
விசாகம் திருநாளின் மெலிந்த, நோயுற்ற தோற்றத்திற்கு நேரெதிரானது லெட்சுமியின் தோற்றம். நிமிர்ந்து நின்ற ஆகிருதையில் லெட்சுமி சராசரியைவிட உயரமாகத் தெரிந்தாள்.
மகாராஜாவின் திடீர் மறைவு சமஸ்தானத்தில் ஓர் அசாதாரண சூழலை உண்டாக்கியிருந்தது. சமஸ்தானத்தின் சமநிலைக் குலைவையும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளையும் சரியாகக் கையாள வேண்டிய பொறுப்பு தன்னிடம் வந்தவுடன் ஹானிங்டன் எச்சரிக்கையுடன் இருந்தார்.
விசாகம் திருநாளின் தம்புராட்டி லெட்சுமி கொச்சம்மையின் கடிதம் கையில் இருந்தது. சாளரத்தின் வழியே வானத்தைப் பார்த்தார். ஒன்றிரண்டு நாழிகை கடந்தது. திவான் ராமய்யங்கார் இன்றிரவு தூங்க மாட்டார். மெட்ராஸ் கவர்னரும் கல்கத்தாவின் கவர்னர் ஜெனரலும் தன் நடவடிக்கையைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பார்கள்.
இந்தியர்களுக்குக் குறைந்த ஆயுள்காலம். அதுவும் மகாராஜாக்களுக்கு இன்னும் குறைந்த ஆயுள்காலம். திருவிதாங்கூர் சமஸ்தானத்து மகாராஜாக்கள் ஐம்பது வயதைத் தொடுவது அபூர்வம். ஆள்வதற்குத் தேசமும் அடிபணிவதற்கு மக்களும் வளத்திற்குச் செல்வமும் இருக்கும்வேளையில் இவர்கள் உலக வாழ்விலிருந்து விடைபெற்றுச் சென்று விடுகிறார்கள். விசாகம் திருநாள் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருக்கலாம்.
பெருமூச்சு விட்டார் ஹானிங்டன். கீழ்வானத்தின் கருமை, விடிவதற்கு இன்னும் நேரம் இருப்பதைச் சொன்னது.
சிந்தனையை உதறியெழுந்த ஹானிங்டன், அருகில் இருந்த மேசையைத் திறந்தார். உறைக்குள் இருந்த குறுங்கத்தியை எடுத்தவர், உறையுடன் பின்பக்க இடுப்பில் செருகிக்கொண்டார். மேசைமேல் இருந்த தொப்பியை எடுத்துத் தலையில் வைத்து வேக நடையில் படியிறங்கினார். காவலுக்கு நின்றிருந்த வீரர்களைத் தவிர, எல்லோரும் உறக்கத்திலிருந்தனர் பங்களாவில்.
ஹானிங்டன் வருவதைப் பார்த்த காவலன் விரைந்தோடி, அவரின் குதிரையைக் கொண்டுவந்து வாயிலில் நிறுத்தினான்.
“டாமினேஷன்” என்றழைத்து, குதிரையின் பிடரியில் தடவிக்கொடுத்த ஹானிங்டன், குதிரைமேல் ஏறிய வேகத்தைப் பார்த்த காவலனுக்கு வியப்பில் கண்கள் விரிந்தன. அவன் இமைப்பதற்குள் ஹானிங்டனின் குதிரை, பங்களாவின் வாயிலைக் கடந்திருந்தது.
நள்ளிரவுக் காற்றின் குளிர்ச்சி தேகத்தைச் சில்லிட வைத்தது. ஊசிபோல் குத்தும் காற்றைச் சமாளிக்க உடம்பு ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. வாய் திறந்து காற்றை உள்வாங்கி, நாசி சுவாசத்தில் வெளியேற்றினார். குதிரை உற்சாகமாக இருப்பது அதன் வேகத்தில் தெரிந்தது. குளிரில் பெரும் சவாலை எதிர்கொள்வதுபோல் ஓடியது.
ஆனந்த விலாசத்தின் வாசலில் வந்து நின்றது டாமினேஷன். காவலுக்கு நின்ற நாயர் வீரர்கள், ஹானிங்டனின் குதிரையைப் பார்த்தவுடன் வணங்கினர். அகன்ற வாயிலின் உள்ளே நுழைந்த டாமினேஷன், நேராக அரண்மனையின் முன்வாசலில் நின்றது.
உதவத் தயாராய் நின்ற வீரனைப் பொருட்படுத்தாமல், குதித்து இறங்கினார் ஹானிங்டன். குதிரையின் சேணத்தைப் பிடித்து, லாயத்திற்கு அழைத்துச் சென்றான் வீரன்.
விசாகம் திருநாள் இல்லாத ஆனந்த விலாசத்தின் பொலிவுறும் அழகு, இரண்டு வாரங்களில் காணாமல் போயிருக்கிறதே? கட்டடங்களின் அழகு மனிதர்களால் ஆனதுதானோ?
கடிதம் கிடைத்த அந்த அகாலத்தி லேயே சந்திக்க வருவோமென்று தம்புராட்டி எதிர்பார்த்திருப்பாரா? குருவாயி கோயில் பெரிய நம்பியிடம் பேசி, பத்மநாபசாமியின் தலைமைச் சேவகனே இறந்ததால் ராஜ்ஜிய துக்கம் அறிவிக்கச் சொன்னாள். இரண்டு வார காலம் முடிகிறது. ராஜ்ஜிய காரியங்களுக்கான சந்திப்புகளுக்கு நேரம் காலம் பொருட்டில்லைதான். நள்ளிரவில் மகாராஜாவின் தம்புராட்டியைச் சந்திக்க வந்திருப்பது சரிதானா? கேள்விகள், கேள்விகள், கேள்விகள்... சிந்தனை என்பதே கேள்விகள் மட்டுமா? தன்னையே கண்டித்தார் ஹானிங்டன்.
“திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பேராளருக்கு வணக்கம்.”
கம்பீரமான குரலைக் கேட்டுத் திரும்பினார். லெட்சுமி கொச்சம்மை இரு கை குவித்தபடி நின்றிருந்தாள்.
“ஹிஸ் எக்ஸலென்ஸி மகாராஜா விசாகம் திருநாளின் அன்பைப் பெற்ற தம்புராட்டியை வணங்குகிறேன்.”
ஹானிங்டனை அமரச் சொன்னாள் லெட்சுமி.
விசாகம் திருநாளின் மெலிந்த, நோயுற்ற தோற்றத்திற்கு நேரெதிரானது லெட்சுமியின் தோற்றம். நிமிர்ந்து நின்ற ஆகிருதையில் லெட்சுமி சராசரியைவிட உயரமாகத் தெரிந்தாள். படர்ந்த முகம். தீட்சண்யமான கண்கள். அலங்காரமற்ற கழுத்து, அதன் இயல்பான பளபளப்பில் இருந்தது. அடர்ந்த சுருள் முடி. வணங்கச் சொல்லும் கம்பீரம். வெண்ணிறத்தில் சந்தனநிறச் சரிகையிலான வெண்பட்டை முண்டுபோல் உயர்த்திக் கட்டி, பின்கொசுவத்தை இடதுதோளில் போட்டிருந்தார். சமஸ்தானத்திலேயே புடவை அணிவதை வழக்கமாகக் கொண்ட முதல் தம்புராட்டி லெட்சுமி கொச்சம்மைதான்.
“என் ஆழ்ந்த வருத்தங்கள். உங்கள் இருவரையும் நான் நீண்ட நாளாக அறிந்தவன். ஹிஸ் எக்ஸலென்ஸி விசாகம் திருநாள் உங்கள்மேல் அதிகமான அன்பு கொண்டிருந்தார்.”
ஹானிங்டனின் வார்த்தையை அமைதியாக ஏற்றுக்கொண்டாள் தம்புராட்டி.
“சிறு வயது முதலே அரசரின் தேகம் பலவீனமானதுதான். அரசர் பிறந்த இரண்டாவது மாதம் அவர் அம்மாச்சி இறந்துவிட்டார். சின்னச் சின்ன உடல் உபாதைகளோடு, எப்போதும் சுவாசப் பிரச்சினையும் உண்டு அரசருக்கு. உடல் பலவீனம் கூடக் கூட, அவருடைய எண்ணத்தில் உறுதி கூடியது.”
“தம்புராட்டி சொல்வது உண்மை. நான் பார்த்திருக்கிறேன். இந்த சமஸ்தானத்தின் மகாராஜாவாக அவர் பதவியேற்கும்போது மக்கள் அவர்மேல் வைத்திருந்த அதிக எதிர்பார்ப்புகளை அறிவேன்.”
“மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றவே அரசர் நிர்வாகத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். சமஸ்தானத்தின் காவல் வீரனொருவனைவிட, அரசர் ஒவ்வொரு நாளும் அதிக நேரம் இந்தச் சமஸ்தானத்தின் வீதியெங்கும் சுற்றியிருக்கிறார்.”
இருவருமே அமைதியானார்கள்.
“மகாராஜா விசாகம் திருநாளின் இழப்பு குறித்து ஹர் ராயல் ஹைனெஸ், இங்கிலாந்துப் பேரரசிக்கும் குறிப்பு அனுப்பியுள்ளேன்.”
“மகிழ்ச்சி. அரசர் ஒரு ஞானிபோல்தான் வாழ்ந்தார். ராஜ்ஜிய பரிபாலனத்தில் இருந்தாலும் ராஜ்ஜிய முனி என்று அதிகாரத்தில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டவர். வனத்தில் இருந்திருந்தால் வன முனியாக இருந்திருப்பேன் என்பார் அடிக்கடி. தன் பிள்ளைகள்மேல் அவர் கொண்டிருந்த அன்பு ஒப்பிட முடியாதது.”
“அறிவேன் தம்புராட்டி. இரண்டாண்டுகளுக்கு முன்பு வெகுவிமரிசையாக மகள்கள் நால்வருக்கும் தாலிகட்டுக் கல்யாணம் நடத்தினாரே, நான் அப்போது மாகேயில் இருந்தேன்.”
“இறப்பதற்கு முதல் நாள் எங்களைப் பார்க்க வேண்டும் என்று வரவழைத்தார். அரண்மனையில் எல்லார் முன்பும் தம்புராட்டிகள் அரசரைச் சந்திக்கும் வழக்கமில்லை. தரவாட்டுக்கு அரசர் வரும்போதுதான் பார்ப்போம். அன்று வழக்கத்தைமீறி எங்களை அவரருகில் வரச் சொன்னார். ஒவ்வொருவரையும் தொட்டுப் பார்த்தார். இறுதியாக விடைபெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தார். அடுத்த நாள் அவர் பத்மநாபருக்குத் தன்னை ஒப்படைக்கத் தயார் செய்துகொண்டார்.”
லெட்சுமி கொச்சம்மையின் குரல் தழுதழுத்தது. முகம் துயரத்தில் ஆழ்ந்தது. தன்னை வரவேற்றபோதிருந்த தெளிவு குலைந்ததை உணர்ந்தார் ஹானிங்டன்.
சம்பிரதாயத்திற்காக விசாரிக்க நினைத்தது. என்றாலும், நினைவுபடுத்த வேண்டியிராத வேளையில் நினைவுபடுத்தி, துயரத்தை அதிகப்படுத்திவிட்டோம் என்று வருந்தினார்.
தரையைப் பார்த்துக் குனிந்திருந்த லெட்சுமியின் கண்கள் நிறைந்திருந்தன. தன் துயரத்தை வேறொரு ஆடவரிடம், அதுவும் அந்நிய தேசத்து ஆடவரிடம் வெளிப்படுத்த விரும்பவில்லை லெட்சுமி. கண்கள் நிறைய நின்றிருந்த கண்ணீரை, விழிகளையுருட்டி, மீண்டும் உள்ளுக்குள் நகர்த்தினாள். இமைகளின் ஈரப்பிசுபிசுப்பும் வெளித் தெரிந்துவிடாமலிருக்க, உள்ளே திரும்பி வெள்ளாட்டியை அழைத்தாள்.
இருவர் முன்பும் தேநீர்க்கோப்பைகள் வைக்கப்பட்டன. வண்ண மலர்கள் வரையப்பட்ட சீனத் தேநீர்க் கோப்பைகள்.
தேநீர்க் கோப்பையை ஹானிங்டனுக்கு எடுத்துக் கொடுக்க முனைந்தாள்.
“யுவர் எக்ஸலென்ஸி...”
லெட்சுமி அதிர்ச்சியிலும் வியப்பிலும் நிமிர்ந்தாள்.
“இந்த அரண்மனை இந்த அழைப்பைக் கேட்டிருக்காது. இதென்ன புது மரியாதை? வழக்கம்போலவே விளிக்கலாம் நீங்கள்.”
“இந்தியாவில் பிறந்து வளர்ந்தவன் நான். பதினைந்தாண்டுகளாக இந்த மலைநாட்டில் பணிசெய்துவிட்டேன். ஆனாலும் உங்களின் வழக்கங்கள் புரிபடுவதில்லை. சமஸ்தானத்தின் சுவர்கள் மட்டுமே அறிந்த ரகசியங்கள் ஏராளம் இருக்கின்றன.”
லெட்சுமி பதில் சொல்லாமல் தேநீர்க் கோப்பையை எடுத்து ஹானிங்டனிடம் கொடுத்தாள்.
“அழகான சீனக் கோப்பைகள் தம்புராட்டி.”
“சீனத் தட்டுகளையும் தங்கத்தாலான சங்கையும் கொடுத்துத்தானே அஞ்சுதெங்குவில் கோட்டை கட்டிக்கொண்டீர்கள்?”
லெட்சுமி நேரடியாகப் பேச்சைத் தொடங்கியதில் ஹானிங்டன் தடுமாறினார்.
மலையாள வாசத்துடன் கூர்மையாக வெளிப்படும் தம்புராட்டியின் இங்கிலீஷைக் கேட்டு வியந்தார் ஹானிங்டன்.
“தம்புராட்டி...?”
“ஆட்டிங்கல் அரசிக்கு உங்களின் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்கள் கொடுத்த பரிசுப் பொருள்களைச் சொல்கிறேன்.”
“இப்போது புரிகிறது தம்புராட்டி.”
“அரசியாக இருந்தாலும் தரவாட்டின் அம்மாச்சியாக இருந்தாலும் இரண்டு விஷயங்களைப் பெண்களால் மீற முடியாது.”
என்னவென்பதுபோல் பார்த்தார் ஹானிங்டன்.
“அழகுணர்வு, சொந்த மண்மீதான பற்று. எங்கள் தேசத்தின் மிளகு அரசியான ஆட்டிங்கல் அரசிக்கும் இது பொருந்தும்.”
“பெண்கள் என்றாலே அழகுணர்வும் ரசனையும்தானே?”
“அழகுணர்வுக்குத்தான் விலை வைத்துவிட்டீர்களே? தங்கத்தாலான சங்கைக் கொடுத்து, மிளகு வணிகம் செய்யும் முழு உரிமையைக் கம்பெனிக்காக வாங்கிக் கொண்டார்களே உங்கள் வர்த்தகர்கள்.”

“தங்கத்தாலான சங்கா?”
“ஆமாம் பேராளர் அவர்களே. கடலாழியில் அனந்தசயனம் கொள்ளும் கடவுளின் தேசத்தவர்களான எங்களுக்குக் கடல் சங்கும் தெய்வம்தானே? எட்டாயிரம் மைல் கடந்துவந்து, எங்கள் தேசத்தவரின் நாடிபிடித்துப் பார்த்ததுபோல் நடந்துகொள்ள உங்களை விட்டால் யாரிருக்கிறார்கள்? விதவிதமான சீனத்துத் தட்டுகளைக் கொடுத்துவிட்டு, தங்கம்போன்ற எங்கள் மிளகை விற்றுச் செல்வம் சேர்க்க வழியறிந்தீர்கள்.”
“இதெல்லாம் நூற்றைம்பது வருஷ கதை. தம்புராட்டி இப்போது சொல்லக் காரணம்?”
“இருக்கிறது. திருவிதாங்கூரின் வர்த்தகத்தை மூன்று நான்கு கோட்டைகளுக்குள் சுருட்டி விட்டீர்கள். அதனால்தான் அரசர் அஞ்சுதெங்குக் கோட்டையையும் தலைச்சேரிக் கோட்டையையும் உங்களிடமிருந்து வாங்க நினைத்தார். பேக்டரி கட்ட இடம் கேட்டீர்கள், கொடுத்தோம். ஆனால் மொத்த ஊரையுமே குத்தகை எடுத்ததைப்போல் ஊர் நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்துவிட்டீர்கள்.”
தான் நினைத்ததைவிட விசாகத்தின் தம்புராட்டி அதிக விவரம் தெரிந்தவராக இருப்பதைப் பார்த்தார் ரெசிடென்ட் ஹானிங்டன்.
“நீங்கள் கேட்பதைச் செய்யக்கூடிய அதிகாரம் என்னிடமில்லை. இவை உடனடியாகச் செய்யக்கூடிய காரியங்களும் அல்ல.”
“பேக்டரி கட்ட குத்தகைக்கு இடம் கேட்கிறீர்கள். ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் உரிமையாளரைவிட அதிக அதிகாரம் கொண்டவராக நடந்துகொள்கிறீர்கள். உங்கள் தந்திரமே தனிதான்.”
லெட்சுமியின் குரலில் அழுத்தம் கூடியது.
“கடவுளின் தேசமிது. சமஸ்தானம், அரசரின்றிகூட இருக்கும். பத்மநாபரோ தன் பிரதான சேவகனின்றி ஒருநாளும் இருக்க மாட்டார். யார் சொல்லை நாங்கள் மீறமாட்டோமென்று அறிந்து அவர்களைப் பேச வைத்துவிட்டீர்கள். போகட்டும். அரசர் மூலம் திருநாள், நாளை அதிகாலை விசுவரூப தரிசனத்தில் வெற்றுடம்புடன் கையில் கத்தி ஏந்தி, சுவாமியின் தாசனாக, பத்மநாபரின் திரு ஆராட்டுக்கு முன்னிற்க வேண்டும். அடுத்த அரசர் யாரென்ற குழப்பம் அரண்மனையில் இல்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ரெசிடென்டாகப் பரிந்துரையை அனுப்பி வைக்க வேண்டியது உங்களின் கடமை. அதில் எந்தத் தாமதமும் இருக்கக் கூடாது. திவான் ராமய்யங்கார் ஆவணங்களைத் தயாராக வைத்திருக்கிறார்.”
ஹானிங்டன், தன் பிடி நழுவுவதையறிந்து சுதாரித்தார்.
“வலியுறுத்தலா, உத்தரவா தம்புராட்டி?” குரலில் கோபம் கூடியது.
ஹானிங்டன் குரலின் ஒலி கூடியதில், திரைச்சீலைக்குப் பின் அசைவுகள் எழுந்தன. ஒலியெழுப்பாமல் காலடிகள் முன்னகர்ந்தன.
“சமஸ்தானம் தன் அரசரை இழந்து நிற்கும்போது, உங்களின் இந்த நிர்பந்தங்கள் அதிகபட்சம்தானே?”
“பெரியாற்றில் அணை கட்டுவதற்காகப் பல வருடங்களாகக் கம்பெனி, மகாராஜாவிடம் குத்தகைக்கு இடம் கேட்டுக் கொண்டிருக்கிறது. தாமதப்படுத்துவதற்கு நியாயமான காரணம் இருந்ததா தம்புராட்டி?”
“காரணமே இல்லை என்றாலும் தாமதப்படுத்த உரிமை கொண்டவர் அரசர்.”
ஹானிங்டன், லெட்சுமி கொச்சம்மையை உற்றுப் பார்த்தார்.
“உரிமையற்ற இடத்தில் எங்கள் அரசாங்கம் ஒப்புதல் கேட்டுக்கொண்டிருப்பதுதான் தவறு.”
“உரிமையற்றவர் யார்?”
“திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும் அணை கட்டவிருக்கும் இடத்துக்கும் என்ன தொடர்பு? பூஞ்சாறு அரசர் ராம வர்மாவிடம்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் பேசியிருக்க வேண்டும். பூஞ்சாறு அரசர் அறியாமல் பத்து வருடங்களாக உங்களுக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.”
லெட்சுமி அதிர்ந்தாள். வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேச்சைத் தொடர்ந்தாள்.
“பூஞ்சாறோ, திருவிதாங்கூரோ இரண்டுமே எங்களுடையதுதான். பூஞ்சாறு சமஸ்தானம் எங்களுக்குக் கட்டுப்பட்டது.”
“மகளைத் திருமணம் செய்துகொடுத்ததாலே பூஞ்சாறு சமஸ்தானம் உங்களுக்குக் கட்டுப்பட்டதாகிவிடுமா? துயரத்தில் தம்புராட்டிக்குக் குழப்பம் அதிகரித்துவிட்டதென்று நினைக்கிறேன்.”
“மிஸ்டர் ரெசிடெண்ட்...”
“மன்னிக்க வேண்டும் தம்புராட்டி. நான் கிளம்புகிறேன்...”
லெட்சுமியின் மறுசொல்லைக் கேட்க ஹானிங்டன் அங்கில்லை. ஹானிங்டனுக்கு லெட்சுமி கொச்சம்மையின் குரல் காதில் எதிரொலித்தபடி இருந்தது.
என்ன நினைத்து வந்தோம்? என்ன நடந்திருக்கிறது? சிக்கலை அவிழ்க்க வேண்டிய நேரம், புதிதாக ஒரு சிக்கல் விழுந்துவிட்டதே?
ஹானிங்டனின் சிந்தனையோட்டத்தை அனுசரித்து டாமினேஷன் சிறு நடையில் சென்றது.
வெளிச்சமற்று விரிந்துகிடந்த பாதையைக் கடந்து, டாமினேஷன் பங்களாவின் வாசலுக்கு வந்து நின்றது.
பாதியுறக்கத்தில் விழித்துப் பார்த்த குருவாயி, ஹானிங்டன் அருகில் இல்லாததைப் பார்த்தாள். சாளரத்தின் அருகில் உட்கார்ந்து படித்துக் கொண்டோ வானத்தைப் பார்த்தபடியோ இருப்பார் என்று நினைத்து எழுந்து வந்தாள்.
மேல்தளம் முழுக்கத் தேடியும் ஹானிங்டன் இல்லை. கீழே இறங்கி வந்தவளிடம் காவல் வீரர்கள் சேதி சொன்னார்கள்.
வாசலுக்குக் குருவாயி வந்து நிற்கவும், ஹானிங்டனின் டாமினேஷன் அருகில் வந்து நின்றது.
ஹானிங்டன் முகம் சோர்ந்திருந்தது. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை பார்த்த விநாடியே புரிந்துகொண்டாள் குருவாயி.
“என்னை எழுப்பியிருக்கலாமே ஹனி?”
“அந்த அளவுக்கு அவகாசமில்லை.”
குருவாயிக்கு அடுத்தடுத்து கேள்வி கேட்பது பிடிக்காது. ஹானிங்டன் எங்கு சென்றார், ஏன் சென்றார், என்ன பிரச்சினை என்பது சில விநாடிகளில் தெரியத்தான் போகிறது. தெரிய வராத சூழலிலும் சேதிகளைப் பெறுவதில் அவள் ஆர்வம் காண்பிக்க மாட்டாள்.
ஹானிங்டன் தொப்பியைக் கழற்றி, உதவியாளனிடம் கொடுத்தவர், படிகள் அதிர மாடிக்குச் சென்றார்.
தேநீர் கொண்டுவரச் சொல்லிவிட்டு குருவாயி மேலே சென்றாள்.
“நீதான் சரியாகச் சொல்வாய், அருகில் வா குருவாயி” ஹானிங்டன் பதற்றமாக அழைத்தார்.
குருவாயி அருகில் போய் நின்றாள்.
“மலைக்கு அந்தப்பக்கம் தண்ணீரும் சாப்பாடும் இல்லாமல் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். யாருடைய துன்பம் பெரிது? பத்மநாபருக்குப் பூஜை இல்லாததா? மக்களின் பசியா?”
குருவாயி அமைதியாக நின்றாள்.
“முடிவு கிடைக்கும் என்று விசாகத்தின் தம்புராட்டி அழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சென்றேன். நேரெதிராக நடந்துவிட்டது.”
“என்னாச்சு ஹனி?”
“விடிவதற்குள் அடுத்த அரசர் யாரென என் பரிந்துரையில் நான் கையெழுத்திட்டாக வேண்டுமாம். அணை கட்ட இடம் வேண்டுமென்ற நம் கோரிக்கை இந்த நேரத்தில் தேவையில்லாத நிர்பந்தமாம்.”
“தம்புராட்டி சொல்வது சரிதானே டியர்... அவரவருக்கான முன்னுரிமை இருக்கிறதே?”
“வாயை மூடு. என்னதான் நீ என்னுடன் இருந்தாலும், அவர்தானே உனக்குத் தம்புராட்டி? நீயும் திருவிதாங்கூர் சமஸ்தானத்துப் பிரஜைதானே?” கோபத்தில் ஹானிங்டன் கூச்சலிட்டார்.
தேநீர்க் கோப்பைகளுடன் வந்த உதவியாளன் கைநடுங்க, அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டுப் பின்னகர்ந்தான்.
குருவாயியின் முகம் மாறவில்லை. மனக்குமைச்சல் வெளியேறினால்தான் சரியாகச் சிந்திப்பார் என்று அறிந்தவள்.
“தேநீர் குடிக்கலாம். கீழ்வானம் சாம்பல் நிறமாகிறது. விடியப் போகிறது. கொஞ்ச நேரம் தூங்கியெழுந்தால் சரியாகிவிடுவீர்கள்.”

ஹானிங்டனின் கையில் கோப்பையைக் கொடுத்தாள்.
மறுப்பொன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டார்.
தேநீரைப் பருகியபடி சாளரத்தின் வழியே வெளியில் பார்த்துக்கொண்டிருந்தார். முகம் கல்லாக இறுகியிருந்தது. குருவாயியும் அருகில் நின்றிருந்தாள்.
கதவின் வெண்கலத் தாழ் அசையும் சப்தம் கேட்டு குருவாயி திரும்பிப் பார்த்தாள்.
உதவியாளன் நின்றிருந்தான்.
“திவான் ராமய்யங்கார் ஹிஸ் எக்ஸலென்ஸியைச் சந்திக்க வந்திருக்கிறார்.”
ஹானிங்டன் அமைதியாக நின்றார்.
“உட்காரச் சொல்” என்றாள் குருவாயி.
“தம்புராட்டியை எனக்கு நல்லாத் தெரியும். உங்களை மீறிச் செல்ல விரும்ப மாட்டார். நீங்கள் இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்ததால் பேச்சு எதிர்பார்த்த இடத்தை விட்டு, வேறொன்றாக மாறியிருக்கும். நிலைமையைச் சரிசெய்யத்தான் திவானை உடனே அனுப்பியிருக்கிறார்.”
“என்ன சொல்லுவார் திவான்?”
“யூகிக்க வேண்டிய அவசியமில்லையே. நேரடியாகவே கேட்கலாம், வாங்க ஹனி.”
“எல்லா நேரத்திலும் அய்யங்கார் முகம் ஒரே மாதிரிதான் இருக்கு. தூக்கத்திலிருந்து எழுந்து வந்தவர் போலவே இல்லையே? நெற்றிச் சந்தனம் இப்ப வச்ச மாதிரியே இருக்கே அய்யங்கார்?”
குருவாயி சூழலின் இறுக்கம் தணிக்கப் பேசினாள்.
“திருவிதாங்கூர் சந்தனத்திற்குச் சொல்லணுமா யுவர் எக்ஸலென்ஸி. நேரம் கூடக் கூட வாசனையும் பொலிவும் கூடுமே?”
“வந்த விஷயம் சொல்லுங்கள் அய்யங்கார்.”
ரெசிடெண்டிடம் எப்படிப் பேச்சைத் தொடங்குவதென்று, ராமய்யங்கார் தயங்கினார்.
“விசாகத்தைவிட தம்புராட்டியிடம் பேசுவது கடினமாக இருக்கிறதே?”
“அரசரிடம் கற்றுக்கொண்டதுதான் யுவர் எக்ஸலென்ஸி. தம்புராட்டியிடம் அரசர் நிர்வாகச் சேதிகள் அத்தனையும் பேசுவார். அரண்மனையில் அவருக்கு இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்க, ஓர் ஆசிரியரை வைத்திருந்தாரே?”
“ஒரு மொழியை எல்லாரும் கற்றுக்கொள்ளலாம். கூர்மையாகப் பயன்படுத்துவதற்குத் தனித் திறமை வேண்டும். தம்புராட்டி தேர்ந்த சொல்லெடுத்து விளையாடுகிறார்.”
ஹானிங்டன் இயல்பாகி விட்டார் என்பதைக் குருவாயி அறிந்தாள்.
அவளே பேச்சைத் தொடங்கினாள்.
“அய்யங்கார், லெட்சுமி தம்புராட்டி என்ன சேதி சொல்லியனுப்பியிருக்கிறார்?”
“தம்புராட்டி மட்டுமல்ல, அரசர் மூலம் திருநாளும் சேர்ந்துதான் என்னை அனுப்பினார்.”
“அரசர் என்ன சொன்னார்?”
“அவர் இன்னும் இளவரசர்தான் குருவாயி” ஹானிங்டன் குறுக்கிட்டார்.
“இருப்பது ஒரே இளவரசர்தான் ஹனி. நீங்கள் பரிந்துரைக்கத் தாமதித்தாலும் உண்மை மாறிவிடப்போகிறதா என்ன?”
பேசிக்கொண்டிருக்கும்போதே குருவாயிக்குத் தான் திவான் முன்பாக ஹானிங்டனின் வார்த்தையை மறுத்துப் பேசியது தவறென்று தோன்றியது.
கோபம் தெறித்த ஹானிங்டனின் கண்கள் குருவாயியைப் பார்த்தன.
“சமஸ்தானத்தைப் பொறுத்தவரை மக்கள் தர்பார் முன்பு பதவியேற்கும் வரை அவர் இளவரசர்தான். நீங்கள் சொல்வது சரிதான்.”
அவள் புரிந்துகொண்டாள் என்றவுடன் ஹானிங்டன் புன்னகைத்தார். எரியும் தீயாகவும் உறையும் பனிக்கட்டியாகவும் நொடியில் மாறிவிடும் இயல்பு ஹானிங்டனுக்கு.
“இருவரும் என்ன சொல்லி அனுப்பியிருக்கிறார்கள் அய்யங்கார்?”
“அரசர் குத்தகையில் கையெழுத்திட சம்மதிப்பதாகச் சொன்னார்.”
“அய்யங்கார்...”
சந்தோஷத்தில் கூச்சலிட்டார் ஹானிங்டன். குருவாயியும் ஹானிங்டனைப் பார்த்துச் சிரித்தாள். சட்டென்று அவ்விடத்தில் மகிழ்ச்சி அலை பரவியது.
“தட் யங் பாய்... மூலம் திருநாள். வெரி அண்டர்ஸ்டாண்டிங். நாளை காலை இளவரசர்... நோ... உங்கள் மகாராஜா மூலம் திருநாள் பத்மநாபசாமிக்குச் சகல உரிமையுடன் பூஜை செய்யலாம்.”
“இன்னும் ஒரு சேதி மட்டும் யுவர் எக்ஸலென்ஸி.”
“இனி என்ன சொல்லப்போகிறீர்கள் அய்யங்கார்?”
“யுவர் எக்ஸலென்ஸி, அரசரும் தம்புராட்டியும் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவதற்கு முன், சமஸ்தானத்தின் சார்பாக மேல்மலைக்குச் சென்று ஓர் ஆய்வு நடத்திவிட்டுச் செய்யலாம் என்று விருப்பப்படுகிறார்கள்.”
“உலகத்திலேயே பிரிட்டிஷ்காரனைவிடத் திறமையான என்ஜினியர்கள் இருக்காங்களா அய்யங்கார்? கம்பெனியின் ராயல் என்ஜினியர்ஸ் 1808, 1850, 1862, 1867, 1870ன்னு எத்தனை வருஷம் ஆய்வு செஞ்சு அறிக்கை கொடுத்திருக்காங்க. இப்போ பத்து வருஷமா லெப்டினென்ட் கர்னல் பென்னி குக், அந்த இடத்தைத் துல்லியமா ஆய்வு செஞ்சிருக்கார். பெரியாறு ஆத்துத் தண்ணீரை எங்க நிறுத்தி, மலையைக் குடைஞ்சு மேற்கால போற தண்ணீரை எப்படிக் கிழக்கால திருப்புறதுன்றது வரைக்கும் அவர் ரிப்போர்ட் கொடுத்திருக்கார். பாலாற்றுல ஏற்கெனவே தடுப்பணை கட்டின அனுபவம் மிக்கவர் அவர்.”
“எங்க தரப்புல இருந்தும்...”
“உங்க தரப்பு என்ன உங்க தரப்பு? எங்களோட ராயல் என்ஜினியர் ஆர்தர் காட்டன் கல்லணையில தடுப்பணை கட்டியிருக்கார். கோதாவரியில் கட்டியிருக்கார். பென்னி இந்த அணையைக் கட்டிட்டார்னா, ஆர்தர் காட்டனையும் மிஞ்சிடுவார்.”
“யுவர் எக்ஸலென்ஸிக்கு நல்லாத் தெரியும். இருந்தாலும் இரண்டு விஷயம் சொல்லுறேன். யோசிக்கணும். கல்லணையில கட்டியது தடுப்பணை. ஆத்தோட போக்கிலேயே கட்டினது. பேரியாறு விஷயமே வேறு. மேற்கால ஓடுற ஆத்தோட போக்கையே கிழக்கால திருப்புறது. இரண்டாவது, நீங்க சொல்ற எல்லா எடுத்துக்காட்டுமே மெட்ராஸ் பிரசிடென்ஸிக்குள்ள நடந்தது. இதுல மெட்ராஸ் பிரசிடென்ஸியும் திருவிதாங்கூர் சமஸ்தானமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. எங்க சமஸ்தானத்தோட விவசாயம் பாதிக்கக் கூடாது. குடிதண்ணீர் குறையக் கூடாது. இது இன்னைக்குப் பிரச்சினை மட்டுமல்ல. 999 வருஷத்துக்கு ஒப்பந்தம் போடுறோம். எங்க தரப்பையும் யோசிக்கறது நல்லதுன்னு அரசர் நினைக்கிறார்.”

ஹானிங்டனுக்குச் சோர்வாக இருந்தது. ‘எத்தனை தடங்கல்கள் வரும் இந்த வேலைக்கு?’
“ராயல் என்ஜினியர்ஸ்மேல் நமக்கு நம்பிக்கை இருக்கு. அவங்க ரிப்போர்ட் ரொம்பச் சரியாகத்தான் இருக்கும். சமஸ்தானத்தில் இருந்து போய்ப் பார்க்கிறவங்க பார்க்கட்டுமே? ராயல் என்ஜினியர்ஸ் ரிப்போர்ட்ல குறை கண்டுபிடிக்கக்கூடிய அளவு யார் இருக்கப் போறாங்க? இல்லை, என்ன தவறு இருக்கப்போகுது?” குருவாயி சொன்னாள்.
ஹானிங்டன் முகத்தைப் பார்த்தபடியே திவான் உட்கார்ந்திருந்தார். ஹானிங்டனின் சின்னக் கண்கள் அவர் உள்ளத்தை அறிய ஒத்துழைக்க மறுத்தன.
“இரண்டு கடிதங்களைத் தயார் செய்து கொண்டு வாருங்கள் அய்யங்கார். ஒன்று மூலம் திருநாளை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசராகப் பரிந்துரைக்கும் கடிதம். இன்னொன்று, சமஸ்தானத்தின் என்ஜினியர்கள் அணை கட்டுமிடத்தைப் பார்வையிட அனுமதி கோரும் கடிதம்” ஹானிங்டன் உத்தரவிட்டார்.
திவான் மகிழ்ச்சியுடன் எழுந்து, ஹானிங்டனை வணங்கினார். இருவரிடமும் விடைபெற்றவர், வாயில் நோக்கி நடந்தார்.
“எங்கள் ராயல் என்ஜினியர்ஸ் ரிப்போர்ட் மேல், இன்னொரு மேலாய்வுக்கு மெட்ராஸ் கவர்னர் அனுமதி கொடுப்பார் என்று நம்புகிறீர்களா அய்யங்கார்?” ஹானிங்டன் கேட்டவுடன், திவான் முகத்திலிருந்த மகிழ்ச்சி விநாடியில் காணாமல்போனது.
- பாயும்