்த மகாராஜா காலம் முதல், திட்டத்திற்குப் பேரளவு ஆதரவு தெரிவிக்காமல் இருந்தேன். பேரியாறு பாய்ந்தோடும் தாலுகா தாசில்தார்களிடமும் கோட்டயம் பேஷ்காரிடமும் கருத்துக் கேட்டுப் பெற்ற ஏற்பாடும் என்னுடையதுதான். அவர்கள் யாருமே திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லையென்றவுடன், நான் மகாராஜாவிடம் மறுப்பையே எடுத்துச் சொன்னேன். இல்லை, சமஸ்தானம் அதிக அளவு பணப்பலன் பெரும்படி, வருடாந்தரம் அதிக குத்தகைத் தொகை என்பதோடு தங்கசேரியையும் அஞ்சாங்கோவையும் கேட்கும் யோசனையையும் முன்வைத்தேன். அஞ்சாங்கோ ஏற்கெனவே பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்டிருந்தது. தங்கசேரியை வலியுறுத்திக் கேட்கச் சொன்னது நான்தான். அங்கு பேரளவு மிளகு, கஞ்சா, உப்புக் கடத்தலைக் குறைத்தாலே ஆப்காரி வருமானம் கூடுமென்பது என் கணக்கு. இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. வேற்றுக் குடும்பமோ, வேற்றுச் சாதியோ, வேற்றுச் சமஸ்தானமோ, தமக்கு நடந்த நன்மைகளைக் கணக்கில் கொள்ளாமல், பிறத்தியார் என்று சொல்லி வெளித்தள்ளிவிடும் அரசியலை எளிதாகக் கையில் எடுத்துவிடும். தனக்கு நேர்ந்திருப்பதும் அதுதான்.’ திவானின் மனம் பெருங்காற்றுக் காலத்தில் தலைவிரித்தாடும் மரமொன்றின் உச்சிக்கிளையின் பரிதவிப்பில் இருந்தது.

“மகாராஜாவின் கொட்டாரத்துக்குப் போப்பா…” சுரத்தில்லாத குரலில் உத்தரவிட்டார். சாரதிக்கு இரவில் இருந்து நடப்பவை தெரிந்திருந்ததால் அவர் மனமும் சோர்ந்திருந்தது.

மகாராஜாவின் கொட்டாரத்திற்குச் செல்லும் பாதை எப்போதுமே திவானின் மனத்திற்கு உவப்பானது. ரம்மியம் சேர்ப்பது. மஞ்சள் வண்ணப்பூக்களும் பசுந்தளிர் இலைகள் ஒளிரும் தோட்டங்களும் கண்கள் நிறைக்க மனம் கொள்ளாமல் ரசித்துச் செல்வார். காட்சிகள் பொருளற்றுக் கடக்க, மனம் வெறுமை சூழ்ந்த சூன்யத்தில் நிறைந்தது.

நீரதிகாரம் - 58 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

ஆனந்த விலாசத்தின் முன் திவானின் சாரட் வந்து நிற்கவும், சங்கரன் தம்பி வெளிவாயிலுக்கு வரவும் அந்த விநாடியின் காற்று, மூச்சுத் திணறியது. சங்கரன் தம்பி, இறுக்கிக் கட்டப்பட்டிருந்த தன் குடுமியை அவிழ்த்து, மீண்டும் இறுக்கிக் கட்டினார். அவர் முகத்தின் மந்தகாசத்தைப் பார்க்க விரும்பாத திவான், வண்டியில் இருந்து இறங்குவதற்கு எடுத்து வைத்த வலது காலை உள்ளிழுத்துக்கொண்டார். திவானின் சாரட் நின்றதைப் பார்த்த நாயர் படை வீரனொருவன் ஓடி வந்து ராமய்யங்காரை வணங்கினான்.

“மகாராஜா வல்லிய கொட்டாரத்தில் இருக்கிறார் தம்புரான்...” என்றவுடன் அய்யங்காருக்கு நிம்மதி வந்தது.

“வல்லிய கொட்டாரம் போகலாம்” என்று உத்தரவிட்ட ராமய்யங்கார், அரைத் தூக்கத்தில் இருந்த பெயரனை இழுத்துத் தன் நெஞ்சோடு நன்றாக அணைத்துக்கொண்டார். சங்கரன் தம்பியின் முன்னால் இறங்கவிடாத பத்மநாப சுவாமிக்கு நன்றி சொன்னார். ‘அதிகாரம் செய்து உயரத்திலிருந்த இடத்திற்கு, அதிகாரம் தொலைந்தபிறகு வரக்கூடாது’ என்றெண்ணியது அவர் மனம். சாரட், மகாராஜாவின் கொட்டாரம் நோக்கித் திரும்பியது. வண்டி புறவாயில் கடந்து, வெளியேறும் கணத்தில் பின்னால் குதிரையில் வந்த வீரனொருவன், வணங்கி, வண்டியை நிறுத்த வேண்டினான்.

“தம்புராட்டி லெட்சுமி கொச்சம்மை தங்களை உள்ளே அழைக்கிறார்...” என்றான்.

தம்புராட்டி அழைப்பதன் காரணமென்ன? என்ன காரணமோ, என்ன அவசரமோ, எதுவாக இருந்தாலும் தான் செல்ல வேண்டிய அவசியமில்லையென்று நினைத்த ராமய்யங்கார், வண்டியைச் செலுத்தச் சொன்னார்.

“தம்புராட்டி அவசியம் தங்களை வரச்சொன்னார். காரியக்காரன் பற்றிய சேதி என்று சொல்லச் சொன்னார்.”

வாழ்நாளில் யாரிடமும் கடினமாக நடந்துகொண்டு பழக்கப்படாத தன்னையும் பகவான் இப்படி மாற்றியிருக்கிறாரே என்று வருந்தி, “வருகிறேன், சென்று சொல்” என்று சொன்னார். குதிரை மேலிருந்த வீரன் முன்செல்ல, ராமய்யங்காரின் சாரட் பின்னால் தொடர்ந்தது.

திரைச்சீலை விலக்கி, சாளரத்தின் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த லெட்சுமி கொச்சம்மை, ராமய்யங்கார் வருவதற்கு முன் கீழே சென்றுவிட இறங்கினாள்.

இன்னொரு வாயில் வழியாக பாதிரியார் ராபர்ட் வேகமாக வெளியே சென்றார்.