மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 62 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

சுரங்கம் வெட்டும் இடத்தில் மலையையொட்டி இருந்த மரங்களையும் புதர்களையும் வெட்டியெடுக்க நூறு பேரைப் பத்துக் குழுக்களாகப் பிரித்து விட்டிருந்தார் ரத்தினம் பிள்ளை.

பெரியாறு அணைத் திட்டத்தின் சூப்பிரண்டென்டிங் இன்ஜினீயர் ஜான் பென்னி குக், இயந்திரங்கள் வாங்குவதற்காக இங்கிலாந்து சென்று ஒரு மாத காலமாகியிருந்தது. பிப்ரவரியில் வேலை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மெக்கன்சியும் டெய்லரும் செய்திருந்தனர். கடந்த வருஷம் அதிகம் பெய்த பருவமழையில் வைகையில் வெள்ளம் புரண்டது. ‘பெரியாத்துத் தண்ணி வர்றதுக்கு நல்ல சகுனம்தான் வையையாத்துல தலை தப்ப வெள்ளம் ஓடுறது’ என்று குதூகலமடைந்தனர் மாமதுரை மக்கள். நதிநீர் பெருகி, கண்மாய்களும் கால்வாய்களும் நிறைந்திருந்ததில் விளைச்சலும் கூடியது. சோளமும் வரகும் நெல்லும் வாழையுமாக குடிகள் நீண்ட நாள்களுக்குப் பிறகு வயற்காடுகளிலேயே கிடக்கும் வரம் பெற்றார்கள். கன்று காலிகள் சம்சாரிகளுடனே வருவதும் போவதுமாகக் குதியாட்டம் போட்டன.

நீரதிகாரம் - 62 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

வைரவன், சுருளி, வைகை ஆறுகளின் கால்பிடித்து, பெரியாறு தடுப்பணை கட்ட வேலைக்கு ஆளெடுக்கிறார்கள் என்ற சேதியும் வெள்ளமெனப் புரண்டது. வைகையின் கடைசிச் சொட்டு நீர் சென்றடையும் சின்னஞ்சிறு வாய்க்கால்களிலும் பெரியாறு அணை பற்றிய சேதி சென்று சேர்ந்தது. “வருஷம் முழுக்க ஆத்துல இனிமே தண்ணி ஓடுமாமே?” என்ற வியப்பைக் கேட்டுக் கேட்டு மலர்ந்த வையையாறும் ‘ஆமாம் ஆமாம்’ என்று சொல்வதுபோல் கெத்தலிப்பு காட்டி நடந்தது. விளைச்சலின் அறுவடையை முடித்துவிட்டே குடிகள் மேல்மலையின் வேலைக்கு வர முடியுமென்று கங்காணிகள் சொல்லிவிட்டார்கள். கூலி அதிகமென்றாலும் அறுவடை நேரத்தில் ஆள்களைச் சேர்ப்பது இயலாத காரியமென்று ரத்தினம் பிள்ளையும் சொல்லியிருந்தார்.

பொங்கல் திருநாளும் அறுவடையும் முடிந்து, பின்பனிக்காலத்தின் இறுதியில் மேல்மலையில் வேலை தொடங்க, கூலிகள் வரத்தொடங்கினார்கள்.

ரத்தினம் பிள்ளை கூலிகளை அழைத்துவரும் கங்காணிகளிடமும் மேஸ்திரிகளிடமும் உறுதியாகச் சொல்லிவிட்டிருந்தார். “முப்பது நாள், நாப்பது நாள்கிட்ட இந்தச் சீசன்ல வேலை நடக்கும். வேல முடிஞ்சு போற அன்னிக்குத்தான் கூலி. நல்லாக் கேட்டுக்கங்க, வேலை முடிஞ்சு போறன்னக்கித்தான் கூலி. பொண்டாட்டிக்குப் பிரசவம், பொண்ணுக்குச் சடங்கு சுத்தணும், மாடு கன்னு ஈண்டிருக்கு, குலசாமிக்குப் பொங்க வைக்கணும்னு யாராச்சும் கெளம்புனா அவனுக்கு வேலை செஞ்ச நாளுக்கும் சேத்துக் கூலி கெடைக்காது, பாத்துக்கங்க. சீசன் முழுசா இருந்தாத்தான் கூலி” என்று உருட்டி மிரட்டி வைத்திருந்தார்.

“செஞ்ச நாளைக்கும் கூலி இல்லைன்னு சொல்றது தப்பில்லையா? எத்தினி தெவசத்துக்கு வேலை பாத்திருக்கோமோ அத்தினி தெவசத்துக்குக் கூலி குடுத்துத்தான் ஆவணும்... எசமான் எடுத்துச் சொல்லணும்” என்று மேஸ்திரிகளும் வேலையாள்களும் கெஞ்சிக் கேட்டதால். பிள்ளை தான் வகுத்திருந்த விதியைத் திருத்தினார்.

“ஒன்னு செய்யலாம். பாதியில ஓடிப்போயிட்டா, ஓடிப்போனவனுக்குச் சீசன் முடிஞ்ச பிறகு அவன் சார்பா ஒருத்தன்கிட்ட கூலியக் கொடுக்கலாம். ஆனா எல்லாருக்கும் கூலி குடுக்கிற நேரத்துலதான் குடுக்க முடியும். இதுக்குமேல ஒரு பேச்சு கிடையாது, பாத்துக்கிடுங்க” என்று கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டார். இதற்கு வேலையாள்களும் உடன்பட்டார்கள்.

சுரங்கம் வெட்டும் இடத்தில் மலையையொட்டி இருந்த மரங்களையும் புதர்களையும் வெட்டியெடுக்க நூறு பேரைப் பத்துக் குழுக்களாகப் பிரித்து விட்டிருந்தார் ரத்தினம் பிள்ளை. அணை கட்டுமிடத்திலிருந்து சுரங்கம் வெட்டுமிடம் எட்டு மைல் தூரமிருந்தது. தினம் சென்று அங்கு நடக்கும் வேலையாள்களை ஒழுங்கு செய்ய முடியாது என்று, சுரங்கம் வெட்டுமிடத்திற்குத் தனியாக ஒரு குமாஸ்தாவையும் கங்காணியையும் நியமித்திருந்தார் பென்னி. புதிதாக சுரங்க வேலைக்கென்று ஒரு இன்ஜினீயர் வருவார் என்றும் டெய்லர் உறுதி செய்தார். தன் பாடு நிம்மதியென்று ரத்தினம் பிள்ளை அணை கட்டுமிடத்திற்கு வந்துவிட்டார். சுரங்கத்திற்குத் தண்ணீர் கொண்டு போகும் கால்வாய் வெட்டும் வழியில் நூறு பேர் வேலை செய்தார்கள். அணை கட்டுமிடத்தில் குடிசைகள் கட்டுவதற்காக மேஸ்திரிகளும் ஆசாரிகளுமாக முந்நூறு பேர் அருகில் இருந்தார்கள்.

பிப்ரவரி மாதம் வேலையாள்களின் குடிசைகளில் இரண்டு வரிசை தயாராகியிருந்தது. குறுக்குவாக்கில் ஈட்டி மர உத்திரமும், உத்திரத்துடன் இணைக்கும் மூங்கில் சாரங்களும் அடித்து, மண் சுவரெழுப்பி, காட்டுப்புற்களை மேலே வேய்ந்தார்கள். மழையில்லாமல் இருந்தால் ஒரு நாளில் ஐந்தாறு குடிசைகளுக்குமேல் கட்ட முடிந்தது. தூறலும் குளிரும் இருந்தால் வேலை ஆமை வேகத்தில்தான் நகர்ந்தது. ஒன்றிரண்டு குடிசைகள் கட்டி முடிப்பதே சிக்கலாக இருக்கும்.

வருஷத்திற்கு இரண்டு, மூன்று மாதங்கள் மட்டுமே மழையில் இருந்து பழகிய குடிகள், மலைமேல் எப்போதும் பெய்யும் மழைக்கும் குளிருக்கும் தாக்குப்பிடிக்க முடியாமல் அல்லாடினார்கள். சென்ற சீசன் ஐப்பசி, கார்த்திகையில் இருந்தது. கால் வைக்குமிடத்தி லெல்லாம் சொதசொதவென்று எல்லா நேரமும் ஈரம் இருந்தது. புல்லின்மேல் கால் பட்டாலும் அதிலிருந்து மழைத்தண்ணீர் பளபளவென்று சொட்டிக் காலை நனைக்கும். மழை ஈரத்திற்கு அட்டைகள் கால்களில் ஏறி, ரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிட்டன. பின்பனிக்காலமான இந்த மாசி, பங்குனியில், பனியில் காய்ந்த புற்களில் ஒட்டியிருக்கும் உண்ணிகள் எப்படித்தான் உடம்பில் ஏறுமோ, விறுவிறுவென்று அரிப்பு கிளம்பிவிடுகிறது. முங்கிலித் தேவனின் சுண்டு விரல் நகத்தளவிற்கு ஒவ்வொரு கொசுவும் இருக்கிறது. பத்திருபது கொசுக்கள் சேர்ந்து கடித்தால் போதும், அடுத்த நாள் கடிபட்ட ஆள் எழுந்திருக்க மாட்டான். இப்படி, ஒவ்வொரு பருவத்திற்கு ஒவ்வொரு சிக்கல்.

சென்ற பருவத்தில் வெட்டிவிட்டுச் சென்றிருந்த மரங்கள் முட்டிக்கால் உயரத்திற்குத் துளிர்த் தெழுந்திருந்தன. வெட்டி அகற்றியிருந்த புற்கள் முளைத்து, மேல்மலையின் கடும்பனியில் கருகி, குச்சிகளாக நின்றன. பனி பொறுக்காத மரங்களின் இலைகளும் கிளைகளும் வதங்கியிருந்தன. சிற்றோடைகளில் மிதமான நீரின் சளசளப்பு.

நீரதிகாரம் - 62 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

வீடுகளில் மாடும் ஆடும் கோழிகளுமாக இருக்கும் விவசாயக்குடிகளுக்கு, மலைமேல் எண்ணவியலாத ஜீவராசிகள் இருந்தாலும் தங்கள் அருகில் வைத்துக்கொள்ள ஒரு ஜீவராசியும் இல்லாததை நினைத்துத் துக்கமாக இருந்தது. குத்த வைத்து உட்கார்ந்து குடிக்கும் கூழுக்கும் கஞ்சிக்கும் எதிர்பார்த்துத் தங்கள் கைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் தன் கருப்பனின்றி வெறுமையாய் இருந்தது மொக்கை மாயனுக்கு. இப்போது கருங்குரங்கொன்று அவருடன் நட்பாகி நடமாடிக்கொண்டிருக்கிறது.

ராவுத்தர் அனுப்பும் அரிசி, பருப்பு, கறிகாய், சாராயத்தை வேலையாள்களுக்குப் பிரித்துக்கொடுக்கும் பொறுப்பை ராசுமாயனிடம் கொடுத்திருந்தார் ரத்தினம் பிள்ளை. ராசுமாயன், பிள்ளைக்குத் தனியாக ஒரு குவளைச் சாராயம் எடுத்து வைத்து இரவானதும் கொடுப்பதற்கு மறக்க மாட்டான் என்பதால் ராசுமாயனைத் தவிர வேறொருவரிடம் அந்தப் பொறுப்பு செல்லவில்லை.

குடிசைகள் கட்டும் மேஸ்திரிகளையும் ஆசாரிகளையும் வேலைக்கு ஏற்ப பிரித்துவிடும் பொறுப்பு பேயத்தேவனுக்கு. ஒரு நாள் வேலை செய்கிற ஆசாரியும் கொத்தனாரும் அடுத்த நாள் வேலைக்கு வர முடிவதில்லை. மழை முடிந்து கொட்டும் காட்டின் கடும்பனிக்கு உதடும் பாதங்களும் பாளம் பாளமாக வெடிக்கின்றன. வேலையாள்களில் காய்ச்சல் இல்லாதவர்கள் அநேகமாக ஒருவரும் இல்லை. எப்போதுமே காய்ச்சலடிக்கும் உணர்வு. கழுத்தும் கம்புக்கூடும் அனலில் தகித்தன.

மேல்மலைக்கு வேலைக்கு வரும் ஆணாளுக்கு ஒரு நாளைக்கு ஆறணா, பெண்ணாளுக்கு நாலணா, சின்னப் பையன்களுக்கு மூன்றணா கூலி. மாடும் வண்டியும் வைத்திருந்தால் ஒன்றரை ரூபாய். நான்கைந்து பிள்ளைகள் இருக்கும் குடும்பம் மொத்தமாய் வேலை செய்தால் ஒரு நாள் கூலியில் அரை மூட்டை நெல்லைத் தாராளமாக விலைக்கு வாங்கிவிடலாம். ஒரு மூட்டை நெல் விலை இரண்டரை ரூபாய். (ஒரு ரூபாய் = 16 அணா) ஒரு பருவத்துக்கு மேல்மலைக்கு வேலைக்குப் போய் வந்தால் போதும், வருஷத்துக்கு நெல்லுச்சோறு சாப்பிடலாம் என்ற கனவில் குடும்பம் குடும்பமாய் வேலைக்கு வந்தார்கள்.

வீட்டிலும் வயற்காட்டிலும் வாழ்ந்து பழகிய விவசாயக் குடிகளுக்குக் காடு பழக்கமில்லை. உடம்பெல்லாம் கடித்து வைக்கும் உண்ணிகளைப் பிய்த்தெறிந்து கை ஓய்ந்தார்கள். கால் முழுக்கப் பனி வெடிப்பு. வெறும் காலில் நடக்கக் கூடாதென்று வேலையாள்களுக்குத் தோல் செருப்பு கொடுத்திருந்தாலும், செருப்புப் போட்டுப் பழக்கமில்லாததால் நடக்கத் தடுமாறினார்கள். ஊரில் காற்றுக்காக வெளியில் படுத்துக் கிடந்த மக்கள், காட்டின் குளிர் பொறுக்காமல் குடிசைக்குள் முடங்கினார்கள். பகல் முழுக்க வெயிலும் மாலையில் சிறு மழையும் இரவில் கடுங்குளிரும் என நேரத்திற்கொரு காலநிலையில் இருக்கும் காடு மக்களை அச்சுறுத்தியது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அச்சம். குழந்தை குட்டிகளுடன் வந்திருந்தவர்கள், ஒருத்தரை விட்டு ஒருத்தருக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் ஒவ்வொரு நாழிகையையும் கடத்தினார்கள்.

குடிசைகள் கட்டிய கொத்தனார் இருவரை அழைத்துச்சென்று பாதிரியார் ராபர்ட், தேவாலயமொன்றை அமைத்தார். சின்னஞ்சிறு குன்றில் பாறைகளுக்கு மேலாக, நாட்டுத் தேக்கு மரச்சாரங்கள் ஊன்றி அமைக்கப்பட்ட தேவாலயம் கனகச்சிதமாக அமைந்தது. ஒரு நேரத்தில் பத்துப் பேர் மண்டியிட்டு ஜெபம் செய்யலாம். பிரிட்டிஷ் அதிகாரிகள் தவிர்த்து, கிறிஸ்தவர்கள் ஐந்தாறு பேர்தான் இருந்தார்கள். ‘நமக்கும் ஒரு கோயில் கட்டச் சொல்லலாம்’ என்று ஒப்பிலி கேட்டவுடன், ‘ஒனக்கு எந்தச் சாமிக்குன்னு கோயில் கட்டறது அப்பு? கருப்பசாமிக்குக் கட்டுறதா, வடக்குவாய்ச்செல்விக்குக் கட்டறதா? நாம ஒரு ஓரமா கல்ல நட்டுப் பொதுவா சாமின்னு கும்பிட்டுக்குவோம். நம்ம சாமியெல்லாம் காட்டுமோட்டுல நம்மகூட நிக்கிறதுகதானே?” என்றார் மொக்கை மாயன். அவர் சொல்வதும் நியாயம் என்பதுபோல் எல்லாரும் கேட்டுக் கொண்டார்கள்.

காட்டுக்கு அந்நியமான அறுநூறு, எழுநூறு பேர் ஒரே நேரத்தில் காட்டில் நடமாடத் தொடங்கியதில் ஒழுங்கு குலைந்தது காடு. பாறைகளை உடைக்கும் சத்தமும், மரங்களை வெட்டி வீழ்த்துவதுமான அந்நிய நடவடிக்கைகளுக்குக் காட்டு மிருகங்கள் மிரண்டன. காட்டெருமைகள் கூட்டமாய் காட்டின் உட்பகுதிக்கு ஓடின. ஆங்காங்கு சுற்றிக்கொண்டிருக்கும் கேழையாடுகள் மனிதர்களின் பேச்சுச் சத்தத்திற்கு மிரண்டு ஒதுங்கின. நாள் முழுவதும் உற்சாகக் குரலெழுப்பிக் கொண்டிருக்கும் பறவையினங்கள், மரங்கள் வெட்டுப்பட்டு விழுவதைப் பார்த்து, அச்சத்தில் வேற்றிடம் சென்றன. காட்டுப் பன்றிகள் மிரண்டு பின்வாங்கின. ஒருநாளின் பெரும்பொழுது பெருந்தீனி தேடித் திரிந்துவிட்டு, வெயில் உரைக்கும் நேரத்தில் அடர்ந்த நிழலிலோ நீர் நிலையிலோ ஓய்வெடுக்கும் யானைகள், மனிதர்களின் இடையூற்றினால் அச்சமேறிப் பிளிறின. பாறைகளை உடைப்பதற்காக வைக்கப்படும் நாட்டு வெடிகளின் காதைப் பிளக்கும் ஓசையில் தனித்திருக்கும் யானைகள் அலறிப்புடைத்து வேகமெடுத்தன. கருங்குரங்குகளும் மந்திகளும் முதல் ஓரிரண்டு மாதங்கள் வாயை இளித்துக் காட்டி அச்சம் மறைக்க முறைத்துப் பார்த்தன. தினம் இருப்பவர்கள்தான் என்றவுடன், மனிதர்களையும் காட்டின் அங்கமாய் நினைத்து, அவர்கள் தரும் உணவை வாங்கிச் சாப்பிடும் அளவிற்கு நட்பு பாராட்டின.

பேயத்தேவனின் இடுப்பில் கட்டியிருந்த கயிறு உராய்ந்து இடுப்புச் சதை பிய்ந்து புண்ணாகியிருந்தது. நூறடி, நூற்றைம்பதடி உயரத்தில் இருந்த மரங்களை வெட்டிச் சாய்ப்பது எளிதாக இல்லை. அந்தரத்தில் ஆடும் கயிற்றினைப் பற்றிக்கொண்டு நின்றபடி, ஒவ்வொரு மரமாக வெட்டித் தள்ளிக்கொண்டிருந்தான் பேயத்தேவன். உருண்டையான பாறையொன்றில் கட்டப்பட்டிருந்த பேயத்தேவனின் கயிற்றை, பாறையை நம்பாமல், எஃகு போன்ற இறுகிய புஜங்கள் கொண்ட முங்கிலித்தேவன் மேலே நின்று பிடித்துக் கொண்டிருந்தார். வேறு ஆள்கள் பேயத்தேவனின் கயிற்றைப் பிடிக்க வந்தாலும் முறைத்துப் பார்ப்பார். “எங்க ஊர் நாட்டாமை அவரு. என் அண்ண மகன். அவரை எப்டிப் பாத்துக்கணும்னு எங்களுக்குத் தெரியும். போய் உங்க சோலியப் பாருங்க” என்று விரட்டுவார்.

பேயத்தேவனின் அருகில் ஒப்பிலி தொங்கிக்கொண்டிருந்தான். ஓங்கிய கொடுவாளுடன் மரத்தின் அருகில் செல்லும் நேரத்தில் காற்றில் கயிறு அசையும். அல்லது மரத்தூரில் கட்டப்பட்டிருக்கிற கயிற்றைப் பாதுகாப்புக்காகச் சேர்ந்து நின்று பிடித்திருக்கிற ஆள்கள் கயிற்றை அசைப்பார்கள். பேயத்தேவனை முங்கிலி ஓராள் பிடிக்க, மற்றவர்களைக் குறைந்தது மூன்றாளாவது சேர்ந்து நின்று பிடித்தார்கள். சுமையிலும் காற்றின் வேகத்திலும் மூன்று நான்கு பேர் சேர்ந்து நின்று பிடித்தாலும் கயிற்றின் அசைவைக் கட்டுப்படுத்த முடியாது. அவன் கொடுவாளை ஓங்குவதற்கும் கயிறு தள்ளிப்போகவும் சரியாக இருக்கும். அந்தரத்தில் ஆடும் ஒப்பிலிக்குக் கோபம் உச்சம் கொள்ளும். “காலையில இருந்து இப்படியே தொங்கிட்டிருக்கேன்... மேல நிக்கிற மூதிககளுக்கு ஒழுங்கா புடிக்கத் தெரியாதாடா...?” என்று வாய்க்கு வந்த வசவுகளை அள்ளி வீசினான்.

“டேய் மாப்ள, வெள்ளக்கார தொரைங்கல்லாம் நம்ம வசவ பழகிட்டு அவங்களும் நம்மள இதே வார்த்தையில திட்டறானுங்க. கொஞ்சம் கொறைச்சுப் பேசு...” என்று கத்திச் சொல்லியபடி கயிற்றின் சரம் பிடித்து எம்பி எம்பி அசைந்து பேயத்தேவன் ஒப்பிலியின் அருகில் வந்தான். வந்த வேகத்தில் ஒப்பிலியை இறுக்கிப் பிடித்துக்கொண்டான். “சித்தப்பூ... சேத்துப்புடி. விட்றாதே...” என்று மேலே இருந்த முங்கிலிக்குக் கேட்கும்படி கூச்சலிட்டான். எட்டிப் பார்த்த முங்கிலித் தேவன், “ஏப்பு... என்ன காரியம் பண்றே? கயிறு தாங்குமாப்பு?” என்று பதறினார்.

“கயித்துல செம தெரியாது. நீ இழுத்துப் பிடி” என்று சொல்லிவிட்டு, “மாப்ள, உன்னை நான் ஆடாமப் புடிச்சிக்கிறேன்... நீ இப்போ வெட்டு” என்றான். பேயத்தேவன், ஒப்பிலியின் கயிற்றைச் சேர்த்துப் பிடித்து நிற்க, அந்தரத்தில் ஓங்கிய கொடுவாள் காட்டு மரத்தின் கிளையொன்றில் ஆழமாய் இறங்கியது. சரியாகக் கொப்பில் விழுந்த வெட்டில் உற்சாகமான ஒப்பிலி இரண்டு, மூன்று, நான்கு என ஓங்கி வெட்டினான். பத்தாவது வெட்டில் முறிந்து விழுந்த கிளை, கீழே ஓடும் பேரியாற்றில் விழுந்தது. கிளை விழுந்ததில் ஆற்றின் இடக்கரையோரம் பாறைகளில் தங்கியிருந்த மேல்மணல் அள்ளிக்கொண்டிருந்த கூலிகள்மேல் நீர் தெளித்தது.

“சொல்லிட்டு வெட்டுங்கடே... கீழ ஆளுக வேலை செய்றது கவனத்துல இருக்கட்டும்” ரத்தினம் பிள்ளை கூச்சலிட்டார். ஒருவரின் குரலும் இயல்பில் இல்லை. இரண்டாள் மூன்றாள் சத்தம் அளவிற்குக் கத்திப் பேசினால்தான் காதில் விழுந்தது. நீரின் சத்தமும், ஆள்களின் பேச்சொலியும் ஆங்காங்கு வேலை செய்கிறவர்களுக்குக் கேட்க வேண்டுமென்ற கட்டாயமும் சேர்ந்து இடமே கூச்சல் காடாகியிருந்தது.

“பிள்ளையைக் கட்டித் தொங்க விடணும். சொல்லிட்டு வெட்டுறாரா, சொல்லாம வெட்டுறாரான்னு பாக்கலாம்” ஒப்பிலி சொல்ல, பேயன் சிரித்தான்.

“இடுப்பு ரணமா இருக்கு மாப்ள. சதை பிஞ்சிருக்கிற இடத்துலயே கயிறு உரசுது... உசுரு போவுது... தொர சொன்னாரு, கொற சொன்னாருன்னு என்னையும் இந்த வம்புல இழுத்துவிட்டுட்ட.” ஒப்பிலியின் முகம் கடுகடுத்தது.

கிடுகிடு பள்ளத்தைக் குனிந்து பார்த்தவனுக்கு அடிவயிற்றில் சிலீரென்று பயமெழுந்தது. “கீழே பாக்கவே கூடாதுடா. பாத்தா கையோட பலம் போயிடும். பாதிய வெட்டியாச்சு. கொஞ்சம்தானே, வெட்டுவோம். சாரம் கட்டிட்டா வேலை சுளுவாயிடும்...” என்றான் பேயத்தேவன்.

கீழே விழுந்த கிளை வெள்ளத்தில் போவதைப் பார்த்த ரத்தினம் பிள்ளை கூச்சலிட்டார், “இழுத்துக் கரையில போடுங்கடா... சாரம் கட்டுறதுக்கு மரத்துக்கு எங்க போறது?” என்றவுடன், ஓடும் கிளையை ஐந்தாறு பேர் சேர்ந்து இழுத்தார்கள்.

“சின்னச் சின்னக் கொப்பா பாத்து வெட்டாதீங்கடா. அடி மரத்துல வெட்ட போடுங்க. உசரமா சாரம் கட்டணும்னா மரத்துக்கு எங்க போறது?” பிள்ளை மேலே பார்த்துக் கத்தினார். அந்தரத்தில் தொங்கும் இருவரையும் பார்த்தவருக்குத் தலைசுற்றியது. தடுமாறி விழப்போனவர் சமாளித்து நின்றார்.

“பிள்ளைவாளுக்குத் தலை சுத்திடுச்சு. ஒரு மணி நேரத்துக்கு சத்தமிருக்காது... வெத்திலையைக் கொதப்பிக்கிட்டு ஒக்காந்துடுவார்.” ஒப்பிலி நிம்மதிப் மூச்சு விட்டான்.

பென்னி குக்கின் வீடும் எக்ஸிக்யூட்டிவ், அசிஸ்டென்ட் இன்ஜினீயர்களின் வீடுகளும் நதியின் வலப்பக்கக் கரையினையொட்டிய நூற்றைம்பதடி உயர மலைக்குன்றில் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. வீடு கட்டும்வரை தங்குவதற்கு ஏற்றாற்போல் இன்ஜினீயர்களுக்குப் பெரிய கூடாரமும் வீடு கட்டும் இடத்தையொட்டியே இருந்தது. நதியின் வலக்கரையோரம் உயரத்தில் இருக்கும் இந்தக் குன்றின் மேலிருந்து பார்த்தால் இடக்கரையோரம் நடக்கும் குடிசை கட்டும் வேலை, வலக்கரையில் நடக்கும் பெரிய பட்டறைகள், சுண்ணாம்பு அரைக்குமிடம் என 360 பாகையில் அணை வேலை நடக்கும் இடங்களை இன்ஜினீயர்களால் மேற்பார்வையிட முடியும் என்று ஆராய்ந்து பென்னி தங்களுக்கான வீடுகளுக்கு உயர்ந்த இந்த மலைக்குன்றைத் தேர்வு செய்திருந்தார்.

அணை கட்டுவதற்கு இரண்டு சாதகமான அம்சங்கள் வேண்டுமென்று பென்னி நினைத்தார். அணை கட்டுமிடத்தில் ஆறு குறுகலாகவும், ஆற்றின் கீழிருக்கும் பாறைகள் கடினமானதாகவும் இருக்க வேண்டும். மேஜர் ரைவ்ஸ், கேப்டன் ஸ்மித் இருவரும் தேர்வு செய்த இடத்திலிருந்து பென்னி, இந்த இடத்தைத் தேர்வு செய்ததற்கும் இவையே காரணம். இவ்விடத்தில் இரண்டு மலைக் குன்றுகளுக்கிடையில் ஓடும் பேரியாற்றின் அகலம் இருநூறு அடிதான் இருக்கும். மலைக்குன்றுகளுக்கு இடையில் நதி குறுகி ஓடும் இடமென்பதால் அணையின் உயரம் குறையும். இருநூறு அடிக்கு 1,200 அடி நீளம் என்று அணையின் நீளத்தைக் கணக்கிட்டுள்ளார். இவ்விடத்தைக் கடந்தால் நதி முந்நூறு, நானூறு அடி என்று அகல்கிறது. அவ்விடங்களில் அணை கட்ட வேண்டுமென்றால் குறைந்தது 2,000 அடி நீளத்திற்காவது தடுப்பணை கட்ட வேண்டும். செலவு இதைப்போல் இரண்டு மடங்காகும். நதியின் அகலம் குறைந்திருப்பதால் ஒரே பிரச்சினை, அதிகரிக்கும் வேகம். வேகம் கூடிச் சுழன்றோடும் நீரினைக் கட்டுப்படுத்தி, அணை கட்டுவது பெரும் சவால்.

பென்னியின் வீடிருக்கும் மலைக் குன்றிலிருந்து, வேலை நடக்கும் இடங்களை முழுமையாகப் பார்க்க முடியும். அதேநேரம் பென்னியும் இன்ஜினீயர்களும், வேலைத் தளத்திற்கு வருவதற்கு ஒவ்வொரு முறையும் 170 அடி உயர மலைச்சரிவில் இறங்கி நடந்து வரவேண்டும். அல்லது, சுற்றுப்பாதையில் ஒவ்வொரு நாளும் வந்து செல்ல வேண்டும். தொடக்கத்திலேயே பாதைதான் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்தது. மலைச்சரிவில் வருவதுதான் ஒரே வழியென்று தீர்மானித்து, பென்னி மலைச்சரிவில் ஒற்றையடிப் பாதையொன்றை அமைக்கச் சொல்லியிருந்தார்.

அடர்ந்த புதர்களையும் காட்டு மரங்களையும் வெட்டியகற்றுவது பெரும் சவாலாக இருந்தது. கீழே குனிந்தால் இருநூறு அடி அகலத்தில் ஆறேழு அடி மட்டத்திற்கு ஓடும் பேரியாறு. மலைச் சரிவிலிருந்து படுபாதாளத்தில் கீழே ஓடும் நதியைப் பார்க்கும்போது முதலில் எல்லாருக்கும் தலைசுற்றியது.

நதியின் கரையோரங்களில் இருக்கும் மரங்களையகற்றுவதே கடினமான காரியமென்று வேலையாள்கள் தத்தளித்து நிற்க, நூற்றைம்பதடி மலைச்சரிவில் செங்குத்தான இடங்களின் மரங்களை அகற்ற வேண்டுமென்றவுடன் வேலையாள்கள் தயங்கினார்கள். கங்காணிகளின் மிரட்டல்களைக் காதில் வாங்காமல் ஆங்காங்கு மரப்பொந்துகளுக்குள் மறைந்துகொண்டார்கள். நூற்றைம்பதடி பள்ளத்திற்குள் இறங்கித்தான் வேலை செய்ய வேண்டும் என்று தெரிந்த இரவில் பத்துக் குடும்பத்து ஆள்கள் இரவோடு இரவாகக் காட்டுக்குள் இறங்கி, மறைந்து தப்பியோடிவிட்டார்கள்.

பேயத்தேவனையும் இளவயதுப் பையன்கள் ஐம்பது பேரையும் கூட்டிய பென்னி, ‘இருப்பதிலேயே மலைச்சரிவில் இருக்கும் மரங்களையகற்றுவதுதான் கடினம். வயதானவர்களை இவ்வேலையில் ஈடுபடுத்த முடியாது. பேயத்தேவா, நீ பொறுப்பெடுத்துச் செய்’ என்று விடுப்பில் செல்லும்முன் கேட்டுக்கொண்டதற்கிணங்க பேயத்தேவனும் கூட்டாளிகளும்தான் முன்னின்று செய்தார்கள்.

எஸ்தர் சிற்றோடை ஒன்றில் பாதம் நனையும்படி கால்களைத் தொங்கவிட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். பாதம் நனைத்து வெளியேறும் பளிங்குபோன்ற நீர்ச்சுழலைக் குனிந்து பார்த்த எஸ்தரின் முகம், ஓடும் நீரில் பிரதிபலித்தது. முகபிம்பத்தின்மேல் சுழன்றோடும் நீர்ச்சுழல் அவளுக்குள் பரவசத்தைத் தந்தது.

சந்திரிகையை ஒத்த முகம், துளி கலங்கமற்று ஒளிர்ந்தது. முகம் மட்டும் தெரிய, தலையைச் சுற்றியிருந்த கன்னியாஸ்திரியின் முக்காட்டை அகற்றினாள். அடர்ந்து நீண்டிருந்த சுருள் முடி, காற்றில் அலைந்தது. நிலவின் மேலிருந்து மேகமொன்று விலகியதுபோல் அவள் தலையைச் சுற்றியிருந்த முக்காடு விலகியவுடன், அவள் வேறொரு ஆளாக உருக்கொண்ட இன்பம் கொண்டாள். கண்ணாடி பார்த்து எத்தனை ஆண்டுகள் இருக்கும்? இளமை தன் முகத்தில் பேரழகை எழுதியிருப்பதை இப்போதுதான் கவனிக்கிறாள் எஸ்தர். தனக்கென்ன வயது இப்போது? அவள் சிந்தனைகள் நீரின் சுழற்சியைப் போல், ஓடி மறைந்த காலத்திற்குள் சுழன்றது.

நீரதிகாரம் - 62 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

ஐந்தாறு வயதிருக்குமா அக்காளைச் சரணடைந்து? அக்காளின் கடைசித் தானியமும் தீர்ந்து, அவளின் கடைசி மூச்சும் நின்றபோது தனக்கென்ன, ஆறேழு வயதிருக்குமா? பாதிரியாரின் கைபிடித்துப் பசுமலையின் மிஷனரிக்குள் அடைக்கலம் சென்று பத்தாண்டுகள் ஆகிறது. பதினேழு, பதினெட்டு வயதைத் தொட்டிருப்பேன் அல்லது நெருங்கிக் கொண்டிருப்பேன். எஸ்தர் தன் வயதைக் கணக்கிட்டாள்.

மேல்மலையில் திரும்பிய பக்கமெல்லாம் நீர். சிற்றோடைகள் பூமிக்குள்ளிருந்து கொப்பளித்து வெளிவருவதைப்போல், மலையுச்சியில் இருந்து அருவிகள் கீழிறங்கிக்கொண்டிருக்கின்றன. பறவைகளின், விலங்குகளின் ஒலிபோல் நீரின் ஒலியும் காட்டில் தனித்துக் கேட்கிறது.

தன் பாதமேறிக் கடந்து செல்லும் நீரின் குளிர்ச்சியில் எஸ்தரின் மனம், வெப்பம் தரித்துக் கிடந்த தன் வயற்காட்டினை நினைத்தது. நினைவுகள் ஆழமாகப் படிந்துவிடும் வயதில்லையென்றாலும் சம்பவங்களின் தீவிரம் எஸ்தரின் மனத்திற்குள் மாறாத் தழும்பாகப் படிந்திருந்தது.

அப்பாவும் அம்மாவும் கையிருப்பில் இருந்த விதைநெல்லை விதைத்துவிட்டுக் காத்திருந்த நாழிகை நினைவில் மேலெழுந்தது. நெல்மணியின் வெண்ணிற முளை, மண்ணைக் கிளறிவிட்டு மேலேறி வருகிறதா என்று வயல்முழுக்க நின்று பார்ப்பார்கள். வியர்வையின் உப்புப் பூத்துக் கிடந்த உடம்புடன் எண்ணெய் காணாத பரட்டைத் தலையுடன் இருவரும் வயற்காட்டிலேயே குடியிருந்தார்கள். ஊரின் மயான அமைதியில் ஒவ்வொருவரின் மூச்சொலியும் அவர்களுக்குப் பறையொலிபோல் காதில் ஒலித்தது. வானம் பார்ப்பதும், குனிந்து பூமியைப் பார்ப்பதுமாக, இருவரின் மனமும் பித்தேறித் தவித்த காலமது. ஊருக்கு பயந்து குழவிக்கல்லைக் கர்ப்பம் சுமந்த பிள்ளைப் பேறில்லாதவள்போல் மேகம் பெயருக்குக் கறுத்தது.

வெண்மேகம் சூல்கொண்டு கறுக்கும்போதெல்லாம் அம்மையும் அப்பனும் விண்ணேறிக் கருமேகத்தைத் தரையிழுத்துக் கொண்டு வரும் துடிப்புடன் ஒருவரையொருவர் தள்ளிவிட்டுக்கொண்டு மேலே பார்த்து நிற்பார்கள். ஒரே ஒரு துளி மழைக்காக அவர்கள் காத்திருந்த நினைவு கடும்கசப்பாய் நாவில் நிரந்தரமாய்க் குடியிருக்கிறது. மேல்மலை முழுக்க சில்லிட்டு ஓடும் நீரில் ஒரே ஒரு கால்வாய் நீர் தம் வயற்காட்டுக்கு வந்திருந்தாலும் மீனாட்சியாகிய நான் எஸ்தராகியிருக்க மாட்டேன்.

விதை முளைக்கும் காலம் கடந்துவிட்டதை அறிந்து, இரவோடு இரவாக வயற்காடுகளில் விதைத்த நெல்லை, மண்ணை அரித்து எடுத்துப்போக ஊரே ஒவ்வொரு வயற்காட்டிலும் குவிந்திருந்தது. ஒரு நெல்மணிக்காக அடித்துக்கொண்டு செத்துப்போன உயிர்கள் எத்தனை?

நீரில் வெண்பளிங்காய் ஒளிர்ந்த முகத்தில், வண்ணங்கள் சேர்ந்தன. சந்தனம் குழைத்துப் பூசி, செவ்வண்ணப் பொட்டிட்டு, தலை முழுக்க மலராத மல்லிகைப்போதின் சரம் சூடி, மீனாட்சியின் சேயாய் உருவகித்துக்கொண்டு, இதழ்கள் சிவக்க மீனாட்சியின் முகம் தோன்றியது. ‘தா தை தத்தா தை...’ முகம் தாளத்திற்கான பாவம் காட்டியது. அலங்காரமும் ஆட்டமும் விரும்பிய மீனாட்சியின் கண்களில் குறுகுறுப்பும் மகிழ்வும் பொங்கி நின்றன. வண்ணமயமான மீனாட்சியின் முகம் மீண்டும் வண்ணம் கலைந்து வெண்ணிற மூடாக்குடன் தெரிய, இந்தக் கண்களில் வாழ்வின் மீதான ஈர்ப்புக் குறைந்து பேரமைதி குடியிருந்தது. தனக்குள் இருக்கும் தான் யார்? எஸ்தரா, மீனாட்சியா? இந்த உடம்புக்குள் அக்காள் கற்றுக்கொடுத்த அபிநயங்கள் எங்கு மறைந்துகொண்டிருக்கின்றன? நடனத்தை மறப்பது அக்காளை மறப்பதல்லவா? ஒரு குவளைக் கஞ்சிக்காக வீதிவீதியாக அலைந்த என்னை ராஜகுமாரியாக உணர வைத்தவள் அல்லவா?

எஸ்தரின் முகம் மீனாட்சியின் முகத்தை விரும்பிக் கற்பனை செய்தது. மீனாட்சியின் முகமும் மாறி, மாமதுரைக்கே கஞ்சி ஊற்றிய அக்காளின் முகம் தோன்றியது. கால் நனைத்த தண்ணீரில் எஸ்தரின் கண்ணீர் வெந்நீராய்க் கலந்தது.

- பாயும்